Thursday, May 18, 2006

+2 காதல் - 1

பத்தாவது வரைக்கும் நன்றாகப் படித்துவிட்டு 12-வது வந்து உருப்படாமல் போனவர்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த இரண்டு வருடத்துக்குள் “ஏதாவது ஒன்று” நடந்து அவர்களை அலைய விட்டிருக்கும். அப்படி 12-வது படிக்கும்போது எனக்கு நடந்த அந்த “ஏதாவது ஒன்று” தான் இது…

அது பதினொன்றாம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வு முடிந்து எல்லோரும் +2 க்கு ட்யூஷன் சேர ஆரம்பித்திருந்த நேரம்.
அடுத்த ஆண்டு பொதுத்தேர்வுக்குப் படிக்க வேண்டுமே என்கிற அக்கறை ஒரு காரணமாக இருந்தாலும், ட்யூஷன் சேர்வதில் எல்லோரும் காட்டிய ஆர்வத்திற்கு இன்னொரு முக்கியமான காரணம் இருந்தது. அதாவது 11-வது வரைக்கும் ஆண்கள் மட்டுமேப் படிக்கும் பள்ளியிலேயே படித்து(?) வளர்ந்தவர்களுக்கு ட்யூஷனிலாவது பெண்களைப் பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம் இருப்பது நியாயம்தானே.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த மாஸ்டரிடம் பெண்கள் அதிகமாக ட்யூஷன் சேர்ந்தார்கள் என இதற்காக ஒரு சர்வே எடுத்து எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தவன் மதன். அவனுடைய சர்வே முடிவுப்படி கெமிஸ்ட்ரிக்கு ஜோசப் சாரிடம் சேருவது என நாங்கள் எல்லோரும் ஏக மனதாக முடிவு செய்தோம்.
நாங்கள் என்றால் அதில் நான், மதன், செல்வா, வினோத், பாஸ்கர் ஆகிய பஞ்சப் பாண்டவர்களும் அடக்கம்.

அந்த வருடம் பொங்கல் அன்றைக்கு கெமிஸ்ட்ரி ட்யூஷனில் +2 வுக்கான முதல் க்ளாஸ் நடந்தது.
அப்போதே யார் யார் எந்த batch வரவேண்டும் என்றும் சொல்ல ஆரம்பித்தார் மாஸ்டர்.
அங்கு ட்யூஷன் நடக்கும் அறை ஒரே சமயத்தில் 30 பேர் மட்டுமே உட்காரக் கூடிய அளவில் சிறியதாக இருந்ததால் சில சமயம் இரண்டு, மூன்று பள்ளிகள் கலந்து வர வேன்டியிருக்கும். மாலை 5 மணி பேட்சில் எங்கள் பள்ளியின் 20 பேரையும் சாரதாப் (பெண்கள்!) பள்ளியின் 12 பேரையும் மாஸ்டர் வர சொன்னவுடன்,
எங்கள் பத்துக் கண்களிலும் 1000 வாட்ஸ் பவர்!.

“அப்பாடா…எங்கடா நம்மள அந்த TNPL convent கம்மனாட்டிகளோட சேத்துடுவாரோனு பயந்தேன்…மனுசன் நம்ம மனசறிஞ்சு batch பிரிச்சிருக்கான் டா…ஜோசப் வாழ்க” உற்சாகத்தில் மதன், மன்மதனாகிக் கொண்டிருந்தான்.

“நல்லவேளை தெரசா ஸ்கூல் புள்ளைகளோட சேர்த்திருந்தான்னா நம்ம கத கந்தல்டா…அவுளுக அலம்பலுக்கு நாம தாங்கமாட்டோம்…ஏதோ சாரதா ஸ்கூல் புள்ளைக நம்ம ரேஞ்சு… பார்ப்போம் ஏதாவது செட் ஆகுதான்னு” – சொல்லிக்கொண்டே அந்தப் பக்கம் நோட்டம் விட்டான் வினோத்.

