Sunday, May 21, 2006

+2 காதல் - 3

+2 காதல் பகுதி ஒன்று இரண்டு

அடுத்த நாள் காலையில் நான் maths tuition-இல் இருக்கும்போது அங்கு வந்தாள், அவள்… maths tuition-இல் சேர்வதற்கு!

எப்போதும் போல ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த என்னை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டபடியே போய் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

எனக்கு வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரே காரணத்திற்காகத்தான் maths-க்கு நான் அந்த ட்யூஷன் மாஸ்டரிடம் சேர்ந்திருந்தேன். அங்கு சேர்ந்திருந்த பெரும்பாலானவர்களும் அதே காரணத்திற்காகத்தான் சேர்ந்திருந்தார்கள்.

ஆனால் அவளுக்கோ வீட்டிலிருந்து மிகத் தொலைவில்தான் இருக்கிறது இந்த tuition centre. இன்னும் சொல்லப் போனால் அவள் வீட்டிலிருந்து இங்கு வருவதற்கு அவள் பள்ளிக்குப் போவதற்கு எதிர்த்திசையில் தான் வர வேண்டும். அவளுடையப் பள்ளியிலிருந்து ஒருத்திகூட இங்கு சேர்ந்திருக்கவில்லை. இங்கு வரும் எல்லாப் பெண்களுமே பக்கத்தில் இருக்கும் தெரசா ஸ்கூலில் படிப்பவர்கள்தான். அவளுக்குத் தெரிந்தவர்கள் என்று யாரும் இங்கு படிக்கவும் இல்லை.

இப்படி ஒவ்வொருக் காரணமாய் யோசித்து எல்லாவற்றையும் நிராகரித்தேன்.அப்படியிருக்க அவள் ஏன் இங்கு வந்து சேர்ந்திருப்பாள்?...ஒரு வேளை…. நான் யோசித்துக் கொண்டு இருக்கும்போதே ட்யூஷன் முடிந்து எல்லோரும் கலைந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவளை முன்னே விட்டு நான் மெதுவாய் கீழே இறங்கி வந்து என் சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பித்தேன்.

பின்னாடித் திரும்பிப் பார்க்கலாமா என ஒருத் தயக்கத்தோடு நான் பின்னால் திரும்பிப் பார்க்க, அவள் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு என்னையேப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். நான் உடனே தலையைத் திருப்பிக் கொண்டு வேகமாய் மிதிக்க ஆரம்பித்தேன். எனக்கு அப்போது அதிகமாக மூச்சு வாங்கியது, ஆனால் சைக்கிள் மிதித்ததால் அல்ல!

அதன் பிறகு மூன்று ட்யூஷன்களிலும் ஆறு மாதங்களாய் நடந்தவை :

Maths tuition :

Maths tuition மட்டும் வாரத்தின் எல்லா நாளும் இருக்கும். அதுவும் நடுசாமம் 6 மணியில் இருந்து 7:30 வரை நடக்கும். தினமும் நான் அதிகாலை எட்டு மணிக்கு எழுந்திருப்பதே சன் டிவி செய்தி பார்ப்பதற்குத்தான். இவரிடம் ட்யூஷன் சேர்ந்ததில் இருந்து காலையில் 6 மணிக்கே தூக்கம் கலைக்க வேண்டியிருந்தது. தூங்கி வழியும் முகத்துடனேப் போய்க் கொண்டிருந்தேன்.நான் மட்டுமல்ல அங்கு வரும் எல்லாருமேக் கிட்டத்தட்ட அந்த நிலையில் தான் இருந்தோம். ஆனால் அவள் மட்டும் காலையிலேக் குளித்துவிட்டு ஸ்கூல் யூனிஃபார்மில் வந்து உட்கார்ந்துவிடுவாள். எல்லோருக்கும் மத்தியில் அவள் மட்டும் வித்தியாசமாய்!

தினமும் நடக்கும் சின்ன சின்ன தேர்வுகளில் நோட்டை எங்களுக்குள் மாற்றித் திருத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தேர்வு எழுதி முடித்ததும் நோட்டை என்னருகில் வைத்துவிடுவாள்.அவளுக்கு என்னைத் தவிர வேறு யாரையும் அங்குத் தெரியாது. சேர்ந்த புதிது என்பதால் எனக்கும் அவளைத்தவிர மற்றவர்களிடம் பழக்கமில்லை.எங்கள் நோட்டுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.அவள் நோட்டில் நான் "டிக்" மட்டும் போட்டுக் கொடுக்க, அவளோ, "good" போடாமல் திருப்பித்தந்ததில்லை.முதலில் அதையெல்லாம் வாங்கியவுடனே அழித்துக்கொண்டிருந்தவன் அப்புறம் நிறுத்திக்கொண்டேன்.

