Saturday, May 27, 2006

ஒரு காதல் பயணம் - 2

முன்குறிப்பு : இதில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே!
ஒரு காதல் பயணம் பகுதி - 1
எப்போதும் என் கண் பார்த்துப் பேசும் நீ,
நிலம் பார்த்துப் பேச ஆரம்பித்தக் கணத்தில்
நமக்குள் காதல் பிறந்தது!


அடுத்த நாள் வெள்ளிக்கிழமை.
தேவதையின் வரவுக்காக கோவிலுக்குள் காத்திருக்கிறேன்.
கோவில் மணி விடாது ஒலித்த ஒரு மங்கள வேளையில்
துவட்டப்படாத ஈரத்தலையோடு கோவிலுக்குள் நுழைகிறாய்.
அப்போது எங்கிருந்தோ ஒரு நூறுப் புறாக்கள் உன்னை
தரிசிப்பதற்காகவே அந்தக் கோவிலுக்கு வருகின்றன.
நீ வந்ததைப் பார்த்ததும் கோவிலும் அந்தப் புறாக்களை
தன் கோபுரத்தில் வைத்து தன்னை அலங்கரித்துக் கொள்கிறது.
வழக்கத்துக்கு மாறாக தன்னை விட்டு எல்லோரும்
உன்னையே கவனிப்பதைப் பார்த்து பொறாமை கொள்கிறார் கடவுள்.
உள்ளே நுழைந்த நீ வரிசையில் நின்று கண்ணை மூடிக் கடவுளைக் கும்பிடுகிறாய்.
நீ கண் திறந்ததும் உன் கண்ணில் நானே விழ வேண்டுமென
உனக்கெதிர் வரிசையில் நான் நிற்கிறேன்.
நீ கண் திறக்கிறாய்.
நான் உன் கண்களை நேராய்ப் பார்க்கிறேன்.
அச்சம், நடுக்கம், பதட்டம் என எல்லா உணர்ச்சிகளிடமும் ஓடிக் கடைசியில்
வெட்கத்தில் போய் தன்னை மறைத்துக்கொள்கிறது உன் முகம்.
பூசாரிக் கொடுத்த விபூதியை அப்படியேத் தூணில் கொட்டி விட்டு வெளியேறுகிறேன் நான்.
நான் கொட்டியதில் இருந்து ஒரு துளியெடுத்து உன் நெற்றியில் இட்டுக் கொள்கிறாய்.
அப்போது, நிலவு, தானேப் பொட்டு வைத்துக் கொள்வதைக்
கடவுளும் உள்ளிருந்து எட்டிப் பார்க்கிறார்.
வேண்டுதலை முடித்ததும் என்னைத் தாண்டி வேகமாகப்
போவது போல் நடித்துக் கொண்டுமெதுவாக செல்கிறாய்.
காதலில் நடிப்பது தானே சுகம்?
நானும் மெதுவாக உன்னைத் தொடர்ந்து நட(டி)க்க ஆரம்பிக்கிறேன்.
பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்து நான் பின்தொடர்வதை
உனக்கு நேரடி வர்ணனை செய்கிறாள், உன் தங்கை.
உன் பின்னால் என்னை சுற்ற வைத்துவிட்டு,
கோயில் பிரகாரத்தை நீ சுற்ற ஆரம்பிக்கிறாய்.
உனக்கு அருகில் வந்து உன் வேகத்திலேயே நானும்சுற்ற ஆரம்பிக்கிறேன், உன்னோடு.
“கோயிலுக்கு சாமி கும்பிட வந்தீங்களா” முதன்முறை உன்னிடம் பேசுவதால்,
கேட்டு(உளறி?)முடிப்பதற்குள் தடுமாறித்தான் போனேன்.
“இல்ல சினிமா பாக்க வந்தோம்” என
நீ சொல்ல நினைத்ததை உன் தங்கைசொல்கிறாள்.
உள்ளூற நகைத்தாலும் பொய்யாக அவளை அதட்டுகிறாய்.
நீ ஏதாவது பேச வேண்டும் எனக் காதலிடம்கையேந்துகிறேன்.
வேண்டியவர்களைக் காதல் என்றைக்கு கைவிட்டிருக்கிறது?
“உங்களுக்குதான் கடவுள் நம்பிக்கை இல்லன்னு கேள்விப்பட்டேனே,
அப்புறம் கோயிலுக்கு வந்திருக்கீங்க” என்று குனிந்து கொண்டே கேட்கிறாய்.
உன் தங்கையின் பேச்சைக் கேட்டு விட்டு உன் இசையைக் கேட்க இனிமையாயிருக்கிறது.
“இப்பவும் கடவுள் இருக்குன்னு நான் நம்பல…ஆனா”
“ஆனா?”“நேத்து உங்க வீட்டுக்கு வந்திட்டுப் போனதுல இருந்து
தேவதைகள் இருக்குன்னு நம்ப ஆரம்பிச்சுட்டேன்”என்ன சொல்கிறேன் என்று,
புரிந்து கொண்டு வெட்கத்தில் மேலும் அழகாகிறாய்.
“தேவதைகள் இருக்குன்னு நம்பறீங்களா? தேவதை இருக்குன்னு நம்பறீங்களா?”–
நீ தேவதையாக இருந்தாலும், பெண்தானே,
அதுதான் பெண்ணுக்கேயுரிய சந்தேகத்தோடு கேட்கிறாய்.
நீ சுற்றி வளைத்து என்னக் கேட்க வருகிறாய் எனத்தெரிந்தும்,
“தேவதைகள் இருக்குன்னு நம்பறேன்” என்று அழுத்திச் சொல்கிறேன் நான்.
மேலும், சந்தேகத்தில் மௌனமாகிறாய் நீ.
“தேவதைக்கு ஒரு குட்டி தேவதை பிறந்தால் அப்புறம் தேவதைகள்தானே?”
எனப் புரிய வைக்கிறேன் நான்.
உன் அசட்டு சந்தேகம் உண்மையிலேயே அசடாகிப் போனது.
முதல் சுற்று முடிந்தது.
வெட்கத்தை மறைத்துக் கொண்டு “நேத்துல இருந்து வேற என்னல்லாம் நம்ப ஆரம்பிச்சீங்க?” எனத் தூண்டில் போடுகிறாய்.
“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன – நீ இத நம்புறியா?”
“ஏன் நீங்க நம்பலையா?”
“நேத்து வரைக்கும் நம்பாமதான் இருந்தேன்…”
“நேத்து மட்டும் என்ன நடந்தது?”
“நம்ம திருமணம் எங்க நிச்சயிக்கப்பட்டது?”
“எங்க வீட்லதான்?”
“நீ எங்க குடியிருக்க?”
“அய்யோக் கடவுளே….நான் எங்க வீட்லதான் குடியிருக்கேன் .அதுக்கென்ன?”
நான் என்ன சொல்லப் போகிறேன் என்று தெரிந்தும், தெரியாதது போல் நடிக்கிறாய்.
“தேவதை குடியிருக்கிற இடம் சொர்க்கம் தான? அதனால தான் சொல்றேன் –
நம்ம திருமணமும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப் பட்டிருக்கு”
இரண்டாவது சுற்றும் முடிந்தது.
சில நொடிகள் வார்த்தைகள் ஓய்வெடுக்க, மௌனம் பேசிக் கொண்டிருந்தது.
“ஐய்யையோ இது தெரியாம நான் நேத்து பாதி நிச்சயத்திலேயே
வேற எடத்துக்கு குடி போயிட்டேனே” எனப் பதறுகிறாய்.
“கவலைப் படாதே…நீ எந்த இடத்தில் குடியேறினாலும் அந்த இடம் தன்னை சொர்க்கமாக மாற்றிக் கொள்ளும்” என உன்னை சமாதானப் படுத்துகிறேன்.
“இல்ல…நான் குடியேறினதே சொர்க்கத்திலதான்…” என்கிறாய்.
உனது அடுத்த வார்த்தைக்காகக் காத்திருக்கிறேன் நான்.
“நேத்து நான் உங்க இதயத்துக்குள்ள நுழைஞ்சத நீங்க கவனிக்கலையா?”
எனக் கேட்டு சிரிக்கிறாய்.
“அது சொர்க்கம் போலவா இருக்கு?”
“அது சொர்க்கம் ‘போல்’ இல்லை – அது தான் சொர்க்கம்.
நான் வரப்போறேன்னு அதற்கு முன்பே தெரிஞ்சிருக்கு.
எனக்காக உள்ள ஒரு ராஜாங்கமே அமைச்சு எனக்கு வரவேற்பு கொடுத்தது”
உனக்குள்ளும் காதல் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.
மூன்றாம் சுற்றும் முடிந்தது.
வீட்டுக்கு செல்லத் திரும்பிய உன்னிடம் “ என்ன ‘வாங்க’, ‘போங்க’னு மரியாதையா
எல்லாம் கூப்பிட வேண்டாம், பேர் சொல்லியேக் கூப்பிடலாம்” என்கிறேன்.
“சரிடா சிவா” என்று சொல்லி “களுக்” கென சிரித்துக் கொண்டு சாலையில் மறைகிறாய் நீ.
“சரியான ஜோடியைத்தான் இணைத்திருக்கிறோம்”
என நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்கிறது இயற்கை.
( காதலில் தொடர்ந்து பயணிப்போம் )
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, May 26, 2006

ஒரு காதல் பயணம் - 1

காதலை மறுத்தவர்கள், காதலால் மறுக்கப்பட்டவர்கள், ஒரு தலையாய்க் காதலித்து தறுதலையாய்ப் போனவர்கள் இப்படிக் காதலின் எல்லா வகைத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களும், காதலின் வாசனையே நுகராதவர்களும் கூட, (மறுபடியும்) காதலின் சுவாரசியத்தை அனுபவிப்பது நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடையில் தான். அவர்களுக்காக….

அலையில் காலை மட்டும் நனைத்துக் கொண்டிருந்த என்னை,
ஒரு தெய்வீகமான நேரத்தில்,
காதல்கடலில் தள்ளிவிட்டு,
கரையில் நின்று வேடிக்கை பார்க்கிறது, வாழ்க்கை.
அதில் மூழ்கி முத்தெடுத்தவுடன்,
காதலே என்னை
மறுபடியும் வாழ்க்கையிடம் துப்பி விடும்
என்ற நம்பிக்கையில் நீந்திக் கொண்டு இருக்கிறேன்.


உன்னைப் பெண் பார்க்க, என் பெற்றோரோடு
உன் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறேன் நான்.
கண்களை மூடிக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு
உள்ளறையில் ஒளிந்திருக்கிறாய் நீ.
சற்று நேரத்தில், உன் அப்பாவின் கண்ணசைவில்,
உன் அம்மாவின் கையசைவில் உனக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது.

அந்த அறையின் வாசலை மறைத்திருந்த திரையை
ஒரு கையால் விலக்கி விட்டு நீ வெளிப்படுகிறாய்.
திரையில் படமாய் இருந்த மகாலட்சுமி
உயிரோடு எழுந்து வருவதைப் போல மெல்ல வருகிறாய்.

எல்லாக் கண்களுக்கும் உனது பார்வையும், வணக்கமும் சேர்ந்து கிடைக்க
என் கண்களுக்கோ உனது வணக்கம் மட்டுமே கிடைக்கிறது.
ஏன் நேராய்ப் பார்க்க வில்லை என்று நான் என் கண்களையும்,
நீ உன் கண்களையும் திட்டிக் கொண்டிருக்கிறோம்.
வெட்கம் நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்கிறது.

