Monday, July 30, 2007

ஒரு காதல் பயணம் - இறுதிப்பகுதி

ஓரு காதல் பயணம் - முதல் பகுதி

தனது பெற்றோரின் நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் இடையில் நடந்தவையெல்லாம் ரசனையோடு பதிவு செய்யப்பட்டிருந்த அந்த டைரியைப் படித்துக் கொண்டிருந்தாள், அடுத்த நாள் தனது இருபத்தியோராவது பிறந்தநாளைகொண்டாட தனது அம்மாச்சி வீட்டுக்கு வந்திருக்கும் தமிழ். ஆனால் அந்த டைரியின் அடுத்தடுத்தப் பக்கங்களைப் புரட்ட புரட்ட எல்லாமே வெறுமையாய் இருந்தன. ஆர்வத்தோடு அந்தப் பழைய அலமாரியை அலசினாள். வேறு டைரிகள் எதுவும் இல்லாவிட்டாலும் ஒரு பழைய ஃபைல் கிடைத்தது. “Ilavarasi – Medical Reports” என்று மேலட்டையில் எழுதப்பட்டிருந்த அந்த ஃபைலை படிக்க ஆரம்பித்தாள். அவளுடைய அம்மா இளவரசியின் கர்ப்ப கால மருத்துவப் பரிசோதனைகளின் விவரம் அடங்கிய ஃபைல் அது.

A SINGLE INTRAUTERINE FETUS OF ABOUT 18 WEEKS SIZE. HEART PULSATIONS NORMAL. LIQUOR ADEQUATE. NO ANOMALIES.

என்று ஆரம்பித்து, மாதாந்திரப் பரிசோதனைகள், இடையில் எடுக்கப் பட்ட இரண்டு ஸ்கேன், இன்னும் பல விவரங்களோடு போய்க்கொண்டிருந்த அதில் இறுதியாக இருந்தது பிரசவத்தின் குறிப்பு. அதில்
DEATH DUE TO POST PARTUM HEMORRHAGE.. என்ற வரியைப் படித்ததும் லேசாக மயக்கம் வருவது போலிருந்தது தமிழுக்கு.முழுவதுமாய்ப் படித்து முடிக்கும்போது கடைசிப் பக்கத்தில் தமிழில் எதோ எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தாள்.
உன் இழப்புஎனக்கு பேரிழப்பல்ல…உயிரிழப்பு!
*
நீ பிறந்ததில்எனக்கும் மறுஜென்மம்.
என்று இரண்டு குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன.
ஒன்று இறந்துபோன தன் அம்மாவைப் பற்றியும், மற்றொன்று அன்று பிறந்த தனக்காகவும், தன் அப்பாவால் எழுதப்பட்டது என்பது அவளுக்குப் புரிந்தது. படித்ததும் அழுகை அழுகையாய் வரக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே “அம்மாச்சி” என்று அலறினாள்.

“என்ன பாப்பா” கேட்டுக்கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தார் அவளுடைய தாய்வழிப் பாட்டி.

“அம்மா எப்படி எறந்தாங்கன்னு உண்மைய சொல்லுங்கம்மாச்சி…”

சோகமாய் இருக்கும் பேத்தியைப் பார்த்ததும் கலக்கமானவர், சுதாரித்துக் கொண்டு சொன்னார்.
“என்ன பாப்பா இவ்வளவு நாள் கழிச்சு இப்போ திடீர்னு கேட்கற? உங்கிட்ட தான் சொல்லிருக்கேனே நீ ரெண்டு வயசுக் குழந்தையா இருந்தப்ப நாம எல்லாரும் ஊட்டிப் போகும்போது கார் ஆக்சிடெண்ட் ஆகி…”

“போதும்ம்மாச்சி எல்லாரும் சேர்ந்து இத்தன வருசமா என்கிட்ட பொய் சொல்லி வச்சது போதும்….ஐயோ இத்தன வருசமும் எங்கம்மா இறந்த நாளன்னைக்கா சந்தோசமா பிறந்தநாள்னு கொண்டாடிட்டு இருந்திருக்கேன்?” சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழ ஆரம்பித்துவிட்டாள்.

அவள் அம்மாச்சிக்கும் கண்ணீர் தானாக வழிய ஆரம்பித்தது. அழுகையின் போது அமைதியாக இருப்பதே உத்தமமென்று அமைதியாக இருந்தார் அவர்.

