Thursday, January 31, 2008
குறுங்கதையும் குறுந்தொகையும் - 1
‘சாரி ஆண்ட்டி. வர்ற வழில கொஞ்சம் லேட்டாகிடுச்சு.இளா எங்க ஆண்ட்டி?’
‘மாடியில்’ என்று அவர் கைகாட்ட படியில் ஏறினான். அவனுக்கும் இளாவுக்கும் இடையில் இருப்பது கெமிஸ்ட்ரி, பையாலஜி எல்லாம் கலந்த ஒரு ‘இது’வாலஜி. அவனுக்கு குன்னூர். அவளுக்கு கோயம்புத்தூர். +1, +2 இருவரும் ஒன்றாக குன்னூரில் படிக்கும்போது அறிமுகம். அதன்பிறகு கோவையில் ஒரே கல்லூரியில் இடம் கிடைத்து இன்னும் நான்கு வருடங்களும் சேர்ந்தே படித்தார்கள். இப்பொழுது அவன் சென்னையிலும், அவள் கோயம்புத்தூரிலும் மென்பொருள் துறையில் பணி. அவர்களுக்குள் இருப்பது நட்பா? காதலா? என்றால், நட்பையும் காதலையும் பிரிக்கிற கோட்டில் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். சொல்லி விட்டால் காதல். சொல்லாமல் விட்டால் நட்பு.
அவளிடமே கேட்டுவிடுவதில் அவனுக்கும் தயக்கமில்லைதான். ஆனால் அவள் மறுக்கும் பட்சத்தில், அவனை விட அவளுக்கே அது பெரிய வலியாகப் போய்விடுமென்றே தவிர்த்துவிட்டான். அவளுக்கோ தன் அப்பாவை நினைத்து பயம். சாதிப்பற்றும், அதைவிட அதிகமாய் ஜாதகம் மேல் நம்பிக்கையும் உள்ளவரிடம் என்ன பேச முடியும்? அவர் மனதைப் புண்படுத்தவும் அவளுக்கு விருப்பமில்லை. ஆனாலும் இப்போதெல்லாம் அவனே காதலைச் சொல்லிவிடக்கூடாதா என்று ஏங்க ஆரம்பித்துவிட்டாள்.
‘ஹலோ… இதான் நீ சொன்ன டைமா?’
‘சாரி கேட்டுக்கறேன் மேடம்…உடனே கெளம்புங்க சீக்கிரம் போய்ட்டு வந்துடலாம்’
“ம்மா… நாங்க மதியம் வெளியவே சாப்டுக்கறோம்” என்று சொல்லிவிட்டு அவனை பின்னால் உட்காரசொல்லிவிட்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.
நாளை வரும் அவளுடைய இருபத்து நான்காவது பிறந்தநாளுக்காகத்தான் புடவை எடுக்க அவனையும் அழைத்துக்கொண்டு சேரன் டவர்சுக்குப் போகிறாள். அவனுக்குப் பிடித்த புடவைகளில் அவளுக்குப் பிடித்த ஒன்றை தேர்ந்தெடுப்பதா இல்லை அவளுக்குப் பிடித்த புடவைகளில் அவனுக்குப் பிடித்த ஒன்றை தேர்ந்தெடுப்பதா என்ற சண்டை முடியும்போது ஒரு ரோஸ் நிற புடவை தேர்வாகியிருந்தது. மதியம் அன்னபூர்ணாவில் சாப்பிட்டுவிட்டு மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்தார்கள்.
‘அங்கிள இன்னைக்குப் பாக்க முடியலயே! சரி ஆண்ட்டி நான் ஃப்ரெண்ட்ஸ்ங்களையும் பாக்கனும். இப்போ கிளம்பறேன்.நாளைக்கு வர்றேன்’ என்று சொல்லி கிளம்பிவிட்டான்.
‘என்னடி இந்த கலர் எடுத்துட்டு வந்திருக்க? உனக்கு ரோஸ் கலர் புடிக்காதுன்னு சொல்லுவ!’
‘இல்லமா… இது எனக்கு நல்லாருக்கும்னு அருளும் சொன்னான். சரி ட்ரை பண்ணலாம்னு எடுத்துட்டேன்’
அவளுடைய அம்மாவுக்கும் அவள் மனதிலிருப்பது தெரியாமல் இல்லை. அவர்கள் காதலிக்கிறார்கள் என்றே நம்பிக்கொண்டு அவளாக சொல்வாள் என்றுதான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அவள் அப்பாவிடம் சொன்னால் அவர் குதிப்பார்தான். இருந்தாலும் ஒற்றை மகளின் தகப்பனிடம் சம்மதம் வாங்குவதில் சிரமம் இருக்காதுதான். ஜாடை மாடையாக அவரிடம் இந்த பேச்சையெடுக்கும்போதெல்லாம் மௌனம் மட்டும்தான் பதில்.
மறுநாள் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அவள் வீட்டுக்கு வந்திருந்தான். அவர்களும் பேரூர் கோயிலுக்குப் போய்விட்டு அப்போதுதான் வந்திருந்தார்கள். அவளுக்குப் பிடித்த பாடல்களாக தேர்வு செய்து பதிவு செய்யப்பட்ட ஐபாட் ஒன்றை பரிசாகக் கொடுத்தான். ஐபாட் வாங்க வேண்டுமென்று போனவாரம்தான் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்ததை நினைத்துக் கொண்டாள். அவள் அப்பாவுடன் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் முன்னிலையிலேயே அப்பாவிடம் அதனைச் சொல்லிவிடலாமா என்று துடிப்பாக இருந்தது அவளுக்கு. உள்ளே பயமும், காதலும் அலைக்கழிக்க வெளியே அமைதியாக இருந்தாள்.
‘என்னப்பா..நேத்து வீட்டுக்கு வந்துட்டு நான் வர்றதுக்குள்ள ஓடிட்ட போல…’ சிரித்துக்கொண்டே கேட்டார் இளாவின் அப்பா.
‘இல்ல அங்கிள். பசங்களயும் பாக்க வர்றேன்னு சொல்லியிருந்தேன்…அதான் போயிட்டேன்’
‘அப்போ குன்னூர் போகவேயில்லையா?’
‘இல்ல அங்கிள் அப்பாவும், அம்மாவும் ஒரு கல்யாணத்துக்காக மதுரை போயிருக்காங்க. நான் இப்படியே சென்னை திரும்ப வேண்டியதுதான்.’
‘கல்யாணம்னு சொல்லவும் தான் ஞாபகம் வருது’ என்று சொல்லிவிட்டு ‘ஜெயாஆஆ’ என்று உள்ளே அழைத்தார்.
இளாவுடைய அத்தைதான் ஜெயா.ஈரோட்டில் பள்ளியொன்றின் தலைமையாசிரியை. ஜோதிடத்தில் ஆர்வம் வந்து அதில் பட்டயப்படிப்பெல்லாம் படித்தவர். ஆனால் தொழில்முறையாக ஜோதிடம் பார்ப்பவரில்லை. நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டும் பொழுதுபோக்கு மாதிரி ஜாதகம் பார்த்து சொல்வார். இளாவின் அப்பாவுக்கும் காசுக்காக ஜோதிடம் பார்ப்பவர்களை விட இவர் மேல் நம்பிக்கை அதிகம். அவர் வர சொல்லியிருந்ததால் அன்று வந்திருந்தார்.
அவரையும் உட்கார சொல்லிவிட்டு, இளாவின் ஜாதகத்தை எடுத்துக் கொடுத்தார்.
‘இந்த பொறந்தநாள்ல இருந்தாவது இளாவுக்கு கல்யாண யோகம் வருதான்னு பாரு ஜெயா. இருபத்தஞ்சு ஆரம்பிக்குதில்ல’
அவள் அத்தையும் சிரித்துக்கொண்டே ஜாதகத்தை வாங்கி பார்க்க ஆரம்பித்தார்.
இளாவுக்கு திக் திக் என்று அடித்துக்கொண்டது. கல்யாணத்துக்கு என்ன அவசரமென்று மனதுக்குள் திட்டிக்கொண்டாள்.
‘ம்ம்ம்… வர்ற சித்திரைல இருந்து குருபலன் வருதுண்ணா. கல்யாணம் பண்ற யோகம் தான்’ என்று ஆரம்பித்தார் அவள் அத்தை.
‘எப்படிப்பட்ட வரன் அமையும்னு எதாவது இருக்கா? ’
‘அமைப்பெல்லாம் பார்த்தா மணவாழ்க்கை சிறப்பா இருந்தாலும், வேற இனத்துலதான் சம்பந்தம் ஆகற மாதிரி இருக்கு’
‘….’
‘தீர்க்கசுமங்கலியா இருப்பா. அதுல ஒரு குறையும் இருக்காது’
‘எந்தப்பக்கமிருந்து வரன் வரும்னு ஒன்னும் தெரியலையா’
‘வடக்கு திசைல இருந்துதான் வரன் அமையும். கொஞ்சம் மேட்டுப்பகுதில இருந்துதான் வரப்போற மாதிரி தெரியுது’
‘வடக்கு திசையா?’
‘வடக்குதிசைன்னதும் ஏண்ணா பயப்படுறீங்க. என்ன இமயமலைல இருந்தா சம்பந்தம் பேச வரப்போறாங்க? பக்கத்துல ஊட்டியோ, குன்னூரோ நல்ல வரனாத் தேடுங்க’
அதுவரை அமைதியாக இருந்த இளா,
‘எந்தூர்னு சொன்னீங்கத்த?’ என்று ஆர்வத்தில் சத்தமாகவே கேட்டுவிட்டாள்.
‘ஊட்டியோ, குன்னூரோனு சொன்னேன்’
அருள் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தான்.
அவர்களிருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார் அவள் அப்பா.
ஜாதகத்தை வாங்கி வைத்தவர், அவள் அத்தை உள்ளே சென்றதும், அவர்களிடம் கேட்டார்.
‘என்ன ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா?’
பயத்துடன், அவள், அவன் கண்களையும், அவன், அவள் கண்களையும் பார்த்துக்கொண்டாலும் இருவரும் எந்த பதிலும் சொல்லவில்லை.
‘ஏன் முழிக்கிறீங்க. அதான் உங்க கதையெல்லாம் ஜாதகத்துல தெரிஞ்சு போச்சே! சரி உங்கப்பாம்மா திரும்பி வரும்போது கோயம்புத்தூர் வழியாதான போவாங்க. பாத்துப் பேசறேன்.’ எந்த உணர்வோடு சொல்கிறார் என்று தெரியவில்லையென்றாலும், அதில் கோபம் மட்டும் இல்லையென்று தெரிந்தது.
அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
உள்ளறையில்…
‘அப்பாடா.. நான் நெனச்ச மாதிரியே நடந்துடுச்சு ஜெயா. நீ மட்டும் அப்படி சொல்லலன்னா உங்கண்ணன்கிட்ட இத எப்படி சொல்லியிருப்பேன்னே எனக்குத் தெரியல’
‘என்னண்ணி… நம்ம இளாவுக்காக ஒரு பொய் கூட சொல்ல மாட்டேனா’ சிரித்தார் ஜெயா.
----
குறுந்தொகை :
23. குறிஞ்சி – தோழி கூற்று
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப்பன்ன நன்னெடுங்கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங்குன்றம் பாடியபாட்டே.
- அவ்வையார்.
“குறி சொல்பவளே!
குறி சொல்பவளே!
நல்ல நீண்ட கூந்தல் கொண்ட
குறிசொல்பவளே!
மீண்டும் சொல்!
அவன் வாழும்
நல்ல உயர்ந்த மலையைப் பற்றி
மீண்டும் சொல்!”
( காதலை குறிப்பால் உணர்த்தியது )
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
Wednesday, January 30, 2008
ஜனனி.. ஜனனி..
நான் : ஜனனி தமிழ் படிக்கலாமா?
ஜனனி : நீ சொல்லிக் குடு மாமா (புத்தகத்தோடு வருகிறாள்)
நான் : அ – அம்மா
ஜனனி : நல்லா சொல்லிக் குடு மாமா
நான் : நல்லாதான பாப்பா சொல்லிக் குடுக்குறேன்? அ – அம்மா (நன்றாக இடைவெளிவிட்டு சொல்கிறேன்)
ஜனனி : அப்படி இல்ல மாமா …. அ for அம்மா
(a for apple சொல்லிக் கொடுத்தபின்னாடி தமிழ் சொல்லிக் கொடுத்தா இப்படித்தான் )
***
முதல் நாள் pre kg வகுப்புக்கு போய்வந்தவளிடம்
அக்கா : பாப்பா உனக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கா?
ஜனனி : ம்ம்ம் நல்லாருக்கும்மா… லேடர் வச்ச சறுக்கல் எல்லாம் இருக்கும்மா
அக்கா : மிஸ்ச புடிச்சிருக்கா? மிஸ் கிட்ட நல்லாப் பேசினியா?
ஜனனி : அந்த மிஸ் நல்லாவே இல்லம்மா
அக்கா : என்னது நல்லாவே இல்லையா?
ஜனனி : வயசான மிஸ்சா இருக்காங்கம்மா…
(அடிப்பாவி)
***
அக்கா : ஊஞ்சல்ல இருந்து எறங்கு, இது என் தம்பி எனக்கு வாங்கிட்டு வந்தது.
ஜனனி : இது எங்க மாமா எனக்கு வாங்கிட்டு வந்தது போம்மா
அக்கா: எனக்குதான் என் தம்பி வாங்கிக் கொடுத்தான்.எறங்குறயா இல்லையா?
ஜனை : உனக்கு வேணும்னா உங்க மாமாகிட்ட போய் வாங்கிக்க போம்மா
(அதற்கு மேல் என்னப் பேச?)