சற்று நேரத்தில், புது உடையில், தட்டில் சாக்லேட்டோடு
சுற்றி வரும் பிறந்த நாள் குழந்தையைப் போல ,
காபி டம்ளர்களோடு நீ வலம் வருகிறாய்.
குனிந்து தட்டையேப் பார்த்துக் கொண்டு அதை நீ என்னிடம் நீட்டுகையில்,
தட்டில் ஒரு நிலாத் தெரிகிறது எனக்கு.
ஒரு நொடி தட்டில் சந்திக்கின்றன நம் கண்கள்.

ஒரு டம்ளரை நான் எடுத்துக் கொண்டவுடன் விலகி ஓரமாய் நிற்கிறாய் நீ.
இதேக் காட்சியை என் நிலையில் உன்னையும்,
உன் நிலையில் என்னையும் வைத்து கற்பனை பண்ணிப் பார்க்கிறது மனம்.
இருக்கையில் அமர்ந்த படி நீ. காபி டம்ளர்களோடு நான்.

“என்ன தம்பி யோசிக்கிறீங்க” என்ற உன் அப்பாவின் குரலில் திடுக்கிட்ட நான்,
சமாளிப்பாக “ இது ஃபில்டர் காஃபியா, இல்ல ப்ரூவான்னு யோசிச்சுட்டு இருக்கேன் “
என்று சொல்ல…
“அது பூஸ்ட்ங்க…” என்கிறாய் நீ.

எல்லாரும் சிரிக்க, நான் உன் முகத்தை நேராய்ப்பார்க்கிறேன்.
நீயோ உதட்டை மெல்லக் கடித்து, நிலம் நோக்கி நகுகிறாய்.
பின் உள்ளறைக்குள் நுழைய முதல் அடி எடுத்துவைக்கிறாய், என் மனதுக்குள்ளும்.

“என்னப்பா.. பொண்ணப் புடிச்சிருக்கா?” என மெல்லக் கேட்கும் அம்மாவிடம்,
“பொண்ணுக்கு என்னப் புடிச்சிருந்தா, எனக்கும் சம்மதம்”
என உள்ளறைக்கும் கேட்கும் படி சத்தமாகவே சொல்கிறேன்.
அங்கிருந்து ஓடி வந்த உன் தங்கை “உங்கள எங்கக்காவுக்குப் புடிச்சிருக்காம்”
எனக் கத்திவிட்டு மறைகிறாள்.
இரண்டே வரிகளில் நிச்சயமாகிறது நமதுத் திருமணம்.

முகத்தில் மலர்ச்சியோடு, “ அப்புறம் நீங்க எவ்வளவு நக எதிர்பாக்கறீங்கன்னு சொன்னா….”
என உன் அப்பா ஆரம்பிக்க… என்னைப் பார்க்கிறார் என் அப்பா.

“உங்கப் பொண்ணுதான் நல்லா சிரிக்கிறாங்களே…
அப்புறம் எதுக்குங்க நகையெல்லாம்…நீங்க எதுவும் போட வேண்டாம்…
அவங்க வேணும்னு சொன்னா, நான் வாங்கித் தர்றேன்” என்கிறேன் நான்.
சந்தேகமாய்ப் பார்க்கிறார் உன் அப்பா.

“வீட்டுக்குத் தேவையான கட்டில், பீரோ, பாத்திரம், பண்டெமெல்லாம்..நாங்க…”
என ஆரம்பிக்கிறார் உன் அம்மா.
“உங்கப் பொண்ணுக்கு மத்தவங்கள சந்தோஷப்படுத்தத் தெரியுமில்ல…அது போதும்…
அது தானங்க வீட்டுக்கு முக்கியமாத் தேவை…மத்ததெல்லாம் நான் வாங்கிக்கிறேன்” என மறுபடியும் மறுக்கிறேன் நான்.

“என்ன இருந்தாலும் பொண்ணு வீட்டு சீர் வரிசைனு ஒன்னு இருக்கில்லங்க”
என என் அப்பாவைப் பார்த்து உன் தாய்மாமன் சொல்ல…
“உங்கப் பொண்ணோட சேர்த்து, அவங்க ஆசையெல்லாத்தையும்
சீராக் கொடுங்க, வரிசையா அத நிறைவேத்துறேன்”
என சொல்லி விட்டு என் பெற்றோரோடு கிளம்புகிறேன்.

வெளியேறி தெருவில் இறங்கி நடக்கும்போது திரும்பி
உன் உள்ளறையின் ஜன்னல் பார்க்கிறேன்.
அங்கே எல்லா நகையையும் கழற்றிவிட்டு அழகானப் புன்னகையோடு
என்னைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாய் நீ.
விழிகளால் பேசி விட்டு சாலையில் நடக்க ஆரம்பிக்கிறேன் நான்.

“உனக்கெல்லாம் காதல்னு ஒன்னு வந்தா,
அது நிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் நடுவுலதாண்டா”
என கல்லூரியில் நண்பன் கொடுத்த சாபம் ( வரம்? ) பலிக்க ஆரம்பிக்கிறது.

நிமிர்ந்து உலகத்தைப் பார்க்கிறேன் – அது இன்று மட்டும் அழகாய்த் தெரிகிறது.

( தொடர்ந்து காதலில் பயணிப்போம்… )
அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, May 24, 2006

+2 காதல் - இறுதிப் பகுதி!

+2 காதல் பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து
மாடியில் இருந்து ஒரு குரல் என் பெயர் சொல்லி அழைக்க, நிமிர்ந்து பார்த்தால் சாரதா நின்று கொண்டிருந்தாள்.
அவளேக் கீழே இறங்கி வந்தாள். ஆறு வருடங்களில் அவள் ரொம்பவே மாறிப் போயிருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.
ஜீன்ஸும், ஸ்லீவ்லெஸ் சுடிதாரும் அணிந்திருந்தவளின் காதை விட அதில் தொங்கிய தோடு பெரிதாயிருந்தது.
நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க, அவளேப் பேசினாள்.

“ஏ..என்னத் தெரியலையா? நான் சாரதாப்பா…”

நான் அதிர்ச்சியை மறைத்தபடி, “தெரியாமலா….ஆனா உன்ன மறுபடி பார்ப்பேன்னு நான் எதிர்ப்பர்க்கவே இல்ல! நீ எப்படி இருக்க?”
இயல்பாகப் பேச நான் கொஞ்சம் சிரமப்பட்டேன்; ஆனால் அவள் சகஜமாகவேப் பேசினாள்.

“நான் நல்லா இருக்கேன்…நீ எப்படி இருக்க?”

“எனக்கென்ன நானும் நல்லாதான் இருக்கேன்…ஆமா நீ இப்ப எங்க இருக்க? என்னப் பண்ணிட்டு இருக்க?”

அவள் இரண்டாடுகளுக்கு முன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததாகவும், தற்போது சென்னையில் இருப்பதாகவும் சொன்னாள்.
நானும் ஓராண்டுக்கு முன் தான் இந்த நிறுவனத்தில் சேர்ந்ததையும் தற்போது ஹைதராபாத்தில் இருப்பதையும் சொன்னேன்.

கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தாள்.

“நல்ல வேளை, நீ அன்னைக்கு மாட்டேன்னு சொல்லிட்ட…ஒருவேளை நீயும் சரின்னு சொல்லியிருந்தா…நாம இன்னைக்கு ஓரளவுக்கு இருக்கிற இந்த நல்ல பொசிஷனுக்கு வந்திருக்க முடியுமான்னுத் தெரியல…படிக்க வேண்டிய அந்த வயசுல நான் தான் கொஞ்சம் தடுமாறிட்டேன் இல்ல!”

“உன்ன மட்டும் தப்பு சொல்லாத! யார் தான் தப்புப் பண்ணல? சரி அது முடிஞ்சு போனது அத விட்டுட்டு வேற ஏதாவதுப் பேசுவோமே..”
அவள் அதை மறுபடியும் நினைவுபடுத்துவது எனக்கு ஏனோ ஒரு குற்றவுணர்ச்சியைத்தான் தந்தது.

“இல்லப்பா நீ அப்போ மாட்டேன்னு சொன்னதும் எனக்கு உம்மேலக் கோபம்தான் வந்தது..அதான் உன்னப் பார்க்கிறதையே அவாய்ட் பண்ணிட்டேன்…அப்புறம் காலேஜ் போனதுக்கப்புறம் அடிக்கடி feel பண்ணதுண்டு..atleast உங்கிட்ட friendshipப்பாவது continue பண்ணியிருக்கலாமேன்னு…ம்ம்ம்…நீ எப்படி feel பண்ண?”

“எனக்கும் முதல்ல கஷ்டமாதான் இருந்தது..அப்புறம் புது காலேஜ் புது நண்பர்கள்னு வாழ்க்கையே மாறிடுச்சு…சரி நீ என்ன மாஸ்டரப் பார்க்க இவ்வளவு தூரம்??”
பேச்சை மாற்றினேன் நான்.

“எல்லாம் நல்ல விஷயம் தான்” என்று சொல்லிவிட்டு அதை என்னிடம் கொடுத்தாள்.
அவளுடையத் திருமண அழைப்பிதழ்.

“ஓ பொண்ணுக்குக் கல்யாணமா?? இந்தா என்னோட வாழ்த்துக்கள இப்பவே சொல்லிடறேன்..ஆமா லவ் மேரேஜ்தான?”

சிரித்துக் கொண்டே கேட்டாள், “எப்படிக் கண்டு பிடிச்ச?”
அவள் வேறொருவனைக் காதலித்திருக்கிறாள் என்பதே எனக்கு நிம்மதியாய் இருந்தது.

“அதான் பத்திரிக்கைல மாப்பிள்ளையும் உன்னோடக் கம்பெனியிலதான் வொர்க் பண்றதா போட்டிருக்கே! அங்கப் போயும் நீத் திருந்தலையா?”

“ஏ என்னக் கிண்டலா? இந்த தடவ நான் கொஞ்சம் உஷாராயிட்டேன்…எனக்குப் பிடிச்சிருந்தும் நான் எதுவும் வாயத்திறக்கல…அவரேதான் propose பண்ணார் ..நானும் ஒரு வருஷம் அலைய விட்டுதான் ok சொன்னேன்!”
அவள் இப்படிப் பேசுவது எனக்கு இன்னும் ஆச்சரியமாய் இருந்தது.

“ம்ம் வெவரம்தான்…பேர் பொருத்தம் கூட ரொம்ப அருமையா இருக்கு - சாரதா ஷங்கர்! ”

“ம்ம் ஆமா …ஆனா எங்களுக்குள்ள மொதல்லப் பொருந்திப் போன விஷயத்தக் கேட்டா நீ சிரிப்ப!”

“இல்ல..இல்ல.. சிரிக்கல.. சொல்லு”

“நாங்கக் கொஞ்சம் க்ளோஸாப் பழக ஆரம்பிச்ச சமயம் தான் அழகி படம் வந்திருந்தது…அப்போ ஒரு தடவ அந்தப் படத்தப் பத்திப் பேசிட்டு இருந்தப்பக் கொஞ்சம் எமோஷனாகி நம்மக் கதைய அவர்ட்ட சொன்னேன்….கேட்டுட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டார்…அப்புறம்தான் அவர் கதைய சொன்னார்..அவரும் +2 படிக்கும்போது ஒரு பொண்ண லவ் பண்ணி அப்புறம் அந்தப் பொண்ணுகிட்ட செமத்தியா வாங்கிக்கட்டிக்கிட்டாராம்…ரெண்டு பேரும் ஒரேக் கேஸ்தான்னு சிரிச்சுக்கிட்டோம்…அப்புறம் எங்க நட்புக் காதலாகி இதோ இப்போ கல்யாணத்துல வந்து நிக்குது”

“நல்ல ஜோடிப் பொருத்தம்தான்…அப்ப ஒருத்தர ஒருத்தர் முழுசாப் புரிஞ்சிக்கிட்டீங்கன்னு சொல்லு!”

