Monday, July 23, 2007

ஒரு காதல் பயணம் - 13

ஒரு காதல் பயணம் - முதல் பகுதி

உன் வருகை தோறும்...
மலருமென் மனமொரு,
நிலவுகாந்தி!


திருமணத்திற்கு முந்தைய நாள் மாலைப்பொழுது.
திருமண மண்டபத்தில் உங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைகள் எல்லாம் உன் உறவினர்கள்/தோழிகளால் நிறைந்திருக்கின்றன.
உன்முகம் தேடியெடுத்துவர ரகசியமாய் என் பார்வைகளை அனுப்பி வைக்கிறேன்.
என்னைப் போல என் பார்வையும் நிலைகொள்ளாமல் அலைந்து உன் சாயலில் இருந்த உன் தங்கையை இழுத்து வருகிறது.
அருகே வந்தவள் மேல்நோக்கி கைகாட்டிவிட்டு மறைந்துபோனாள்.
நானும் மேல் தளத்துக்கு வருகிறேன்.
தோழிகளின் பின்னணிச் சிரிப்போடு அந்த அறையிலிருந்து மெல்ல வெளிப்படுகிறாய், மேகமவிழ்க்கும் நிலவாய்.

துலக்கி வைத்த பொன்மஞ்சள் நிறமுகம்.
அது மச்சமா? பொட்டா? எனத் தெரியாதபடி நெற்றி மையத்தில் கருந்சாத்துப்பொட்டில் சிறுபுள்ளி.
உன் ஒவ்வோர் அசைவுக்கும் வெவ்வேறு லாவகத்தில் உன் காதோடு ஊஞ்சலாடியபடி சின்னதாய் ஒரு ஜோடி தோடு ஜிமிக்கி.
எப்போதும் உன் பல்லில் கடிபட்டபடி இருக்கும் மெல்லிய செயின் அப்போது மட்டும் சமர்த்தாய் உன் மார்பில் சாய்ந்திருந்தது.
நகைகளைப் போல நகையும் குறுநகையாகவேப் பூத்திருந்தது. காரணம் நானா? நாணமா? தெரியவில்லை.
இரண்டு கைகளையும் பின்னால் கட்டியபடி உன்நடை நடந்து நெருங்குகிறாய்.
சுடிதாரில் கொள்ளையடிக்கும் உன் அழகு, சேலையிலோ கொலையே செய்கிறது.

"இப்போவும் பழையமாதிரி டயலாக் அடிக்காம உண்மைய சொல்லு புடவைல எப்படி இருக்கேன்?"

"பாரதிராஜா கிட்டதான் சொல்லனும்"

"என்ன உளர்ற?"

"தேவதைகளோட காஸ்ட்யூம இனிமே வெள்ளைல இருந்து உன்னோட இந்த காஸ்ட்யூமுக்கு மாத்த சொல்லதான்..."

"ம்ம்ம்...அப்புறம்?"

"உண்மைய சொல்லனும்னா, இப்படியே தாலிகட்டிடலாம் போல அவ்வளவு அம்சமா இருக்க!!!"

"அப்போ நாளைக்கு கல்யாணத்துக்கும் இப்படியே வந்துடவா?"

"ம்ம்ம்...எனக்கெதுவும் பிரச்சினையில்ல...தாராளமா வா...உங்கப்பாதான் பாவம் ஃபீல் பண்ணுவார்... அது சரி என்னது அது பின்னாடி என்னமோ மறச்சு வச்சிருக்க?"

"வெட்கம்"

"வெட்கமா?"

"ஆமா நீயென்ன வெட்கப்பட வைக்கும்போதெல்லாம் முகத்தப் பொத்தி பொத்தி , முகத்துல இருந்த சிவப்பெல்லாம் கைல ஒட்டிக்கிச்சு"

"அடிப்பாவி, எப்போல இருந்து நீயும் இப்படியெல்லாம் பேச ஆரம்பிச்ச?"

வெட்கப்பட்டுக்கொண்டே மருதாணியில் சிவந்த கைகளை விரிக்கிறாய்.
மார்கழி மாத அதிகாலை வாசலாய்க் கோலமிடப்பட்டிருந்தன உன் உள்ளங்கைகள்.

