Monday, January 07, 2008

கதையெழுதிய கதை

பிப்ரவரி மாதப் பதிவுகளுக்காக மல்லாக்கப் படுத்து விட்டத்தை வெறித்தபடி சில காதல் கவிதைகளை யோசித்துக் கொண்டிருந்த போது

கோபித்துக் கொண்டு
என்னோடு நீ பேசுவதில்லையென
முருகனிடம் முறையிடப்
போனால்
அவனோ,
இரண்டு நாட்களாய்
வள்ளி தன்னிடம்
பேசுவதில்லையென
மயிலிடம் புலம்பிக் கொண்டிருக்கிறான்.

இப்படி ஒரு கவுஜையை எழுதி அறைத் தோழனிடம் காட்டிய போது ‘நல்லாதான் இருக்கு. ஆனா இது கவிதை எழுத வேண்டிய சரக்கு இல்ல. இதையே வச்சி ஒரு கதை எழுது’ என்று சொன்னபொழுது அதை எப்படி கதையாக்குவது என்ற யோசனை துவங்கியது. அப்போதுதான் சர்வேசனின் நச்சுனு ஒரு கதை போட்டி அறிவிப்பும் வந்திருந்தது. அவசரமாக, காதலனுக்கும் காதலிக்கும் ஊடல் போலவும் அதனைத் தீர்க்க காதலன் கோவிலுக்கு போகும்போது அங்கே முருகனும் இதே மாதிரி புலம்பி கொண்டிருப்பதைப் போல ( ஒருவரியில சொல்லும்போதே சிரிப்பு வருதா? விடுங்க ;-) ) வும் எழுதி அறைத் தோழனுக்கு மட்டும் அனுப்பினேன். ‘ரொம்ப கேவலமா இருக்கு’ என்று சொல்லக் கூச்சப் பட்டுக்கொண்டு நான்கைந்து வாக்கியங்களில் அதனையே மென்மையாக சொல்லியிருந்தான். மீண்டும் அதேக் கதையை முருகனே சொல்லுவதுபோல (ஆனால் சொல்லுவது கடவுள் முருகன் தான் என்பது கடைசியில் தெரிவது போல) ஊடல் என்ற பெயரில் கதையாக எழுதி சில நண்பர்களுக்கு மட்டும் அனுப்பியிருந்தேன். கொஞ்சம் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனாலும் ‘திருப்பம் இருக்கிறது. ஆனால் கதையில் ஏதோ குறைவது போல இருக்கிறது’ என்று நண்பர் நந்தா சொன்னது உண்மை போல இருந்தது. மீண்டும் ஒருமுறை அதனை வாசித்துப் பார்த்தால் முதன் முறை இருந்த அந்த ஆர்வம் இல்லை. என் கல்லூரி நண்பர்களும் ‘இது நல்லாதான் இருக்கு. ஆனா உங்கிட்ட இருந்து இதவிட இன்னும் நல்ல கதைய எதிர்பாக்குறோம்’ என்று உசுப்பேத்த, அந்தக் கதையை வலைப்பதிவில் இட்டிருந்தாலும் சர்வேசன் போட்டிக்கு அதனை இணைக்கவில்லை.

அதன் பிறகு ‘அஞ்சலி’ என்றொரு கதையை எழுதி சில நண்பர்களுக்கு மட்டும் மடலில் அனுப்பியிருந்தேன். பாதி பேர் நன்றாக இருந்தது என்றும் பாதி பேர் மொக்கை என்றும் சொல்லவும் அனுப்பலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. முன்பு உசுப்பேத்திய நண்பர்களுள் ஒருவன், ‘இது மாதிரி ஒரு மொக்க கதைய உங்கிட்ட இருந்து எதிர்பார்க்கல’ என்று சொல்லவும், ‘பழைய காலத்து வார இதழ்களில் வரும் கதை போல இருக்கிறது’ என்று பிரேமும் சொல்லவும் அந்தக் கதை மடலோடு மடிந்துபோனது. வலைப்பதிவேறவில்லை.