“ம்ம்..நல்லாவே! ஆமா உன்னக் கேட்க மறந்துட்டேனே நீ என்ன மாஸ்டரப் பார்க்க?”

“நானும் ஒரு கல்யாணப் பத்திரிக்கைக் கொடுக்கலாம்னுதான்!”

“ஏய் சொல்லவே இல்லப் பார்த்தியா…யார் அந்த அதிர்ஷ்டசாலி(?)”

“அட…நீ நெனைக்கிற மாதிரியில்ல…. கல்யாணம் எங்க அண்ணனுக்கு!”

“அப்ப உனக்கு ரூட் க்ளியர் ஆயிடுச்சுன்னு சொல்லு…நீயும் சீக்கிரமா ஒரு நல்லப் பொண்ணாப் பார்த்து லவ் பண்ணி lifeல செட்டில் ஆகவேண்டியதுதான…இல்ல ஏற்கனவே பொண்ணு ஏதும் மாட்டிடுச்சா???” கேட்டு விட்டு சிரித்தாள்.

“அட நானும் யாராவது மாட்டுவாங்களானு தான் பார்க்கிறேன்…ஆனா எல்லாப் பொண்ணுங்களும் புத்திசாலியாவே இருக்காங்க”, சொல்லி விட்டு நானும் சிரித்தேன்.

“ஆனா உன்ன ஒரு பொண்ணு லவ் பண்ணாலும் உடனேல்லாம் ok சொல்லக்கூடாதுப்பா… ஒரு ஆறு மாசமாவது உன்ன அலைய விட்டுதான் சொல்லனும்” மறுபடியும் சிரித்தாள்.
அதற்குள் மாஸ்டர் வந்துவிட அவரைப் பார்த்து பத்திரிக்கையைக் கொடுத்துவிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
அதன்பிறகு அவர் ட்யூஷன் எடுக்க சென்றுவிட நாங்கள் இருவரும் செல்பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றோம்.

என்னை மறுபடியும் ஒருமுறை சந்தித்தால் என்னோடு அவள் பேசுவாள் என்று நான் நினைத்ததில்லை.
ஆனால் அவள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசியதையும், அவளுக்குப் பிடித்த மாதிரியே அவளுக்கொரு வாழ்க்கைக் கிடைத்திருப்பதையும் நினைத்துப்பார்த்தால் எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாய் இருந்தது.

நான் வாழ்க்கையில் சில சமயம் நிறைய யோசித்துத் தவறான முடிவுகளை எடுத்ததுண்டு; சில சமயம் முன்பின் யோசிக்காமல் சில சரியான முடிவுகளையும் எடுத்ததுண்டு. அன்றைக்கு அவளுடையக் காதலை மறுத்தது இரண்டாவது வகை என்றே நினைக்கிறேன்.

அன்றைக்கு மதன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது : “சரி விடு மச்சி..அவளுக்கும் உன்ன விட நல்லவனா இன்னொருத்தன் கிடைப்பான்..உனக்கும் அவள விட நல்லவளா இன்னொருத்திக் கிடைப்பா”

முதல் பாதி நிறைவேறி விட்டது! இரண்டாவது பாதி?

அதுவும் நிறைவேறும் என்ற நம்பிக்கையில்….
அருட்பெருங்கோ.

பின்குறிப்பு :

இது முழுக்க முழுக்க உண்மைக் கதையல்ல. கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் கற்பனையும் கலந்து எழுதியதே! ஒரு கதை என்ற அளவிலேயே ரசிக்கவும்.

சொல்லாமல் செய்யும் காதல்...









எண்ணம், சொல், செயல்
மூன்றும் ஒன்றாக இருக்கவேண்டுமாம்.
காதலிக்காத யாரோ
சொல்லிவிட்டுப்போய்விட்டார்.

காதலிக்கிறவனுக்கு தானே
அந்த அவஸ்தை புரியும்!

நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று
தெரியாமலேக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
எந்தக் கணத்தில்
உன்னைக் காதலிக்க ஆரம்பித்தேன்?
எனக்குத் தெரியாது!

உன்னைக் காதலிக்கலாமா
என்று நினைத்தபோது,
காதலித்தால் உன்னைத்தான்
காதலிக்க வேண்டும் என்ற
எண்ணம் வந்தது எப்படி?
எனக்குத் தெரியாது!

காதலை
எண்ணத்திலும்,செயலிலும் நான் வைத்தேன்!
சொல்லில் மட்டும் நீ வையேன்!

ஆமாமடி!
காதலை நீயே சொல்லிவிடேன்!!
ப்ளீஸ்…

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ!

Tuesday, May 23, 2006

+2 காதல்- 5

+2 காதல் பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு

படித்ததும் மெதுவாக நிமிர்ந்து அவளை பயத்தோடு பார்த்தேன். “என்னப் பிடிச்சிருக்குன்னு சொல்லு” என்று குனிந்து கொண்டே சொன்னாள். அப்போது என் இரண்டு தொடைகளும் நடுங்குவது எனக்குப் புதிதாய் இருந்தது.

மெல்ல எச்சிலை விழுங்கிவிட்டு சொன்னேன் : “இல்ல சாரதா எனக்கு பயமா இருக்கு..நாம வயசுக்கு மீறி யோசிக்கிறோம்னு நெனைக்கிறேன். எனக்கும் உன்னப் பிடிச்சிருக்குதான்…நான் இல்லனு சொல்லல…. ஆனா இந்த வயசுல இவள மாதிரி ஒரு wife வரணும்னு யோசிக்கலாமேத் தவிர இவளே எனக்கு wife-aa வரணும்னு முடிவெடுக்க தகுதியிருக்கான்னுத் தெரியல..இது இன்னும் ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சு நடந்திருந்தா நானும் கண்டிப்பா சரின்னு சொல்லியிருப்பேன்..நமக்கெல்லாம் கல்யாணத்தப் பத்தி யோசிக்கவே இன்னும் எட்டு, பத்து வருஷத்துக்கு மேல இருக்கு..அதுக்குள்ள உனக்கும் என்ன வேணா நடக்கலாம்..எனக்கும் என்ன வேணா நடக்கலாம்..அதனால வேண்டாம் சாரதா..இதப் பத்தி இனிமேப் பேச வேண்டாம்” –

இதைத்தான் சொன்னேனா என்று தெரியாது, ஆனால் இதுமாதிரி தான் ஏதோ சொன்னேன்.

சொல்ல சொல்ல ஒரு விசும்பல் சத்தம் கேட்டது. அவள் அழ ஆரம்பித்திருந்தாள்.அதற்கு மேல் அங்கிருந்தால் என்னை மாற்றிவிடுவாளோ என பயந்து,அவள் கையில் அந்தக் கடிதத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பி விட்டேன்.அன்று நான் தேர்வு எழுதாமலே வீடு வந்து சேர்ந்தேன்.அவளும் எழுதியிருக்க மாட்டாள் என்று தெரியும்.

அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தன. அவள் chemistry tuition வருவதை நிறுத்தி விட்டாள். அங்கு tuitionனே கிட்டத்தட்ட முடிந்து விட்டதால் நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை.ஆனால் அவள் physics tuitionனை விட்டும், maths tuitionனை விட்டும் நின்று விட எனக்குப் பயமாய் இருந்தது. நான் நடந்த விஷயத்தை என் நண்பர்களிடம் சொல்ல ஒவ்வொருவனும் என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டான்.

“டேய் நீ என்ன லூசாடா? இவ்வளவு நாளா அவளப் பத்தி எழுதி வச்சது, எங்களுக்குத் தெரியாம அவ பின்னாடி சுத்துனதெல்லாம் அப்புறம் எதுக்கு? பெரிய இவனாட்டம் டயலாக் பேசிட்டு வந்திருக்க? “ – வினோத்.

“அது ஒன்னும் இல்லடா..அந்தப் பொண்ணே வந்து propose பண்ணியிருக்கில்ல..அதான் ஐயாவுக்கு ஏறிப் போச்சு…இவன் சொல்லி அந்தப் பொண்ணு மாட்டேன்னு சொல்லியிருந்தா அப்பப் புரிஞ்சிருக்கும்…” – செல்வா.

“ஏண்டா ஒன்னோட மொகரக் கட்டைக்கு அந்தப் பொண்ணு அதிகம்னு உனக்கேத் தெரியும்..அதுவே ஓக்கே சொல்லும்போது உனக்கென்னடா…மனசுல பெரிய மன்மதன்னு நெனப்பா…எல்லாம் first mark வாங்கறான் இல்ல அந்தத் திமிரு” – பாஸ்கர்.

மதன் மட்டும் அமைதியாய் இருந்தான்.

“ஏண்டா நீ மட்டும் சும்மா இருக்க நீயும் உன் பங்குக்கு ஏதாவது திட்டிடு” அவனைப் பார்த்து சொன்னேன்.

“மச்சி நீ சாரதாவ எந்தளவுக்கு லவ் பண்றனு எனக்குத் தெரியும்டா…அப்புறம் ஏண்டா மாட்டேன்னுட்ட?”

“நான் மட்டும் பிடிக்காமயாடா வேண்டாம்னு சொன்னேன்…அவ கேட்டப்பக் கூட நாளைக்கு சொல்றேன்னு சொல்லலாம்னு தான் நெனச்சேன்…ஆனா ஏதோ ஒரு பயத்துல பட்டுனு வேண்டாம்னு சொல்லிட்டேன்…அவங்க familyயும் நம்மள மாதிரி தான்டா…அவங்கப்பாக் கஷ்டப்பட்டுதான் படிக்க வச்சிட்டு இருக்கார்…எல்லா ட்யூஷன்லயும் அவ ஒரு installmentதான் fees கட்டியிருக்கா…அவள எஞ்சினியரிங் படிக்க வைக்கனும்னு அவங்கப்பாவுக்கு ஆசையாம்…அவளுக்கு ஒரு தங்கச்சி வேற இருக்கா…எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்தா நான் செஞ்சது சரிதான்னு இப்பத் தோணுது.”

“அதெல்லாம் சரி மச்சி…ஆனா இவ்ளோ நாளா ஆச காட்டிட்டு அவளே வந்து கேட்கும்போது மாட்டேன்னு சொன்னா அவளுக்கும் கஷ்டமாதான இருந்திருக்கும்”

“அவளுக்குக் கஷ்டமாதான் இருந்திருக்கும் எனக்கும் புரியுது….எனக்குப் பிடிச்சவ எங்கிட்ட வந்து propose பண்ணும்போது, ஆசையிருந்தும் மாட்டேன்னு சொல்லிட்டு நிக்குறேனே…என்னோடக் கஷ்டம் ஏண்டா உனக்குப் புரியல??”

“சரி விடு மச்சி..அவளுக்கும் உன்ன விட நல்லவனா இன்னொருத்தன் கிடைப்பான்..உனக்கும் அவள விட நல்லவளா இன்னொருத்திக் கிடைப்பா”

அவன் சொன்னதே நடக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவளை மறந்துவிட நினைத்தேன்.

ஆனால் எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுதானே மறுபடியும் மறுபடியும் நினைவுக்கு வந்து தொலைகிறது.

அவளையே நினைத்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் ஒரு எண்ணம் வரும். ஒருவேளை அவளும் என்னையே நினைத்துக் கொண்டிருப்பாளோ என்று.

