Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Friday, March 07, 2008

உருப்படியா எதாவது நெனைடா! வலைப்பதிவுல எழுதனும்ல!

வலைப்பதிவுல எழுதறதெல்லாம் நெனச்சத அப்படியே எழுதினதா என்ன? இல்லல்ல? வடிகட்டி , அடிச்சுத் திருத்திதான எழுதிகிட்டிருக்கோம். நெனைக்கிறத அப்படியே எழுதினா எப்படி இருக்கும்? ரொம்ப கேவலமா இருக்கும்! என்னமோ மறந்துட்ட மாதிரி இருக்கே. இன்னைக்கு வெள்ளிக்கிழமை. ஷூ போட வேண்டியதில்ல. பர்ஸ், மொபைல், ஐடிகார்ட் எல்லாம் இருக்கு கெளம்புவோம். போக போக யோசிப்போம். இன்னைக்கு அந்தமாதிரி ஒன்னு எழுதி இந்த ப்ரூஃப் ரீடிங்க் வெங்காயமெல்லாம் பண்ணாம அப்படியே போட்டு பாப்போம்.வர வர என்ன எழுதறதுன்னு தெரியாம என்னத்தையோ எழுதிகிட்டு இருக்கிறதுக்கு நெனச்சதையே எழுதுறது நல்லதுதான். நெனச்சதையோ எழுதறதுனு முடிவு பண்ணிக்கிட்டா என்னெல்லாம் எழுதலாம்னு யோசிச்சு அத மட்டுமே மனசு நெனைக்க ஆரம்பிச்சுட்டா என்னப்பண்றது? ரொம்ப கொழம்பிட்டேன்னு நெனைக்கிறேன். மொதல்ல ஆட்டோ வருதான்னுப் பாப்போம். நெனைக்கறத எல்லாம் ஆட்டோவுல வச்சுக்குவோம். வெயில் ஆரம்பிச்சிடுச்சா? என்ன ஊரோ இது. குளிருன்னா ரொம்ப குளிருது. வெயிலடிச்சா இப்படி கொளுத்துது.ஹும் இன்னைக்கும் முன்னாடிதான் உட்காரனுமா? சரி நம்ம சைசுக்கு முன்னாடியே வசதியா உக்காந்துக்கலாம்தான். ம்ம்ம் இப்போலருந்து 'நெனைக்க' ஆரம்பிப்போம். பதிவுல எழுதனுமே. ச்சே என்னதான் அப்படி குசுகுசுன்னு பேசிகிட்டே இருப்பாங்களோ! இந்த தெலுங்குப் பொண்ணுங்க என்ன பேசினாலும் ரொமாண்டிக்கா வேற இருக்கு. குரல் காரணமா இல்ல தெலுங்கே இப்படிதானா. எல்லாப் பொண்ணுங்களுமே இப்படிதான் பேசறாங்க. ஒருவேளை நமக்குதான் வயசுக்கோளாறோ? செல்லம் நீ யூத்து இல்ல. வயசாகிடுச்சு. அத மொதல்லப் புரிஞ்சிக்கோ. சரி அப்போ தெலுங்கே இப்படித்தான்னு வச்சுக்குவோம்.சுந்தரத்தெலுங்குனு சும்மாவா சொன்னான்? ம்ம்ம் கண்ணாடில பாத்தா ஒருத்திதான் தெரியறா. ம்ம்ம் நல்லாதான் இருக்கா. டேய் இதையெல்லாம்கூட பதிவுல எழுதப்போறியா? என்ன பாத்ரூம்லையா எட்டிப் பாத்தோம்? சைட்டடிக்கிறது ஒரு தப்பா? நம்மள 'நெனைக்க' விடாம எடஞ்சல் பண்ணது இவங்க சத்தம்தான். ஹும் சரி நாம மறுபடி உருப்படியா எதாவது 'நெனைக்க' ஆரம்பிப்போம்.பதிவுல எழுதனுமே! போட்டான்யா சடன் ப்ரேக்கு. ஏற்கனவே எலும்புல தோலப்போத்திகிட்டு சுத்திகிட்டு இருக்கோம். இப்படியெல்லாம் வண்டியோட்டினா இருக்குற எலும்பும் தேஞ்சுதான் போகும். எலும்பு மஜ்ஜைதானம்னு பதிவுல யாரோ எழுதிருந்தாங்க. அப்பறம் அதுமாதிரி எலும்புதானம் தான் வாங்கனும்! ஆகா நம்ம பாட்ட போட்டுட்டானா. நாம எதாவது நெனைக்கலாம்னாதான் பாட்ட போட்டு நெனைக்கவுடாம பண்றானுங்க. சரிவிடு பாவனா செல்லம் கண்ணு முன்னாடி தெரியுதில்ல அப்பறமென்ன? ம்ம்ம் நல்லாதான் இருந்தா ஆனா கொஞ்சம் குண்டா இருந்தானு சத்தி சொன்னான். நமக்கு ஒல்லியாதான் தெரிஞ்சா. பாவிங்க அநியாயமா பாதியிலேயே கொன்னுட்டானுங்க. தெலுங்கு படத்துலையும் வர வர சோகமா முடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க. ரெண்டாவது தடவை பாக்கப்போனா பாவனா சாகறதுக்கு முன்னாடி வந்துடனும். இந்த வாரம் போலாமா. ஆகா போஸ்டர் மாறியிருக்கே. அதுக்குள்ள தூக்கிட்டானுங்களா?இந்த பாட்டுக்கு தமிழ் வரி எழுதினா நல்லாதான் இருக்கும். செப்பாலனுந்தி சின்ன மாட்டைனா... ஆகநந்தி தாகநந்தி லோலோனா... இதுக்கு என்னத்த எழுதறது? தன்னான தன்ன்ன்ன தன்ன தானேனா தான னன்ன னான னன்ன னானானா... பெரிய இசை வித்துவான்...பாடிப்பாக்கறாரு நாம பாடும்போது எவ்ளோ நாராசமா இருக்கும்னு தெரியுமில்ல அப்பறம் எதுக்கு? மனசுக்குள்ளதான பாட்றோம். மனசுக்குள்ள பாடும்போது எல்லாரும் எஸ்பிபிதான். பாட்டக் கேளு பாட்டக்கேளு...கிள்ளாமல் கிள்ளும் பார்வைபார்த்தாலே வண்ணமின்னல் கொண்டகண்ணில் விழுவேனா... ஆபிஸ்ல போய் முழுபாட்டையும் கேட்டுட்டு எழுதுவோம். இதுக்காடா சம்பளம் கொடுக்கறானுங்க? எங்க கொடுக்கறானுங்க? பாதி பேங்க் லோனுக்கே போயிடுது. ஆகா பாட்ட வுட்டாச்சே. ஆட்டோவுல கேட்டுட்டே எழுதறதுக்கு நாம என்ன வாலியா பக்கெட்டா? கருமம்புடிச்சவனே உருப்படியா எதாவது நெனைடா! பதிவுல எழுதனும்ல? இந்தப் பொண்ணு எதுக்கு கண்ணாடில நம்மளயே பாக்கறா? இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா! அநேகமா நெனைக்கறோம்னு நெனச்சிக்கிட்டு தானா பேச ஆரம்பிச்சுட்டோம்னு நெனைக்கிறேன்? ம்ம்ம் ம்ம்ம் ஒன்னும் ஆகல. முடி நெறைய வளந்துடுச்சோ? இந்த வாரம் வெட்டனும். ஆபிஸ் சலூன்லயே இருவத்தஞ்சு ரூபாய்க்கு பூ மாதிரி வெட்டிவிட்றாங்கனு சத்தி சொன்னான். பூவதான் பூ மாதிரி வெட்ட முடியும். முடிய எப்படி பூ மாதிரி வெட்டுவாங்க? நம்ம முடி என்ன பூ மாதிரியா இருக்கு? மயிர் மாதிரி இருக்கு. லூசு! முடியும் மயிரும் ஒன்னுதாண்டா. முடினும் சொல்லலாம். மயிரும்னும் சொல்லலாம். நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்ணே. இப்ப எதுக்கு செந்தில் வசனமெல்லாம்? வள்ளுவரே மயிர்னு சொல்லிருக்கார்ல கற்றது தமிழ்ல கூட வருமே. அந்த ஹீரோயின் கூட நல்லாதான் இருந்தா. நெசமாதான்
சொல்றியா? நெசமாதான் சொல்றேன். அடுத்த படத்துலயே ஜீன்ஸ்ல வந்தான்னா வேற ஹீரோயின்னு நெனச்சுதான் பாக்கப் போற அப்பறமென்ன? இந்த சத்தியெல்லாம் எப்படிதான் ஞாபகம் வச்சிக்கிறானோ. நமக்கு மட்டும் ஒரே பொண்ண வேற ட்ரஸ்ல பாத்தா அடையாளம் தெரிய மாட்டேங்குது. இந்த வீக்னஸ் எல்லாம் இப்போ ரொம்ப முக்கியமா? உருப்படியா எதாவது நெனைடா! பதிவுல எழுதனும்ல? நான் நெனைக்க மாட்டேன்னா சொல்றேன். இந்த மனசு ஒன்னும் நெனைக்க மாட்டேங்குது. இன்னைக்கு புதன் கிழமை கூட இல்லியே எதுக்கு இப்படி பொலம்பறோம்? இந்த நெனைக்கிறத எழுதறது எல்லாம் நமக்கு ஒத்து வராது. கம்முனு எதாவது கவுஜை யோசிப்போம். அட இந்த பொண்ணு மறுபடியும் என்னையே பாக்கறா. ம்ஹும்... இது என்னவோ முள்ள போய் கால்ல ஏத்திகிட்டு 'முள்ளு குத்திடுச்சு'னு சொல்ற மாதிரி தான் இருக்கு. சரி கவுஜயாவது யோசி. வழக்கம்போல கண்ணுல இருந்தே ஆரம்பிப்போம். ஏன் கால்ல இருந்து ஆரம்பிச்சா கவுஜ வராதா? என் கண்கள், உன் கண்களின் அடிமையா என்ன? உனது பார்வைகளையும் சேர்த்து சுமக்கிறதே. அப்பறம் ஆச்சர்யக்குறி! கவித கவித, சைட்டடிக்கிறேங்கறத எப்படியெல்லாம் சொல்ற. இப்படியே எழுதிகிட்டிருந்தா அய்யனாரோ ஆசிப்போ ஒருநாள் தேடிவந்து கும்மப் போறாங்க. அது மட்டும் நிச்சயம். டேய் உருப்படியா எதாவது நெனைடா! பதிவுல எழுதனும்ல... ஆபிசே வந்தாச்சு இனிமே உருப்படியா நெனச்சு ஒன்னும் பண்ணப் போறதில்ல. இன்னைக்கும் கொஞ்சம் இண்டர்வியூ கூட்டம் வந்திருக்கு போல. ம்ம்ம் எல் கே ஜி சேர்றதுக்கு ஜனனியே ரெண்டு ஸ்கூல்ல இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டா. வாழ்க்கைல நாமளே இதுவரைக்கும் ஒரே ஒரு இண்டர்வியூதான் அட்டெண்ட் பண்ணிருக்கோம். என்ன கொடும சார் இது. நாம வேல தேடும்போதுதானா டாலர் மதிப்பு தகிடுதத்தம் போடனும்? ஒருத்தனும் கால் பண்ண மாட்டேங்கறான். முன்னவாது we will get back to you னு சொல்லுவானுங்க. இப்ப அதகூட சொல்றதில்ல. இட்லி? ஜூசே போதும். மொசம்பி சனியன் சாத்துக்குடின்னு வந்து தொலைய மாட்டேங்குது. ஒரு சாத்துக்குடி ஜூசக் குடிச்சுட்டுப் போய் நெனச்சத எல்லாம் பதிவெழுதலாம். என்னத்த நெனச்சோம். பதிவுல எழுதற மாதிரி உருப்படியா ஒன்னுமே நெனைக்கல. என்ன தலைப்பு வைக்கிறது? 'தொடர்பயணத்தின் தொடர்பறுந்த குறிப்புகள் தொடர்பான பிரதி' னு வைக்கலாமா? தலைப்ப பாத்ததும் தெறிச்சு ஓடிடுவாங்க. அய்யனார் ஜ்யோவ்ராம் சுந்தர் சுகுணா திவாகர் மாதிரி நாலு பேரு படிச்சாதான் உண்டு. இப்படியொரு மொக்கைப் பதிவ எழுதிட்டு எதாவது மொக்கத்தலைப்ப வைப்போம். அதுக்கப்புறம் படிக்கிறவங்க பாடு. நாளைக்காவது உருப்படியா எதாவது நெனைடா. வலைப்பதிவுல எழுதனும்ல!

