Thursday, March 22, 2007

அன்புள்ள காதலிக்கு…

நீருக்கு நிறமில்லையென்பதெல்லாம் பூக்களைப் பார்க்காதவர்கள் சொல்லி வைத்தப் பொய்கள். ரோஜாவுக்கு ஊற்றிய நீர் சிவப்பாய்… மல்லிகைக்கு ஊற்றிய நீர் வெள்ளையாய்... நீரும் பூக்குமடி! பூக்களெல்லாம் பெண்களாம். வண்டுகள் எல்லாம் ஆண்களாம். எந்த மூடன் சொன்னது? பெண் வண்டு உட்காரும் பூ ஆண் பூவாய் இருக்கலாமே! பறிக்கப் போகிறாய் என்று தெரிந்தாலும் எப்படி சிரிக்க முடிகிறது இந்தப் பூக்களால்? பறித்தப் பிறகும் நீ சூடும் போது மட்டும் மறுபடி ஒருமுறை பூக்கிறதே எப்படி? வாடாமலே இருந்து விட்டால் பூவுக்கும் உனக்கும் பெரிய வித்தியாசமில்லை! இதழ் திறந்தால் இரண்டிலும் தேன் தான்! நீயிருக்கும்போது என்ன வரம் பெற்று காதலின் சின்னமானதோ ரோஜா! ஒருவேளை முட்கள் அதிகம் இருக்கிற சாபத்தாலா? எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?

வாசனையுமுண்டு
வாடுவதுமில்லை
நீ பூத்தப் பூவா? ப்ளாஸ்டிக் பூவா?


நீ களைந்து எறிந்த ஆடையாய்க் கலைந்து கிடக்கிறது மேகக் கூட்டம்.
உற்றுப் பார்த்தால் அதில் ஒரு மானோ, ஒரு மயிலோ, அல்லது ஓர் இதயமோ தெரியலாம்.
பார்த்துக் கொண்டே இருக்கும்போது ஒரு மலரின் வடிவம், பெண் முகமாய் மாறலாம், ஏன் உன் முகமாய்க் கூட மாறலாம்.
வேகமாய் செல்லும் மேகம் சூரியனை நெருங்க நெருங்க மேகத்தின் நிழல் உன்மேல் படரும். மேகத்துக்கு நன்றி.
சூரியனைக் கொஞ்சி விட்டு மேகம் விலக விலக நிழல் விலகி மறுபடி வெயில் வரும். பதறிப் போவேன் நான்.
மேகம் கொஞ்சி விட்டுப் போன சூரியன் முகத்தில் புதிதாய் இருக்கும் ஓர் ஒளி.
இந்த மேகத்துக்கு தான் எத்தனை வண்ணம்? வெயிலில் வெள்ளை. மழையில் கருப்பு. மாலையில் அது நடத்தும் வர்ண ஜாலம்.
எல்லாம் இருந்தும் கடைசியில் கலைந்தோ, கரைந்தோ போகிறது! காதலைப் போல…
எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?

மழையில் நனைந்ததும்,
மேகத்தைத் துவட்டிக்
கொள்கிறாய்!


மழையை ரசிக்கத் தெரியாதவனுக்குக் காதலையும் ரசிக்கத் தெரியாது.
மழையே வராமல் கிடக்கும் நிலத்தின் வெடிப்பு.
மாலை நேரத்து மெல்லிய சாரல். வெயிலோடு சேர்ந்து பொழியும் மழை.
உலகத்தையே சுத்தப்படுத்தும் உன்னத மழை. மழை நின்றும் விடாத தூவானம். மழை முடிந்து வீசும் மண் வாசம்.
காற்று, புயல், சூறாவளியில் சிக்கினாலும் விடாது பொழியும் மழை. பெருமழையில் அடித்து செல்லப்பட்ட வீடு.
மழையின் இத்தனைப் பரிமாணங்களும் காதலிலும் உண்டு.
மழையில் நனைந்து விட்டு வெயிலில் குளிர் காயலாம். காதலில் நனைந்து விட்டுக் காமத்தில் குளிர் காயலாம்.
மழையிலும் சரி, காதலிலும் சரி நனையும் வரை நஷ்டமில்லை. நனையாவிட்டால் ஒரு லாபமுமில்லை.
எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?

