Friday, December 05, 2008

காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!

நீ கடந்த பாதையெங்கும்


சிரித்துக்கொண்டிருக்கும் பூக்க‍ளெல்லாம்


உன் கூந்தல் உதிர்த்த‍வையா?


உன் பாதம்பட்ட‍ பூரிப்பில் நிலம் பூத்த‍வையா?


 


உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க‍


கொதிப்புடன் வருகிறது வெயில்.


வெயிலிலிருந்து உன்னைக் காக்க


மீண்டும் வ‌ருகிற‌து ம‌ழை.


இரண்டுக்கும் ப‌ய‌ந்து


உன் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!


 


தொலைதூர பயணங்களில்


காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன‌‍


செல்பேசி உரையாடல்களை


கனவின் அலைவரிசையில்


தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்!


 


குளிர்வேலிக்குள் இருப்ப‍தாய் உணர்கிறேன்.


கண்ணுக்கு மையை


அதிகமாய் தீட்டிவிட்டாயோ?


 


செல்பேசியில் என‌து பேச்சு


இரைச்சலோடிருப்பதாய் எண்ணாதே.


இதயத்திலிருந்து வருவதால்


'லப்டப்' ஓசை கலந்திருக்கும்!

Monday, November 17, 2008

மழைக்கால காதல்

முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

*

நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.

*

மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!

*

பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!

*

இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்...

*

ஒரு முக்கிய வேண்டுகோள் : சென்னையிலுள்ள ஐ.டி துறை நண்பர்கள் அனைவரும் இன்று மாலை 4 மணிக்கு டைடல் பார்க் எதிரே நடக்கும் ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான டி.சர்ட் பிரச்சார நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மணி நேர நிகழ்வுக்கு அனைவராலும் வர முடியுமென்றும் நம்புகிறேன். உணர்வுள்ள நண்பர்கள் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருக்கும் கண்டன நிகழ்விலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மடலிடுங்கள் : arutperungo@gmail.com

Thursday, October 09, 2008

பாரி படுகளம் - பிரளயனின் நாடகம்

[singlepic=30,480,360,watermark]


முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம்.


புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத்துறைப் பேராசிரியரும், சென்னை கலைக்குழுவின் தலைவருமான பிரளயன் அவர்களின் இயக்கத்தில், நாடகத்துறை ஆசிரியர், மாணவர்களின் பங்களிப்புடன் உருப்பெற்ற பாரி படுகளம், பார்வையாளரை, வெறும் பார்வையாளராக மட்டுமே வைத்திருக்காமல் நாடகத்தின் காட்சி, உரையாடல், சொற்பயன்பாடுகளால் அவரையும் அதன் உள்ளே இழுத்துச் சென்று பொருள் தேடவைக்கிறது.


ங்கவை, சங்கவை என இரு மகள்களுக்குத் தந்தையான பாரி மன்னனும், அந்நாட்டு மக்களும் வளம்மிக்க பறம்பு மலையில் இயற்கையோடு இயைந்த வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்க, அவர்களின் நிலத்தையும், பெண்களையும் வலிந்து கைப்பற்ற சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வஞ்சகமாக சூழ்ச்சி செய்து இணைந்து போரிடுகிறார்கள். இறுதியில் மூவேந்தர்களின் அம்புகளை நெஞ்சிலேந்தி கபிலரிடம் நியாயம் கேட்டு புலம்பியபடி, படுகளத்தில் பாரி மன்னன் உயிர் துறப்பதுடன் நாடகம் முடிகிறது.



[flashvideo filename=video/paadal.flv /]

துவக்கத்தில் வரும் ஆண்களும் பெண்களுமாய் இணைந்து கலை மாந்தர்கள் கள்ளருந்தும் காட்சி, இன்றைக்கு ஆண்கள் மதுவருந்துவதை உடல்நலத்தீங்காகவும் பெண்கள் மதுவருந்துவதை மட்டும் பண்பாட்டுச்சீர்கேடாகவும் பார்க்கிற கண்களுக்கு சங்க காலப் பண்பாட்டை நினைவூட்டிச்செல்கிறது.


சோழ மன்னனின் ஒற்றனாக பறம்பு மலைக்கு வந்து, ஆதிரையெனும் வேளிர் குலப்பெண்ணிடம் காதல் கொண்டு விட்ட அஞ்சுதன் சாத்தன், தனது அலுவல் துறந்து அவள் காலைப்பிடித்து மன்றாடியபோதும் அயல்நாட்டு ஒற்றனின் காதலைவிட தாய்நாடு முக்கியமென உதறிச்செல்கிறாள் அவள். பிறகு சோழ மன்னனின் படையாட்களினால் கொலை செய்யப்பட்டு மடிகிறான் அஞ்சுதன் சாத்தன்.


ணிகம் செய்வதற்காக பாரியைக்காண யவன வணிகர்கள் வருகையில் அருகிலிருக்கும் அங்கவையும் சங்கவையும் விடைபெற்று எழும்போது அவர்களை அமரச்சொல்லி அரசு அலுவலில் பங்கெடுக்கச் சொல்கிறான் பாரி.(33% விழுக்காடு எப்பொழுது வரும்? ;)) வருகிற வணிகர்கள் தங்கள் வணிகத்துக்கு ஈடாக பறம்பு மலையில் இருக்கும் மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி கேட்க, அதற்கு மறுப்பு தெரிவித்து பாரி இப்படி கூறுகிறான் – ‘பறம்பு மலையில் இருக்கும் மக்கள் பறம்பு மலையின் எசமான்கள் அல்ல. இங்கிருக்கும் மரம், செடி, பறவை போல மனிதனும் மற்றுமோர் உயிர். எங்கள் நலனுக்காக இயற்கை வளங்களை அழிக்க முடியாது’ (தொழில் வளம் பெருக, வயல் நிலங்களையும், ஆற்று மணலையும் அள்ளிக்கொடுக்கும் அரசுகளைக் கண்டால் பாரி என்ன சொல்லுவான்?)


தன்பிறகும், மரம் கொடுத்தால் யவன நாட்டுப் பெண்கள் பாரியின் அந்தப்புரத்தை அலங்கரிப்பார்களென வணிகர்கள் சொல்ல, அதுவரைஅமையிதியாயிருந்த அங்கவை பொங்கியெழுகிறாள் – ‘பாரி மக்கள் நாங்கள் இருக்கும்போதே பெண்களை வணிகப்பொருளாக நினைத்துப்பேச என்னத் துணிச்சல்’ என கோபமாய்ச் சீறுகிறாள். அங்கவை, சங்கவை என்றதுமே ஒரு மட்டமான திரைப்பட நகைச்சுவைக் காட்சியை நினைவுக்கு கொண்டு வரும் அயோக்கியத்தனத்தை அனுமதித்த நாம் குறைந்தபட்சம் அந்த பெயர்களில் வாழ்ந்த வரலாற்று மாந்தர்களின் மாண்புகளைப் புரிந்து கொண்டால் நலம். அதற்கு இந்நாடகம் துணை நிற்கிறது.


ன்னொரு முக்கிய காட்சி நடுகல் வழிபாடு. நடுகல் வழிபாட்டில் பெண்களுக்கே முதல் உரிமை கொடுத்துக் கொண்டாடுகிறான் பாரி. இயற்கையையும், முன்னோர்களையும் வழிபடுகிற வீரவணக்கம் செலுத்துகிற மாவீரர்  நாளாக அதனை பாரி கூறுகிறான். இந்த சொற்பயன்பாடு இன்றைய ஈழப்போரில் மடிந்த போராளிகளை நினைவுகூர்கிற மாவீரர் நாளையே நினைவுபடுத்துகின்றது. சேர, சோழப் பாண்டிய நாடுகளின் கூட்டுப்படை (இதுவும் எங்கேயோ கேட்ட மாதிரியில்ல?) பாரியின் படையினைத் தோற்கடிக்க முடியாமல் திணறுகிற நேரம், மூவேந்தர்களின் ஆலோசனையில் நடக்கிற உரையாடல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.


ரு வேளிர்ப்படை வீரனைக் கொல்வதற்கு கூட்டுப்படையில் இருபது வீரர்களை இழக்க வேண்டியிருக்கிறதேயென சோழ மன்னன் புலம்ப, சேரன் கூறுகிறான் – ‘அடுத்த நாட்டு நிலத்தை கைப்பற்ற நினைக்கிற வீரனின் உறுதிக்கும் தாய்நாட்டு நிலத்தைப் பாதுகாக்கப் போரிடுகிற வீரனின் உறுதிக்கும் இயல்பிலேயே வேறுபாடு உண்டு’. பாண்டியனின் கூற்று –‘ நமது வீரர்கள் கூட்டுப்படைத்தளபதியின் கட்டளைப்படிதான் போரிடுகிறார்கள். வேளிர்ப்படை வீரர்களோ உரிமைக்காகப் போரிடுகிறார்கள். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.’ இன்று வரை இனப்போராட்டங்கள் இப்படிதானே தொடர்கின்றன.


ந்தப் போரை நிறுத்துவதற்காக மூவேந்தர்களிடம் கபிலர் வேண்ட, பாரி, தங்களுக்கு கப்பம் கட்டியிருந்தாலோ, தங்களுக்கு கீழ் குறுநில மன்னனாக இருக்க ஒப்புக்கொண்டிருந்தாலோ, தன் மகள்களை மகட்கொடையாக அளித்திருந்தாலோ போரை நிறுத்தியிருக்கலாமென பெருங்குடி மனப்பான்மையுடன் கூறுகின்றனர். அப்பொழுது தமிழால் அனைவரும் ஒன்றுபடலாமென மூவேந்தர்களிடம் கபிலர் பேசுகிறார்.


பெருங்குடி மன்னர்களான எங்களையும் சிறுகுடி மன்னனான பாரியையும் ஒரே நிலையில் எப்படி வைத்துப்பார்க்க முடியுமென கேட்ட அவர்களின் குரல் தான் நூற்றாண்டுகள் கடந்து இன்னும் ஆதிக்க சாதியின் குரலாக உத்தப்புரத்திலும், பெரும்பான்மை மதத்தின் குரலாக ஒரிசாவிலும், ஆதிக்க இனத்தின் குரலாக இலங்கையிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.


மிழ் பேசும் நமக்குள் பெருங்குடி, சிறுகுடியா? கெட்டது தமிழ்க்குடியென கபிலர் விடைபெறுகிறார். இன்றைக்கும் கபிலர்கள் போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் பெருங்குடிகளின் மனம் தான் பல நூற்றாண்டுகளுக்கும் சேர்த்து இறுகிக்கிடக்கிறது.


[flashvideo filename=video/kabilar.flv /]


மூவேந்தர்களின் கூட்டுப்படை போரைத்தொடங்கும்போதே பாரியை வீழ்த்தியபிறகு மூவருக்கும் என்னென்ன வேண்டுமென்று மூவேந்தர்களும் பங்கு பிரிக்க ஆலோசனை நடத்துவது இன்றைய அரசியல் கூட்டணி பேரங்களை ஞாபகப்படுத்துகிறது. பறம்பு நாட்டு பெண்ணொருத்தி வாளேந்திப்போரிடுவதும், இன்னொருத்தி ஆட்டுக்குட்டியைக் குழந்தையென மறைத்துக் காப்பாற்றத் துடிப்பதும் வேளிர்குல பெண்களின் இயல்புகளைக் காட்டும் காட்சிகள்.


