Monday, June 26, 2006

ஒரு காதல் பயணம் - 4

காதல் பயணம் பகுதி ஒன்று இரண்டு மூன்று

உனக்குக் கல் நெஞ்சு என்று
எனக்குத் தெரியுமடி!
அதனால்தான் அதில்
காதல் சிற்பம் வடிக்க
கவிதை உளி கொண்டு
செதுக்குகிறேன் தினமும்!


ஒரு மாலைப்பொழுதில் நீ வரச் சொன்ன அந்த மரத்தடியில் உனக்காகக் காத்திருக்கிறேன்.
காத்திருக்கும் நேரத்தின் அவஸ்தை எல்லாம் பரவசமாக மாறும் அந்த கணத்தில் நீ வருகிறாய்.

நாம் அமர்வதற்காக தனது வேர்களை இருக்கைகளாக்கி இருக்கிறது, அந்த மரம்.
எதிர் எதிரில் அமர்கிறோம் நாம்.
இரு கைகளாலும் அணைக்கிறது மரம்.

எப்போதுமில்லாத என் மௌனத்தில் கலவரமடைந்து, “ம்..சொல்லுங்க” என மௌனக் குளத்தில் வார்த்தைக் கல் வீசுகிறாய்.
“இன்றைக்கு சொல்லப் போவதெல்லாம் நீ தான்; கேட்டுக்கொண்டிருக்கப் போவது மட்டும்தான் நான்” என்கிறேன்.

“நான் என்ன சொல்ல வேண்டும்?” புரியாமல் கேட்கிறாய் நீ.
“உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என நீ வரிசையாய் சொல்ல வேண்டும்; எல்லாவற்றுக்கும் நான் ‘உம்’ கொட்ட வேண்டும்
– இது தான் இன்றைக்கு காதல் நமக்குக் கொடுத்திருக்கிற வீட்டுப்பாடம்” என்கிறேன்.

“எனக்காக நீங்க என்ன வேணா செய்வீங்க இல்ல?”
“முதலில் அந்த “நீங்க”-வில் இருந்து “ங்க”-வை எடுத்துட்டுக் கேள், சொல்றேன்!”
“சரி…சரி…எனக்காக நீ என்ன வேணா செய்வதான?”
“இன்னைக்கு உன்னோட வீட்டுப் பாடத்தத் தவிர மத்தது எல்லாம் செய்வேன்!”
இதை நீயும் எதிர் பார்த்திருப்பாய்; சிரித்து விட்டு ஆரம்பிக்கிறாய்.

“அம்மா மடியில் படுத்துக் கிடக்க…
அப்பா சட்டையைப் போட்டுப் பார்க்க…
தங்கையோடு சண்டை பிடிக்க…”

“ம்”

“அப்புறம்…
ஜன்னலுக்கு வெளியே மழை…கையில் சூடாகத் தேநீர்…
மழை முடிந்த மண்வாசம்…அந்த ஈரக் காற்று…
வானவில்…
இளஞ்சூடான மாலை வெயில்…
அந்தி வானம்…
பௌர்ணமி நிலா…
கூட்டமாய் நட்சத்திரம்…
புதிதாய்ப் பூத்தப் பூ…
இப்படி இயற்கை தரும் எல்லாம்…

அப்புறம்…
தோழிகளோடு மொட்டை மாடி அரட்டை…
சன்னலோர ரயில் பயணம் – கையில் கவிதைப் புத்தகம்…
அதிகாலை உறக்கம்…மெல்லிய சத்தத்தில் சுப்ரபாதம்…
வீட்டில் எப்போதும் இழையும் இளையராஜா…
குழந்தைகளின் கொஞ்சல்…
மலைப் பாதையில் நடை…
மார்கழி மாதக் கோலம்…
எங்க ஊர்த் திருவிழா…
வாய்க்கால் நீச்சல்…
அருவிக் குளியல்…
மரத்தடி ஊஞ்சல்…

இப்படிப் போய்க்கிட்டே இருக்கும்….”

வாய்ப்பாடு ஒப்பிக்கும் பள்ளிக்கூட சிறுமி போல,
மூச்சு விடாமல் சொல்லி முடிக்கிறாய்.

“ஆமாம் உனக்கு என்னப் பிடிக்கும்?”, என்னைப் பார்த்துக் கேட்கிறாய்.
“அதான் நீயே சொல்லிட்டியே!”, மெதுவாக சொல்கிறேன் நான்.

“ஓ! எனக்குப் பிடிச்சதெல்லாம் உனக்கும் பிடிக்குமா?”
“நான் அத சொல்லல…நீ என்னக் கேட்டனு திரும்பவும் கேளு!”

“உனக்கு என்னப் பிடிக்கும்னு கேட்டேன்”
“நானும் அதையேதான் சொல்றேன் – எனக்கு உன்னப் பிடிக்கும்னு”

“இப்படியேப் பேசுனா சீக்கிரமே உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்!”
“அது இன்னும் எனக்குப் பிடிக்கலன்னு நினைக்கிறியா?”

“ஐய்யோக் கடவுளே! நான் சீரியஸா கேட்கிறேன், சொல்லு உனக்கு என்னப் பிடிக்கும்?”

“எனக்கு ஒன்னே ஒன்னு தான் பிடிக்கும். என்னோடக் காதலிக்கு பிடிச்சதையெல்லாம்
அவள் வாயாலேயே சொல்ல சொல்லக் கேட்டுக் கொண்டிருக்கப் பிடிக்கும்!”