அப்போதெல்லாம் ஏதோ தவறு செய்துவிட்டதைப் போல எனக்கு உடல் பதறும்.

அவளைப் பற்றியே அதிகம் நினைத்துக்கொண்டிருந்ததால் படிப்பில் கவனம் குறைய ஆரம்பித்தது.ஏதோக் கடமைக்குப் படித்துக் கொண்டிருந்தேன்.பொதுத்தேர்வின் போதுகூட தேர்வுக்கு முந்தைய நாளிலும் நான் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் இருந்தேன். எல்லாத் தேர்வுகளையும் ஆர்வமே இல்லாமல்தான் எழுதினேன்.

தேர்வு முடிவு வந்தபோது நான் எதிர்பார்த்த மாதிரியே என் வீட்டிலும்,பள்ளியிலும் எதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே மதிப்பெண் வாங்கியிருந்தேன்.

“என்னப்பா நீ centum வாங்குவேன்னு எதிர் பார்த்தா இப்படி மார்க் கொறஞ்சுடுச்சே” - மூன்று ட்யூஷனிலும் மாஸ்டர்கள் இதையே சொல்ல ஏண்டா அவர்களிடம் ரிசல்ட் சொல்லப் போனோம் என்று இருந்தது.

அப்புறம் வாங்கிய மார்க்குக்கு ஏதோ ஒரு காலேஜில் ஏதோ ஒரு க்ரூப் கிடைக்க அதில் சேர்ந்தேன்.

புது இடம். புது நண்பர்கள் என பழசை மறக்க ஆரம்பித்த சூழல் உருவாகியது.கல்லூரியிலும் எந்தப் பிரச்சினையிலும் மாட்டிவிடக்கூடாது என பெண்களிடம் பேசுவதையேத் தவிர்த்தேன்.

என்னைப் போலவே இருந்தவர்கள் ஒன்று கூட ஒரு சிறிய நட்பு வட்டம் உருவானது. அருமையான நினைவுகளோடு அதிவேகமாய்க் கரைந்துபோனது ஐந்தாண்டுகள். கல்லூரியின் பெயரால் இறுதியாண்டு படிப்பு முடியுமுன்பே ஒரு வேலையும் கிடைத்தது. வேலையில் சேர்ந்து ஒரு வருடம் வேலையில் மூழ்க அவளைப் பற்றி நினைப்பதுக் குறைந்தது. எப்போதாவது பழைய நண்பர்களிடம் தொலைபேசும்போது நினைவுபடுத்துவார்கள்.கொஞ்ச நேரம் மனம் பழைய நினைவில் மூழ்கினால் வேலை என்னை இழுக்கும். அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக நான் இப்படி மறந்துகொண்டிருக்க, மறுபடியும் ஊருக்கு செல்ல ஒரு வாய்ப்பு வந்தது.

அண்ணன் திருமணத்திற்காக நான் ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிற்குப் போயிருந்தேன்.

ஒரு நாள் மாலையில் , திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஜோஸப் மாஸ்டர் வீட்டுக்குப் போயிருந்தபோது மாஸ்டருடைய மனைவிதான் இருந்தார். மாஸ்டர் இன்னும் வராததால் என்னை மேலேக் காத்திருக்க சொல்லி சொல்ல, நான் மேலே ட்யூஷன் ரூமுக்குள் நுழையப் போனேன்.

அப்போது மாடியில் இருந்து ஒரு குரல் என் பெயர் சொல்லி அழைக்க, நிமிர்ந்து பார்த்தால் சாரதா நின்று கொண்டிருந்தாள்.

(நிறைவுப்பகுதி )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, May 22, 2006

+2 காதல் - 4

+2 காதல் பகுதி ஒன்று இரண்டு மூன்று

Chemistry tuition :

Chemistry tuition-இல் தான் எனக்குள்ளும் அந்த வேதியியல் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. நான் எப்போதும் அமரும் மூலைக்கு எதிர் பக்கமாய் என் பார்வையில் படுமாறுதான் அவள் உட்காருவாள். ட்யூஷன் நடந்துகொண்டிருக்கும்போதே அடிக்கடி அவள் பின்னால் திரும்பி என்னைப் பார்ப்பதும், ஜடையை அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் தூக்கிப் போடுவதும் அவளுக்கு வழக்கமாயிருந்தது. இதற்கெல்லாம் என்னுடைய அதிகபட்ச எதிர்வினை நோட்டில் எதையாவதுக் கிறுக்கி வைப்பதுதான்.

ஒரு நாள் ட்யூஷன் தொடங்குவதற்கு முன் மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். நான் கீழே சாலையை பார்த்தபடி நின்றிருந்தேன்.lady bird-இல் ஒரு lady bird – ஆக அவள் வந்து கொண்டிருந்தாள். சாலையில் வரும் அவள் மேலே நிற்கும் என்னைப் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. அதனால் நான் அவளையே மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். மாஸ்டர் வீட்டுக்கு முன்னால் மிதிவண்டியை சாலையில் நிறுத்தியவள், என் மிதிவண்டிக்கு அருகில் இருந்த மிதிவண்டியை தள்ளி நிறுத்திவிட்டு அவளுடையதைக் கொண்டுவந்து என்னுடையதை ஒட்டி நிறுத்தினாள்.என் பாதங்கள் தரையை விட்டுக் கொஞ்சமாய் மேல் எழும்புவதைப் போல் இருந்தன.வண்டியில் இருந்து பையை எடுத்தவள் சடாரென மேலேப் பார்த்தாள். எனக்கு இதயமே வெடித்துவிடுவது போல் இருந்தது.உடனேத் திரும்பிக் கொண்டேன்.நான் பார்த்துக்கொடிருந்ததை அவள் பார்த்திருப்பாளோ என்றே மனம் யோசித்துக் கொண்டிருந்தது.அன்று ட்யூஷன் முடியும் வரை நான் அவளை நேராய்ப் பார்க்க வில்லை.அவளும் எதுவும் பேசவில்லை.

அதற்குப் பிறகு ஒரு மாதத்தில் அவளோடு மெல்லப் பேச ஆரம்பித்திருந்தேன். என்னோடு இருக்கும் நேரங்களில் என் நண்பர்களோடும் பேசுவாள். அதன் பிறகு என் நண்பர்களுக்கு அவள் மேல் ஒரு மரியாதையே வந்திருந்தது. நான் இல்லாத சமயங்களில் என்னைப் பற்றி அவளிடம் அதிகமாகவே அளந்துவிட ஆரம்பித்தார்கள். ஒரு நாள் என்னிடம் வந்தவள், “நீங்க கவிதையெல்லாம் எழுதுவீங்களா?” என்று கேட்டாள்.”ஏதோ எழுதுவேன்,,ஆனா அத கவிதைன்னெல்லாம் சொல்லிக்க முடியாது” என்றேன். “நாங்கூட நல்லா வரைவேன்…ஆனா அத ஓவியம்னெல்லாம் சொல்லிக்க முடியாது” என்று சொல்லி சிரித்தாள். அதன்பிறகு ட்யூஷனுக்கு நேரத்திலேயே வந்துவிட்டால் போர்டில் அவள் எதையாவது வரைய பக்கத்தில் நானும் எதையாவது கிறுக்க, ட்யூஷன் ஆரம்பிக்கும் வரை மனம் சந்தோசத்தில் திளைத்திருக்கும்.

நான் ட்யூஷனுக்கு நோட் எடுத்து செல்வது, எதையாவது கிறுக்கவும், வரையவும் தான். பாடம் சம்பந்தமான நோட்ஸ் எல்லாமே புத்த்கத்திலேயே அங்கங்கே சின்ன சின்னதாய் எழுதிவிடுவேன். என்னுடையப் புத்தகத்தில் அச்சில் இருப்பதை விட நான் எழுதியிருப்பது அதிகமாக இருக்கும். ஒருமுறை அதைப் பார்த்துவிட்டு, அவளும் இனிப் புத்தகத்திலேயே எழுதப் போவதாகவும், இதுவரை நான் எழுதியதைப் பார்த்து எழுதிக்கொள்ள என் புத்தகம் வேண்டும் என்று வாங்கிசென்றாள். போகும்போது அங்கங்கே கிழிந்து தொங்கியபடி போன என் புத்தகம் திரும்பி வரும்போது கிழிந்த இடமெல்லாம் ஒட்டப்பட்டு, வெளியிலும் அட்டைப் போட்டு அழகாய் வந்து சேர்ந்தது. நோட்டில் கிறுக்கினேன் :

“கிழிந்த புத்தகத்தை ஒட்டித் தந்தாள்
நன்றாக இருந்த இதயத்தைக் கிழித்துவிட்டாள்”
(நான் இப்ப எழுதுறக் கவிதை(?)யேக் கேவலமா இருக்கும்போது, இது அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி எழுதினது, ரொம்பக் கேவலமாதான் இருக்கும்..பொறுத்துக்குங்க!)

அதற்குப் பிறகு ட்யூஷன் நேரத்தில் அவள் என்னைப் பார்ப்பதை நிறுத்தியிருந்தாள். காரணம், நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருப்பேன்.அவள் என்னைப் பார்க்காத நேரங்களில் நானும் நோட்டில் அவளை வரைய ஆரம்பித்தேன், அதற்குப் பிறகுதான் தெரிந்தது எனக்கும் ஓரளவுக்கு வரைய வரும் என்று. நான் வரைவது அழகாக இருப்பதாக சொல்லி என்னைப் பாராட்டினார்கள் என் நண்பர்கள். அழகாக வரைவது எல்லாம் வரைபவன் கையில் மட்டுமே இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். அது யாரைப் பார்த்து வரைகிறோம் என்பதைப் பொறுத்தது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும் அவள் அழகுக் கூடிக்கொண்டே இருந்தது. அவள் குரலும் நாளுக்கு நாள் இனிமையாகிக் கொண்டே வந்தது.நான் அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டேன் என்று எனக்கு மெதுவாய் புரிந்தது. வியாழன், வெள்ளி இரு நாளும் பள்ளி முடிந்து தாவணியில் வரும் பெண்கள், சனிக்கிழமை மட்டும் சுடிதாரில் வருவார்கள். அன்று சனிக்கிழமை. வழக்கம்போல் அவள் வரும் சாலையில் கண்ணை வைத்துக் காத்திருந்தேன்.அழகாய் ஒரு கத்திரிப்பூ நிற சுடிதாரில் துப்பட்டா சிறகாய்ப் பறக்க ஒரு தேவதையைப் போல் வந்திருந்தாள்.

“என்ன மச்சி உன் ஆளு..தாவணியிலயும் அழகா இருக்கு..சுடிதார் போட்டாலும் பொருந்துது?” – மதன்.
மனம் அமைதியாய் இருந்தாலும் உதடு சொன்னது : “ இந்த சுடிதார் உண்மையிலேயே அவளுக்கு அழகா இருக்கில்ல?”
எல்லோரும் அமைதியாய் இருந்தபோதுதான் உணர்ந்தேன் நான் கொஞ்சம் அதிகப்படியாய்ப் பேசி விட்டதை.

ஆனால் அதன் பிறகு எல்லா சனிக்கிழமையும் அவள் அதே சுடிதாரில் வர ஆரம்பித்தாள். இந்த நான்கு பேரில் எவனோ சொல்லியிருக்க வேண்டும்.
“என்ன சாரதா..சனிக்கிழமைக்குன்னும் ஒரு யூனிஃபார்ம் வச்சிருக்க போலிருக்கு” – எனக்கும் கேட்குமாறு ஒரு நாள் சாரதாவிடம் கேட்டுவிட்டான் மதன்.
என்னைப் பார்த்துக் கொண்டே “நல்லாயிருக்குன்னு சில பேர் சொன்னாங்க… அதான்…” என்று சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.
வழக்கம்போல கிறுக்க ஆரம்பித்தேன் :

அவள் மடியில் விழுந்த என் மனசு!