அவளே கேட்டாள் “ஏம்மாச்சி எங்கிட்ட மறச்சாங்க? அப்பாவும் எங்கிட்ட பொய் சொல்லிட்டாங்கல்ல”

“இல்லமா எல்லார் மாதிரியும் உன் பிறந்த நாள் அன்னைக்கு நீயும் சந்தோசமா இருக்கனும்னுதான் உங்கப்பா…”

“என்னம்மாச்சி…பிறந்தநாளன்னைக்கு நான் மட்டும்தான சந்தோசமா இருப்பேன்… நீங்க எல்லாரும் எப்படி இருந்திருப்பீங்க…ஐயோ என்னோட ஒவ்வொரு பிறந்த நாள் அன்னைக்கும் அப்பாவுக்கு எப்படி இருந்திருக்கும்?” மறுபடியும் அழுதாள்.

அவள் அம்மாச்சியோ எதுவும் பேசமுடியாமல் சோகமாய் உட்கார்ந்திருந்தார்.

“ஹாஸ்பிடல்ல தான அம்மாச்சி பிரசவமாச்சு…அப்புறம் எப்படி அம்மா எறந்தாங்க?”

“என்னத்த சொல்றது, அவ கல்யாணத்துல இருந்து எல்லாமே நல்லாதான் நடந்துச்சு…ரெண்டு பேரும் நல்லாதான் இருந்தாங்க… யார் கண்ணு பட்டுச்சோ… இப்படி அல்பாயுசுலப் போயிட்டா”

பேசிக்கொண்டே இருந்ததில் நெடுநாள் பேசாமலிருந்த கதையெல்லாம் ஆரம்பத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்தார்.

“உங்க அம்மாவப் பொண்ணுப் பார்க்க வந்த அன்னைக்கே உங்கப்பா பேசினதுல எங்க எல்லாருக்கும் அவர பிடிச்சுப் போயிடுச்சு… பொண்ணப் பிடிச்சிருக்கானு கேட்டதுக்கும் பொண்ணுக்குப் புடிச்சிருந்தா எனக்கும் சம்மதம்னு உங்கப்பா ஒரே வரியில சொல்லவும் உங்கம்மா அப்பவே புடிச்சிருக்குனு சொல்லிட்டா… அப்புறமென்ன அன்னைக்கே தாம்பூலமும் மாத்தியாச்சு…கல்யாணத் தேதியும் குறிச்சு பத்திரிக்கையும் அடிக்கப் போறப்ப உங்கப்பா வந்து கல்யாணத்த ஒரு வாரம் முன்னாடி வச்சிக்கலாம்னு பிடிவாதம் பிடிக்கிறார்… உங்கம்மாவோட பொறந்தநாளன்னைக்கே கல்யாணத்த வச்சிக்கனும்னு அவர் ஆசப்பட்டதெல்லாம் உங்கம்மா சொன்ன பிற்பாடுதான் எங்களுக்குத் தெரியும்…எல்லாருக்கும் உங்கப்பா மேல ரொம்ப நல்ல அபிப்ராயம் இருந்ததுனாலதான் ஐயரில்லாமத் தாலி கட்றதுக்குகூட உங்க தாத்தா ஒத்துக்கிட்டாங்க”

இந்தக் கதையெல்லாம் டைரி ஏற்கனவே அவளுக்கு சொல்லியிருந்தது.

“பொண்ண வெளியூர்ல கட்டிக் கொடுத்தா நாளுங்கெழமையும் போய்ப் பார்க்க செரமமா இருக்கும்னுதான் உள்ளூர்லையேக் கொடுத்தோம்…அப்ப உங்கப்பா வேலைக்கு தெனமும் ட்ரெயின்ல திருச்சிக்குப் போயிட்டு வந்துட்டு இருந்தார்…கல்யாணமான ரெண்டு மாசத்துலையே அவருக்கு மெட்ராசுக்கு மாத்தலாயிடுச்சு…அப்புறம் அவங்கள மெட்ராசுக்குப் போய் குடிவச்சிட்டு வந்தோம்…உங்கம்மா முழுகாம இருந்தப்ப, நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம்னு அஞ்சாவது மாசம் நானும் உங்கத் தாத்தாவும் போறோம்… புருசன விட்டுட்டு வர முடியாதுங்கறா… அப்புறம் ஏழாவது மாசம் நாங்க போய்ப்பேசினா எங்கள அங்க இருந்துக்க சொல்றாளேயொழிய உங்கப்பாவ விட்டுட்டு வர மாட்டேனுட்டா, அப்புறம் உங்கப்பாவும் உங்கம்மாகிட்ட கெஞ்சிதான் அனுப்பி வச்சாங்க…ஹ்ம்ம்ம்… உங்கப்பா அப்படி பாத்துக்கிட்டாரு உங்கம்மாவ…” பெருமூச்சு விட்டுக்கொண்டார் அவள் அம்மாச்சி.

“ம்ம்ம்…அப்புறம்”

“அப்புறம் ஒரு மாசத்துலையே கொழந்தப் பொறக்கறதுக்கு ஆசுபத்திரில தேதிலாம் குறிச்சுக் கொடுத்துட்டாங்க… இருந்தாலும் பத்திருவது நாள் முன்னக்கூடி வந்துடலாம்னு சொன்னாங்க… அத கேட்டு உங்கப்பாவும் ஒரு மாசம் ரீவு போட்டு நம்ம வீட்டுக்கே வந்துட்டார்… எப்ப வலி வந்தாலும் ஆசுபத்திரி கூட்டிட்டுப் போறதுக்கு கார கொண்டாந்து வாசல்லையே நிப்பாட்டிக்கிட்டார்…அன்னைக்கு ஒங்கப்பாவுக்கு பொறந்தநாளு…காலையில 9 மணி இருக்கும்… உங்கம்மா லேசா வலிக்குதுனு சொன்னா… ஒடனே ஆசுபத்திரிக்கும் கூட்டிட்டுப் போயிட்டோம்… போகும்போதே சொல்லிக்கிட்டு வந்தா “நான் சொன்னமாதிரியே உங்க பிறந்தநாளன்னைக்கே நமக்கு கொழந்த பொறக்க போகுது”ன்னு… உங்கப்பாவுக்கும் சந்தோசம்தான்… அங்க பிரசவத்தப்பவும் உங்கம்மாகிட்டயேதான் உங்கப்பா இருந்தார்… அவர் கையதான் கெட்டியாப் புடிச்சிகிட்டு இருந்தாளாம் உங்கம்மா…தலப்பிரசவங்கறதால நாங்க உசுரக் கையிலப் புடிச்சிக்கிட்டு வெளிய நிக்குறோம்… நாங் கொலதெய்வத்த எல்லாம் வேண்டிகிட்டு இருக்கேன்… ஹும்… ஆனா ஒரு சாமிக்கும் கண்ணில்லாமப் போச்சே…” என்று சொல்லிக்கொண்டே அழ ஆரம்பித்தார்.
அவர் அழுவதைப் பார்த்து அவள் அழ, அவர் முந்தானையில் முகத்தைத் துடைத்தபடி அழுகையை நிறுத்திவிட்டு ஆரம்பித்தார்.
“உங்க அப்பாதான் பாவம்… பொண்டாட்டி மயக்கமாதான் இருக்கானு நெனச்சு குளிப்பாட்டின பிள்ளைய எங்ககிட்ட வெளிய வந்து காட்டிட்டு இருக்கும்போதே டாக்டருங்க கூப்பிட்டு ஏதோ சொல்லவும் இடிஞ்சுபோன மனுசனா உள்ள போனவர்தான்…அதிகம் ரத்தம்போனதால உங்கம்மா உசுர் போச்சுன்றதெல்லாம் எங்களுக்கு பிற்பாடுதான் தெரியும்… அப்புறம் உங்கப்பா வேலைய திருச்சிக்கே மாத்திகிட்டு வந்துட்டாரு... உங்க அப்பாயியும், நானுந்தான் மொத ரெண்டு வருசம் உன்னப் பாத்துக்கிட்டதெல்லாம்…அப்புறம் உன்னையும் கூட்டிட்டு உங்கப்பா மெட்ராசுக்கேப் போயிட்டார்… உங்க சித்திய அவருக்கு ரெண்டாந்தாரமா கட்டிக்கொடுக்கலாம்னு உங்க சித்தியயையும் கேட்டுட்டு அவர்கிட்ட சொல்லும்போது இளவரசிக்குத் தங்கச்சின்னா எனக்கும் தங்கச்சி மாதிரிதான்னு சொல்லி மறுத்துட்டார்… அதுவுமில்லாம வேற கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லனும் சொன்னதுக்கப்புறம் அவர யாரும் கட்டாயப்படுத்தல… எல்லாமே நேத்து நடந்த மாதிரிதான் இருக்கு…ஆச்சு இருவத்தி ரெண்டு வருசம்”

கொஞ்ச நேரம் இருவருமே அமைதியாக இருந்தார்கள்.