டுகளத்தில் வீழ்ந்து கிடக்கும் பாரி மரணத்தின் விளிம்பிலிருந்து, ‘மானத்தோடு வாழ நினைத்ததும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் உயர்நோக்கோடு வாழ்ந்ததும் தவறா?’ என்று கபிலரிடம் புலம்புகிறான். மூவேந்தர்களையும் தமிழால் ஒன்றிணைக்க தாம் முயன்று முடியாமல் போனதைச் சொல்லி கபிலரும் வருத்தப்படுகிறார். தமிழால் நாம் ஒன்றிணைய முடியாதென்றும், குடிபேதம் மறுத்த, குடிபேதம் பேணாத தமிழால் மட்டுமே நாம்  ஒன்றிணைய முடியுமெனச் சொல்லி மாண்டு போகிறான் பாரி. அத்துடன் நாடகமும் நிறைகிறது.


[flashvideo filename=video/paari.flv /]


ரங்க அமைப்பு, உடை, ஒப்பனை, ஒளி, இசை, பாடல் என நுட்பமுறையில் பாரி படுகளம் மிகச்சிறப்பாகவே இருக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட கதைத்தேர்வும், உரையாடல்களும், காட்சிகளும் பாராட்டுதலுக்குரியவை. ஆனால் இவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சில நடிகர்களின் நடிப்பு/மொழி உச்சரிப்பு இல்லாமலிருந்தது சிறு குறையாக தெரிந்தது. ( நாடகம் வெளியரங்கில் நிகழ்ந்ததும், சில நடிகர்கள் வேற்று மொழிக்காரர்களாக இருந்ததும் காரணமாக கொள்ளப்பட்டது.) அதே போல சில நீளமான பாடல்களைக் குறைத்திருக்கலாம். ஆனால் தவறவிடாமல் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நாடகம்.


[singlepic=31,480,360,watermark]

Wednesday, October 01, 2008

கவிதை பிரசவம்

தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன...
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!

Thursday, August 07, 2008

முத்தம்

முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

*

உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!

*

உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.

*

பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது...
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!

*

நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!

*

Thursday, July 31, 2008

A for Apple

மயூரேசன் அழைத்ததால்...

b - http://www.bbc.co.uk/tamil பிபிசி தமிழோசை சின்ன வயசுல இருந்து கேட்டுப் பழக்கமாகிடுச்சு. இப்போவும் வானொலியில அப்பப்போ கேட்கிறதுண்டு. ஆனா கண்டிப்பா தினமும் வலைல படிச்சிடுவேன்.
c - http://charuonline.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்
d - http://www.dinamani.com மசாலா இல்லாத தமிழ்ச் செய்திகளுக்கு
e - http://en.wikipedia.org உருப்படியா தேட
f -  http://feedburner.com என்னோடப் பதிவையும் 250 பேர் வழக்கமா வாசிக்கிறாங்க :)
g - http://www.google.com கண்டதையும் தேட
i - https://imo.in அலுவலகத்துல gmail, gtalk எல்லாம் தடை பண்ணிட்டதால gtalkல பேசறதுக்கான குறுக்குவழி. இன்னொரு வசதி GTalk, Yahoo Messenger எல்லாத் தொடர்புகளோடவும் ஒரே சமயத்துல, ஒரே விண்டோவுல இருந்தே பேசலாம்.
   http://indiaglitz.com தெலுங்குப் படம் பாக்கப் போறதுக்கு முன்னாடி இங்க தான் கதை படிச்சுட்டுப் போறது ;)
j - http://javapassion.com, http://java.sun.com கொலைவெறியோட நாலு மாசமா எனக்கு வாழ்வா ஜாவா போராட்டம் நடந்தது இங்கதான். நல்ல பலன் கிடைக்கும். கிடைச்சிருக்கு :) http://jeyamohan.in அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்.
k - http://keetru.com கதை, கவிதை, கட்டுரை இன்னும் பல
m - http://www.maatru.net தேர்ந்தெடுத்த பதிவுகள வாசிக்க...
n - http://www.newindpress.com மசாலா இல்லாத ஆங்கிலச் செய்திகளுக்கு!
p - http://www.puthinam.com ஈழச்செய்திகளுக்கு. தினமும் நான் திறக்கிற முதல் தளம் இதுதான்.
s - http://sramakrishnan.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்
t - http://thamizmanam.com blogspot.com பதிவுகளும் அலுவலகத்துல தடை பண்ணிட்டதால தமிழ்மணத்தோட print friendly சேவைதான் ஒரே வழி.
v - http://vikatan.com வர வர உருப்படியா ஒன்னும் இல்ல. ஆனா பணம் கட்டிட்டேனே!

தொடரப் போகும் மூவர்:
1. ப்ரேம்குமார் 
2. எழில் 
3. Sri

Rule:

  1. The Tag name is A for Apple

  2. Give preference for regular sites

  3. Ignore your own blogs, sites.

  4. Tag 3 People.

Wednesday, July 30, 2008

பச்சக் கலர் கேரட்

ஜனனி : மாமா எங்கம்மாவும் உங்கள மாதிரி எஞ்சினியர் ஆகப்போறாங்க
அண்ணா : என்ன பாப்பா சொல்ற?
ஜனனி : ஆமா, மாமா எங்கம்மா டெய்லர் க்ளாஸ் போறாங்க, அப்றம் டெய்லர் எஞ்சினியர் ஆகிடுவாங்க!

*

ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா?
அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற?
ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் 'யாரும் மூச்சு விடக்கூடாது', 'யாரும் மூச்சு விடக்கூடாது' ன்னே சொல்றாங்கம்மா..
அக்கா : யாரும் பேசக்கூடாதுங்கறத தான் அப்படி சொல்றாங்க. மிஸ் சொல்றாங்கன்னு நீ மூச்சு விடாம இருந்துடாத பாப்பா!

*

அப்பா : என்ன ஜனனி நீ. நல்லாவே எழுத மாட்டேங்கற. நிறுத்தி நிதானமா எழுது.
ஜனனி : தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது.

இதற்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் அப்பா முழிக்க, அடுத்து அவள் சொன்னது...'நான் எப்பவும் உண்மையேதான் தாத்தா பேசுவேன். பொய்யெல்லாம் பேச மாட்டேன்'

*

அக்கா : கையெழுத்தெல்லாம் முத்து முத்தா இருக்கனும் பாப்பா.
ஜனனி : ஹைதராபாத்ல இருந்து மாமா வாங்கிட்டு வந்த முத்தாம்மா?
அக்கா : ஜனனீஈஈஈஈ, அழகா குண்டு குண்டா எழுதுன்னு சொல்றேன்.
(நல்ல வேளை பெங்களூர்ல வெடிச்ச குண்டான்னு கேட்கல)

*
அம்மா : சரி ஜனனி நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்.
ஜனனி : சரி அம்மாச்சி. மனசுல என் ஞாபகம் வந்துச்சுனா ஒடனே கெளம்பி வந்துடுங்க. காலைலயா இருந்தா வாங்க. நைட்டா இருந்தா வராதீங்க இருட்டா இருக்கும். நான் கனவுல வந்து பிஸ்கட் தர்றேன், சாப்பிட்டு தூங்கிட்டு காலைல எந்திருச்சு வந்துடுங்க.

*
ஜனனி : மாமா, நான் சின்ன பாப்பாவா, பெரிய பாப்பாவா?
நான் : நீ சின்ன பாப்பா தான்.
ஜனனி : நான் சென்னைக்குப் போனா?
நான் : சென்னைக்குப் போனா, மித்ரா சின்ன பாப்பா. நீ பெரிய பாப்பா.
ஜனனி : சேலத்துக்குப் போனா?
நான் : சேலத்துக்குப் போனா, அம்சா பெரிய பாப்பா. நீ சின்ன பாப்பா.
ஜனனி : என்ன மாமா. மாத்தி மாத்தி சொல்ற? எதாவது ஒன்னு சொல்லு மாமா!
(வர வர ஜனனி கூட என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டாள்)

*
நான் : ஜனனி, ஊருக்கு வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்?
ஜனனி : பச்சக் கலர் கேரட் வாங்கிட்டு வா மாமா.
(இனிமேல் அவளிடம் எதுவும் கேட்க் கூடாதென்று முடிவு செய்திருக்கிறேன்)

Tuesday, July 29, 2008

காதல் கவிதை

நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

*


 


இரண்டு முத்தங்கள் கொடுத்து


இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.


இயலாத செயலென


இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.


 


*


 


யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்


எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள


என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.


எப்பொழுதும் அளந்தே பேசுபவன்


உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே


அளவின்றி பேசுகிறேன்.


 


*


 


உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்


எனதுவிழிகளைவண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட


சிறகடித்து தவிக்கும் இமைகள்!


 


*


 


தனியேநீமுணுமுணுக்கும்


இனியபாடல்கள்


இசைத்தட்டில்ஒலிக்கையில்


இனிமைஇழப்பதேன்?



*



மேலும் சில காதல் கவிதைகள் :

மார்கழிப்பாவை

2011 Valentine's Day Special

2011 புத்தாண்டு காதல் கவிதைகள்

தேவதைகளின் தேவதை

முத்தம்

காதல் கவிதைகள்

அன்புள்ள காதலிக்கு

2007 Valentine's Day

காதல் வாங்கினால் முத்தம் இலவசம்

Monday, July 28, 2008

காதல் யந்திரம்

காதல் யந்திரம்


சிறியவனாயிருந்த காலத்தில் எந்தப் பொருளையாவது தொலைத்துவிட்டு அப்பாவிடம் அடி வாங்கும்பொழுதெல்லாம் யோசித்திருக்கிறேன், கடந்த காலத்துக்கு சென்று அந்தப் பொருளை எங்கு வைத்தேனெனெத் தெரிந்து கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? காலயந்திரம் உருவாக்கும் சாத்தியக்கூறுகளுக்கான எனது தேடல் இப்படித்தான் துவங்கியது. பள்ளிக்காலம் வரைக்கும் எப்படியாவது கடந்த காலத்துக்கு செல்வதே எனது எதிர்கால இலட்சியமாக இருந்ததென்று சொல்லலாம். பள்ளியிறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் உலகம் அழியப்போவதாக பரபரப்பான செய்திகள் வந்தபொழுதுதான் Nostradamus அறிமுகமானார். எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே கணித்திருக்கிறார் என்ற ஆர்வத்தில் அவரது The Prophecies புத்தகத்தை தேடிப்படித்தபோதும் எனக்கதில் பெரிய ஈர்ப்பு வரவில்லை. அறிவியலுக்கு அப்பாற்பட்ட எதனையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


 


+2 முடித்து திருச்சி RECயில் EEE சேர்ந்தபின்னர் எலக்ட்ரானிக்ஸ் சிப்புகள் எல்லாம் விதவிதமாக பிணைந்து காலயந்திரமாக உருவாவது போல கனவு கண்டேன், இரவு பகல் இரண்டிலும். கல்லூரிகாலத்தில் தான் வெறும் தேடலாக இருந்த எனதார்வம் ஓர் ஆராய்ச்சிக்கான துவக்கமாக உருமாறியிருந்தது. Time machine, time travel குறித்த புனைவுகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள் என எல்லாவற்றையும் தேடித்தேடி வாசித்தேன். Sci-Fi திரைப்படங்கள் எனது கணினித் திரையில் விடிய விடிய ஓடிக்கொண்டிருந்த காலமது. காலம் என்பது நான்காவது பரிமாணம் என்பதும், கடந்த காலமும் எதிர்காலமும் சந்திக்கும் புள்ளிதான் நிகழ்காலமென்பதால், நிகழ்காலம் என்ற ஒன்றே கிடையாதென்பதும் புரிபடத் துவங்கியது. எனது புரிதலைக்கொண்டு கல்லூரி இறுதியாண்டில் காலயந்திரம் உருவாக்குவதற்கான Proof Of Concept மாதிரி நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் விளக்கினேன். எவனும் மதிக்கவில்லை. வெறுப்பாக வந்தது.