Thursday, March 06, 2008

ஆம்.நானும் காதலிக்கத் துவங்கியிருக்கிறேன்.

அண்மைக்காலமாக
எனக்குள்ளும் புதிய மாற்றங்கள்
தென்படத் துவங்கியிருக்கின்றன.
என்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றுவது எனக்கேத் தெரிகிறது.
இராத்திரியின் நீளம் விளங்குகிறது.
நானும் கவுஜை ஜொள்ளுகிறேன்.
என் பிம்பம் விழுந்தே கண்ணாடிகள் உடைகின்றன.
கண்களிரண்டும் ஒளிகொள்வதாக நண்பன் சொல்கிறான்.
தலையணை நனைக்கிறேன்.
மூன்று முறை பல்துலக்குகிறேன்.
காத்திருக்கும்போது நிமிடங்கள் வருடங்களாகின்றன.
வந்துவிட்டால் வருடங்கள் நிமிடங்களாகின்றன.
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
தொண்டைக்கும் தலைக்கும்
உருவமில்லா உருண்டையொன்று உருளுகிறது.
உண்மையாகவே இருதயம் அடிக்கடி இடம்மாறித் துடிக்கிறது.
நிசப்த அலைவரிசைகளில்
எனது குரல் மட்டும் ஒலிபரப்பாகிறது மிக மிக சத்தமாக.
எனது நரம்பே நாணேற்றி எனக்குள் அம்புவிடுகிறது.
புதிய ஹார்மோன்கள் நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கின்றன.
எனினும் உதடுகள் மட்டும் சகாராவாகிறது.
வாழ்ந்துகொண்டே சாகவும் முடிகிறது.
செத்துக்கொண்டே வாழவும் முடிகிறது.
ஆம். நானும் காதலிக்கத் துவங்கியிருக்கிறேன்,
கண்ணாடிக் கோப்பையில் நிறைந்து கொண்டிருக்கும் இந்த மதுவை.
சியர்ஸ் :)

(கொலைவெறியோடு முறைக்காமல் இந்த மொக்கையையும் பார்த்துவிடுங்கள் ;-) )

Monday, January 21, 2008

ஒரு முட்டையின் கதை – முழு நீள மொக்கைப் பதிவு!

மொக்கைப் போட தீவிரமாக சிந்திக்க வேண்டுமென்பதால் என்னால் மொக்கை போட முடியாதெனத் தெரிந்தும் என்னை ஒரு மொக்கைப் பதிவு எழுத அழைத்திருக்கிறார் பிரேம்குமார். புதிதாக எதுவும் யோசிக்க நேரம் இல்லாததால் பொங்கல் விடுமுறையில் என் அக்காவின் மூன்று வயது மகளுக்கு சொன்ன கதையை அவள் பேச்சோடு சேர்த்து அப்படியே இங்கே.

மாமா ஒரு கத சொல்லு மாமா

உனக்கு தான் எல்லாக் கதையும் தெரியும்னு அம்மா சொல்றாங்களே.

ஐயோ கத சொன்னாதான் நான் தூங்குவேன். நீ சொல்லு மாமா.

சரி என்ன கதை சொல்லட்டும்?

முட்டக் கத சொல்லு மாமா.

முட்டக் கதையா? சரி சொல்றேன். ஒரு ஊர்ல ஒரு பாட்டியும் பேரனும் இருந்தாங்களாம். பேரன் வேலை தேடி பட்டணத்துக்குப் போறதுக்காக பாட்டிகிட்ட காசு கேட்டானாம். பாட்டிகிட்ட காசே இல்லையாம். அதனால பாட்டி ஒரு வட்டிக்கடக்காரன்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கி பேரனுக்குக் கொடுத்தாங்களாம். பட்டணத்துக்குப் போன பேரன் ரொம்ப நாளாகியும் திரும்ப வரவேயில்லையாம். காசத் திருப்பிக் கொடுக்கலன்னு வட்டிக்கடக்காரன் வந்து பாட்டிகிட்ட கேட்டானாம். பேரம் திரும்பி வந்ததும் தர்றேன்னு பாட்டி சொன்னாங்களாம்; ஆனா வட்டிக் கடக்காரான் அதுக்கு ஒத்துக்கலையாம். சீக்கிரமா பணத்த திருப்பித் தரணும்னு சொல்லி மெரட்டிட்டுப் போயிட்டானாம்.

