Thursday, July 05, 2007

ஒரு காதல் பயணம் - 11

ஒரு காதல் பயணம் - முதல் பகுதி

என் ஆயுள் முழுவதுக்குமான

சந்தோசம்,
உன் அரை நொடிச் சிரிப்பில்
இருக்கிறது!
திருமண அழைப்பிதழ் அச்சடிக்க உங்கள் குடும்ப விவரம் வாங்கி வருவதற்காக உங்கள் வீட்டுக்கு வருகிறேன் நான்.
வரவேற்பறையில் நான் அமர்ந்திருக்க என்னோடுப் பேசிக்கொண்டிருக்கிறார் உன் அப்பா.
சகஜமாய் நான் உன்னைப் பார்க்க, நீயோ
பெண்பார்க்க வந்தபோது இருந்த நாணத்தை தேடிப்பிடித்து முகத்தில் பொய்யாகப் பூசிக்கொண்டு நிற்கிறாய்.
உதடு உன் அப்பாவோடு பேசிக் கொண்டிருக்க விழி உன்னோடுப் பேசப்பார்க்கிறது.
மறுமொழி பேச வேண்டிய உன் விழியோ குடையில் விழுந்த மழையாய் நழுவிக்கொண்டே போகிறது.

அழைப்பிதழின் மாதிரியை எழுதித் தந்த உன் அப்பா என்னை சரி பார்க்க சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.
என் மனதைப் போலவே உன் வீடும் ஏதோ பரபரப்பில் இருப்பதாக தோன்றுகிறது எனக்கு.
உங்கள் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவிற்கு நீங்கள் எல்லோரும்
கிளம்பிக் கொண்டிருப்பதை எனக்கு மட்டும் ஒலிபரப்புகிறாள் உன் தங்கை.

‘சரி, இன்றைக்கு உன்னோடு பேசும் பாக்கியம் இல்லை போல’ என்று நான் யோசித்துக் கொண்டிருக்க,
என்னைப் பார்த்து ஏதோ சைகை செய்கிறாய் .
குழப்பமாய் நான் விழிக்க, உன் அப்பாவிடம் ஏதோ பேசுகிறாய்.

வெளியில் வந்தவர், “நம்ம ஊர்க்கோவில்ல திருவிழாங்க..அதான் எல்லாரும் கிளம்பிட்டிருக்கோம்” என சிரிக்கிறார்.
சரி இதற்கு மேலும் அங்கு இருப்பது நல்லதல்ல என்று,
“அப்போ நானும் கிளம்புறேங்க!” என விடை பெறுகிறேன் நான்.
“அட நானும் அதான் சொல்லவந்தேன், நீங்களும் கிளம்புங்க திருவிழாவுக்குப் போயிட்டு சாயுங்காலம் வந்துடுவோம்…
நம்ம ஊரையும் சுத்திப் பாத்த மாதிரியிருக்குமில்ல” என சிரிக்கிறார் உன் அப்பா!
நான் உன்னைப் பார்க்கிறேன்.
“அட என் பொண்ணுதாங்க கூப்பிட சொன்னா!” என மறுபடியும் சொல்லிவிட்டு செல்கிறார் அவர்.
எல்லோரும் கிளம்பி வெளியில் வருகிறோம்.

என்னருகில் வந்து மெல்ல கேட்கிறாய்,”புடவைல நான் எப்படி இருக்கேன்”
ஒவ்வொரு ஆடையிலும் நீ ஒவ்வொரு மாதிரியிருப்பதாக உனக்கொரு நினைப்பு.
ஆனால் எல்லா ஆடையும் உன்னிடம் வந்தால் ஒரே மாதிரி அழகாக ஆகி விடுவதை எப்படி சொல்ல?

“உன்னக் கட்டியிருக்கதால புடவை ஏதோ அழகாதான் இருக்கு, ஆனா எனக்குப் பிடிக்கல”
சட்டென ,”ஏன்?” என்ற ஒற்றைக் கேள்வியைக் கேட்டுவிட்டு அங்கேயே நிற்கிறாய்.

“உனக்கு எது அழகா இருக்கும்னு நான் யோசிக்கலடா,
ஏன்னா எல்லாத்திலயும் நீ அழகாதான் இருக்கப் போற…
புடவை கட்டினா எத்தன எடத்துல அது உன்ன இறுக்கும், நிமிஷத்துக்கு ஒரு முறை அத நீயும் சரி பண்ணனுமில்ல…
பொதுவாவே அதனாலதான் எனக்குப் புடவையப் பிடிக்காது…
சுடிதார்னா இவ்வளவு பிரச்சினையில்லல்ல…
அதான் அப்படி சொல்லிட்டேன்… மன்னிச்சுக்கோ!”