அவள் அம்மாச்சியே மறுபடியும் ஆரம்பித்தாள், “நாளைக்கு உனக்கு மட்டும் பொறந்தநாள் இல்லமா…உங்கப்பாவுக்கும்தான்… ஆனா உங்க அம்மாசெத்த நாளும் இதான்னு உங்கிட்ட மறச்சுட்டு, ஊர்ல வந்து உம்பொறந்த நாள கொண்டாட்றதெல்லாம் அதத்தெரிஞ்சு நீயும் இந்த நாள்ல வெசனப்படக்கூடாதுனுதான்… நீ சந்தோசமா இருக்கிறதப் பாத்துதான் அவரும் ஏதோ இருக்கார்… மெட்ராசுல இருந்து மதியம் கிளம்பிட்டேன்னு போன் பண்ணுனாரில்ல… ராத்திரிக்குள்ள எப்படியும் வந்துடுவார்…அவருகிட்ட நீ எதுவும் கேட்டுடாதம்மா…எப்பவும் போலவே நடந்துக்க…”

அடுத்த நாள் குடும்பத்தினர் எல்லோரின் வாழ்த்துக்கள்+முத்தங்களோடு தன் இருபத்தியோராவது பிறந்தநாளைக் கொண்டாடினாள் தமிழ்.
எல்லோரும் போன பிறகு அன்று மாலையில் தனிமையில் அவள் அப்பாவிடம் கேட்டாள்.

“ஏம்ப்பா நான் பிறந்தப்போதான் அம்மா எறந்தாங்கன்றத எங்கிட்ட மறச்சுட்டீங்க?”

அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தார் அருள்.

“இன்னைக்கு தான் உங்கப் பிறந்தநாளும்னும் எனக்குத் தெரியும்ப்பா. அம்மாவோட நினைவுநாளும் இன்னைக்குதான்னும் எனக்குத் தெரியும். நான் கஷ்டப் படக்கூடாதுன்னுதான் இத எங்கிட்ட இருந்து மறச்சிருக்கீங்கன்னாலும் இத தெரிஞ்சபின்னாடி எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கு தெரியுமா? நாம/நம்மள நேசிக்கிறவங்க சந்தோசமா இருக்கனும்ங்கறதுக்காக நம்ம கஷ்டத்த மறச்சுக்கறது நல்லதுதான். ஆனா என்னால இந்த ஒருநாளே முடியல…நீங்க எப்படி இத்தன வருசமா இருக்கீங்கனு எனக்குப் புரியலப்பா… உங்க கஷ்டம் இந்த வருசத்தோடப் போகட்டும். அடுத்த வருசம் இதே நாள் என்னோடப் பொறந்த நாளா இருக்க வேணாம். அம்மாவோட நினைவுநாளாதான் இருக்கனும்”

“நினைவு நாள்னு தனியா நெனச்சுக்க என்னமா இருக்கு? எல்லா நாளுமே…”

“ம்ம்ம்…இவ்வளவு நாளா நீங்க வேற கல்யாணம் பண்ணிக்காம இருக்கும்போதே அது தெரியுதுப்பா. ஆனா நான் சொல்றதுதான் இனிமே! இனிமே அம்மாவோடப் பிறந்தநாள் அன்னைக்கே நாமளும் பிறந்த நாள் கொண்டாடிக்கலாம். அம்மாவோட நினைவு நாள் அன்னைக்கு வேணாம். அவ்வளவுதான்!”
கொஞ்சம் பாரம் குறைந்தவராயானார் அருள்.