அப்புறம் ஒரு நாளு பாட்டி, கடைல முட்ட வாங்கிட்டு வந்து அஞ்சு முட்டைல நால ஒடச்சிட்டு அஞ்சாவது முட்டைய ஒடைக்கும்போது ஒரு அழுக சத்தம் கேட்டுச்சாம். என்னான்னு பாத்தா கைல இருந்த முட்டதான் அழுதுச்சாம். “பாட்டி பாட்டி என்ன ஒடைக்காத. நான் உன் கூடவே இருக்கேன். உனக்கு எல்லா உதவியும் பண்றேன்” அப்படினு சொன்னுச்சாம். பாட்டியும் பாவம்னு அந்த முட்டைய மட்டும் ஒடைக்காம விட்டுடுச்சாம். அன்னைக்கும் அந்த வட்டிக் கடக்காரன் வந்தானாம். பாட்டிகிட்ட காசு கேட்டு மெரட்டவும், பேரன் வந்ததும் கொடுத்துட்றேன்னு பாட்டி சொன்னாங்களாம். வட்டிக்கடக்காரனுக்குக் கோபம் வந்து பாட்டிய அடிச்சுட்டுப் போயிட்டானாம். பாட்டி அழுதுட்டே இருந்தாங்களாம். முட்ட வந்து பாட்டிகிட்ட “ஏன் பாட்டி அழறீங்க”னு கேட்டுச்சாம். இந்த மாதிரி வட்டிக்கடக்காரன்கிட்ட கடன் வாங்கி பேரனுக்குக் கொடுத்தேன். பேரன் இன்னும் வரவேயில்ல. வட்டிக்கடக்காரன் காசு கேட்டு என்ன அடிச்சுட்டுப் போறான்னு சொல்லி அழுதாங்களாம். “நீங்க அழாதீங்க பாட்டி நான் போய் வட்டிக்கடக்காரன என்னானு கேட்டுட்டு வர்றே”ன்னு சொல்லிட்டு முட்ட கெளம்பிடுச்சாம் வட்டிக்கடக்காரன் வீட்டுக்கு.

முட்ட போயிகிட்டு இருந்த வழியில ஒரு சிங்கம் வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
“காசு கொடுக்க சொல்லி என்னோட பாட்டிய அந்த வட்டிக்கடக்காரன் அடிச்சு மெரட்றான். அவனுக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கப் போயிகிட்டு இருக்கேன்”னு முட்ட சொல்லுச்சாம்.
“நானும் உன் கூட வரட்டுமா”னு சிங்கம் கேட்டுச்சாம்.
“சரி எம்பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.


கொஞ்ச தூரம் போனதும் ஒரு யானை வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
“காசு கொடுக்க சொல்லி என்னோட பாட்டிய அந்த வட்டிக்கடக்காரன் அடிச்சு மெரட்றான். அவனுக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கப் போயிகிட்டு இருக்கேன்”னு முட்ட சொல்லுச்சாம்.
“நானும் உன் கூட வரட்டுமா”னு யானை கேட்டுச்சாம்.
“சரி நீயும் எங்க பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.

இன்னும் கொஞ்ச தூரம் போனதும் ஒரு புலி வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
அதுக்கு முட்ட என்ன தங்கம் சொன்னுச்சு?


ம்ம்ம் அவன் காசு தர சொல்லி அடிக்கிறான்….


யாரு?


வட்டிக்கடக்காரந்தான்


யார அடிக்கிறான்?


அழுதுச்சுல்ல அந்தப் பாட்டிய…


ம்ம்ம் அப்புறம்?


அதனால அவனுக்கு பாடம் சொல்லித் தரப் போறேன்னு சொல்லுச்சாம்.


ம்ம்ம்ம் முட்ட அப்படி சொன்னதும்,
“நானும் உன் கூட வரட்டுமா”னு புலி கேட்டுச்சாம்.


“சரி நீயும் எங்க பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.
இப்போ முட்ட பின்னாடி யாரெல்லாம் வர்றாங்கனு சொல்லு…


சிங்கம்ம்ம்ம்... யானை...அப்பறம் புலி

ம்ம்ம்ம்… இன்னும் கொஞ்சம் தூரம் போனதும் ஒரு கழுதை வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
அதுக்கு முட்ட என்ன தங்கம் சொன்னுச்சு?


ம்ம்ம் பாட்டிய காசு தர சொல்லி வட்டிக்கடக்காரன் அடிக்கிறான்…. அவனுக்கு பாடம் சொல்லித் தரப் போறேன்னு சொல்லுச்சாம்.


ம்ம்ம்ம் முட்ட அப்படி சொன்னதும்,
“நானும் உங்க கூட வரட்டுமா”னு கழுதை கேட்டுச்சாம்.


“சரி நீயும் எங்க பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.
இப்போ முட்ட பின்னாடி யாரெல்லாம் வர்றாங்க?


சிங்கம்ம்ம்ம்... யானை... புலி... அப்பறம்... லயன்…


சிங்கம் தான் பாப்பா லயன்… கடசியா வந்த விலங்கு எது?


கழுதை.


ம்ம்ம் முட்ட பின்னாடி சிங்கம், யானை, புலி, கழுதை எல்லாம் போனாங்களாம்
( இன்னும்பாம்பு, தேள், பூரான் என்று கதையை நீட்டிக் கொண்டேன்)

முட்டையும் அப்பறம் எல்லா விலங்குகளும் வட்டிக்கடக்காரன் வீட்டுக்கு வரும்போது இருட்டாயிடுச்சாம். எல்லா விலங்குகளையும் ஒரு ஒரு எடத்துல போய் ஒளிஞ்சிக்க சொல்லுச்சாம் முட்டை.

சிங்கம் போய் வாசல்ல ஒளிஞ்சிக்கிச்சாம்.
யானை போய் வீட்டுக்குப் பின்னாடி ஒளிஞ்சிக்கிச்சாம்.
புலி போய் கட்டிலுக்கு அடியில ஒளிஞ்சிக்கிச்சாம்.
கழுதை போய் கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சிகிச்சாம்.
ஒலக்கை மேல பாம்பு உட்காந்துகிச்சாம்.

ஒலக்கைனா என்ன மாமா?

ஒலக்கைனா பெரிய குச்சி மாதிரி இருக்கும் பாப்பா. அம்மாச்சி வீட்ல உரல் இருந்துச்சுல்ல? அரிசிய அரைக்கனும்னா அதுல தான் அரிசியப் போட்டு ஒலக்கைல இடிப்பாங்க. பாட்டி ஊருக்குப் போகும்போது உனக்குக் காட்றேன் சரியா?

சரி மாமா.

அந்த ஒலக்கை மேல பாம்பு உட்காந்துகிச்சாம்.
கதவுக்குப் பின்னாடி கழுதை ஒளிஞ்சிகிச்சாம்.
தீப்பெட்டிகுள்ள தேள் ஒளிஞ்சிகிச்சாம்.
அடுப்புக்கு பக்கத்துல பூரான் ஒளிஞ்சிகிச்சாம்.

கட்டில்ல படுத்து வட்டிக்கடக்காரன் தூங்கிட்டு இருந்தானாம். இந்த முட்டை அவன் நெத்தி மேல ஏறி டிங்கு டிங்குனு ஆடுச்சாம். வட்டிக்கடக்காரன் முழிச்சுப் பாத்தானாம். முட்டை கீழ குதிச்சு ஆடிட்டு இருந்துச்சாம். வட்டிக்கடக்காரன் “ஏய் முட்ட. என் மேலயே வந்து குதிக்கிறியா? இப்பவே ஒன்ன ஒடைக்கப் போறேன்”னு மெரட்டுனானாம்.
“எங்க பாட்டியோட பேரன் வர்ற வரைக்கும் எங்க பாட்டிய நீ எதுவும் பண்ணக்கூடாதுனு ஒன்ன மெரட்டிட்டுப் போகதான் நான் வந்திருக்கேன்”னு முட்ட சொல்லுச்சாம். வட்டிக்கடக்காரனுக்கு கோபம் வந்து “இப்பவே உன்ன என்னப் பண்றேன் பாரு”னு சொல்லிகிட்டே கட்டில விட்டுக் கீழ எறங்குனானாம்.

கட்டிக்கு கீழ என்ன இருக்குதுனு சொன்னேன்?

புலி.

ம்ம்ம் அந்த புலி அவன் காலப் புடிச்சு கடிச்சுதாம். ஐயோ என்னமோ கடிக்குதே அத அடிக்கலாம்னு ஒலக்கைய எடுத்தானாம்.

ஒலக்கை மேல என்ன உட்காந்திருக்கு?

பாம்பு.