“நிலவைக் கிட்டேப் பார்க்க அவள் முகத்தருகே என் மனசுப் போக…
அவள் பார்வை மின்னல் தாக்கியதில் கண்களை அதுவும் மூடிக்கொள்ள…
அவள் கன்னக் குழியோத் தடுக்கி விட…
அந்தக் கூந்தல் அருவியில் என் மனசுத் தடுமாறி விழ…
விழுந்து சரிகையில் ஒரு கொடியை அதுவும் பற்றிக் கொள்ள…
அது அவள் இடையெனத் தெரிந்து பற்றியதையும் விட…
அங்கிருந்தும் விழுந்த என் மனசைத் தாமரைப் பூவைப் போலத் தாங்கிக்கொண்டது அவள் மடி!”

அரையாண்டுத் தேர்வுக்கு முன்பே ட்யூஷனில் எல்லாப் பாடமும் முடித்து விட்டிருந்தார் மாஸ்டர். நான் புத்தகத்தில் இருக்கும் எல்லா வேதிச்சமன்பாடுகளையும் (chemical equations) ஒரு நாள் தேர்வாக எழுதுவதாக சொல்லி அதை மொத்தமாக எழுதியும் காண்பித்தேன். பாராட்டிய மாஸ்டர் ,”very good..equations மட்டும் சரியா எழுதிட்டீங்கன்னாப் போதும்..மத்ததெல்லாம் அவ்வளவாப் படிச்சு பார்க்க மாட்டாங்க..ஈசியா மார்க் ஸ்கோர் பண்ணலாம்…சரி நீ examக்கு முன்னாடி ஒரு தடவ வந்து இதே மாதிரி எழுதிட்டுப் போ” என்று சொல்லி அனுப்பிவிட்டார். அடுத்த நாள் எல்லோரிடமும் இதை அவர் சொல்ல, என்னிடம் வந்தாள் அவள். “ஒன்னு விடாம எல்லா equationனும் எழுதினியா? அந்தப் பேப்பர் கொஞ்சம் கொடேன்” என்று கேட்க, நான் எடுத்துக் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தவள்,”எல்லா equationனையும் ஒரே சமயத்துல refer பண்ண ஈசியா இருக்கும், இதத் தர்றியா நான் ஜெராக்ஸ் எடுத்துட்டுத் தர்றேன்” என்றாள். நானும் சரியென்றேன்.ஜெராக்ஸ் எடுத்து வந்தவள் ஜெராக்ஸ் காப்பியை என்னிடம் கொடுத்துவிட்டு நான் எழுதியதை அவள் எடுத்துப் போய் விட்டாள். அந்த பேப்பரில் நான் என்னுடைய பெயரை எழுதியிருந்தது ஜெராக்ஸ் காப்பியிலும் வந்திருந்தது, ஆனால் என் பெயருக்கு முன்னால் அவள் பெயர் பேனாவால் எழுதப் பட்டிருந்தது!

அதற்குப்பிறகு ட்யூஷனில் பாடம் என்று எதுவும் நடக்காது. எப்போது வேண்டுமானாலும் போய் இருக்கும் ஏதாவது ஒரு வினாத்தாளை எடுத்துத் தேர்வெழுதலாம். நான் கொஞ்ச நாளாக அதில் ஆர்வம் காட்டாமல் ட்யூஷனுக்குப் போகாமல் இருந்தேன். தினமும் காலையில் maths ட்யூஷனிலும், மூன்று நாட்கள் மாலையில் physics ட்யூஷனிலும் அவளைப் பார்த்தாலும் , மீதி மூன்று நாளும் மாலையில் அவளைப் பார்க்கால் இருப்பது எதையோ இழந்ததைப் போல இருந்தது. பிறகு நானும் chemistry தேர்வு எழுதப் போக ஆரம்பித்தேன். ஒரு மணி நேரம் தேர்வெழுதினால் ஒரு மணி நேரம் அவளோடுப் பேசிக்கொண்டிருப்பேன். அவள் வராத நாட்களில் தேர்வெழுதாமல் திரும்பியதும் உண்டு. வெளியில் சந்திக்கும்போதும் பேசிக்கொள்வது வழக்கமானது. என்னுடைய எல்லாப் பயணங்களும் அவள் வீட்டு சாலையைத் தொட்டேப் போயின.இப்படிப் போய்க்கொண்டிருக்கையில் ஒரு நாள் chemistry tuition மாடியில் வைத்து என்னிடம் அதைக் கொடுத்தாள். நான்கு பக்கங்களுக்கு எழுதப்பட்டக் காதல் கடிதம். நான் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். என்னை அவளுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், படித்து முடித்து நான் நல்ல நிலைமைக்கு வருவேன் என்று நம்புவதாகவும், என்னுடைய ரசனையும், அவளுடையதும் ஒரே மாதிரி இருப்பதாகவும், இன்னும் இந்த மாதிரி நிறைய எழுதியிருந்தாள் ஆங்கிலமும், தமிழும் கலந்து. எனக்குப் படிக்கப் படிக்க திக் திக்கென்று மனம் அடித்துக் கொண்டிருந்தது. படித்ததும் மெதுவாக நிமிர்ந்து அவளை பயத்தோடு பார்த்தேன். “என்னப் பிடிச்சிருக்குன்னு சொல்லு” என்று குனிந்து கொண்டே சொன்னாள். அப்போது என் இரண்டு தொடைகளும் நடுங்குவது எனக்குப் புதிதாய் இருந்தது.

(தொடரும்...)

அடுத்தப் பகுதி


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Sunday, May 21, 2006

+2 காதல் - 3

+2 காதல் பகுதி ஒன்று இரண்டு

அடுத்த நாள் காலையில் நான் maths tuition-இல் இருக்கும்போது அங்கு வந்தாள், அவள்… maths tuition-இல் சேர்வதற்கு!

எப்போதும் போல ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த என்னை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டபடியே போய் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

எனக்கு வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரே காரணத்திற்காகத்தான் maths-க்கு நான் அந்த ட்யூஷன் மாஸ்டரிடம் சேர்ந்திருந்தேன். அங்கு சேர்ந்திருந்த பெரும்பாலானவர்களும் அதே காரணத்திற்காகத்தான் சேர்ந்திருந்தார்கள்.

ஆனால் அவளுக்கோ வீட்டிலிருந்து மிகத் தொலைவில்தான் இருக்கிறது இந்த tuition centre. இன்னும் சொல்லப் போனால் அவள் வீட்டிலிருந்து இங்கு வருவதற்கு அவள் பள்ளிக்குப் போவதற்கு எதிர்த்திசையில் தான் வர வேண்டும். அவளுடையப் பள்ளியிலிருந்து ஒருத்திகூட இங்கு சேர்ந்திருக்கவில்லை. இங்கு வரும் எல்லாப் பெண்களுமே பக்கத்தில் இருக்கும் தெரசா ஸ்கூலில் படிப்பவர்கள்தான். அவளுக்குத் தெரிந்தவர்கள் என்று யாரும் இங்கு படிக்கவும் இல்லை.

இப்படி ஒவ்வொருக் காரணமாய் யோசித்து எல்லாவற்றையும் நிராகரித்தேன்.அப்படியிருக்க அவள் ஏன் இங்கு வந்து சேர்ந்திருப்பாள்?...ஒரு வேளை…. நான் யோசித்துக் கொண்டு இருக்கும்போதே ட்யூஷன் முடிந்து எல்லோரும் கலைந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவளை முன்னே விட்டு நான் மெதுவாய் கீழே இறங்கி வந்து என் சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பித்தேன்.

பின்னாடித் திரும்பிப் பார்க்கலாமா என ஒருத் தயக்கத்தோடு நான் பின்னால் திரும்பிப் பார்க்க, அவள் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு என்னையேப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். நான் உடனே தலையைத் திருப்பிக் கொண்டு வேகமாய் மிதிக்க ஆரம்பித்தேன். எனக்கு அப்போது அதிகமாக மூச்சு வாங்கியது, ஆனால் சைக்கிள் மிதித்ததால் அல்ல!

அதன் பிறகு மூன்று ட்யூஷன்களிலும் ஆறு மாதங்களாய் நடந்தவை :

Maths tuition :

Maths tuition மட்டும் வாரத்தின் எல்லா நாளும் இருக்கும். அதுவும் நடுசாமம் 6 மணியில் இருந்து 7:30 வரை நடக்கும். தினமும் நான் அதிகாலை எட்டு மணிக்கு எழுந்திருப்பதே சன் டிவி செய்தி பார்ப்பதற்குத்தான். இவரிடம் ட்யூஷன் சேர்ந்ததில் இருந்து காலையில் 6 மணிக்கே தூக்கம் கலைக்க வேண்டியிருந்தது. தூங்கி வழியும் முகத்துடனேப் போய்க் கொண்டிருந்தேன்.நான் மட்டுமல்ல அங்கு வரும் எல்லாருமேக் கிட்டத்தட்ட அந்த நிலையில் தான் இருந்தோம். ஆனால் அவள் மட்டும் காலையிலேக் குளித்துவிட்டு ஸ்கூல் யூனிஃபார்மில் வந்து உட்கார்ந்துவிடுவாள். எல்லோருக்கும் மத்தியில் அவள் மட்டும் வித்தியாசமாய்!

தினமும் நடக்கும் சின்ன சின்ன தேர்வுகளில் நோட்டை எங்களுக்குள் மாற்றித் திருத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தேர்வு எழுதி முடித்ததும் நோட்டை என்னருகில் வைத்துவிடுவாள்.அவளுக்கு என்னைத் தவிர வேறு யாரையும் அங்குத் தெரியாது. சேர்ந்த புதிது என்பதால் எனக்கும் அவளைத்தவிர மற்றவர்களிடம் பழக்கமில்லை.எங்கள் நோட்டுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.அவள் நோட்டில் நான் "டிக்" மட்டும் போட்டுக் கொடுக்க, அவளோ, "good" போடாமல் திருப்பித்தந்ததில்லை.முதலில் அதையெல்லாம் வாங்கியவுடனே அழித்துக்கொண்டிருந்தவன் அப்புறம் நிறுத்திக்கொண்டேன்.

புரியாதக் கணக்கை விளக்க சொல்லி, டெஸ்ட் பேப்பரை வாங்குவதற்கு என ஏதாவது காரணத்தோடு என்னிடம் பேச ஆரம்பித்தாள்.ட்யூஷன் முடிந்த பிறகும் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டே பேச்சைத் தொடர்ந்த நாட்களும் உண்டு. என் வானரக் கூட்டம் இங்கு இல்லாததால் நானும் அவளிடம் அதிகமாகவேப் பேசத் தொடங்கியிருந்தேன். படிப்பில் ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாம் பேசினோம்.ஒருநாள் அவள் “ காலைல குளிக்கலன்னாக் கூடப் பரவால்ல..அட்லீஸ்ட் முகத்தையாவது கழுவிட்டு வரலாமில்ல!” என சொல்லிவிட்டாள். அடுத்த நாளில் இருந்து 5 மணிக்கே எழுந்து வெந்நீர் வைத்துக் குளித்துவிட்டுக் கிளம்பிப் போகும் என்னை என் வீடே வித்தியாசமாய்ப் பார்த்தது. நானும் நிறைய மாறித்தான் போனேன் அந்த ஆறு மாதத்தில்.