இறுதியாக ஒரு தொடர்கதையாக எழுத வைத்திருந்த கருவை முடிந்தளவுக்கு சுருக்கி சென்னைக் காதலும் திருச்சிக் காதலும் என்ற பெயரில் எழுதி நண்பர்கள் சிலருக்கும், பண்புடன் குழுமத்திற்கும் அனுப்பியிருந்தேன். கதையில் இருந்த சில குறைகளை பண்புடன் நண்பர்கள் அபுல்ஃபாசல் அவர்களும், பிரேம் அவர்களும் சுட்டிக் காட்ட அவற்றை சரி செய்து மீண்டும் பதிவிட்டேன். போன கதையை மொக்கையென்ற நண்பனும் கூட இதனைப் பாராட்டியிருந்தான். முடிவை இன்னும் கொஞ்சம் சுருக்க சொல்லியிருந்தான். ஆனால் செய்யாமல் விட்டு விட்டேன். கதை மிகவும் நீளமாக இருந்தது என்பதையே பலரும் குறையாக சொல்லியிருந்தார்கள். வலைப்பதிவில், பதிவின் நீளத்தைப் பார்த்து படிக்கத் துவங்கும் ரகம் தான் நானும் :) மக்கள் வாசிப்பார்களா என்பதே சந்தேகமாகத் தான் இருந்தது. சர்வேசனும் கூட போட்டி விதிகளுள் கதை “சிறு”கதையாக இருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கவும் அவரிடமே கேட்டிருந்தேன் இதனை சேர்க்கலாமா? என்று. ‘நச்’க்காக கண்டிப்பாக சேர்க்கலாம் என்று சொல்லி அவரும் இணைத்துக் கொண்டார்.

போட்டியில் இணைக்கப் பட்டிருந்த எல்லாக் கதைகளையும் வாசித்த பிறகு இன்னும் சிறியதாக எழுதியிருக்கலாமோ என்ற எண்ணம் வராமலில்லை. முக்கியமாக மோகன் தாஸ், அரைபிளேடு, நாடோடி இலக்கியன், பெனாத்தல் சுரேஷ், இலவசக்கொத்தனார் ஆகியோரது கதைகளை வாசித்த போது அவை சிறியதாகவும், சிறப்பானதாகவும் தோன்றின.

ஆனாலும் எப்படியோ தப்பித்து முதல் கட்ட தேர்வில் தேறி இறுதி கட்டத்திற்கு வந்த போது, நடுவர்களும் மதிப்பிடுவார்கள் என்றதும் “இந்தப் பிரதியின் கருத்தியலில் உள்ள நுண்ணரசியல் சமூகக் கேடானது”, “மற்றுமொரு வார இதழ் பாணியிலான காதல் கதை” இந்த மாதிரி எதாவது நடுவர்கள் கதையைத் துவைத்து விடுவார்களோ என்று தான் நினைத்துக் கொண்டேன் :) ஆனால் நடுவர்களும் சிறப்பான மதிப்பெண்கள் கொடுத்து ஊக்கப் படுத்திவிட்டார்கள்!!!

உண்மையில் வாக்குகள் எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே விழுந்திருந்தன. ஆரம்பம் முதலே நல்ல விமர்சனங்களைத் தந்த எனது அறைத்தோழன், கல்லூரி நண்பர்கள், அலுவலக/மின்மடல் சகோதரிகள் ( போட்டியப் பத்தி, தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் பிரச்சாரம் பண்ணின அளவுக்கு பாசக்காரத் தங்கச்சிங்க), சுவரொட்டி ஒட்டாத குறையாக விளம்பரம் செய்த நண்பர் பிரேம்குமார், “நம்ம கதைல காதல் இருக்கு செல்லம். கண்டிப்பா ஜெயிக்கும் :)” என்று உற்சாகப் படுத்திய நண்பன் ஸ்ரீ, கதையை சீர்படுத்தி,ஊக்குவித்த பண்புடன் குழும நண்பர்கள் – அபுல், ப்ரியன், எழில் இன்னும் பலர், பின்னூட்டமிட்டு, மடலனுப்பி வாழ்த்திய வலைப்பதிவர்கள்/வாசகர்கள், வாக்களித்த வாக்காளர்கள், நடுவர்கள் அனைவருக்கும் நன்றி.

புத்தாண்டில் ஓர் இனிய துவக்கமாக இது அமைவதற்கு வாய்ப்பளித்த சர்வேசனுக்கு பாராட்டுகள் கலந்த நன்றி.

