Wednesday, December 20, 2006

ஒரு காதல் பயணம் - 7 (தேன்கூடு போட்டிக்கும்)

முதல் பாகத்திலிருந்து வாசிக்க இடுகையின் தலைப்பின் மீது சொடுக்கவும்.
"காதல் குறும்பு" என்ற கருத்தில் இப்பாகம் மட்டும் தேன்கூடு போட்டிக்கு இணைக்கப்பட்டுள்ளது.

நான் உன்னையும் , நீ என்னையும்,
தேடிக் கொண்டிருப்பதால்,
நம்மை இணைக்க
முடியாமல் தடுமாறுகிறது
நம் காதல்!


காதலுக்கென்றே படைக்கப்பட்ட மாலைப்பொழுதொன்றில்,
யாருமற்ற அந்த வாய்க்காலின் படித்துறையில் நாமிருவர் மட்டுமே அமர்ந்திருக்கிறோம்.
குளிப்பவர், துவைப்பவர் எவரும் இன்றி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிற வாய்க்கால் நீர்,
உள்ளே நீந்திக் கொண்டிருக்கும் மீன்களெல்லாம் தெளிவாகத் தெரியும்படி தெளிந்து இருக்கிறது.

“எல்லா மீனும் எவ்வளவு சந்தோசமா நீந்திக்கிட்டு இருக்கில்ல?” என்று மெதுவாக நீ பேச்செடுக்கும் போது,
ஒரு மீன் மட்டும் நீர்ப்பரப்புக்கு மேல் வருவதும் பின் உள் செல்வதுமாய் இருக்கிறது.
அந்த மீனைக் காட்டி, என்னிடம் கேட்கிறாய்,”அது மட்டும் ஏன் மேலே வந்து, வந்து போகுது?”
“அத சொல்றதுக்கு முன்னாடி, அது ஆண் மீனா, இல்லப் பெண் மீனான்னு கண்டுபிடி” - இது நான்.
“அது எப்படிக் கண்டு பிடிக்கிறது? எனக்கு தெரியாதே!” - உதடு சுழிக்கிறாய் நீ.
“ஆனா, எனக்குத் தெரியும்! அது ஆண் மீன் தான்”
“எப்படிடாக் கண்டு பிடிச்ச?”
“வாய்க்கால்ல இருக்கும் பெண் மீன்கள் எல்லாத்த விடவும் இந்த ரெண்டு மீனும் அழகா இருக்கேன்னு,
மேல வந்து, வந்து உன்னோட ரெண்டு கண்ணையும் பார்த்துக் கண்ணடிச்சுட்டுப் போகுதே!
அப்பவேத் தெரியலையா அது ஆண் மீனாதான் இருக்கும்னு?”
வள்ளுவர் காலத்து உவமையைத் தான் சொன்னேன், ஆனாலும் வெட்கப்பட்டாய் நீ.

“இன்னொரு முற அது மேல வரட்டும், அதப் பிடிச்சுப் பொரிச்சுட வேண்டியதுதான்!” கோபப்பட்டேன் நான்.
“அப்போ நீ அசைவமா?” என சந்தேகப் படுகிறாய்.
“அப்போ, உனக்கு மீன் கறிப் பிடிக்காதா?” - என் பங்குக்கு நானும்!
“மீன் கறி பிடிக்காது, ஆனா மீன் கடி பிடிக்கும்!”
“அதென்ன மீன் கடி?”

“இப்போ வாய்க்காலுக்குள்ள எறங்கிக் கொஞ்ச நேரம் ஆடாம,
அசையாம அப்படியே நின்னோம்னா, சின்ன சின்ன மீனெல்லாம் வந்து நம்மக் கால வலிக்காமக் கடிக்க ஆரம்பிக்கும்,
அது எவ்வளவு சொகமா இருக்கும் தெரியுமா?”
என்று சொல்லிக் கொண்டே படித்துறையின் கடைசிப் படிக்கட்டுக்குப் போய்விட்டாய்.
பாவாடையை முழங்கால் வரை சுருட்டிக் கொண்டவள், என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு,
உடனே வாய்க்காலுக்குள் இறங்கினாய்.