“உனக்கு ஏண்டா எப்பவும் தெரசா ஸ்கூல் புள்ளைக மேல இவ்ளோ காண்டு..அவங்க என்னப் பண்ணாங்க உன்ன??” வினோத்தை வம்புக்கிழுத்தான் செல்வா.
“டேய் இங்கப் பாருங்கடா இவன் பேசறத “அவங்க”லாம்…எப்படா மரியாத கொடுத்துப் பேச ஆரம்பிச்ச?...மச்சி நீ எந்த ரூட்ல போறேன்னு எனக்கு நல்லாத் தெரியும்டா…நீ நடத்து…” செல்வா தனது பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தி பின்னாடி சுற்றுவதும் அவள் தெரசா ஸ்கூலில் படிக்கிறாள் என்றும் ஏற்கனவே எங்களிடம் சொல்லியிருக்கிறான் வினோத்.
“டேய் மச்சி தெரசா ஸ்கூல் co-ed. அந்தப் புள்ளைக எல்லாம் நம்மள மதிக்கக் கூட மாட்டாளுங்க…அவளுக வர்றதே மொபட்லதான்…உன்னோட சைக்கிளப் பாரு…அதுல பெல்லத் தவிர எல்லாமே சத்தம் போடும்…சாரதா ஸ்கூல்னா நம்மள மாதிரிக் கேசு..நமக்குத் தாவணியேப் போதும்டா..சுடிதாரெல்லாம் வேணாம்” – வினோத்.
சாரதா ஸ்கூலில் தாவணிதான் யூனிபார்ம். அதற்காகவே அந்த ஸ்கூல் வழியாகதான் நாங்கள் எங்கள் பள்ளிக்கு எப்போதும் போவோம்.

ஒருவழியாக எங்கள் சண்டையை முடித்துவிட்டு மாஸ்டரிடம் முதல் தவணை ட்யூஷன் ஃபீஸ் கொடுத்துவிட்டு எங்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டு விடைபெற்றோம்.

ட்யூஷன் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே மதனும், வினோத்தும் ஆளுக்கொருப் பெண்ணைப் பார்க்க(!) ஆரம்பித்திருந்தார்கள். பாஸ்கரும், செல்வாவும் படிப்பதற்காகவே அவதரித்த மாதிரி எப்போதும் பாடத்திலேயேக் குறியாய் இருந்தார்கள். நான் இரண்டிலும் சேராமல் ஏதோக் கடமைக்குப் போய்க்கொண்டிருந்தேன்.
ட்யூஷன் ஆரம்பித்து ஒரு மாதம் கழிந்த பிறகுப் புதிதாய் இன்னொருத்தி வந்து சேர்ந்தாள்.
அவள் ஸ்கூலைப் போலவே அவள் பெயரும் சாரதா. பெயரைச் சொல்லும்போது M.சாரதா என்று இனிஷியலோடு அவள் சேர்த்து சொன்னதும் நான்கு பேரும் என்னையேப் பார்த்தார்கள்.மதன் ஒரு துண்டுப் பேப்பரில் எழுதி என் கையில் திணித்தான் “M.S – M.S” படித்ததும் கிழித்து அவன் கையிலேயேத் திணித்து விட்டேன்.

இன்றைக்குமுழுவதும் இவர்கள் நான்கு பேரும் என்னையேதான் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என எனக்குத் தெரியும். அதனால் நான் அவளைப் பார்ப்பதை வேண்டுமென்றேத் தவிர்த்தேன். கொஞ்ச நேரத்தில் அவள் ஒருபக்கம் திரும்பி நோட்டை எடுத்த போது எதேச்சையாக அவள் முகத்தைப் பார்த்தேன். அவளை அழகி என்று சொல்லமுடியாது ஆனால் எந்தக் குறையுமில்லாத எளிமையான முகம். மாநிறம். நான்கு பேரும் என்னையேப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். நான் பார்வையைத்திருப்பினேன்.கொஞ்ச நேரம்தான். ட்யூஷனில் தரையில்தான் உட்கார்ந்திருப்போம்.அவளுடைய ஜடை தரையில் ஒரு அரை அடிக்கு சுருண்டு கிடந்தது.எனக்கு அடுத்த துண்டு சீட்டு வந்தது “கூந்தல் நீளமா இருக்கா?” எனக்கு நீளமானக் கூந்தல் பிடிக்கும் என்று இவர்களிடம் உளறியது வம்பாகப் போனது.
ட்யூஷன் முடிந்து அவள் எழுந்தபோதுதான் கவனித்தேன். எல்லோரும் தாவணியில் ஒரு இடத்தில் மட்டும் “பின்” குத்தியிருக்க அவள் மட்டும் இரண்டு இடத்தில் குத்தியிருந்தாள்.

நான் நோட்டில் கிறுக்கினேன் :
“அவள் மனதை மூடிக்கொண்டு
என் மனதைத் திறந்து விட்டாள்”
நோட்டைப் பிடுங்கிய மதன் சிரித்துவிட்டுக் கத்தினான் “இங்கப் பாருங்கடா ஒரு கழுத , கவித எழுத ஆரம்பிச்சுடுச்சு”



(தொடரும்...)
பகுதி 2

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

25 comments:

  1. நன்றாக உள்ளது. இயல்பான நடையில் எழுதியுள்ளீர்க்கள். தொடரவும்

    ReplyDelete
  2. நல்லாருக்கு கால்சட்டை காதல்! தொடருங்க.... " சைக்கிளப் பாரு…அதுல பெல்லத் தவிர எல்லாமே சத்தம் போடும்…" இந்த வார்த்த புதுசா இருக்கே ! நல்லா எழுதுரீங்க

    ReplyDelete
  3. நன்றி சிவா!!
    தொடர்ந்து எழுதுகிறேன் உங்கள் ஆதரவோடு...

