Monday, January 28, 2008

பாடல்களும், நினைவுகளும்!

பாடத் தெரியாது என்பதனைவிட எனக்குப் பாடல்களை முணுமுணுக்கக் கூடத் தெரியாது என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும். ஆனாலும் பாடல்களை கேட்பது எப்போதும் பிடித்தமான ஒன்று. பாடல்களைக் கேட்கும்போது எனக்கு பாடல்வரிகள் கோர்வையையாய் மனதில் ஏறுவதில்லை; மாறாக அந்த பாடலைக் கேட்கும் சூழலும் அந்தப் பாடலின் இசையோடு சேர்ந்து மனதில் எங்கோப் போய் தங்கிவிடுகிறது. எல்லோருக்கும் இப்படித்தானா என்று தெரியவில்லை. காலங்கள் கடந்து அந்தப் பாடலைக் கேட்கும்போது இசையோடு சேர்ந்து முதன் முதலில் அந்த பாடல் கேட்ட சுழலின் நினைவுகளும் கேடவே எழுந்து வருகின்றன. கண்களை மூடிக்கொண்டால் அந்த கடந்த காலத்துக்குப் போய் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வந்ததான உணர்வு வரும். அதிலும் குறிப்பாக ஒரே சூழலில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட பாடல்களை கேட்கும்போது அந்த உணர்வு அழுத்தமாய்ப் பதிகிறது. என்னை முழுக்க முழுக்க பழைய சூழலில் தள்ளிவிடுகிற சில பாடல்களைப் பற்றி மட்டும் இங்கு.

எல். ஆர் ஈசுவரியின் மாரியம்மன் பாடல்களை எப்பொழுது கேட்டாலும் நினைவுக்கு வருவது என் அம்மாவின் ஊரில் நடக்கும் மாரியம்மன் திருவிழாக்கள். அது நினைவுக்கு வருகிறது என்பதனைவிடவும் என்னை அழைத்துச் செல்கிறது என்று சொன்னால் சரியாயிருக்கும். பள்ளியில் படித்த காலத்தில் எந்த விடுமுறையென்றாலும் அம்மாவின் ஊருக்குதான் செல்வோம். மாரியம்மன் திருவிழாவின் போது ஊரில் இருக்கும் எல்லோருடைய உறவினர்களும் வெளியூர்களிலிருந்து வந்து ஊரே புதிதாய் இருக்கும். மாவிளக்குப் படையலில் வரிசையில் இருக்கும் மாவிளக்குத் தட்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கும். சர்க்கரைப்பாகில் பிடிக்கப்பட்டு வெள்ளையாய், வெல்லப்பாகில் செய்து பொன்னிறத்தில், எள், பொட்டுக்கடலை எல்லாம் போட்டு புள்ளிப்புள்ளியாய், இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சரியான பதத்தில் செய்வதும் ஒரு கலைதான். பாகு குறைந்து போயிருந்தால் மறுநாளே கட்டடத்தை இடிக்கிற மாதிரி இடித்து எடுக்க வேண்டிய அளவுக்கு இறுகிப் போயிருக்கும். பாகு அதிகம் கலந்துவிட்டாலோ, படைப்பதற்குப் போகும்போது நிற்க வைத்த மாவு, திரும்பி வருவதற்குள் படுத்துப் போன மாதிரி இளகிப் போயிருக்கும். அதன் மேலே செருகிக் கொள்ள வண்ண வண்ண விசிறிகள். கோவிலுக்கு முன்னே முன்னூறுக்கும் மேலே மாவிளக்குத் தட்டுடன் நின்றுகொண்டிருப்பார்கள்.பார்ப்பதற்கே அழகாயிருக்கும். வள்ளித்திருமணமோ, அல்லது ஏதேனும் சமூக நாடகமோ, அப்புறம் கரகாட்டம், பொன்னர்-சங்கர் கதை, திரைப்படம் (முதலில் ஒரு பக்திப்படம், ரெண்டாவது ஒரு எம்ஜியார் படம் (பெரும்பாலும் எங்க வீட்டுப் பிள்ளை), மூன்றாவதாக ஒரு ரஜினி படம் என்ற வரிசையில் போடுவார்கள், எப்பொழுதும் இரண்டாவது படத்தின் பாதியிலேயே தூங்கி விடுவேன்) என ஒரு வாரத்திற்கும் மேலான இரவுகள் விழித்தபடியே கழியும். அங்கேயே அடுப்பு மூட்டி சுக்குக்காப்பி போட்டு ஒரு ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருப்பார் ஒருவர். சாக்கோ, பாயோ எடுத்துக்கொண்டு போய்விடுவோம். தூக்கம் வருகிற வரை பார்த்துவிட்டு அங்கேயேத் தூங்கி, எல்லாம் முடிந்தபின் தூக்கத்திலேயே தலையில் பாய்/போர்வைகளை சுமந்து வீட்டிற்கு வந்து காலையில் விழித்துப் பார்த்தால் எப்பொழுது வந்தோம் எனப் புரியாது. சில நாட்களில் விழித்துப் பார்த்தால் நாடகக்கொட்டாய் முன்னாலேயே பாயில் கிடப்போம். இன்னும் சொல்வதற்கு ஏராளம் இருக்கின்றன. அத்தனை நிகழ்வுகளையும் மீண்டுமொருமுறை அனுபவிக்கும் சுகம் தருபவை அந்தப் பாடல்கள். திருவிழாவுக்குக் கம்பம் சாட்டிய நாளிலிருந்தே குழாய் ஒலிபெருக்கிகளில் மரத்துக்கு மரம் முழங்க ஆரம்பித்துவிடுவார் எல்.ஆர் ஈசுவரி. முக்கியமாக “மாரியம்மா…எங்கள் மாரியம்மா”, “கற்பூர நாயகியே கனகவள்ளி”, “அங்காளம்மா எங்கள் செங்காலம்மா மங்கலம் பொங்கிட மனதினில் வந்திடும் மாரியம்மா”, “ஈசுவரியே மகமாயி மாரியம்மா…” முத்து மாரி அம்மனுக்கு திருநாளாம்” கேட்க கேட்க மனதெங்கும் திருவிழாஞாபகங்கள்!


