Thursday, June 22, 2006

ஒரு காதல் பயணம் - 3

காதல் பயணம் பகுதி ஒன்று இரண்டு


நம்முடையக் காதல் பள்ளியில்
முதல் நாளே
நடந்தது
ஒரு
மனம் நடும் விழா!

அதற்கு மறுநாள், வரிசையாக பூக்கடைகள் இருக்கும் அந்தக் கோயில் தெருவுக்குள் நீயும் உன் தங்கையும் வருகிறீர்கள்.
பூ வாங்க யாரும் வந்தால் வழக்கமாக கூவிக் கூவி அழைக்கும் கடைக்காரர்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விட்டு ,
கோவிலில் இருந்த ஒரு சிலைதான் வெளியே உலா வருகிறது என வாயடைத்து இருக்கிறார்கள், என்னைப் போல.

கடையில் இருக்கும் பூக்களோ, “என்னை எடுத்துக்கோ”, “என்னை எடுத்துக்கோ” என உன்னிடம் கூப்பாடு போடுகின்றன.
மகாராணி போல எல்லாப்பூக்களையும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
பனித்துளிகள் விலகாமல், ரோஜா நிறத்தில் இருக்கும் ஒரு ரோஜாவை நீ எடுக்கிறாய்.
அது மற்றப் பூக்களையெல்லாம் திமிருடன் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒய்யாரமாய் உன் கூந்தல் ஏறி அமர்கிறது.

நீ வரும் வரை தெரு முனையில் காத்திருக்கிறோம், நானும், நம் காதலும்.
எங்களைப் பார்த்ததும் “இங்கேயும் வந்தாச்சா?” என பதட்டப்படுகிறாய்.
“எல்லாப் பக்கமும் நீக்கமற நிறைந்திருப்பது கடவுள் மட்டுமல்ல , நானும்தான்” என சொல்கிறது காதல்.
“உன்னைப் பிறகு பார்த்துக் கொள்கிறேன்” என காதலை முறைத்து விட்டு நீ என் பக்கம் திரும்புகிறாய்.

“இன்னைக்கு என்னவெல்லாம் புலம்பப் போறீங்க?” எனக் கிண்டலாகக் கேட்கிறாய்.
“புலம்பல் எல்லாம் எதுவும் இல்லை, ஒரு புகார் மனு தான் வாசிக்கனும்” என்கிறேன் நான்.
“புகாரா? நான் என்ன தப்பு பண்ணேன்?” என மெய்யாகவேப் பயப்படுகிறாய்.

“உன் மேல் புகார் சொன்னால், காதல் என்னைக் கைவிட்டுடாதா! புகார் எல்லாம் என் இதயத்தின் மீது தான்! என் இதயத்தில் குடியேறி விட்டதாக நேற்று நீ சொன்னாலும் சொன்னாய். அதிலிருந்து என் இதயத்திற்கு தலை கால் புரிய வில்லை. ஒரே மமதையுடன்தான் சுற்றுகிறது” எனப் புலம்ப ஆரம்பிக்கிறேன், நான்.

“அது செய்யும் அட்டூழியங்களை நீயேக் கேள் :
நேற்று இரவு நான் தூங்கப் போன போது இது என்ன சொல்லியது தெரியுமா?
உன் தேவதை இப்போது தூங்கிக் கொண்டு இருக்கிறாள்.அவளுக்கு கனவு வரும் நேரம் இது.
அவள் கனவில் நீ தானே இருக்க வேண்டும்! அதனால் ஓடு, ஓடு, என என்னை உன் கனவுக்குத் துரத்தியது.
உன் கனவுக்குள் நுழையும் ஆசையில் நானும் அதைச் செய்தேன்.
பிறகு ஒரு வழியாக நான் தூங்கிய போது கூட என் கனவுக்கு வந்த எல்லாரையும் காக்க வைத்து விட்டு,
உன்னை மட்டுமே உள்ளே அனுமதித்தது!
இப்படி நேற்று இரவு மட்டும் அது எத்தனை அட்டூழியங்களை செய்தது தெரியுமா?” என நான் சோக கீதம் வாசிக்கிறேன்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு இன்றைக்குப் புலம்பல் நீளும் போலிருக்கே என்று நினைத்துக் கொண்டு
“வாங்க, இங்க உட்கார்ந்து பேசுவோம்” என கோயிலின் வெளி சுற்றுத் திண்ணையில் அமர்கிறாய்.
கன்னத்தில் கை வைத்துக்கொண்டு “ ம்…அப்புறம்?” என அதன் அடுத்த அட்டூழியத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறாய்.

