‘வரும்போது குட் ந்யூசோட வரனும். ஓக்கே வா?'
'பாப்போம் பாப்போம்'
தோழிகள் வழியனுப்ப, சிரித்துக்கொண்டே இளா கையசைக்க, எழும்பூரில் இருந்து
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கிளம்பியது.
அப்பர் பெர்த்திலேறி படுத்துக்கொண்டாலும் தூக்கம் வரவேயில்லை. நாளை
முதன்முறையாய் அவளைப் பெண்பார்க்க வருகிறார்கள். அங்கு போய் பொம்மை மாதிரி
உட்கார்ந்திருக்க வேண்டுமென்ற கடுப்பு கொஞ்சம் இருந்தாலும் ஒருமாதிரி
குறுகுறுப்பாகவும் இருந்தது.
அந்த வரனின் விவரங்களை அவளுடைய அம்மா தொலைபேசியில் முன்பே சொல்லியிருந்தார்.
அவனுடைய உயரம், எடையெல்லாம் தெரிந்தபோதே தனக்கு ஏற்ற மாதிரிதான் இருக்கிறது
என்று நினைத்துக் கொண்டாள். போட்டோவிலும் சுமாராக இருந்தான். ஓக்கேதான். ஆனால்
போட்டோவை வைத்து என்ன முடிவு செய்வது? நேரில் பார்த்தால் எப்படியிருக்கிறானோத்
தெரியவில்லை. முதல் இண்டர்வியூவிலேயே வேலை கிடைத்துவிட்டமாதிரி இப்பொழுதும்
நடந்துவிட்டாலென்ன என்று தோணியது. 'இளா! இது உன்னோட வாழ்க்கை…. லூசு மாதிரி
யோசிக்காதே' தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.
ஆனாலும் அப்படியொருவேளை நாளைக்கு வரப்போகிறவனுக்கே நம்மைப்
பிடித்துவிட்டாலும்…அது என்ன அவனுக்கு நம்மைப் பிடிப்பது? நமக்கு அவனைப்
பிடித்துவிட்டால் என்று வைத்துக்கொள்வோம். அது எப்படி இருக்கும் என்று யோசிக்க
ஆரம்பித்துவிட்டாள். 'மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனக்கும்
ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவனுக்கும் பொருந்தி வருமா?
இங்கிருக்கும் வொர்க் கல்ச்சர் அவனுக்குப் புரிந்திருக்குமா? ஆட்டோமொபைல்
கம்பெனியில் வேலையென்றால் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் தான் படித்திருப்பான்.
காலேஜில் பெண்களுடன் பழகியிருப்பானோ இல்லையோ தெரியவில்லை. நாம் இப்படி
நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவன் சரியான கடலை பார்ட்டியாக இருந்தாலும்
தெரியவாப் போகிறது. ச்சே இப்படியும் இருக்கக் கூடாது. அப்படியும்
இருக்கக்கூடாதென்று எதிர்பார்த்தால் பிறகு எப்படித்தான் இருப்பான்?' அவளால்
யோசித்துக் கொண்டிருப்பதை விட்டு வெளியேவரமுடியவில்லை. தானாக வலிய வேறு எங்கோ
நினைவைத் திருப்பினாள்.
எங்கெங்கோ சுற்றி விட்டு மறுபடியும் அங்கேயே வந்தது.
'இந்த அப்பா எப்படி இந்த வரனைப் பிடித்திருக்கிறது என்று சொன்னாரோ
தெரியவில்லையே!'
அவள் அப்பா அம்மா இருவருமே திருச்சியில் ஒரு துவக்கப்பள்ளியொன்றில்
ஆசிரியர்கள். அவன் குடும்பமோ சேலத்தில் இருந்தது.
'அவர்கள் ஏதோ பிஸினஸ் என்று மட்டும்தான் சொன்னார்கள். என்ன பிஸினஸ் என்று
நமக்கெப்படி தெரியும்? பெட்டிக்கடையும் பிஸினஸ்தான் எக்ஸ்போர்ட் கம்பெனியும்
பிஸினஸ் தான். குழந்தைகளுக்கு பாடம் எடுக்கிறவர்கள் மெண்டாலிட்டியும் பிஸினஸ்
பண்ணுகிறவர்கள் மெண்டாலிட்டியும் ஒன்று போலவா இருக்கும்?'
யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு திடீரென சிரிப்பு வந்தது. 'என்னமோ கல்யாணமே
நிச்சயமான மாதிரி எதற்கிப்படி யோசிக்கிறோம்? எதுவாக இருந்தாலும் அவனைப் பார்த்த
பிறகு யோசித்துக் கொள்ளலாம். ஆனால் எப்படியாவது அவனிடம் தனியாகப் பேசிப்
பார்த்துவிட வேண்டும். பேசிப் பார்த்தால்தான் ஆள் எப்படி என்று கொஞ்சமாவது எடை
போடலாம். இந்த சினிமாவில் எல்லாம் வருகிற மாதிரி 'பொண்ணுகிட்ட மாப்பிள்ள
கொஞ்சம் தனியாப் பேசனுமாம்' என்று யாராவது சொன்னால் நன்றாகத்தான் இருக்கும்.
ஆனால் அதெல்லாம் நம் வீட்டில் நடக்க வாய்ப்பில்லை. யாரிடமாவது அவன் செல்நம்பர்
வாங்கி வெளியில் எங்காவது சந்திக்கலாம். அதுவரை வீட்டில் எந்த முடிவும்
சொல்லிவிடக்கூடாது' கனவுகளில் முடிவெடுத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.
மறுநாள் மாலை. அவளைப் பெண்பார்க்க வந்திருந்தார்கள். அவள் உள்ளறையில்
உட்கார்ந்திருந்தாள். மாப்பிள்ளை மட்டும் வரவில்லையாம். அவனோடு மற்றொரு நாள்
மீண்டும் வருவதாகப் பேசிக்கொண்டார்கள். அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. "ச்சே
இப்படி கவுத்துட்டானே! இதற்காக இன்னொரு நாள்வேறு வர வேண்டுமா?" என்று கோபமும்
இருந்தது. சம்பிரதாயமானப் பேச்சுக்கள் எல்லாம் முடிந்து இரு குடும்பங்களுக்கும்
அந்த சம்பந்தம் பிடித்துப் போயிருந்தாலும் மாப்பிள்ளையுடன் அடுத்த வாரம்
வந்தபிறகு மேற்கொண்டு முடிவெடுக்கலாம் என்று சொல்லி அவர்கள் கிளம்புகிற நேரம்.
மாப்பிள்ளையின் அக்கா மட்டும் உள்ளறைக்கு வந்தாள்.
'இவரிடம், அவனுடைய மொபைல் நம்பர் கேட்டுப் பார்க்கலாமா? குறைந்தது போனிலாவது
பேசிப் பார்ப்போம். பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடலாம். இதற்காக இன்னொரு முறை
எதற்கு வரவேண்டும்' என்று யோசித்தாள்.
'உன்னோட மொபைல்நம்பர் கொடுப்பா… தம்பி கேட்டிருந்தான்' என்று மெதுவாக கேட்டு
அவள் எண்ணையும் வாங்கிக் கொண்டு 'நாங்க கிளம்பறோம். அடுத்த வாரம் தம்பியோட
வர்றோம்' என்று சொல்லிக் கிளம்பிப் போய்விட்டார்கள்.
'ச்சே அவன் நம்பரை ஏன் கேட்காமல் போனோம்?' என்று வருத்தப்பட்டுக்கொண்டாள்.
அடுத்த நாள் காலை அவள் செல்பேசிக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
'ஹலோ. நான் அருள் பேசறேன். நேத்து பொண்ணு பாக்க வந்தாங்களே…'
'ம்ம்ம் சொல்லுங்க'
'உங்கள மீட் பண்ணலாம்னுதான் திருச்சி வந்திருக்கேன். மீட் பண்ண முடியுமா?'
'…' என்ன சொல்வதென்று யோசித்தாள்.
'இல்ல போன்லயே பேசலாம்னாலும் எனக்கு ஓக்கே. ஒரு அர மணி நேரம் போதும். எப்போ
ஃப்ரியா இருப்பீங்கன்னு சொல்லுங்க நானே கால் பண்றேன்'
'இல்லப் பரவால்ல எங்கனு சொல்லுங்க நானே வர்றேன்'
வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து யோசித்துக் கொண்டே வந்தாள். அவனைப்
பிடித்திருக்கிறதா இல்லையா என்று கேட்டால் எதையும் வாயைத் திறக்கக் கூடாது.
முதலில் அவனிடம் என்னவெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை வரிசைப்
படுத்திக் கொண்டாள். பேசும்போதே பொய் சொல்கிறானா என்பதையும் கவனிக்க வேண்டும்.
முடிவெல்லாம் பொறுமையாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் என்ன கேட்பது?
அவன் படித்த பள்ளி, கல்லூரியைப் பற்றி கேட்க வேண்டும்.
வீட்டிலிருந்து படித்தானா இல்லை ஹாஸ்டலா?
எந்த மாதிரிப் படங்கள் பார்ப்பான்?
புத்தகம் எதுவும் படிக்கிற பழக்கமிருக்குமா?