கரகாட்டக்காரன்,சின்னத் தம்பி, தளபதி - இந்தப் படங்களில் உள்ளப் பாடல்கள் ஆத்தூரில் கழிந்த எனது பால்யங்களை கண்முன்னே நிறுத்தும். அப்போது எங்கள் தெருவில் தொலைக்காட்சி என்பது ஆடம்பரம். பக்கத்து வீட்டில் புதிதாக பிலிப்ஸ் டேப் ரிக்கார்டர் வாங்கியிருந்தார்கள். கூடவே கரகாட்டக்காரன் கேசட்டும் வாங்கியிருந்தார்கள். பாடல் கேட்பதற்காக அவர்கள் வீட்டுக்குப் போய் டேப் ரிக்கார்டர் முன்னால் காதை வைத்துப் படுத்துக்கொண்டு சங்கீதம் தெரிந்தவர்களைப் போல் தலையாட்டிக்கொண்டு பாடல் கேட்டதை நினைத்துப் பார்த்தால் இப்பொழுதும் சிரிப்பு வருகிறது. சின்னத்தம்பிப் படப்பாடல்கள் தேய்ந்து போகிற அளவுக்கு அப்போது எல்லா விசேசங்களிலும் ஒலித்துத் தள்ளினார்கள். பள்ளிக்கூடம் முடிந்துவந்தால் இரவு வரை அந்த செம்மண் புழுதியில் போட்ட ஆட்டங்கள் அத்தனையும் சின்னத்தம்பியோடு இணைந்திருந்தது. கில்லி, பம்பரம், ஆபியம், கோலி, என ஆட்டம் முடிந்துவருகையில் முழங்காலுக்குக் கீழே மண்ணால் ஒர் ஆடை படிந்திருக்கும். இரவெல்லாம் வாசலில் உட்கார்ந்து கதை பேசும் அம்மாக்களோடு அப்படியே கதை கேட்டுக் கொண்டே தூங்கியிருக்கிறோம். ராக்கம்மா கையத்தட்டு பாடல் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த சமயம் அது. ஒவ்வொரு படத்தின் பாடலுடன் நாங்கள் அங்கு குடியிருந்த ஒவ்வொரு வீட்டின் ஞாபகங்கள் கலந்திருந்தன. அப்போது கேப்டன் பிரபாகரன் படத்தில் வந்த ஆட்டமா சதிராட்டமா பாடலுக்கு நடனம் இல்லாமல் எந்தப் பள்ளிக்கூட ஆண்டுவிழாவும் நடந்ததில்லை. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஆண்டுவிழாவில் வழக்கமாக நடனமாடும் ஒரு பெண்தான் நினைவுக்கு வருகிறார், முகம் நினைவில்லாத போதும்!

