Wednesday, September 13, 2006

ஒரு காதல் பயணம் - 6

முதல் பாகத்திலிருந்து வாசிக்க இடுகையின் தலைப்பின் மீது சொடுக்கவும்.
நேரம் இல்லாதவர்கள் இந்த பாகத்தை மட்டும் கூட வாசிக்கலாம்! தவறொன்றுமில்லை :)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ர்வலம் வரும் சாமியைப் பார்க்கக்
காணிக்கையோடுக் காத்திருப்பதைப் போல,
என் தேவதைக்காகக் காத்திருக்கிறேன்,
கையில் என் காதலோடு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குடத்தை எடுத்துக் கொண்டு அந்தக் குடிநீர்க் குழாய்க்கு நீ வரும்போது,
என்னோடு சேர்ந்து வானவில்லும் காத்திருக்கிறது உன்னைப் பார்ப்பதற்காக.

நீ வருகிறாய்.
என்னைப் பார்க்கிறாய்.
நான் வானவில்லைப் பார்க்கிறேன்.
நீயும் வானவில்லைப் பார்க்கிறாய்.

“இன்னைக்கு வானவில்ல எல்லாக் கலரும் முழுசாத் தெரியறது ரொம்ப அழகா இருக்கில்ல?” என்கிறாய்.
“உனக்கு வானவில் ஏன் வருதுன்னுத் தெரியுமா?” என ஆரம்பிக்கிறேன் நான்.
நான் ஏதோப் புலம்பப் போகிறேன் எனத் தெரிந்துகொண்டு “அதெல்லாம் நாங்க பள்ளிக்கூடத்திலேயேப் படிச்சுட்டோமாக்கும்,
நீங்க ஒன்னும் சொல்லித் தரத்தேவையில்ல” எனப் பாசாங்கு செய்கிறாய்.
நான் அமைதியாகிறேன்.

குடத்தைக் குழாய்க்கு அடியில் வைத்துவிட்டு, காரணத்தோடு கொஞ்சமேக் கொஞ்சமாக நீர் விழுமாறு குழாயைத் திருப்பிவிடுகிறாய்.
குழாயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீர் கசிந்து உன் குடத்தில் விழுகிறது,
என்னில் இருந்து உன் இதயத்துக்குக் காதல் கசிவதைப் போல.

“வானவில்லப் பத்திப் பள்ளிக்கூடத்தில் சொன்னதெல்லாம் சுத்தப் பொய்.
காதல் சொல்லும் உண்மையானக் காரணம் என்னனு உனக்குத் தெரியுமா?
வானம் தன்னிடம் உள்ள நிறங்களையெல்லாம் கையில் வைத்துக் கொண்டு,
நீ எந்த நிறத்தில் இருக்கிறாய் எனக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது.
– அதைத்தான் நீயும் இந்த உலகமும் வானவில் என்று வருணித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என நான் உண்மைக் காரணம் சொல்கிறேன்.
நாணத்தில் உன் பொன்னிறம் – செந்நிறமாகிறது.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை பெய்யும் பாரேன்!”
“எப்படி சொல்றீங்க?”
“நீ எந்த நிறம் எனக் கண்டுபிடிக்க முடியாமல் தோற்றுப் போன வானம், அழாமலா இருக்கும்?”
வெட்கத்திலும் சிரிப்பு வருகிறது உனக்கு.

“இன்னொருக் குடத்துக்கு மறுபடியும் வருவாயா?” - எனது ஏக்கம் எனக்கு.
“ஏற்கனவே ரெண்டு குடம் எடுத்துட்டுப் போயிட்டேன், குளிக்க மூனு குடம் போதும் எனக்கு”
“அடிப்பாவி! குடிப்பதற்கு தான அரசாங்கம் காவிரியிலிருந்து குழாய் மூலமா நீர் வழங்குது, நீ குளிக்க எடுத்துட்டுப் போற?”
“என்னப் பண்றது? சின்ன வயசுல காவிரி ஆத்துலப் போயிதான் குளிப்போம்… காவிரித் தண்ணியிலக் குளிச்சேப் பழகிப் போயிடுச்சு”

“ஓ காவிரித் தண்ணியிலக் குளிச்சுதான் இவ்வளவு அழகா இருக்கியா?”
“ஏன் நீயுந்தான் காவிரித்தண்ணியிலக் குளிச்சுப் பாரேன் – அப்புறம் நீயும் என்ன மாதிரிஅழகாயிடுவ”
“நானும் உன்ன மாதிரி அழகாகனும்னா காவிரித் தண்ணியிலக் குளிச்சா முடியாது – நீ குளிச்சத் தண்ணியில குளிச்சாதான் உண்டு”
“அடப் பாவமே! காதலிச்சா புத்திப் பேதலிச்சுடுமா என்ன? அழுக்குத் தண்ணியிலப் போயிக் குளிக்கிறேங்கற?”

