Wednesday, July 11, 2007

ஓரு காதல் பயணம் - 12

காதல் பயணம் - முதல் பகுதி

என்னை அடிக்க நீ கை ஓங்கும் போதெல்லாம்
கண்களை மூடிக்கொண்டு சுகிக்கதான் நினைக்கிறேன்.

ஆனால் நீ அடிக்க வரும் அழகைக் கண்டதும்

இமைக்காமல் நிற்கின்றன என் கண்கள்.


என்னை எதிர்பார்த்து அந்த வாய்க்கால் படித்துறையில் அமர்ந்திருக்கிறாய் நீ.
நீர் பருக வந்த மயில் ஒன்று படியிலேயே அமர்ந்துவிட்டதென மீன்களெல்லாம் உன்னையேப் பார்க்கின்றன.

அப்போது உனக்குத் தெரியாமல் உனக்குப் பின்னால் மெல்ல நடந்து வருகிறேன் .
உன் கண்களை மெல்ல மூட நான் கைகளைக் கொண்டு வர, "ஏன் இவ்வளவு நேரம்" எனத் திரும்பிப் பார்க்காமல் நீ கேட்கிறாய்.
உன்னை ஏமாற்றலாம் என்று முயற்சியில் மீண்டும் ஒரு முறை தோற்றுப் போகிறேன் .
அதனால் என்ன? காதலியிடம் தோற்றுப்போவதை விட வேறென்ன சுகம் இருக்கிறது?

வெகு நேரம் எனக்காக அமர்ந்த நிலையில் காத்திருந்தாய் போல!
நான் வந்தததும் எழுந்து அந்த வாய்க்காலை ஒட்டி நடக்க ஆரம்பிக்கிறாய்.
உன்னோடு மனம் கோர்த்து நானும் நடக்க ஆரம்பிக்கிறேன்.

"கேட்டாதான் சொல்லுவியா? எனக்கு என்னப் பரிசு தரப் போறனு இன்னைக்கு சொல்றதா சொன்னியே, சொல்லு!"
"சொல்லல! காட்டறேன்! இந்தா" எனக் கையில் இருந்ததை உன்னிடம் நீட்டுகிறேன்.

வாங்கிப் படிக்கிறாய்.

மாதிரி திருமண அழைப்பிதழ். மணநாள் உன் பிறந்தநாளுக்கு மாற்றப்பட்டிருப்பதையும், முகூர்த்த நேரம் நீ பிறந்த நேரத்தில் இருப்பதையும் பார்த்துப் பரவசமாகிறாய்.

படித்து விட்டு அதை மடித்து வைத்துக் கொள்கிறாய் உன் இதயத்துக்கருகில்.
அங்கே என் இதயத்தை அது நலம் விசாரித்திருக்கக் கூடும்.

பேச்சில்லாத மௌன உரையாடலினூடே என் கை தேடுகிறது உன் கை.
என் தோள் சாய்கிறது உன் தலை.
எங்கேயோப் பார்த்துக்கொண்டு மெதுவாய்க் கேட்கிறாய்,"எனக்காக என்ன வேணா செய்வியோ?"
"கண்டிப்பா!"

"ஏன்?"

"காரணம் சொன்னாப் பெனாத்தறேன்னு சொல்லுவ"

"பரவால்லப் பெனாத்து"

நீ சீண்டியதும், என் இதயம் வழக்கம்போல பெனாத்த ஆரம்பிக்கிறது.

"ஹ்ம்ம்ம்...நீ நடந்து வருகிறாய் எனத் தெரிந்ததும் அவசரமாக இந்த மரங்களிடம் கடன் வாங்கி
தன்னைப் பூக்களால் போர்த்திக் கொள்கிறது இந்த நிலம்.

நீ வருவதற்கு முன் பேரிரைச்சைலோடு ஓடிக்கொண்டிருந்த இந்த வாய்க்கால் நீர்,
நீ வந்து அங்கு அமர்ந்த பிறகு சத்தமில்லாமல் அமைதியாய் ஓடத் தொடங்குகிறது!

கொஞ்ச நேரம் முன்பு வரை உக்கிரமாய் தன் கதிர்களை வீசிக் கொண்டிருந்த கதிரவன்
உன்னைப் பார்த்ததும் மேகத்துக்குப் பின்னே போய் மறைந்து கொள்கிறான்!

சற்றுமுன் வரை வேகமாக வீசிக்கொண்டிருந்த காற்று உன்னைப் பார்த்ததும்
உன் தேகம் வலிக்காமல் மெல்லியத் தென்றலாய் வீச ஆரம்பிக்கிறது!