பம்பாய் படத்தின் பாடல்கள் திரும்ப திரும்ப ஒலித்த காலகட்டங்களில் நாங்கள் சேலத்துக்கு குடிபோயிருந்தோம். எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலும் ஒரு முசுலீம் குடும்பம் இருந்தது, என் வயதில் உள்ள ஒருப் பெண்ணோடு ;) அதுவரை அரைடிராயர் அணிந்துகொண்டிருந்த நான் இனி லுங்கிதான் அணிவேன் என அடம்பிடித்து லுங்கிக் கட்ட ஆரம்பித்தப் பருவம். பள்ளியில் தேசிய மாணவர் படையில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் தேர்வாகி ஃபேர்லேண்ட்ஸ் பகுதியில் இருக்கும் இராணுவக் கிடங்கில் அடுத்தகட்ட பயிற்சிக்காக தினமும் மாலையில் போய்க்கொண்டிருந்தேன். என் பள்ளியில் இருந்து அங்கு செல்வதற்கு அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் படிக்கும் பெண்கள் பள்ளி வழியாகதான் போக வேண்டும். முதல் நாள் ஓர் ஆர்வக்கோளாறில் அந்த பள்ளிமுடிகிற நேரம் பார்த்து போன போதுதான் புரிந்தது, நூறு இருநூறு பெண்கள் ஒன்றாக எதிரில் வரும்போது நண்பர்கள் இல்லாமல் தனியாக போவது ஒரு மாதிரி அவஸ்தையாகத்தான் இருக்குமென்று :) ஆனாலும் மனசுக்குள் அந்த அரபிக்கடலோரம் அவள் அழகைக் கண்டேனே என்று இசையடிக்கும். முத்து படத்தின் தில்லானா தில்லானா பாடல் கேட்டாலும் சேலம் ஞாபகம் தான்!

கரூர் வந்து பத்தாம் வகுப்பில் சேர்ந்தபோதுதான் பாடலின் தாக்கம் அதிகமானது. இரண்டு பக்கத்திலும் ஒட்டியபடியிருக்கும் வாடகை வீடுகள். இரண்டு வீட்டிலும் இரண்டு ஸ்பீக்கர் பெட்டிகள் வைத்த பெரிய டக்காய் செட்டுகள் இருந்தன. ஒரு வீட்டில் எப்போதும் மெலடிப் பாடல்கள் தான். இன்னொரு வீட்டில் குத்துப்பாடல்கள்/நாட்டுப்புறப்பாடல்கள் பட்டையைக் கிளப்பும். நான் படித்துக் கொண்டிருக்கும்போதெல்லாம் ஒரு பக்கம் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்றோ, என்னைத் தாலாட்ட வருவாளோ என்றோ ஹரிஹரண் உருகிக் கொண்டே இருப்பார். மற்றொரு பக்கம் எட்டுப் பட்டி ராசா, என் ஆச ராசாவே, வீரத்தாலாட்டு என முழங்கிக் கொண்டிருக்கும். என் அம்மா இரண்டு பேரிடமும், ‘பையன் படிச்சிட்டிருக்கான் கொஞ்சம் சத்தம் கம்மியா வையுங்க’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த சூழலில் நான் வெகுவாய் ரசித்த என் வீட்டு ஜன்னலெட்டி ஏன் பாக்குற?, இளவேனிற்காலப் பஞ்சமி, தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் போல இன்னும் சிலப் பாடல்களைப் பற்றி கரையோரத்தென்றலில் தனிப்பதிவாகப் போடுகிறேன்.