முன்பே சொல்லியிருந்தால் நானும் வாக்களித்திருப்பேனே என்று கடிந்து கொண்ட பாசக்கார நட்புகளுக்கும் நன்றி :)

பிகு – எதுக்கிப்போ இவ்வளவு ஆர்ப்பாட்டம்னு கேட்காதீங்க :) எழுதிய மூன்றாவது சிறுகதைக்கே ஒரு அங்கீகாரம் கிடைச்ச மகிழ்ச்சி வேற ஒன்னுமில்ல ;-) முதல் இரண்டு சிறுகதைகளும் கூட ஓரளவுக்கு நச் கதைகள் தான். படித்துப் பாருங்கள் – ஒரு குட்டிக் காதல் கதை , ஊடல்

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

20 comments:

  1. நச் கதைதான்! வாழ்த்துக்கள் தலைவா

    ReplyDelete
  2. உங்க கதை நல்லா தான் இருந்தது! :)
    வாழ்த்துக்கள்! U deserve it!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.
    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ராசா ;))

    "உன்" கதை தலைப்பு ஏற்றால் போல் நச்சுன்னு இருந்துச்சி ;))

    ReplyDelete
  5. //முக்கியமாக மோகன் தாஸ், அரைபிளேடு, நாடோடி இலக்கியன், பெனாத்தல் சுரேஷ், இலவசக்கொத்தனார் ஆகியோரது கதைகளை வாசித்த போது அவை சிறியதாகவும், சிறப்பானதாகவும் தோன்றின.//

    சிறப்பான கதையென்று எனது கதையையும் "சுட்டி" காட்டியமைக்கு மிக்க நன்றி அருட்பெருங்கோ!
    இந்தப் பதிவில் சொல்லியிருக்கும் அஞ்சலி கதையையும் பதிவிடுங்ளேன்.நாங்களும்தான் படித்துப் பார்க்கிறோமே!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. /நச் கதைதான்! வாழ்த்துக்கள் தலைவா/

    வாழ்த்துகளுக்கு நன்றிங்க முபாரக்!!!

    /உங்க கதை நல்லா தான் இருந்தது! :)
    வாழ்த்துக்கள்! U deserve it!/

    மிக்க நன்றி ட்ரீம்ஸ்!!!

    ReplyDelete
  7. /வாழ்த்துக்கள்.
    தொடர்ந்து எழுதுங்கள்/

    நன்றிங்க ஜீவி. கண்டிப்பாக தொடர்கிறேன்.

    /வாழ்த்துக்கள் ராசா ;))

    "உன்" கதை தலைப்பு ஏற்றால் போல் நச்சுன்னு இருந்துச்சி ;))/

    நன்றி கோபி. அது என் கதையல்ல ; நான் எழுதிய கதை!!!

    ReplyDelete
  8. /சிறப்பான கதையென்று எனது கதையையும் "சுட்டி" காட்டியமைக்கு மிக்க நன்றி அருட்பெருங்கோ!/
    நான் தான் சொன்னேனே பாரி, என் நண்பர்களும் உங்கள் கதையை ரசித்திருக்கிறார்களென்று!

    /இந்தப் பதிவில் சொல்லியிருக்கும் அஞ்சலி கதையையும் பதிவிடுங்ளேன்.நாங்களும்தான் படித்துப் பார்க்கிறோமே!/

    வேண்டாம்ப்பா :)

    /வாழ்த்துக்கள்!/
    வணக்கங்கள் _/\_

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் அருள்... கதையெழுதிய கதைன்னதும் நான் என்னவோ ஒரு கதை தான் திருப்பி எழுதி இருக்கிங்களோன்னு நினைச்சுக்கிட்டேன்..

    ReplyDelete
  10. வாழ்த்துகள் அருட்பெருங்கோ.
    கதை மிக மிக நன்றாக இருந்தது.
    உண்மையில் முதல் கட்ட வாக்கு பதிவின் போது நான் இந்த கதையை பார்க்கவில்லை. பிறகு இறுதி கட்ட வாக்கு பதிவின் போது தான் உங்கள் கதையை பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. நான் எனது வாக்கை பதிவு செய்து விட்டு நண்பர்களுக்கு link மற்றும் copy paste செய்து மடலாகவும் அனுப்பினேன். அவர்களும் கதை மிகவும் நன்றாக இருந்தது என்று கூறினார்கள். உங்களுக்கு என் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  11. / வாழ்த்துக்கள் அருள்... கதையெழுதிய கதைன்னதும் நான் என்னவோ ஒரு கதை தான் திருப்பி எழுதி இருக்கிங்களோன்னு நினைச்சுக்கிட்டேன்.. /

    வாழ்த்துகளுக்கு நன்றிங்க்கா!!!
    கதை வேண்டாம். நாளைக்கு ஒரு கவிதை எழுதுவோம் :)

    ReplyDelete
  12. /வாழ்த்துகள் அருட்பெருங்கோ.
    கதை மிக மிக நன்றாக இருந்தது.
    உண்மையில் முதல் கட்ட வாக்கு பதிவின் போது நான் இந்த கதையை பார்க்கவில்லை. பிறகு இறுதி கட்ட வாக்கு பதிவின் போது தான் உங்கள் கதையை பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. நான் எனது வாக்கை பதிவு செய்து விட்டு நண்பர்களுக்கு link மற்றும் copy paste செய்து மடலாகவும் அனுப்பினேன். அவர்களும் கதை மிகவும் நன்றாக இருந்தது என்று கூறினார்கள். உங்களுக்கு என் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்./

    வாசித்து, நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டமைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள் அருண். உங்களுக்கும் + உங்கள் நண்பர்களுக்கும்!!!