ஏற்கனவே யாரையாவது காதல், கீதல் பண்ணியிருக்கிறானா?
திருமணத்திற்குப் பிறகு நான் வேலைக்குப் போவதை பற்றி என்ன சொல்லுவான்?
கேட்க வேண்டியவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே சொன்ன இடத்திற்கு வந்து
சேர்ந்ததும் அவன் மொபைலுக்கு அழைத்தாள்.
அவனும் வந்ததும் தனியே சென்று அமர்ந்தார்கள். அவனே ஆரம்பிக்கட்டும் என்று
அமைதியாக இருந்தாள்.
'நேத்தே நான் வந்திருந்தா அங்கேயே எங்கிட்ட உங்களப் பிடிச்சிருக்கான்னு
கேட்டிருப்பாங்க. போட்டோவுல சிம்பிளா இருந்த உங்களப் பாத்ததுமே எனக்குப்
பிடிச்சிருந்தாலும், உங்களுக்கும் என்னப் பிடிச்சிருக்கான்னுத் தெரியல. அங்க
எல்லார் முன்னாடியும் நீங்க ஃப்ரியா உங்க விருப்பத்த சொல்லிட முடியுமான்னு
சந்தேகமா இருந்ததாலதான் தனியா மீட் பண்ணலாம்னு கூப்பிட்டேன்.'
ரொம்ப ஸ்மார்ட்டாக நடிக்கிறானோ? ஆனால் கண்களைப் பார்த்தால் அப்படியொன்றும்
தெரியவில்லை. அவனேப் பேசட்டும் என்று புன்னகைத்தபடியே இருந்தாள்.
'ஒரு மணி நேரத்துல ஒருத்தர முழுசா ஜட்ஜ் பண்ணிட முடியாதுதான். ஆனா வெளிப்படையா
பேசினோம்னா ஒரு சின்ன அண்டர்ஸ்டாண்டிங் வரலாம். அதுக்கப்புறம் உங்களுக்கும்
என்னைப் பிடிச்சிருக்குன்னுத் தெரிஞ்சா வீட்ல சொல்லிக்கலாம். அந்த ஐடியால தான்
வந்திருக்கேன். என்னப் பொருத்தவரைக்கும் எனக்கு ஆப்போசிட் கேரக்டர்
உள்ளவங்ககூடவும் என்னால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும்… சின்ன வயசுல இருந்தே பெரிய
எதிர்பார்ப்பு எதுவுமில்லாம வளர்ந்துட்டேன். அதனால எனக்கு வரப் போறவ
இப்படித்தான் இருக்கனும்னு கனவு கண்டதில்ல. அதனால உங்களப் பத்தி நீங்க
சொல்லுங்க தெரிஞ்சுக்கறேன்… எந்த காலேஜ்ல படிச்சீங்க? என்ன மாதிரி புக்ஸ்
பிடிக்கும்? இந்த மாதிரி…'
'உண்மைய சொன்னா எனக்கும் இப்போ உங்களப் பாத்ததுமே பிடிச்சிடுச்சு…சோ தாராளமா
வீட்ல சம்மதம் சொல்லிடுங்க…. அப்பறம் என்னப் பத்தி சொல்லனும்னா…'
எந்த முடிவை பேசிமுடித்தபிறகு எடுக்கலாமென்று நினைத்தாளோ, அதனை முதலிலேயே
எடுத்ததற்கும், அதனை அப்பொழுதே அவனிடம் சொல்லிவிட்டதற்கும், அரை மணிநேரம் என்று
சென்றவள் மூன்றுமணிநேரம் அவனிடம் பேசிக்கொண்டிருந்ததற்கும்… வீடுவரும்வரை
அவளுக்குக் காரணம் தெரியவில்லை.
வீட்டில் நுழைகையில் பண்பலையில் 'பிரிவோம் சந்திப்போம்' படத்திலிருந்து பாடல்
ஒலித்துக் கொண்டிருந்தது. 'கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை…கொண்டேன்
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை…'
o0o
குறுந்தொகை :
பாடல் எண் – 40 குறிஞ்சி. தலைவன் கூற்று.
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"
-செம்புலப் பெயல்நீரார்
என் தாயும் உன் தாயும் யாரோ? எவரோ?
என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்?
நீயும் நானும் தான் எந்த வகையில் அறிமுகமாகியிருந்தோம்?
(ஆனாலும் முதல் சந்திப்பிலேயே)
செம்மண்ணில் விழுந்த மழைநீர்போல
நம்நெஞ்சங்கள் அன்பினால் இரண்டறக் கலந்துவிட்டன.
:-)
ReplyDeleteanna naanum intha Kurunthogai paadal padichirukken aanaa athukku apt-a oru kathai ezhuteerukkeenga paarunga really superb....!!