ம்ம்ம் அந்த பாம்பு அவன் கையிலேயே கொத்துச்சாம். ஐயோ அம்மா னு கத்திகிட்டே இருட்டா இருக்கிறதாலதான் நமக்கு ஒன்னும் தெரியல. வெளக்கப் பொருத்திப் பாக்கலாம்னு தீப்பெட்டியத் தெறந்தானாம்.

தீப்பெட்டிக்குள்ள என்ன இருக்கு?

தேளு.

ம்ம்ம் அந்த தேளும் அவன் கைலயே கொட்டுச்சாம். ஐயோ னு கத்திகிட்டே அடுப்பு நெருப்பு எடுக்கலாம்னு அடுப்புகிட்ட துழாவுனானாம்.

அடுப்புகிட்ட என்ன இருக்கு?

நெருப்பு.

அடுப்புக்குள்ள நெருப்பு இருக்குது பாப்பா. அடுப்புக்குப் பக்கத்துல எந்த விலங்கு போய் ஒளிஞ்சிகிச்சுனு சொன்னேன்?

பெருக்கான்.

அது பெருக்கான் இல்ல! பூரான். அந்த பூரானும் அவனக் கடிச்சுதாம். ஐயையோ இந்த வீட்டுக்குள்ள என்னென்னமோ புகுந்திடுச்சு. நாம கம்முனு ஒரு எடத்துல போயி ஒளிஞ்சிக்கலாம்னு சொல்லிட்டு கதவுக்குப் பின்னாடி ஒளியப் போனானாம்.

கதவுக்குப் பின்னாடி என்ன இருக்குது?

கழுதை.

ம்ம்ம்… அந்த கழுதை அவன ஓங்கி ஒரு உதை உதைச்சுதாம். வாசல்ல போய் விழுந்தானாம்.

வாசல்ல என்ன இருக்குது?

சிங்கம்.

ம்ம்ம்… சிங்கமும் அவனக் கடிச்சுதாம். அழுதுகிட்டே வீட்டுக்குப் பின்னாடி ஓடுனானாம்.

வீட்டுக்குப் பின்னாடி என்ன இருக்கு?

யானை.

ம்ம்ம்…. அந்த யானை தும்பிக்கைலையே அவனத் தூக்கிப் போட்டு மிதிக்கப் போச்சாம். அப்போ அங்க முட்டை வந்து அவன் கிட்டே “இனிமே எங்க பாட்டிய அடிப்பியா?”னு கேட்டுச்சாம். அதுக்கு அவன் “சத்தியமா இனிமே நான் பாட்டிய எதுவும் பண்ண மாட்டேன். பேரன் வந்த பின்னாடியே நான் காச வாங்கிக்கிறேன். என்ன மன்னிச்சிடுங்க”னு கெஞ்சுனானாம். முட்டையும் அவன மன்னிச்சிட்டு வந்திடுச்சாம்.

அப்பறம்?

அப்பறம்… அந்த வட்டிக்கடக்காரன் பாட்டிய அடிக்கவே இல்லையாம். பாட்டியும் முட்டையும் சந்தோசமா இருந்தாங்களாம்.

அப்பறம்?

அப்பறம் அவ்வளோதான் ஜனனி.

அந்த அனிமல்ஸ்லாம் எங்கப் போனாங்க?

அவங்களாம் காட்டுக்குப் போயிட்டாங்க…

போயி…

ஜனனி, இந்த கதை முடிஞ்சு போயிடுச்சு. அவ்வளவுதான்.

சரி மாமா. வேற கத சொல்லு மாமா.

வேற என்ன கதை?

ஹார்ஸ் கதை.

ஹார்ஸ் கதையா?

ம்ம்ம் பிங்க் கலர் ஹார்ஸ் கதை.

பிங்க் கலர் ஹார்ஸ் கதையா? அதெல்லாம் எனக்குத் தெரியாது ஜனனி.

இல்லனா ரெட் கலர் ஹார்ஸ் கதை சொல்லு மாமா.

அந்தக் கதையெல்லாம் எனக்குத் தெரியாது ஜனனி.

அப்பன்னா முட்டக் கதை சொல்லு மாமா.

இப்பதான முட்டக் கத சொன்னேன்.

பெரிய முட்டக் கத சொல்லு மாமா.

ஜனனி, மாமாவுக்குத் தெரிஞ்ச கதையெல்லாம் சொல்லிட்டேன். இனிமே நீதான் எனக்கு ஒரு கத சொல்லனும்.

(மிரட்டும் தொனியில்) வேற கத சொல்லு மாமா…

வேற கதையா? இரு சொல்றேன். ஹைதராபாத்ல உன்ன மாதிரியே ஒரு குட்டி பாப்பா இருந்துச்சு. அவங்க மாமா கிட்ட கத சொல்ல சொல்லி கேட்டுச்சாம். அவங்க மாமாவும் மூனு கத சொன்னாங்களாம். அப்பறமும் அந்த பாப்பா இன்னொரு கத சொல்லு மாமா இன்னொரு கத சொல்லு மாமா னு அடம் பண்ணிகிட்டே இருந்துச்சாம் பாரு, அந்த பாப்பாவுக்கு ஒரு அடி கொடுத்தாங்களாம் அவங்க மாமா. அந்தப் பாப்பா அதுக்கப்புறம் கதையே கேட்கலையாம். கம்முனு தூங்கிடுச்சாம்.

அப்பறம்?

அப்பறம்? கதை அவ்வளவுதான். உனக்கு இந்த கதை புரிஞ்சுதா இல்லையா ஜனனி?

புரிஞ்சுது மாமா. நீ வேற கத சொல்லு மாமா.

வேணாம் ஜனனி. அப்பறம் மாமா அழுதுடுவேன்!

-----

நான் அழைக்கும் மூவர் :

1. ஸ்ரீ
2. நாடோடி இலக்கியன்
3. தேவ்

-----

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, December 21, 2007

எவனா இருந்தா எனக்கென்ன?

தலைப்ப பார்த்ததும் யாரும் திட்ட வந்துடாதீங்க. பேர் வைக்கிறதுக்காக நம்ம மக்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க பாருங்க. காங்கேயம் பக்கத்துல ஒரு டீக்கடையோட பேரு ‘அடேங்கப்பா’ டீஸ்டால். ஒரு தடவை மதுரை போற வழியில ‘திடீர் உணவகம்’னு ஒரு கடை பார்த்தேன். ஹைதரபாத் வந்த பின்னாடி இந்த மாதிரி பேரெல்லாம் சாதாரணம்னு தோண ஆரம்பிச்சுடுச்சு. சென்னைல ஒரு டைடல் பார்க், பெங்களூருல ஒரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மாதிரி இங்க ‘ஹைடெக் சிட்டி’ னு ஒன்னு இருக்கு. அதோட தாக்கம் அதிகமாகி நெறைய இடங்கள் ல பார்த்தா ‘ஹைடெக் சலூன்’, ‘ஹைடெக் ரெஸ்டாரண்ட்’, ‘ஹைடெக் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ னு ஹைதராபாத்தே இப்போ ஹைடெக் மயமாகிட்டு வருது :). படத்துக்கு பேரு வைக்கிறதுலையும் இங்க ஒருத்தர் கலக்கறார். ‘இதுதாண்டா போலீஸ்’ புகழ் டாக்டர் ராஜசேகர் தான். ‘எவனா இருந்தா எனக்கென்ன?’ னு ஒரு படம் வந்து பட்டயக்/பயத்த கிளப்புச்சாம். சமீபத்துல கூட ‘உடம்பு எப்படியிருக்கு’னு ஒரு படம் வந்துச்சே! அப்புறம் ஹைதராபாத் பிரியாணிக்கு பேர் போன ஊருங்க… எந்தளவுக்குன்னா, இங்க ஒரு தெலுங்கு பண்பலைல ஒரு இரவு நிகழ்ச்சியோட பேரு – மிட்நைட் பிரியாணி :)

