Wednesday, January 30, 2008

காதல் கூடம் - 6

காதல் கூடம் – முதல் பகுதி

தலைமையாசிரியர் அறைக்குள்
பயத்தோடு நகம் கடித்தபடி நீயும்
பயமில்லாமல் முகம் நடித்தபடி நானும் நின்றிருக்க
இயல்பாய்ப் பேசினார் அவர்.

…அருகிலிருக்கும் கான்வெண்ட் பள்ளியொன்றில்
நிகழும் கலாச்சாரப் போட்டிக்கு செல்லும் குழு
நம்முடைய தலைமையில்…

செய்தியைச் சொன்னதும் ஒன்றாய் நிமிர்கிறோம்.
பிறவிவரங்கள் பெற்றுக்கொண்டு
நாம் வெளியேறுகையில்
நம் நெருக்கம் பற்றி அறிந்தவராய்
பரிசுகளோடு நம் பள்ளிப் பெயரும் முக்கியமென
நாசூக்காய் சொல்லி அமர்ந்தார்.

வகுப்பறையுள் நுழையும்போதே
வியர்வையுடன் படபடக்கிறாய்.
தண்ணீர் குடிக்கிறாய்.
‘எதாவது பேசேன்’ என்று
பயத்தில் என்னை அடிக்கிறாய்.

எங்கிருந்தோ நானனுப்பிய
காதல்மேகம் உன்னிடம் வந்து பொழிகிறது
மழையாய்.

நாம் கைகோர்த்து நடந்த
பாதச்சுவடுகளையெல்லாம்
காதல்சுவடுகளாய்ப் பத்திரபடுத்துகிறது
பூமி.

நம் நிழல்களைக் கூட
இணைத்தேப் பார்க்கிறது
வெயில்.

நம்மைச் சுற்றி மட்டும்
காதலுடன் மணக்கிறது
காற்று.

சந்திக்கமுடியாத இரவுகளில்
நம் முகம் பார்த்துக்கொள்ளும்
மாயக்கண்ணாடியென
நிலவைச் சுமந்து நிற்கிறது
வானம்.

இப்படி நம்காதலுடன்
பஞ்ச பூதங்களும் துணையிருக்க
பயமேன்?
ஆற்றுகிறேன் நான்.

இத்தனை செய்பவை பூதங்களா?
இல்லை… இல்லை…
பஞ்ச தெய்வங்களென சிரித்துக் கொள்கிறாய்.
காதல் இன்னும் நெருங்க,
பயம் விலகி
மீண்டும் பழையபடி புதியவளாய் நீ!

ஒரு வெள்ளி மாலையில்
அந்த பள்ளி நோக்கி
நம் பயணம் துவங்குகிறது.

பேருந்தில் ஒரு சன்னலோர இருக்கையில் நீ.
உன்னருகில் இடம்பிடித்து அமர்ந்திருக்கிறது உன் கூச்சம்.
அருகில் நின்றபடி நான்.
தலையில் தட்டி கூச்சத்தை எழுப்பிவிட்டு
தானமர்ந்துகொண்டு எனக்கும் இடமளிக்கிறது காதல்.

பேருந்து நகரத்தொடங்கியதும்
சன்னல் சதுரத்தில் ஓடத் துவங்குகிறது
உலக சினிமா.

இருக்கைகளில் நாமிருக்க…
காணும் காட்சிகளிலெல்லாம்
இறக்கை கட்டுகிறது நம் மனம்.

அந்தப் பள்ளியின்
பசும்புல்தரை காட்சி வந்ததும்
பயணம் முடிகிறது.

அங்கு
பயமின்றி சிறகடிக்கும்
கான்வெண்ட் காதல்களைப் பார்த்து
நம் காதல் பிரம்மித்து நிற்க,
சட்டை பிடித்து இழுத்துப் போகிறாய் உள்ளரங்குக்கு.