"எவ்வளவு சிவந்திருக்குனு சொல்லு"

"உன் வெட்கத்த விட அதிகமாவே சிவந்திருக்கு"

"நெஜமாவா?"

"அதிலென்ன சந்தேகம்?"

"இல்ல... மருதாணிக்கை எந்தளவுக்கு சிவக்குதோ, அந்தளவுக்கு நல்லப் புருசனா கிடைப்பாங்கன்னு எங்க சித்தி சொன்னாங்க...அதான் கேட்டேன்"

"ஓஹோ...உங்க தோழிங்ககிட்ட எல்லாம் காட்டியிருப்பியே, அவங்க என்ன சொன்னாங்க?"

"உன்னப் பார்த்தா நல்லவன் மாதிரி தெரியலையாம்...அதனால இத நம்ப மாட்டாங்களாம்"

"சரி விடு அவங்க எல்லோருக்கும் நல்லவனா என்னாலயும் இருக்க முடியாது. உனக்கு மட்டும் நல்லவனா இருக்கேன்"

"ஓ அந்த ஆசைகூட இருக்கா ஐயாவுக்கு? நாளைல இருந்துதான் இருக்கு உனக்கு"

"நாளைல இருந்து எனக்கு என்ன இருக்கு?" என்று நான் மீண்டும் மீண்டும் கேட்க முகம்பொத்தியபடி ஓடினாய்.
கையில் இருந்த சிவப்பெல்லாம் மீண்டும் முகத்தில் ஒட்டிக்கொண்டது.

***

முந்தின நாள் சடங்கெல்லாம் முடிந்த இரவுப்பொழுது.
நீ வெளிப்படுவாயா என்று நோட்டமிட்டபடி,
உன் அறைக்கதவின் அசைவுக்கெல்லாம் மலர்ந்து சாய்கின்றன என் விழிகள்.
உறக்கம் எங்கோ தொலைந்துவிட்ட அந்த இரவுப்பொழுதில் சூரியனைத் தேக்கியபடி என் விழிகள் மட்டும் விழித்திருக்கின்றன.
நாளை நீ பிறந்து 25 ம் ஆண்டு.
உனக்கான பிறந்த நாள் வாழ்த்துக்களோடு 12 மணி வரை காத்திருக்கிறேன்.
மெல்லப் பிரியும் இமையைப் போல ஓசையின்றி உன்கதவு திறக்கப்படுகிறது.
இரவின் ஒளியாய் நீ வர நிலவுகாந்தியாய் நான் மலர்கிறேன்.
எதிர்பார்த்தவள் போல என்னிடமிருந்து வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டு கண்களால் நன்றி சொல்லிவிடைபெற பார்க்கிறாய்.
நன்றி மட்டும்தானா? என ஏக்கத்தை நான் பார்வையில் தேக்க...
என் உள்ளங்கையில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டு விலகினாய்.
உன் உதட்டின் ஸ்பரிசம் தாங்காமல் என் உடல் சிலிர்க்க இயங்க மறுத்து நின்று போயின என் விழிகள்.
நீ முத்தமிட்டுத் திரும்பிய பிம்பமே மனதில் நிலையாயிருக்க, சந்தேகத்தோடு மீண்டுமொருமுறை என் பக்கம் திரும்பியவள்,
என் உள்ளங்கையை எடுத்து என் கன்னத்தில் வைத்துவிட்டுப் போனாய்.
உள்ளங்கையில் நீ நட்டு வைத்த முத்தம் என் கன்னத்தில் வந்து பூத்தது.
முதல் முத்தம் கொடுத்த/வாங்கிய சிலிர்ப்போடு அறைதிரும்பினோம்.
விடிந்தால் திருமணம். நானோ "கன்னத்தில் கைவத்தபடி" உறங்கிப்போனேன்.