 


கல்லூரி முடித்ததும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து டெல்லிக்கு வந்த பின்னரும் காலயந்திரம் தன்னை உருவாக்க சொல்லி என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது. அலுவல் நேரம் போக தினமும் ஆறு மணிநேரமாவது இதற்காக செலவு செய்தேன். எனது அறை கிட்டத்தட்ட ஓர் ஆய்வுக்கூடம் போலவே வளர்ச்சியடைந்திருந்தது. நான்காண்டு உழைப்பு பெரிய முன்னேற்றமெதனையும் தந்துவிடவில்லை. போகாத ஊருக்கு வழித் தேடுகிறேனோ என்று சலிப்பேற்பட்ட போதும் புதிய ஊரினைக்கண்டு பிடிக்கும் காட்டுவழிப் பயணத்தைப்போல எனது ஆராய்ச்சி தொடர்ந்துகொண்டிருந்தது. எனது விடாமுயற்சி வீண்போகவில்லை. கடந்த காலம், எதிர்காலம் இரண்டுக்கும் பயணிக்கும்படி உருவாக்கியிருந்த எனது காலயந்திரம் அன்றிரவு எதிர்காலத்துக்கு மட்டும் வேலை செய்ய துவங்கியிருந்தது. காலயந்திரத்தில் என்னை இணைத்துக் கொண்டு அம்மாவை நினைத்தபடி கண்மூடினேன். அடுத்த ஓராண்டில் எனக்கும் அம்மாவுக்கும் நடக்கும் சந்திப்புகள் மனத்திரையில் ஓடத் துவங்கின. ஓராண்டுக்குப்பிறகு வெற்றுத்திரையே தெரிந்தது. காலயந்திரத்திலிருந்து வெளியே வந்தேன். எதையோ சாதித்துவிட்ட திருப்தியிருந்தது. சட்டென அந்த யோசனை வரவும் மீண்டும் காலயந்திரத்தில் என்னை இணைத்துக் கொண்டு காலயந்திரத்தையே நினைத்த படி கண்மூடினேன். முதல் காட்சியைப் பார்த்ததுமே என் இதயம் துடிப்பதை நிறுத்தி மகிழ்ச்சியில் குதிக்கத் துவங்கியது. ஆம், அடுத்தநாள் காலை அது கடந்த காலத்துக்கும் வேலை செய்வதை நான் பரிசோதிக்கும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. காலயந்திரத்திலிருந்து வெளியே வந்தேன். யுரேகா யுரேகா என்று கத்திக்கொண்டு வீதியில் ஓட வேண்டும் போலிருந்தது. உற்சாகமிகுதியில் மதுவருந்துவதற்காக அந்த மதுவிடுதிக்குப் போயிருந்தேன். மூன்றாவது கோப்பை VSOP உள்ளே போனபிறகுதான் பக்கத்து டேபிளில் தனியே இருந்த அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது.


 


‘டேய், நீ அருள் தான?’ என்று கேட்டுக்கொண்டு அவனை நெருங்கினேன். அருள்முருகன் எனது கல்லூரித் தோழன். இத்தனை ஆண்டுகள் கழித்து இங்கெப்படி? அதுவும் தனியாக மதுவருந்திக்கொண்டு? விசாரித்த பிறகு எல்லாவற்றையும் சொன்னான் விரக்தியோடு. கல்லூரி முடிந்ததும் அவனும் பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் மூன்றாண்டுகள் வேலை பார்த்துவிட்டு MBA படிக்க இங்கு டெல்லி கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அங்கே இளாவும் சேர்ந்திருக்கிறாள். இளா என்றால் இளவரசி. அவளும் எங்களுடையக் கல்லூரித்தோழி தான். பழைய கல்லூரித்தோழர்கள் என்பதால் இயல்பாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். இரண்டாமாண்டு தான் அவர்களுடைய நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. காதலே வெட்கப்படுமளவுக்கு  ஆறுமாதம் காதலித்திருக்கிறார்கள். அதன்பிறகு வழக்கம்போல இளா வீட்டில் அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் வரை செல்கையில் தன் காதலை வீட்டில் சொல்லியிருக்கிறாள். ஆனால் அன்பையே ஆயுதமாக்கி அவளை அந்தத்  திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். இவனிடம் வந்து ‘என்ன மன்னிச்சிடு அருள். எல்லாத்தையும் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ’ என்று அறிவுறை கூறிவிட்டுக் கொஞ்ச நேரம் அழுதுவிட்டு சென்றிருக்கிறாள். நாளைக்கு அவளுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறதாம். இவன் துக்கம் தாங்காமல் இங்கு வந்திருக்கிறான்.


 


அவன் கதை முழுவதையும் கேட்டதும் எனக்கிருந்த உற்சாகமே போய் விட்டிருந்தது. இருவரும் இன்னும் மூன்று கோப்பை அருந்தினோம். அவன் தானே பேசிக்கொண்டு அழ ஆரம்பித்தான். நான் சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தேன். புகைக்குள் அருள் தெரிந்தான். இளா தெரிந்தாள். கால யந்திரமும் தெரிந்தது. அருளை எழுப்பி அவன் காதலை நான் காப்பாற்றுவதாக சொன்னேன். அவன் நம்பாமல் பார்த்தான். எனது செல்பேசியெண்ணை அவனிடம் கொடுத்து அடுத்த நாள் காலை 11 மணிக்கு என்னை தொடர்புகொள்ள சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பினேன். எனக்கு ‘திக்’ ‘திக்’ என்றிருந்தது.


 


அடுத்த நாள் காலை ‘எதிர்காலம்’ சொன்ன படியே, எனது காலயந்திரம் கடந்த காலத்துக்கும் வேலை செய்யத்துவங்கியிருந்தது. எதிர்காலம் போலவே இதுவும் ஓராண்டுக்கு மட்டுமே. எதிர்கால நிகழ்வுகளைப் பார்க்க மட்டும்தான் முடியும். ஆனால் கடந்த கால நிகழ்வுகளை மனத்திரையில் பார்க்கலாம் + குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சென்று நமது செயல்களை மாற்றிவிடலாம். அதுதான் எனக்கு அருளையும் இளாவையும் சேர்த்துவிடும் நம்பிக்கையைத் தந்தது. பரிசோதனை செய்துகொள்வதற்காக காலயந்திரத்துடன் என்னை இணைத்துக்கொண்டு கடந்தகாலத்தை தெரிவு செய்தேன். அருளை மனதில் நினைத்துக்கொண்டு கண்மூடினேன். முந்தைய நாள் சந்திப்பு மனத்திரையில் ஓடியது. எனக்குத் தேவையான கடைசி இரண்டு நிமிட கால இடைவெளியைத் தெரிவு செய்து கொண்டு கடந்த காலத்துக்குள் நுழைந்தேன். என்னுடைய செல்பேசிக்கு பதிலாக வேறொரு எண்ணை அவனிடம் கொடுத்துவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன். எதிர்பார்த்தபடியே 11.15 வரை அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை. அதன்பிறகு அவனுடைய எண்ணுக்கு நானே அழைத்தேன். வேறொரு எண்ணைக் கொடுத்துவிட்டதற்காக என்னைத்திட்டினான். நான் போதையில் தவறாக சொல்லியிருப்பேனென்று மன்னிப்பு கேட்டுவிட்டு என் முகவரி சொல்லி எனதறைக்கு அவனை வரச்சொல்லியிருந்தேன். அவன் வரும்வரை எனக்கு இருப்பு கொள்ள வில்லை.


 


நான் செய்யப்போவது எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்குமா என்று படபடப்பாக இருந்தது. கால யந்திரந்திலேயே பார்த்துவிடலாமென அதனுடன் என்னை இணைத்துக்கொண்டு எதிர்காலத்தை தெரிவு செய்தேன். அருளையும், இளாவையும் மனதில் நினைத்துக்கொண்டு கண்மூடினேன். கதவு தட்டப்படும் அலாரம் காலயந்திரத்தில் கேட்டது. எரிச்சலோடு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன். அருள் தான் வந்திருந்தான். எனது அறையையே வித்தியாசமாகப் பார்த்தான். அவனை அமரச் சொல்லிவிட்டு அவனுக்கு எனது காலயந்திரம் பற்றி முழுமையாக விளக்கினேன். நான் அதனை முழுமையாக பரிசோதித்துவிட்டேன் என்பதை நான் கடந்த காலத்துக்கு போய்தான் அவனிடம் கொடுத்த செல்பேசியெண்ணை மாற்றியதைச் சொல்லிப் புரிய வைத்தேன். நம்பியும் நம்பாமலும் என்னைப் பார்த்தான். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பிக்கையளித்தேன். தலையாட்டினான். அவர்களுக்கிடையேயான கடைசிச் சந்திப்பில் என்ன நடந்ததென விசாரித்தேன். எல்லாவற்றையும் சொன்னான். கடைசியாக அவள் ‘என்ன மன்னிச்சிடு அருள். எல்லாத்தையும் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ’ என்று சொன்னதாகவும் இவன் அமைதியாக இருந்ததாகவும், அவள் அழுதுகொண்டே சென்று விட்டதாகவும் சொன்னான். எனக்கு எரிச்சலாக வந்தது. விழுந்து விழுந்து காதலிக்கிறான்கள். ஆனால் அதைக் காப்பாற்றத் தெரியவில்லை.


அவர்களின் பெற்றோரைப் போலவே அவனும் அன்பையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமென சொல்லி அவனை காலயந்திரத்தோடு இணைத்தேன். இளாவை நினைத்துக்கொண்டு கண்மூடினான். அவன் கடந்த காலத்துக்குள் நுழையவேண்டிய கால இடைவெளியைத் தெரிவு செய்தான்.


 


‘…என்ன மன்னிச்சிடு அருள். எல்லாத்தையும் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ’


‘இளா, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் உன்னக் கட்டாயப்படுத்தல. அதே மாதிரி நான் இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தயவு செஞ்சு என்னக் கட்டாயப்படுத்தாத. எனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நடக்காது.பை’


 


சொல்லிக்கொடுத்த மாதிரியே சொல்லிவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினான்.


‘அப்பாடா இப்போதான் கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்குடா’


‘அருள், ஒன்னும் கவலப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும்! இளாவோட நம்பர் கொடுத்துட்டுப் போ’


‘நோட் பண்ணிக்கோ 9948645533’


அன்று கவலை குறைந்தவனாக அவனது விடுதிக்குக் கிளம்பிப் போனான்.


 


கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு இளாவுக்குத் தொலைபேசினேன். மிகவும் பதற்றமாக இருந்தது அவள் குரல். என் பெயரைச் சொன்னதும் அழ ஆரம்பித்துவிட்டாள். முந்தைய நாளிரவு மதுவருந்திவிட்டு வந்து விடுதியறையில் அருள் தற்கொலை செய்து கொண்டதாகவும் விடுதியே பரபரப்பாக இருப்பதாகவும் காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டிருப்பதாகவும் சொன்னாள். கடந்த காலத்தில் மாற்றம் செய்ததால் எல்லாமே மாறிவிட்டிருந்தது. முந்தைய நாளிரவு என்னுடன் மதுவருந்திவிட்டுப் போனவன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். அப்படியானால் இளாவின் செல்பேசியெண் எனக்கு எப்படி கிடைத்திருக்கும்? குழப்பமாக இருந்தது. விடுதிக்கு உள்ளேயிருந்து யாரையும் வெளியிலும், வெளியிலிருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லையெனவும் அவள் வெளியில் மாட்டிக்கொண்டதாகவும் உள்ளே போக முடியவில்லையெனவும் அழுதாள். நான் வரும்வரை அவளை வெளியிலேயே இருக்க சொல்லிவிட்டு அவர்களுடைய விடுதிக்கு கிளம்பினேன்.