//உண்மைய சொன்னா எனக்கும் இப்போ உங்களப் பாத்ததுமே பிடிச்சிடுச்சு…சோ
ReplyDeleteதாராளமா வீட்ல சம்மதம் சொல்லிடுங்க//
இப்படிதாங்க,என்னோட நன்பரும்,அவரோட வருங்கால மனைவியை சந்திக்க
அண்ணபூர்னணா பீப்பிள் ஒட்டலுக்குப்
போயி பார்த்தான்.இருவருக்கும் பிடித்து போகவே,திருமணம் முடிந்தது.ஆனால்
அவன் இப்போது சொல்கிரான் நாண் அன்னைக்கு அங்கு(அண்ணபூர்னணா)போகாமல் இருந்து
இருக்கனும்.இவள் தொந்தரவு இல்லமல் நிம்மதியாக இருந்துஇருப்பேன்ன்னு.
ஆஹா..அருமை மாப்பி ;))
ReplyDelete:) அந்தப் பாட்டை எழுதுனவருக்கும் செம்புலம் பேருலயே சேந்துருச்சு. அந்த
ReplyDeleteஅளவுக்கு அருமையான கவிதை அது. இன்னைக்கும் அது உண்மை. உலக உண்மைகள் வரிசைல
இதுவும் உண்மை. :)
கதை....நல்லாவே இருந்துச்சு... இப்பிடித்தான் நீங்க பொண்ணு பாக்கப்
போனப்போ செஞ்சீங்களா? ;)
கற்பனைதான். இருந்தாலும் இப்படியும் நடந்தால் நல்லாத்தான் இருக்கு.
ReplyDeleteஎத்தனை கேள்விகள் அவள் மனசில்.
மூன்று மணி நேரத்தில் ஒன்றும் கேட்டிருக்க மாட்டாள். இருந்தும் மனங்கள்
கலந்துவிட்டன. வெகு அருமை.
குறுங்கதை நன்றாக இருந்தது. நறுமுகையே ( சிறைச்சாலை ) பாடலிலும் வரும் வரிகள் தானே இது
ReplyDelete@Sri,
ReplyDeleteம்ம்ம் நன்றிகள்!!!
@நித்தியானந்தம்,
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்! அவ்வளவுதான் எனக்கு சொல்லத்
தெரிகிறது…
@கோபிநாத்,
நன்றி கோபி!!!
@ராகவன்,
ம்ம்ம் ரொம்ப நல்ல பாடல் இது! நீங்க உண்மைனு சொல்றீங்க… மேல
நித்தியானந்தம் என்ன சொல்றாருன்னு பாருங்க :)
@வல்லி,
சிலருக்கு கண்டதும் காதல் வருதில்லையா? அது மாதிரினு நெனச்சுக்கலாம்.
நன்றிங்க!
//ஆட்டோமொபைல் கம்பெனியில் வேலையென்றால் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் தான் படித்திருப்பான். காலேஜில் பெண்களுடன் பழகியிருப்பானோ இல்லையோ தெரியவில்லை. நாம் இப்படி நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவன் சரியான "கடலை பார்ட்டியாக" இருந்தாலும் தெரியவாப் போகிறது //
ReplyDeleteதல நீங்க எப்படி? engineering college student ன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க
Nanba I liked the story..Thirukurral kathaigal mathiri ithu kurunthogai kathigalla..kallakku..
ReplyDeleteமீராவின் காதல் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது :
ReplyDeleteஉனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
நீயும் நானும் ஒரே ஜாதி
சைவ கைக்கோள முதலியார்
....
....
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே
(நினைவிலிருந்து எழுதுகிறேன். வரிகள் சரியாய் இருக்காது).
செம !!
ReplyDelete@ சீதை தேடும் ராமன்,
ReplyDeleteஆமாங்க ராமன் இதே வரிகளத்தான் கொஞ்சம் மாத்திப்போட்டிருப்பார் வைரமுத்து!
/தல நீங்க எப்படி? engineering college student ன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க/
பொறியியல் தான் படிச்சேன். ஆனா கல்லூரிக்காலத்துல நான் மொத்தமா பொண்ணுங்ககிட்ட பேசினத ரெண்டு A4 அளவு காகிதத்துல எழுதி முடிச்சுடலாம். அவ்வளவுதான் என்னோட திறமை :)
குமரேசன், ஆல்பர்ட்,
ReplyDeleteநன்றிகள்!!!
சுந்தர், அந்த கவிதை :
ReplyDeleteஎன் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
என் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஜாதி
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்
நானும் நீயும் உறவின்முறை
எனது ஒன்று விட்ட
அத்தை பெண் நீ
எனவே
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே!