Friday, February 29, 2008
காதலும் கடைசியுமாக
வெறும் கண்களை மட்டும் வைத்துக்கொண்டு
என்ன செய்வான்?
*
எப்பொழுதும் கண்களையேப் பார்க்கிறானே
என்னைக் காதலிக்கிறானா?
கண்ணைக் காதலிக்கிறானா?
*
தினமும் பார்வையை வாங்கிக்கொண்டு
வெட்கத்தைக் கொடுக்கிறேன்.
மறுநாள் சந்திப்பிலோ வாங்கிய பார்வை அவனிடமும்
கொடுத்த வெட்கம் என்னிடமுமே மிஞ்சுகிறது.
*
ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?
*
என்ன சொன்னாலும் தலையாட்டுகிறவனை சீண்டுவதற்காகவே
‘சண்டை போடலாமா?’ என்று கேட்டால்…
‘சண்டையெல்லாம் கூடாது’ என்று சண்டைக்கு வராமல்
அதற்கும் ‘சரி’யென்று தலையாட்டுகிறவனிடம் எப்படி சண்டை போட?
Wednesday, February 27, 2008
மரண விளையாட்டு
உயிர் குடிக்கும் உக்கிரத்துடன்
பதுங்கி பதுங்கி திரும்பவும் வருகிறது.
சிக்கிவிட்ட இரையென நடுங்குகிறேன் நான்.
இரக்கமேதுமின்றி மீண்டுமொருமுறை
என்னைக் கொன்றுவிட்டு
சலனமேயில்லாமல்
என்னருகிலேயே படுத்துறங்குகிறது உன் நினைவு.
மறுபடியும் உயிரூட்டி
மரண விளையாட்டு விளையாட!
*
நம் காதலின்
மிக நீண்ட உரையாடல்
உனது மௌனம்.
*
அழகான கவிதையாய்
நுழைந்தவள்
கனமான கவிதையை
விட்டுச் செல்கிறாய்
*
நீ. நான். காதல்.
முக்கோண விளையாட்டில்
எப்போதும் தோற்கிறோம்
நானும் காதலும்.
*
நாளை முதல்
உன்னை மறந்துவிடுவதாக சொன்னது உண்மைதான்.
ஆனால் எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’ இருக்கிறது.
Tuesday, February 26, 2008
இருக்கும் வரை..
பக்கத்துவிட்டுப் பெண் தீட்டிவைத்த வாசல்கோலம்
மாலை வெயில் பட்டு மினுங்கிக் கொண்டிருக்கிறது.
எதிரில் வீடு கட்டுவதற்காய்க் குவித்து வைத்த ஆற்றுமணலில்
மணல்வீடு கட்டும் சிறுமிகளின் கைகளில் வழிந்துகொண்டிருக்கிறது
அடுத்த சிறுமியின் வீட்டுக்கான மணலும் அன்பும்.
போலிஸ்காரர்வீட்டின் வாசல்படியில் அமர்ந்துகொண்டு
கதைபேசும் நான்கைந்து கிழவிகளின் சிரிப்பில்
கடந்தகாலத்துக்கு நடைபோடுகிறதிந்த தெரு.
சுற்றுச்சுவரின்மீது எட்டிப்பார்த்து கீழே தொங்கும் பூஞ்செடி
கூந்தலிலெல்லாம் பூக்கள் சூடிக்கொண்டு மணப்பெண்ணென
தெருவையே வெட்கம் சுமந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
சற்றுநேரத்தில் வரப்போகிற
...தண்ணீர்லாரியினால் அழியக்கூடுமந்த கோலம்.
...மேஸ்திரியாள் துரத்தியதும் மணல்வீடுகள் மறுபடியும் வீட்டுமணலாகும்.
...போலிஸ்காரரால் நிகழ்காலத்துக்கு திரும்பிவிடும் தெரு.
...விபூதிக்காரரின் விரல்கள் கிள்ளி பூவிழந்து விதவையாகும் பூஞ்செடி.
அதனாலென்ன?
இருக்கும்வரை பார்த்துக்கொள்ளலாம்.
இல்லாது போனதும் நினைத்துக்கொள்ளலாம்.