மழையில் குடை…
குடைக்குள் நாம்…
நமக்குள் மழை!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Thursday, March 15, 2007

ஒரு காதல் பயணம் - 9

(முதல் பகுதியிலிருந்து வாசிக்க வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் இல்லை…
தொலைக்காட்சி சீரியல் மாதிரி தான் எந்த பகுதியில இருந்து வேணும்னாலும் வாசிக்க ஆரம்பிக்கலாம் :-))
உன்னைப் பற்றி என்ன கிறுக்கினாலும்
அழகான காதல் கவிதையாகி விடுவதன்
மர்மத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போ!


ஓர் இரவு முழுவதும் மழை பெய்ததற்கு அடுத்த நாள் விடியல்.
கனவில் உன்னோடு கவிதை பேசிக்கொண்டிருந்தவனை நனவுக்கு துரத்திவிடுகிறது கலைந்து போன உறக்கம்.
இரவு முழுவதும் உலகமே சேர்ந்து துடைத்து வைத்த மாதிரி
வானம், சாலை, மரம், கட்டடம் என எல்லாமே தூய்மையாக இருந்தன, நம் காதலைப் போல.
வாசலில் இறங்கிய என் கால்களை உன் வீடு நோக்கி இழுத்துச் செல்கிறது சாலை.

பாதி தூரத்தில் எதிர்ப் படுகிறாய் நீ.
கும்பிடப் போனால் தெய்வம் மட்டுமல்ல, தேவதையும் குறுக்கே வருமோ?
நேற்றைய மழையினால் அங்கங்கு தேங்கி நிற்கிறது மழை நீர்.
அதில் நனைந்து விடாமல் இருக்க உன் பாவாடையை சற்றேத் தூக்கிப் பிடித்து நடந்து வருகிறாய்.
என்னைக் கண்டதும் நாணத்தில் பாவாடையைத் தாங்களே இழுத்து மூடிக் கொள்கின்றன உனது கால்கள்.

செருப்பில்லாத உன் பாதங்களைக் கவனித்து பதறியவனாய் உன்னை நெருங்குகிறேன்.
“ஏன் செருப்பில்லாம நடந்து வர்ற?” உரிமையோடு என் குரல்.

“ஐய்யோக் கவலைப்படாதப்பா…ஒன்னும் ஆகல….
மழை பெய்யும் போது அது மணல் எல்லாத்தையும் இழுத்துட்டுப் போயிடும்…
மணலவிடக் கொஞ்சம் பெருசா இருக்கிற , சின்ன சின்ன கல் மாதிரியானதுதான் பாதை முழுசும் கிடக்கும்…
அதில வெறுங்கால்ல நடக்கும் போது ஒரு மாதிரி குறுகுறுப்பா நல்லா இருக்கும்…அதான் செருப்பில்லாம வர்றேன்…நீயும் வேணா நடந்து பாரேன்…”
காதலோடு உன் அனுபவத்தை கிசுகிசுக்கிறது உன் குரல்.

“சரி சரி குறுகுறுப்ப அனுபவிச்சது போதும், இதெல்லாம் நம்மக் காதலுக்குத் தெரிஞ்சா என் கதி அதோ கதி தான்.
எனக்குக் காதலியைப் பார்த்துக்கத் தெரியலன்னு என்னை அது வசைபாடினா யார் கேட்கறது?”
என சொல்லிவிட்டு மறைத்து வைத்திருந்த அதை எடுத்து,
“முதல்ல இதக் கால்ல போட்டுக்கோ…நேத்து உன் கால செருப்புக் கடிக்குதுனு சொன்னதக் கேட்டு,
இப்போ இதக் கொண்டு வந்தது நல்லதாப் போச்சு!”
என சொல்லி உன்னிடம் அதைக் கொடுக்கிறேன்.

“என்னது இந்த செருப்பு வித்தியாசமா இருக்கு!”
“அது ரோஜா இதழ்ல நானே செஞ்சது!”
“பொய் சொல்லாதடா…நெஜமாவா?” ஆச்சரியப்படுகிறாய் நீ!