***
டாம் அண்ட் ஜெர்ரி பார்த்துக்கொண்டு இருக்கும்போது,
நான் : ஜனனி, அந்த வெள்ளப் பூனை உன்ன மாதிரியே இருக்குல்ல?
ஜனனி : ம்ம்ம்….நீதான் அந்த கருப்புப் பூனை.
அக்கா : (கோபத்துடன்) ஏய், யாரடி கருப்புனு கிண்டல் பண்ற?
ஜனனி : (கூலாக, டிவியில் இருந்து முகத்தைத் திருப்பாமல்) உங்க தம்பியதாம்மா!
(கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதுன்னா இது தானா?)
***
அவள் அடம்பண்ணிய ஒரு சமயத்தில், அவளை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு,
நான் : சரி ஜனனி, நான் ஹைதராபாத் கிளம்பறேன். அப்புறம் பாக்கலாம்.
ஜனனி : ச்சும்மா இது பண்ணாத மாமா
நான் : எது பண்றேன்?
ஜனனி: பந்தாதான்!
(எத்தன தடவ பல்பு வாங்கினாலும் எனக்கும் புரியவே மாட்டேங்குது)
***
அவளுக்கு முடி வெட்டப் போன சலூனில்,
முடிவெட்டுபவர் : எந்த மாதிரிங்க வெட்டலாம்
நான் பதில் சொல்வதற்கு முன்பே,
ஜனனி : எனக்கு நீளமா வளர்ற மாதிரி வெட்டி விடுங்க
முடிவெட்டுபவர் : ???
அங்கே தலைக்கு ‘டை’யடித்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து,
ஜனனி : மாமா, அந்தத் தாத்தா தலைலேயே ட்ராயிங் வரையறாங்க (சிரித்துக்கொள்கிறாள்)
தலைக்கு ‘டை’யடித்துக் கொள்பவரும் கஷ்டப்பட்டு சிரித்துக்கொண்டார்.
***
அவளுக்கு ஒரு சிறிய குடை வாங்கிக் கொடுத்து,
நான் : தினமும் இத ஸ்கூலுக்கு எடுத்துப் போயிட்டு, வரும்போது மழை பேஞ்சுதுன்னா பிடிச்சுக்கனும் சரியா?
ஜனனி : அம்ப்ரல்லா எடுத்துட்டுப் போனா மிஸ் திட்டுவாங்க மாமா. நான் எடுத்துட்டுப் போக மாட்டேன். அம்மாதான் கொண்டு வரனும்.
நான் : மழ பேஞ்சா மிஸ்செல்லாம் அம்ப்ரல்லா எடுத்துட்டுதான் பாப்பா வருவாங்க. அதனால உன்னலாம் திட்டமாட்டாங்க.
ஜனனி : மிஸ்செல்லாம் அம்ப்ரல்லா எடுத்துட்டு வரமாட்டாங்க!
நான் : அப்பறம் எப்படி வருவாங்க?
ஜனனி : புடவ கட்டிட்டு வருவாங்க!
(கேள்வி தப்பா? பதில் தப்பா?)
***
அக்கா : நேஷனல் பேர்ட் என்ன?
ஜனனி : பீக்காக்
அக்கா : நேஷனல் ஃப்ளவர் என்ன?
ஜனனி : ( முழிக்கிறாள் )
அக்கா : ப்ளவர் னா என்ன?
ஜனனி : பூ
அக்கா: ம்ம்ம் நேஷனல் ஃப்ளவர் என்ன?
ஜனனி : அத்திப்பூக்கள்
(சன்டிவி சீரியல் வாழ்க)
***
கண்கொட்டாமல் கோலங்கள் சீரியலைப் பார்த்துக்கொண்டிருந்தவளிடம்,
நான் : என்னக்கா இப்படி பாத்துகிட்டு இருக்கா?
அக்கா : அவதான் பொறந்ததுல இருந்து என்கூட சேர்ந்து பாக்கறாளே…
நான் : ஜனனி, அவன் யாரு?
ஜனனி : அவந்தான் ஆதி. அவன் கெட்டவன். எல்லாரையும் மெரட்டிட்டே இருப்பான்.
நான் : இது யாரு?
ஜனனி: அவந்தான் தொல்காப்பியன். அவன் நல்லவன். எப்பவும் உண்மையேதான் பேசுவான்.
(கவனிக்கும் திறனை வளர்க்கிறதா? இல்லை டிவிக்கு அடிமையாக்குகிறதா இந்த சீரியல்)
***
பள்ளி விட்டு வரும்போது,
ஜனனி : ம்மா உன்னையும் தாத்தா வந்து ஸ்கூல்ல விடுவாங்களா? அம்மாச்சி வந்து கூட்டிட்டு வந்தாங்களா?
அக்கா : இல்ல பாப்பா நான்லாம் தனியாதான் போயிட்டு வந்தேன்.
ஜனனி : யாருமே உன் கூட வரலியாம்மா? தனியாவேதான் போனியா? (கண் கலங்குகிறது)
அக்கா : ஆமாப் பாப்பா.
ஜனனி : சரிம்மா. நீ பாப்பாவா ஆகி ஸ்கூலுக்குப் போ, நான் பெருசா, அம்மா ஆகி உன்ன வந்து ஸ்கூல்ல கூட்டிட்டு வர்றேன்.
(உட்காந்து யோசிப்பாளோ?)
***
திருப்பூரில் இருந்து கரூர் கிளம்பும்போது,
அக்கா : உன்னோட ட்ரஸ் எல்லாம் எடுத்து பைல வை பாப்பா.
ஜனனி : (அவசரமாக ஒரு பொம்மைத் துப்பாக்கியை எடுத்து உள்ளே வைக்கிறாள்)
அக்கா : இத எதுக்குடி எடுத்து வைக்கிற?
ஜனனி : ரவுடிங்க வந்தா நான் உன்னக் காப்பாத்தனும்ல?
(தமிழ் சினிமா வாழ்க)
***
பள்ளியில் சேர்ந்த முதல் வாரத்தின் ஒரு நாளில்…
மிஸ் : எல்லாரும் டைரி கொண்டு வந்து வைங்க!
ஜனனியைத் தவிர எல்லோரும் வைக்கிறார்கள்.
மிஸ் : எல்லாரும் வச்சாச்சா? இன்னும் யாரோ ஒருத்தங்க வைக்கலியே? யாரது.
ஜனனி : மெதுவாக எழூந்து போய் டைரியை நீட்டுகிறாள்.
மிஸ் : இவ்வளவு நேரம் கேட்டேன்ல… ஏன் வந்து வைக்கல?
ஜனனி (அக்காவிடம் சொல்வது போலவே) : அதான் இப்போ கொண்டு வந்து தர்றேன்ல?
மிஸ் : என்னது?
ஜனனி : (பவ்யமாக) அதான் இப்போ தர்றேன் இல்லைங் மிஸ்?
( மிஸ்சும் சிரித்து விட்டாராம்)
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
காதல் கூடம் - 6
தலைமையாசிரியர் அறைக்குள்
பயத்தோடு நகம் கடித்தபடி நீயும்
பயமில்லாமல் முகம் நடித்தபடி நானும் நின்றிருக்க
இயல்பாய்ப் பேசினார் அவர்.
…அருகிலிருக்கும் கான்வெண்ட் பள்ளியொன்றில்
நிகழும் கலாச்சாரப் போட்டிக்கு செல்லும் குழு
நம்முடைய தலைமையில்…
செய்தியைச் சொன்னதும் ஒன்றாய் நிமிர்கிறோம்.
பிறவிவரங்கள் பெற்றுக்கொண்டு
நாம் வெளியேறுகையில்
நம் நெருக்கம் பற்றி அறிந்தவராய்
பரிசுகளோடு நம் பள்ளிப் பெயரும் முக்கியமென
நாசூக்காய் சொல்லி அமர்ந்தார்.
வகுப்பறையுள் நுழையும்போதே
வியர்வையுடன் படபடக்கிறாய்.
தண்ணீர் குடிக்கிறாய்.
‘எதாவது பேசேன்’ என்று
பயத்தில் என்னை அடிக்கிறாய்.
எங்கிருந்தோ நானனுப்பிய
காதல்மேகம் உன்னிடம் வந்து பொழிகிறது
மழையாய்.
நாம் கைகோர்த்து நடந்த
பாதச்சுவடுகளையெல்லாம்
காதல்சுவடுகளாய்ப் பத்திரபடுத்துகிறது
பூமி.
நம் நிழல்களைக் கூட
இணைத்தேப் பார்க்கிறது
வெயில்.
நம்மைச் சுற்றி மட்டும்
காதலுடன் மணக்கிறது
காற்று.
சந்திக்கமுடியாத இரவுகளில்
நம் முகம் பார்த்துக்கொள்ளும்
மாயக்கண்ணாடியென
நிலவைச் சுமந்து நிற்கிறது
வானம்.
இப்படி நம்காதலுடன்
பஞ்ச பூதங்களும் துணையிருக்க
பயமேன்?
ஆற்றுகிறேன் நான்.
இத்தனை செய்பவை பூதங்களா?
இல்லை… இல்லை…
பஞ்ச தெய்வங்களென சிரித்துக் கொள்கிறாய்.
காதல் இன்னும் நெருங்க,
பயம் விலகி
மீண்டும் பழையபடி புதியவளாய் நீ!
ஒரு வெள்ளி மாலையில்
அந்த பள்ளி நோக்கி
நம் பயணம் துவங்குகிறது.
பேருந்தில் ஒரு சன்னலோர இருக்கையில் நீ.
உன்னருகில் இடம்பிடித்து அமர்ந்திருக்கிறது உன் கூச்சம்.
அருகில் நின்றபடி நான்.
தலையில் தட்டி கூச்சத்தை எழுப்பிவிட்டு
தானமர்ந்துகொண்டு எனக்கும் இடமளிக்கிறது காதல்.
பேருந்து நகரத்தொடங்கியதும்
சன்னல் சதுரத்தில் ஓடத் துவங்குகிறது
உலக சினிமா.
இருக்கைகளில் நாமிருக்க…
காணும் காட்சிகளிலெல்லாம்
இறக்கை கட்டுகிறது நம் மனம்.
அந்தப் பள்ளியின்
பசும்புல்தரை காட்சி வந்ததும்
பயணம் முடிகிறது.
அங்கு
பயமின்றி சிறகடிக்கும்
கான்வெண்ட் காதல்களைப் பார்த்து
நம் காதல் பிரம்மித்து நிற்க,
சட்டை பிடித்து இழுத்துப் போகிறாய் உள்ளரங்குக்கு.
ஓவியப்போட்டி நடக்குமிடத்தை நெருங்குகிறாய்.
நானும் வருகிறேன்.
‘உனக்கும் ஓவியம் வரையத் தெரியுமா?’
ஆச்சர்யமாய் என்னைப் பார்க்கிறாய்.
‘தெரியும். ஆனால் கண்ணாடியில்தான் வரைவேன்’
‘கண்ணாடியிலா?’
‘ம்ம்ம். உலகிலிருக்கும் எல்லாக் கண்ணாடிகளிலும் அதைத்தான் வரைந்து வைத்திருக்கிறேன்’
கேட்டு கேட்டு சலித்தவளாய் முறைத்துவிட்டு
‘கவிதை போட்டி அந்தப்பக்கம்’ என்று அனுப்பி வைக்கிறாய்.
கவிதையெழுதுகையில்
சொற்களுக்கிடையே நீ மறைந்து மறைந்து எட்டிப்பார்த்தது போல
நீ தீட்டிய வண்ணங்களுக்கிடையே நான் வந்திருப்பேனா?
அன்று
நம்மிருவருக்குமே
பரிசு கிடைக்க
எப்படியெல்லாம் வேண்டிக்கொண்டதோ நம் காதல்.
நமக்குப் பரிசு கொடுத்து
அந்தப் பள்ளியும் காதல்கூடமானது!
அடுத்தவாரம்
பரிசு பெற்ற உன் ஓவியமும், என் கவிதையும்
நம் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் அருகருகே.
நீ தீட்டிய ஓவியத்தில்
என் முகத்தையும்,
‘இருளை
அளவெடுக்கும்
பொன்வண்டின்
ரீங்காரத்தில்
இதயம் சிறைபடுதல் போல…’
எனத் துவங்கும் என் கவிதைவரிகளில் உன் பெயரையும்
நாம் ஒளித்து வைத்ததைக் கண்டுகொள்ள
எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்?
நாம் வாங்கி வந்த கோப்பைகள்
மேசையின் மீது கம்பீரமாய்
நம் பிள்ளைகளைப் போல…
மேடையேறி இருவரும்
சான்றிதழ் வாங்குகையில்
திருமணப்பரிசு வாங்க
மனதை உறுதிப்படுத்துகிறது
காதல் களம்.
அதுதான் அந்தப்பள்ளியில்
நாம் இணைந்திருக்கும் கடைசி நாளெனெத் தெரியாமல்தான்
வழக்கத்தைவிட அதிகமாகவே அன்று காதலித்தோமா?
நம் காதலை உன் வீடுவரைக்கும்
யாரோ இழுத்துப் போய்விட
அரையாண்டுக்குள்
அடுத்தப் பள்ளியில் சேர்க்க வேண்டுமென
அவசரமாய் உன்னுடன்
அயலூருக்கு காலியாகிறது உன் குடும்பம்.
நொடிப்பொழுதில்
ஆயுளின் முழு ஆண்டுகளும்
முடிந்துபோனவனாய் நான்.
இசையிழந்த பாடலென பரிதவிப்போடு நீ.
காற்று நின்ற காற்றாடியாய் நம் காதல்.
( காற்று வரும்…)
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
Tuesday, January 29, 2008
ஒரு சின்ன கால்குலேட்டருக்காக இத்தன ரணகளமா?