நீ சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் உன் காலைக் கடிக்க ஓடி வந்தன மீன்கள் எல்லாம்.
அந்த சுகத்தில், பால் கொடுக்கும் தாயைப்போல் பரவசமாய் உன் முகம்.
உன்னைக் கடித்துக் கொண்டிருக்கும் மீன்களையேப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான்.

“என்னடா அப்படிப் பார்க்கற?” என முறைக்கிறாய்!
“இல்ல, உன்னக் கடிக்கிறதெல்லாம் ஆண் மீனா, இல்லப் பெண் மீனான்னுப் பார்த்துட்டு இருக்கேன்”
“திரும்பவும் ஆரம்பிச்சுட்டியா, உன்னோட ஆராய்ச்சிய! சரி அதையும் சொல்லேன் கேட்போம்!”

“மீன் கடிக்கிறது உனக்கு வலிக்குதா? இல்லையா?”
“வலிக்கல, சுகமாத்தான் இருக்கு!”
“அப்படின்னாக் கடிக்கிறதெல்லாம் பெண் மீனாதான் இருக்கும்”
எதையோ நினைத்து சிரித்துக் கொள்கிறாய் நீ.

“நீயும் எறங்கி நில்லேன்” என என்னையும் அழைக்கிறாய்.
வேட்டியை மடித்து விட்டு வாய்க்காலுக்குள் இறங்கிய வேகத்தில் ஏறுகிறேன் நான்.
“ஏன் என்னாச்சு?”
“மீனெல்லாம் இப்படி வலிக்கிற மாதிரிக் கடிக்குது! நீ என்னமோ சுகமா இருக்குன்னு சொல்ற?”
சிரித்துக் கொண்டே,“அப்போ உங்களக் கடிச்ச மீனெல்லாம் ஒருவேளை ஆம்பள மீனோ?”
“ஆமாமா, எல்லா ஆம்பள மீனும் சேர்ந்து, உனக்குப் போய் இப்படி ஒரு தேவதையாடான்னுப் பொறாமையில் கடிச்சிருக்கும்!”
“சரி, சரி போதும்” என சொல்லிக்கொண்டே மேலே வருகிறாய்.

“மீனப் பத்தி இவ்வளவு ஆராய்ச்சி பண்றியே, என்னை ஏன் ஒரு ஆண் மீனும் கடிக்கல?”
“உன்னை யார் முதல்ல வந்து தொடுறதுன்னு சண்டை போடவே, அதுக்கெல்லாம் நேரம் சரியாப் போயிருக்கும்!”
ஈரப் பாவாடையைப் பிழிந்து கொண்டே “அப்போ, உன்ன ஏன் ஒரு பெண் மீனும் தொட வரல?” எனக் கேட்கிறாய் நீ.
“இதென்னக் கேள்வி? கோவிலுக்குப் போனா நீ அம்மனக் கும்பிடுவியா? பூசாரியக் கும்பிடுவியா?”

“சரிங்க பூசாரி, இப்போ அம்மன் வீட்டுக்குக் கெளம்பப் போகுது, நாளைக்குப் பார்க்கலாம்” என ஆயத்தமாகிறாய் நீ.
“கல்யாணத்துக்கப்புறம், இந்த மீன் கடிக்காக நீ வாய்க்காலுக்கெல்லாம் வரவேண்டியதில்ல,
அதெல்லாம் வீட்டிலேயே வச்சுக்கலாம்” என்கிறேன் நான்.

“ச்சீப் போடா…” என்று வெட்கத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்கிறாய் நீ.

