முன்குறிப்பு : இதில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே!
ஒரு காதல் பயணம் பகுதி -
1
எப்போதும் என் கண் பார்த்துப் பேசும் நீ,
நிலம் பார்த்துப் பேச ஆரம்பித்தக் கணத்தில்
நமக்குள் காதல் பிறந்தது!
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை.
தேவதையின் வரவுக்காக கோவிலுக்குள் காத்திருக்கிறேன்.
கோவில் மணி விடாது ஒலித்த ஒரு மங்கள வேளையில்
துவட்டப்படாத ஈரத்தலையோடு கோவிலுக்குள் நுழைகிறாய்.
அப்போது எங்கிருந்தோ ஒரு நூறுப் புறாக்கள் உன்னை
தரிசிப்பதற்காகவே அந்தக் கோவிலுக்கு வருகின்றன.
நீ வந்ததைப் பார்த்ததும் கோவிலும் அந்தப் புறாக்களை
தன் கோபுரத்தில் வைத்து தன்னை அலங்கரித்துக் கொள்கிறது.
வழக்கத்துக்கு மாறாக தன்னை விட்டு எல்லோரும்
உன்னையே கவனிப்பதைப் பார்த்து பொறாமை கொள்கிறார் கடவுள்.
உள்ளே நுழைந்த நீ வரிசையில் நின்று கண்ணை மூடிக் கடவுளைக் கும்பிடுகிறாய்.
நீ கண் திறந்ததும் உன் கண்ணில் நானே விழ வேண்டுமென
உனக்கெதிர் வரிசையில் நான் நிற்கிறேன்.
நீ கண் திறக்கிறாய்.
நான் உன் கண்களை நேராய்ப் பார்க்கிறேன்.
அச்சம், நடுக்கம், பதட்டம் என எல்லா உணர்ச்சிகளிடமும் ஓடிக் கடைசியில்
வெட்கத்தில் போய் தன்னை மறைத்துக்கொள்கிறது உன் முகம்.
பூசாரிக் கொடுத்த விபூதியை அப்படியேத் தூணில் கொட்டி விட்டு வெளியேறுகிறேன் நான்.
நான் கொட்டியதில் இருந்து ஒரு துளியெடுத்து உன் நெற்றியில் இட்டுக் கொள்கிறாய்.
அப்போது, நிலவு, தானேப் பொட்டு வைத்துக் கொள்வதைக்
கடவுளும் உள்ளிருந்து எட்டிப் பார்க்கிறார்.
வேண்டுதலை முடித்ததும் என்னைத் தாண்டி வேகமாகப்
போவது போல் நடித்துக் கொண்டுமெதுவாக செல்கிறாய்.
காதலில் நடிப்பது தானே சுகம்?
நானும் மெதுவாக உன்னைத் தொடர்ந்து நட(டி)க்க ஆரம்பிக்கிறேன்.
பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்து நான் பின்தொடர்வதை
உனக்கு நேரடி வர்ணனை செய்கிறாள், உன் தங்கை.
உன் பின்னால் என்னை சுற்ற வைத்துவிட்டு,
கோயில் பிரகாரத்தை நீ சுற்ற ஆரம்பிக்கிறாய்.
உனக்கு அருகில் வந்து உன் வேகத்திலேயே நானும்சுற்ற ஆரம்பிக்கிறேன், உன்னோடு.
“கோயிலுக்கு சாமி கும்பிட வந்தீங்களா” முதன்முறை உன்னிடம் பேசுவதால்,
கேட்டு(உளறி?)முடிப்பதற்குள் தடுமாறித்தான் போனேன்.
“இல்ல சினிமா பாக்க வந்தோம்” என
நீ சொல்ல நினைத்ததை உன் தங்கைசொல்கிறாள்.
உள்ளூற நகைத்தாலும் பொய்யாக அவளை அதட்டுகிறாய்.
நீ ஏதாவது பேச வேண்டும் எனக் காதலிடம்கையேந்துகிறேன்.
வேண்டியவர்களைக் காதல் என்றைக்கு கைவிட்டிருக்கிறது?
“உங்களுக்குதான் கடவுள் நம்பிக்கை இல்லன்னு கேள்விப்பட்டேனே,
அப்புறம் கோயிலுக்கு வந்திருக்கீங்க” என்று குனிந்து கொண்டே கேட்கிறாய்.
உன் தங்கையின் பேச்சைக் கேட்டு விட்டு உன் இசையைக் கேட்க இனிமையாயிருக்கிறது.