 


வாசலருகே இளா அழுதவாறு நின்றுகொண்டிருந்தாள். காவல்துறை அவள் மீதுதான் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குத் தொடரும் ஆபத்திருப்பதைச் சொன்னதும் பதற்றமாய் என்னைப் பார்த்தாள். எனக்கெல்லாம் தெரியுமென சொல்லி அவளை எதுவும் பேச வேண்டாமெனக் கேட்டுக்கொண்டு எனதறைக்கு அழைத்துப்போனேன். எனது அறையையே வித்தியாசமாகப் பார்த்தாள். அவளை அமரச் சொல்லிவிட்டு அவளுக்கு எனது காலயந்திரம் பற்றி முழுமையாக விளக்கினேன். நான் அதனை முழுமையாக பரிசோதித்துவிட்டேன் என்பதையும் புரிய வைத்தேன். நம்பியும் நம்பாமலும் என்னைப் பார்த்தாள். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பிக்கையளித்தேன். தலையாட்டினாள். அவர்களுக்கிடையேயான கடைசிச் சந்திப்பில் என்ன நடந்ததென விசாரித்தேன். எல்லாவற்றையும் சொன்னாள். கடைசியாக அவன்


இளா, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் உன்னக் கட்டாயப்படுத்தல. அதே மாதிரி நான் இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தயவு செஞ்சு என்னக் கட்டாயப்படுத்தாத. எனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நடக்காது.பை


 என்று சொன்னதாகவும், இவள்


‘இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு மட்டும் இஷ்டமா அருள்? நீ பையனா பொறந்துட்ட, உன்னால கல்யாணமே பண்ணிக்காம இருக்க முடியும். நா பொண்ணாப் பொறந்துட்டேன் கல்யாணம் பண்ணிக்காம இருக்க நா விருப்பப்பட்டாலும், இந்த சமுதாயம் விடாது. மனசுல உன்ன நெனச்சுட்டு இன்னொருத்தனோட வாழ்ந்துதான் ஆகனும். அதத்தான் பண்ணப்போறேன்.பை.’ என்று சொல்லிவிட்டு அழுதுகொண்டே சென்று விட்டதாகவும் சொன்னாள். எனக்கு எரிச்சலாக வந்தது. விழுந்து விழுந்து காதலிக்கிறாள்கள். ஆனால் அதைக் காப்பாற்றத் தெரியவில்லை. அருளைப் போலவே அவளும் மரணத்தையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமென சொல்லி அவளை காலயந்திரத்தோடு இணைத்தேன். அருளை நினைத்துக்கொண்டு கண்மூடினாள். அவள் கடந்த காலத்துக்குள் நுழையவேண்டிய கால இடைவெளியைத் தெரிவு செய்தாள்.


 


‘இளா, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் உன்னக் கட்டாயப்படுத்தல. அதே மாதிரி நான் இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தயவு செஞ்சு என்னக் கட்டாயப்படுத்தாத. எனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நடக்காது.பை’


 


‘மன்னிச்சிடு அருள். நீயும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவன்னு எதிர்பார்த்துதான் நான் இப்படியொரு முடிவுக்கு ஒத்துக்கிட்டேன். நீ இப்படி சொன்னபின்னாடி நான் மட்டும் சந்தோசமாவா இருந்திடப்போறேன்? உன்னதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு முடிஞ்ச வரைக்கும் போராடுவேன். இன்னொருத்தருக்கு தான்னு முடிவாயிடுச்சுன்னா, அந்த கல்யாணத்துக்கு முன்னாடி என் உயிர் போயிடும்.’


 


சொல்லிக்கொடுத்த மாதிரியே சொல்லிவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினாள்.


‘அப்பாடா, இப்பதான் கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்குப்பா’


‘இளா, ஒன்னும் கவலப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும்’


அன்று கவலை குறைந்தவளாக அவளது விடுதிக்குக் கிளம்பிப் போனாள்.


 


ஒரு மாதம் கழித்து ஒருமுறை இருவரையும் ஒரு திரையரங்கில் சந்தித்தேன். மீண்டும் இணைந்து விட்டார்கள் போல. அவனுக்குத் தெரியாமல் அவளும், அவளுக்குத் தெரியாமல் அவனும் ரகசியமாக நன்றி சொன்னார்கள். நான் இருவருக்கும் பொதுவாக புன்னகைத்தேன்.


 


ஆறுமாதம் கழித்து அருள் தொலைபேசியில் என்னையழைத்து மிகவும் பதற்றமாகப் பேசினான்.


 


‘மச்சான், தப்புப் பண்ணிட்டோம்டா…இளா செத்துட்டாடா…’


‘எப்படிடா? என்ன நடந்தது?’


‘லீவ்ல வீட்டுக்குப் போயிருக்கா. அப்பவே கல்யாணத்த முடிச்சிடனும்னு அவங்க வீட்ல ரொம்ப கம்பல் பண்ணியிருப்பாங்க போல… விஷம் குடிச்சிட்டா… போலீஸ் இப்போ என்னத்தேடுதாம். அனேகமா உன் வீட்டுக்கும் இந்நேரம் போலீஸ் வந்துட்டிருக்கும்’


அவன் சொல்லி முடிப்பதற்குள் ஒரு சத்தத்தோடு அவன் செல்பேசி உயிரிழந்தது.


 


பதற்றத்தோடு கால யந்திரத்துடன் என்னை இணைத்துக்கொண்டு கடந்த காலத்தை தெரிவு செய்தேன். இளாவை மனதில் நினைத்துக்கொண்டு கண்மூடினேன். கடந்த காலத்துக்குள் நுழையவேண்டிய கால இடைவெளியைத் தெரிவு செய்தேன்.


 


‘அப்பாடா, இப்பதான் கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்குப்பா’


‘இளா, ஒன்னும் கவலப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும். அப்பறம் ஒரு விசயம். இது சும்மா அருளுக்காக தான். நீ எந்த சூழ்நிலையிலயும் தற்கொலை முடிவுக்கெல்லாம் போகக்கூடாது. தற்கொலை பண்ணிக்கிறத விட நீங்க இப்பவே ஒரு பதிவுத்திருமணம் பண்ணிக்கிறது உங்களப் பாதுகாக்கும்’


 


நினைத்த மாதிரியே சொல்லிவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன்.


 


ஒரு மாதம் கழித்து அருளும், இளாவும் வந்திருந்தார்கள். அருள் வீட்டு சம்மதத்தோடு சொன்ன மாதிரியே பதிவுத்திருமணம் செய்துகொண்டு விட்டார்களாம். அப்புறம் இளா வீட்டிலும் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு இரண்டாவது முறையாகத் திருமணம் நடக்கவிருக்கிறதாம். அழைப்பிதழ் கொடுத்துவிட்டுப் போனார்கள். எனது கால யந்திரம் காதல் யந்திரமாய் மாறிப்போனதில் மகிழ்ச்சியே.


 


அவர்களுடையத் திருமணத்திற்கும் சென்றிருந்தேன். பரிசுப்பொருளைக் கொடுத்துவிட்டு கேமராவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த போது கதவு தட்டப்படும் அலாரம் காலயந்திரத்தில் கேட்டது. எரிச்சலோடு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன். அருள் தான் வந்திருந்தான். எனது அறையையே வித்தியாசமாகப் பார்த்தான். அவனை அமரச் சொல்லிவிட்டு அவனுக்கு எனது காலயந்திரம் பற்றி முழுமையாக விளக்கினேன். நான் அதனை முழுமையாக பரிசோதித்துவிட்டேன் என்பதை நான் கடந்த காலத்துக்கு போய்தான் அவனிடம் கொடுத்த செல்பேசியெண்ணை மாற்றியதைச் சொல்லிப் புரிய வைத்தேன். நம்பியும் நம்பாமலும் என்னைப் பார்த்தான். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பிக்கையளித்தேன். தற்பொழுதுதான் இனி நடக்கப்போகிற எல்லாவற்றையும் எதிர்காலத்துக்குப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்ததைச் சொன்னேன்.


முதன்மதலாக அவன் கடந்த காலத்துக்கு சென்று பேசியதையும், இருந்தும் இளா பிடிவாதமாக இருந்ததால் அவன் தற்கொலை செய்துகொண்டதையும், பிறகு இளா கடந்தகாலத்துக்கு சென்று அவன் மனதை மாற்றியதையும், பின்னர் அவளும் தற்கொலை செய்துகொண்டதையும், இறுதியில் நான் கடந்த காலத்துக்கு சென்று இளா மனதை மாற்றி பதிவுத்திருமணம் செய்துகொள்ள வைத்ததையும், இரு வீட்டு சம்மதத்தோடு நடந்த இரண்டாவது திருமணத்தில் நான் கலந்து கொண்டதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அவன் இப்போது வந்ததையும் சுருக்கமாகக்கூறினேன்.


 


பேயறைந்தவனைப்போல இருந்த அருள் , ‘நீ இன்னும் மாறவே இல்லையாடா’ என்று திட்டிவிட்டு தப்பித்து ஓடுபவனைப்போல் ஓடிவிட்டான்.


 


அதன்பிறகு என்னைக் கொண்டு வந்து இங்கே அடைத்துவிட்டார்கள். எல்லாம் அவனுக்கு உதவப்போய் வந்த வினை.


 


அந்த நோயாளி சொன்ன பதிலை ஒரு கதையைப்போல குறிப்பெடுத்துக்கொண்ட பொழிலன், பொன்னியிடம் சொன்னான் ‘its really different ponni’ . ‘yeah, But interesting. இத அதீத கற்பனைனு பாராட்டறதா இல்ல மனச்சிதைவு நோய்னு சொல்றதானு எனக்குத் தெரியல’ ஆமோதித்துவிட்டு அடுத்த வார்டுக்கு நகர்ந்தாள் பொன்னி.


 


‘முருகேசன்… நாங்க உளவியல் ஆய்வுக்காக உங்க கிட்ட பேச வந்திருக்கோம். நீங்க எப்படி இங்க வந்தீங்க?’


‘எனக்கு ரொம்ப நாளா என் முதுகுல யாரோ உட்காந்திருக்கிற மாதிரியே பயமா இருக்கு மேடம்…நான் சின்ன வயசுல எல்லாரையும் உப்பு மூட்டைத் தூக்கிட்டு விளையாடிட்டு இருக்கும்போது….’

Thursday, July 17, 2008

பதிவர் பிரேம்குமார் அப்பாவாகிவிட்டார்

செய்தி 1 : நேற்று நண்பர் பிரேம்குமார், அழகான ஆண்குழந்தைக்கு தந்தையாகியிருக்கிறார். குழந்தைக்கு ‘ப’ வரிசையில் பெயர் வைக்க வேண்டுமென்பதால் பிரேம்குமார் என்றே வைத்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் ;-)

செய்தி 2 : தங்கச்சி ஆகாயநதிக்கு நேற்று மாலை அழகான ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. தாயும், சேயும் நலம்!

செய்தி 3 : மேலேயுள்ள இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை :-)

வாழ்த்து சொல்ல - prem.kavithaigal@gmail.com அல்லது 09884812363

Wednesday, July 09, 2008

சிறுகதை – காதல் எனப்படுவது யாதெனில்

இப்பொழுது வந்ததற்கு பதிலாக, நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம்.

அப்பொழுது அவரெனக்கு நல்ல தோழியாக மட்டும் தான் இருந்தார். எனது குறைகளை குறையென மட்டுமே சொல்லாமல் திருத்திக்கொள்ளும் வழியினை சொல்லித் தருவதிலும், என்னால் தீர்த்துவிட முடியாதெனத் தெரிந்த போதும் தனது வருத்தங்களை என்னிடம்… என்னிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டதிலும், தனது நெருங்கிய தோழிகளைக்காட்டிலும் என் மீது அவருக்கு அன்பும், நம்பிக்கையும் அதிகமுண்டென்பதை அவருடைய செயல்கள் அனிச்சையாய் நிரூபித்துக்கொண்டே இருந்தன. எனக்குள் மட்டுமே கூடு கட்டிக் குடியிருந்த எனது எதிர்காலக் கனவுகளெல்லாம் சிறகடித்து அவரிடம் பறந்து சென்றபோதும், அவரது அருகாமையில் மட்டுமே நான் முழுமையடைவதாய் உணர்ந்துகொள்ளத் துவங்கிய போதும், எங்களுக்குள் முளைத்த நட்பு காதலாய் மலருமென நான் எதிர்பார்க்க வில்லைதான். ஆனாலென்ன? நல்ல நட்பிலிருந்து மலர்வது காதலுக்கும் அழகுதானே?