    அன்புடன்
    அருள்.

    ReplyDelete
  4. டன் கணக்கில் எடை கூடும்,
    டீன் ஏஜின் நினைவுகள்.

    இயல்பான நடையில் அழகாக உள்ளது.

    ReplyDelete
  5. செயகுமார்,
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

    // " சைக்கிளப் பாரு…அதுல பெல்லத் தவிர எல்லாமே சத்தம் போடும்…" இந்த வார்த்த புதுசா இருக்கே !//

    உண்மையிலேயே அப்படி ஒரு சைக்கிள் எங்கிட்ட இருந்துச்சுங்க...அதப் பத்தி தனியாவே ஒரு பதிவு போடலாம்...

    நாகு,
    பள்ளி நாள் நினைவுகள் எப்பவுமே அழகுதான்...சிலருக்கு பாரத்தைக் குறைக்கும்...சிலருக்கு பாரத்தைக் கூட்டும்...

    //இயல்பான நடையில் அழகாக உள்ளது. //

    நன்றி நாகு!

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  6. எல்லாருக்கும் இப்படி ஒண்ணு இருக்கு ராசா. நமக்கு காலேஜூ படிக்கும் போதே இந்த பெல்லு இல்லாத சைக்கிள்தான்.

    அதிலயும் நம்ம சைக்கிளில டயரா டியூப்பான்னு தெரியாதுன்னு எல்லாரும் பெருமையாப் பேசுவாக.

    நீங்க திருச்சிக்காரரா, அல்லது கரூரா? ஜோசப் சார், சாரதா பள்ளி, டிஎன்பிஎல் எல்லாம் ஒரு மாதிரியா ஒத்து வருதே?

    ReplyDelete
  7. //அதிலயும் நம்ம சைக்கிளில டயரா டியூப்பான்னு தெரியாதுன்னு எல்லாரும் பெருமையாப் பேசுவாக.//

    :))

    //நீங்க திருச்சிக்காரரா, அல்லது கரூரா? ஜோசப் சார், சாரதா பள்ளி, டிஎன்பிஎல் எல்லாம் ஒரு மாதிரியா ஒத்து வருதே?
    //

    கரூர் தாங்க...பேர் எல்லாம் மாத்திப் போடலாம்னு தான் நெனச்சேன்.

    இது நான் ஏற்கனவே என்னோட நண்பர் வட்டாரத்துக்கு மட்டும் மின்மடல்ல அனுப்பினத் தொடர்...அது மொத்தமா மறுபடியும் எனக்கே ஒரு forward (இத தமிழ்ல எப்படிச் சொல்ல??) மடலா வந்தவுடனேதான் வலைப்பதிவுல ஏத்திட்டேன்..

    பேர் எல்லாம் மாத்திப்போட இப்ப நேரம் இல்லீங்க... :-(

    ReplyDelete
  8. இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அருட்பெருங்கோ மிக அருமையான அனுபவம் மேலும் அழகாகிறது உங்கள் எழுத்து நடையால் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  10. மணியன்,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
    அடிக்கடி வாங்க...

    நவீன்,

    எல்லாருக்குமே இந்த மாதிரி அனுபவம் கண்டிப்பா இருக்கும்..
    உங்க அனுபவத்தையும் எழுதுங்க...
    வாழ்த்துக்கு நன்றி நவீன்.

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  11. ஹூம்.வீட்டுக்கு வீடு வாசப்படி தான்.TNPL-ஐயும்,அமராவதி ஆற்றையும் படிச்ச ஒடனே அது கரூர் பக்கமாத் தான் இருக்கும்னு முடிவு பண்ணீட்டேன்.

    பதிவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி:
    நீங்க பெங்களூரில இருக்கீங்களா இல்ல ஹைதரபாத்தில இருக்கீங்களா?

    ReplyDelete
  12. சுதர்சன்,

    //வீட்டுக்கு வீடு வாசப்படி தான்.//

    சில வீட்டு வாசல்படி தடுக்கிவிழ வச்சிடுதே!!!