Monday, February 25, 2008
எதனெதற்கோ இழுத்துச் செல்லும் மனதில்..
சிரித்தபடி அமர்ந்திருந்தது ஒரு குழந்தை.
குழந்தையைப் பார்த்ததும்
பால்யம்...
பள்ளிக்கூடம்...
தமிழய்யா...
தமிழ்...
என்றும்,
தமிழை நினைத்ததும்
கவிதை...
இலக்கியம்...
திரைப்படம்...
இசை...
என்றும்,
இசையை நினைத்ததும்
இளையராஜா...
எஸ்பிபி...
எஸ்பிபி சரண்...
சென்னை 28...
என்றும்,
சென்னையை நினைத்ததும்
வெயில்...
கடல்...
கடற்கரை...
காதல்...
என்றும்,
எதை நினைத்தாலும்
எதனெதற்கோ இழுத்துச் செல்லும் மனதில்
அடுத்து
உன்னை நினைத்ததும்
நீ மட்டுமே நிறைகிறாய்!
Wednesday, February 20, 2008
தப்பித்துச் சென்று சிறைபடுதல்
எனது அறைச்சுவரெங்கும்
ஆணியில்லாமல் தொங்குகின்றன
உனது புகைப்படங்கள்.
ஒன்றில் சிரிக்கிறாய்.
ஒன்றில் சிணுங்குகிறாய்.
ஒன்றில் பயப்படுகிறாய்.
ஒன்றில் முகம்புதைத்து அழுகிறாய்.
ஒன்றில் தூர விலகி நடக்கிறாய்.
இன்னும் பலவற்றில் இன்னும் பல மாதிரி.
என்னை வெறுமைக்கு துரத்துகிற பாவனையில்
தினமொன்றாய்ச் சேர்ந்து கொண்டே இருக்கிறது.
உன்னிடமிருந்து தப்பிக்கும் முடிவுடன்
எல்லாப் படங்களையும் மூட்டைகட்டி
கொல்லைப்புற ஆழத்தில் புதைத்துவிட்டு திரும்புகிறேன்.
புகைப்படங்கள் இருந்த இடத்திலெல்லாம்
உன்னை இன்னுமதிகமாய் நினைவூட்டியபடி
இப்பொழுது தொங்கிக்கொண்டிருக்கிறது
அவற்றை மூட்டைகட்டிய கணம், கனமாய்!
Tuesday, February 19, 2008
ஜன்னல் வழியே வெட்கமின்றி ரசித்திருக்கிறேன்
பட்டம் விட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதில்
ஆசையுடன் விளையாட அதுவும் வந்திருக்கிறது.
விபத்தில் அடிப்பட்ட கல்லூரி நண்பனை
மருத்துவமனை தூக்கிச்சென்ற பதற்றமான இரவில்
என்னுடன் சேர்ந்து அழுதிருக்கிறது.
அலுவலகத்துக்கு இரு சக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த
ஒரு திங்கட்கிழமையின் பரபரப்பான காலையில்
என்வேகத்தில் என்னருகிலேயே பயணித்திருக்கிறது.
நெருங்கிய உறவின் மரணமொன்றில்
சுடுகாட்டிலிருந்து திரும்பும்வழியிலேயே
எங்களைக் குளிக்க வைத்திருக்கிறது.
அப்பொழுதெல்லாம் சபித்துவிட்டு
வீட்டின் அறைக்குள்
நாற்காலியில் சாய்ந்துகொண்டு,
சூடான தேநீரைப் பருகியபடி
ஜன்னல் வழியே வெட்கமின்றி ரசித்திருக்கிறேன்
அதன் பொழிவை!
Monday, February 18, 2008
ஹலோ யார் பேசறது? - 2
“யாருன்னே தெரியல இந்த நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்துட்டே இருக்குடா”
“ஒரு ரூபா காயின்ஸ் இருக்கா?”
“இருக்கு”
“எடுத்துட்டு வா!”
***
“ஹலோ யார் பேசறது?”
“நான் பாரதியார் பேசறேன்”
“யாரு?”
“பாரதியார் தெரியாதா? சரி அங்க திருவள்ளுவர் இருக்காரா?”
“திருவள்ளுவரா?”