எல்லோரும் காருக்குள் ஏறப் போக, உன் அம்மாவிடம் இருந்து சாவியை வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் ஓடியவள்,
ஒரு பச்சை சுடிதாரில் திரும்பி வருகிறாய்.
எதுவும் பேசாமல் காரில் ஏறி அமர்கிறோம்.
எனக்கும் உனக்கும் இடையில் அமர்கிறாள் உன் தங்கை.

பேச்சுப் பிரச்சினையாகும்போது எழுத்து கை கொடுக்குமென மண்டைக்கு உறைக்கிறது.
உன் தங்கையின் உள்ளங்கையை எடுத்து அதில் எழுதுகிறேன் “sorry” என்று.
என்ன செய்ய வேண்டும் என புரிந்து கொண்டவள் அதை உன்னிடம் காட்டுகிறாள்.
Sorry க்கு முன் I hate என எழுதி விட்டு அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டாய்.
பிறகு திரும்பவும் அவள் கையை இழுத்து sorry யை அடித்து விட்டு saree என எழுதுகிறாய்.

நான் I -ஐ அடித்து விட்டு why do you என எழுதுகிறேன்.
நீ why do வை அடித்து விட்டு because என எழுதுகிறாய்.
எல்லாவற்றையும் அழித்து விட்டு I am happy when u r comfortable…that’s why I said so..
என எழுதுகிறேன் நான்.
Happy-ஐயும் comfortable-ஐயும் இடம் மாற்றிப் போட்டு விட்டு said-ஐ அடித்து விட்டு did போடுகிறாய் நீ.
இப்படி அடித்துத் திருத்தி எழுதி முடித்ததில் தீர்ந்து போயின நம் ஊடலும், உன் தங்கையின் உள்ளங்கையில் இடமும்.

அதற்கு மேல் அவள் கையைத் தர மறுக்க, நீ உன் வலது கையை நீட்டினாய்.
உன் விரல்களை மெல்லப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு விரலிலும் உன் பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் எழுதுகிறேன்.
ஒவ்வொரு எழுத்துக்கும் உன் கைவிரல்கள் நெளிவதும், உன் உள்ளங்கை நழுவுவதுமாய் இருக்கப் போராடிதான் எழுதி முடித்தேன்.
விரல்களுக்கு முத்தமிட்டாய். ் உயிருக்குள் எதிரொலித்தது.

என் உள்ளங்கையில் நீ உதடு வரைய ஆரம்பிக்க, அதுவரை பொறுத்துக் கொண்டிருந்த உன் தங்கை “அப்பா” என அலறி விட்டாள்.
“என்னம்மா?” - உன் அப்பாவின் குரல்.
“இங்க பின்னாடி ரொம்ப சூடா இருக்குப்பா, நான் முன்னாடி வர்றேன்”
“ஊர் கிட்ட வந்துடுச்சு, கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ”
நாம் பொறுத்துக் கொள்கிறோம்.
நீ உன் தங்கையைக் கிள்ள அவள் மறுபடி கத்துகிறாள் “ அப்பா ”
“நீ இப்ப அடி வாங்கப் போற”
“அடச்சே, எங்க வீட்ல எல்லாருமே லூசுங்க” அலுத்துக் கொள்கிறாள் உன் தங்கை.

ஊர் வந்து சேர்கிறோம்.
நீங்கள் எல்லோரும் கோவிலில் இருக்க ஒரு மரத்தடியில் காத்திருக்கிறேன் நான்.
என்னிடம் வந்த உன் தங்கை,
“ ஏன் மாமா! உங்களுக்குக் கொஞ்சம் கூட அறிவில்லையா?
அந்தப் புடவைய எங்கக்காப் பிறந்த நாளுக்காக எடுத்தது!
அதுவும் உங்களுக்குப் பிடிச்ச பச்சைக் கலர் தான் வேணும்னு தேடிப் பிடிச்சு எடுத்தா!
நீங்க பாட்டுக்குப் பிடிக்கலன்னு சாதரணமா சொல்லிட்டீங்களே!”

அப்போது அங்கு வருகிற நீ அவளை அதட்டி அனுப்புகிறாய்.
உன்னை நேராய்ப் பார்க்காமல் நிற்கிறேன் நான்.

“ஹலோ சார், என்ன சோகமாயிட்டீங்க?”
“இல்ல… அது உன் பிறந்த நாளுக்கு எடுத்ததுனு ஏன் சொல்லல? உனக்குப் பிடிச்சுதான எடுத்த? அப்புறம் ஏன் சுடிதாருக்கு மாறின?”