கோவையில் கல்லூரியில் சேர்ந்த பிறகு விடுதியில் தங்கியிருந்ததால் ஆண்டுக்கொருமுறை அறைமாறுவோம். நான் இரண்டாமாண்டே விடுதியை விட்டு வெளியேறிவிட்டாலும் (உண்மையைச் சொன்னால் வெளியேற்றி விட்டார்கள் :) ) நண்பர்களோடு எப்பொழுதும் உள்ளேதான் தங்கியிருந்தேன். ஒவ்வோர் ஆண்டும் வந்தப் படங்களில் சில பாடல்கள் அந்தந்த ஆண்டின் நினைவுகளை மீட்டும். சிநேகிதியே/தெனாலி தான் கல்லூரி வந்தபிறகு பார்த்த முதல் படம். ராதை மனது ராதை மனது பாடல் இன்னுமும் கல்லூரியின் முதல் சில வாரங்களின் நினைவுகளையேத் தந்துகொண்டிருக்கிறது. டும் டும் டும், துள்ளுவதோ இளமை பாடல் கேட்கும்போதெல்லாம், தேநீர் குடிக்கும்போது வந்து மொய்க்கிற ஈக்களுக்காக தனியே கொஞ்சம் தேநீர் ஊற்றி வைத்த புத்திசாலி/இரக்கமுள்ள சீனியர், அத்தான் வருவாக பாடலுக்கு தமிழ் புரியாத ஒருவனுக்கு நான் சொன்ன இல்லாத அர்த்தங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இப்படி ஒவ்வோராண்டுக்கும் கொஞ்சம் பாடல்கள். சொன்னால் தீராதவை :)

கடைசியாக இந்த மாதிரி காலங்களை மீட்டு வரும் மாதிரியான பாடல்களாக எனக்கு அமைந்தவை ‘ பார்த்த முதல்நாளே’, ‘முன்பே வா அன்பே வா ‘ – இரண்டு பாடல்களும். கடந்த ஆண்டு பெங்களூரில் இருந்த அழகான நாட்கள் அவை. அதிகம் வேலையிருக்காது. அந்த குளிரை ரசித்தபடி வலையில் எதாவது வாசித்துக் கொண்டே இருக்கலாம். பின்னணியில் இந்த இரண்டு பாடல்களும் இசைந்து கொண்டிருக்கும். கடந்த வருடம் எழுதிய பல காதல் கவிதைகளை இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டேதான் எழுதினேன். பெங்களூரில் இருந்தவரை ‘பார்த்த முதல் நாளே’ தான் என் மொபைலின் காலர் ட்யூனும் கூட. அதன் பிறகு மும்பையில் இருந்த கொஞ்ச காலத்தையும் கண் முன்னே நிறுத்தும் இந்தப் பாடல் அட்னன் சாமி பாடியது!

என்னவளே படத்தில் ஒரு பாடல் வரும். “ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கும் நெஞ்சே” என்று…எனக்கு அது ரொம்பவேப் பொருந்தும். உங்களுக்கு எப்படி?

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

21 comments:

  1. அருள்!!!!

    உங்க கட்டுரையை படிச்சதும் ப‌ழைய‌ நினைவுக‌ளுக்கு சென்றுவிடேன்!!!

    "அந்த பாடலைக் கேட்கும் சூழலும் அந்தப் பாடலின் இசையோடு சேர்ந்து மனதில் எங்கோப் போய் தங்கிவிடுகிறது"

    100 சதவிதம் உண்மை.....


    அருமையான க‌ட்டுரை

    ReplyDelete
  2. //என் வீட்டு ஜன்னலெட்டி ஏன் பாக்குற?, இளவேனிற்காலப் பஞ்சமி, தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் போல இன்னும் சிலப் பாடல்களைப் பற்றி கரையோரத்தென்றலில் தனிப்பதிவாகப் போடுகிறேன்//
    எனக்கும் மிகவும் பிடித்த பாடல்கள் இது.