*

முன்னலாம் தெலுங்குப் படம் பார்த்தா நக்கல் பண்ணிட்டே பார்க்கிறதுக்கு நல்லாருக்கும். அதுக்காகவே வாரம் ஒரு படம்னு குறி வச்சு பாத்துட்டு இருந்தோம். ( ஆனா அதுவே பழக்கமாகி இப்போ என்னையே அறியாம தெலுங்குப் படத்த ரசிக்க ஆரம்பிச்சுட்டனோன்னு ஒரு பயம் வந்துடுச்சுங்கறது வேற விசயம் ) போன மாசம் விஜயதசமினு ஒரு படத்துக்கு நண்பன கூப்பிட்டப்போ அவன் வர முடியாதுனு சொல்லவும் சரி சிங்கம் சிங்கிளாதாண்டா போகும்னு நான் மட்டும் போய் அசிங்கமானதுதான் மிச்சம். அந்த போஸ்டர்ல அந்த ஹீரோ(?) பட்டாச சுத்தினப்பவே நான் புரிஞ்சிருக்கனும். அது ‘சிவகாசி’யோட ரீமேக். விஜய் படத்த எல்லாம் போஸ்டர்ல கூட பாக்கக்கூடாதுனு தீர்மானம் பண்ணி வச்சிருந்தவன, அத தெலுங்குல ரீமேக் பண்ணி தியேட்டர்ல வந்து பாக்க வச்சிட்டாங்க. அடுத்தவாரம் ஸ்டேட்ரவுடி னு ஒரு படம் வந்துச்சு. சரி பேர்லையே ஒரு டெரர் இருக்குதே, இது பக்கா தெலுங்குப் படமாதான் இருக்கும்னு நெனச்சு, தூக்கம் வருதுனு சொன்ன நண்பனையும் இழுத்துட்டுப் போனா அது நம்ம ‘எதிரி’யோட ரீமேக் :( விக்ரமாதித்யன் மாதிரி நானும் விடாம அடுத்த வாரமும் போனேனே டக்கரி னு ஒரு படத்துக்கு! படம் பேரே டக்கரா இருக்குதுல்ல? ஆனா பாருங்க அதுவும் நம்ம ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தோட ரீமேக். இவ்வளவு டேமேஜான பின்னாடியும் தெலுங்குப் படம் பாக்க போறதுக்குக் காரணம் ‘கோதாவரி’ புகழ் சேகர் கம்முலாவோட சமீபத்திய ‘ஹேப்பி டேஸ்’, சண்டை, தனி காமெடி ட்ராக் எதுவும் இல்லாம, வந்த சுமாரான திகில் படமான ‘மந்த்ரா’ மாதிரியான படங்கள் தான்!

*

கொஞ்ச நாள் முன்னாடி பெங்களூர்ல இருந்து சேலத்துக்குப் போறதுக்கு புதுசா விட்டிருக்கிற தமிழ்நாடு பேருந்துல ஏறினேன். காசு அதிகம் தான். சரி சீக்கிரம் கொண்டு போய் சேர்த்துடுவாங்கன்னு அதுல ஏறிட்டேன். ஓசூர் தாண்டறதுக்குள்ள 15 பேருந்து, 23 லாரி, கணக்கு வழக்கு இல்லாம காருங்கனு எங்க பேருந்த முந்திகிட்டு போய்கிட்டு இருக்கு. கண்டக்டர்கிட்ட கேட்டேன் 'அண்ணே 60 ரூவா கூட வாங்குறீங்களே கொஞ்சம் வேகமா போகக்கூடாதா? டவுன் பஸ்செல்லாம் முந்திகிட்டு போகுதே' அப்படின்னு. அவர் என்ன சொன்னார் தெரியுங்களா? 'தம்பி இது சொகுசுப் பேருந்து! விரைவு பேருந்து கிடையாது! நம்ம வண்டி சொகுசாதான் போகும். வேகமா எல்லாம் போகாது' னு சொல்லிட்டார். அதுக்கப்புறம் நான் எதுவும் பேசாம சன்னல்ல வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன் :(

*

அதேமாதிரி தீபாவளிக்கு ஊருக்குப் போகும்போது சேலத்துல இருந்து கரூர் பேருந்துல ஏறி, இடப்பக்கம் இருக்கிற ரெண்டு பேர் இருக்கைல தனியா உட்காந்திருந்தேன். கொஞ்சம் நேரம் கழிச்சு ஏறின ஒரு ஒன்பதாவது/பத்தாவது படிக்கிற பொண்ணும் அவங்க அம்மாவும், உட்கார இடமில்லாம பாத்துட்டே இருந்தாங்க. அந்த பொண்ணு தனியா உட்காந்திருந்த என்ன பார்த்து, பக்கத்து இருக்கைல மாறி உட்கார சொல்லிட்டா. எனக்கு ஒரே வருத்தமா போயிடுச்சு. இடம் மாறி உட்காரனுமேங்கறதுக்காக இல்ல; என்னை அந்த பொண்ணு அப்படி கூப்பிட்டதாலதான். அட ‘அண்ணா’ னு கூப்பிட்டிருந்தா கூட சந்தோசப் பட்டிருக்கலாம். ‘அங்கிள்’ னு கூப்பிட்டுட்டாளே. இந்த கண்ணாடிய கழட்டிட்டு ஆறு மாசத்துக்கு முன்னாடி வாங்கி தொடாமலே வச்சிருக்கிற காண்டெக்ட் லென்சதான் இனிமே போடனும்!

*

இப்போ இந்த மொக்கையெல்லாம் எதுக்குனு நீங்க கேட்க வர்றது புரியுது. கிருஸ்துமஸ் விடுமுறைக்காக இன்னைக்கு சென்னை கிளம்பறேன். (முடிந்தால் சென்னை நண்பர்களைச் சந்திக்கனும். தொடர்புக்கு - 09948645533) ஒரு நாலு நாள் வலைப்பக்கம் வர முடியுமான்னுத் தெரியல. அதான் சர்வேசன் போட்டியையும் அதுக்கு நான் எழுதின கதையையும் நினைவூட்டுவதற்காகதான் இந்த மொக்கைப் பதிவு :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, November 19, 2007

என்னாது? எனக்கு கூட ‘போலி’யா??? :-)

நம்ம பேர்ல வேற ஒருத்தர் எழுதினா அவர போலினு சொல்லலாம்
நாம எழுதினத, மத்தவங்க அவங்க பேர்ல எழுதினா அவங்கள என்னனு சொல்ல?

இது நான் எப்பவோ எழுதினது.

அதுல ஒரு பகுதி
இங்கே நாசர் என்பவர் பெயரில் இருக்கிறது

இதைப் போலவே என்னுடைய இன்னும் சில பதிவுகளும் அவர் பெயரில் அங்கே இருக்கின்றன.

நான் எழுதிய
காதல் கூடம் முதலான சில பதிவுகள், இந்த Forum –இல் காதலன் என்பவர் பெயரில் இருக்கின்றன. இங்கே உள்நுழைந்து பார்க்க முடியாததால் என் பக்கத்திற்கு லிங்க் எதுவும் கொடுத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. கொடுத்திருந்தால் நன்றி.

இதே போல ஆர்க்குட்டில் சில கவிதை குழுக்களில் நான் எழுதிய சில கவுஜைகளை மற்றவர்கள் பெயரில் பார்த்துவிட்டு, எழுதியவருக்கு மடலனுப்பினால் ரிப்லை இல்லை. ஸ்க்ராப் பண்ணினால் மிக வேகமாக அதனை டெலிட் செய்து விடுகிறார் :) இப்போது அலுவலகத்தில் ஆர்க்குட் தடை செய்யப்பட்டிருப்பதால் ஆர்க்குட் பக்கம் எட்டிப் பார்த்து மாதங்களாகிவிட்டது.

இப்படியெல்லாம் நடக்கிறதென்றுதான் நண்பன் ஒருவன் சொன்ன மாதிரி, கவிதைகளை எழுதி அனுப்பாமல், Paint –இல் பிக்சராக எழுதி ஒரு ஓரமாக நம்ம வலைப் பக்க முகவரியும் எழுதி
படங்களாக அனுப்பினேன். எங்கேப் போனாலும் நம்ம முகவரியும் கூடவேப் போகும் என்று ;-) ஆனால் அதையும் கில்லாடிகள், படத்தில் இருக்கும் வலைப்பக்க முகவரியை மட்டும் வெட்டிவிட முயற்சி செய்திருக்கிறார்கள். அதில் வலைப் பக்க முகவரியை வெட்டினால் கவிதை வரியும் கொஞ்சம் சேதாரமாகும் என்ற நிலையில் சில படங்களில் மட்டும் வெட்ட முடியாமல் போய் விட்டது என்று நினைக்கிறேன். முகவரியில்லாத கவிதைப் படங்கள் சில இங்கே



இப்பொழுதெல்லாம் எல்லாப் படத்திலும் குறுக்கும் நெடுக்குமாக வலைப்பக்க முகவரியோ, மின்னஞ்சல் முகவரியோ போட்டு விடுகிறேன். எனக்கே இது ஓவராகத்தான் தெரிகிறது :-) ஆனால் வேறு வழியில்லை.