“திருவள்ளுவர் இல்லையா? இந்த நம்பர் கொடுத்து கால் பண்ண சொன்னதே அவர்தாங்க…”
“அப்படிலாம் யாரும் இங்க இல்ல…”
“ஹலோ ஹலோ”
கொஞ்ச நேரம் கழித்து…
“ஹலோ யாரு?”
“நான் திருவள்ளுவர் பேசறேன்”
“என்னது?”
“திருவள்ளுவர தெரியலையா? சரி விடுங்க… என்னக் கேட்டு கொஞ்ச நேரம் முன்னாடி பாரதியார் கால் பண்ணாரா?”
“ஹலோ உங்களுக்கு இப்போ என்ன வேணும்?”
“என்ன மீட் பண்ணனும்னு பாரதியார் சொன்னார். நாந்தான் உங்க நம்பர் கொடுத்தேன். மறுபடியும் கால் பண்ணாருன்னா என்ன கி.மு 23 வது வருசத்துல வந்து மீட் பண்ண சொல்றீங்களா? ஹலோ ஹலோ…”
கொஞ்ச நேரம் கழித்து…
“ஹலோ”
“நான் பாரதியார் பேசறேன்…”
“இங்க பாரதியாரும் இல்ல திருவள்ளுவரும் இல்ல போன வைக்கிறியா இல்லையா?”
“ஹலோ… ப்ளீஸ்…ப்ளீஸ்…”
(தொடரும்)
Friday, February 15, 2008
காதல் வாரம் - 5
எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு!
*
எல்லா கணங்களும் உன் நினைவுதானென்று
பொய் சொல்லவில்லை. ஆனால்…
ஒரு நொடிக்கு குறைந்தது ஒரு முறையேனும்
உன்னைதான் நினைக்கிறேன்.
*
நீ பிரிந்தபிறகும் கூட
‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
*
இதயம் லேசாக்கிய உன் நினைவெல்லாம்
இன்று சுமக்க முடியா கனமாய் மாறுவதேன்?
*
உன்னை நினைத்துக்கொள்ள மறக்கும்வரை
பிரிந்துவிட்டதாய் சொல்வதெல்லாம் பொய்தான்!
*
முட்களை மட்டும்
பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
என் காதல்!
*
Thursday, February 14, 2008
Wednesday, February 13, 2008
Tuesday, February 12, 2008
Monday, February 11, 2008
காதல் வா(வ)ரம் - 1
அடங்க மறுக்கும்
திமிரான கவிதை நீ!
*
என் காதலுக்கு
சிறப்பென்று சொல்லிக்கொள்ள
எதுவுமேயில்லை.
அது வெகு இயல்பானது,
என் சுவாசத்தைப் போல!
*
நீ பேசிய மொழியனைத்தும்
காதலின் தேசியமொழிதான்.
*
நீண்ட பிரிவுக்குத் தயாராகும்போது
உன் விழி திரட்டிய நீர்ச்சொட்டில்
அடர்ந்து கிடந்தது காதல்!
*
நாம் நடந்த பாதையில்
நான் மட்டும் நடக்கையில்
பிஞ்சுக்காற்று தோள்தொட
உன் விரலென்று திரும்பி
ஏமாந்திருக்கிறேன்!
*
Wednesday, February 06, 2008
ஹலோ யார் பேசறது? - 1
‘அடப்பாவிகளா… கிளாஸ் புள்ளயோட மூனு இண்டர்னல் பேப்பர் மட்டும்தாண்டா ஜெராக்ஸ் எடுத்துப் பாத்துட்டு இருக்கேன். இதுவே உங்களுக்குப் பொறுக்கலையா?’
‘புக்க பாத்து மண்ட காயற நாங்கலாம் அப்ப கேணையனுகளா?’
‘மக்கா உனக்கு நாளைக்கு மதியம் தான் எக்ஸாம். எனக்கு காலையில இருக்கு. ச்சும்மா அலப்பறையக் கொடுக்காத’
‘டேய் இவன் ஓவரா பேசறாண்டா. புடுங்குடா அந்த ஜெராக்ச’
ஜெராக்ஸ் பேப்பர்கள் பிடுங்கப்பட்டு, கிழிக்கப்பட்டு ஜன்னலில் பறக்கின்றன.