    நான் முன்ன ஹைதராபாத்ல இருந்தேங்க..இப்போ பெங்களூரு வந்து ரெண்டு வாரம் ஆகுது..

    நீங்களும் கரூர் பக்கம்தானோ??

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  13. //இப்போ பெங்களூரு வந்து ரெண்டு வாரம் ஆகுது//

    Welcome.Welcome...

    //நீங்களும் கரூர் பக்கம்தானோ??//

    Manchester of South India.

    ReplyDelete
  14. வரவேற்புக்கு நன்றிங்க...

    நீங்க கோவையா??
    நான் அங்கதான் அஞ்சு வருசம் கல்லூரியில படிச்சேன்...

    ReplyDelete
  15. //“இங்கப் பாருங்கடா ஒரு கழுத , கவித எழுத ஆரம்பிச்சுடுச்சு”//

    :)))))

    Reminds me of my tuition days...

    ReplyDelete
  16. தேவ்,

    சிரிக்காதீங்க..அவங்க அப்படி சொன்னவுடனே தான் எனக்குக்கூட அவங்கள உதைக்கனும்னு தோணுச்சு :))

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  17. //நான் அங்கதான் அஞ்சு வருசம் கல்லூரியில படிச்சேன்...//
    எம்.எஸ்ஸி. சாஃப்ட்வேர் எஞ்சினீயரிங்???? எந்த ஏரியாவில இருந்தீங்க??சூலூர் பக்கம் வந்திருக்கீங்களா??

    ReplyDelete
  18. ஓ!... நல்லா இருக்கே அருள். இயல்பான நடை அழகாக இருக்கிறது.

    “அவள் மனதை மூடிக்கொண்டு
    என் மனதைத் திறந்து விட்டாள்”
    நோட்டைப் பிடுங்கிய மதன் சிரித்துவிட்டுக் கத்தினான் “இங்கப் பாருங்கடா ஒரு கழுத , கவித எழுத ஆரம்பிச்சுடுச்சு”........

    ஓ!.... அப்ப கழுதைக்கு காதல் வந்திடிச்சா? ம்... இப்பதான் முதல் அங்கம் பார்த்தேன். தொடர்ந்து வாசித்துப் பார்ப்போம் என்ன நடந்தது என்று.

    ம்... நன்றாகவே எழுதுகின்றீர்கள். பாராட்டுக்கள் அருள்.

    ReplyDelete
  19. சுதர்சன்,
    /எம்.எஸ்ஸி. சாஃப்ட்வேர் எஞ்சினீயரிங்???? எந்த ஏரியாவில இருந்தீங்க??சூலூர் பக்கம் வந்திருக்கீங்களா??/

    நான் பீளமேடுங்க...நம்ம சூலூரத் தெரியாதா?? கரூர் வரும்போது அந்த வழியாதான வரணும்!!

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  20. சத்தியா,

    /ஓ!... நல்லா இருக்கே அருள். இயல்பான நடை அழகாக இருக்கிறது./

    எளிமையும் இயல்பும் எப்பவுமே அழகுதாங்க :)

    /ஓ!.... அப்ப கழுதைக்கு காதல் வந்திடிச்சா? ம்... /

    :)))

    /ம்... நன்றாகவே எழுதுகின்றீர்கள். பாராட்டுக்கள் அருள்./

    நன்றி சத்தியா!

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  21. Arul, nethu puram enaku thookam varala enthi +2 kadala padichittu.... Romba varasathuappuram En kan munidi ellam oduthu... Romba super....


    Nan ungalaku oru mail anupi errukan please reply me...

    ReplyDelete
  22. Hi,
    No words to say about as you just pulled out the dream/true incidents of everyone's school life.

    Very best contribution.

    Hats Off!!

    ReplyDelete
  23. /Arul, nethu puram enaku thookam varala enthi +2 kadala padichittu.... Romba varasathuappuram En kan munidi ellam oduthu... Romba super....


    Nan ungalaku oru mail anupi errukan please reply me.../

    அனானி,

    ரொம்ப தாமதமா உங்களுக்கு பதில் சொல்றதுக்கு மன்னிக்கனும். ரொம்ப நாளா இத கவனிக்கல. இந்த தேதில எதாவ்து மெயில் ரிப்லை பண்ணாம இருக்கானு பாக்கறேன் :)

    ReplyDelete
  24. /Hi,
    No words to say about as you just pulled out the dream/true incidents of everyone's school life.

    Very best contribution.

    Hats Off!!/

    நன்றிங்க அனானி.

    ReplyDelete
  25. hi,

    enakku innum thamizhla type panna theriyathu.. nice one.. can u send me the whole series.. i would love to read.. am near to karur.. dharapuram

    ReplyDelete