    //முன்பே வா அன்பே வா ‘ –//
    சமீப காலத்தில் அதிகம் ரசிச்சு கேட்கும் பாட்டு இது.

    ReplyDelete
  3. dear arul,
    napagam varutha napagam varthanu negalum cycle aduthuketu kalbunga

    ram

    ReplyDelete
  4. இது அப்படியே நான் வாழ்ந்த வாழ்க்கை!!
    சின்ன கவுண்டர்,தளபதி,அமரன் இந்த படங்கள் வெளிவந்த சமயத்தில் அந்த படங்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட "T-shirt","school bag" ரொம்ப பிரபலம்.இப்போதும் கூட அந்த படத்தின் பாடல்களை கேட்கும் போதெல்லாம் முதன் முதலில் அதைக் கேட்ட போது இருந்த சூழல் பசுமையாய் நினைவில் வந்து போகும்.

    ReplyDelete
  5. @எழில்
    பாடல் கேட்கும்போது மட்டும்தான் என்று நினைத்தேன். பாடலைப் பற்றி படிக்கும்போதேவா? :) போயிட்டு வாங்க!!!

    @முத்துகுமரன்
    அவை அந்த வயதில் காரணமே இல்லாமல், கேட்டதுமேப் பிடித்துப் போயின முத்துகுமரன். முன்பே வா பாடல் காதலின் தேசிய கீதம்னு சொல்ற அளவுக்கு ரசிக்கப்பட்ட பாடல்தான!!!

    ReplyDelete
  6. @ராம்
    சைக்கிளுக்குப் பதிலா தான் பாட்டுகள எடுத்துட்டு கெளம்பறேனே :)

    @நாடோடி இலக்கியன்
    ஒவ்வொருவருக்கும் இந்தமாதிரி சில பாடல்கள் இருக்கதான் செய்யுமே. சட்டெனத் தோன்றாவிட்டாலும் மீண்டும் கேட்கும் ஏதோ ஒரு வேளையில் கொசுவர்த்திச் சுருள் சுருளும் :-)

    ReplyDelete
  7. நீங்கள் சொல்வது ரொம்ப சரி! எங்க வீட்டில் சின்னதாய், டேப்ரிக்கார்டர் வாங்கின புதிதில், 3,4கேசட்கள்தான் இருக்கும். இப்பவும் அந்தப் பாடல்களைக் கேட்கும் போது, அத்தனை வார்த்தைகளும் தடங்கலே இல்லாமல் வரும். அந்த ஞாபகங்களும் தான்!

    ReplyDelete
  8. பாடல் கேட்கும்போது வரும் சுகமான நினைவுகளில் மூழ்கிப்போனேன் அருள்... படிக்கையில் மீண்டும்...

    ReplyDelete
  9. \\உங்களுக்கு எப்படி?\\

    ம்ம்ம்..எனக்கும் இப்படி தான்..மாரியம்மன் பாடல் முதல் இப்போ இருக்கும் லேட்டஸ்ட் பாட்டு வரைக்கும் ஏதே ஒரு நிகழச்சி வந்துடு தான் போகுது.

    தளபதி, அபூர்வ சகோதரர்கள்- பள்ளி ஆண்டு விழாகளிலும், விநாயகர் சதுர்த்திக்கு கோவில் விழாவிலும் நடந்த நடன நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகிறது.

    பூவெல்லாம் கேட்டுபார் படத்தில் வரும் பூவா பூவா பூவே..பாட்டை கேட்கும் போது எல்லாம் எனக்கும் என் தோழிக்கும் நடந்த சண்டை ஞாபகம் வரும்..;))

    சொல்லிக்கிட்டே இருக்கலாம்..