‘நிம்மதியாடா? படிக்கிறதுக்கு ஒரு மெட்டிரியலும் எங்கிட்ட இல்ல. இப்போ என்னய என்ன பண்ண சொல்றீங்க?’
‘FMல இவரு ஒருத்தர் இனிய இர்ர்ர்ர்ரவில் னு எப்ப பாத்தாலும் அடித்தொண்டையிலேயே கத்திட்டு இருக்காரு. இவருதான் இப்படினா விளம்பரம் போட்றவனுங்க தொல்ல அதுக்கு மேல. ஒரு ரவை, மைதாவுக்கு எத்தன தடவதான் போன் நம்பர் கொடுப்பானுங்களோ… ஒரு பாட்டு ஒழுங்கா போட மாட்டேன்றானுங்கனு நாங்க கடுப்புல இருக்கோம். நீ மட்டும் படிக்கிற மாதிரி சீன் போட்டுட்டு இருந்தா எரிச்சல் வராதா?’
‘சரி விடு. ஒரு ரூபா காயின் இருக்கா?’
‘ம்ம்ம்’
‘எடுத்துட்டு வா’
.....
‘ஹலோ **** ரவா மைதா கம்பெனிங்களா?’
‘ஆமாங்க’
‘வணக்கமுங்க… நாங்க சின்னியம்பாளையத்துக்கு பக்கத்துல இருந்து பேசறமுங்க…நம்மூர்ல ரொம்ப வருசமா மழையே இல்லாமப் போயிருச்சுங்க’
‘சரி’
‘மழை பெய்யறதுக்காவ நம்மூரு சடங்கொன்னு பண்ணிறலாம்னு… அதாங்க கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணலாம்னு ஊர்ல கூட்டம்போட்டு முடிவு பண்ணிருக்கோமுங்க.. மொத்தம் ஒரு முன்னூறு, நானூறு பேரு கூடுவாங்க… கல்யாணம்னு சொல்லிட்டு சாப்பாடு போடாம இருக்க முடியுமுங்களா?’
‘சரி…உங்களுக்கு என்ன வேணும்?’
‘சாப்பாடு போட்டா கட்டுபடியாகாதுன்னு அதுக்குப் பதிலா டிபன் போட்டுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்… ஒரு நானூறு பேருக்கு உப்புமா கிண்டனும்னா எவ்வளவு ரவை வேனுங்க?’
‘ஒரு அம்பது கிலோ ஆகுங்க…ஆர்டர் கொடுக்கனும்ங்களா?’
‘ஆமாங்க ஆர்டர் கொடுக்கனும். ஆனா அம்பது கிலோ வேணாம். ஒரு அர கிலோ இருந்தா போதும்’
‘என்னது அர கிலோவா?’
‘ஆமாங்க எங்களுக்கெல்லாம் வேற கம்பெனில வாங்கிட்டோம். ஆனா பொண்ணும், மாப்பிள்ளையும் உங்க கம்பெனி ரவைல தான் உப்புமா சாப்பிடுவோம்னு ஒரே அடம் பண்றாங்கங்க…’
‘நீங்க மொதலாளிகிட்டவே நேரா பேசிக்குங்க… ’
‘ஹலோ… ஹலோ…’
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ
Tuesday, February 05, 2008
நீங்களுமா நீலகண்டர்?
சரி விசயத்திற்கு வருவோம். கருத்து மழைக்கு நடுவே இடைச்செருகலாக அங்கங்கே காதல் வர்ணனைகளும் இருக்கின்றன. நமக்குத் தேவையான அதை மட்டும் பார்ப்போம் :-) பொருள் விளக்கிக் கூற வேண்டிய அளவுக்கு இல்லாமல் ஓரிரண்டு முறை நிதானமாக வாசித்தாலே புரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு மிக மிக எளிமையாகவே இருக்கின்றன எல்லாப் பாடல்களும். பொருள் வேண்டுமென்றால் அருகிலேயே ஞானவெட்டியான் அவர்களுடைய பதிவிற்கு இணைப்பும் கொடுத்துள்ளேன், சொடுக்கி வாசித்துக் கொள்ளலாம். வாங்க படிக்கலாம்…
பாடல் எண் - 10
வண்டு மொய்த்தனைய கூந்தல் மதன பண்டாரவல்லி
கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளிமொழி வாயின் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ கனியொடு கலந்த பாகோ
அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே
( இப்படிதான் ஆரம்பிக்கனுமோ? பொருள் )
பாடல் எண் – 19
தேனுகர் வண்டு மது தனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்புவின் கனி என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியும் வந்தது என்றெண்ணி மலர்கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது எனப் புகன்றாள்.