ஓவியப்போட்டி நடக்குமிடத்தை நெருங்குகிறாய்.
நானும் வருகிறேன்.
‘உனக்கும் ஓவியம் வரையத் தெரியுமா?’
ஆச்சர்யமாய் என்னைப் பார்க்கிறாய்.
‘தெரியும். ஆனால் கண்ணாடியில்தான் வரைவேன்’
‘கண்ணாடியிலா?’
‘ம்ம்ம். உலகிலிருக்கும் எல்லாக் கண்ணாடிகளிலும் அதைத்தான் வரைந்து வைத்திருக்கிறேன்’
கேட்டு கேட்டு சலித்தவளாய் முறைத்துவிட்டு
‘கவிதை போட்டி அந்தப்பக்கம்’ என்று அனுப்பி வைக்கிறாய்.

கவிதையெழுதுகையில்
சொற்களுக்கிடையே நீ மறைந்து மறைந்து எட்டிப்பார்த்தது போல
நீ தீட்டிய வண்ணங்களுக்கிடையே நான் வந்திருப்பேனா?

அன்று
நம்மிருவருக்குமே
பரிசு கிடைக்க
எப்படியெல்லாம் வேண்டிக்கொண்டதோ நம் காதல்.
நமக்குப் பரிசு கொடுத்து
அந்தப் பள்ளியும் காதல்கூடமானது!

அடுத்தவாரம்
பரிசு பெற்ற உன் ஓவியமும், என் கவிதையும்
நம் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் அருகருகே.

நீ தீட்டிய ஓவியத்தில்
என் முகத்தையும்,

‘இருளை
அளவெடுக்கும்
பொன்வண்டின்
ரீங்காரத்தில்
இதயம் சிறைபடுதல் போல…’

எனத் துவங்கும் என் கவிதைவரிகளில் உன் பெயரையும்
நாம் ஒளித்து வைத்ததைக் கண்டுகொள்ள
எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்?

நாம் வாங்கி வந்த கோப்பைகள்
மேசையின் மீது கம்பீரமாய்
நம் பிள்ளைகளைப் போல…

மேடையேறி இருவரும்
சான்றிதழ் வாங்குகையில்
திருமணப்பரிசு வாங்க
மனதை உறுதிப்படுத்துகிறது
காதல் களம்.

அதுதான் அந்தப்பள்ளியில்
நாம் இணைந்திருக்கும் கடைசி நாளெனெத் தெரியாமல்தான்
வழக்கத்தைவிட அதிகமாகவே அன்று காதலித்தோமா?

நம் காதலை உன் வீடுவரைக்கும்
யாரோ இழுத்துப் போய்விட
அரையாண்டுக்குள்
அடுத்தப் பள்ளியில் சேர்க்க வேண்டுமென
அவசரமாய் உன்னுடன்
அயலூருக்கு காலியாகிறது உன் குடும்பம்.

நொடிப்பொழுதில்
ஆயுளின் முழு ஆண்டுகளும்
முடிந்துபோனவனாய் நான்.
இசையிழந்த பாடலென பரிதவிப்போடு நீ.
காற்று நின்ற காற்றாடியாய் நம் காதல்.

( காற்று வரும்…)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

19 comments:

  1. அருமையா இருக்கு.

    ReplyDelete
  2. நண்பரே,
    உங்களின் ஒவ்வொரு பதிவையும் சத்தமின்றி வாசித்துச்செல்லும் போதெல்லாம் கேட்க நினைத்ததிருந்தேன். "காதல் கூடம்" என்னவாயிற்றென்று..... மீண்டும் தொடர்ந்தமைக்கு நன்றிகள்!!! புலம்பல் புதன் அன்று ஜொடியைப் பிரித்துள்ளீர்.... இனி புலம்பல் தானோ???

    ReplyDelete
  3. கவிதைக் கதையா... நல்லாருக்கு.

    கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான்...
    காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை தரையில் தூக்கிப் போட்டான்

    // அழகிய தமிழ்க் கடவுள் said... //

    பேரு ரொம்ப அழகா இருக்குங்க :)

    ReplyDelete
  4. நல்லா இருக்கு!!!! :)

    ReplyDelete
  5. hi,

    its nice

    is this your real experience?