“அடிப் பாவி!உன்னக் குளிப்பாட்டிட்டு உன்னோட அழகையெல்லாம் அள்ளிட்டுப் போறத் தண்ணியப் போய்,
அழுக்குத் தண்ணினு சொல்றியே? அது அழகுத் தண்ணிடீ”
நான் குடத்தில் நிறையும் தண்ணீரைப் பார்த்து “கொடுத்து வச்சத் தண்ணி” என முணுமுணுக்கிறேன்.
குடம் நிரம்பி வழிகிறது. நீ குழாயைத் திருகி மூடுகிறாய்.

“என்ன சொன்ன?”
“ஒரு நிமிஷம் உன்னோடக் குடத்தில காது வச்சிக் கேளேன் – ஒரு சத்தம் கேட்கும்” என்கிறேன் நான்.
நீயும் அப்படியே செய்து விட்டு “ஆமா ஏதோ ஒரு சத்தம் கேட்குது…அது என்ன சத்தம்?”
“இன்னைக்கு உன்னக் குளிப்பாட்டப் போற பாக்கியம் கிடைச்ச சந்தோஷத்துல ,
அந்தத் தண்ணி ஆரவாரம் பண்ணிட்டு இருக்கு!” என்கிறேன் நான்.

“அப்ப அந்தக் குழாய்க்குள்ள தேங்கி இருக்கத் தண்ணி யென்ன அழுதுகிட்டா இருக்கும்?” என நக்கலாகக் கேட்கிறாய்.
“நீ வேணா அந்த குழாய்ல காது வச்சி கேட்டு சொல்லு – அழுகை சத்தம் வருதா இல்லையான்னு”
குழாயில் காதுவைத்து விட்டு ஆச்சரியமாக சொன்னாய் “ அட ஆமா! அதுல அழுகை சத்தம் கேட்குது, எப்படிடா?”

“அடச்சே, இவங்க தொல்லை தாங்கலப்பா” என அலுத்துக் கொண்டன குடமும், குழாயும்.

“இதுக்கே ஆச்சரியப்படுறியே! உன்ன விட ஒரு அழகி இருக்கா, பாக்குறியா?” உன்னை சீண்டுகிறேன் நான்.
“எங்க?”
“அந்தக் குடத்துக்குள்ள எட்டிப் பாரேன்”
“ம்ஹும் எத்தனப் படத்திலப் பாத்திருக்கோம்- உள்ள என்ன, என் முகமேத் தெரியப் போகுது அதான?” என சொல்லிவிட்டு - குடத்துக்குள் எட்டிப் பார்க்கிறாய்.

அதில் உன் முகம் மட்டும் தெரியவில்லை. உன் தலைக்கு கிரீடத்தைப் போல வானவில்லும் தெரிகிறது.
உனக்கே மேலும் அழகாய்த் தெரிகிறாய் நீ.

“சரி, சரி இன்னைக்கு இது போதும், இந்தக் குடத்தத்தூக்கி என் இடுப்புல வை”
என்கிறாய் வெட்கப்படாமல் உன் இடுப்பைக் காட்டிக் கொண்டு.
“இடுப்பா? அது எங்க இருக்கு உங்கிட்ட?” எனப் பேச்சை இன்னும் கொஞ்ச நேரம் இழுக்க முடியுமா எனப் பார்க்கிறேன்.
“அய்யோ! நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகனும், குடத்தத் தூக்கிக் கொடுக்கப் போறியா? இல்லையா?” எனக் கெஞ்சுகிறாய் நீ.
“எனக்கு பயமாயிருக்குப்பா! இவ்வளவு பெரியக் குடத்த உன் சின்ன இடுப்புத் தாங்காது, நான் மாட்டேன்” என மறுக்கிறேன்.

“எங்க இடுப்பெல்லாம் ஸ்ட்ராங்காதான் இருக்கு! வேணும்னா என் இடுப்புல ஏறி உட்காரு,
உங்க வீடு வரைக்கும் தூக்கிட்டுப் போயி விடறேன்” என நீ சொல்ல,
உன் இடுப்பில் உட்கார்ந்து கொண்டு ஊர்வலம் போகும் அந்தக் காட்சியிலேயே நான் லயித்திருக்க,
நீயேக் குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டுக் கிளம்பி விட்டாய்.