“நிஜமாதான்! கல்லூரியில தான் நல்ல பேரெடுக்கல
– கல்லூரியில விட்டத காதல்ல பிடிக்கத் தான் இத்தனையும்!”

அதை அணிந்து கொண்டு கொஞ்ச தூரம் நடந்து விட்டு சந்தோஷமாய்ச் சொன்னாய் :
“ இது ரொம்பதான் மெதுமெதுன்னு இருக்கு! இதப் போட்டு நடந்தா, தரையில் நடக்கிற மாதிரியே இல்ல,
காத்துல மிதக்கிற மாதிரியில்ல இருக்கு!”

“அடிப் போடி! உன்னைக் காதலிக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்தே எனக்கு அப்படித்தான் இருக்கு!” – என் நிலை சொல்கிறேன் நான்.
கேட்டு விட்டு சிரிக்கிறாய். அந்த சிரிப்புக்கும், வெட்கத்துக்கும் தானே தினமும் உன்னைத் தேடுகிறேன்.

அப்போது நம்மைக் கடந்து போன ஒரு பெண்ணைப் பார்த்து லேசாக புன்னகைக்கிறது என்னுதடு.
அதைப் பார்த்ததும் உன் கண்கள் உன் உதட்டிடம் வத்தி வைக்க, துடிக்கிறது உன்னுதடு.

“இப்ப எதுக்குடா அந்தப் பொண்ண சைட்டடிச்ச?”
“என்னமாக் கெட்ட வார்த்தையெல்லாம் பேசற? நீ இருக்கும்போது நான் எதுக்கு இன்னொரு பொண்ணப் பார்க்கிறேன்?”
“அப்போ நான் இல்லாதப்ப பார்ப்பியோ?” சட்டையைப் பிடித்துவிட்டாய்.
காதலியிடம் பேசும்போது எழுத்தைக்கூட அளந்துதான் பேச வேண்டும் என்பது மூளைக்கு உரைக்கிறது.

“இல்லமா உன்னப் பார்க்கிற வரைக்கும், மத்தப் பொண்ணுங்கள நான் ஒரு காதல் பார்வை பார்த்துக்கிட்டு இருந்தது உண்மைதான்
– ஆனா உன்னக் காதலிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் எந்தப் பொண்ணப் பார்த்தாலும்,
அவளும் என்ன மாதிரி யாரோ ஒருத்தனோடக் காதலியா இருக்கலாமில்ல?
நான் அவளக் காதலோடப் பார்க்கப் போய் , எம்மேல காதல் தேவதைக்குக் கோபம் வந்து,
அது நம்மக் காதல சபிச்சுட்டா என்னப் பண்றது?னு தோணுது!
அதனால இப்பலாம் எந்தப் பொண்ணப் பார்த்தாலும் ஒரு வேளை அவளும் ஒருத்தனுக்குக் காதலியா இருக்கும்னு நெனச்சு
அவளோடக் காதல மனசார வாழ்த்திட்டு ஒரு புன்னகை செய்யறேன் அவ்வளவுதான்!”

“உனக்கு நல்லா கதை சொல்லத் தெரியும்னு எனக்குத் தெரியும், உண்மையிலேயே என்ன விட அழகானப் பொண்ணப் பார்த்தாலும் உனக்கு எதுவும் தோணாதா?”
“தோணும்! எனக்கு உன்ன முழுசாக் காதலிக்கத் தெரியலையோன்னுத் தோணும்!”
“ஏன்”
“உண்மையா நான் உன்னக் காதலிச்சா, எந்தப் பொண்ணும் எனக்கு உன்ன விட அழகாத் தெரிய மாட்டா!
அப்படி அழகாத் தெரிஞ்சுட்டா நான் உன்ன உண்மையிலேயே முழுசாக் காதலிக்கலன்னு தான அர்த்தம்?
ஆனாக் கவலைப்டாத! இது வரைக்கும் உன்ன விட அழகா நான் யாரையும் பார்க்கல!”
மீண்டும் சிரிப்புக்கு வருகிறாய்.