காதலிக்கிறோமெனத் தெரிந்த பின்னும் வெளிப்படையாய்ச் சொல்லிக்கொள்ளாமலே காதலிக்கும் இன்ப அவஸ்தையை அனுபவித்திருக்கிறீர்களா? காதலிக்குப் பிடித்த பாடலை செல்பேசியில் அழைப்பிசையாகவும், காதலிக்குப் பிடித்த புகைப்படத்தை கணினித் திரையிலும், காதலியின் பிறந்த நாளைக்குறிப்பிடும் எண்ணில் செல்பேசி இணைப்பும் வைத்துக்கொண்டதுண்டா? காதலியின் அறைத்தோழி உதவியுடன் காதலிக்குப் பிடித்த பரிசுப்பொருளை அவள் தலையணைக்கடியில் ஒளித்துவைத்து, இரவு பனிரண்டு மணிக்கு அழைத்து பிறந்த நாளுக்கு வாழ்த்தி, தலையணையை எடுத்துப்பார்க்க சொன்னதுண்டா? நீங்கள் தேநீரும் உங்கள் காதலி குளிர்பானமும் குடிக்கின்றபோதும் தேநீர் சுட்டுவிட்டதாய்ச் சொல்லி அவள் குடித்த பாதி குளிர்பானம் குடித்ததுண்டா? இந்த கிறுக்குத்தனங்கள் கூட இல்லையென்றால் அப்புறமென்ன காதல்?

இரவுநேரப் பேருந்தில் தனியேப் பயணிக்கும் உங்கள் காதலி நெடுஞ்சாலை உணவகத்தில் பேருந்து நின்றபோதும் தனியே செல்ல பயந்து சாப்பிடவில்லையென அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி இரவு முழுக்க உங்களை உறக்கமிழக்கச் செய்திருக்கிறதா? உங்களுக்கு நம்பிக்கையில்லாத போதும் உங்கள் பிறந்தநாளில் நெடுந்தூரம் தனியே பயணித்து கோவிலுக்கு சென்று பிரார்த்திக்கும் உங்கள் காதலியின் அன்பைப் புரிந்து கொள்ள, உங்கள் மனம் பக்குவப்பட்டிருக்கிறதா? சின்ன விசயத்துக்கெல்லாம் கோபித்துக்கொள்ளும் உங்கள் காதலியிடம் பெரிய விசயத்தையும் கோபமூட்டாமல் சொல்லிவிடும் கலையை, காதல் உங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறதா? இப்படி கட்டுப்பாடற்ற அன்பில் துவங்கவில்லையென்றால் அப்புறமென்ன காதல்?

தனிமையில் உங்களைப் பொய்யாக கிண்டலடித்துக் கொண்டேயிருக்கும் காதலி, அவள் தோழிகளுக்கு முன்னால் உங்களை விட்டுக்கொடுக்காமல் பேசுவதைக் கவனித்திருக்கிறீர்களா? உங்களிடம் பேசும்போது ஒருமையில் அழைக்கும் காதலி, உங்களைப் பற்றி பிறரிடம் சொல்லும்போது மரியாதையோடுக் குறிப்பிடுவதை ரசித்திருக்கிறீர்களா? அது, உங்கள் காதலியைப்பற்றி மூன்றாம் நபரிடம் நீங்கள் பேசுகையில் ‘அவள்’ என்பதற்குப் பதிலாக ‘அவர்’ என்று விளிக்க உங்களைப் பழக்கியிருக்கிறதா? இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை ஏற்படுத்தாவிட்டால் அப்புறமென்னக் காதல்?

பெற்றோர் சம்மதிக்காத நிலையில் வீட்டைவிட்டு ஓடிவந்தாலும் இப்பொழுதிருப்பதைக் காட்டிலும் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வீர்களெனும் நம்பிக்கை தனக்கிருப்பதாக உங்கள் காதலி உங்களிடம் உளறியதுண்டா? அப்படி சொன்னபோதும் கூட நீங்கள் அவரை வீட்டைவிட்டு ஓடிவர சொல்லிவிட மாட்டீர்கள் எனும் அவரது நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்களா? இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை உருவாகாவிட்டால் அப்புறமென்ன காதல்?

காதலுக்காக உயிரிழப்பதைப்போலவே நீங்கள் காதலுக்காக உயிரை இழந்ததுண்டா எனக்கேட்பதும் முட்டாள்தனம் தான். ஆனால் உங்கள் உயிரை விட அதிகமாய் நீங்கள் நேசிப்பவர்கள் உங்கள் மீது வைத்திருந்த மதிப்பை, காதலினால் இழந்திருக்கிறீர்களா எனக் கேட்கலாம். உங்கள் காதலி உங்களைத்தவிர வேறொருவரை மணக்கமாட்டாள், உங்களுக்காக வீட்டைவிட்டு வரவும் தயாராயிருக்கிறாள் என்பதையெல்லாம் சொல்லி உங்கள் வீட்டில் சம்மதம் வாங்கிக் காத்திருக்கையில் காதலிக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதையறிந்து பதறியிருக்கிறீர்களா? காதலை நேரடியாய்ச் சொன்ன காதலி தன்னை மறந்துவிடச்சொல்வதற்கு தோழியைத் தூதனுப்பிய போதும் உங்களுக்கு அவர் மீது கோபம் வராமல் பரிதாபம் வந்ததுண்டா? குடும்பத்தின் மதிப்பையும் இழந்து காதலியையும் இழந்து சொந்த வீட்டுக்குள்ளேயே ஓர் அகதியைப் போல வெறுமையை உணர்ந்திருக்கிறீர்களா? இந்த இழப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அப்புறமென்ன காதல்?

விடிந்தால் உங்கள் காதலிக்கு திருமணம் என்ற நிலையில் உறங்கப் பிடிக்காமல் இரவு முழுக்க வோட்கா குடித்திருக்கிறீர்களா? நான் குடித்துக்கொண்டிருக்கிறேன். இது இருபத்து நான்காவது கோப்பை. பார்த்தீர்களா… அவருக்கும் இருபத்து நான்கு வயதுதான். என்ன? காதல் தோல்விக்காக குடிப்பது முட்டாள்தனமா? காதல் தோல்விக்காக யார் குடிக்கிறது? என்னுடைய துயரங்கள் உங்களுக்குப் புரியுமா? அவருக்கு சைனஸ் தொல்லை இருப்பதால் மழைக்காலத்தில் அடிக்கடி சளி பிடிக்கும். சின்ன விசயத்துக்கெல்லாம் கோபம் வரும். ஒரு விபத்தில் அவருடைய இடது கையில் எலும்புமுறிந்து பிளேட் வைத்திருப்பதால் எடை தூக்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செண்ட், டியோடரண்ட் எல்லாம் அவருக்கு அலர்ஜி. கூட்டத்தில் சாப்பிடப்பிடிக்காது. அதிக நகைகளோ, மேக்கப்போ விரும்ப மாட்டார். புடவையைவிட சுடிதார்தான் பிடிக்கும். இப்படி ஆயிரம் விசயங்கள் அவரைப்பற்றி எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் அவருடையக் கணவர் சரியாகப் புரிந்து கொண்டு அவரை நேசிப்பாரா என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்ததற்குப் பதிலாக மகிழ்ச்சியாக இருந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம்.

யெஸ்! மிஸ்டர் எமன்! நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம்.

----------------------------------------------------------

ஸ்ரீ துவங்கிய தொடருக்காக எழுதிய சிறுகதை.

விதிமுறைகள்:

1. பதிவின் தலைப்பு - “காதல் எனப்படுவது யாதெனில்…” (மாற்றக்கூடாது).
2. என்ன பதிவிடலாம் - இது தான் எழுதணும் என்கிற கட்டாயம் கிடையாது. பதிவு எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம். கதை, கவிதை, நக்கல், கட்டுரை, மொக்கை………. என்ன வேணும்னா எழுதுங்க உங்கள் விருப்பம். (ஆனால் தலைப்போட கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கணும்)
3. பதிவு போட இன்னும் ஒருவரை அழைக்கணும். முன்பெல்லாம் இரண்டு மூன்று பேர் அழைக்கப்பட்டதால் தொடர் சங்கிலிகள் எங்காவது ஒரு தொடர்பு அறுந்தாலும் அவை கொஞ்சம் பயணித்தன. இங்கு ஒருவர் தான் அழைக்கப்படுகிறார் அதனால் நீங்கள் அழைப்பவரின் வசதியைக் கேட்டுவிட்டு கூப்பிடுங்கள்.

நான் அழைப்பவர் – இம்சையரசி

Thursday, June 26, 2008

ஒருகண்ணில் பூக்கும் மறுகண்ணில் தாக்கும்

வழக்கம்போல இன்னொரு தெலுங்கு மெட்டுக்கான எனது தமிழ் வரிகள்!

படம் : வான
இசை : கமலாக்கர்
குரல் : ரஞ்சித், சித்ரா
தெலுங்கு வரிகள் : சீத்தாராம சாஸ்திரி

[audio:sirimalli.mp3]

தமிழில் :

ஒருகண்ணில் பூக்கும் மறுகண்ணில் தாக்கும் சிறுபார்வை யார் தந்தது
கைவளையல் குலுங்க கால்கொலுசு சிணுங்க இதழ்கவிதை யார் சொன்னது
கவிதை தருவாயா… இதழ்கள் தருவேனே… - ஒரு கண்ணில்

பனித்துளிப் பூக்கள் மெய்யோடுசாயும் மெல்லினம் உன் ஸ்பரிசம்
பலகோடி மின்னல் உயிர்வரைபாயும் வல்லினம் உன் ஸ்பரிசம்
இனங்கள் கலக்கட்டும்… காதல் களைகட்டும்… - ஒரு கண்ணில்

இதயத்தின் ஆழம் நினைவுகள் ஓரம் வரைந்தேன் உனதுருவம்
இரவினில் நீளும் கனவுகள் யாவும் கரைந்தேன் தினந்தோறும்
மனசே புவியாக… காதல் நிலவாக… - ஒரு கண்ணில்

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள் ( கவிதை 'பற்றிய' கவிதைகள் )

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

*

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

*

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

*

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

*

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!

*

மேலும் சில காதல் கவிதைகள் :

2011 Valentine's Day Special

2011 புத்தாண்டு காதல் கவிதைகள்

தேவதைகளின் தேவதை

முத்தம்

காதல் கவிதை

அன்புள்ள காதலிக்கு

2007 Valentine's Day

காதல் வாங்கினால் முத்தம் இலவசம்

Monday, June 16, 2008

முதல் நாள் இன்று - ஒளிப்பதிவு

இன்று முதல் ஜனனிக்கு ஆசிரியைகளாக வரப்போகிறவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஜனனியிடமிருந்து அவர்களை ஆண்டவன் காப்பாற்றட்டும் :)

[flashvideo filename=video/jananikural.flv /]

Wednesday, June 11, 2008

விட்டுக்கொடுத்தல்

சிகரெட் முதல்
கடல் குளியல்
ECR பயணம்
பெரிய ராட்டினத்தில் சுற்றுதல் வரை
உனது பயங்களுக்கு அடிபணிந்து
எனது விருப்பங்களையெல்லாம்
உனக்காக விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
இறுதியில்… என் காதலையும்!