“குளிக்கப் போனால், தேவதை குளிக்கிறாள்! நீ இரு!” என என்னைத் தடுக்கிறது.
“சாப்பிடும்போது கூட , தேவதைக்குப் போதுமாம்! நீ எழு!” என என்னைப் பாதியிலேயே எழுப்புகிறது.
இப்படிக் கொஞ்ச நாள் முன்பு வரை என் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த என் இதயம்,
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் உன் புராணம்தான் பாடுகிறது.
நான் என்ன சொன்னாலும், தேவதை சொல்வதைத்தான் நான் கேட்பேன் என அடம்பிடிக்கிறது.
அதனால்தான் என் இதயத்தை உன்னிடம் இழுத்து வந்து விட்டேன்.
அதனிடம் நீயேக் கேள்” என முழுதாய்க் கொட்டித் தீர்த்தேன்.

இதழோரம் ஒரு குறுநகையுடன் என் இதயத்தில் உன் காது வைக்க வருகிறாய்.
“ஏய்…ஏய்…என்ன செய்ற?”
“நீங்க தான “கேட்க” சொன்னீங்க…அதான் கேட்கிறேன்”
“நான் அதுகிட்ட, என்னன்னு கேள்வி கேட்க சொன்னா…நீ அது சொல்றத காது கொடுத்துக் கேட்கப் போறியே?
கடைசியில நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டீங்கப் பாத்தீங்களா” என நான் அப்பாவியானேன்.

“இல்லங்க…மொதல்ல அது என்ன சொல்லுதுன்னுக் கேட்டுக்கலாம், அப்புறமா அத நாலு வார்த்த நறுக்குன்னு நானேக் கேட்கிறேன்”
மறுபடியும் இதயத்தில் காது வைக்கிறாய்.

என் இதயமோ, “ பொய் சொல்றான், பொய் சொல்றான், நம்பாத…எல்லாத்தையும் அவனே செஞ்சுட்டுப் பழிய எம்மேலப் போடப் பார்க்கிறான்” என உனக்கு மட்டும் கேட்கும் குரலில் சன்னமாக கிசுகிசுக்கிறது.

இதயத்தில் இருந்து காதை எடுத்த நீ, ஓரக் கண்ணில் என்னைப் பார்த்து விட்டு,
என் இதயத்தை நோக்கி, “ இதோ பார் இதயமே, நான் உன்னில் வசிக்க வந்ததற்குக் காரணமே அவர்தான்.
அவர் சொல்வதை நீ கேட்காவிட்டால் அப்புறம், உன்னை விட்டே நான் விலகி விடுவேன்”
என்று அதைக்கொஞ்சம் மிரட்டிவிட்டு, பாசாங்கு தான் என, அதைப் பார்த்துக் கண்ணடிக்கிறாய்.

“என் இதயம் முதலில் உன்னிடம் ஏதோ சொல்லியதே, என்ன சொன்னது?” என ஆர்வமாகிறேன் நான்.
“அது உங்கள் மேல் ஒரு புகார் சொல்லியது” என்கிறாய்.
“என் மேலா? என்னப் புகார் சொல்லியது?”
“ஆமாம், நான் மட்டும் தான், முதல் நாளே உங்கள் இதயத்தில் குடியேறினேன்.
ஆனால் நீங்கள் இன்னும் என் இதயத்துக்குள் நுழையவில்லை இல்லையா,
அதைத்தான் குத்திக் காட்டுகிறது” என உனது புகாரை என் இதயம் சொன்னதாக சொல்கிறாய்.
உன் நடிப்பைப் பார்த்து என் இதயம் கூட ஒரு நொடி துடிப்பை நிறுத்தியது.

“அதுதானா? நீயே மென்மையானவள். உன் இதயமோ உன்னையும் விட மென்மையானது.
அதில் வசித்துக் கொண்டு நான் என்னுடைய முரட்டுக் காதல் ஆர்ப்பாட்டங்களை எல்லாம் செய்ய முடியாது
– அதை உன் இதயமும் தாங்காது.
அதனால்தான் என் காதலை முழுவதுமாக உன் இதயத்துக்குப் பழக்கப் படுத்திவிட்டு,
‘காதல்’ குறித்துக் கொடுக்கும் ஒரு நல்ல நாளில் என் இதயப்பிரவேசம் நிகழும்” என சொல்கிறேன் நான்.

நான் பேசி முடித்தப் பின்னும் கண்ணிமைக்காமல் என்னையேப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

ஆனால் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்த உன் தங்கை,
உன்னிடம் மெதுவாக சொல்கிறாள் : “அக்கா! இந்த லூசு மாமா உனக்கு வேணாங்க்கா!”
உன் தங்கையிடம் சத்தமாக நீ சொல்கிறாய் :
“ உன்னோட லூசு அக்காவுக்கு இந்த மாமாவ விட்டா, வேற எந்த நல்ல லூசுடி கிடைப்பாங்க?”