“அட! வீட்டிலேயே கொஞ்சம் மீன் வளர்க்கலாம்னு சொல்ல வந்தேன்” என விளக்கிவிட்டு,
உன்னிடம் முதல் “ச்சீப் போடா” வாங்கிய சந்தோஷத்தில் நானும் கிளம்புகிறேன்.

அப்போது வாய்க்காலில், என்னைக் கடித்த மீன்களெல்லாம்,
உன்னைக் கடித்த மீன்களைத் துரத்திக் கொண்டு நீந்துகின்றன.

காதல் குறும்பு எங்கும் இருக்கிறது!

அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

19 comments:

  1. அடடா!... காதல் குறும்பு மீன்களுக்குள்ளுமா?
    ம்ம்... அற்புதமாக இருக்கிறது.
    நன்கு ரசித்தேன்.

    வெற்றி பெற வாழ்த்துக்கள் அருள்!

    ReplyDelete
  2. நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருட்பெருங்கோ... கலக்கிட்டீங்க போங்க. முழுமூச்சா முதல் பாகத்திலிருந்து படிச்சு முடிச்சேன். குறும்பா ஒரு காவியமே படைச்சுருக்கிங்க... நிச்சயதார்த்தம் வேற முடிஞ்சிருச்சு போல இருக்கே... காதல் இனிக்க இனிக்க இருந்துச்சு... வாழ்த்துக்கள் எல்லா வகையிலும் வெற்றி பெற!

    ReplyDelete
  4. இந்தக் காதல் கவிதை கருவுற்றிருந்தது உங்கள் காதலி கதாபாத்திரத்தின் கயற்கண்ணிலா? கவிதையெங்கும் கயல் ஊர்வலம்! சில்வண்டுக்கு இதைப் படித்ததும் ஒரு சில்ல்ல்ல் உணர்வு!

    வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வாருங்கள் சத்தியா,

    /அடடா!... காதல் குறும்பு மீன்களுக்குள்ளுமா?
    ம்ம்... அற்புதமாக இருக்கிறது.
    நன்கு ரசித்தேன்./

    ஆம் அவை காதல்மீன்கள்!!!

    /வெற்றி பெற வாழ்த்துக்கள் அருள்! /

    நன்றிகள்

    ReplyDelete
  6. / நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்./
    மிக்க நன்றி சேதுக்கரசி!!!
    முடிவு வந்து விட்டது தெரியுமா?

    ReplyDelete
  7. /அருட்பெருங்கோ... கலக்கிட்டீங்க போங்க. முழுமூச்சா முதல் பாகத்திலிருந்து படிச்சு முடிச்சேன். குறும்பா ஒரு காவியமே படைச்சுருக்கிங்க... நிச்சயதார்த்தம் வேற முடிஞ்சிருச்சு போல இருக்கே... காதல் இனிக்க இனிக்க இருந்துச்சு... வாழ்த்துக்கள் எல்லா வகையிலும் வெற்றி பெற!/

    நன்றி ராசுக்குட்டி…
    விரிவா கருத்து சொன்னதுக்கு….
    வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க…

    ReplyDelete
  8. /இந்தக் காதல் கவிதை கருவுற்றிருந்தது உங்கள் காதலி கதாபாத்திரத்தின் கயற்கண்ணிலா? கவிதையெங்கும் கயல் ஊர்வலம்! சில்வண்டுக்கு இதைப் படித்ததும் ஒரு சில்ல்ல்ல் உணர்வு!

    வெற்றி பெற வாழ்த்துக்கள்!/

    சில்லுனு ஒரு பின்னூட்டம் இட்டதுக்குக்கும் வாழ்த்துக்கும் நன்றி சில்வண்டு!!!

    ReplyDelete
  9. இதனை எழுதியது போட்டிக்கான கடைசி நாளில்...
    இருந்தாலும் படித்து பின்னூட்டமிட்டு, வாக்களித்து 6 ம் இடத்துக்கு ஏற்றி விட்ட அனைவருக்கும் நன்றிகள்!!!