*
கடைசி செமஸ்டர் முழுக்க ப்ராஜக்ட் வேலைதான். அதனால கிளாஸ் எதுவும் நடக்காது. தினமும் காலைலயும் சாயங்காலமும், போய் டிப்பார்மெண்ட் ஆஃபிஸ்ல ஒரு ரெஜிஸ்டர்ல கையெழுத்துப் போட்டுட்டு வந்தாப் போதும். கிளாஸ் இருந்த செமஸ்டர்லயே காலேஜ்க்கு போகாம அட்டெண்டன்ஸ் லேக் ஆகி நம்ம வீட்டுக்கு லெட்டர் போகும். கிளாசே இல்லனா கையெழுத்துப் போடறதுக்கு மட்டும் காலேஜ் போக முடியுமா? நம்மப் பசங்களயே கையெழுத்துப் போட சொல்லிட்டு எஸ்கேப் ஆகிட்டு இருந்தேன். ஒருத்தன்கிட்ட சொல்லி அவன் போகலேன்னா மிஸ் ஆகிடுமேன்னு என் செட்டுப் பசங்க எல்லார்கிட்டவும் சொல்லியிருந்தேன். அப்படியும் மிஸ் ஆச்சுன்னா தினமும் பொறுப்பா போற தங்கச்சி ஒருத்திகிட்டவும் சொல்லி வச்சிருந்தேன். இப்படி எல்லாம் சுமூகமாப் போயிட்டு இருந்தப்ப நான் காசாளரா இருந்த அசோஷியனோட பொறுப்பாசிரியர் என்ன வந்து பாக்க சொல்லி பசங்ககிட்ட சொல்லியிருக்கார். அவரும் எங்க டிப்பார்ட்மெண்டுதான். நான் கொஞ்சம் சினிமா, ஊர் சுத்துறதுனு பிசியா இருந்ததாலப் போய் பாக்கவே முடியலங்க :( நான் வர்றேனா இல்லையானு பாக்க ரெஜிஸ்டர எடுத்துப் பாத்திருக்கார், எல்லா நாளும் என் கையெழுத்து இருந்திருக்கு. என்னடா இவன் தினமும் வர்றான் ஆனா நம்மளப் பாக்க மாட்டேங்கறானேன்னு கடுப்பாக ஆரம்பிச்சுட்டார். இது கொஞ்ச நாள் நடந்திருக்கு. அப்புறம் அவருக்கு சந்தேகமாகி ரெஜிஸ்டர எடுத்து ஆஃபிசுக்கு உள்ள வச்சிட்டார். ஒருத்தன் ஒரு கையெழுத்துதான் போடறானான்னு ஒரு ஆஃபிஸ் அசிஸ்டெண்ட் பொண்ண வச்சு கண்காணிக்க ஆரம்பிச்சுட்டார். நம்மப் பசங்க கில்லாடியாச்சே. அந்தப் பொண்ணு அசரற நேரம் பார்த்து கையெழுத்தப் போட்டுடுவானுங்க. அவருக்கு தினமும் டென்சன் ஏறிக்கிட்டேப் போயிருக்கு. அப்போ நான் ஊர்ல இல்ல. அவரு கிளாஸ் ரெப்புகிட்ட கூப்பிட்டு இத சொல்லியிருக்கார். அவனும் யாரும் ப்ராக்ஸி சைன் போடவேணாம்னு எல்லார்கிட்டவும் சொல்லியிருக்கான். பிரச்சினை பெருசாகவும் யாரையும் கையெழுத்துப் போட வேணாம்னு நானும் தனித்தனியா கால் பண்ணி சொல்லிட்டு ஒரு வாரம் கழிச்சு அவரப் பாக்கறதுக்காக காலேஜ் பக்கம் போனேன், உள்ள இருந்து ஒருத்தன் வந்தான், அவனும் என்ன மாதிரி ஒரு பத்து நாளைக்கு மேல ஊருக்குப் போயிட்டு அன்னைக்குதான் வந்திருந்தான். ‘என்ன மச்சான் உனக்கு ரெண்டு வாரமா யாரும் சைன் போடாம இருந்திருக்கானுங்க… இப்போதான் உனக்கும் நானே போட்டுட்டு வர்றேன்’ னு சொன்னதும் எனக்கு அவனக் கொலையே பண்ணலாம் போல இருந்துச்சு. அதுக்கப்புறம் “நான் அவன் இல்லை” மாதிரி “தினமும் நாந்தான் கையெழுத்துப் போட்டேன்”னு திரும்ப திரும்ப சொல்லியேதான் எஸ்கேப்பாக முடிஞ்சது.
*
இது ஒருத்தனுக்கு உதவலாம்னு போய் நான் சிக்கினது. ஆறாவது செமஸ்டர்ல communication skills னு ஒரு பேப்பர் இருக்கும். இங்கிலீஸ் மாதிரிதான். அது நமக்குக் கொஞ்சம் சுமாரா வரும்ங்கறதால முதல் ரெண்டு இண்டர்னல்லயும் நல்ல மார்க் இருந்துச்சு. மூணாவது இண்டர்னல் எழுத வேணாம்னு இருந்தேன். எப்படி இருந்தாலும் பெஸ்ட் ரெண்டுதான் எடுத்துப்பாங்க. இன்னொருத்தன் முதல் ரெண்டுலயும் ஃபெயில் ஆகியிருந்ததால மூணாவத அவனுக்குப் பதிலா எழுத சொன்னான். ரெண்டு பேரும் மாத்தி எழுதினோம். இன்னொரு பேப்பர் இதே மாதிரி வேற ஒருத்தன மாத்தி எழுத சொல்லியிருந்தான். ஆனா அந்த லெக்சரர் அத க்ளாஸ்லயே கண்டு பிடிச்சுட்டார். மாத்தி எழுதினவன் அந்த விசயத்தப் போய் communication skills எடுத்த மேடம்கிட்டவும் பொலம்பியிருக்கான். யாருக்குப் பதிலா எழுதின? ன்னு அவங்க கேட்க எழுத சொன்னவன் பேர இவன் சொல்ல…. Communication skills ல அவன் பேருக்கு நேரா மார்க்கப் பாத்திருக்காங்க. முப்பதுக்கு - 13, 12, 25 னு இருந்த்திருக்கு. அப்படியே மேலப் போனா 27, 29, 11 னு ஒரு மார்க் வந்திருக்கு – அதுக்கு நேரா என்னோட பேரு :) இந்தப் பையன வந்து என்ன பாக்க சொல்லுனு சொல்லியனுப்பியிருக்காங்க. வழக்கம்போல நான் பிஸியா இருந்ததால போகவே முடியல. ஃபைனல் எக்சாம் எழுதும்போது, முடிச்சிட்டு வந்து அவங்களப் பாக்கலன்னா பேப்பர் திருத்தமாட்டாங்கன்னு சொல்லியனுப்பினதால போய் அவங்களப் பாத்தேன். எதுவும் தெரியாத மாதிரி என்னப்பா மூனாவது இண்டர்னல்ல மார்க் கொறஞ்சிருக்குனு கேட்டாங்க. எனக்கு ஏற்கனவே நல்ல மார்க் இருந்ததால நான் மூனாவது இண்டர்னல் எழுத வேணாம்னுதான் இருந்தேன், அட்டெண்டன்ஸ் லேக் ஆகியிருந்ததால அட்டெண்டன்ஸ்க்காகதான் வந்தேன். படிக்கல! அப்படி னு ஏதோ சமாளிச்சேன். இந்த பையன் என்ன 13, 12, வாங்கிட்டு இருந்தவன் மூனாவது இண்டர்னல்ல 25 வாங்கியிருக்கான்? அப்படினு கேட்கவும் , ஏற்கனவே ஃபெயிலாகிட்டதால நல்லாப் படிச்சிருப்பான் மேடம்னு சொல்லி வச்சேன். திருத்தினப் பேப்பர் எல்லாம் ஏற்கனவே எங்க கைக்கு வந்திட்டதால அந்தம்மா அதுக்கு மேல எதுவும் கேட்க முடியாம அனுப்பிட்டாங்க.ஆனாலும் அந்த செம் ரிசல்ட் வர்ற வரைக்கும் கொஞ்சம் பதட்டமாதான் இருந்தது.
இன்னொரு செமஸ்டர்ல ஒரு லெக்சரர் கிட்ட மாட்டினது இது எல்லாத்த விடவும் பெரிய காமெடி. Fluid mechanics class ங்க அது. கால்குலேட்டர் இல்லாம அந்த க்ளாஸ்க்கு வரக்கூடாதுனு நான் போகாத என்னைக்கோ அந்த லெக்சரர் சொல்லியிருக்கார். 8:30 மணி காலேஜ்க்கு 8:20 க்கே எந்திரிச்சு ஒரு கையால ப்ரஷ் பண்ணிகிட்டே இன்னொரு கையால மூஞ்சியக் கழுவிட்டு, டிபன் சாப்பிடக்கூட நேரம் இல்லாம பேக்கரியில ஒரு டீயக் குடிச்சுட்டு ஓடி வர்ற அவசரத்துல டைம் டேபிள் எல்லாம் பாத்து கால்குலேட்டர் தூக்கிட்டு வர்றதுக்கு எவனுக்குதாங்க நேரம் இருக்கும்? (அப்பாடா எம்மேல தப்பே இல்லனு சொல்லியாச்சு). அன்னைக்கு கால்குலேட்டர் இல்லாமப் போய் உட்காந்துட்டேன். அட்டெண்டன்ஸ் எடுத்து முடிச்சதும் ஒரு நாலு பேர வெளிய அனுப்பலன்னா அவருக்கு தூக்கமே வராது. யாரெல்லாம் கால்குலேட்டர் கொண்டுவரலன்னு கேட்டதும் இன்னைக்கு நமக்கு அட்டெண்டன்ஸ் காலியாகப் போகுதுனு தோணுச்சு. கிளாஸ்ல இந்த மாதிரி கேள்வி கேட்டதும் நம்மப் பயலுகளோட ரியாக்ஷன பாத்திருக்கீங்களா? முன்னாடி பெஞ்சுல இருக்கவன் பின்னாடி திரும்பிப் பாப்பான். பின்னாடி இருக்கவன் பக்கத்துல இருக்கவனப் பாப்பான். ரொம்ப நல்லப் பையனா இருக்கிற ஒருத்தன் மெதுவா எந்திரிப்பான், அப்படியே ஸ்லோ மோஷன்ல அங்க இங்க னு கொஞ்சம் பேரு எந்திரிப்பாங்க. ( வேற மாதிரி நடக்கிறதும் உண்டு! ஒரு தடவ எங்க கிளாஸ்ல ஒருத்தன் தூங்கிட்டு இருக்கிறத ஒரு லெக்சரர் பாத்துட்டார். கடுப்புல, ‘ஹௌ டேர் யூ ஸ்லீப் இன் மை க்ளாஸ்’ னு கொஞ்சம் சத்தமாவே கத்திடவும், தூங்கிட்டு இருந்த ஒரு அஞ்சாறு பேரு படக்குனு எந்திரிச்சு நிக்கவும் அவரே சிரிச்சுட்டார் :) ) அன்னைக்கும் ஒரு அஞ்சாறு பேரு எந்திரிச்சாங்க. அவருக்குத் தேவையான கவுண்ட் கெடச்சிடுச்சுனு நான் எந்திரிக்காம உட்காந்தே இருந்தேன். அவங்கள வெளிய அனுப்பிட்டு கொஞ்சம் கணக்குகளக் கொடுத்து சால்வ் பண்ண சொன்னார். அப்பாடா இன்னைக்குத் தப்பிச்சோம்னு நெனச்சா, அவரு கிளாசையே சுத்தி சுத்தி வர ஆரம்பிச்சுட்டார். ஆகா, சனியன் சைட்டடிக்க ஆரம்பிச்சுடுச்சேனு ஒரு பதட்டம் வந்துடுச்சு. முன்னாடி இருந்த ரெண்டு பேர்கிட்ட கால்குலேட்டரோட கவர மட்டும் வாங்கி, அத ஒன்னு மேல ஒன்னு கவுத்து பாக்கறதுக்கு ஒரு கால் குலேட்டர் மாதிரி தெரியறாப்ல டேபிள் மேல வச்சிட்டு கணக்குப் போடற மாதிரி ஆக்ட் கொடுக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் ஓவர் ஆக்ட்டா போயிடுச்சு போல. சுத்திகிட்டே இருந்தவர், கணக்கா என் பக்கத்துல வந்து நின்னுகிட்டு நான் கணக்குப் போடற அழகையேப் பாத்துகிட்டு இருந்தார். இந்த பரிட்சை எழுதும்போது கொடுமையான விசயம் என்னத் தெரியுங்களா? எந்த கேள்விக்கும் பதில் தெரியாமப் போறது கிடையாது. ஒன்னுமேத் தெரியாம நாம முழிச்சிட்டு இருக்கும்போது இந்த வாத்திங்க வந்து நம்ம பக்கத்துலயே நின்னுக்குவாங்க பாருங்க. செம கடுப்பா இருக்கும். எக்ஸாம் ஹாலா இருந்தாக்கூட அந்த மாதிரி சமயத்துல நான் தண்ணி குடிக்க எந்திரிச்சுப் போயிடுவேன். வெறும் பேப்பரப் பாத்துட்டு அவரே வெறுத்துப் போய் நகந்துடுவார், ஆனா இங்க ஒன்னும் பண்ண முடியல. எவ்வளவு நேரம் தான் நானும் சிந்திக்கிற மாதிரியே நடிக்கிறது? ‘நெக்ஸ்ட் வேல்யூ கால்குலேட் பண்ணுப்பா’னு அவர் கால்குலேட்டரத் திறக்க, “நாங்க கால்குலேட்டர் இல்ல… கால்குலேட்டர் மாதிரி!”ன்னு அந்த மூடிங்க ரெண்டும் கிகிகி னு சிரிக்கவும், ரெண்டு மூடியையும் தூக்கிகிட்டு கிளாஸ் முன்னாடிப் போய், ‘வீ ஹேவ் அ சயிண்ட்டிஸ்ட் ஹியர்’ அப்படினு ஆரம்பிச்சார். ஆகா நம்மப் பெருமை இன்னைக்கு காலேஜ் முழுக்கப் பரவப் போகுதுன்னு அந்த லெக்சர கேட்க ஆரம்பிச்சேன். முடிச்சதும், அடுத்த அஞ்சு நாளும் நான் அவர் கிளாசுக்கு வந்தாலும் ஆப்செண்ட் தான் போடுவேன்னும், அட்டெண்டன்ஸ் இல்லையேன்னு வராமப் போனா அடுத்த அஞ்சு நாளைக்கும் ஆப்செண்ட் தான் போடுவேன்னு சொல்லி ஒரு அப்பாலஜி லெட்டர் எழுதிக் கொடுக்க சொன்னார். நானும் ரொம்ப பாலிஷா ‘I am sorry for having misbehaved in the class. I assure you that this will not repeat again’ அப்படின்னு எழுதிக் கொடுத்தா, இதெல்லாம் செல்லாது செல்லாது னு சொல்லி ‘I have tried to cheat the lecturer by making two calculator covers look like a calculator….blah..blah…’ னு இந்த பதிவு நீளத்துக்கு ஒரு கடிதம் அவரே எழுதி எங்கிட்ட கையெழுத்து மட்டும் வாங்கிகிட்டு அனுப்பிட்டார். ஒரு சின்ன கால்குலேட்டருக்காக இத்தன ரணகளமா?