***

நம் திருமணத்திற்கு வாழ்த்து சொல்ல முதல் ஆளாய் காலையிலேயே வந்து சேர்ந்தது சூரியன்.
காற்றில் கூட திருமணக் களை கலந்திருந்த அன்று மலர்ந்த மலர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அது ஒரு பொன்னாளின் தொடக்கமென்று.
நினைவெல்லாம் எங்கோ மிதந்துகொண்டே இருக்க, காலையில் எழுந்ததும் குளித்துக் கிளம்பியதும் என எல்லாமே கனவாய் மட்டுமே நினைவில் இருக்க,
மணமகன் கோலத்தில் உனக்காக மணமேடையில் அமர்ந்திருக்கிறேன்.
வெகுநேரக் காத்திருப்பிற்குப் பிறகு பொற்சிலையென நீ வருகிறாய்.
அருகில் வந்து நீ அமர்ந்ததும், மண்டபம் கீழிருக்க மணமேடை மட்டும் வானில் உயர்வதாக எனக்குள் பிரமை.
சரியாக நீ பிறந்த கணத்தில் நம் பெற்றோர் தாலியெடுத்துக் கொடுக்க, மலர்தூவி, "மணமக்கள் வாழ்க" வாழ்த்தொலியோடு
தமிழ் முறைப்படி எளிமையாக நடந்து முடிந்தது நம் திருமணம்.
மூன்று முடிச்சுகளையும் முடிந்துவிட்டு உனக்கு மட்டும் தெரியும்படி என் உள்ளங்கை விரிக்கிறேன்.

"திங்களுக்கு வெள்ளி விழா.
கொஞ்சம் சிரி
எங்களுக்கு வெள்ளி விழும்."

எழுதப்பட்டிருந்த அந்த வரிகளை வாசித்ததும் புன்னகைப் பூக்கிறாய். கூடவே சிந்துகின்றன சில கண்ணீர்த்துளிகள்.

பதறியவனாய், "ஹே, கேமராவெல்லாம் இருக்கு...அழாத" கிசுகிசுக்கிறேன்.

"அட லூசு... நான் சிரிச்சுட்டுதான் இருக்கேன்...ஆனா கண்ணுலயும் தண்ணி வருது"

கண்ணீரோடு நீ சிந்திய புன்னகை, பனித்துளியோடு இருக்கும் அதிகாலை ரோஜாவாய் மலர்ந்திருக்க, அழகாய் ஆரம்பமானது ஒரு வசந்தகாலத்துக்கான முதல் நொடி!


(இப்படியே சுபம் போட்டு முடிச்சிடலாம்னுதான் எனக்கும் ஆசை. ஆனால் அடுத்த திங்கட்கிழமைதான் "கதை முடிகிறது" )

கதை முடிந்தது இங்கே

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

5 comments:

  1. / "உன் வெட்கத்த விட அதிகமாவே சிவந்திருக்கு"/////

    இப்படி ஒரு வரிய மட்டும் எடுத்துப் போட்டா எனக்கு எதுவும் புரியலையே மேடம் :(

    ReplyDelete
  2. \\
    "திங்களுக்கு வெள்ளி விழா.
    கொஞ்சம் சிரி
    எங்களுக்கு வெள்ளி விழும்."\\

    \\கண்ணீரோடு நீ சிந்திய புன்னகை, பனித்துளியோடு இருக்கும் அதிகாலை ரோஜாவாய் மலர்ந்திருக்க, அழகாய் ஆரம்பமானது ஒரு வசந்தகாலத்துக்கான முதல் நொடி!\\

    அட..அட கவிஞரே கலக்குறிங்க.

    ReplyDelete
  3. /அட..அட கவிஞரே கலக்குறிங்க. /

    கோபி, அடுத்தப் பகுதியும் படிச்சுட்டு சொல்லுங்க!!!

    ReplyDelete
  4. வாங்க delphine,

    /உன் வெட்கத்த விட அதிகமாவே சிவந்திருக்கு"//// //
    the way you have written is simply amazing... /

    அப்படிங்கறீங்களா? சரிதான் :)

    ReplyDelete
  5. /காதல் பயணத்திற்கு நிறுத்தமே கிடையாது என நான் நினைக்கிறேன். தொடரட்டும் உங்கள் பயணம்... வாழ்த்துக்கள். /

    அப்படி இல்லீங்க நவாப்.

    எல்லாப் பயணமும் ஒரு நாள் முடிவுக்கு வந்தாகனுமில்ல? இது அடுத்த திங்கட்கிழமை முடிவுக்கு வருது!!!

    ReplyDelete