“இந்தாங்க உங்களுக்கு என்னோட பிறந்தநாள் பரிசு” என்று சொல்லி அந்த டைரியையும் கொடுத்துவிட்டுப் போனாள்.
பிரசவத்துக்கு இளவரசி வரும்போது எடுத்துவந்து தொலைந்துபோன அந்த டைரி மீண்டும் கிடைத்ததும் ஆர்வமான்வராய் அதன் பக்கங்களைப் புரட்டியதில் மெல்லியப் புன்னகையுடன் பழைய நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தார் அருள்.

நினைவுகள் இருக்கும்வரை துயரங்கள் ஏதுமில்லை.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

(மருத்துவக் குறிப்புகள் கொடுத்துதவிய delphine மேடத்திற்கு நன்றிகள் )

விளம்பரம் 1 :
விளம்பரம் 2 :

நான் இரசிக்கும் படல்களின் தொகுப்பு இனி கரையோரத் தென்றல் எனும் புதிய வலைப்பதிவில் வரும்.

19 comments:

  1. என்னப்பா இது??? இப்படி கலங்கடிச்சுட்டீங்க. கடைசியில.

    கண்ணுல தண்ணி நிக்குதுய்யா......

    ReplyDelete
  2. \\கண்ணுல தண்ணி நிக்குதுய்யா.. \\
    எனக்கும்...
    எதிர்பார்க்க முடியாத கதையமைப்பு..
    ம்ம்ம்...

    ReplyDelete
  3. Yellam ok.

    What was elavarasi's B'day presentation to arul.

    atha sollaliye!

    -enbee

    ReplyDelete
  4. ம்ம்ம்...இது எப்ப எழுதத் தொடங்குன? இப்பதான் பாக்குறேன். நல்லா எழுதீருக்க. உணர்ச்சிகளை ஜிலேபி பிழியிறாப்புல பிழிஞ்சி பிழிஞ்சி எழுதீருக்க. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  5. வாங்க நந்தா,

    / என்னப்பா இது??? இப்படி கலங்கடிச்சுட்டீங்க. கடைசியில.

    கண்ணுல தண்ணி நிக்குதுய்யா...... /

    ஆரம்பம் நல்லா இருந்தா முடிவு சோகமா இருக்கனும் தல!!!
    சரி கண்ணத் தொடச்சுக்குங்க… அடுத்து காதல் கூடத்துக்குப் போலாம் ;)

    ReplyDelete
  6. / அருட்பெருங்கோ..கதை ரொம்பவே நல்ல இருக்கு./
    நன்றிங்க மேடம்!!!

    /இது மாதிரி அம்மாக்கள் பிரசவத்தில் இறக்கும் போது மனதெல்லாம் ரொம்ப வேதனையாக இருக்கும். அதன் பிறகு அந்த குழந்தைகளை தடுப்பு ஊசி போட எடுத்துவரும்போதும் என்னவோ மாதிரியிருக்கும். கஷ்டங்கள், வேதனைகள்..இதுதான் வாழ்க்கையோ!/

    கஷ்டங்களும், வேதனைகளும் !!!

    /எனக்கு எதற்கு நன்றியெல்லாம்? ஒரு நல்ல கதை கொடுத்ததற்கு நான் தான் நன்றி சொல்லணும்.. /
    அதுக்கு உதவினதுக்குதான் மேடம் :)

    ReplyDelete
  7. வாங்க சிநேகிதன்,

    /\\கண்ணுல தண்ணி நிக்குதுய்யா.. \\
    எனக்கும்...
    எதிர்பார்க்க முடியாத கதையமைப்பு..
    ம்ம்ம்... /

    யெப்பா ரொம்ப சோகமா எல்லாம் எழுதலையே… எல்லாம் 20 வருசம் முன்னாடி நடந்து முடிஞ்சதுனு ப்ளாஷ்பேக் ஆக்கிட்டேனே…

    ReplyDelete
  8. வாங்க என்பீ,

    /Yellam ok.

    What was elavarasi's B'day presentation to arul.

    atha sollaliye!