மீதியெல்லாம் வேறொரு நாளில்…
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
மாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்…(சிறுகதை)
மூன்று கால்கள் மட்டுமிருந்த அந்த நாற்காலிக்கு செங்கற்களை முட்டுக் கொடுத்து அதில் அவள் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். அவள் வயதுக்கு வந்தபோது உட்காரவைத்து சடங்கு செய்வதற்காக அவள் அப்பா குளித்தலை போய் வாங்கி வந்த நாற்காலியென முன்பொருமுறை சொன்னது நினைவிருக்கிறது. அவள் தாவணிப்பாவாடையணிந்து அந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிற மாதிரி அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் கூட இன்னும் இருக்கிறது. எங்களுக்கு திருமணம் முடிந்து சென்னை வந்தபிறகு நைந்து போன அந்த கருப்பு வெள்ளைப்படத்தை ஏதோ பெரிய ரகசியம் போல தயங்கி தயங்கி தான் காட்டினாள். அந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு நினைத்துப் பார்க்க வேண்டும்? ஆனால் மனைவி இறந்து போன நேரத்தில் இதை இதைத்தான் நினைக்க வேண்டுமென மனதுக்கு ஏதேனும் சட்டம் போடப்பட்டிருக்கிறதா என்ன? அப்படியே இருந்தாலும் சொன்னதைக் கேட்கிற மாதிரியான மனதா எல்லோருக்கும் வாய்த்துவிடுகிறது? நேற்றிரவு மாரடைப்பால் மரணமடைந்தவளைக் கொண்டு வந்து இந்த நாற்காலியில் உட்கார வைத்ததில் இருந்து அப்படியேதான் இருக்கிறாள். அப்போது இந்த திண்ணையில் சாய்ந்ததில் இருந்து நானும் இப்படியேதான் இருக்கிறேன். மனம் மட்டும் காலத்தை வருடக்கணக்கில் பின்தள்ளிக் கொண்டே இருக்கிறது. அவள் காலடியில் அழுதுகொண்டே இருக்கிற மகள், எரிந்து கொண்டிருக்கிற விளக்கை அவ்வப்போது தூண்டிவிடுவதுமாயிருக்கிறாள். இரவு முழுவதும் காரோட்டி வந்து சிவந்த போன கண்களில் வழிகிற கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாய்ந்து அமரிந்திருக்கும் மகனை தாங்கியபடி நிற்கிறது இந்தப் பழையத் தூண்.
இந்தத் தூண் அப்போது இன்னும் அழகாய் இருந்தது. இந்தத் திண்ணையில் விரித்திருந்த பாயில்தான் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். நாங்கள் என்றால், நானும், என் குடும்பமும். அன்று இந்தத் தூண் வரைக்கும் வந்து நின்றுவிட்டு, நிமிர்ந்துகூட பார்க்காமல் மறைந்துவிட்டாள். சாதகம் எல்லாம் பொருந்தியிருந்தும் மகளைச் சென்னைக்கு அனுப்ப அவள் வீட்டில் எல்லோருக்குமே தயக்கம்தான். அவள் சொல்லுகிற போதெல்லாம் கண்டிப்பாக ஊருக்கு அழைத்து வந்துவிடுவதாய் நான் வாக்குக் கொடுத்துதான் எங்கள் திருமணம் நடந்தது. சென்னை வந்து விட்ட இத்தனை வருடங்களிலும் ‘எங்க மகிளிப்பட்டில…’ என்று ஆரம்பித்து தினமும் பத்து முறையாவது சொல்ல, அவளுக்கு ஆயிரம் விசயங்கள் இருந்தன இந்த ஊரில். முதன்முறையாக ஊரைவிட்டு வெளியே வந்திருந்தாலும், ஒன்பதாவது வரையிலும் படித்திருந்ததால் சென்னை நாகரிகத்திற்கு தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதில் அவளுக்குப் பெரிய சிரமம் இருந்திருக்கவில்லை. ஆனாலும் இந்த ஊரை மொத்தமாய் தன்னோடு சுருட்டிக் கொண்டு வந்துவிட்டதைப் போல எப்போதும் இதனோடு நெருக்கமாகவே இருந்தாள். திருமணத்திற்குப் பிறகு என்னைப் பிரிகிற சில நாட்களும்கூட துயரமென அவள் வருந்தியபோதும், என்னோடு அவள் சென்னையில் இருந்த காலங்களை விட, அவளோடு நான் மகிளிப்பட்டியில் இருந்த காலங்களிலேயே அவள் முழுமையான மகிழ்ச்சியில் இருந்திருக்கிறாள். சென்னையிலிருந்து வரும்போது லாலாப்பேட்டையில் இறங்கும்போதே அவளிடம் தெரியும் அந்த மாற்றத்தை உணர்ந்திருக்கிறேன்.
லாலாப்பேட்டையில் இருந்து வரும் அடுத்த மினி பஸ்சின் சத்தம் கேட்கிறது. வாய்க்கால் முக்கில் இறங்கிய சொந்தங்களில் அங்கிருந்தே ஒப்பாரியை ஆரம்பித்து விட்ட ஒரு கிழவியின் குரலைக் கேட்டு, இங்கு அழுதழுது ஓய்ந்திருந்த பெண்களுக்கு மீண்டும் கேவல் ஆரம்பித்தது. அழுதுகொண்டே ஓடிவந்த பெண்களோடு இங்கிருந்த வர்களும் சேர்ந்து கொண்டு அழ ஆரம்பிக்க திடீரென சத்தம் அதிகமாகி, நினைவுக்குள் எதையெதையோ உடுக்கையடிக்கிறது எனக்கு. எல்லாப் பெண்களும் வட்டமாய்க் கட்டிப்பிடித்துக் கொண்டு அசைந்து அசைந்து ஒப்பாரி வைக்க, யாரும் நாற்காலியைத் தட்டி விட்டு விடக்கூடாதே என்கிற பயமெனக்கு. ஆடுகிறவர்கள் எல்லாரும் அவள் கையை இடித்து இடித்து விட அவள் கையை எடுத்து உள்ளே மடித்து வைக்கப் பார்க்கிறேன். ஆனால் அது நாற்காலியோடு கட்டப்பட்டிருக்க, அவள் கையையேப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். மகன் அதனை வித்தியாசமாகப் பார்க்கிறான். அதற்குள்ளாகவே அவளைப் பிணம் என்று அவனால் உணர்ந்துகொள்ள முடிந்திருக்கிறது போல. என்னால் இன்னும் முடியவில்லை. அவள் இறந்து விட்டாள் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக கிரகித்துக் கொள்ள முயன்றாலும், இது எல்லாமே கனவாக மாறி திடீரென நான் தூக்கத்தில் இருந்து விழிப்பேன்; எப்போதும் போல என் மார்பில் கை போட்டு அவள் துங்கிக்கொண்டிருப்பாள் என்றே நான் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.
நேற்றிரவு கூட என் மார்பில் கைபோட்டுக்கொண்டு தூங்கியவள்தானே இவள். திருமணத்திற்கு முன்பு நிமிர்ந்து பார்ப்பதற்கே வெட்கப்பட்டவள் திருமணத்திற்குப் பிறகு பல சமயங்களில் என்னையே வெட்கப்பட வைத்திருக்கிறாள். பேசும்போது கண்களைப் பார்த்து பேசுவது மட்டுமே நெருக்கமாய் இருப்பதை உணர்த்துமென்று நம்பிக் கொண்டிருந்த எனக்கு, கைகளையோ, தோள்களையோப் பிடித்துக் கொண்டு இவள் பேசும்போது அது பொய்யென தோன்றியிருக்கிறது. தொடுதல் உணர்த்தும் அர்த்தங்கள் புரியவைத்தவள் அவள். இத்தனை வயசிலும் இரவுத் தூக்கம் ஒரே மெத்தையில் தான். கையைப் பிடித்துக் கொண்டோ, மார்பில் கைபோட்டபடியோதான் தூங்குவாள். இரண்டு பிரசவத்தின்போதும் பக்கத்திலிருக்க சொல்லி என் கைகளைத்தானே பிடித்துக் கொண்டிருந்தாள். முதல் கர்ப்பத்தின் போது என்ன குழந்தை வேண்டுமென்று அவள் கேட்டபோது, ஆண் என்று நான் சொன்னதும் ஆச்சர்யப்பட்டாள். மகன் அம்மாவிடம்தான் அன்பாயிருப்பான், மகள் தான் அப்பாவிடம் அன்பாயிருப்பாள் என்று, எனக்கு விளக்கமெல்லாம் சொன்னாள். என் மேல் பாசமாயிருக்கிற மகளை விட அவள் மேல் பாசமாயிருக்கிற மகன் தான் வேண்டுமென்று சொல்லி வைத்தேன். ஆனால் அப்போது பெண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டுச் சிரித்தாள். இரண்டாவது பிரசவத்தில் தான் ஆண்குழந்தை பிறந்தான். நேற்று நடந்தது போலிருந்தாலும் எல்லாம் முடிந்து முப்பது வருடமாகி விட்டது.
ஆண்கள் வரிசையாக வர ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது நான் எழுந்து நின்று இரு உள்ளங்கைகளையும் நீட்டிக் கொண்டிருக்க வேண்டுமாம். ஒவ்வொருவராக அவர்கள் கைகளினால் என் உள்ளங்கை தொட்டு என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்வார்களாம். வேடிக்கையாக இருக்கிறது. வேதனையாகவும்தான். துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார்களாம். அவர்களுக்கும் துக்கமாக இருக்கிறது என்று சொல்லட்டும். ஆனால் என் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டதாக சொல்லுவதுதான் வேதனை. இருக்கிற துக்கத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து விட முடியுமென்றால் நன்றாகத்தான் இருக்கும். முடியுமா? எல்லோரும் அங்கங்கே அமர்ந்து கொண்டபிறகு மீண்டும் திண்ணையில் சாய்கிறேன். ‘என்னைய்யா அருவது வயசு ஆம்பள அழுவலாமா? சந்தோசமா பொண்டாட்டிய அனுப்பி வைப்பியா’ தடி ஊன்றி வருகிற எழுபத்தைந்து வயது பெரியவர் என் தோளைப் பிடித்துக் கொண்டு சொல்லி விட்டு அமர்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி இறந்தபோது சாராயத்தைக் குடித்துவிட்டு அழுது தீர்த்தவர், இப்போது எனக்கு அறிவுரை சொல்கிறார். அவர் சாராயம் குடித்து விட்டு அழுதார். நான் சாராயம் குடிக்காமல் அழுகிறேன். ஆணென்றால் அழக் கூடாதென்று யார் சொன்னது?
ஆண் அழக்கூடாதென்று அவள் சொல்லியிருக்கிறாள். பத்து வருடங்களுக்கு முன் அவளுக்கு முதல் மாரடைப்பு வந்தபோது மருத்துவமனையில் அவளைத் தேற்றி விட்டு வெளியே வந்து நான் அழுததை எப்படியோ தெரிந்துகொண்டு விட்டாள். அறுவை சிகிச்சையறைக்கு அவளை உள்ளே அனுப்பும்போது பயப்படாமல் இருக்க சொல்லி நான் தேற்ற, ‘நான் உள்ள போனதும் நீங்களும் இங்க அழாதீங்க. ஆம்பள அழக் கூடாது’ என்று என்னைத் தேற்றி விட்டுப் போனாள். அதற்கு முன்பெல்லாம் நோயென்றா, உடல்நிலை சரியில்லையென்றோ மருத்துவமனைக்கேப் போகாதவள். எப்போதாவது இரவு நேரத்தில் தலைவலிக்கிறதென சொல்லுவாள். கொஞ்சம் சுக்கு தட்டி போட்டு சூடாக ஒரு டம்ளர் காப்பி வைத்துக் கொடுத்தால் குடித்துவிட்டு படுத்துக் கொள்வாள். காலையில் எழுந்து எப்போதும் போல இயங்க ஆரம்பித்துவிடுவாள். கடைசி வரைக்கும் அவளுக்காக நான் செய்த ஒரே சமையல் சுக்கு காபி மட்டும் தான். அவள் மீதான அன்பை வெளிப்படுத்துவதற்கு எந்த வேலையை செய்வதற்கும் அவள் என்னை அனுமதித்ததில்லை. அந்த குற்றவுணர்ச்சியில் அவளை நான் கவனித்துக்கொள்வதற்காகவேனும் தலைவலியென்று அவள் படுத்துக் கொள்ளக்கூடாதா என்று சில சமயம் யோசிப்பேன்.