வெட்கத்தைக் கொஞ்ச நேரம் தள்ளிவைத்துவிட்டு என்னை அப்படியேக் கட்டிக் கொள்கிறாய்,
ஒரு குழந்தையைப் போல.

கரைந்து போகிறேன் நான்.
அந்த மரத்தில் இருந்து கொஞ்சம் பூக்கள் நம்மீது விழுந்ததே - அது இயல்பாய் நடந்தது தானா?

(காதல் பயணம் தொடரும்...)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

12 comments:

  1. ஆகா!காதல் உங்களை அழகாக எழுதவைக்கிறது அன்பரே!

    படிக்க படிக்க அப்படியே மரத்தடியில் நான் அமர்ந்துவிட்டேன் என்னவளுடன் :)

    இன்னும் காதல் பயணம் வாருங்கள்!

    ReplyDelete
  2. நல்லா இருக்கு.
    இருந்தாலும் இப்படி அநியாத்துக்கு பீல் பண்ணுற

    ReplyDelete
  3. //இப்படியேப் பேசுனா சீக்கிரமே உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்!//

    :))

    ReplyDelete
  4. அருள் உங்கள் இந்த பதிவு படித்ததும் எனக்கு என் பதிவு ஒன்று மனதில் வந்தது.நானும் இப்படி மரத்தடியில் சந்திக்க என் காதலிக்கு கடிதம் வரைந்திருக்கிறேன்.படிக்க : பிதற்றல் கடிதம்

    ReplyDelete
  5. ப்ரியன்,

    /ஆகா!காதல் உங்களை அழகாக எழுதவைக்கிறது அன்பரே!/

    உங்களுக்கும் காதலுக்கும் நன்றிகள்!!!

    /படிக்க படிக்க அப்படியே மரத்தடியில் நான் அமர்ந்துவிட்டேன் என்னவளுடன் :) /

    ம்ம்ம்...ம்ம்ம்..

    /இன்னும் காதல் பயணம் வாருங்கள்! /

    கண்டிப்பாக...

    ReplyDelete
  6. நாகை சிவா,

    /நல்லா இருக்கு./
    நன்றிகள்...

    /இருந்தாலும் இப்படி அநியாத்துக்கு பீல் பண்ணுற/

    என்னப் பண்றது பொழுது போகணுமே...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  7. நவீன்,

    ///இப்படியேப் பேசுனா சீக்கிரமே உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்!//

    :)) /

    அங்கே சொன்னதுதான் -> இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை என்றா நினைக்கிறீர்கள்??

    ReplyDelete
  8. ப்ரியன்,

    /அருள் உங்கள் இந்த பதிவு படித்ததும் எனக்கு என் பதிவு ஒன்று மனதில் வந்தது.நானும் இப்படி மரத்தடியில் சந்திக்க என் காதலிக்கு கடிதம் வரைந்திருக்கிறேன்./

    மரத்தடி தானா எல்லாக் காதலர்க்கும் சந்திக்கும் இடம்??
    முக்தியடைந்தால் சரி! :)

    தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் உங்கள் கவிதையும் அருமை ப்ரியன்...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  9. //
    அந்த மரத்தில் இருந்து கொஞ்சம் பூக்கள் நம்மீது விழுந்ததே - அது இயல்பாய் நடந்தது தானா?
    //

    இப்படி காதல் செய்தால் மரம் உருகாதா என்ன?

    பயணம் அருமை.

    எல்லாரும் பயணம் முடிந்ததும் இளைப்பாருவார்கள். ஆனால் நாங்கள் உங்கள் பயணத்தில் தான் இளைப்பாருகிறோம்.

    ப்ரியமுடன்,
    மணி.

    ReplyDelete
  10. மணி

    /எல்லாரும் பயணம் முடிந்ததும் இளைப்பாருவார்கள். ஆனால் நாங்கள் உங்கள் பயணத்தில் தான் இளைப்பாருகிறோம்./

    தொடர்ந்து என்னோடு பயணிப்பதற்கு நன்றிகள்!!!

    அன்புடன்,
    அருள்

    ReplyDelete
  11. "
    “உனக்கு என்னப் பிடிக்கும்னு கேட்டேன்”
    “நானும் அதையேதான் சொல்றேன் – எனக்கு உன்னப் பிடிக்கும்னு”

    “இப்படியேப் பேசுனா சீக்கிரமே உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்!”
    “அது இன்னும் எனக்குப் பிடிக்கலன்னு நினைக்கிறியா?”..........

    இதிலென்ன சந்தேகம். பைத்தியம் பிடிச்சுத்தான் போச்சு. ஆனாலும் அது காதல் பைத்தியம் தானே? அது ஓர் அன்பு கலந்த ஆழமான நேசிப்புத் தானே? ஆகவே இது வரவேற்கத்தக்க பைத்தியம்தான்...

    உங்கள் காதல் பயணம் அருமை அருள்! தொடரட்டும் உங்கள் காதல் பயணம்.......

    ReplyDelete
  12. சத்தியா,

    /இதிலென்ன சந்தேகம். பைத்தியம் பிடிச்சுத்தான் போச்சு. ஆனாலும் அது காதல் பைத்தியம் தானே? அது ஓர் அன்பு கலந்த ஆழமான நேசிப்புத் தானே? ஆகவே இது வரவேற்கத்தக்க பைத்தியம்தான்.../

    சரியாக சொன்னீர்கள்...இது காதல் பைத்தியம் தான் - காதலி பைத்தியமல்ல! :)

    ReplyDelete