இன்னொருவர் என் பதிவுகளுக்காக
தனியே ஒரு வலைப்பதிவே ஆரம்பித்துவிட்டார். கடைசி வரியில் மட்டும் இவர் பெயரைப் போட்டுக் கொண்டாலும் இவர் கொஞ்சம் நல்லவர். எல்லாப் பதிவுகளுக்கும் இரண்டு லிங்க் கொடுத்திருக்கிறார். ஒன்று இவர் பதிவுக்குப் போகும். இரண்டாவது என்னுடைய பதிவுக்கு வரும் :-)

புத்தகமாகப் போட்டால் தான் நாம் எழுதுவதற்கு எல்லாம் காப்பிரைட் கிடைக்குமோ??? மக்கா, நான் எழுதினத யாரும் எங்கேயும் எடுத்துப் போடக்கூடாதுனு எல்லாம் சொல்லல. அப்படி போடும்போது என்னோட பக்கத்துக்கும் ஒரு லின்க் கொடுத்திடுங்கனு மட்டும் தான் சொல்ல விரும்பறேன். நன்றி.


***

இன்னொரு Forum – இல் என்னுடைய கவிதையை சிறந்த காதல் கவிதையாக குறிப்பிட்டிருந்தார் வெங்கிராஜா என்பவர். அவருக்கு நன்றி. ஆனாலவருக்கு, நான் பெரிய கவிஞனாக இருப்பேனோ என்று என்னைப் பற்றி தவறான எண்ணமும் இருக்கிறது போல.
இங்கே தபூ சங்கரைப் பற்றி குறிப்பிடும்போது “இவர் அருட்பெருங்கோ என்ற துணைக்கவிஞரோடு இணைந்தும் கவி புனைவார்” என்று இருக்கிறது :-) அண்ணே, நான் தபூ சங்கர நேர்ல பாத்தது கூட கிடையாது :-) அவரோட சில புத்தகங்கள மட்டும் தான் வாசிச்சிருக்கேன்.

***

இந்தப் பதிவில் எதாவது கவுஜை எழுதியிருப்பேன் என்று நம்பி வந்தவர்கள் மன்னிக்கவும். புதன் கிழமையன்று கொஞ்சம் அழுகாச்சி கவுஜைகள் போடுகிறேன் ;-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, November 05, 2007

கல்யாண வீட்ல மொய் எழுதியிருக்கீங்களா?

முன்னலாம் கல்யாண வீடுகள்ல ஒவ்வொரு வேலையையும் செய்யறதுக்குனு சொந்தக்காரங்கள்ல சில நிபுணர்கள் இருப்பாங்க.

ஸ்டோர் ரூம் பாத்துக்கிறதுக்குனு ஒருத்தர் இருப்பார். சமையல் காரங்க சொன்ன அளவவிட கொஞ்சம் அதிகமாவேதான் நாம பொருட்கள் எல்லாம் வாங்கிப் போடுவோம். அத அளவா வேணுங்கும்போது மட்டும் கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணி கால்வாசிப் பொருட்கள மிச்சம் பண்ணி கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துடுவாங்க இந்த ஸ்டோர் கீப்பர்ஸ்.

அப்புறம் பந்தி பரிமாறுவதும் ஒரு கலை. வரிசையா ஒவ்வொரு ஐட்டமா வச்சிட்டுப் போறதுதானன்னு சாதாரணமா நெனச்சுட முடியாது. பந்தியில பொதுவா யாருமே என்ன வேணும்னு கேட்கிறதுக்கு தயங்குவாங்க. அவங்க முகக்குறிய வச்சே என்ன வேணும்னு கேட்டுப் பரிமாறுறதுல இருந்து, எவ்வளவு பேர் சாப்பிட்டாங்க, இன்னும் எவ்வளவு பேர் வருவாங்க, என்னென்ன ஐட்டம் தீந்து போச்சு, பத்தலன்னா ரெடி மேடா என்ன செய்யலாம்? இப்படி முடிவெடுக்கிற வல்லமை படைச்ச ஆளுங்க தான் இதுக்கெல்லாம் லாயக்கு.

அடுத்தது பந்தல், மேளம், போக்குவரத்து வசதி, லைட் செட், மேடை அலங்காரம் இப்படி அததுக்குனு இருக்கிற ஆளுங்களப் பிடிச்சி சேர்க்கிறதுக்கு நல்ல வெளிவட்டார தொடர்பு இருக்கிற ஆளு வேணும். கடைசி நேரத்துல எது வேணும்னாலும் இவருகிட்ட சொன்னா போதும் எங்க இருந்தோ, எப்படினோ தெரியாது ஆனா கேட்டது கிடைச்சிடும். எப்பவும் கல்யாணம் முடிஞ்சு மண்டபத்த விட்டு கடைசியா போற ஆளு இவராத்தான் இருப்பாரு.

ஆனா இப்போ இந்த மாதிரி எல்லா வேலைகளையும் அவுட்சோர்சிங் பண்ணிடறாங்க. சமையல் + பரிமாற ஒரே காண்ட்ராக்ட். யூனிஃபார்ம போட்டுகிட்டு அவங்களும் மெசின் மாதிரி வேலைய முடிச்சிட்றாங்க. அப்புறம் மண்டபம் + மேடை + பந்தல் எல்லாம் ஒரே கணக்கில் வந்துடுது. எதுக்கும் பெரிசா அலைய வேண்டியதில்லை. ஆனா எல்லா வேலையும் இப்படி அவுட்சோர்சிங்க்ல போனாலும் இன்னமும் சொந்தக்காரங்களே பாத்துக்கிட்டு இருக்கிற வேலை இந்த மொய்யெழுதுறது மட்டும்தான். பண விசயமாச்சே... நம்மாளுங்க உசாராத்தான் இருப்பாங்க :)

தாலி கட்டின அடுத்த நொடியே மண்டப வாசல்ல ரெண்டு பக்கமும் ஆளுக்கு ஒரு டேபிள் சேர இழுத்துப் போட்டு மாப்பிள்ளை & பொண்ணு வீட்டு ஆளுங்க உக்காந்துடுவாங்க. பொண்ணு வீட்டு மொய், மாப்பிள்ள வீட்டு மொய் ரெண்டும் கலந்துடக் கூடாதுனு கொஞ்சம் உசாரா எதிர் கோஷ்டி பக்கம் போற ஆளுங்கள நோட் பண்ணிகிட்டே இருக்கனும். நாற்பது பக்க நோட்டெல்லாம் போய் இப்போ அர குயர் நோட்டு வந்துடுச்சு. ஒரு ஆள், பெயர் + தொகை எழுதிகிட்டே வர இன்னொரு ஆள் பணத்த வாங்கி ஒரு மஞ்ச பைக்குள்ள போட்டுக்குவாரு.(இந்த மஞ்ச பை எப்போதான் மறையும்?) எங்க வீட்டு விசேசங்கள்ல எப்பவும் எல்லா வேலைகள்லையும் கை வச்சிட்டாலும் இந்த மொய்யெழுதுற வேலைல இப்போ கடசியா ரெண்டு மூனு கல்யாணத்துலதான் உக்காந்தேன். எனக்கு இருக்கிற பயம் என்னன்னா என்னோட கையெழுத்து பதினாலு கோழி சேந்து கிறுக்கின மாதிரியே இருக்கும். அத அந்த மொய்நோட்டுல காலத்தால் அழியாச்சின்னமா வைக்கனுமாங்கறதுதான். ஆனா பழைய மொய் நோட்டுகளப் பாத்த பின்னாடி என் கையெழுத்து எனக்கே அழகா தெரிஞ்சது. அப்புறம் துணிச்சலா உக்காந்தாச்சு. இப்ப போன மாசம் தங்கச்சி (சித்தப்பா பொண்ணு) கல்யாணத்துல மொய் எழுத உக்காந்தப்ப அத ஒரு பதிவா போடுவேன்னு நெனைக்கல ;-)

மொத பேரு எழுதும்போதே கஷ்டமாப் போச்சு. பேர ஏழுமலை னு சொன்னா எனக்கு ஏழுமலைனு எழுத வர மாட்டேங்குது. Ezumalai னு எழுதப் போறேன். மொத பக்கம் ஒரு இருபது பேர் எழுதின பின்னாடிதான் தமிழ் கொஞ்சம் தானா வர ஆரம்பிச்சுது. இனிமே அப்பப்போ தமிழ்ல பேனா எடுத்து எழுதனும்.

ஆனா கிராமத்து ஆளுங்க இன்னமும் தமிழோடதான் இருக்காங்க. பேர் சொல்லும்போது ஒருத்தர் ஆவன்னா திருஞானம் னு சொன்னார். நானும் 'ஆவன்னா திருஞானம்'னே தான் எழுதினேன். அவரு தம்பி ஆவன்னா தலையெழுத்துப்பா ன்னாரு. தலையெழுத்தா? இவருக்கு தலையெழுத்து கூட தெரிஞ்சிருக்குமோனு பாத்தா இனிசியல தான் தலையெழுத்துனு சொல்றாருனு புரிஞ்சது. அப்புறம் அவர் பேர ஆ. திருஞானம்னு ஒழுங்கா எழுதியாச்சு. தலையெழுத்த அதாங்க இனிசியல இன்னமும் தமிழ்ல சொல்ற ஆளுங்களும் இருக்காங்க.