“அப்பாடா, மறுபடியும் உன்ன சிரிக்க வைக்க எவ்வளவுப் போராட வேண்டியிருக்கு!
ஆனாக் கோபத்துலக் கூட சும்மா காதல் பிசாசு மாதிரி இருக்க!”

“ஓஹோ! நான் பிசாசு மாதிரி இருக்கேன்னு சொல்ற, அதான?
அப்போ இவ்வளவு நாளா ‘தேவதை’னு உருகுனதெல்லாம் வெறும் வேஷம் அப்படித்தான?”

எனக்கு, தண்ணீரில்,வாகனத்தில் எல்லாம் கண்டமில்லை, எல்லாக் கண்டமும் என் வாயில் தான் இருக்கிறதென
சிறு வயதில் ஜோசியக்காரன் சொன்னது ஏனோ நினைவுக்கு வருகிறது.
அமைதியாகவே இருக்கிறேன் நான்.

“அதெப்படி இந்த ஆம்பளைங்க மட்டும் நேத்து ஒரு மாதிரி பேசிட்டு, இன்னைக்கு வேற மாதிரிப் பேசறீங்க?”

“இல்லமா நான் காதல்ல அளவுக்கு மீறி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்கும்போது,
நீ தேவதை மாதிரி வந்து ஒரு பார்வ பார்த்தா போதும் அப்படியே அமைதியாயிடுவேன்!
நான் வேற ஏதாவது யோசனையில் அமைதியா இருக்கும்போது நீ (காதல்)பிசாசு மாதிரி வந்து என்னப் பிடிச்சின்னா,
உன்னோடக் காதல் எனக்கும் தொத்திக்கும்! அதனால ரெண்டுமே நம்மக் காதலோட நல்லதுக்குதான்!”

“உன்னோட சமாளிப்ப பத்தி தான் ஊருக்கேத் தெரியுமே! அது சரி உனக்கு தேவதையப் பிடிக்குமா? பிசாசப் பிடிக்குமா?”

“தேபிசாதைசு தான் எனக்குப் பிடிக்கும்!”

கேட்டதும் இன்னொரு சிரிப்பைத் தந்துவிட்டு வெட்கத்தை மட்டும் நீயே எடுத்துக் கொண்டு ஓடினாய்.
இன்றைக்கு இது போதும், நீங்கள் வீட்டுக்குப் போகலாம் – என்பது போல இயற்கை,
சுட்டெரிக்கும் கதிரவனை அனுப்பி நம்மைப் பிரிந்து செல்ல வைக்கிறது.

( காதல் பயணம் தொடரும் )

அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, March 09, 2007

இது காதல் பூக்கும் மாதம் – 210

இது காதல் பூக்கும் மாதம் – முதல் பகுதி

21. நெஞ்சொடு புலத்தல்


உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும்!

அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது.

நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?


உயிரோடு இருப்பதா?
உன்னோடு இருப்பதா? என்றால்…
உன்னோடு வருகிறது என் இதயம்!

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.


என் கண்ணும் உன் கண்ணையேத் தேடுகிறது…
என் இதயமும் உன் இதயத்தையே நாடுகிறது…
என் அங்கங்களையெல்லாம் இழுத்துக் கொண்ட பின்
உயிரை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய்?


கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்.

நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?


நம் காதலைப் பற்றி
உன் மனம் என் மனதிடம் என்ன பேச்சு பேசுகிறது?
நீ தான் எதுவுமே பேசுவதில்லை.


இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.



உன் மௌனத்தில் இருந்துதான் பெறப்பட்டன
என் காதலுக்கானத் தாலாட்டும்…
ஒப்பாரியும்!

பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.


உன்னோடு பேசாத நாட்களை
என் நாட்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்
அவை நான் வாழாத நாட்கள்!


தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.


என் காதலை உதறினாய்
நீ உதறிய வேகத்தில் உதிர்ந்தது
என் உயிர்.


நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்.



நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.


உன்னைப் பிரிந்த நாட்களில்
எனக்குத் துணையாயிருக்கிறது
தனிமை!


துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?



உள்ளமே உன்பின்னால் போனபின்
உலகமே என் பின்னாலிருந்து
என்ன பயன்?


தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Thursday, March 08, 2007

காதலில்லாமல் ஒரு கவிதை(?)

மழையில் நனைந்து
ஒதுங்க இடம் தேடி அலையும் அவசரத்திலும்
உள்ளாடை தாண்டி ஊடுருவும் பார்வைகளில்லை…

பேருந்தின் நெரிசலில்
எட்டாதக் கம்பியை எக்கிப் பிடித்து தடுமாறி நிற்கையிலும்
உடலை உரசிப் பார்க்கும் வக்கிரக் கைகளில்லை…

அலுவலகத்தில் கூட
வீட்டு நினைப்போடு வேலையின் பளுவும் சேர்ந்தழுத்தும்போதும்
மேலதிகாரியின் சில்மிஷ , ஆபாசப் பேச்சுக்களில்லை…

குடும்பத்திலும்
உடலாலும் மனதாலும் சுமைகளைச் சுமந்து வருந்தும்போதும்
வாழ்க்கைத்துணையின் ஆதிக்க மனப்பான்மையில்லை…

ம்ம்ம்…பாரதிகூட பெண்ணாய்ப் பிறந்திருந்தால்...

.
.
.
.
.
.


“ஆடவராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமப்பா”


___________________________________________________________
இது மகளிர் நாளுக்காக ஒலிFM இல் ஒலியேறிய எனது கவிதை.
குரல் கொடுத்து உதவிய சிறில் அவர்களுக்கு நன்றிகள்!

_________________________________________________________________

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

கவித்துவமானவள்

ஓவியப் போட்டியென்றால்
உன்னை வரைந்து அனுப்பலாம்…
காவியப் போட்டியென்றால்
நம் காதல் கதையனுப்பலாம்…
இது கவிதை போட்டியாம்!

வெற்றி பெற வேண்டுமென்றால்
உன் பெயரைத்தான்
அனுப்ப வேண்டும்…
சிறியதாக இருக்கிறதென்று
ஒதுக்கி விட்டால்?

காதலியைப் பற்றிய
கவிதை வேண்டுமாம்…
சிலையைப் பற்றியென்றால்
சில நொடியில் எழுதுவேன்…
ஓவியம் பற்றியென்றால்
ஒரு நொடி போதும்…
கவிதையைப் பற்றியே
கவிதை வேண்டுமென்றால் எப்படி?

சரி எழுதுவோம்
என்று உட்கார்ந்தால்
கவிதை வளர்கிறதோ இல்லையோ
உன் மேல் காதல் தான் வளர்கிறது!

உன் அழகைச் சொல்ல ஆரம்பித்தால்
பூக்களின் குறிப்பாகி விடுகிறது…
உன் குரலை வருணித்தால்
இசைக் குறிப்பாகி விடுகிறது…
பின் எப்படிதான்
உன்னைப் பற்றி கவிதை எழுதுவதாம்?

என்ன எழுதினாலும், உன்னுடைய

“அச்சச்சோ!”
“ஊஹூம்…”
“ம்க்கும்!”
“ப்ச்..ப்ச்..”
“ஹேய்…”

…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள் தோற்று விடுகின்றன!

இன்னும் போராடி கவிதையாக,
ஒரு கவிதையெழுதினாலும்
அதை விட கவித்துவமாக நீயே இருக்கிறாய்!

பேசாமல் இந்தக் கவிதைப் போட்டிக்கு
நானனுப்பும் கவிதையாக நீயே போகிறாயா?

வேண்டாம்… வேண்டாம்…
நீ போனால் அப்புறம் அழகிப் போட்டியென்று
நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்!

கவிதைப் போட்டியோ
அழகிப் போட்டியோ
நீ போனால் பரிசு நிச்சயம்…
கொஞ்சம் யோசித்து சொல்!

____________________________________________________

இது, நம்பிக்கைக் குழுமத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கவிதை.
போட்டியை நடத்திய நம்பிக்கை குழுமத்திற்கும், கவிதைகளைத் தரப்படுத்திய நடுவர்களுக்கும் நன்றி!!!
____________________________________________________
இந்தப் பதிவு என்னுடைய நூறாவது பதிவு :)

Wednesday, March 07, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 200

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி


20. புணர்ச்சி விதும்பல்


“உன்னை எனக்குப் பெயர் வைக்க சொன்னால்
என்ன பெயர் வைப்பாய்?” என்று கேட்பவளிடம்,
‘மதுமதி’ என்றேன்.
போதை தரும் நிலவுக்கு
வேறென்ன பெயர் வைக்க முடியும்?