புரியாதக் கணக்கை விளக்க சொல்லி, டெஸ்ட் பேப்பரை வாங்குவதற்கு என ஏதாவது காரணத்தோடு என்னிடம் பேச ஆரம்பித்தாள்.ட்யூஷன் முடிந்த பிறகும் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டே பேச்சைத் தொடர்ந்த நாட்களும் உண்டு. என் வானரக் கூட்டம் இங்கு இல்லாததால் நானும் அவளிடம் அதிகமாகவேப் பேசத் தொடங்கியிருந்தேன். படிப்பில் ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாம் பேசினோம்.ஒருநாள் அவள் “ காலைல குளிக்கலன்னாக் கூடப் பரவால்ல..அட்லீஸ்ட் முகத்தையாவது கழுவிட்டு வரலாமில்ல!” என சொல்லிவிட்டாள். அடுத்த நாளில் இருந்து 5 மணிக்கே எழுந்து வெந்நீர் வைத்துக் குளித்துவிட்டுக் கிளம்பிப் போகும் என்னை என் வீடே வித்தியாசமாய்ப் பார்த்தது. நானும் நிறைய மாறித்தான் போனேன் அந்த ஆறு மாதத்தில்.

Physics tuition :

Physics tuition-இல் எங்களுக்கு அடுத்த batch-இல் தான் அவள் வருவாள். நாங்கள் 5 மணி ட்யூஷனுக்கு, பள்ளி முடித்து விட்டு 4:30 மணிக்கே அங்கு சென்றுவிடுவோம்.மாஸ்டர் வரும்வரை அந்த மொட்டை மாடி தான் எங்கள் அரட்டை அரங்கம். 6 மணி ட்யூஷனுக்கு அவளும் பள்ளிமுடிந்து நேராக வந்துவிடுவாள் 4:30, 4:45க்கே. அந்தப் பத்துப் பதினைந்து நிமிடநேரத்திலும் என்னிடம் ஏதாவதுப் பேச ஆரம்பித்துவிடுவாள். தங்களுக்குள் பேசிக்கொள்வது போல் நாங்கள் பேசுவதையே ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என் நால்வர் அணியினர். நானும் வார்த்தைகளை அளந்தேப் பேசுவேன்.


“என்னடாப் பொண்ணு பத்து நிமிஷம் பேசறதுக்காக வேர்த்துக் கொட்ட சைக்கிள மிதிச்சுட்டு வந்துட்றா…பிக்கப் ஆயிடுச்சுப் போல இருக்கு?” – மதன்.

“டேய்..அதெல்லாம் ஒன்னும் இல்லடா” – நான்.

“எங்கப்பாக் குதிருக்குள்ள இல்ல! – அந்தக் கததான”

“மாஸ்டர் வந்துட்டாருக் கிளம்பு!”

இப்படி அவர்கள் துருவித் துருவிக் கேட்கும்போதெல்லாம் அப்படியெதுவுமில்லை என்று சொன்னாலும் அப்படி எதுவும் இருக்கக் கூடாதா என ஒரு ஏக்கம் வந்து மறையும்.

வாரம் ஒருமுறைத் தேர்வு எழுதும்போது, நான் எப்போது எழுதவருவேன் என்று கேட்டு அதே நேரம் அவளும் வருவாள். தேர்வு முடிந்ததும் மார்க் விசாரிப்பதுபோல் ஆரம்பித்து 1 மணி நேரத்துக்குக் குறையாமல் பேசுவாள். நான் விடுமுறை நாட்களில் ட்யூஷன் முடிந்தவுடன் நூலகம் சென்று விடுவது வழக்கம். அங்கும் அவள் வர ஆரம்பித்தாள். அவள் படித்தப் புத்தகங்களை என்னிடம் கொடுத்துப் படிக்க சொல்லுவாள். நான் ஏற்கனவே படித்தப் புத்தகமாக இருந்தாலும் மறுபடியும் படிப்பேன் புதிதாய்ப் படிப்பவனைப் போல.அவளும் ஒவ்வொரு நாளும் நெருக்கமாகிக் கொண்டே வருவது போல் இருந்தது. அதே சமயம் பயமாகவும் இருந்தது. எந்நேரம் என்ன நடக்குமோ என்ற தவிப்போடு நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன்.

Chemistry tuition :

Chemistry tuition-இல் தான் எனக்குள்ளும் அந்த வேதியியல் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன.

(தொடரும்)

அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.