“ஹலோ நீங்க மட்டும் என்ன? உங்களுக்கு பிடிச்சுதான ஒரு வருஷமா முடி வளர்த்திருந்தீங்க!
நான் அத நல்லால்லனு சொன்னவுடனே எதுக்கு வெட்டினீங்க?”
“அது….நானே தான் வெட்டனும்னு நெனச்சேன்… “

“சமாளிச்சது போதும்….இந்த மாதிரி நமக்குப் பிடிச்ச சின்ன சின்ன விஷயத்துல விட்டுக் கொடுக்கிறது ஒன்னும் தப்பில்ல….
சொல்லப் போனா இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள்ல தான் சந்தோஷமே இருக்கு..”
“அப்புறம்…மேடம்”

“அதுக்காக உனக்குப் பிடிச்ச எல்லாமே நான் பண்ணுவேன்னு எதிர்பார்க்காத…
உனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லங்கறதுக்காக நான் சாமி கும்பிடாம இருக்க முடியாது”
“நான் அப்படி எதுவும் சொல்லவேயில்லையே”

“……..”
“சரி அட்வைஸ் பண்ணதெல்லாம் போதும், உன்னோடப் பிறந்த நாள் எப்போன்னே நீ சொல்லலையே!”

“அடப்பாவி, அதுவே தெரியாதா… என்னோட ஜாதகத்துல தான் அது இருக்குமே.. பார்க்கலையா நீ”
“ஜாதகமெல்லாம் அப்பா, அம்மாவுக்காக தான், சரி நீ சொல்லு..எப்போ உன் பிறந்த நாள்?”

“அடுத்த வாரம்…புதன் கிழமை ”
“அடுத்த வாரமா?”

“ஆமா..அதுக்கு அடுத்த வாரம் உனக்கு கல்யாணம்…என்னதான் கல்யாணம் பண்ணிக்கப் போற…
அதாவது தெரியுமா? இல்ல அதுவும் தெரியாதா?”
“…….”

“நான் பேசிட்டே இருக்கேன்…நீ எதுவும் சொல்லாம இருக்க?”
“உனக்கு என்னப் பிறந்த நாள் பரிசு தர்றதுனு யோசிச்சுட்டு இருக்கேன்”

“என்னப் பெருசா தரப் போற…..காசுக்கு செலவில்லாம ஒரு கவிதை எழுதித் தரப்போற…அவ்வளவுதான”
“அவ்வளவு சின்னப் பரிசு கொடுத்தா அப்புறம், காதல் என்னக் கோவிச்சுக்காதா?
உன்னோட ஆயுசுக்கும் நீ மறக்காத மாதிரி.
இதுவரைக்கும் உலகத்தில எந்தக் காதலனும் தன்னோடக் காதலிக்குக் கொடுக்காதப் பரிசு ஒன்னுக் கொடுக்கப் போறேன்”

“டேய் சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுடா…ப்ளீஸ்”
“என்னப் பரிசுனு நாளைக்கு சொல்றேன், முடிஞ்சா நீயேக் கண்டுபிடி பார்க்கலாம்”

“சரி, ஏதாவது க்ளூ கொடேன்”
“அது ஒரு பொருள் கிடையாது…அவ்வளவுதான் சொல்ல முடியும்”

திருவிழா முடிந்து திரும்பிக் கொண்டிருக்கிறோம்.
காலையில் கிறுக்கியிருந்தக் கையை சுத்தமாகத் கழுவியிருந்த உன் தங்கை நம்மிடம் ஆளுக்கொரு கையை நீட்டுகிறாள்.
இருவருமே ஆளுக்கொரு ஜோடி உதடுகளை வரைகிறோம்.
வரையப்பட்ட இரண்டு ஜோடி உதடுகளையும் ஒட்ட வைத்து விட்டு நம்மைப் பார்த்து சிரிக்கிறாள் உன் தங்கை.
உனக்கந்த “இச்” சத்தம் கேட்டதா என்ன?

அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

15 comments:

  1. ஃபீல் பண்ண வெச்சுட்டீங்களே. காதலைப் பத்தி எழுதணும்னா பட்ட்ம் அப்படியே அருவி மாதிரி பொங்கி வருது.

    எல்லாருக்கும் இப்படி ஒரு தங்கச்சி இருந்தா நல்லாதான் இருக்கும்.

    //
    “ஹலோ சார், என்ன சோகமாயிட்டீங்க?”
    “இல்ல… அது உன் பிறந்த நாளுக்கு எடுத்ததுனு ஏன் சொல்லல? உனக்குப் பிடிச்சுதான எடுத்த? அப்புறம் ஏன் சுடிதாருக்கு மாறின?”