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.


உன் காதலின் முன்னே போட்டியிட முடியாமல்
உன்னிடம் சரணடைகின்றன
என் சின்னக் கோபங்கள்!

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.


“உன்னோடுப் பேச மாட்டேன்” என்று சொல்லி விட்டு
கண்களால் இத்தனைக் காவியம் வடிப்பதற்கு பதில்
நீ வாயைத் திறந்தே பேசி விடலாம்!

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.


நீ என்னோடு கா(ய்) விட்டுப்
பேசாமல் இருக்கும் பொழுதுகளில்
மேலும் கனிந்து விடுகிறது
என் காதல்.

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் னெஞ்சு.

ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.


என்னைப் பிரிந்து விட்டதற்காக நீயும்
உன்னைப் பிரிய விட்டதற்காக நானும்
வருத்தப் பட்டுக் கொண்டிருக்கையில்…
அமைதியாக நம்மை சேர்த்து வைக்கிறது
நம் காதல்!

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து.

கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும். கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.


நீ விலகியதில்
என் காதலுக்கு உன் மேல் வருத்தம்!
மீண்டும் நீ வந்ததும்
அத்தனை வருத்தங்களும் அரைநொடியில் மாறிப் போயின…
அழகானக் காதலாய்!


காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.


உன்னோடு
நான் போடும் சண்டையெல்லாம்
உன்னிடம் தோற்பதற்கே!


உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?


பிரிவிற்குப் பின்னான நம் முதல் சந்திப்பில்
எந்தக் காரணமும் சொல்லாமல்
என் மார்பில் முகம் புதைத்து
நீ வடித்தக் கண்ணீரில்
மேலும் சுத்தமாகிறது என் காதல்!

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.


இப்படியெல்லாம் இறுக்கிப் பிடிக்காதே
என் காதல் மிக மிக மென்மையானது
உன்னைப் போல!


மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.


பார்வையில் கோபத்தீ மூட்டுகிறாள்.
மன்னிப்பு கேட்க நெருங்கினால்..
கட்டியணைத்துக் காதல் தீ மூட்டுகிறாள்!


கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, March 06, 2007

ரெண்டு வார்த்த

“என்னைப் பத்தி ரெண்டே வார்த்தையில் சொல்லத் தெரியுமா?”

“எத்தன வேணும்? சொல்…”

“தெரிஞ்ச வரைக்கும் சொல்லுப் போதும்… எனக்குப் பிடிச்சது கிடைக்குதான்னுப் பார்க்கறேன்”


நடக்கும் பூங்கா
ஒளிரும் இசை
கைவீசும் கவிதை
ஓய்வில்லா ஓவியம்
தென்றலின் தேகம்

இதயமுள்ள இரக்கம்
பகல் நிலா
கலவரக் கண்வீச்சு
புன்னகைப் பூங்கொத்து
அன்பின் தாய்

நிலவின் நிலவு
பூக்களின் பொறாமை
இரவின் வெளிச்சம்
சிணுங்கும் சிற்பம்
பேசும் மௌனம்

மழையின் மழலை
இசையின் குரல்
காதலின் காதலி
ஐந்தடி ஹைக்கூ
நடக்கும் நதி

அழகின் அகராதி
கொஞ்சும் கோபம்
கவிதைக் கருவூலம்

“இதுல எது உனக்குப் பிடிச்சிருக்கு?”

“ம்ஹும் ஒன்னும் இல்ல”

“ஒன்னுமே இல்லையா?”

“எனக்கு ரொம்பப் பிடிச்சது ஒன்னே ஒன்னு இருக்கு. ஆனா நீ அத சொல்லல”

“அப்படியா? அப்போ உனக்குப் பிடிச்சத நீயே சொல்லு…”

“உன் காதலி!”


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