Physics tuition :

Physics tuition-இல் எங்களுக்கு அடுத்த batch-இல் தான் அவள் வருவாள். நாங்கள் 5 மணி ட்யூஷனுக்கு, பள்ளி முடித்து விட்டு 4:30 மணிக்கே அங்கு சென்றுவிடுவோம்.மாஸ்டர் வரும்வரை அந்த மொட்டை மாடி தான் எங்கள் அரட்டை அரங்கம். 6 மணி ட்யூஷனுக்கு அவளும் பள்ளிமுடிந்து நேராக வந்துவிடுவாள் 4:30, 4:45க்கே. அந்தப் பத்துப் பதினைந்து நிமிடநேரத்திலும் என்னிடம் ஏதாவதுப் பேச ஆரம்பித்துவிடுவாள். தங்களுக்குள் பேசிக்கொள்வது போல் நாங்கள் பேசுவதையே ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என் நால்வர் அணியினர். நானும் வார்த்தைகளை அளந்தேப் பேசுவேன்.


“என்னடாப் பொண்ணு பத்து நிமிஷம் பேசறதுக்காக வேர்த்துக் கொட்ட சைக்கிள மிதிச்சுட்டு வந்துட்றா…பிக்கப் ஆயிடுச்சுப் போல இருக்கு?” – மதன்.

“டேய்..அதெல்லாம் ஒன்னும் இல்லடா” – நான்.

“எங்கப்பாக் குதிருக்குள்ள இல்ல! – அந்தக் கததான”

“மாஸ்டர் வந்துட்டாருக் கிளம்பு!”

இப்படி அவர்கள் துருவித் துருவிக் கேட்கும்போதெல்லாம் அப்படியெதுவுமில்லை என்று சொன்னாலும் அப்படி எதுவும் இருக்கக் கூடாதா என ஒரு ஏக்கம் வந்து மறையும்.

வாரம் ஒருமுறைத் தேர்வு எழுதும்போது, நான் எப்போது எழுதவருவேன் என்று கேட்டு அதே நேரம் அவளும் வருவாள். தேர்வு முடிந்ததும் மார்க் விசாரிப்பதுபோல் ஆரம்பித்து 1 மணி நேரத்துக்குக் குறையாமல் பேசுவாள். நான் விடுமுறை நாட்களில் ட்யூஷன் முடிந்தவுடன் நூலகம் சென்று விடுவது வழக்கம். அங்கும் அவள் வர ஆரம்பித்தாள். அவள் படித்தப் புத்தகங்களை என்னிடம் கொடுத்துப் படிக்க சொல்லுவாள். நான் ஏற்கனவே படித்தப் புத்தகமாக இருந்தாலும் மறுபடியும் படிப்பேன் புதிதாய்ப் படிப்பவனைப் போல.அவளும் ஒவ்வொரு நாளும் நெருக்கமாகிக் கொண்டே வருவது போல் இருந்தது. அதே சமயம் பயமாகவும் இருந்தது. எந்நேரம் என்ன நடக்குமோ என்ற தவிப்போடு நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன்.

Chemistry tuition :

Chemistry tuition-இல் தான் எனக்குள்ளும் அந்த வேதியியல் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன.

(தொடரும்)

அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Saturday, May 20, 2006

நானும் ஒருத் தெலுங்குப் படமும் - 1

“தேவதாஸ்”..இல்ல…இல்ல…”தேவதாசூ” - இது தான் நான் முதல் முதல்லப் பார்த்த தெலுங்குப் படம். அந்த சுகமான சுமைய (சுமையான சுகத்த?) உங்ககிட்ட எறக்கி வைக்கதான் இந்தப் பதிவு! போனப் பொங்கலப்ப நான் ஹைதராபாத்ல இருந்தேன். எப்படிப் பொங்கலக் கொண்டாடறதுன்னும் தெரியல,பொங்கலக் கொண்டாடாம விட்டா எதாவது தெய்வக் குத்தமாயிட்டா என்னாகறதுன்னும் பயம்! சரின்னு யோசிச்சுட்டுப் பக்கத்துல இருந்த தியேட்டருக்குப் போயிட்டோம் செகண்ட் ஷோவுக்கு. அதுக்கு முந்தின வாரம் தான் தமிழ் படமான “கஜினி”யும்,”காதலு”ம் தெலுங்குலப் பார்த்தோம். அந்த ரெண்டு படத்துல வந்த காதல் சோக ஃபீலிங்ல எங்க ரூம்ல மூணு நாளா ஒரு பய கூட சாப்பிடல. இப்ப அடுத்தப் படத்தோட பேரே “தேவதாஸ்” – அதுவும் நேரடித் தெலுங்குப் படம்.
சரி நம்மலாம் சினிமாவுல தான் காதலப் பாக்க முடியும்னு மனசத் தேத்திக்கிட்டு அந்தப் படத்துக்கு போயிட்டோம்.

தியேட்டருக்குள்ள கூட்டம் அள்ளுது எப்படியோ எடத்தப் புடிச்சு உக்காந்தோம். இனி நான் அந்தப் படத்தோட கதைய சீன் பை சீன் சொல்லப் போறேன். அதனால வேற முக்கியமான வேல இருக்கிறவங்க போயி வேலையப் பாருங்க. இல்ல நானும் அந்தப் படத்த பார்ப்பேன்னு அடம்புடிக்கிறவங்க தொடர்ந்து படிக்கலாம். வி….தி……வ.லி..ய…து……..

பழைய தமிழ் படத்துல சென்னையக் காட்றதுன்னா மொதல்ல எல்.ஐ.சி கட்டம், அப்பிடியே அண்ணா சமாதி, பீச், இப்பிடி முக்கியமான லேண்ட்மார்க் லாம் காட்டுவாங்கல்ல! அது மாதிரி அமெரிக்க சுதந்திர தேவி சிலை, அப்புறம் இன்னும் முக்கியமான லேண்ட்மார்க்லாம் காட்டிட்டு அமெரிக்காவப் பத்தி ஒரு முன் குறிப்பு சொல்றாங்க. அப்புறம் கஜினியில சூர்யா வருவார் இல்ல ஒரு காரு – அது மாதிரி ஒரு காரக் காட்றாங்க – அதுக்கு முன்னாடி ஒரு கார் + பின்னாடி ஒரு கார் போகுது—அப்படியே ஒரு ஃபார்ம் ஹவுஸ் முன்னால போயி நிக்குது.
இப்ப காரோட கதவ க்லோஸ்அப்ல காட்றாங்க – ரெண்டு கால் கீழ எறங்குது அப்பிடியேக் கேமராவ மேலத் தூக்குனா நம்ம ஹீரோ நிக்கிறார்----னு நீங்க நெனச்சா அதான் இல்ல… கோட் சூட் போட்டுக்கிட்டு நம்ம பாரதியார் ( அதாம்ப்பா பாரதி படத்துல பாரதியாரா நடிச்சாரில்ல அவரு தான் ) நிக்குறாரு. அவரப் பத்தி ஒரு முன்னுரக் கொடுத்திட்டு வீட்டுக்குள்ளப் போகுது கேமரா. உள்ள ஒரு துளசி மாடத்த சுத்திக் கிட்டு இருக்காங்க நம்ம பாரதியாரோட அழகானப் பொண்ணு இல்ல – வயசான அம்மா.

அந்தம்மா, வீட்டு வேலக்காரர சத்தம் போட்டு கூப்பிடறாங்க – கேமரா இன்னும் உள்ள போகுது – போர்வையப் போத்தி அந்த வேலக்காரர் தூங்கிகிட்டு இருக்கார். ஒரு நாய் வந்து அந்த போர்வைய இழுக்குது - அவர் போர்வைய விடாம தூங்கறார். நாய் யோசிக்குது. டப்னு அவர் மூஞ்சியில உச்சாப் போயிடுது – அவர் எழுந்துடுறார் – இங்க தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்குது – நாங்களும் முயற்சி பண்ணோம் – மு..டி…ய….ல.

அடுத்த சீன் ஒரு கடலக் காட்றாங்க – கடலுக்குள்ள இருந்து ரெண்டு கை மட்டும் மேல வருது -- எல்லாரும் சீட் நுனிக்கு வர்றாங்க -- எதிர்பார்த்த மாதிரியே ஹீரோயின் அறிமுகம்! அவங்க கடல்ல சோப்புப் போட்டு குளிக்கறாங்க – கதைக்கு தேவப்படுதில்ல !! --- அப்புறம் ஒரு சங்க எடுத்து காதுல வக்கிறாங்க.. அதுல ஒரு ட்யூன் கேக்குது அவங்களுக்கு – அந்த ட்யூன்ல அப்பிடியே ஒருப் பாட்டு பாடறாங்க – ஆடறாங்க
இப்ப ஸ்க்ரீன்ல ஒரு ஸ்லைடு போடறாங்க
A sea shore – America 12 noon.
பாட்டுப் பாதியிலேயே கேமரா இந்தியாவுக்கு வருது ….
ஒரு ஓட்ட பைக்ல நம்ம ஹீரோ கித்தார (அதுக்கு பேரு என்னப்பா கித்தாரா? சித்தாரா?) வச்சிக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்கார். அப்பிடியே காத்துல எதையோ தேடறார் – புடிச்சிட்டார் – அமெரிக்காவுல இருந்து காத்துல வந்த அந்த ட்யூன கப்புனு புடிச்சு கபால்னு இவரு ஒரு பாட்ட பாடறார்
ஸ்லைடு போடறாங்க --
A slum Area – Hyderabad 12 midnight.
அப்புறம் ஸ்க்ரீன்ல பாதி அமெரிக்கா பாதி ஐதராபாத் --- அப்படியே கிராபிக்ஸ் வித்தையெல்லாம் காட்றாங்க. பாட்டு முடியுது.

அந்த சங்குல கேட்ட சங்கீதத்துல மயங்கின நம்ம ஹீரோயின் சங்கீதம் கத்துக்கிறதுக்காக அவங்க பாட்டிய சொல்லிக்கொடுக்க சொல்றாங்க.பாட்டி இந்தியாப் போன்னு ஐடியாக் கொடுக்கவும், அப்பா(பாரதியார்)கிட்ட பர்மிஷன் வாங்கி இந்தியா கெளம்புறாங்க, பாத்தியும் , பேட்டியும் ..ச்சீ… பாட்டியும் பேத்தியும்.

இப்ப நம்ம ஹீரோ குரூப்பக் காட்றாங்க ஒரு குட்டி சுவத்துல ஒரு அஞ்சு பேரு உக்காந்திருக்காங்க அதுல ஒருத்தர் ஹீரோ, இன்னொருத்தர் காமெடியன் – தெலுங்கு விவேக் –மத்தவங்க எடுபிடி….

நம்ம “காம”டியன் ஒரு பொண்ணக் கரக்ட் பண்றதுக்கு இரட்டை அர்த்தத்துல ஒரு வசனம் பேசி அடி வாங்கறார்….இப்பவும் தியேட்டரே குலுங்குது --- எங்களால மறுபடியும் முடியல….

அப்ப அந்த பக்கம் ஒரு சூப்பர் பைக்ல ஒரு ரெமோ வர்றார் – இந்த பக்கம் ஒரு சூப்பர் காஸ்ட்யூம்ல ஒரு சுமாரான பொண்ணு வந்து நம்ம ரெமோ பைக்ல ஏறி உக்கார்றாங்க – அத ஒரு 7 ஆங்கிள்ல காட்றாங்க --- அவரு உடனே நம்ம ஹீரோ குரூப்ப வெறுப்பேத்தறதுக்காக பைக்ல வீலிங் பண்றாரு --- வண்டி நின்ன எடத்துல முன்னாடி வீல் மட்டும் அப்படியே ஒரு 45 டிகிரி மேல தூக்குது ( கவனிக்க வேண்டிய விஷயம் வண்டிய அவர் இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்ல )….