    ReplyDelete
  13. வாழ்த்துகள்

    ReplyDelete
  14. தலைவரே, உங்கள TAG பண்ணிட்டேன், வந்து கலந்துக்கோங்க.

    இங்க க்ளிக்கி பாருங்க

    ReplyDelete
  15. நன்றிங்க பாலா… உங்க விமர்சனம் அதுக்கப்புறம் வரவேயில்லையே ;-)

    ReplyDelete
  16. / தலைவரே, உங்கள TAG பண்ணிட்டேன், வந்து கலந்துக்கோங்க./

    தல, நான் படம் புடிக்கிறதெல்லாம் பொழுது போக்குக்காக… கலை நுணுக்கமெல்லாம் எனக்குத் தெரியாது. இருந்தாலும் ஒரு படம் தான? கண்டிப்பா போட்டுட்றேன்.

    ReplyDelete
  17. அன்பு நண்பரே உங்களின் கதையை படிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது.
    கதையின் திருப்பங்கள், வெவ்வேறு இடங்களில் நடப்பது இறுதியில் எதிர்பாராத முடிவு என்றிருந்தாலும் முதல் பரிசுக்கான கதையாக இது இல்லை என்பதே உண்மை. காரணம் கதையின் நீளம் மிக அதிகம். நச் போட்டிக்கான சிறுகதை இன்னும் சுருக்கமாக நச்சென்றிருந்திருக்கவேண்டும். மேலும் சில சிறிய குறைகளும் இருக்கின்றன.

    இருந்தாலும் இரண்டாம் பரிசு உங்கள் கதைக்கே.

    வாக்களிப்பவர்கள் உங்கள் கதைக்கே வாக்களித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    வெற்றியடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. / congrats/

    நன்றி இந்திரஜித்.

    ReplyDelete
  19. /அன்பு நண்பரே உங்களின் கதையை படிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது.
    கதையின் திருப்பங்கள், வெவ்வேறு இடங்களில் நடப்பது இறுதியில் எதிர்பாராத முடிவு என்றிருந்தாலும் முதல் பரிசுக்கான கதையாக இது இல்லை என்பதே உண்மை. காரணம் கதையின் நீளம் மிக அதிகம். நச் போட்டிக்கான சிறுகதை இன்னும் சுருக்கமாக நச்சென்றிருந்திருக்கவேண்டும். மேலும் சில சிறிய குறைகளும் இருக்கின்றன./

    நீளமாக இருப்பது சிறுகதை வடிவத்திற்கு பெரிய குறையே. எல்லா நச் கதைகளிலும் இறுதியில் ஏதோ ஒரு நச் இருக்கப் போகிறது என்ற உணர்வோடு வாசிக்கிறவர்களை கதைக்குள் கொஞ்சம் இழுத்து வைக்க அந்த நீளம் தேவைப்பட்டதாகவே உணர்கிறேன். உண்மையைச் சொன்னால் அது ஒரு தொடர்கதையாக எழுதப்பட்டிருக்க வேண்டியது. பிற குறைகளையும் குறிப்பிடுங்கள்/மடலிடுங்கள். இனியெழுதும் கதைகளுக்கு அது எனக்கு உதவும்!!!

    /இருந்தாலும் இரண்டாம் பரிசு உங்கள் கதைக்கே./
    நன்றிங்க மஞ்சூர் ராசா. நச் போட்டி நடுவர்களில் கூட நான்கு பேரிடம் முதல் இடம் பெற்றிருந்தும், ஐந்தாவது நடுவரின் பார்வையில் இந்த கதை நான்காமிடத்திற்கே தள்ளப் பட்டிருந்தது. நீங்கள் இரண்டாம் இடம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

    /வாக்களிப்பவர்கள் உங்கள் கதைக்கே வாக்களித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    வெற்றியடைய வாழ்த்துகள்./

    வாக்களிப்பு முடிந்து முடிவுகளும் வந்துவிட்டன. தங்கள் வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி!!!

    ReplyDelete