    நல்ல பதிவு மாப்பி ;)

    ReplyDelete
  10. இனிய நண்பரே ! இளமைக்கால இனிய நினைவுகளை நினைத்து, அசை போட்டு, ஆனந்த்தித்து, மற்படியும் வராதா என ஏங்குவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. வாழ்த்துகள்

    ReplyDelete
  11. எங்களுக்கும் அதே அதே அருட்பெருங்கோ நிறைய பாட்டு அப்படி கொண்டுபோகும் பழய காலத்துக்கு பெரிய பதிவே போடலாம்..
    உங்க பதிவுல அந்த மாவிளக்கு பக்குவம் சூப்பரு.. காலேஜ்ஹாஸ்டலிலிருந்து விரட்டினாங்களா சொல்லவே இல்லை :)

    ReplyDelete
  12. @கோகிலவாணி கார்த்திகேயன்
    :) எங்க வீட்டுல கூட ஒரு டேப் ரிக்கார்டர் அப்படி இருக்குங்க. ஆனா இப்போ பபடாது. (அப்பாடின்னா, பேசுமா? னு கேட்காதீங்க ;-) ) அன்புள்ள ரஜினிகாந்த், தங்கமகன் கேசட்கள் தான் நாங்கள் வாங்கிருந்தவை!!!

    @நவீன் பிரகாஷ்,
    கொஞ்சல் கவிஞரே, உங்களை மூழ்கடித்ததில் எனக்கும் மகிழ்ச்சி :)

    ReplyDelete
  13. @கோபிநாத்,
    அபூர்வ சகோதரர்கள் எப்படி மறந்து போனேன்? விநாயகர் சதுர்த்தி விழாக்களப் பத்தி தனிப்பதிவே போடலாம்யா…அப்போலாம் இந்த மாதிரி பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் இல்லாம சாதாரணமா நடக்கும். ஆர்க்கெஸ்ட்ரா தான் அப்போ உச்சபட்ச சந்தோசம்…ம்ஹும்…

    @சீனா
    அண்ணே, நானும் என்னோட இளமைக்கால நினைவுகள தான் மீட்டிருக்கேன்னு சொல்ற மாதிரி ஆயிடுச்சு பாருங்க பின்னூட்டம். நான் இப்போவே இளமைதான். மீட்டினதெல்லாம் பால்யகால நினைவுகள். :-))

    ReplyDelete
  14. @முத்துலட்சுமி,
    நானும் பதிவு எழுதி முடிச்சுட்டுதான் பாக்குறேன் இவ்ளோ பெருசாயிடுச்சு. மாவிளக்குப் பக்குவம் எல்லாம் சாப்பிடற அளவுக்கு மட்டும் தான் எனக்குத் தெரியும் :-)
    காலேஜ் கதையெல்லாம் ஒரு நெடுந்தொடராவே எடுக்கலாம்க்கா… ஒன்னொன்னா சொல்றேன் ;-)

    ReplyDelete
  15. Hi,

    This is the first time i am visiting your blog. This article is too good. There is one illayaraja song "Nane Nana yaro thana....". This is my husbands fav. It remaids me the days i met him first. Now i am a mom of 9 months old kid and i dont have time for songs. You brought back me those days. :-)

    ReplyDelete
  16. @ஹாரி,
    நன்றிங்க.

    @???
    வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றிகள். குழந்தைக்கு நல்ல இசையப் போட்டு கேட்க வைங்க :-)

    ReplyDelete
  17. எந்த ஆத்தூர்?

    கரூர்லேதான் நான் அவதரித்தேன்:-))))

    ReplyDelete
  18. @துளசி டீச்சர்,

    அது சேலம் – வாழப்பாடி – ஆத்தூர்!!!

    ஓ நீங்களும் கரூர்க்காரங்களா? எனக்குத் தெரிஞ்ச இன்னொரு கரூர்க்காரர் நவீன்பிரகாஷ் மட்டும் தான் :-)

    ReplyDelete
  19. திண்டுக்கல் பட்டிவீரன் பட்டி ஆத்தூர்ன்னு நினைச்சேன்.

    முடிஞ்சா

    இங்கெ

    பாருங்க

    ReplyDelete
  20. ஆகா, கரூர் மாரியம்மன் திருவிழாவ நேரடி வர்ணனை மாதிரி பண்ணியிருக்கீங்களே. கோயில் விசயங்கள் எல்லாம் தெரியலன்னாலும் வெளிய நடக்கிற கொண்டாங்கள் + குடும்பத்தோட போய் வந்ததால என் அனுபவத்தையும் கிளறிடுச்சுனு சொல்லலாம்

    ReplyDelete