அப்புறம் ரெமோ ஒரு லுக் விட்டுட்டு நம்ம ஹீரோ பைக்க இடிச்சுட்டு போகப் பாக்கறார்- அதுக்குள்ள பிரச்னையாயிடுது. சமாதானம் பேசற ரெமோவோட கேர்ள்ஃப்ரெண்ட் ஒரு பந்தயம் வக்கிறாங்க. அது - பைக் ரேஸ் – அந்த பைக் ரேஸ ஒரு 3 நிமிஷம் காட்றாங்க – அதுல ஹீரோ குரூப்ப ரெமோ குரூப் ஏமாத்தி ஜெயிச்சுடுது.

//ஹீரோ குரூப் – கவர்மெண்ட் காலேஜ் ரெமோ குரூப் – ப்ரைவேட் காலேஜ்
ஒருத்தங்க மத்தவங்க ஏரியாவுக்குள்ள வந்தா வெளி ஏரியா குரூப்காரங்க லோக்கல் ஏரியா குரூப் காரங்களோட ஷூவ தங்களோட கர்ச்சீப்ல தொடச்சிட்டு அதுல தங்களோட முகத்தத் தொடச்சிக்கணும் – இது அவங்களுக்குள்ள இருக்குற (இயக்குனரால்) எழுதப்பட்ட சட்டம்!!! //

அடுத்த சீன் ஒரு கோயில் – இந்தியாவுக்கு வந்த நம்ம ஹீரோயின் அந்த கோயிலுக்கு வர்றாங்க – கோயில்ங்கறதுன்னால ஹீரோயின் தாவணியில வர்றாங்க – பண்பாட்டக் காட்டனும்ல? அந்த தாவணில எவ்ளோ பண்பாட்டக் காட்டமுடியுமோ அவ்ளோக் காட்றாங்க. நம்ம ஹீரோவும் அங்க தான் சாமிக் கும்பிட்டுக்கிட்டு இருக்கார். அப்ப அவர் ஒரு தோட்ட கீழப் பாக்குறார். யாரோடத் தோடுன்னு தேடிப்பாக்குறார். அப்ப சைட் ஆங்கிள்ல நம்ம ஹீரோயின் காதப் பாக்குறார் அதே மாடல் தோடு இருக்கு. அப்ப அந்தப் பக்க காதுல இருக்க வேண்டிய தோட்டதான் அவங்க மிஸ் பண்ணிட்டாங்கன்னு இவரு அறிவுப்பூர்வமா சிந்திச்சுட்டு இருக்கும்போது ஹீரோயின மிஸ் பண்ணிடறார்.மறுபடியும் மூளையக் கசக்கிப் புழிஞ்சு யோசிச்சு – கோயில்ல மைக்ல பாட்டுப் பாடிக்கிட்டு இருந்தவர எழுப்பி விட்டுட்டு இவர் மைக்ல விஷயத்த சொல்றார் --- தேவதைத் தேடி வர்றாங்க - வெளக்கெல்லாம் அணைஞ்சுடுது - இரூட்டுலயே ரெண்டு பேரும் பேசிக்கறாங்க – போகும்போது ஹீரோயின் மனசுக்குள்ள very interesting character அப்பிடின்னு சொல்லிட்டுப் போறாங்க. ஹீரோ ஒன்னுமே நடக்காத மாதிரி கேஷுவலா போயிடறார் – ஹீரோ இல்லையா அந்த கெத்து வேனுமில்ல?

அடுத்த நாள் காலேஜ் ஏரியாவுல ஹீரோயினும் ரெமோவும் மீட் பண்றாங்க – ஹீரோயின் அமெரிக்காவுல இருந்து வந்தவங்க இல்லையா அதனால பசங்கத் தோள் மேலக் கை போட்டு பழகறத எல்லாம் சகஜமாவே எடுத்துக்குவாங்க --- ஆனா அதப் பாக்குற ஹீரோவுக்கு வயிறு வாய் எல்லாம் எறியுது.
அப்புறம் ஹீரோயினும் ரெமோ பைக்ல ஏறிடுவாங்களோன்னுட்டு பபிள் கம்ம எடுத்து ரெமோ பைக் சீட்ல ஹீரோ ஒட்டி வச்சிடறார். ஹீரோயின் அதனால பைக்ல ஏறாம அவங்க கார்ல போய்டறாங்க. ஹீரோவோட அந்த ஐடியாவுக்காக தியேட்டரே கை தட்டுது. நாங்க காறித்…… துப்ப முடியாததால முழுங்கிடறோம்.

அப்புறம் ரெமோ, வந்து ஹீரோயின ஒரு பார்ட்டிக்கு கூப்பிட்டுப் போயி தப்பா நடக்கப் பாக்கறார் – ஹீரோயின் அவனக் கன்னத்துல அறைஞ்சுட்டு மணிக்கு 1 கிலோமீட்டர் வேகத்துல ஓடறாங்க – பின்னாடியே ரெமோ மணிக்கு 950 மீட்டர் வேகத்துல தொரத்தறாரு…..எதிர்பார்த்த மாதிரியே ஹீரோயின் , ஹீரோக்கிட்ட போய் தஞ்சம் ஆகறாங்க – ஹீரோ ரெமோவ அடிக்காம அடுத்த நாள் காலேஜ்ல எல்லாரும் பாக்குற மாதிரி பைக் ரேஸ் ஏற்பாடு பண்ணச் சொல்றாரு….

அடுத்த நாள் ஒரு பெரிய கேலரியில பைக்ரேஸ் – ஹீரோ ஜெயிக்கறார் – ஹீரோயின் வந்து ஹீரோவோட ஓட்டபைக்ல உக்கார்றாங்க –அத ஒரு 8 ஆங்க்ள்ல காட்றாங்க --- ரெமோ மாதிரியே ஹீரோவும் வீலிங் வுட்டுக் காமிக்கிறார்…அப்புறம் அப்படியே ஹீரோயினத் தள்ளிக்கிட்டுப் போறார்.

ஹீரோ : நீ எதுக்கு இந்தியா வந்த
ஹீரோயின் : சுத்திப் பாக்க
ஹீரோ: நான் உனக்கு உண்மையான இந்தியாவ சுத்திக் காட்றேன்….

அப்படியே பைக் ல வயல்வெளி, ஆறு, கிராமம், எல்லாம் சுத்தறாங்க…
“லே பாபு ஏது சங்கதி ஹே ரைனா ஹே ரைனா” ன்னு தெலுங்கையும் இந்தியையும் மிக்ஸ் பண்ணி ஒரு பாட்டு இ…ழு…க்…க….றா….ங்…க…

அப்புறம் ஒரு தடவ ரெமோ ஏரியாக்குள்ள ஹீரோ வந்துடறார்…அவங்க ரூல்ஸ்படி ரெமொ ஷூவ தொடச்சி தன்னோட முகத்த தொடச்சிக்கிறார்…அதப் பாக்கற ஹீரோயினுக்கு ஹீரோ மேல ஒரு இது அதாங்க பரிதாபம் வருது….

அடுத்த சீன் :
ஹீரோ குரூப்ல ஒருத்தன் வேகமா பைக்ல வந்து விழுந்து எழுந்து ஹீரோக்கிட்ட ஏதோ சொல்லுவான்….
ஹீரோவும் கோபமா கெளம்பிப் போவார்…எதோ ஆக்ஷன் சீனுக்கு அஸ்திவாரம் போடறாங்கனுப் பாத்தா…
அங்க நம்ம மழை ஷ்ரேயா நின்னுட்டு இருப்பாங்க….
அதாவது ஒரு ஃபங்ஷனுக்கு டான்ஸ் ஆட வர்ற ஷ்ரேயா ரெமோ ஏரியாவுக்குள்ள ஆடப் போறாங்கங்கற செய்தி கேட்டு தான் ஹீரோ குரூப்ல இவ்ளோ பரபரப்பு…
கமெடியன் போயி ஷ்ரேயாவ சுண்டு வெரலால தொடுவாரு அப்பிடியே ஷாக் அடிச்சு கீழ விழுந்துடுவார்….சிரிப்பலையில் தியேட்டர் குலுங்குகிறது…
ஹீரோ பேசறதுல இம்ப்ரஸ் ஆகி ஹீரோ ஏரியாவுலயே ஆடறதுக்கு ஷ்ரேயா சம்மதிக்கிறாங்க…
அந்த எடத்துல ஒருக் குத்தாட்டம் ஆடிக்கிட்டு இருந்தவங்க அப்படியே ஃபாரின் போயிடறாங்க……..

அடுத்த நாள் தனியா வர்ற ஹீரோயின்கிட்ட ரெமோ வம்பு பண்றார்…ஹீரோயின் மெதுவா பின்னாடியே நடந்து போறாங்க…ரெமோ ஹீரோயின நெருங்கிப் போறார். அப்பப் பாத்து ஹீரோ குறுக்க வர்றார்.

ரெமோ: இது எங்கப் பிரச்ன நீ தலையிடாத…
ஹீரோயின் : இது அவங்க ஏரியா நீ எதுக்கு உள்ள வந்த?
அப்பதான் ஹீரோவோட ஏரியாவுக்குள்ள தான் வந்துட்டத ரெமோ பாக்குறார்….

தியேட்டர்ல எனக்குப் பக்கத்துல உக்காந்திருந்தவர் கையத் தொடைல தட்டி “அப்பிடிப் போடு”ன்னு உற்சாகமாகுறார்….

ஹீரோவோட ஷூவ தன்னோட கர்ச்சீப்பாலத் தொடச்சி ரெமோ தன்னோட முகத்துல தொடச்சிக்கறார். ஹீரோயின் ரெமோவ பழி வாங்குன சந்தோஷத்துல ஹீரோவோட பைக்ல ஏறி உக்காந்துக்குறாங்க…. பைக் அப்பிடியே அமெரிக்காப் போகுது…
“தெலுசே தெலுசா பிரேமம் தெலுசா”ன்னு ஒரு பாட்டு

பாட்டு முடிஞ்ச வுடனே ஹீரோயினக் கொண்டுவந்து அவங்க தங்கியிருக்குற ஹோட்டல் முன்னாடி விட்டுட்டு…திரும்ப எப்ப சந்திக்கலாம்னு ஹீரோ கேக்கறார்.
“நாளைக்கு காலைல 10 மணிக்கு”
“சரி”
பைக்ல திரும்பிப் போகும்போது கணக்குப் போடறார் இன்னும் 12 மணி நேரம் 12*60 நிமிஷம் 12*60*60 நொடி எப்படி ஹீரோயினப் பாக்காம இருக்கிறதுன்னு யோசீச்சுட்டு திரும்பி ஹோட்டல் வாசலுக்கு வர்றார்.
ஹீரோயினும் அதே மாதிரி கணக்குப் போட்டுட்டு அங்க வந்து நிக்கறாங்க.
ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாக்குறாங்க….பாக்குறாங்க….பாக்குறாங்க….
தியேட்டர்ல ஒருத்தர் சவுண்ட்வுட்டதுக்கப்புறம் ரெண்டு பேரும் ஹோட்டலுக்குள்ள போறாங்க.