இப்படிக் கொஞ்ச நேரம் உன்னை மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்வதற்கு இந்த இயற்கையே இத்தனை செய்யும்போது,
உன்னை எப்போதும் மகிழச்சியாய் வைத்துக் கொள்ள நான் என்னென்ன செய்ய வேண்டும்?"

முழுவதுமாய் பெனாத்தி முடிக்கிறேன் நான்.
சட்டென உன் ஒருதுளி கண்ணீர் என் இதயம் நனைக்கிறது.

"ஏய்! இப்ப நான் என்னப் பெருசா நடந்துடுச்சு? கல்யாணத்த ஒரு வாரம் முன்னாடி வச்சிருக்கோம்...அவ்வளவுதான?"

"நான் கண்டிப்பா இந்த வருஷம் பிறந்த நாள வாழ்நாள் பூரா மறக்கவே மாட்டேன்"

"சரி சரி ரொம்ப உருகாத...நேரமாச்சுக் கிளம்பலாம்!"

"..."

"என்ன யோசனை?"

"இதே மாதிரி உனக்கும் உன்னோடப் பிறந்த நாளுக்கு எந்தக் காதலியும் இதுவரைக்கும் கொடுக்காதப் பரிசா கொடுக்கணும்!
என்னக் கொடுக்கலாம்னு யோசிக்கிறேன்!"

"பரிசு கொடுத்துதான் நீயென்ன மகிழ்ச்சிப் படுத்தனும்னு இல்ல. என்னோடப் பரிசுகள நீ ஏத்துக்கறதே எனக்கு மிகப் பெரிய பரிசுதான?"

"ஓ! நீங்க மட்டும்தான் எங்களக் காதலிக்கனும், நாங்க உங்களக் காதலிக்கக் கூடாதோ?"

"அட நல்லப் பரிசாக் கிடைக்கலையேன்னு நீ வருத்தப்படக் கூடாதில்ல அதுக்காக தான் சொன்னேன்!
என்னோடப் பிறந்த நாளுக்கு இன்னும் 9 மாசம் இருக்கு, நீ பொறுமையாக்கூட யோசிச்சுக்கலாம், சரியா? இப்ப வா போகலாம்"

என்னிடம் இருந்து கொஞ்சமாய் விலகியவள், "இல்ல உனக்கு என்னப் பரிசு கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்!
அதுவும் எந்தக் காதலியும் தன்னோடக் காதலனுக்கு இதுவரைக்கும் கொடுக்காதப் பிறந்தநாள் பரிசு!"

"என்ன? என் பிறந்தநாளன்னைக்கு இன்னொரு தடவை கல்யாணம் பண்ணிக்கலாமா?"

"அறுபதாம் கல்யாணத்த வேணும்னா உன் பிறந்த நாளன்னைக்கு வச்சிக்கலாம்...ஆனா இத அடுத்தப் பிறந்த நாளன்னைக்கேக் கொடுக்கனும்"

என்னைப் போலவே நீயும் புதிர் போடுகிறாய்.

"உனக்கு நம்மக் கல்யாணம் வரைக்கும் டைம் தர்றேன், முடிஞ்சா கண்டு பிடிச்சு சொல்லு பார்ப்போம்!" என சொல்லிவிட்டு சிரிக்கிறாய்.
நீ என்ன யோசிப்பாய் எனத் தெரியாத அளவுக்கு நான் என்ன வெளியிலா வாழ்கிறேன்?

"அது எனக்கு நீ கொடுக்கிறப் பரிசில்லையே! நம்மக் காதலுக்கு நாமக் கொடுக்கப் போறப் பரிசுதான!"
என்று சொல்லிவிட்டு உன்னைப் பிடிக்கப் பார்க்கிறேன்.

அதைக் கேட்டதும், "ச்சே! உனக்குத் தெரியாம என்னால எதையும் நெனைக்கக் கூட முடியாது போலிருக்குடா!
உங்கிட்ட இருந்து நான் என்னத்ததான் மறைக்கிறது" என்று சிணுங்கிக்கொண்டு ஓடுகிறாய்.

"ஆமாமா! நீ கல்யாணம் வரைக்கும் மறைச்சு வச்சிருக்கிற கொஞ்ச நஞ்சமும் கல்யாணத்துக்கப்புறம் மறைக்க முடியாது"
கொஞ்சம் சத்தமாகவேக் கத்துகிறேன் நான்.

"ச்சீப் போடா..." என் மீது ஒரு பூவையெடுத்து எறிந்து விட்டுப் போகிறாய்
வார்த்தை வந்து சேர்வதற்குள் என் பார்வையில் இருந்து மறைகிறது உன் பிம்பம்.
நானும் மெதுவாய் எனக்கு நீ தரப் போகும் பரிசை எண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறேன்.
"குழந்தை"யைப்போல கை தட்டி ஆரவாரிக்கிறது வானம்.

(காதல் பயணம் தொடரும்)
அடுத்த பகுதி
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

13 comments:

  1. காதல் மன்னா!!! பேச்சே வரல.. அசத்துரிங்க..ம்ம்ம்ம்!!!
    இப்படிக்கு,
    அருட்பெருங்கோ ரசிகன்...

    ReplyDelete
  2. பயணம் இனிமையாக‌
    இருந்தது...........

    ReplyDelete
  3. எதை மேற்கோள் காட்டறது. இப்படியா வரி வரியா இழைச்சு இழைச்சு எழுதறது.

    கொன்னு எடுக்கறீங்களேப்பா.கலக்கலோ கலக்கல்.

    ReplyDelete
  4. காதலிப்பதற்கு உங்கள் வலைப்பூ நிச்சயம் ஒரு பல்கலைக்கலகம்தான்

    ஒரு மாண்வனே பேராசிரியராக இருப்பது காதல் பெற்ற வரம்

    தொடருட்டும் தங்கள் காதல் பயணம்(பணி) தொய்வில்லாமல்

    மாணவன் மீறான் அன்வர்

    ReplyDelete
  5. என்ன பரிசுன்னு சொல்லுங்க.

    ReplyDelete
  6. வாங்க சிநேகிதன்,

    / அசத்துரிங்க..ம்ம்ம்ம்!!!
    இப்படிக்கு,
    அருட்பெருங்கோ ரசிகன்.../

    நன்றிங்க...
    அருட்பெருங்கோ நண்பன்னே சொல்லுங்க...

    ReplyDelete
  7. / பயணம் இனிமையாக‌
    இருந்தது.........../

    நன்றி எழில்...

    ReplyDelete
  8. வாங்க நந்தா,

    / எதை மேற்கோள் காட்டறது. இப்படியா வரி வரியா இழைச்சு இழைச்சு எழுதறது.

    கொன்னு எடுக்கறீங்களேப்பா.கலக்கலோ கலக்கல்./

    ம்ம்ம் நன்றிகள்... :)

    ReplyDelete
  9. / காதலிப்பதற்கு உங்கள் வலைப்பூ நிச்சயம் ஒரு பல்கலைக்கலகம்தான்/

    என்னது பல்கலைக் கலகமா? இது தெரியாம வந்த எழுத்துப் பிழைதான? ;)

    /ஒரு மாண்வனே பேராசிரியராக இருப்பது காதல் பெற்ற வரம்

    தொடருட்டும் தங்கள் காதல் பயணம்(பணி) தொய்வில்லாமல்

    மாணவன் மீறான் அன்வர/

    காதல் வரம் தான், காதலர்கள் கையில்தான் அதனை வரமாகவே வைத்திருப்பதா இல்லை சாபமாக்கிக் கொள்வதா என்பது இருக்கிறது!!

    ReplyDelete
  10. / என்ன பரிசுன்னு சொல்லுங்க./

    என்னங்க மணி கடைசி வரியிலதான் மேற்கோள் காட்டி க்ளூ கொடுத்திருக்கேனே??

    ReplyDelete
  11. என்ன சொல்ல அருட்பெருங்கோ.... வார்த்தைகள் வரவில்லை... அழகான காதல்.... என்பதா கவிதை என்பதா?? ஒரு காதல் கவிதையாய் என்று சொல்லலாமா??
    எனக்கு காதல் இங்கே கசக்கவில்லை காதல் இனிக்குதய்யா... வர வர காதல் இனிக்குதய்யா..... மனதெல்லாம் பட்டாம்பூச்சி அதுவே உங்கள் கவிதையின் வெற்றி.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வாங்க ஆதவன்,

    /என்ன சொல்ல அருட்பெருங்கோ.... வார்த்தைகள் வரவில்லை... அழகான காதல்.... என்பதா கவிதை என்பதா?? ஒரு காதல் கவிதையாய் என்று சொல்லலாமா??/

    கதை என்றும் சொல்லலாம் :)

    /எனக்கு காதல் இங்கே கசக்கவில்லை காதல் இனிக்குதய்யா... வர வர காதல் இனிக்குதய்யா..... மனதெல்லாம் பட்டாம்பூச்சி அதுவே உங்கள் கவிதையின் வெற்றி.... வாழ்த்துக்கள்/

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க...

    ReplyDelete
  13. காதலிக்கும் உலக தமிழ் மக்களே!

    உங்கள் காதலும், வாழ்வும் சிறக்க இவரிடம் கற்றுகொள்ங்கள்.

    அருமையன சம்பவ கோர்வைகள் நன்பரே,
    அனுபவமோ!

    முழுமையக நானே காதலித்த நறைவு,

    நன்றிகள் கோடி....

    ReplyDelete