நாற்காலியிலிருந்து இறக்கி நீள பெஞ்சில் அவளைப் படுக்க வைத்து விட்டார்கள். பெண்கள் எல்லாம் சேர்ந்து புடவைகளைச் சுற்றிப் பிடித்து மறைப்பு கட்ட, குளிப்பாட்டித் தயார்படுத்துகிறார்கள். வேறு புடவை உடுத்தி, பெஞ்சோடு அவளைக் கொண்டு வந்து நடு வாசலில் வைத்து சடங்குகள் துவங்குகின்றன. என்னையும் அழைக்கிறார்கள். அவள் நெற்றியில் சந்தனத்தை தடவுகையில் எனக்கு கை நடுங்குகிறது. அதற்கு மேல் முடியாமல் மீண்டும் திண்ணையில் வந்து அமர்ந்து கொள்கிறேன். எல்லா சடங்குகளையும் முடித்து அவளைத் தேரில் தூக்கி வைக்கிறார்கள். தேருக்கு முன்னால் நடந்து செல்ல நானும் எழுந்து போக வேண்டும்.
சொர்க்கத்திற்கு யார் முன்னால் செல்வதென்று ஒருமுறை பேசிக்கொண்டிருந்தோம். இந்த உலகத்தில் அவளை விட்டுத் தனியாக எனக்கு இருக்க தெரியாதாம். அதனால் நான் தான் முதலில் போக வேண்டுமென்றும், என்னை அனுப்பி வைத்து விட்டு அவள் பிறகு வர விரும்புவதாகவும் சொன்னாள். ஒருவேளை அவளை முதலில் அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு வந்தால் என்ன செய்வது என்று கேட்டேன். ‘எமன எப்படியாவது ஏமாத்திட்டு திரும்பி உங்ககிட்டயே வந்துடுவேன்ல’ என்று சொல்லி சிரித்தாள்.
தேரில் படுத்துக்கொண்டு இப்போது கண்களைத் திறந்து என்னைப் பார்த்து சிரிக்கிறாளே இது நிஜம்தானா? என்னைத் தவிர வேறு யாரும் அவளைப் பார்க்கவில்லையா? அவள் மெதுவாக எழுகிறாள். இப்போதுதான் மற்றவர்களும் கவனிக்கிறார்கள். அழுது கொண்டிருந்த சத்தம் அப்படியே நின்று போகிறது. தேரைத் தூக்கப் போனவர்கள் அப்படி அப்படியே சிலை போல நிற்கிறார்கள். அடித்துக் கொண்டிருந்த மேள சத்தம் கூட நின்றுவிட்டது. என்னால் இன்னும் என் கண்களை நம்பவே முடியவில்லை. எழுந்து உட்கார்ந்தவள், கட்டப் பட்டிருந்த கைகளை விடுவித்துக் கொள்கிறாள். யாருக்குமே அவளுக்கு உதவ வேண்டும் என்று தோன்றவில்லை. எல்லாருமே ஆச்சர்யத்தில் அப்படியே வாயடைத்து சிலை போல நிற்கிறார்கள். இல்லை பயமா என்றும் தெரியவில்லை. ஆனால் அவள் வெகு சாதாரணமாக தூங்கி எழுபவளைப் போல கட்டுகளை அவிழ்த்து விட்டு என்னை நோக்கி நடந்து வருகிறாள். எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம் வருகிறது. எல்லாமே கனவாகத்தான் இருக்குமோ? வீட்டிலிருக்கும் மெத்தையிலிருந்துதான் தூங்கியெழுந்து வருகிறாளா? சுற்றிலும் நன்றாக உற்றுப் பார்த்தேன். இல்லை. இல்லவே இல்லை. நேற்றிரவு மாரடைப்பு வந்து மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் அவள் இறந்ததும் உண்மை. இரவோடிரவாக இங்கு மகிளிப்பட்டிக்கு கொண்டு வந்ததும் உண்மை. அவளைத் தேரில் தூக்கி வைத்தபின் உயிர் பெற்று எழுந்து வந்து இதோ என் முன் எப்போதும் போல அழகாக சிரித்துக் கொண்டிருப்பதும் உண்மைதான். சொன்னது போலவே எமனை ஏமாற்றிவிட்டு வந்துவிட்டாளா? இதெல்லாம் சாத்தியமா? எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். எனக்கு அவள் திரும்பி வந்ததே போதும். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவளிடம் பேசுகிறேன். இன்னுமிந்த ஆச்சர்யத்திலிருந்து விடுபடமுடியாமல் சத்தமே இல்லாமல் வெளி வருகின்றன என் வார்த்தைகள் – ‘சொன்ன மாதிரியே திரும்பி வந்துட்டியாம்மா?’. கேட்டதும் சிரித்துக் கொண்டே சொல்கிறாள் – ‘இல்லீங்க… நீங்க தான் வந்துட்டீங்க’
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
Monday, January 28, 2008
பாடல்களும், நினைவுகளும்!
எல். ஆர் ஈசுவரியின் மாரியம்மன் பாடல்களை எப்பொழுது கேட்டாலும் நினைவுக்கு வருவது என் அம்மாவின் ஊரில் நடக்கும் மாரியம்மன் திருவிழாக்கள். அது நினைவுக்கு வருகிறது என்பதனைவிடவும் என்னை அழைத்துச் செல்கிறது என்று சொன்னால் சரியாயிருக்கும். பள்ளியில் படித்த காலத்தில் எந்த விடுமுறையென்றாலும் அம்மாவின் ஊருக்குதான் செல்வோம். மாரியம்மன் திருவிழாவின் போது ஊரில் இருக்கும் எல்லோருடைய உறவினர்களும் வெளியூர்களிலிருந்து வந்து ஊரே புதிதாய் இருக்கும். மாவிளக்குப் படையலில் வரிசையில் இருக்கும் மாவிளக்குத் தட்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கும். சர்க்கரைப்பாகில் பிடிக்கப்பட்டு வெள்ளையாய், வெல்லப்பாகில் செய்து பொன்னிறத்தில், எள், பொட்டுக்கடலை எல்லாம் போட்டு புள்ளிப்புள்ளியாய், இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சரியான பதத்தில் செய்வதும் ஒரு கலைதான். பாகு குறைந்து போயிருந்தால் மறுநாளே கட்டடத்தை இடிக்கிற மாதிரி இடித்து எடுக்க வேண்டிய அளவுக்கு இறுகிப் போயிருக்கும். பாகு அதிகம் கலந்துவிட்டாலோ, படைப்பதற்குப் போகும்போது நிற்க வைத்த மாவு, திரும்பி வருவதற்குள் படுத்துப் போன மாதிரி இளகிப் போயிருக்கும். அதன் மேலே செருகிக் கொள்ள வண்ண வண்ண விசிறிகள். கோவிலுக்கு முன்னே முன்னூறுக்கும் மேலே மாவிளக்குத் தட்டுடன் நின்றுகொண்டிருப்பார்கள்.பார்ப்பதற்கே அழகாயிருக்கும். வள்ளித்திருமணமோ, அல்லது ஏதேனும் சமூக நாடகமோ, அப்புறம் கரகாட்டம், பொன்னர்-சங்கர் கதை, திரைப்படம் (முதலில் ஒரு பக்திப்படம், ரெண்டாவது ஒரு எம்ஜியார் படம் (பெரும்பாலும் எங்க வீட்டுப் பிள்ளை), மூன்றாவதாக ஒரு ரஜினி படம் என்ற வரிசையில் போடுவார்கள், எப்பொழுதும் இரண்டாவது படத்தின் பாதியிலேயே தூங்கி விடுவேன்) என ஒரு வாரத்திற்கும் மேலான இரவுகள் விழித்தபடியே கழியும். அங்கேயே அடுப்பு மூட்டி சுக்குக்காப்பி போட்டு ஒரு ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருப்பார் ஒருவர். சாக்கோ, பாயோ எடுத்துக்கொண்டு போய்விடுவோம். தூக்கம் வருகிற வரை பார்த்துவிட்டு அங்கேயேத் தூங்கி, எல்லாம் முடிந்தபின் தூக்கத்திலேயே தலையில் பாய்/போர்வைகளை சுமந்து வீட்டிற்கு வந்து காலையில் விழித்துப் பார்த்தால் எப்பொழுது வந்தோம் எனப் புரியாது. சில நாட்களில் விழித்துப் பார்த்தால் நாடகக்கொட்டாய் முன்னாலேயே பாயில் கிடப்போம். இன்னும் சொல்வதற்கு ஏராளம் இருக்கின்றன. அத்தனை நிகழ்வுகளையும் மீண்டுமொருமுறை அனுபவிக்கும் சுகம் தருபவை அந்தப் பாடல்கள். திருவிழாவுக்குக் கம்பம் சாட்டிய நாளிலிருந்தே குழாய் ஒலிபெருக்கிகளில் மரத்துக்கு மரம் முழங்க ஆரம்பித்துவிடுவார் எல்.ஆர் ஈசுவரி. முக்கியமாக “மாரியம்மா…எங்கள் மாரியம்மா”, “கற்பூர நாயகியே கனகவள்ளி”, “அங்காளம்மா எங்கள் செங்காலம்மா மங்கலம் பொங்கிட மனதினில் வந்திடும் மாரியம்மா”, “ஈசுவரியே மகமாயி மாரியம்மா…” முத்து மாரி அம்மனுக்கு திருநாளாம்” கேட்க கேட்க மனதெங்கும் திருவிழாஞாபகங்கள்!
கரகாட்டக்காரன்,சின்னத் தம்பி, தளபதி - இந்தப் படங்களில் உள்ளப் பாடல்கள் ஆத்தூரில் கழிந்த எனது பால்யங்களை கண்முன்னே நிறுத்தும். அப்போது எங்கள் தெருவில் தொலைக்காட்சி என்பது ஆடம்பரம். பக்கத்து வீட்டில் புதிதாக பிலிப்ஸ் டேப் ரிக்கார்டர் வாங்கியிருந்தார்கள். கூடவே கரகாட்டக்காரன் கேசட்டும் வாங்கியிருந்தார்கள். பாடல் கேட்பதற்காக அவர்கள் வீட்டுக்குப் போய் டேப் ரிக்கார்டர் முன்னால் காதை வைத்துப் படுத்துக்கொண்டு சங்கீதம் தெரிந்தவர்களைப் போல் தலையாட்டிக்கொண்டு பாடல் கேட்டதை நினைத்துப் பார்த்தால் இப்பொழுதும் சிரிப்பு வருகிறது. சின்னத்தம்பிப் படப்பாடல்கள் தேய்ந்து போகிற அளவுக்கு அப்போது எல்லா விசேசங்களிலும் ஒலித்துத் தள்ளினார்கள். பள்ளிக்கூடம் முடிந்துவந்தால் இரவு வரை அந்த செம்மண் புழுதியில் போட்ட ஆட்டங்கள் அத்தனையும் சின்னத்தம்பியோடு இணைந்திருந்தது. கில்லி, பம்பரம், ஆபியம், கோலி, என ஆட்டம் முடிந்துவருகையில் முழங்காலுக்குக் கீழே மண்ணால் ஒர் ஆடை படிந்திருக்கும். இரவெல்லாம் வாசலில் உட்கார்ந்து கதை பேசும் அம்மாக்களோடு அப்படியே கதை கேட்டுக் கொண்டே தூங்கியிருக்கிறோம். ராக்கம்மா கையத்தட்டு பாடல் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த சமயம் அது. ஒவ்வொரு படத்தின் பாடலுடன் நாங்கள் அங்கு குடியிருந்த ஒவ்வொரு வீட்டின் ஞாபகங்கள் கலந்திருந்தன. அப்போது கேப்டன் பிரபாகரன் படத்தில் வந்த ஆட்டமா சதிராட்டமா பாடலுக்கு நடனம் இல்லாமல் எந்தப் பள்ளிக்கூட ஆண்டுவிழாவும் நடந்ததில்லை. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஆண்டுவிழாவில் வழக்கமாக நடனமாடும் ஒரு பெண்தான் நினைவுக்கு வருகிறார், முகம் நினைவில்லாத போதும்!
பம்பாய் படத்தின் பாடல்கள் திரும்ப திரும்ப ஒலித்த காலகட்டங்களில் நாங்கள் சேலத்துக்கு குடிபோயிருந்தோம். எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலும் ஒரு முசுலீம் குடும்பம் இருந்தது, என் வயதில் உள்ள ஒருப் பெண்ணோடு ;) அதுவரை அரைடிராயர் அணிந்துகொண்டிருந்த நான் இனி லுங்கிதான் அணிவேன் என அடம்பிடித்து லுங்கிக் கட்ட ஆரம்பித்தப் பருவம். பள்ளியில் தேசிய மாணவர் படையில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் தேர்வாகி ஃபேர்லேண்ட்ஸ் பகுதியில் இருக்கும் இராணுவக் கிடங்கில் அடுத்தகட்ட பயிற்சிக்காக தினமும் மாலையில் போய்க்கொண்டிருந்தேன். என் பள்ளியில் இருந்து அங்கு செல்வதற்கு அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் படிக்கும் பெண்கள் பள்ளி வழியாகதான் போக வேண்டும். முதல் நாள் ஓர் ஆர்வக்கோளாறில் அந்த பள்ளிமுடிகிற நேரம் பார்த்து போன போதுதான் புரிந்தது, நூறு இருநூறு பெண்கள் ஒன்றாக எதிரில் வரும்போது நண்பர்கள் இல்லாமல் தனியாக போவது ஒரு மாதிரி அவஸ்தையாகத்தான் இருக்குமென்று :) ஆனாலும் மனசுக்குள் அந்த அரபிக்கடலோரம் அவள் அழகைக் கண்டேனே என்று இசையடிக்கும். முத்து படத்தின் தில்லானா தில்லானா பாடல் கேட்டாலும் சேலம் ஞாபகம் தான்!