உன் இடுப்பில் உட்கார்ந்து சவாரிப் போகும் உன் குடத்தைப் பார்த்துப் புலம்புகின்றன,
குழாயடியில் இருக்கும் மற்றக் குடங்களெல்லாம் –
“அடுத்தப் பிறவியிலாவது உன்னுடையக் குடமாய்ப் பிறக்க வேண்டும்” என்று.

( காதல் பயணம் தொடரும்... )
அடுத்தப் பகுதி

14 comments:

  1. வானவில்லுக்கு இப்படி ஒரு புது விளக்கமா?ம்ம்ம் சரி சென்னைல குழாயில எப்ப தன்னி எல்லம் வண்துது? சத்தம் தானே வரும்,அதுவும் கோவமா!!!!?

    ReplyDelete
  2. :) நல்லா போகுது. எப்ப கல்யாணம் ஆகும்?

    ReplyDelete
  3. ம்... சும்மா சொல்லக் கூடாது. "ஒரு காதல் பயணம்"... சூப்பர். நன்றாக ரசித்தேன்.

    வாழ்த்துக்கள் அருள்.

    ReplyDelete
  4. என்னத்த சொல்ல?
    குடம்
    வாணவில்
    மேகம்
    மழை
    கூடவே ஒரு அழகான கவிதை!
    ம்ம்ம்..அழகு!

    ReplyDelete
  5. ஏண்....ஏண்..

    இவ்வளவு பொலம்பல்

    உன் அலும்பல் தாங்க முடியலப்பா

    ReplyDelete
  6. சுமதி,

    /வானவில்லுக்கு இப்படி ஒரு புது விளக்கமா?ம்ம்ம்/

    ஆமாங்க ;)) விளக்கம் சரிதான????

    /சரி சென்னைல குழாயில எப்ப தன்னி எல்லம் வண்துது? சத்தம் தானே வரும்,அதுவும் கோவமா!!!!?/

    இது சென்னைனு நான் எப்போ சொன்னேன்??? கரூர் பக்கம்னு வச்சிக்குங்க ;))

    ReplyDelete
  7. காண்டீபன்,

    //nice ஒரு காதல் பயணம்... //

    மிக்க நன்றி தங்களுடையப் பாராட்டுக்கு!!!

    ReplyDelete
  8. /ம்... சும்மா சொல்லக் கூடாது. "ஒரு காதல் பயணம்"... சூப்பர். நன்றாக ரசித்தேன்.

    வாழ்த்துக்கள் அருள்./

    நன்றி சத்தியா.... ( சூப்பர் - தமிழ் வார்த்தையாகி ரொம்ப நாளாகி விட்டதாக வலைப்பதிவில் எங்கேயோப் படித்தேன் உண்மைதான் போல ;)) )

    ReplyDelete
  9. /:) நல்லா போகுது. எப்ப கல்யாணம் ஆகும்? /

    கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகட்டும்... இப்போதானே நிச்சயதார்த்தமே முடிஞ்சிருக்கு! :)

    ReplyDelete
  10. Sorry out of topic, but still:
    I have tagged u for a new post in http://raconteurkasi.blogspot.com/2006/10/tagged-post.html. Pls do it when u get free time. BTW happy diwali!!!

    ReplyDelete
  11. ரொம்ம்ம்ம்ப அருமையா இருக்கு உங்க "காதல் பயணம்"
    அடுத்த பகுதி எப்போ வரும்? எதிர்பார்த்திட்டு இருக்கேன் :)

    ReplyDelete
  12. /ரொம்ம்ம்ம்ப அருமையா இருக்கு உங்க "காதல் பயணம்"
    அடுத்த பகுதி எப்போ வரும்? எதிர்பார்த்திட்டு இருக்கேன் :) /

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் கௌசல்யா!!!

    இவ்வார இறுதியில் பதிக்கிறேன்...

    ReplyDelete
  13. excellent. keep it up. please i need a favour from you. please send me the reminder after posting the next part. very interesting.

    thank you,
    Mohamed bilal.

    ReplyDelete
  14. /excellent. keep it up. please i need a favour from you. please send me the reminder after posting the next part. very interesting.

    thank you,
    Mohamed bilal./

    மொஹமத்,

    அடுத்தப் பகுதிக்கான இணைப்பு கொடுத்திருக்கிறேன்... வாசிக்கவும்..நன்றி!!

    ReplyDelete