இன்னொருத்தர் பேர சொல்லிட்டு 'முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்'னு அடுப்புக்குள்ள போடுங்கன்னாரு. எந்த அடுப்புக்குள்ள போட்றதுன்னு நான் முழிக்க, அவர் திரும்ப திரும்ப அடுப்புக்குள்ள போடுங்க அடுப்புக்குள்ள போடுங்கன்னே சொல்லிட்டு இருந்தாரு. எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது அவர் அடப்புக்குள்ள ( இந்த மாதிரி அடைப்புக்குறிக்குள்ள:-) ) போட சொல்றாருன்னு. நாந்தான் இன்னும் ப்ராக்கெட்டுக்குள்ள போட்டுட்டு இருக்கேன் :(

இன்னொரு பாட்டி வந்தாங்க. 'யாரு சின்னபுள்ளயோட சின்ன மவனா? நல்லாருக்கியா கண்ணு'னு கேட்டுட்டு சுருக்குப் பையில இருந்து பணத்த எடுத்து கொடுத்துட்டு தாத்தா பேர்ல எழுதீருனு சொல்லிட்டாங்க. நான் காலேஜ் சேந்த பின்னாடி எங்க வீட்டுக்குப் போறதே எப்போவாதுதான். சொந்த கிராமத்துக்குப் போய் பல வருசமாச்சு. சொந்தக்காரங்க பேரு, உறவுமுறையெல்லாம் அம்மாகிட்ட அடிக்கடி கேட்டுதான் ரெப்ரஷ் பண்ணிக்குவேன். இவங்களே எந்த பாட்டி, அம்மா வழி சொந்தமா, அப்பா வழி சொந்தமானு ஒன்னும் புரியல. இதுல தாத்தா பேருக்கு நான் எங்க போறது? தாத்தா பேரு என்னனு அவங்க கிட்டவே கேட்கிறதுக்கும் தயக்கமா இருந்துச்சு. எப்பவும் ஒரு மூலைல அமைதியா இருந்தாலும் அப்பப்போ என் மூளையும் வேலை செய்யும். 'தாத்தாவோட முழுப் பேரு (என்னமோ பாதிப் பேரு எனக்குத் தெரிஞ்சுட்ட மாதிரி) என்னம்மாயி?' னு கேட்டேன். (அந்த பாட்டி எனக்கு அம்மாயி முறையா அப்பாயி முறையானும் தெரியல) நல்லவேளை பாட்டிக்குத் துணையா வந்த ஒரு அக்கா தாத்தாவோட முழுப் பேர சொல்லிக் காப்பாத்திட்டாங்க. அப்புறம் ஊர்ப்பேரயும் நான் கேட்டதும் 'ஒம் பேரன் ஊர் பேரு கூட தெரியாத மாதிரி கேக்குது பாரு'னு சொல்லி சிரிச்சுட்டு அந்த அக்காவும் கைவிரிச்சுட்டுப் போய்ட்டாங்க. எனக்கும் ஒரு வழியும் தெரியல. தாத்தா பேருக்கு முன்னாடி அம்மா சொந்த ஊரையும், பின்னாடி அப்பா சொந்த ஊரையும் போட்டுட்டேன். ரெண்டுல ஒரு ஊராதான் கண்டிப்பா இருக்கும் :-)

அப்புறம் ஒருத்தர் வந்தாரு. 'பொனாசிப்பட்டி நரசிங்கபுரம் வடக்குத் தோட்டம் சொக்காஞா பெரிய மவ வூட்டுப் பேரன், கான்னா ராமலிங்கம், தாய் மாமன் பணமாக எழுதிக்கொண்டது...' னு ஒரு தொடர்கதை எழுதற மாதிரி சொல்லிக்கிட்டே போறாரே ஒழிய நிறுத்தமாட்டேங்கறாரு. அவரு பேர எழுதுறதுக்கே தனியா மொய் வசூலிச்சிருக்கனும்.

அப்புறம் இப்போ புதுசா இன்னொன்னு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பணத்த ஒரு கவருக்குள்ள போட்டு வெளிய ஊரு பேரு எல்லாம் தெளிவா எழுதிக் கொடுத்துட்றாங்க. நமக்கும் அது வசதிதான். ஆனா என்ன... உள்ள பணம் இருக்குதான்னு கொஞ்சம் பாத்துக்கனும் :-) அப்படிதான் ஒருத்தரு வந்தாரு கையில ஒரு ஏழு கவரோட. தம்பி அமவுண்ட் கரெக்டா இருக்கானு பாத்துக்கப்பானு பக்கத்துலையே நின்னுட்டாரு. கவருக்கு வெளிய குறிச்சிருந்த தொகையும் உள்ள இருக்கிற பணமும் சரியா இருக்கானு ஏழு கவர்லையும் சரி பாத்துட்டு சரியா இருக்குண்ணே னு சொன்னேன். போகும்போது கேட்டாரு. இது மாப்பிள்ள வீட்டு மொய் தான னு. அத மொதல்லையே கேட்டிருக்கலாம்ல? 'இது பொண்ணு வீட்டு மொய்ணே மாப்பிள்ள வீட்டு மொய் அந்தப்பக்கம்'னு சொல்லி அனுப்பிட்டேன். அவர் கிட்ட ஆமான்னு சொல்லியிருந்தா சித்தப்புக்கு ஒரு அமவுண்ட் லாபம் தான் ;-)ஆனா விட்டுட்டேன்...

இதனால நான் சொல்ல வர்றது என்னன்னா அடுத்த முறை சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனா மொய் வைக்கிறீங்களோ இல்லையோ மொய் எழுதுங்க, இந்த மாதிரி ஒரு மொக்கப் பதிவு போடறதுக்காகவாவது பயன்படும் :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, August 06, 2007

ப்ரெண்டுங்க டே

அஞ்சாப்பு படிக்கும்போது
பென்சில் இல்லாதவங்கள
திலகா டீச்சர் முட்டிப் போட சொல்ல…
என்னோட பெரிய பென்சில
பாதியா ஒடச்சு ஒனக்கு கொடுத்ததுல
எம்பென்சில் சிறுசாப்போச்சு…

இங்கிலீசு பரிட்சையில
உனக்கும் காமிச்சக் குத்தத்துக்கு
என்னோட மார்க்கதான் பாதியாக்கிட்டாரு
காளிமுத்து வாத்தியாரு…

காலேஜ்ல தம்மடிக்கும்போதும்
ஆளுக்கொரு “பஃப்” னு
நீயும் சேர்ந்து இழுத்ததுல
ஒவ்வொரு தடவையும் பாதி ‘தம்மு’தான்…

நீ வராதப்ப உனக்கு ப்ராக்ஸி போட்டு மாட்டினதுல
HOD க்ளாஸ்ல என்னோட attendance தான் 50% ஆச்சு…

ஆம்லேட்டோ, ஆஃப் பாயிலோ
‘ருசி’ பார்க்கிறேன்னு
எந்தட்டுல நீ கைய வச்சா
எனக்கு மிஞ்சறது பாதிதான்…

Hostel TV Hall - ல்ல
Star movies க்கு நீயும் KTV க்கு நானும் சேனல மாத்தி மாத்தி
நாம பாத்த படமெல்லாம் பாதிபாதிதான்…

இப்படி TASMAC சரக்குல இருந்து சொந்த கத சோகம் வரைக்கும்
உன்னோட பகுந்துக்கிட்டா எல்லாத்தையும் பாதியாக்குற…
சந்தோசத்த மட்டும் எப்பட்றா மச்சான் ரெண்டு மடங்காக்கற?