    ReplyDelete
  6. மறுபடி காதல் கூடம் ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள் கோ. நல்லா இருக்கு

    ReplyDelete
  7. கவிதைக் கதையா... நல்லாருக்கு.
    --repeatu!

    அழகிய தமிழ்க் கடவுள் -- murugane vandhu comment podaraaraaaa!

    ReplyDelete
  8. @ஜேகே,
    நன்றிப்பா…

    @அழகிய தமிழ்க் கடவுள்,
    ஆறு பகுதிகளில் சேர்ந்துதானே இருந்தார்கள்? கொஞ்சம் பிரித்து வைப்போம். பிரிந்திருக்கும்போதுதான் காதல் வளருமாமே? :-)

    ReplyDelete
  9. @ராகவன்,
    கவிதைய மட்டும் தான் மடிச்சுப் போடனுமா? கதையெல்லாம் மடிச்சுப் போடக்கூடாதா? ;-)
    அழகிய தமிழ்க் கடவுள், உங்களத்தான் ராகவன் அடிக்கடி கூப்பிட்டுகிட்டே இருக்கார்.

    @பொன்வண்டு,
    நன்றிங்க!!!

    ReplyDelete
  10. @அனானி,
    ஏன்ப்பா இந்த கொலவெறி? முதல் பாகத்துலயே ஒரு டிஸ்கி போட்டுத்தானே ஆரம்பிச்சேன். இது எல்லாமே ஆண்கள் பள்ளியில் படித்த ஒருவனுடைய கற்பனை!

    @ஸ்ரீ,
    நன்றி ஸ்ரீ. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதனைத் தொடரவேண்டும் :(

    @ட்ரீம்ஸ்,
    நன்றிங்க!!!
    அது முருகன் தானா? இந்த ஜோடிய சேர்த்து வைக்க சொல்லி ஒரு விண்ணப்பம் போட்டுடுவோமா? ;-)

    ReplyDelete
  11. //பயத்தோடு நகம் கடித்தபடி நீயும்
    பயமில்லாமல் முகம் நடித்தபடி நானும் //

    //இப்படி நம்காதலுடன்
    பஞ்ச பூதங்களும் துணையிருக்க
    பயமேன்?
    ஆற்றுகிறேன் நான்.//

    //கவிதையெழுதுகையில்
    சொற்களுக்கிடையே நீ மறைந்து மறைந்து எட்டிப்பார்த்தது போல
    நீ தீட்டிய வண்ணங்களுக்கிடையே நான் வந்திருப்பேனா?//

    //அடுத்தவாரம்
    பரிசு பெற்ற உன் ஓவியமும், என் கவிதையும்
    நம் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் அருகருகே.//

    //நாம் வாங்கி வந்த கோப்பைகள்
    மேசையின் மீது கம்பீரமாய்
    நம் பிள்ளைகளைப் போல…

    மேடையேறி இருவரும்
    சான்றிதழ் வாங்குகையில்
    திருமணப்பரிசு வாங்க
    மனதை உறுதிப்படுத்துகிறது
    காதல் களம்.//

    //நொடிப்பொழுதில்
    ஆயுளின் முழு ஆண்டுகளும்
    முடிந்துபோனவனாய் நான்.
    இசையிழந்த பாடலென பரிதவிப்போடு நீ.//


    நண்பரே !!

    அல்லதொரு காதல் கவிதையை அழகு தமிழில், எளிமையான சொற்களில் வடித்தது பாராட்டத்தக்கது.

    காதலர்கள் பிரிவது என்பது, கவிஞர்களின் எழுதப்படாத விதியா என்ன ?

    முதல் சந்திப்பு-காதல் மெல்ல மெல்ல வளர்கிறது-பஞ்ச பூதங்களும் துணை புரிகின்றன-கற்பனைகள் கொடி கட்டிப் பறக்கின்றன- சட்டென பிரிவு - காதல் சோகம்- ம்ம்ம் - காற்று வரும் - காற்று வர வேண்டும் - காதல் மலர வேண்டும் - எதிர் பார்க்கிறேன்

    ReplyDelete
  12. முதலில் நட்சத்திர வாழ்த்துக்களைச் சொல்லிக்கிறேன் அருள்!