( என்னா கற்பனை… என்னா கற்பனை… பொருள் )
பாடல் எண் – 44
அத்தியின் மலரும் வெள்ளை யாக்கைகொள் காக்கைதானும்
பித்தர்தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதம் தானும்
அத்தன் மால் பிரம்ம தேவனால் அளவிடப் பட்டாலும்
சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லை கண்டீர்.
( இவரையும் புலம்ப வச்சிட்டாங்களே… பொருள் )
பாடல் எண் - 76
அன்னம் பழித்தநடை யாலம் பழித்த விழி அமுதம் பழித்த மொழிகள்
பொன்னம் பெருத்த முலை கன்னங் கறுத்த குழல் சின்னஞ் சிறுத்த இடை பெண்
என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்
சின்னஞ் சிறுக்கியவள் வில்லங்கம் இட்டபடி தெய்வங் களுக்கு அபயமே!
( இதுக்கெல்லாம் கடவுளக் கூப்பிடலாமா? பொருள் )
பாடல் எண் – 83
உண்ணல் பூச்சூடல் நெஞ்சு உவத்தல் ஒப்பனை
பண்ணல் எல்லாம் அவர் பார்க்கவே அன்றோ?
அண்ணல் தம் பிரிவினை அறிந்தும் தோழிநீ
மண்ண வந்தனை இது மடமை ஆகுமால்.
( பிரிச்சுட்டாங்களோ? பொருள் )
பாடல் எண் – 89
தண்டுலாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முகத்தருகு ஏந்தினாள்
கெண்டை கெண்டை எனக்கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்.
( இந்த உவமை எத்தன வருசமா இருக்கு? பொருள் )
பாடல் எண் - 91
நிலைத்தலை நீரில் மூழ்கி நின்றவள் தன்னை நேரே
குலைத்தலை மஞ்ஞை கண்டு கூ எனக் காவில்ஏக
முலைத்தலை அதனைக் கண்டு மும்மதக் கரிவந்துற்ற
தலைத்தலைச் சிங்கம் என்று அக்களிறு கண்டு ஏகிற்றம்மா.
( இனிமே ‘சிங்கம்ல’ அப்படினு சொல்லிக்குவாங்களோ? பொருள் )
பாடல் எண் - 101
மாகமா மேடை மீதில் மங்கை நின்று உலாவக் கண்டு
ஏகமா மதி என்றெண்ணி இராகு வந்துற்ற போது
பாகுசேர் மொழியினாளும் பற்றியே பாதம் வாங்கத்
தோகைமா மயில் என்றெண்ணித் தொடர்ந்த ரா மீண்டதன்றே.
(ஆகா ஆககா… பொருள் )
பாடல் எண் - 106
கொல்உலை வேல் கயல்கண் கொவ்வை அம் கனிவாய்மாதே
நல்லணி மெய்யில் பூண்டு நாசிகாபரணி மீதில்
சொல்லதிற் குன்றி தேடிச் சூடியது என்னோ என்றான்
மெல்லியல் கண்ணும் வாயும் புதைத்தனள் வெண்முத்தென்றாள்.
( என்னமா சமாளிக்கிறாங்கப்பா! பொருள்)
பாடல் எண் – 107
அருகில் இவளருகில் இவளருகில் வர உருகும்
கரிய குழல் மேனியவள் கானமயில் சாயல்
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே.
(நீங்களுமா நீலகண்டர்? பொருள்)
பாடல் எண் - 108
அலகு வாள்விழி யிழை நன் னுதல்
திலகம் கண்டெதிர் செஞ்சிலை மாரனும்
கலகமே செய்யும் கண் இதுவாம் என
மலர் அம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான்.