“இப்பவும் கடவுள் இருக்குன்னு நான் நம்பல…ஆனா”
“ஆனா?”“நேத்து உங்க வீட்டுக்கு வந்திட்டுப் போனதுல இருந்து
தேவதைகள் இருக்குன்னு நம்ப ஆரம்பிச்சுட்டேன்”என்ன சொல்கிறேன் என்று,
புரிந்து கொண்டு வெட்கத்தில் மேலும் அழகாகிறாய்.
“தேவதைகள் இருக்குன்னு நம்பறீங்களா? தேவதை இருக்குன்னு நம்பறீங்களா?”–
நீ தேவதையாக இருந்தாலும், பெண்தானே,
அதுதான் பெண்ணுக்கேயுரிய சந்தேகத்தோடு கேட்கிறாய்.
நீ சுற்றி வளைத்து என்னக் கேட்க வருகிறாய் எனத்தெரிந்தும்,
“தேவதைகள் இருக்குன்னு நம்பறேன்” என்று அழுத்திச் சொல்கிறேன் நான்.
மேலும், சந்தேகத்தில் மௌனமாகிறாய் நீ.
“தேவதைக்கு ஒரு குட்டி தேவதை பிறந்தால் அப்புறம் தேவதைகள்தானே?”
எனப் புரிய வைக்கிறேன் நான்.
உன் அசட்டு சந்தேகம் உண்மையிலேயே அசடாகிப் போனது.
முதல் சுற்று முடிந்தது.
வெட்கத்தை மறைத்துக் கொண்டு “நேத்துல இருந்து வேற என்னல்லாம் நம்ப ஆரம்பிச்சீங்க?” எனத் தூண்டில் போடுகிறாய்.
“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன – நீ இத நம்புறியா?”
“ஏன் நீங்க நம்பலையா?”
“நேத்து வரைக்கும் நம்பாமதான் இருந்தேன்…”
“நேத்து மட்டும் என்ன நடந்தது?”
“நம்ம திருமணம் எங்க நிச்சயிக்கப்பட்டது?”
“எங்க வீட்லதான்?”
“நீ எங்க குடியிருக்க?”
“அய்யோக் கடவுளே….நான் எங்க வீட்லதான் குடியிருக்கேன் .அதுக்கென்ன?”
நான் என்ன சொல்லப் போகிறேன் என்று தெரிந்தும், தெரியாதது போல் நடிக்கிறாய்.
“தேவதை குடியிருக்கிற இடம் சொர்க்கம் தான? அதனால தான் சொல்றேன் –
நம்ம திருமணமும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப் பட்டிருக்கு”
இரண்டாவது சுற்றும் முடிந்தது.
சில நொடிகள் வார்த்தைகள் ஓய்வெடுக்க, மௌனம் பேசிக் கொண்டிருந்தது.
“ஐய்யையோ இது தெரியாம நான் நேத்து பாதி நிச்சயத்திலேயே
வேற எடத்துக்கு குடி போயிட்டேனே” எனப் பதறுகிறாய்.
“கவலைப் படாதே…நீ எந்த இடத்தில் குடியேறினாலும் அந்த இடம் தன்னை சொர்க்கமாக மாற்றிக் கொள்ளும்” என உன்னை சமாதானப் படுத்துகிறேன்.
“இல்ல…நான் குடியேறினதே சொர்க்கத்திலதான்…” என்கிறாய்.
உனது அடுத்த வார்த்தைக்காகக் காத்திருக்கிறேன் நான்.
“நேத்து நான் உங்க இதயத்துக்குள்ள நுழைஞ்சத நீங்க கவனிக்கலையா?”
எனக் கேட்டு சிரிக்கிறாய்.
“அது சொர்க்கம் போலவா இருக்கு?”
“அது சொர்க்கம் ‘போல்’ இல்லை – அது தான் சொர்க்கம்.
நான் வரப்போறேன்னு அதற்கு முன்பே தெரிஞ்சிருக்கு.
எனக்காக உள்ள ஒரு ராஜாங்கமே அமைச்சு எனக்கு வரவேற்பு கொடுத்தது”
உனக்குள்ளும் காதல் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.
மூன்றாம் சுற்றும் முடிந்தது.
வீட்டுக்கு செல்லத் திரும்பிய உன்னிடம் “ என்ன ‘வாங்க’, ‘போங்க’னு மரியாதையா
எல்லாம் கூப்பிட வேண்டாம், பேர் சொல்லியேக் கூப்பிடலாம்” என்கிறேன்.
“சரிடா சிவா” என்று சொல்லி “களுக்” கென சிரித்துக் கொண்டு சாலையில் மறைகிறாய் நீ.
“சரியான ஜோடியைத்தான் இணைத்திருக்கிறோம்”
என நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்கிறது இயற்கை.
( காதலில் தொடர்ந்து பயணிப்போம் )
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.