கரூர் வந்து பத்தாம் வகுப்பில் சேர்ந்தபோதுதான் பாடலின் தாக்கம் அதிகமானது. இரண்டு பக்கத்திலும் ஒட்டியபடியிருக்கும் வாடகை வீடுகள். இரண்டு வீட்டிலும் இரண்டு ஸ்பீக்கர் பெட்டிகள் வைத்த பெரிய டக்காய் செட்டுகள் இருந்தன. ஒரு வீட்டில் எப்போதும் மெலடிப் பாடல்கள் தான். இன்னொரு வீட்டில் குத்துப்பாடல்கள்/நாட்டுப்புறப்பாடல்கள் பட்டையைக் கிளப்பும். நான் படித்துக் கொண்டிருக்கும்போதெல்லாம் ஒரு பக்கம் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்றோ, என்னைத் தாலாட்ட வருவாளோ என்றோ ஹரிஹரண் உருகிக் கொண்டே இருப்பார். மற்றொரு பக்கம் எட்டுப் பட்டி ராசா, என் ஆச ராசாவே, வீரத்தாலாட்டு என முழங்கிக் கொண்டிருக்கும். என் அம்மா இரண்டு பேரிடமும், ‘பையன் படிச்சிட்டிருக்கான் கொஞ்சம் சத்தம் கம்மியா வையுங்க’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த சூழலில் நான் வெகுவாய் ரசித்த என் வீட்டு ஜன்னலெட்டி ஏன் பாக்குற?, இளவேனிற்காலப் பஞ்சமி, தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் போல இன்னும் சிலப் பாடல்களைப் பற்றி கரையோரத்தென்றலில் தனிப்பதிவாகப் போடுகிறேன்.
கோவையில் கல்லூரியில் சேர்ந்த பிறகு விடுதியில் தங்கியிருந்ததால் ஆண்டுக்கொருமுறை அறைமாறுவோம். நான் இரண்டாமாண்டே விடுதியை விட்டு வெளியேறிவிட்டாலும் (உண்மையைச் சொன்னால் வெளியேற்றி விட்டார்கள் :) ) நண்பர்களோடு எப்பொழுதும் உள்ளேதான் தங்கியிருந்தேன். ஒவ்வோர் ஆண்டும் வந்தப் படங்களில் சில பாடல்கள் அந்தந்த ஆண்டின் நினைவுகளை மீட்டும். சிநேகிதியே/தெனாலி தான் கல்லூரி வந்தபிறகு பார்த்த முதல் படம். ராதை மனது ராதை மனது பாடல் இன்னுமும் கல்லூரியின் முதல் சில வாரங்களின் நினைவுகளையேத் தந்துகொண்டிருக்கிறது. டும் டும் டும், துள்ளுவதோ இளமை பாடல் கேட்கும்போதெல்லாம், தேநீர் குடிக்கும்போது வந்து மொய்க்கிற ஈக்களுக்காக தனியே கொஞ்சம் தேநீர் ஊற்றி வைத்த புத்திசாலி/இரக்கமுள்ள சீனியர், அத்தான் வருவாக பாடலுக்கு தமிழ் புரியாத ஒருவனுக்கு நான் சொன்ன இல்லாத அர்த்தங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இப்படி ஒவ்வோராண்டுக்கும் கொஞ்சம் பாடல்கள். சொன்னால் தீராதவை :)
கடைசியாக இந்த மாதிரி காலங்களை மீட்டு வரும் மாதிரியான பாடல்களாக எனக்கு அமைந்தவை ‘ பார்த்த முதல்நாளே’, ‘முன்பே வா அன்பே வா ‘ – இரண்டு பாடல்களும். கடந்த ஆண்டு பெங்களூரில் இருந்த அழகான நாட்கள் அவை. அதிகம் வேலையிருக்காது. அந்த குளிரை ரசித்தபடி வலையில் எதாவது வாசித்துக் கொண்டே இருக்கலாம். பின்னணியில் இந்த இரண்டு பாடல்களும் இசைந்து கொண்டிருக்கும். கடந்த வருடம் எழுதிய பல காதல் கவிதைகளை இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டேதான் எழுதினேன். பெங்களூரில் இருந்தவரை ‘பார்த்த முதல் நாளே’ தான் என் மொபைலின் காலர் ட்யூனும் கூட. அதன் பிறகு மும்பையில் இருந்த கொஞ்ச காலத்தையும் கண் முன்னே நிறுத்தும் இந்தப் பாடல் அட்னன் சாமி பாடியது!
என்னவளே படத்தில் ஒரு பாடல் வரும். “ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கும் நெஞ்சே” என்று…எனக்கு அது ரொம்பவேப் பொருந்தும். உங்களுக்கு எப்படி?
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ
Saturday, January 26, 2008
ஒரு வாரம் பின்தொடரப் போகும் மொக்கையின் குரல் :)
“என்னத்தங்க சொல்றது. இது எனக்கு வந்த சோதனையா? இல்ல படிக்கிறவங்களுக்கு வந்த சோதனையானு யோசிச்சுட்டு இருக்கேன்!”
“என்னப்பா? உன்ன மதிச்சு நட்சத்திரமாக்கியிருக்காங்க. நீ இப்படி சொல்ற”
“அய்யயோ. நான் தப்பா எதுவும் சொல்லலங்க. எப்பவும் நான் பாட்டுக்கு ஒரு ஓரமா கண்ணே, மணியே னு கவுஜ மட்டும் எழுதிகிட்டு இருந்தேன். அத மட்டும் படிக்கிறவங்கப் படிச்சுட்டுப் போயிடுவாங்க. நட்சத்திரமாகிட்டா இன்னும் கொஞ்சம் அதிகமா வந்து வாசிப்பாங்களே. இந்த வாரமும் எப்பவும் போல அன்பே, ஆருயிரே னு எழுதினா புதுசா படிக்க வர்றவங்களுக்கும் ஏமாற்றம்தான். வேற எதாவது எழுதலாம்னு பார்த்தா எனக்கு ஓரளவுக்குத் தெரிஞ்சதே அது மட்டும்தான். அதான் அப்படி சொன்னேன்”
“இந்தப் பதிவுக்கு மட்டும் “நட்சத்திர வாழ்த்துகள்” அப்படினு அதிகமா கொஞ்சம் பின்னூட்டம் வரும். அதுக்கு இத்தன பில்டப்பா? சரி அத விடு… நீ(யெல்லாம்) எதுக்கு வலைப்பதிவ ஆரம்பிச்ச?”
“இணையத்துல இலவசமா கிடைக்குதுன்னு சொன்னாங்க. சரினு ஒன்ன ஆரம்பிச்சுட்டேன் ;-) அது வந்துங்க, என்னோட கல்லூரி காலத்துல எப்பவுமே படிக்கிறதுக்கு ஏதோ ஒரு புத்தகம் (ஓசில தான்) கெடச்சுடும். படிக்க, கும்மியடிக்க னு என்ன மாதிரியே உருப்படாததுங்க எல்லாம் ஒன்னாவே சுத்துவோம். பொழுதும் போச்சு. கல்லூரி முடிச்சுட்டு வேலைல சேர்ந்தபின்னாடி ஒரு நாலு மாசம் பயிற்சின்னு சொல்லி மைசூர்ல சக்கையாப் பிழிஞ்சாங்க. அடுத்த நாலு மாசம் வேலையே கொடுக்காம கொல்ட்டி தேசத்துல சும்மா உட்கார வச்சிட்டாங்க. படிக்கிறதுக்கும் ஒன்னும் கிடைக்கல. கூடவும் நம்ம கூட்டாளிப் பயலுக ஒருத்தனும் இல்ல. சும்மா இருந்த நேரத்துல இணையத்துல மேஞ்சப்பதான் தமிழ்மணம், இ-கலப்பை எல்லாம் அறிமுகமாச்சு. ஒரு பக்கம் பதிவுகளுக்கு வாசகனா இருந்துகிட்டே, இன்னொரு பக்கம் +2 காதல், காதல் பயணம் னு கதைகள எழுதி நம்ம கூட்டாளிகளுக்கு மட்டும் மடல்ல அனுப்பிக்கிட்டு இருந்தேன். அதுல ஒரு ரணம்விரும்பி, இதையெல்லாம் வலைப்பதிவுல போட்றா மச்சான்னு உசுப்பேத்த (அவனத்தான் தேடிட்டு இருக்கீங்களா? கூட்டாளிய காட்டிக் கொடுக்கமாட்டோம்ல ;-) ) ஒரு சுபயோக சுபதினத்துல நானும் வலைப்பதிய ஆரம்பிச்சு ரெண்டு வருசம் ஓடிப்போச்சு. இதுதாங்க நான் வலைப்பதிய ஆரம்பிச்சதோட வரலாறு, புவியியல் எல்லாம்”
“அது சரி. ஒரே விசயத்த மட்டும் திரும்ப திரும்ப எழுதறயே. உனக்கே சலிக்கல?”
“என்னப் பண்றது வேற எதுவும் எழுதத் தெரியலையே :( ”
“ப்ரொஃபைல்ல உன்னோடப் படத்தப் போடாம, காதல் னு எழுதி வச்சிருக்கியே நீயென்னா லூசா?”
“கி..கி..கி… நான் வலைப்பதிவ ஆரம்பிச்சப்போ கருப்பு நிறத்துலதான் பின்னணி நிறம் வச்சிருந்தேன். அதுல என்னோட புகைப்படத்தயே போட்டிருந்தா கண்டிப்பா என் முகம் தெரிஞ்சிருக்காதுங்க. அதனாலதான் அப்போதைக்கு கருப்பு பின்னணியில வெள்ளைல எழுதியிருந்தது பிடிச்சிருந்ததால அத வச்சேன். அப்புறம் தமிழ்மணத்துல வரும்போது புகைப்படமும் தெரியுமாம்ல. சரி ‘காதல்’ னு இருந்தா நெறைய பேர் வாசிப்பாங்கனு பாத்தா அந்த வார்த்தைய பார்த்ததும் தெறிச்சு ஓடினதுதான் நெறைய பேர்னு நெனைக்கிறேன். ஆனா அந்தப் படத்துனால என்ன காதல் கவுஜன் னு கொஞ்சம் பேர் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அது வேற விசயம் ;-) ”
“இப்போ மட்டும் எதுக்கு உன்னோட புகைப்படத்த போட்டுட்டியாம்?”
“இந்த வாரம் நீ நட்சத்திரமாகிட்டதால உன்னோட வலைப்பதிவுக்கு நெறைய திருஷ்டி வர வாய்ப்பிருக்கு. அதப் போக்கனும்னா வலைப்பதிவோட மூலைல ஒரு திருஷ்டி பொம்மைய தொங்கவிடுன்னு சிவல்புரி சிங்காரம் தனி மடல்ல கேட்டுகிட்டாரு. அதான் :-) ”
“சரி சரி இந்த வாரமாவது வழக்கமாப் போட்ற மொக்க கவுஜைய விட்டுட்டு உருப்படியா எதாவது எழுது”
“உருப்படியா எழுத முயற்சி பண்றேன். ஆனா கவுஜ எழுதலன்னா எனக்கு மனசு நடுங்குமே”
“உன்னையெல்லாம் திருத்த முடியாதுடா”
“கி..கி..கி…நீங்க யாருன்னு சொல்லவேயில்லையே”
“கண்ணாடியப் போயிப் பாரு”
----
ஆரம்பமே படு மொக்கையா இருக்கா? அப்படின்னா இதப் பாருங்க!
அடுத்த நட்சத்திரப் பதிவு மாலை நான்கு மணிக்கு ;-)
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
Monday, January 21, 2008
ஒரு முட்டையின் கதை – முழு நீள மொக்கைப் பதிவு!
மாமா ஒரு கத சொல்லு மாமா
உனக்கு தான் எல்லாக் கதையும் தெரியும்னு அம்மா சொல்றாங்களே.
ஐயோ கத சொன்னாதான் நான் தூங்குவேன். நீ சொல்லு மாமா.
சரி என்ன கதை சொல்லட்டும்?
முட்டக் கத சொல்லு மாமா.
முட்டக் கதையா? சரி சொல்றேன். ஒரு ஊர்ல ஒரு பாட்டியும் பேரனும் இருந்தாங்களாம். பேரன் வேலை தேடி பட்டணத்துக்குப் போறதுக்காக பாட்டிகிட்ட காசு கேட்டானாம். பாட்டிகிட்ட காசே இல்லையாம். அதனால பாட்டி ஒரு வட்டிக்கடக்காரன்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கி பேரனுக்குக் கொடுத்தாங்களாம். பட்டணத்துக்குப் போன பேரன் ரொம்ப நாளாகியும் திரும்ப வரவேயில்லையாம். காசத் திருப்பிக் கொடுக்கலன்னு வட்டிக்கடக்காரன் வந்து பாட்டிகிட்ட கேட்டானாம். பேரம் திரும்பி வந்ததும் தர்றேன்னு பாட்டி சொன்னாங்களாம்; ஆனா வட்டிக் கடக்காரான் அதுக்கு ஒத்துக்கலையாம். சீக்கிரமா பணத்த திருப்பித் தரணும்னு சொல்லி மெரட்டிட்டுப் போயிட்டானாம்.