    ReplyDelete
  10. //முடிவு வந்து விட்டது தெரியுமா?//

    முடிவு வந்தது தெரியும், ஆனால் ஆறாவது இடம் என்று உங்கள் பின்னூட்டத்திலிருந்து தான் தெரிந்தது. வாழ்த்துக்கள். இதிலிருந்த ஒரு சூப்பர் குறும்பு வரிக்கு இன்னும் நல்ல இடம் கிடைத்திருக்கலாம் ;-)

    ReplyDelete
  11. /முடிவு வந்தது தெரியும், ஆனால் ஆறாவது இடம் என்று உங்கள் பின்னூட்டத்திலிருந்து தான் தெரிந்தது. வாழ்த்துக்கள். இதிலிருந்த ஒரு சூப்பர் குறும்பு வரிக்கு இன்னும் நல்ல இடம் கிடைத்திருக்கலாம் ;-)/

    இதில் எதுவும் உள்குத்து இல்லையே? :)

    ReplyDelete
  12. //இதில் எதுவும் உள்குத்து இல்லையே? :)//

    நான் இன்னும் உருப்படியா ஒரு பதிவு கூட போடல, அப்படியிருக்கும்போது இப்படிக் கேட்டுப்புட்டீங்களே, இது நியாயமுங்களா? :-D

    ReplyDelete
  13. /நான் இன்னும் உருப்படியா ஒரு பதிவு கூட போடல, அப்படியிருக்கும்போது இப்படிக் கேட்டுப்புட்டீங்களே, இது நியாயமுங்களா? :-D/

    என்னங்க உள்குத்தப் பத்தி தெரிஞ்சிக்க பதிவு போட்டிருக்கனுமா என்ன?
    படிச்சாப் போதாதா? :)))

    ReplyDelete
  14. //என்னங்க உள்குத்தப் பத்தி தெரிஞ்சிக்க பதிவு போட்டிருக்கனுமா என்ன? படிச்சாப் போதாதா? :)))//

    அதுவும் சரிதான். படிச்சாலே எல்லாக் குத்தும் விட பழகிக்கலாம் போல இருக்கு ;-) ஆனால் நான் சொல்வதெல்லாம் உள்குத்தில்லை, உள்குத்து அல்லாததன்றி வேறில்லை.

    ReplyDelete
  15. /அதுவும் சரிதான். படிச்சாலே எல்லாக் குத்தும் விட பழகிக்கலாம் போல இருக்கு ;-) /

    :)))

    /ஆனால் நான் சொல்வதெல்லாம் உள்குத்தில்லை, உள்குத்து அல்லாததன்றி வேறில்லை./

    இது எந்தவகை? :-?

    ReplyDelete
  16. //இது எந்தவகை? :-?//

    ஒரே வகை தான். உள்குத்தல்லாத வகை. குழப்பிவிட்டுட்டேனா? (hooray! :-))

    ReplyDelete
  17. /ஒரே வகை தான். உள்குத்தல்லாத வகை. குழப்பிவிட்டுட்டேனா? (hooray! :-))/

    அது தத்துவமா, இல்ல மகா தத்துவமானு யோசிச்சுட்டு இருக்கேன் :))

    ReplyDelete
  18. இப்பதான் முதல்முறையா உங்க பதிவை படிக்கறேன்..மத்ததயும் படிக்க தூண்டுகிறது இந்த பதிவு!!
    ரொம்ப ரசிச்சி எழுதியிருக்கீங்க!!

    ReplyDelete
  19. வாங்க சந்தனமுல்லை!

    / இப்பதான் முதல்முறையா உங்க பதிவை படிக்கறேன்..மத்ததயும் படிக்க தூண்டுகிறது இந்த பதிவு!!
    ரொம்ப ரசிச்சி எழுதியிருக்கீங்க!!/

    முதல் வருகைக்கு நன்றி!! உங்கள் கருத்தறிய ஆவல்!!!

    ReplyDelete