( இது கவிதையெல்லாம் அல்ல... என்னுடைய பள்ளி, கல்லூரி கால நண்பர்களுக்கு நான் அனுப்பிய மொக்கை மெசேஜ்… ஒரு காதல் பாட்டு வேணும்னா இங்க கிடைக்கும்)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Sunday, July 22, 2007

உலகிலேயே மிகப்பெரிய சிறுகதை :)

...உலகத்துல எத்தனையோ கண்டம் இருக்கு. அதுல ரொம்பப் பெருசு நம்ம ஆசியாக்கண்டம்தான் அப்படிங்கறதும் சில அறிவுஜீவிகளுக்குத் தெரிஞ்சிருக்கும். அந்தப் பெரிய கண்டத்துல பல நாடுக இருந்தாலும் இந்தியாவ மட்டும்தான் துணைக்கண்டம்னு சொல்லுவாங்களாம். அதுல பல மொழிகள் பேசப்பட்டாலும் ரொம்பப் பழமையான மொழிகள்ல இந்தத் தமிழும் ஒன்னு. பழசா இருக்கிற அளவுக்கு அது புதுசாவும் இருக்குனு சொல்லுவாங்க.(பதிவு சரியான மொக்கையா இருக்கேன்னு இதோட நீங்கப் போயிட்டா அதுவும் இந்தப் பதிவோட வெற்றி தான்;)) புதுசாவும் இருக்கிறதுக்கு கணினி உலகத்துலயும் அது கோலோச்சிக்கிட்டு இருக்கிறதுதான் காரணம். அதுலயும் இந்த வலைப்பதிவுகள்லயும் அது புகுந்து விளளயாடிட்டு இருக்கு. வெளியூர் வந்து பொட்டி தட்டுற நெறைய தமிழ் ஆளுங்க பொழுதுபோக்கா இல்ல பொழப்பாவே வலைப்பதிவுகள் எழுதுறாங்களாம். அப்படியிருக்கிற தமிழ்வலைப்பதிவுகள்ல பல அறிவிக்கப்படாத சங்கம் / அறிவிக்கப்பட்ட சங்கம் எல்லாம் இருந்தாலும் இந்த வ.வா.சங்கம்னு ஒன்னு எல்லாரையும் சிரிக்க வச்சிட்டு இருக்கு. அதுல வேலையில்லாத வெவசாயி ஒருத்தர் மொக்கைப் பதிவு எழுதறதுக்குஒரு போட்டி வச்சிருக்கார். அதுல மொக்கைப் போட்றதயே முழுநேரத் தொழிலா நடத்திட்டு இருக்கிற செந்தழல் ரவி, நாமக்கல் சிபி மாதிரியான ஆட்கள் எல்லாம் களத்துல இருக்கும்போது அப்பப்போ கவிதைங்கற பேர்ல மொக்கைப் போட்டுட்டு இருக்கிற அருட்பெருங்கோங்கற ஆசாமிக்கும் ஒரு மொக்கைக் கதை எழுதனும்னு ஆசை வந்து எழுதியும் போட்டுட்டார். அவர் எழுதினக் கதை இதுதான் : "பரந்து விரிந்த இந்த ...."

(கதையின் தொடர்ச்சிக்கு மறுபடியும் இந்தப் பதிவின் முதல் வரிக்கு செல்லவும் )




இது வ.வா.சங்கம் அறிவித்திருக்கும் மொக்கைப் பதிவுகள் போட்டிக்கு எழுதப்பட்டது. உண்மையிலேயே சிறுகதை எதிர்பார்த்து வந்தவர்கள் மன்னிக்கவும் ;)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, January 30, 2007

அழகிய தமிழ்மகன் - ஒரு விளம்பரப் ப(ப்ப)டம்

இரண்டு படங்களுக்கும் 6 வித்தியாசங்கள் எல்லாம் இல்லை... ஒன்றே ஒன்றுதான்! :-)






















அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Monday, January 29, 2007

"அது"

கொஞ்ச நாட்களாகவே,
எனக்குப் பசிக்கிறது.
சாப்பிடலாம் போலத் தோன்றுகிறது.
ஆனால் சாப்பிட முடிவதில்லை…
( திரைப்பட வசனம் போல இருந்தாலும் இது நூற்றுக்கு நூறு உண்மை…
நம் வலைப்பதிவர்களிலேயே பல அனுபவசாலிகள் இருப்பார்கள்…
அவர்களைக் கேட்டுப் பார்த்தால் தெரியும்)

அசதியாக இருக்கிறது.
தூங்கலாம் போலத் தோன்றுகிறது.
ஆனால் தூக்கம் வருவதில்லை…
புரண்டு புரண்டு படுத்தாலும்
வயிற்றுக்குள் நூறு பட்டாம்பூச்சிகள்

( பட்டாம்பூச்சி மட்டும் இல்லை, குருவி, புறா, மயில் எல்லாமே)
சிறகடித்துப் பறக்கிற மாதிரி
ஓர் உணர்வுதான் வருகிறதே ஒழிய தூங்க முடிவதில்லை!

ஆஹா…
ஒரு வேளை நமக்கும் “அது” வந்து விட்டதோ என்று
மனசாட்சியை எழுப்பிக் கேட்டால்,
அது மர்மமாக ஒரு புன்னகைப் பூக்கிறது!

என்னடா இது கொடுமை,
+2, கல்லூரியில் படிக்கிற வயதில்தானே
“இது” நிறைய பேருக்கு வரும்…
நமக்கு அப்பொழுதெல்லாம் வராமல்,
இப்பொழுது 4 கழுதை வயதாகிறதே…
இப்பொழுது போய் வந்திருக்கிறதே
என்று விசாரித்துப் பார்த்தால்,

மனதில் ஒரு கட்டுப்பாடு இல்லையென்றால்
“இது” எப்பொழுது வேண்டுமானாலும்,

யாருக்கு வேண்டுமானாலும் வருமாம்….

ஆம் நண்பர்களே எனக்கும் “அது” வந்து விட்டது! :-(

அதனால் நீங்களும் காரமான உணவு, எண்ணெயில் பொரித்தவை என்று மனதையும் நாவையும் அலையவிடாமல் ஒரு (உணவுக்) கட்டுப்பாட்டோடு இருந்து “அது” ( அதாங்க “அல்சர்” ) வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்யவே இந்தப் பதிவு!

அழியாத அன்புடன்,

அருட்பெருங்கோ.

Monday, December 19, 2005

மேலும் சில த(பி)த்துவங்கள்!

1.குவார்ட்டர் அடிச்சுட்டுக் குப்புறப் படுக்கலாம் - ஆனா
குப்புறப் படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது!

2.நாய் வாலை ஆட்டலாம் - ஆனா
வால் நாயை ஆட்ட முடியாது!

3. Trainக்கு டிக்கட் வாங்கிட்டு Platformல உட்காரலாம் - ஆனா
Platformக்கு டிக்கட் வாங்கிட்டு Trainல உட்கார முடியாது!

4. காக்கா என்னதான் கறுப்பா இருந்தாலும் அது போடற முட்டை வெள்ளை! - அதோட
முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்க காக்கா கறுப்புதான்!

5.வாயால மூச்சு விட முடியும் - ஆனா
மூக்கால தண்ணிக் குடிக்க முடியுமா?

வாழ்க்கைத் தத்துவம் :

நீ எவ்வளவு பெரிய Dancer-ஆ இருந்தாலும்
உன் சாவுக்கு உன்னால ஆட முடியாது!

(நன்றி : மின்மடலில் அனுப்பிய நண்பருக்கும் அவருக்கனுப்பிய முகம் தெரியாத நண்பருக்கும்)

(தமிங்கிலத்தில் பதிந்ததற்கு மன்னிக்க!)

Monday, November 14, 2005

சமையல்!

தமிழ்மணத்துல பதியணும்னா மூணு பதிவு போட்டிருக்கனுமாமே!!

என்ன எழுதலாம்னு (மர)மண்டையக் குடைஞ்சு யோசிச்சதுல சரி நம்மள பல பேர் பல சமயத்துலப் பாராட்டின சமையல் குறிப்பையே எழுதிடுவோம்னு முடிவு பண்ணி இத எழுதியிருக்கேன்! படிக்கிறதோட நிறுத்திடாம உடனே இந்த சமையலப் பண்ணிப் பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லுங்க!

1.அடுப்பைப் பற்ற வைத்துக்கொள்ளவும்.
2.அகலமானப் பாத்திரத்தில் தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து விடவும்.
3.சரியாக 26 நிமிடம் 17 நொடியில் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
4.மறக்காமல் அடுப்பை அணைத்து விடவும்.

இப்பொழுது சூடான வெந்நீர் தயார்!

பயன்கள் :

1. சரியான அளவுத் தண்ணீரோடு கலந்து கொண்டால் அதிகாலையில் குளிப்பதற்கேற்ற வெதுவெதுப்பான வெந்நீராகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
2. 47 நிமிடம் 35 வினாடி ஆறவைத்து விட்டால் நோயாளிகளுக்கேற்ற குடிநீராகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
3. அதே சூட்டில் ஒரு துணிமுடிச்சை முக்கி எடுத்துக் கொண்டால் உதைபட்ட நண்பனுக்கு ஒத்தடம் கொடுக்க உதவும்.

செய்முறையில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ/விளக்கம் தேவைப்பட்டாலோ கேட்பதற்குத் தயங்க வேண்டாம்!

சந்திப்போம்!