அப்புறம் ஒரு நாளு பாட்டி, கடைல முட்ட வாங்கிட்டு வந்து அஞ்சு முட்டைல நால ஒடச்சிட்டு அஞ்சாவது முட்டைய ஒடைக்கும்போது ஒரு அழுக சத்தம் கேட்டுச்சாம். என்னான்னு பாத்தா கைல இருந்த முட்டதான் அழுதுச்சாம். “பாட்டி பாட்டி என்ன ஒடைக்காத. நான் உன் கூடவே இருக்கேன். உனக்கு எல்லா உதவியும் பண்றேன்” அப்படினு சொன்னுச்சாம். பாட்டியும் பாவம்னு அந்த முட்டைய மட்டும் ஒடைக்காம விட்டுடுச்சாம். அன்னைக்கும் அந்த வட்டிக் கடக்காரன் வந்தானாம். பாட்டிகிட்ட காசு கேட்டு மெரட்டவும், பேரன் வந்ததும் கொடுத்துட்றேன்னு பாட்டி சொன்னாங்களாம். வட்டிக்கடக்காரனுக்குக் கோபம் வந்து பாட்டிய அடிச்சுட்டுப் போயிட்டானாம். பாட்டி அழுதுட்டே இருந்தாங்களாம். முட்ட வந்து பாட்டிகிட்ட “ஏன் பாட்டி அழறீங்க”னு கேட்டுச்சாம். இந்த மாதிரி வட்டிக்கடக்காரன்கிட்ட கடன் வாங்கி பேரனுக்குக் கொடுத்தேன். பேரன் இன்னும் வரவேயில்ல. வட்டிக்கடக்காரன் காசு கேட்டு என்ன அடிச்சுட்டுப் போறான்னு சொல்லி அழுதாங்களாம். “நீங்க அழாதீங்க பாட்டி நான் போய் வட்டிக்கடக்காரன என்னானு கேட்டுட்டு வர்றே”ன்னு சொல்லிட்டு முட்ட கெளம்பிடுச்சாம் வட்டிக்கடக்காரன் வீட்டுக்கு.
முட்ட போயிகிட்டு இருந்த வழியில ஒரு சிங்கம் வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
“காசு கொடுக்க சொல்லி என்னோட பாட்டிய அந்த வட்டிக்கடக்காரன் அடிச்சு மெரட்றான். அவனுக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கப் போயிகிட்டு இருக்கேன்”னு முட்ட சொல்லுச்சாம்.
“நானும் உன் கூட வரட்டுமா”னு சிங்கம் கேட்டுச்சாம்.
“சரி எம்பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.
கொஞ்ச தூரம் போனதும் ஒரு யானை வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
“காசு கொடுக்க சொல்லி என்னோட பாட்டிய அந்த வட்டிக்கடக்காரன் அடிச்சு மெரட்றான். அவனுக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கப் போயிகிட்டு இருக்கேன்”னு முட்ட சொல்லுச்சாம்.
“நானும் உன் கூட வரட்டுமா”னு யானை கேட்டுச்சாம்.
“சரி நீயும் எங்க பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.
இன்னும் கொஞ்ச தூரம் போனதும் ஒரு புலி வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
அதுக்கு முட்ட என்ன தங்கம் சொன்னுச்சு?
ம்ம்ம் அவன் காசு தர சொல்லி அடிக்கிறான்….
யாரு?
வட்டிக்கடக்காரந்தான்
யார அடிக்கிறான்?
அழுதுச்சுல்ல அந்தப் பாட்டிய…
ம்ம்ம் அப்புறம்?
அதனால அவனுக்கு பாடம் சொல்லித் தரப் போறேன்னு சொல்லுச்சாம்.
ம்ம்ம்ம் முட்ட அப்படி சொன்னதும்,
“நானும் உன் கூட வரட்டுமா”னு புலி கேட்டுச்சாம்.
“சரி நீயும் எங்க பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.
இப்போ முட்ட பின்னாடி யாரெல்லாம் வர்றாங்கனு சொல்லு…
சிங்கம்ம்ம்ம்... யானை...அப்பறம் புலி
ம்ம்ம்ம்… இன்னும் கொஞ்சம் தூரம் போனதும் ஒரு கழுதை வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
அதுக்கு முட்ட என்ன தங்கம் சொன்னுச்சு?
ம்ம்ம் பாட்டிய காசு தர சொல்லி வட்டிக்கடக்காரன் அடிக்கிறான்…. அவனுக்கு பாடம் சொல்லித் தரப் போறேன்னு சொல்லுச்சாம்.
ம்ம்ம்ம் முட்ட அப்படி சொன்னதும்,
“நானும் உங்க கூட வரட்டுமா”னு கழுதை கேட்டுச்சாம்.
“சரி நீயும் எங்க பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.
இப்போ முட்ட பின்னாடி யாரெல்லாம் வர்றாங்க?
சிங்கம்ம்ம்ம்... யானை... புலி... அப்பறம்... லயன்…
சிங்கம் தான் பாப்பா லயன்… கடசியா வந்த விலங்கு எது?
கழுதை.
ம்ம்ம் முட்ட பின்னாடி சிங்கம், யானை, புலி, கழுதை எல்லாம் போனாங்களாம்
( இன்னும்பாம்பு, தேள், பூரான் என்று கதையை நீட்டிக் கொண்டேன்)
முட்டையும் அப்பறம் எல்லா விலங்குகளும் வட்டிக்கடக்காரன் வீட்டுக்கு வரும்போது இருட்டாயிடுச்சாம். எல்லா விலங்குகளையும் ஒரு ஒரு எடத்துல போய் ஒளிஞ்சிக்க சொல்லுச்சாம் முட்டை.
சிங்கம் போய் வாசல்ல ஒளிஞ்சிக்கிச்சாம்.
யானை போய் வீட்டுக்குப் பின்னாடி ஒளிஞ்சிக்கிச்சாம்.
புலி போய் கட்டிலுக்கு அடியில ஒளிஞ்சிக்கிச்சாம்.
கழுதை போய் கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சிகிச்சாம்.
ஒலக்கை மேல பாம்பு உட்காந்துகிச்சாம்.
ஒலக்கைனா என்ன மாமா?
ஒலக்கைனா பெரிய குச்சி மாதிரி இருக்கும் பாப்பா. அம்மாச்சி வீட்ல உரல் இருந்துச்சுல்ல? அரிசிய அரைக்கனும்னா அதுல தான் அரிசியப் போட்டு ஒலக்கைல இடிப்பாங்க. பாட்டி ஊருக்குப் போகும்போது உனக்குக் காட்றேன் சரியா?
சரி மாமா.
அந்த ஒலக்கை மேல பாம்பு உட்காந்துகிச்சாம்.
கதவுக்குப் பின்னாடி கழுதை ஒளிஞ்சிகிச்சாம்.
தீப்பெட்டிகுள்ள தேள் ஒளிஞ்சிகிச்சாம்.
அடுப்புக்கு பக்கத்துல பூரான் ஒளிஞ்சிகிச்சாம்.
கட்டில்ல படுத்து வட்டிக்கடக்காரன் தூங்கிட்டு இருந்தானாம். இந்த முட்டை அவன் நெத்தி மேல ஏறி டிங்கு டிங்குனு ஆடுச்சாம். வட்டிக்கடக்காரன் முழிச்சுப் பாத்தானாம். முட்டை கீழ குதிச்சு ஆடிட்டு இருந்துச்சாம். வட்டிக்கடக்காரன் “ஏய் முட்ட. என் மேலயே வந்து குதிக்கிறியா? இப்பவே ஒன்ன ஒடைக்கப் போறேன்”னு மெரட்டுனானாம்.
“எங்க பாட்டியோட பேரன் வர்ற வரைக்கும் எங்க பாட்டிய நீ எதுவும் பண்ணக்கூடாதுனு ஒன்ன மெரட்டிட்டுப் போகதான் நான் வந்திருக்கேன்”னு முட்ட சொல்லுச்சாம். வட்டிக்கடக்காரனுக்கு கோபம் வந்து “இப்பவே உன்ன என்னப் பண்றேன் பாரு”னு சொல்லிகிட்டே கட்டில விட்டுக் கீழ எறங்குனானாம்.
கட்டிக்கு கீழ என்ன இருக்குதுனு சொன்னேன்?
புலி.
ம்ம்ம் அந்த புலி அவன் காலப் புடிச்சு கடிச்சுதாம். ஐயோ என்னமோ கடிக்குதே அத அடிக்கலாம்னு ஒலக்கைய எடுத்தானாம்.
ஒலக்கை மேல என்ன உட்காந்திருக்கு?
பாம்பு.
ம்ம்ம் அந்த பாம்பு அவன் கையிலேயே கொத்துச்சாம். ஐயோ அம்மா னு கத்திகிட்டே இருட்டா இருக்கிறதாலதான் நமக்கு ஒன்னும் தெரியல. வெளக்கப் பொருத்திப் பாக்கலாம்னு தீப்பெட்டியத் தெறந்தானாம்.
தீப்பெட்டிக்குள்ள என்ன இருக்கு?
தேளு.
ம்ம்ம் அந்த தேளும் அவன் கைலயே கொட்டுச்சாம். ஐயோ னு கத்திகிட்டே அடுப்பு நெருப்பு எடுக்கலாம்னு அடுப்புகிட்ட துழாவுனானாம்.
அடுப்புகிட்ட என்ன இருக்கு?
நெருப்பு.
அடுப்புக்குள்ள நெருப்பு இருக்குது பாப்பா. அடுப்புக்குப் பக்கத்துல எந்த விலங்கு போய் ஒளிஞ்சிகிச்சுனு சொன்னேன்?
பெருக்கான்.
அது பெருக்கான் இல்ல! பூரான். அந்த பூரானும் அவனக் கடிச்சுதாம். ஐயையோ இந்த வீட்டுக்குள்ள என்னென்னமோ புகுந்திடுச்சு. நாம கம்முனு ஒரு எடத்துல போயி ஒளிஞ்சிக்கலாம்னு சொல்லிட்டு கதவுக்குப் பின்னாடி ஒளியப் போனானாம்.
கதவுக்குப் பின்னாடி என்ன இருக்குது?
கழுதை.
ம்ம்ம்… அந்த கழுதை அவன ஓங்கி ஒரு உதை உதைச்சுதாம். வாசல்ல போய் விழுந்தானாம்.
வாசல்ல என்ன இருக்குது?
சிங்கம்.
ம்ம்ம்… சிங்கமும் அவனக் கடிச்சுதாம். அழுதுகிட்டே வீட்டுக்குப் பின்னாடி ஓடுனானாம்.
வீட்டுக்குப் பின்னாடி என்ன இருக்கு?
யானை.
ம்ம்ம்…. அந்த யானை தும்பிக்கைலையே அவனத் தூக்கிப் போட்டு மிதிக்கப் போச்சாம். அப்போ அங்க முட்டை வந்து அவன் கிட்டே “இனிமே எங்க பாட்டிய அடிப்பியா?”னு கேட்டுச்சாம். அதுக்கு அவன் “சத்தியமா இனிமே நான் பாட்டிய எதுவும் பண்ண மாட்டேன். பேரன் வந்த பின்னாடியே நான் காச வாங்கிக்கிறேன். என்ன மன்னிச்சிடுங்க”னு கெஞ்சுனானாம். முட்டையும் அவன மன்னிச்சிட்டு வந்திடுச்சாம்.
அப்பறம்?
அப்பறம்… அந்த வட்டிக்கடக்காரன் பாட்டிய அடிக்கவே இல்லையாம். பாட்டியும் முட்டையும் சந்தோசமா இருந்தாங்களாம்.
அப்பறம்?
அப்பறம் அவ்வளோதான் ஜனனி.
அந்த அனிமல்ஸ்லாம் எங்கப் போனாங்க?
அவங்களாம் காட்டுக்குப் போயிட்டாங்க…
போயி…
ஜனனி, இந்த கதை முடிஞ்சு போயிடுச்சு. அவ்வளவுதான்.
சரி மாமா. வேற கத சொல்லு மாமா.
வேற என்ன கதை?
ஹார்ஸ் கதை.
ஹார்ஸ் கதையா?
ம்ம்ம் பிங்க் கலர் ஹார்ஸ் கதை.
பிங்க் கலர் ஹார்ஸ் கதையா? அதெல்லாம் எனக்குத் தெரியாது ஜனனி.
இல்லனா ரெட் கலர் ஹார்ஸ் கதை சொல்லு மாமா.
அந்தக் கதையெல்லாம் எனக்குத் தெரியாது ஜனனி.
அப்பன்னா முட்டக் கதை சொல்லு மாமா.
இப்பதான முட்டக் கத சொன்னேன்.
பெரிய முட்டக் கத சொல்லு மாமா.
ஜனனி, மாமாவுக்குத் தெரிஞ்ச கதையெல்லாம் சொல்லிட்டேன். இனிமே நீதான் எனக்கு ஒரு கத சொல்லனும்.
(மிரட்டும் தொனியில்) வேற கத சொல்லு மாமா…
வேற கதையா? இரு சொல்றேன். ஹைதராபாத்ல உன்ன மாதிரியே ஒரு குட்டி பாப்பா இருந்துச்சு. அவங்க மாமா கிட்ட கத சொல்ல சொல்லி கேட்டுச்சாம். அவங்க மாமாவும் மூனு கத சொன்னாங்களாம். அப்பறமும் அந்த பாப்பா இன்னொரு கத சொல்லு மாமா இன்னொரு கத சொல்லு மாமா னு அடம் பண்ணிகிட்டே இருந்துச்சாம் பாரு, அந்த பாப்பாவுக்கு ஒரு அடி கொடுத்தாங்களாம் அவங்க மாமா. அந்தப் பாப்பா அதுக்கப்புறம் கதையே கேட்கலையாம். கம்முனு தூங்கிடுச்சாம்.