Tuesday, June 10, 2008

துவக்கி வைத்த குழந்தை

ஓவியம் வரைய
நீர் வண்ணங்களைக்
கலக்கி வைத்திருந்தேன்.
தரையில் கொட்டி
துவக்கி வைத்தது
ஒரு குழந்தை.

*

ஊரிலிருந்து வந்த மாமன்
தான் புதிதாய் வாங்கி வந்த
ஏரோப்ளேன்,
கண்டெயினர் லாரி,
இரண்டடுக்கு பஸ்,
சுற்றிக்கொண்டே இருக்கும் ரயில்…
எல்லாவற்றையும் எடுத்துக் காட்டினான்.
எல்லா வண்டிகளையும்
ஓட்டி சலித்தக் குழந்தை
பழையபடி
அவனை மண்டியிட சொன்னது...
ஆனை சவாரிப் போக!

Monday, June 09, 2008

என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது

உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
நாவல் வடிவம் அதற்கு நீளம்.
சிறுகதையில் மிகவும் சுருங்கும்.
கவிதையென்றால் பொய் சேரும்.

எழுதினாலே இயல்பு மாறக்கூடும்.

உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
எழுத்தில் சிதைக்காமல்
நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா?

*
பாதிக்கனவுடன்
கலைந்துவிட்ட உறக்கத்தை
மீதிக்கனவுக்காக இழுத்துப்போனேன்.
விழித்தபோது கிடைத்திருந்தது
புதிதாய் இன்னொரு பாதிக்கனவு.

Friday, June 06, 2008

கயிற்றின் மீது நடத்தல்

பைக் ஓட்டிக்கொண்டிருந்த கணவன்,
சாலையோரத்தில் கையில் கம்புடன்
கயிறு மீது நடந்த சிறுமியை
ஆச்சர்யமாய்ப் பார்த்தான்.
பின்னாலிருந்த மனைவி
அலட்சியமாய்த் திரும்பிக்கொண்டாள்.
அடுத்த வேகத்தடையில் விழுந்துவிட நழுவும்
தூங்கியக் குழந்தையுடனும்,
பிக்பஜாரில் வாங்கிய பொருட்களுடனும்,
காற்றில் பறக்கும் புடவை பிடித்து
பின்தொடரும் வாகனப் பார்வையிலிருந்து
இடது மார்பை மறைத்துக்கொண்டே வருவதை விடவா
பெரிய சாகசம்?

Thursday, June 05, 2008

சிறுகதை – ஆறுமுவம் பொண்டாட்டி

பொனாசிப்பட்டி ஆறுமுவம் பொண்டாட்டின்னா தெக்க அந்தரப்பட்டியில இருந்து வடக்க மகிளிப்பட்டி வரைக்கும் கொணமான பொம்பளைனு அத்தன சனத்துக்கிட்டயும் நல்ல பேரு. அவளும் யாருக்கும் எந்தக் கெட்டதும் மனசுல கூட நெனைக்க மாட்டா.நல்லது கெட்டதுக்கு வூட்டுக்கு வார சனத்த ஒரு வேலையும் செய்யவுட்டதில்ல.'அடநீங்க ஒக்காருங்கத்தாச்சி. செத்த நேரத்து வேல..நான் பாத்துக்கறேன்' னு சொல்லிட்டு அவளே செஞ்சு முடிச்சிருவா. யார் வூட்டு கண்ணாலங்காச்சினாலும் சரி, எழவுழுந்த வூடாருந்தாலும் சரி காய்கசவ அரியற எடத்துலயோ, யாணம்பாணம் வெளக்கற எடத்துலயோ அவள பாக்கலாம்.'ஆளுக்கு அஞ்சாறா செஞ்சா செத்த நேரத்துல செஞ்சிரலாம்'னு சிரிச்சுக்கிட்டே சொந்த வூடு மாரி மளமளன்னு வேலைய பாத்துக்கிட்டு இருப்பா. ஆறுமுவம் பொண்டாட்டி இருந்தா ஏழூரு வேலையயும் என்னா சேதி?ன்னு கேட்றுவான்னு பொம்பளையாளுங்க மெச்சிக்குவாங்க.

சாமி கும்பிட்டாக்கூட'ஆத்தா மகமாயி... இந்த வருசமாவது ஊர்ல மழயக்கொண்டா. எல்லா சனத்தையும் காப்பாத்து' னு வேண்டிக்கிட்டு 'எம்புருசனுக்கு நல்ல புத்தியக்கொடு'ன்னு கடசியாதான் வேண்டிக்குவா.ஆனா, போன செம்மத்துல அவ என்ன பாவம்பண்ணாளோ இப்புடி ஆறுமுவத்துக்கு வாக்கப்பட்டு சீரழியறா. கட்டிக்கொடுக்கும்போது அவங்கப்பாரோட சேந்து காடுகரய பாத்துக்கிட்டு ஆறுமுவம் ஒழுங்காதான் இருந்தான். வருசம் ஒன்னா வரிசையா நாலு புள்ள பொறந்துச்சு. நாளும் பொட்ட. அவங்கப்பாரு போய் சேந்த பின்னாடிதான் அவனுக்கு புத்தி கெட்டுப்போச்சு.'இந்தூர்ல ஈனப்பயதாங் இருப்பான்.நா அரிசி யாவாரம் பண்றேன்'னு பொண்டாட்டி புள்ளய ஊர்லயே வுட்டுட்டு உடுமலைப்பேட்டைக்கு ஓடிப்போயிட்டான். நாலு வருசமா ஆளு அட்ரசே காணோம். தேடிப்போன ஆளுங்களுக்கும் ஒரு ருசுவுங் கெடைக்கல. ஆனா அவன் திரும்பி வருவான்னு அவ நம்பிகிட்டு இருந்தா. 'ஏதோ ஆறுமுவம்பொண்டாட்டிங்கறதால இன்னும் இந்தூர்ல இருக்கா; வேற ஒருத்தியா இருந்தா இந்நேரம் பொறந்த ஊருக்கே பொட்டியக் கட்டியிருப்பா' ன்னு ஒரக்கேணியில தண்ணியெறச்ச சனம் பேசிக்கிச்சுங்க.

அந்த வருசம் மாரியாயி நோம்பியப்ப வந்திருந்தான். பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு இந்தான்னு ஒரு சீலத்துணி, சட்டத்துணி வாங்கியாரல. அப்பானு போயி கட்டிகிட்ட புள்ளைங்க ஏமாந்து போச்சுங்க. ஊர்ல இருந்த நாள்ல ஒரு நாக்கூட அவன் வூடு தங்கல. இச்சி மரத்தடில சீட்டாடுனான், மொட்டயன் காட்டுல சேத்தாளிங்க கூட மொடாமுழுங்கி மாரி கள்ளுக் குடிச்சான். குளித்தல போயி சினிமா பாத்தான். ஆனா கொண்டாந்த காசுல ஒத்த பைசா வூட்டுக்குனு குடுக்கல. நோம்பிக்கு மக்யா நாளு ராத்திரி கரகாட்டம்னு சொல்லி ரெக்கார்ட் டான்சு நடக்க மத்திப்பட்டிக்காரன் கொழா செட்டுல ஊரு முழுக்க பாட்டு சத்தம் மொழங்குச்சு. புள்ளைங்கள தூங்க வச்சிட்டு படுத்திருந்த ஆறுமுவம்பொண்டாட்டி அழுதுகிட்டே அவன திட்டிட்டு இருந்தா. 'நம்முடைய நடனத்தைப் பாராட்டி, இப்பொழுது உடுமலைப்பேட்டை அரிசி வியாபாரி திரு. ஆறுமுகம்பிள்ளை அவர்கள் ரூபாய் இரண்டாயிரத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார்கள். அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டு அடுத்த பாடலாக...' காதுல அதக்கேட்டதும் ஆங்காரம் வந்தவாளாட்டம் எந்திரிச்சுப் போனா...ரெக்கார்டு டான்சு நடந்த நாடகக்கொட்டாய்க்கு. அங்க தண்ணியப்போட்டுட்டு தள்ளாட்டத்துலதான் இருந்தான் ஆறுமுவம். அங்கன ரெண்டு பேருக்கும் நடந்த சண்டைல ரெக்கார்டு டான்சு நின்னு எல்லாரும் இவங்க சண்டய வேடிக்க பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. கடசில 'நீயெனக்கு பொண்டாட்டியுமில்ல;நா ஒனக்கு புருசனும்மில்ல' னு சொல்லிட்டு அப்பவே உடுமலப்பேட்டைக்கு போயிட்டான். அன்னைக்கு வூடு வர்றவரைக்கும் எல்லா சாமிக்கும் சாபம் குடுத்துக்கிட்டே வந்தா. நாலு பொட்டப்புள்ளைய வச்சிருக்காளே, அந்த மாரியாயி, ஆறுமுவம் பொண்டாட்டிய இப்படி சோதிக்குதேன்னு ஊரு சனம் வெசனப்பட்டுக்குச்சு.

அப்பறம் அவன் அங்கயே இன்னொருத்திய சேத்துக்கிட்டான்னு தெரிஞ்சதும், அவன் திரும்பி வருவான்;புள்ளைங்கள கர சேப்பாங்கற நெனப்பெல்லாம் அவளுக்கு அத்துப்போச்சு. தனியா வெள்ளாம வைக்க அவளால முடியாதுன்னு, இருந்த நெலத்தையும் குத்தைக்கு வுட்டுட்டு அவ கொத்து வேலைக்கு போவ ஆரம்பிச்சுட்டா. அப்பறம் ஊர்லயும் மழயில்லாம என்னப்பண்றதுன்னு தெரியாம கரும்பு வெட்ற வேலைக்குப் போவ ஆரம்பிச்சா. மில்லு தொறந்திருக்கற மாசத்துல சத்தியமங்கலத்துக்கோ, பெருகமணிக்கோ புள்ளைங்கள இழுத்துக்கிட்டுப் போயிருவா. மூனு மாசம், நாலு மாசம்னு வேலையிருக்கும். மில்லு மூடிட்டா ஊருக்கு வந்துரனும். ரெண்டு வருசம் இப்படியேப்போச்சு. புள்ளைங்க பள்ளியோடம் படிக்க ஒரே ஊர்ல இருந்தாதா சொகப்படும்னு ஊர்லயே இருக்கனும்னு மூனாவது வருசம் கரும்பு வெட்ற வேலைக்கும் போவல. பொழப்புக்கு என்னப்பண்றதுன்னு தெரியாம முழிச்சவளுக்கு ஒரு கரும்பின்ஸ்பெக்டர் சொன்னது சரியாப்பட்டுச்சு. ஏதோ மகளிர் சுய உதவிக்குழுவுன்னு பொம்பளைங்களுக்கு தொழில் செய்ய கவர்மெண்டு லோன் குடுக்குதுன்னு சொல்லவும், யார் யாரையோ புடிச்சு பட்டுப்புழு வளக்கறதுக்கு லோன் வாங்கிட்டா. குளித்தலைல இருந்து அதுக்கு கூடெல்லாம் வந்து எறக்கிட்டுப்போயிட்டாங்க. ஒரே வருசத்துல நல்லா பெருக்க ஆரம்பிச்சிருச்சு. அவளப்பாத்து ஊருப்பொம்பளைங்க கொஞ்சம்பேரும் சேர அடுத்த வருசம் குளித்தல தாலுக்காவுல அவங்க குழுதான் நெறய லாபம் பாத்துதுன்னு அதிகாரிங்க எல்லாம் பாராட்டுனாங்க.புருசன் வுட்டுட்டு ஓடுனாலும் ஒத்தப் பொம்பளையாவே ஆறுமுவம்பொண்டாட்டி நாலு புள்ளைங்களையும் கர சேத்துடுவான்னு ஊருக்குள்ள ஆம்பளைங்களும் பேசிக்கிட்டாங்க.