    -enbee/

    “நான் சொன்னமாதிரியே உங்க பிறந்தநாளன்னைக்கே நமக்கு கொழந்த பொறக்க போகுது”ன்னு…

    இன்னும் புரியலையா? ;)

    ReplyDelete
  9. வாங்க ஜி.ரா,

    / ம்ம்ம்...இது எப்ப எழுதத் தொடங்குன?/
    அது ஆச்சு ஒரு வருசத்துக்கு மேல :)

    /இப்பதான் பாக்குறேன். நல்லா எழுதீருக்க. உணர்ச்சிகளை ஜிலேபி பிழியிறாப்புல பிழிஞ்சி பிழிஞ்சி எழுதீருக்க. வாழ்க வளமுடன். /

    ஜிலேபில ஜீரா ஊத்துன மாதிரி இருக்கு ஜிராவோட பின்னூட்டம் ;)

    ReplyDelete
  10. Enna Arul epdi azha vechuteenga? It was too good. Thanks

    ReplyDelete
  11. / Enna Arul epdi azha vechuteenga? It was too good. Thanks/

    ்ஸ்ரீ,

    அழ வைக்கனும்னு எல்லாம் இல்லப்பா... முன்னமே யோசிச்சிருந்த முடிவுதான்...நடுவுல நாந்தான் கொஞ்சம் இழுத்துட்டேன்...

    நன்றி.

    ReplyDelete
  12. எதுக்குமே அழாத(?)இந்த நாயக்கனை அழ வச்சிடுவ போலிருக்கியே...


    ஆ.... ஹா........ஹா..........

    ReplyDelete
  13. / எதுக்குமே அழாத(?)இந்த நாயக்கனை அழ வச்சிடுவ போலிருக்கியே...


    ஆ.... ஹா........ஹா........../

    ்வேலு அழாதீங்க வேலு அழாதீங்க...
    இளவரசி அடுத்தக் கதையில உயிரோட வருவாங்க... ;)

    ReplyDelete
  14. இதமான பின்னணியில் மிக தாமதமான இரவு வேலையில் நான் இதை வாசித்தபோது எனது உயிரை ஒரு நிமிடம் பிழிந்தது எடுத்தது போலிருந்தது.

    உங்கள் கதாபாத்திரங்களில் எதாக எனை நான் நினைத்துக் கொண்டேனோ தெறியவில்லை!! அல்லாது எல்லாமாகவுமா? தெறியவில்லை!! உடல் சிலிர்த்ததய்யா!!

    உணர்வுடன்

    முகவைத்தமிழன்

    ReplyDelete
  15. Excellant !!!!!!
    No more word to describe ......lovely lovable love

    Pravin

    ReplyDelete
  16. வாங்க மு.தமிழன்,

    / இதமான பின்னணியில் மிக தாமதமான இரவு வேலையில் நான் இதை வாசித்தபோது எனது உயிரை ஒரு நிமிடம் பிழிந்தது எடுத்தது போலிருந்தது.

    உங்கள் கதாபாத்திரங்களில் எதாக எனை நான் நினைத்துக் கொண்டேனோ தெறியவில்லை!! அல்லாது எல்லாமாகவுமா? தெறியவில்லை!! உடல் சிலிர்த்ததய்யா!!

    உணர்வுடன்

    முகவைத்தமிழன்/

    மிக விரிவாக கருத்தை சொன்னதற்கு மிகவும் நன்றிங்க!!!

    ReplyDelete
  17. / Excellant !!!!!!
    No more word to describe ......lovely lovable love

    Pravin/

    நன்றி ப்ரவீன்!!!

    ReplyDelete
  18. நெகிழ வைத்த கதை / கவிதை. உங்க எல்லா இடுகைகளையும் ரசித்துப் படித்து வருகிறேன். ஒவ்வொரு இடுகையாக மறுமொழி அளிக்காததற்குப் பொறுக்கவும் :) தொடர்ந்து காதல் படைப்புகளைத் தாருங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. /நெகிழ வைத்த கதை / கவிதை. உங்க எல்லா இடுகைகளையும் ரசித்துப் படித்து வருகிறேன். ஒவ்வொரு இடுகையாக மறுமொழி அளிக்காததற்குப் பொறுக்கவும் :) தொடர்ந்து காதல் படைப்புகளைத் தாருங்கள். வாழ்த்துக்கள்/


    வாழ்த்துக்களுக்கும், தொடர்ந்து ரசித்து வாசிப்பதற்கும் நன்றிகள் ரவிசங்கர்.

    வாசிக்கிற எல்லா இடுகைகளுக்கும் மறுமொழிய எல்லாராலும் முடிந்து விடுவதில்லை... நானும் அப்படித்தானே ;)

    ReplyDelete