அப்பறம்?
அப்பறம்? கதை அவ்வளவுதான். உனக்கு இந்த கதை புரிஞ்சுதா இல்லையா ஜனனி?
புரிஞ்சுது மாமா. நீ வேற கத சொல்லு மாமா.
வேணாம் ஜனனி. அப்பறம் மாமா அழுதுடுவேன்!
-----
நான் அழைக்கும் மூவர் :1. ஸ்ரீ
2. நாடோடி இலக்கியன்
3. தேவ்
-----
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
Friday, January 11, 2008
மொக்கையாய் ஒரு பொங்கல் வாழ்த்து!
எழுத்து மட்டுமே என்னுடையது. படங்கள் மடலில் வந்தவை!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
Wednesday, January 09, 2008
நான் பிடித்ததில் எனக்குப் பிடித்தது
புகைப்படமெடுப்பதை கலையாக செய்யும் கலைஞனல்ல நான். நிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ளும் வசதிக்காகவே கடந்த ஆண்டு ஒரு படப்பொட்டி வாங்கியிருந்தேன். “புது சட்டில போட்டா, நாயி ஏழு ஆப்ப கழி திங்குமாம்” – இப்படி ஒரு சொலவடை எங்களூரில் உண்டு. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. வாங்கிய புதுசில் படப்பொட்டியைத் தூக்கிக் கொண்டு கண்ணில் படுவதையெல்லாம் சுட்டுக் கொண்டிருந்தேன். பார்க்கும்போது அழகாய்த் தெரிந்தவையெல்லாம் படத்தில் அழகாய் வரவில்லை. சில காட்சிகள் நேரில் பார்த்ததை விடவும் படத்தில் அழகாய் இருப்பதாய்த் தோன்றின. படமெடுப்பது ஒரு கலை. படமெடுத்தே அதனைக் கற்றுக்கொள்வதென ;) முடிவெடுத்து எப்படி விழுந்தாலும் படமெடுப்பது என சுட்டுத் தள்ளிக் கொண்டு இருந்தேன். அப்புறம் ஆர்வமில்லாமல் படப்பொட்டியை ஊரிலேயே விட்டாயிற்று.
கடந்த ஆண்டு முன் திட்டமெதுவுமில்லாமல் கங்கைகொண்டசோழபுரத்திற்கு சென்றபொழுதொன்றில் எடுக்கப்பட்டது இந்தப்படம். கோயில் வளாகத்தின் மையத்தில் இருந்த ஒரு கோபுரத்தையும், அதற்கு சற்றுத் தள்ளியிருந்த ஒரு கோபுரத்தையும் ஒரே கட்டடமாகப் படத்தில் காட்டலாம் என முயற்சி செய்து எடுத்தப் படம். படம் கொஞ்சம் சாய்வாகவும், தென்னங்கீற்றுகள் கொஞ்சமாய் மறைத்தபடி இருந்தபோதும் எடுத்தப் படங்களிலேயே இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்களும் பார்த்து சொல்லுங்கள் எப்படி இருக்கிறதென்று.
இந்த கோயிலின் மேலும் சில படங்களைக் காண இங்கே செல்லவும்.
நான் அழைக்கும் மூவர் :
1. பிரபாகரன்
2. விழியன்
3. இளவஞ்சி
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ
மௌனம் சுமந்த மலரொன்று மடிகின்றது!
விரல்களின் பயணமொன்றை நிறுத்தி,
ரசிக்க வைத்தது,
இதுவரை பூக்காத பூஞ்செடியொன்று.
இலை கோதத் துவங்கி,
நீரூற்றவும், உரமிடவும்,
மண்பிடித்து விடவும்
பழக்கமானது விரல்களுக்கு.
விரலின் அருகாமையில் செடி சிலிர்த்துக்கொண்டும்
செடியின் ஸ்பரிசத்தில் விரல்கள் இளகிக்கொண்டும்
ஒரு புதிய பயணத்துக்கு ஆயத்தமாயின இரண்டும்.
கீழ்வானத்தில் முழுநிலவும்; மேல் வானத்தில் மஞ்சள் கதிரும் நிற்க,
தலைக்கு மேலே முழுவட்டமாய் ஒளிரும் வானவில் தோன்ற,
தரையெங்கும் நட்சத்திரங்கள் மிணுங்க,
விரல் கோதிய செடியில்
முதல் பூ பூத்தது.
‘எனக்கானப் பூவா?’ – தயங்கி தயங்கி கேட்டுவிட்ட விரலிடம்,
‘நீ மலரச் செய்த பூதான்!’ - சொல்லவிடாமல் செடியை நிலம் இறுக்கிக்கொள்ளவும்,
வேர்களில் கொஞ்சம் கண்ணீரை இறைத்தபடி பயணத்தை தொடர்ந்தது விரல்.
சுமந்த மௌனத்தின் கனம் செறிந்து
மடிந்து விழுகின்றது மலர்.
செடியின் வேர்களை இன்னும் ஆழமாய்
தன்னுள் இழுத்துக் கொண்டது நிலம்.
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ
Monday, January 07, 2008
கதையெழுதிய கதை
கோபித்துக் கொண்டு
என்னோடு நீ பேசுவதில்லையென
முருகனிடம் முறையிடப்
போனால்
அவனோ,
இரண்டு நாட்களாய்
வள்ளி தன்னிடம்
பேசுவதில்லையென
மயிலிடம் புலம்பிக் கொண்டிருக்கிறான்.
இப்படி ஒரு கவுஜையை எழுதி அறைத் தோழனிடம் காட்டிய போது ‘நல்லாதான் இருக்கு. ஆனா இது கவிதை எழுத வேண்டிய சரக்கு இல்ல. இதையே வச்சி ஒரு கதை எழுது’ என்று சொன்னபொழுது அதை எப்படி கதையாக்குவது என்ற யோசனை துவங்கியது. அப்போதுதான் சர்வேசனின் நச்சுனு ஒரு கதை போட்டி அறிவிப்பும் வந்திருந்தது. அவசரமாக, காதலனுக்கும் காதலிக்கும் ஊடல் போலவும் அதனைத் தீர்க்க காதலன் கோவிலுக்கு போகும்போது அங்கே முருகனும் இதே மாதிரி புலம்பி கொண்டிருப்பதைப் போல ( ஒருவரியில சொல்லும்போதே சிரிப்பு வருதா? விடுங்க ;-) ) வும் எழுதி அறைத் தோழனுக்கு மட்டும் அனுப்பினேன். ‘ரொம்ப கேவலமா இருக்கு’ என்று சொல்லக் கூச்சப் பட்டுக்கொண்டு நான்கைந்து வாக்கியங்களில் அதனையே மென்மையாக சொல்லியிருந்தான். மீண்டும் அதேக் கதையை முருகனே சொல்லுவதுபோல (ஆனால் சொல்லுவது கடவுள் முருகன் தான் என்பது கடைசியில் தெரிவது போல) ஊடல் என்ற பெயரில் கதையாக எழுதி சில நண்பர்களுக்கு மட்டும் அனுப்பியிருந்தேன். கொஞ்சம் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனாலும் ‘திருப்பம் இருக்கிறது. ஆனால் கதையில் ஏதோ குறைவது போல இருக்கிறது’ என்று நண்பர் நந்தா சொன்னது உண்மை போல இருந்தது. மீண்டும் ஒருமுறை அதனை வாசித்துப் பார்த்தால் முதன் முறை இருந்த அந்த ஆர்வம் இல்லை. என் கல்லூரி நண்பர்களும் ‘இது நல்லாதான் இருக்கு. ஆனா உங்கிட்ட இருந்து இதவிட இன்னும் நல்ல கதைய எதிர்பாக்குறோம்’ என்று உசுப்பேத்த, அந்தக் கதையை வலைப்பதிவில் இட்டிருந்தாலும் சர்வேசன் போட்டிக்கு அதனை இணைக்கவில்லை.
அதன் பிறகு ‘அஞ்சலி’ என்றொரு கதையை எழுதி சில நண்பர்களுக்கு மட்டும் மடலில் அனுப்பியிருந்தேன். பாதி பேர் நன்றாக இருந்தது என்றும் பாதி பேர் மொக்கை என்றும் சொல்லவும் அனுப்பலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. முன்பு உசுப்பேத்திய நண்பர்களுள் ஒருவன், ‘இது மாதிரி ஒரு மொக்க கதைய உங்கிட்ட இருந்து எதிர்பார்க்கல’ என்று சொல்லவும், ‘பழைய காலத்து வார இதழ்களில் வரும் கதை போல இருக்கிறது’ என்று பிரேமும் சொல்லவும் அந்தக் கதை மடலோடு மடிந்துபோனது. வலைப்பதிவேறவில்லை.
இறுதியாக ஒரு தொடர்கதையாக எழுத வைத்திருந்த கருவை முடிந்தளவுக்கு சுருக்கி சென்னைக் காதலும் திருச்சிக் காதலும் என்ற பெயரில் எழுதி நண்பர்கள் சிலருக்கும், பண்புடன் குழுமத்திற்கும் அனுப்பியிருந்தேன். கதையில் இருந்த சில குறைகளை பண்புடன் நண்பர்கள் அபுல்ஃபாசல் அவர்களும், பிரேம் அவர்களும் சுட்டிக் காட்ட அவற்றை சரி செய்து மீண்டும் பதிவிட்டேன். போன கதையை மொக்கையென்ற நண்பனும் கூட இதனைப் பாராட்டியிருந்தான். முடிவை இன்னும் கொஞ்சம் சுருக்க சொல்லியிருந்தான். ஆனால் செய்யாமல் விட்டு விட்டேன். கதை மிகவும் நீளமாக இருந்தது என்பதையே பலரும் குறையாக சொல்லியிருந்தார்கள். வலைப்பதிவில், பதிவின் நீளத்தைப் பார்த்து படிக்கத் துவங்கும் ரகம் தான் நானும் :) மக்கள் வாசிப்பார்களா என்பதே சந்தேகமாகத் தான் இருந்தது. சர்வேசனும் கூட போட்டி விதிகளுள் கதை “சிறு”கதையாக இருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கவும் அவரிடமே கேட்டிருந்தேன் இதனை சேர்க்கலாமா? என்று. ‘நச்’க்காக கண்டிப்பாக சேர்க்கலாம் என்று சொல்லி அவரும் இணைத்துக் கொண்டார்.
போட்டியில் இணைக்கப் பட்டிருந்த எல்லாக் கதைகளையும் வாசித்த பிறகு இன்னும் சிறியதாக எழுதியிருக்கலாமோ என்ற எண்ணம் வராமலில்லை. முக்கியமாக மோகன் தாஸ், அரைபிளேடு, நாடோடி இலக்கியன், பெனாத்தல் சுரேஷ், இலவசக்கொத்தனார் ஆகியோரது கதைகளை வாசித்த போது அவை சிறியதாகவும், சிறப்பானதாகவும் தோன்றின.
ஆனாலும் எப்படியோ தப்பித்து முதல் கட்ட தேர்வில் தேறி இறுதி கட்டத்திற்கு வந்த போது, நடுவர்களும் மதிப்பிடுவார்கள் என்றதும் “இந்தப் பிரதியின் கருத்தியலில் உள்ள நுண்ணரசியல் சமூகக் கேடானது”, “மற்றுமொரு வார இதழ் பாணியிலான காதல் கதை” இந்த மாதிரி எதாவது நடுவர்கள் கதையைத் துவைத்து விடுவார்களோ என்று தான் நினைத்துக் கொண்டேன் :) ஆனால் நடுவர்களும் சிறப்பான மதிப்பெண்கள் கொடுத்து ஊக்கப் படுத்திவிட்டார்கள்!!!
உண்மையில் வாக்குகள் எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே விழுந்திருந்தன. ஆரம்பம் முதலே நல்ல விமர்சனங்களைத் தந்த எனது அறைத்தோழன், கல்லூரி நண்பர்கள், அலுவலக/மின்மடல் சகோதரிகள் ( போட்டியப் பத்தி, தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் பிரச்சாரம் பண்ணின அளவுக்கு பாசக்காரத் தங்கச்சிங்க), சுவரொட்டி ஒட்டாத குறையாக விளம்பரம் செய்த நண்பர் பிரேம்குமார், “நம்ம கதைல காதல் இருக்கு செல்லம். கண்டிப்பா ஜெயிக்கும் :)” என்று உற்சாகப் படுத்திய நண்பன் ஸ்ரீ, கதையை சீர்படுத்தி,ஊக்குவித்த பண்புடன் குழும நண்பர்கள் – அபுல், ப்ரியன், எழில் இன்னும் பலர், பின்னூட்டமிட்டு, மடலனுப்பி வாழ்த்திய வலைப்பதிவர்கள்/வாசகர்கள், வாக்களித்த வாக்காளர்கள், நடுவர்கள் அனைவருக்கும் நன்றி.
புத்தாண்டில் ஓர் இனிய துவக்கமாக இது அமைவதற்கு வாய்ப்பளித்த சர்வேசனுக்கு பாராட்டுகள் கலந்த நன்றி.
முன்பே சொல்லியிருந்தால் நானும் வாக்களித்திருப்பேனே என்று கடிந்து கொண்ட பாசக்கார நட்புகளுக்கும் நன்றி :)
பிகு – எதுக்கிப்போ இவ்வளவு ஆர்ப்பாட்டம்னு கேட்காதீங்க :) எழுதிய மூன்றாவது சிறுகதைக்கே ஒரு அங்கீகாரம் கிடைச்ச மகிழ்ச்சி வேற ஒன்னுமில்ல ;-) முதல் இரண்டு சிறுகதைகளும் கூட ஓரளவுக்கு நச் கதைகள் தான். படித்துப் பாருங்கள் – ஒரு குட்டிக் காதல் கதை , ஊடல்
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