( ம்ஹும் … முடியல… பொருள்)
இன்னுமிருக்கிற சிற்றின்பப் பாடல்களையெல்லாம் விளக்கினால் தமிழ்மணத்தில் சூடான இடுகைகளில் இடம்பிடிக்கும் அளவுக்குக் கூட பாடல்கள் இருக்கின்றன :) அதனால் சிற்றின்பத்தை நிறுத்திவிட்டு, அழகான கருத்துடன் எளிமையான பாடல்கள் சில…
பாடல் எண் - 1
ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே.
பாடல் எண் – 4
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் கும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே
பாடல் எண் – 5
கதிர்பெறு செந்நெல்வாடக் கார்க்குலம் கண்டு சென்று
கொதிநிரைக் கடலில் பெய்யும் கொள்கைபோல் குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார் நிலை இலார்க்கு ஈயமாட்டார்.
பாடல் எண் – 8
தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்து இடைஇருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே.
பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். எல்லாப் பாடல்களும் மதுரைத் திட்டத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நல்ல உவமை + அழகான சந்தம் + தமிழின் இனிமையுடன் நிறையப் பாடல்கள் இருக்கின்றன. வாசித்துப் பாருங்கள்…
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
Sunday, February 03, 2008
நன்றி + பிடித்த பதிவு + பிறந்த நாள் வாழ்த்து!
ஒரு வாரமாய் எனது பதிவுகளை வாசித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள், மடலனுப்பியவர்கள், நேர்மையான விமர்சனம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும்… அழியாத எனது அன்பும், நன்றிகளும்!
ஒரு வாரம் தொடர்ந்து எழுதினால் அயற்சி ஏற்படுமென்பதற்கு மாறாக இன்னும் சிறப்பாக எழுதவேண்டும் என்கிற ஆவல் உண்டாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சிறுகதை எழுதப் பழக வேண்டுமென்கிற எனது ஆசை அதிகப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன். ( எனது மொக்கைகள் கவுஜை வடிவத்தில் மட்டுமல்ல கதை வடிவத்திலும் இனி உங்களை இம்சிக்கும் :) )
அனைவருக்கும் நன்றி.
***
நான் எழுதியப் பதிவுகளில் பிடித்ததொன்றைப் பற்றி பதிவிட அழைத்திருந்தார் எழில்.
எல்லாப் பதிவுகளுமே பிடித்த பதிவுகள்தாமென்றாலும், நான் எழுதிய பிற கவிதைகளின் நடையிலிருந்து மொத்தமாய் மாறுபட்டிருக்கும் இந்தக் கவிதையெனக்கு மிகவும் பிடிக்கும்.
***
இன்று தனது முதல் பிறந்துநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் என் அண்ணன் மகள் மித்ராவுக்கும் இந்தப் பதிவில் எனது வாழ்த்துகள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
Friday, February 01, 2008
மரமெல்லாம் மரம் மட்டுமல்ல!
நின்றபடி தென்னை.
நீள்வதும், குறைவதும், மறைவதுமாய்
அலைந்தபடியே அதன் நிழல்.
*
வான்தொடும் பிரயத்தனத்துடன்
வளர்ந்த ஆலஞ்செடி,
மரமானதும் மண்தொடவே விழைகிறது
விழுதுகளால்.
*
கோவிலில் இருப்பது சாமிமரமாம்…
சின்னத்தாயி தூக்குப்போட்டது பேய்மரமாம்…
இரண்டுமே வேம்புதான்!
*
பள்ளிநடுவில்
நிழல் பரப்பும் பெரும்விருட்சம்,
ஆணியால் கீறியவர் பெயரெல்லாம்
அடிமரத்தில் சுமந்து நிற்கிறது.
நட்டவர் பெயரை
எங்கு சுமந்திருக்கும்?
*
“அம்புடன் வருகிறார்கள்; பறந்து செல்”
தன் கிளையில் கூடுகட்டிய பறவையைத் தப்புவித்தது மரம்.
இப்பொழுது கோடரியுடன் வருகிறார்கள்.
மரத்திடம் பறவை என்ன சொல்லும்?
*
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.