    “ஹலோ நீங்க மட்டும் என்ன? உங்களுக்கு பிடிச்சுதான ஒரு வருஷமா முடி வளர்த்திருந்தீங்க!
    நான் அத நல்லால்லனு சொன்னவுடனே எதுக்கு வெட்டினீங்க?”
    “அது….நானே தான் வெட்டனும்னு நெனச்சேன்… “//

    பேச்சு வரலை.

    ReplyDelete
  2. / அருட்பெருங்கோ= காதல் =வாழ்க!/

    வாழ்த்துக்களுக்கு காதலின் நன்றிகள் டெல்ஃபின் :)

    ReplyDelete
  3. அருமையான கதையா? கவிதையா? என்னவென்று அழைப்பது?

    இரு முறை வாசிக்க வைத்தது அதை என் நேசத்திற்குறிய சிலருடன் பகிரவும் செய்தது.

    ReplyDelete
  4. வாங்க நந்தா,

    / ஃபீல் பண்ண வெச்சுட்டீங்களே. காதலைப் பத்தி எழுதணும்னா பட்ட்ம் அப்படியே அருவி மாதிரி பொங்கி வருது./

    ம்ம்ம் காதல் பொங்கி வர வைக்குதோ?

    /எல்லாருக்கும் இப்படி ஒரு தங்கச்சி இருந்தா நல்லாதான் இருக்கும்./

    ஆமாம். எல்லோருமே இல்லாததுக்குதான ஆசைப்படறோம்?

    //
    “ஹலோ சார், என்ன சோகமாயிட்டீங்க?”
    “இல்ல… அது உன் பிறந்த நாளுக்கு எடுத்ததுனு ஏன் சொல்லல? உனக்குப் பிடிச்சுதான எடுத்த? அப்புறம் ஏன் சுடிதாருக்கு மாறின?”

    “ஹலோ நீங்க மட்டும் என்ன? உங்களுக்கு பிடிச்சுதான ஒரு வருஷமா முடி வளர்த்திருந்தீங்க!
    நான் அத நல்லால்லனு சொன்னவுடனே எதுக்கு வெட்டினீங்க?”
    “அது….நானே தான் வெட்டனும்னு நெனச்சேன்… “//

    பேச்சு வரலை./

    தன்னையேக் கொடுத்துவிடுற அளவுக்கு இல்லைனாலும் இந்த மாதிரியான விட்டுக் கொடுத்தல்கள் அவசியம்னு நெனைக்கிறேன் ... என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  5. வாங்க ரைசுதீன்,

    / அருமையான கதையா? கவிதையா? என்னவென்று அழைப்பது?/

    காதல் என்றே அழைக்கலாம்.

    /இரு முறை வாசிக்க வைத்தது அதை என் நேசத்திற்குறிய சிலருடன் பகிரவும் செய்தது./

    நன்றிங்க... :)

    ReplyDelete
  6. அம்சம் அருட்பெருங்கோ, எப்பவும் போல !!

    ReplyDelete
  7. பாவி! இதென்ன கற்பனையா? நிஜமா?
    இவ்ளோ உருகுதலா... முடியல சாமி!
    :)

    ReplyDelete
  8. எப்படிப்பா?? இப்படி?? காதல் வாழ்க...

    ReplyDelete
  9. / அம்சம் அருட்பெருங்கோ, எப்பவும் போல !!/

    நன்றிங்க வருத்தப்படாத வாலிபரே :)

    ReplyDelete
  10. வாங்க காயத்ரி,

    / பாவி! இதென்ன கற்பனையா? நிஜமா?
    இவ்ளோ உருகுதலா... முடியல சாமி!
    :)/

    நிஜமாகிற வயசு எனக்கில்லீங்க.. எல்லாம் கற்பனைதான்!!!

    ReplyDelete
  11. வாங்க சிநேகிதன்,

    / எப்படிப்பா?? இப்படி?? காதல் வாழ்க.../

    எல்லாம் அப்படித்தான்... :)

    ReplyDelete
  12. andha said,comfort,happy,did...summa padikkum pothey adhiruthilla...super :-)

    ReplyDelete
  13. வாங்க ஸ்யாம்,

    / andha said,comfort,happy,did...summa padikkum pothey adhiruthilla...super :-)/

    அப்படியா? :) இருக்கட்டும்... இருக்கட்டும்...

    ReplyDelete
  14. ippadi ellam kuda love pannuvangala? very very nice

    ReplyDelete