    கவிதையில் கதை சொல்வது சூப்பர்! இப்பல்லாம் கதைக்குள் சில கவிதைகளை வைக்கிறார்கள்!
    நீங்க கவிதைக்குள் கதைப் புதையல் வைக்கறீங்க!

    //நம் நிழல்களைக் கூட
    இணைத்தேப் பார்க்கிறது
    வெயில்//

    இது என்ன கதைக்-கவிதைக்குள் ஓவியமா? :-) நல்லா இருக்கு அருள்!

    //நாம் வாங்கி வந்த கோப்பைகள்
    மேசையின் மீது கம்பீரமாய்
    நம் பிள்ளைகளைப் போல…//

    கலக்கல்!
    வெற்றிகள் பிரசவிக்கப்படுகின்றன என்பார்கள்! நீங்க ஒரு படி மேல போயி, கோப்பைகளை எல்லாம் பிள்ளைகள் ஆக்கிட்டீங்க தல! எத்தனை கோப்பைகள் வாங்கி இருக்கீங்க-ன்னு இனி கேட்டாக்கா, இத்தனை பிள்ளைகள்-ன்னு சொல்லி நெளியலாம் இனி! :-)

    //அழகிய தமிழ்க் கடவுள்//

    அழகிய தமிழ் மகன் வந்தாரு விஜய் வாயிலாக! அடுத்து அழகிய தமிழ்க் கடவுள் வரப் போறாரா? படத்தோட பேரைப் பதிஞ்சி வச்சிக்குங்க! :-)

    ReplyDelete
  13. \\பேருந்தில் ஒரு சன்னலோர இருக்கையில் நீ.
    உன்னருகில் இடம்பிடித்து அமர்ந்திருக்கிறது உன் கூச்சம்.
    அருகில் நின்றபடி நான்.
    தலையில் தட்டி கூச்சத்தை எழுப்பிவிட்டு
    தானமர்ந்துகொண்டு எனக்கும் இடமளிக்கிறது காதல்\\

    அட்டகாசம் மாப்பி..சூப்பர் ;))

    ReplyDelete
  14. dear arul,

    athu ana apavum school kadalpathea alutherega ..............some thing.. something


    ram

    ReplyDelete
  15. @சீனா,
    அல்லதொரு கவிதையா? காதலர்கள் பிரிவதில்லை, பிரிக்கப்படுகிறார்கள் ( எப்படி சொல்லி சமாளிச்சேன்ல :) )
    காற்று வர வேண்டும்! வரும்.

    ReplyDelete
  16. @ரவிஷங்கர்,
    வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
    கதைப் புதையல் எல்லாம் இல்லைங்க… கொஞ்சம் ஜிகினா வேலைதான் :-)

    கதை – கவிதை – ஓவியம் னு காதல எப்படி வேணும்னாலும் சொல்லிக்கலாம் ;-)

    கோப்பைகள பாத்தாலே குழந்தைங்க கையத் தூக்கிட்டு நிக்கற மாதிரியே இருக்குமில்லையா? அதான்…

    அழகிய தமிழ்க் கடவுள், உங்க பேரு உங்க அதிருது!!!

    ReplyDelete
  17. @கோபி,
    பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்னு ஒரு பாட்டு கூட இருக்குப்பா… அதுவும் நல்லா இருக்கும்!!!

    @ராம்,
    பாய்ஸ் ஸ்கூல்ல படிச்சவன்ப்பா நானு… சோ நத்திங் நத்திங்!!!

    ReplyDelete
  18. இவ்வளவு அவசரமாக ஒரு கவிதையை இதுவரை படிக்கவில்லை.... அருட்பெருங்கோ!! சூப்பர் பாஸ்ட் ட்ரெயின்லெ போன உணர்வு!!!!!
    அன்புடன் அருணா

    ReplyDelete
  19. @அருணா,

    ஏன் அவசரம். வண்டி எல்லா ஸ்டேசன்லயும் நின்னு நின்னு தான் போகும். மெதுவாப் படிங்க!

    ReplyDelete