அந்த வருசம் தேர்தல்ல பிள்ளாபாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவி பொம்பளைங்களக்குனு ஒதுக்கியிருந்தாங்க. பொனாசிப்பட்டில இருந்து அந்த பஞ்சாயத்துக்கு மூனு மெம்பருங்க. மகிளிப்பட்டியில ரெண்டு, தெக்கியூர்ல மூனு. மொத்தம் பதனஞ்சு மெம்பருங்க பஞ்சாயத்துல இந்த மூனூருக்காரங்க மெஜாரிட்டி வந்தா அதுல யாரோ ஒருத்தர் தலைவராயிடலாம். மீதி ரெண்டு ஊர்க்காரங்க சம்மதம் வாங்கி போட்டியில்லாம யார அனுப்புறதுன்னு முடிவு பேச இச்சி மரத்தடியில கூட்டம் போட்டிருந்தாங்க. ஆறுமுவம்பொண்டாட்டி தான் சரியான ஆளுன்னு பள்ளியோட வாத்தியார் சொன்னதுக்கப்பறம் ஊரே அதுக்கு தலையாட்டுச்சு. மொதல்ல இதுக்கு அவ ஒத்துக்கலன்னாலும், நம்மூரு ஆளு தலைவராயிட்டா, நம்ம கம்மாய தூருவாரலாம், நம்மூருக்கு பெரிய பள்ளியோடம் கட்டலாம்னு சொல்லி அவள சம்மதிக்க வச்சிட்டாங்க. மூனூரு சனமும் ஒத்துமையா இருந்ததுல அவளே செயிச்சு தலைவராயிட்டா. முடிவு தெரிஞ்சன்னைக்கு பொனாசிப்பட்டியில வேட்டு வெடிச்சுக் கொண்டாடி, சாயுங்காலம் கூட்டம் போட்டிருந்தாங்க. பள்ளியோட வாத்தியாரு எல்லாருக்கும் முட்டாய்க்கொடுத்துக்கிட்டே சந்தோசமா சொல்லிக்கிட்டு இருந்தாரு 'நம்ம ஆறுமுவம் பொண்டாட்டிதான் இனிமே பிள்ளபாளையத்துக்கே பஞ்சாயத்துத் தலைவர்!'

அப்பறமா அவ பேச ஆரம்பிச்சா... 'எம்பேரு ஆறுமுவம் பொண்டாட்டியில்ல...லெச்சுமி. நம்மூருக்கு…'

Wednesday, June 04, 2008

வரவேற்பறை மீன்தொட்டி

அறுபது பவுன் நகை போட்டு
ஹுண்டாய் i10 –ம் கொடுத்து
அமெரிக்க மாப்பிள்ளையுடன்
அலங்காரமாய் மகளை அனுப்பி வைத்தார்
வரவேற்பறை மீன்தொட்டி மாதிரி.
அவளும் விப்ரோ வேலையைத் துறந்து இல்லத்தரசியானாள்
வரவேற்பறை தொட்டிமீன் மாதிரி!

Tuesday, June 03, 2008

ஏமாந்தியா?

காலையில் படியிறங்கும்பொழுது
கீழ்வீட்டுக் குழந்தை முறைத்துப்பார்த்தபடி நின்றது.
அதனை சிரிக்க வைக்க
கையாட்டி சிரித்தபடி நான் கீழிறங்க,
சலனமில்லாமல் பார்த்துக்கொண்டு
என் தலை மறையும் நேரம்
கையாட்டத் துவங்கியது.
திரும்பி நான் எட்டிப்பார்க்க,
‘ஏமாந்தியா?’ என்பதாய் தலையாட்டி
கோணல் வாய்வைத்து சிரித்தது.
கையாட்டலைவிட தலையாட்டல் அழகாய் இருந்தது.

Monday, June 02, 2008

கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன

உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!

*

இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன்.
இமைப்பது நீயெனில்.

*

உலகின் பெண்களுக்கெல்லாம்
உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!

*

நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி!

*

இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
சில கவிதைகள்!

Friday, May 30, 2008

குறுங்கதையும் குறுந்தொகையும் - 2

‘வரும்போது குட் ந்யூசோட வரனும். ஓக்கே வா?'
'பாப்போம் பாப்போம்'
தோழிகள் வழியனுப்ப, சிரித்துக்கொண்டே இளா கையசைக்க, எழும்பூரில் இருந்து
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கிளம்பியது.
அப்பர் பெர்த்திலேறி படுத்துக்கொண்டாலும் தூக்கம் வரவேயில்லை. நாளை
முதன்முறையாய் அவளைப் பெண்பார்க்க வருகிறார்கள். அங்கு போய் பொம்மை மாதிரி
உட்கார்ந்திருக்க வேண்டுமென்ற கடுப்பு கொஞ்சம் இருந்தாலும் ஒருமாதிரி
குறுகுறுப்பாகவும் இருந்தது.

அந்த வரனின் விவரங்களை அவளுடைய அம்மா தொலைபேசியில் முன்பே சொல்லியிருந்தார்.
அவனுடைய உயரம், எடையெல்லாம் தெரிந்தபோதே தனக்கு ஏற்ற மாதிரிதான் இருக்கிறது
என்று நினைத்துக் கொண்டாள். போட்டோவிலும் சுமாராக இருந்தான். ஓக்கேதான். ஆனால்
போட்டோவை வைத்து என்ன முடிவு செய்வது? நேரில் பார்த்தால் எப்படியிருக்கிறானோத்
தெரியவில்லை. முதல் இண்டர்வியூவிலேயே வேலை கிடைத்துவிட்டமாதிரி இப்பொழுதும்
நடந்துவிட்டாலென்ன என்று தோணியது. 'இளா! இது உன்னோட வாழ்க்கை…. லூசு மாதிரி
யோசிக்காதே' தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.

ஆனாலும் அப்படியொருவேளை நாளைக்கு வரப்போகிறவனுக்கே நம்மைப்
பிடித்துவிட்டாலும்…அது என்ன அவனுக்கு நம்மைப் பிடிப்பது? நமக்கு அவனைப்
பிடித்துவிட்டால் என்று வைத்துக்கொள்வோம். அது எப்படி இருக்கும் என்று யோசிக்க
ஆரம்பித்துவிட்டாள். 'மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனக்கும்
ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவனுக்கும் பொருந்தி வருமா?
இங்கிருக்கும் வொர்க் கல்ச்சர் அவனுக்குப் புரிந்திருக்குமா? ஆட்டோமொபைல்
கம்பெனியில் வேலையென்றால் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் தான் படித்திருப்பான்.
காலேஜில் பெண்களுடன் பழகியிருப்பானோ இல்லையோ தெரியவில்லை. நாம் இப்படி
நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவன் சரியான கடலை பார்ட்டியாக இருந்தாலும்
தெரியவாப் போகிறது. ச்சே இப்படியும் இருக்கக் கூடாது. அப்படியும்
இருக்கக்கூடாதென்று எதிர்பார்த்தால் பிறகு எப்படித்தான் இருப்பான்?' அவளால்
யோசித்துக் கொண்டிருப்பதை விட்டு வெளியேவரமுடியவில்லை. தானாக வலிய வேறு எங்கோ
நினைவைத் திருப்பினாள்.

எங்கெங்கோ சுற்றி விட்டு மறுபடியும் அங்கேயே வந்தது.
'இந்த அப்பா எப்படி இந்த வரனைப் பிடித்திருக்கிறது என்று சொன்னாரோ
தெரியவில்லையே!'
அவள் அப்பா அம்மா இருவருமே திருச்சியில் ஒரு துவக்கப்பள்ளியொன்றில்
ஆசிரியர்கள். அவன் குடும்பமோ சேலத்தில் இருந்தது.
'அவர்கள் ஏதோ பிஸினஸ் என்று மட்டும்தான் சொன்னார்கள். என்ன பிஸினஸ் என்று
நமக்கெப்படி தெரியும்? பெட்டிக்கடையும் பிஸினஸ்தான் எக்ஸ்போர்ட் கம்பெனியும்
பிஸினஸ் தான். குழந்தைகளுக்கு பாடம் எடுக்கிறவர்கள் மெண்டாலிட்டியும் பிஸினஸ்
பண்ணுகிறவர்கள் மெண்டாலிட்டியும் ஒன்று போலவா இருக்கும்?'
யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு திடீரென சிரிப்பு வந்தது. 'என்னமோ கல்யாணமே
நிச்சயமான மாதிரி எதற்கிப்படி யோசிக்கிறோம்? எதுவாக இருந்தாலும் அவனைப் பார்த்த
பிறகு யோசித்துக் கொள்ளலாம். ஆனால் எப்படியாவது அவனிடம் தனியாகப் பேசிப்
பார்த்துவிட வேண்டும். பேசிப் பார்த்தால்தான் ஆள் எப்படி என்று கொஞ்சமாவது எடை
போடலாம். இந்த சினிமாவில் எல்லாம் வருகிற மாதிரி 'பொண்ணுகிட்ட மாப்பிள்ள
கொஞ்சம் தனியாப் பேசனுமாம்' என்று யாராவது சொன்னால் நன்றாகத்தான் இருக்கும்.
ஆனால் அதெல்லாம் நம் வீட்டில் நடக்க வாய்ப்பில்லை. யாரிடமாவது அவன் செல்நம்பர்
வாங்கி வெளியில் எங்காவது சந்திக்கலாம். அதுவரை வீட்டில் எந்த முடிவும்
சொல்லிவிடக்கூடாது' கனவுகளில் முடிவெடுத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

மறுநாள் மாலை. அவளைப் பெண்பார்க்க வந்திருந்தார்கள். அவள் உள்ளறையில்
உட்கார்ந்திருந்தாள். மாப்பிள்ளை மட்டும் வரவில்லையாம். அவனோடு மற்றொரு நாள்
மீண்டும் வருவதாகப் பேசிக்கொண்டார்கள். அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. "ச்சே
இப்படி கவுத்துட்டானே! இதற்காக இன்னொரு நாள்வேறு வர வேண்டுமா?" என்று கோபமும்
இருந்தது. சம்பிரதாயமானப் பேச்சுக்கள் எல்லாம் முடிந்து இரு குடும்பங்களுக்கும்
அந்த சம்பந்தம் பிடித்துப் போயிருந்தாலும் மாப்பிள்ளையுடன் அடுத்த வாரம்
வந்தபிறகு மேற்கொண்டு முடிவெடுக்கலாம் என்று சொல்லி அவர்கள் கிளம்புகிற நேரம்.
மாப்பிள்ளையின் அக்கா மட்டும் உள்ளறைக்கு வந்தாள்.

'இவரிடம், அவனுடைய மொபைல் நம்பர் கேட்டுப் பார்க்கலாமா? குறைந்தது போனிலாவது
பேசிப் பார்ப்போம். பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடலாம். இதற்காக இன்னொரு முறை
எதற்கு வரவேண்டும்' என்று யோசித்தாள்.
'உன்னோட மொபைல்நம்பர் கொடுப்பா… தம்பி கேட்டிருந்தான்' என்று மெதுவாக கேட்டு
அவள் எண்ணையும் வாங்கிக் கொண்டு 'நாங்க கிளம்பறோம். அடுத்த வாரம் தம்பியோட
வர்றோம்' என்று சொல்லிக் கிளம்பிப் போய்விட்டார்கள்.
'ச்சே அவன் நம்பரை ஏன் கேட்காமல் போனோம்?' என்று வருத்தப்பட்டுக்கொண்டாள்.