“ஐய்யோக் கடவுளே! இந்த ரெண்டு லூசுங்க கிட்ட இருந்தும் என்னக் காப்பாத்தேன்”
எனக் கத்திக் கொண்டு கோயிலுக்குள் ஓடுகிறாள் உன் தங்கை.
அதைப் பார்த்து லூசு மாதிரி சிரித்துக் கொண்டிருந்தார் அந்தக் கடவுள்.

( காதல் பயணம் தொடரும் )


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

14 comments:

  1. //நம்முடையக் காதல் பள்ளியில்
    முதல் நாளே
    நடந்தது
    ஒரு
    மனம் நடும் விழா!//
    அருமையான வரிகள்

    //மகாராணி போல எல்லாப்பூக்களையும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
    பனித்துளிகள் விலகாமல், ரோஜா நிறத்தில் இருக்கும் ஒரு ரோஜாவை நீ எடுக்கிறாய்.
    அது மற்றப் பூக்களையெல்லாம் திமிருடன் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒய்யாரமாய் உன் கூந்தல் ஏறி அமர்கிறது.//

    தமிழ் சினிமா ரேஞ்சுக்கு போயிட்டீங்க......

    //“ஐய்யோக் கடவுளே! இந்த ரெண்டு லூசுங்க கிட்ட இருந்தும் என்னக் காப்பாத்தேன்”
    எனக் கத்திக் கொண்டு கோயிலுக்குள் ஓடுகிறாள் உன் தங்கை.
    அதைப் பார்த்து லூசு மாதிரி சிரித்துக் கொண்டிருந்தார் அந்தக் கடவுள்.//
    முழுவதாக படித்ததில் நானும் அப்படி தான் இருக்கேன்

    ReplyDelete
  2. பயணம் இனிதாய் தொடரட்டும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //முழுவதாக படித்ததில் நானும் அப்படி தான் இருக்கேன் //

    அதே தான் இங்கும் !!!! அருமை !!!!

    ReplyDelete
  4. சிவா,

    /அருமையான வரிகள்/

    ரசித்ததோடு பாராட்டியமைக்கும் நன்றிகள்.

    /தமிழ் சினிமா ரேஞ்சுக்கு போயிட்டீங்க......
    /

    /முழுவதாக படித்ததில் நானும் அப்படி தான் இருக்கேன்/

    அது நல்லதுதாங்க அப்படி இருக்கிறதுல ஒருப் பிரச்சினையும் இல்ல :))

    அன்புடன்,
    அருள்.
    இது பாராட்டா இல்ல கவலையான்னுத் தெரியலையே :))

    ReplyDelete
  5. /பயணம் இனிதாய் தொடரட்டும். வாழ்த்துக்கள் /

    நன்றி தேவ்..

    ReplyDelete
  6. ஜெகதீஸ்,

    //முழுவதாக படித்ததில் நானும் அப்படி தான் இருக்கேன் //

    அதே தான் இங்கும் !!!! அருமை !!!!

    நன்றி தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  7. பிரபு ராஜா,

    லூசாக்கிட்டேன்னு சொல்றீங்களா இல்ல லூசாகிட்டேன்னு சொல்றீங்களா??? :))

    ReplyDelete
  8. ம்... காதல் என்பது இன்ப வலிதான்.
    எங்கோ நல்லா மாட்டி விட்டீங்கள் போலதான் இருக்கு.

    ம்... தொடருங்கள் அருள்!

    ReplyDelete
  9. உங்கள் பயணம் மிகவும் அருமை.

    தொடர்ந்து பயணியுங்கள். மறக்காமல் எங்களையும் அழைத்துச் செல்லுங்கள்.

    ReplyDelete
  10. சத்தியா,

    /எங்கோ நல்லா மாட்டி விட்டீங்கள் போலதான் இருக்கு./

    வேறெங்கே? காதலிடம்தான்..
    (கவனிக்க: காதலியிடம் இல்லை :)))

    கண்டிப்பாய் தொடருகிறேன்...முடிந்தவரை தொய்வில்லாமல்...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  11. மணி,

    /உங்கள் பயணம் மிகவும் அருமை.

    தொடர்ந்து பயணியுங்கள். மறக்காமல் எங்களையும் அழைத்துச் செல்லுங்கள்.
    /

    நன்றி உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும்...

    பயணத்தின் நோக்கமே உங்களையும் என்னோடு அழைத்து செல்வதுதானே??

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  12. லூசாக்கிட்டீங்க அருள்! :)

    நீங்க ஆகி ரொம்ப நாள் ஆச்சே! நான் ஏன் அதை இப்ப சொல்ல போறேன்? ;)

    ReplyDelete
  13. பிரபு ராஜா,

    /நீங்க ஆகி ரொம்ப நாள் ஆச்சே!/

    எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா?? சரி சரி நீங்களாவது நல்லா இருங்க!!! :)

    ReplyDelete