அடுத்த நாள் காலை அவள் செல்பேசிக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
'ஹலோ. நான் அருள் பேசறேன். நேத்து பொண்ணு பாக்க வந்தாங்களே…'
'ம்ம்ம் சொல்லுங்க'
'உங்கள மீட் பண்ணலாம்னுதான் திருச்சி வந்திருக்கேன். மீட் பண்ண முடியுமா?'
'…' என்ன சொல்வதென்று யோசித்தாள்.
'இல்ல போன்லயே பேசலாம்னாலும் எனக்கு ஓக்கே. ஒரு அர மணி நேரம் போதும். எப்போ
ஃப்ரியா இருப்பீங்கன்னு சொல்லுங்க நானே கால் பண்றேன்'
'இல்லப் பரவால்ல எங்கனு சொல்லுங்க நானே வர்றேன்'

வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து யோசித்துக் கொண்டே வந்தாள். அவனைப்
பிடித்திருக்கிறதா இல்லையா என்று கேட்டால் எதையும் வாயைத் திறக்கக் கூடாது.
முதலில் அவனிடம் என்னவெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை வரிசைப்
படுத்திக் கொண்டாள். பேசும்போதே பொய் சொல்கிறானா என்பதையும் கவனிக்க வேண்டும்.
முடிவெல்லாம் பொறுமையாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் என்ன கேட்பது?
அவன் படித்த பள்ளி, கல்லூரியைப் பற்றி கேட்க வேண்டும்.
வீட்டிலிருந்து படித்தானா இல்லை ஹாஸ்டலா?
எந்த மாதிரிப் படங்கள் பார்ப்பான்?
புத்தகம் எதுவும் படிக்கிற பழக்கமிருக்குமா?
ஏற்கனவே யாரையாவது காதல், கீதல் பண்ணியிருக்கிறானா?
திருமணத்திற்குப் பிறகு நான் வேலைக்குப் போவதை பற்றி என்ன சொல்லுவான்?

கேட்க வேண்டியவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே சொன்ன இடத்திற்கு வந்து
சேர்ந்ததும் அவன் மொபைலுக்கு அழைத்தாள்.
அவனும் வந்ததும் தனியே சென்று அமர்ந்தார்கள். அவனே ஆரம்பிக்கட்டும் என்று
அமைதியாக இருந்தாள்.

'நேத்தே நான் வந்திருந்தா அங்கேயே எங்கிட்ட உங்களப் பிடிச்சிருக்கான்னு
கேட்டிருப்பாங்க. போட்டோவுல சிம்பிளா இருந்த உங்களப் பாத்ததுமே எனக்குப்
பிடிச்சிருந்தாலும், உங்களுக்கும் என்னப் பிடிச்சிருக்கான்னுத் தெரியல. அங்க
எல்லார் முன்னாடியும் நீங்க ஃப்ரியா உங்க விருப்பத்த சொல்லிட முடியுமான்னு
சந்தேகமா இருந்ததாலதான் தனியா மீட் பண்ணலாம்னு கூப்பிட்டேன்.'

ரொம்ப ஸ்மார்ட்டாக நடிக்கிறானோ? ஆனால் கண்களைப் பார்த்தால் அப்படியொன்றும்
தெரியவில்லை. அவனேப் பேசட்டும் என்று புன்னகைத்தபடியே இருந்தாள்.

'ஒரு மணி நேரத்துல ஒருத்தர முழுசா ஜட்ஜ் பண்ணிட முடியாதுதான். ஆனா வெளிப்படையா
பேசினோம்னா ஒரு சின்ன அண்டர்ஸ்டாண்டிங் வரலாம். அதுக்கப்புறம் உங்களுக்கும்
என்னைப் பிடிச்சிருக்குன்னுத் தெரிஞ்சா வீட்ல சொல்லிக்கலாம். அந்த ஐடியால தான்
வந்திருக்கேன். என்னப் பொருத்தவரைக்கும் எனக்கு ஆப்போசிட் கேரக்டர்
உள்ளவங்ககூடவும் என்னால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும்… சின்ன வயசுல இருந்தே பெரிய
எதிர்பார்ப்பு எதுவுமில்லாம வளர்ந்துட்டேன். அதனால எனக்கு வரப் போறவ
இப்படித்தான் இருக்கனும்னு கனவு கண்டதில்ல. அதனால உங்களப் பத்தி நீங்க
சொல்லுங்க தெரிஞ்சுக்கறேன்… எந்த காலேஜ்ல படிச்சீங்க? என்ன மாதிரி புக்ஸ்
பிடிக்கும்? இந்த மாதிரி…'

'உண்மைய சொன்னா எனக்கும் இப்போ உங்களப் பாத்ததுமே பிடிச்சிடுச்சு…சோ தாராளமா
வீட்ல சம்மதம் சொல்லிடுங்க…. அப்பறம் என்னப் பத்தி சொல்லனும்னா…'

எந்த முடிவை பேசிமுடித்தபிறகு எடுக்கலாமென்று நினைத்தாளோ, அதனை முதலிலேயே
எடுத்ததற்கும், அதனை அப்பொழுதே அவனிடம் சொல்லிவிட்டதற்கும், அரை மணிநேரம் என்று
சென்றவள் மூன்றுமணிநேரம் அவனிடம் பேசிக்கொண்டிருந்ததற்கும்… வீடுவரும்வரை
அவளுக்குக் காரணம் தெரியவில்லை.
வீட்டில் நுழைகையில் பண்பலையில் 'பிரிவோம் சந்திப்போம்' படத்திலிருந்து பாடல்
ஒலித்துக் கொண்டிருந்தது. 'கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை…கொண்டேன்
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை…'

o0o

குறுந்தொகை :

பாடல் எண் – 40 குறிஞ்சி. தலைவன் கூற்று.

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

-செம்புலப் பெயல்நீரார்

என் தாயும் உன் தாயும் யாரோ? எவரோ?
என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்?
நீயும் நானும் தான் எந்த வகையில் அறிமுகமாகியிருந்தோம்?
(ஆனாலும் முதல் சந்திப்பிலேயே)
செம்மண்ணில் விழுந்த மழைநீர்போல
நம்நெஞ்சங்கள் அன்பினால் இரண்டறக் கலந்துவிட்டன.

Thursday, May 29, 2008

எறும்புக்கு உப்புமா வைத்த எட்டாவது வள்ளல்

காரக்குழம்பு வைத்தால் காரமாக இருக்க வேண்டுமென்பதன் புரிதலில் உப்புமா என்றால் உப்பாக இருக்க வேண்டுமென என் அக்கா தவறாக புரிந்து கொண்ட ஒரு காலைப்பொழுதில் தட்டில் வைத்த உப்புமாவை தொடாமல், தொட்டுக்கொள்ள வைத்திருந்த சர்க்கரையை மட்டும் உள்ளே தள்ளி கொண்டிருந்தாள் ஜனனி. அதைக் கவனித்த அக்கா, ‘ஜனனி, இப்போ ரெண்டு பேர்ல யார் மொதல்ல சாப்பிட்றாங்கன்னு பாக்கலாம் சரியா? தட்டுல எதுவும் மிச்சம் வைக்கக் கூடாது.’ என்று சொல்லிவிட்டு அக்காவும் சாப்பிட ஆரம்பிக்க, என்ன செய்வதென்று புரியாமல் தவித்த ஜனனி, உப்புமாவை உருண்டை உருண்டையாக உருட்டி, அக்கா குனியும்போது, பக்கத்திலிருந்த நாற்காலிக்கு அடியில் உருட்டிவிட ஆரம்பித்தாள். நான்காவது உருட்டலில் இதனைக் கவனித்து விட்ட அக்கா, நாற்காலிக்கடியில் நான்கு உப்புமா உருண்டைகளைப் பார்த்ததும், ஜனனியைப் பார்த்து முறைத்தார். சற்றும் தாமதிக்காமல் ஜனனியிடமிருந்து பதில் வந்தது – ‘அம்மா, அந்த எறும்புங்க எல்லாம் பாவம்தான? அதுக்கெல்லாம் பசிக்கும் தான? அதுக்குதான் நான் உப்புமா போட்டேன்!’



*



அக்கா : ‘வெயில் காலத்துல தண்ணி ஜில்லுனு குடிக்காத பாப்பா’

ஜனனி : ‘அப்போ night காலத்துல?’



*



அக்கா : ‘துணி தேய்க்கறவங்களே ரெண்டு நாளா வரல. தொவச்ச துணியெல்லாம் அப்படியே இருக்கு’

மாமா : ‘அவங்க வரலன்னா, முன்னாடியிருக்கிற கடைல கொடுக்க வேண்டியதுதான’

ஜனனி : ‘ஐயோ, ரெண்டு பேரும் ஏன் இப்படி வம்பு பண்றீங்க? Iron box மேல தான இருக்கு. எடுத்து தேய்ங்களேன்!’

அக்காவும், மாமாவும் கப்சிப்.



*



ஜனனி : ‘மாமா, அம்மாவ விட்டுட்டு நான் மட்டும் தனியா கரூர்ல அம்மாச்சி வீட்டுக்கு போனேனே’

நான் : ‘அப்பறம் ஏன் அம்மாகிட்டப் போறேன்னு அடுத்த நாளே திருப்பூர் ஓடிட்ட?’

ஜனனி : ‘நான் தூங்கும்போது அம்மா காத பிடிச்சுட்டு தான தூங்குவேன்? கரூர்ல அம்மாச்சி காதுதான் இருந்தது. அதான் திருப்பூர் போயிட்டேன்’



*



அக்கா : ‘குட்டி, இவளுக்கு ஸ்கூல் லீவ் விட்டதுல இருந்த எப்போ பாத்தாலும் அந்த tom & jerry CD யே போட்டு பாத்துட்டு இருக்கா. Tom & jerry பைத்தியமாவே ஆகப்போறான்னு நெனைக்கிறேன்’

அக்காவிடமிருந்து செல்பேசியைப் பிடுங்கி ஜனனி சொன்னாள் – ‘மாமா, அம்மா எப்போ பாத்தாலும் சீரியலே பாத்துட்டு இருக்காங்க. சீரியல் பைத்தியமாவே ஆகப்போறாங்க’



*



கடந்த வாரம் குடும்பம் மொத்தமும் சென்னையில் இருந்த போது ஜனனிக்கு தூக்கம் வருகிற நேரம் மட்டும் எல்லோரும் காணாமல் போய்விடுவார்கள். பின்ன என்னங்க? கத சொன்னா தூங்கனும். திரும்ப திரும்ப கதையே கேட்டுட்டு இருந்தா? அவள கத சொல்லி தூங்க வைக்கிறதுக்குள்ள எனக்கு தூக்கம் வந்து நான் உளற ஆரம்பிச்சுட்றேன். அவளுக்கு கரடிக்கதை சொல்லிட்டே வந்து தூக்கத்துல சுந்தரா ட்ராவல்ஸ் ஓட்ட ஆரம்பிச்சுட்றேன். முதல் கத சொல்லும்போது ஒவ்வொரு வரிக்கும் ‘அப்பறம் மாமா’ ன்னு கேட்டுட்டே வருவா. கொஞ்ச நேரத்துல அது ‘அப்பறம்’ னு சுருங்கும். இன்னும் கொஞ்சம் கதை ஓட்டினோம்னா, அந்த ‘அப்பறமும்’, ‘ம்ம்ம்’ னு சின்னதாகிடும். அப்புறம் நாந்தான் கத சொல்லிட்டே இருப்பேன் அவகிட்ட இருந்து சத்தமே இருக்காது. மெதுவா அவ கைய எடுத்துட்டு, போர்வைய போத்தினதும், போர்வைய விலக்கிட்டு, காத பிடிச்சுட்டு ‘வேற கத சொல்லு மாமா’ னு மறுபடியும் ஃப்ரெஷ்ஷா ஆரம்பிப்பா பாருங்க.. எனக்கு அப்பவே கண்ண கட்ட ஆரம்பிச்சுடும். அடுத்து அவளுக்கு சொல்றதா வாக்கு கொடுத்திருக்கிற கதையோட பேரு – ‘அஞ்சு தல யான முட்டக் கத’. உங்களுக்கு யாருக்காவது இந்த கதை தெரியுமா?