ஹீரோயின் தூங்கறதப் பாத்துக்கிட்டே ஹீரோ உக்காந்துருக்கார் இஞ்சி தின்னக் கு......திரை (எதுக்கு வம்பு?) மாதிரி…
அப்ப பாத்து போன் அடிக்குது….ஆஃப் பண்றார்…மறுபடியும் அடிக்குது…எடுத்து கெட்ட வார்த்தைல திட்டிடறார்… (ஹீரோயின் தூக்கம் கெடுதாம்!!!)
அந்தப் பக்கம் யாருன்னா நம்ம பாரதியார்.

அடுத்த நாள் ஹீரோவும் ஹீரோயினும் பைக்ல எங்கயோப் போறாங்க …..மழைப் பெய்யுது….
கீழ எறங்கி ஒரு மரப் பொந்துல ஒதுங்கறாங்க……
திடீர்னு ஒரு இடி இடிக்குது….பயத்துல ஹீரோவ கட்டிப் புடிச்சிடறாங்க ஹீரோயின்….

ஹீரோ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஹீரோயின் கன்னுத்துல ஒரு முத்தம் குடுத்திடறார்…..
ஹீரோயின் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு ஹீரோ கன்னத்துல “பொளேர்”னு அறையறாங்க….

“ச்சம்ப்ப்ர ராஸ்கல்” அப்பிடின்னு திட்டிட்டுப் போயிடறாங்க….
ஹீரோ பயங்கரமா ஃபீல் ஆகப் போறார்னு நெனச்சா அதான் இல்ல….
அடி வாங்குன கன்னத்த தொடச்சிட்டு ஸ்க்ரீனுக்கு குறுக்கால கைய வச்சி ஸ்க்ரீன ரெண்டா கிழிக்கிறார்….அதுல இத்தாலி தெரியுது…
அங்க ஹீரோவும் , ஹீரோயினும்
“ நாப் ப்ரேம்மம் நூக் கஷ்டம்….
நுவ்வண்டே நாக் கிஷ்டம்….”னு பாடிட்டு
ஜாலியா டான்ஸ் ஆடிறாங்க………..
தியேட்டர்ல நாங்க நாலு பேரு மட்டும் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்….
எல்லாரும் எங்களையே ஒரு மாதிரி பாத்ததுனால நிறுத்திட்டு சிரிச்சி சிரிச்சி விழறோம்…

அப்புறம் ஹீரோ ஹீரோயின ஒரு எடத்துக்கு கடத்திட்டுப் போயி அவங்க கை கால கட்டிப் போட்டுடறார்…
அவங்க கண்ணையும் கட்டி வச்சிட்டு காதல் டயலாக் பேசறார்….
ஹீரோயின் அதெல்லாம் ஃப்ரெண்ட்ஷிப் அப்பிடிங்கறாங்க…

ஹீரோ, ஹீரோயின் பின்னால போயி கட்டிப் புடிச்சு இப்படிதானே பைக்ல உக்காந்த அது ஃப்ரெண்ட்ஷிப்பா? ன்னு கேக்கறார்.
ஹீரோயின் எதையும் யோசிக்க முடியாத மெய் மறந்த நிலைல இருக்காங்க!

“என்னமோ எம் மனசுல இருந்தத சொல்லனும்னு தோணுச்சி சொல்லிட்டேன் அவ்வளவுதான்” - ஹீரோ
( அதக் கொஞ்சம் எட்ட நின்னே சொல்லியிருக்கலாம்!)

அப்பிடியே கெளம்பிப் போகும்போது அமெரிக்காவுல ஹீரோயின் சங்குல கேட்ட ட்யூன விசிலடிச்சுக்கிட்டேப் போவார் ஹீரோ
அதக் கேட்ட வுடனே ஹீரோயின் மனசுல காதல் “பூம்”னு வெடிச்சு கெளம்பிடும்.
ஆனா அதுக்குள்ள ஹீரோ கெளம்பிப் போய்டுவார்.

அடுத்த நாள் ஒரு டீக்கடைல ஹீரோ உக்காந்திருப்பார். ஹீரோயின் அவர்கிட்டப் பேசப் போவாங்க…


விடு விடு ன்னு எந்திரிச்ச ஹீரோ அடுப்புல கொதிச்சிட்டு இருக்கட் டீய எடுத்து மட மடன்னு குடிச்சிடறார்
( நாங்கூட ரொம்ப பசியில இருந்திருப்பார் போலன்னு நெனச்சேன்….அதில்ல
ஹீரோயின் மேல அவ்ளோ கோபத்துல இருக்குறார்னு டைரக்டர் சொல்ல வர்றார்)

வருத்தத்தோட வீட்டுக்கு வர்ற ஹீரோயின் எப்படி அவர்கிட்ட காதல சொல்றதுன்னு யோசிச்சுட்டு ஒரு ஐடியாப் பண்ணுவாங்க….
ஒரு லெட்டர் எழுதி தன்னோட நாய்க்குட்டிகிட்ட குடுத்து அனுப்புவாங்க…
போன ஜென்மத்துல அந்த நாய் போஸ்ட் மேனா இருந்திருக்கும் போல…
கரெக்டா ஹீரோ வீட்டுக்குப் போய் லெட்டர சேத்துடும்….
லெட்டர பிரிச்சிப் பாப்பார் --- “91221” அப்பிடின்னு எழுதியிருக்கும்………..
இது என்னடா ஒன்னும் புரியலன்னு ஹீரோ மண்டையப் பிச்சி யோசிப்பார் 9 – I, 12 – L , 21 – U , ILU = I love You அப்பிடின்னு அத டீக்கொட் பண்ணி புரிஞ்சிப்பார்
( ரெண்டு பேரும்D a Vinci Code ஒவராப் படிச்சிட்டாங்கப் போல இருக்குது )
உடனே ஆஸ்திரேலியா கெளம்பிடுவாங்க………
ஒரு பாட்டு…….

இப்ப அமெரிக்காவுல இருந்து நேரா ஹீரோவோட வீட்டுக்கு வர்றார் பாரதியார்….
“உன்ன எனக்கு புடிச்சிருக்கு….
உனக்கே எம் பொண்ணக் கல்யாணம் பண்ணி வக்கிறேன்….”
இப்படியெல்லாம் பேசிட்டு நேரா ஹீரொயினும் பாட்டியும் இருக்கிற ஹோட்டலுக்கு வருவார்…
“இப்பதாம்மா தேவதாஸ(ஹீரோ)ப் பாத்துப் பேசிட்டு வர்றேன்…
நம்ம அமெரிக்காப் போய்ட்டு அடுத்த சம்மர் லீவுல இந்தியா வந்து உன்னோடக் கல்யாணத்த முடிச்சிடலாம்” அப்படினு சொல்லுவார்…
பானுமதிக்கு(ஹீரோயின் பேர்) சால ஆனந்தம்.
உடனே அமெரிக்காப் போகனும்னு சொல்லி எல்லா ஏற்பாடும் பண்ணிடுவார்….

கடைசியா காதலர்கள் சந்திக்கிறாங்க..
பானுமதி: நேனு அமெரிக்காப் போயிதே…நூக்கு பாதகம் லேதா?
தேவதாஸ் : பாதகம் லேது….சால ஆனந்தம்!
பானு:ஆனந்தமா?
தேவ்:ஆமா பானு தூரம் அதிகம் இருந்தா தான் காதல் திக்கா இருக்கும்!

பாரதியார் தேவ்க்கு ஃபோன் பண்ணி 9 மணிக்கு ஃப்ளைட் , ஏர்போர்ட் வந்துடுங்கறார்….
ஆனா 7 மணி ஃப்ளைட்க்கே கெளம்பறாங்க………
நம்ம ஹீரோ யாரு?அங்க 6 மணிக்கே வந்து உக்காந்துக்கறார்…..
தன்ன ஏமாத்தி பானுவ அமெரிக்கா கூட்டிட்டுப் போக பாரதியார் பண்ற ப்ளான புரிஞ்சிக்கிறார்………

பாரதியார்கிட்ட தனியாப் பேசுறார்:
“என்ன இங்க எதிர்பார்க்கல இல்ல”
“வந்து மட்டும் என்ன பண்ண முடிஞ்சது உன்னால”
“நீ பானுவ ஏமாத்திக் கூப்பிட்டுப் போற”
“நீயும் முடிஞ்சா அமெரிக்கா வந்து கூட்டிட்டுப் போ”
“அமெரிக்கா வர்றேன் ---- உன்னப் பாக்குறேன் --- பானுவக் கூட்டிட்டு வர்றேன்”
“லக லக லக லகா லகா லகா” ( ஒன்னும் இல்ல பாரதியார் சிரிக்கிறார்)

அப்ப பானு அங்க வர்றாங்க…
பானு: என்ன டாடி சிரிக்கிறீங்க
பாரதி:இல்லம்மா தேவ் ஒரு ஜோக் சொன்னார் அதான் சிரிக்கிறென்…லக…லக…
சரி பேசிட்டு வாம்மா டைம் ஆயிடுச்சி…

பானு: சரி போய்ட்டு வர்றேன்
தேவ்: (நீ)போ…..(நான்)வர்றேன் ( என்ன டயலாக்! தியேட்டரில் விசில் பறக்கிறது!!!)


(ஸ்சப்பா…..இப்பவேக் கண்ணக் கட்டுதே…..இருங்கப்பு நான் போய் ஒரு டீத்தண்ணியக் குடிச்சுட்டு வர்றேன்….நீங்க எங்கியும் போயிறாதீங்க….இன்னும் பாதி சுமையக் கூட எறக்கி வைக்கல….ந்தா வந்துட்றேன்….)

படத்தின் இரண்டாவது பாதி இங்கே

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

+2 காதல் - 2

+2 காதல் முதல் பகுதி

ட்யூஷனில் பெண்களோடு சேர்ந்து படித்தால் ஒரே மாதத்தில் நாலைந்து பெண்களை மடக்கி விடுவோம் என சபதமேப் போட்டிருந்த மதனும், வினோத்தும் கூட +1 முடியும் வரை ஒரு பெண்ணிடம்கூட பேசவில்லை. பார்த்துக்கொண்டிருப்பதிலேயே அவர்களின் பாதி ஏக்கம் தீர்ந்து போனது.
எங்கள் எல்லோருக்குமே வீரம் எல்லாம் எங்களுக்குள் மட்டும்தான். ஒரு பெண் அருகில் வந்துவிட்டால் சம்பந்தமில்லாமல் உளறுவதும், பகலில் நட்சத்திரம் தேடுவதும் எங்கள் எல்லோருக்கும் அனிச்சையாய் நடக்கும் செயல்கள்.
அந்தப் பெண்களும் எங்களை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.எங்கள் ஐந்து பேரிலேயே கொஞ்சம் கலராக இருப்பதாக நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தது பாஸ்கரைத்தான். அவனுக்கே அவர்கள் வைத்திருந்த பெயர் கருவாயனாம். மீதி நான்கு பேரின் நிலைமையோ படு மோசம்.

ஒருவாறாக +1 தேர்வெல்லாம் முடிந்து மே மாத விடுமுறையில் ஊர் சுற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, ஞாயிறு தவிர எல்லா நாளும் கெமிஸ்ட்ரி ட்யூஷன் இருக்கிறது என குண்டை போட்டார் ஜோசப் மாஸ்டர். அவர் அப்படி சொன்னதும் மதனுக்கும் , வினோத்துக்கும் கொஞ்சம் சந்தோசம்தான்.

“மாப்ள இந்த ஒரு மாசந்தாண்டா நமக்கு ச்சான்சு..யார் யாரு, யார் யார் கிட்ட பேசனும்னு நெனைக்கிறீங்களோ இந்த ஒரு மாசத்துல பிக்கப் பண்ணிக்கோங்க…அப்புறம் ஸ்கூல் ஆரம்பிச்சுதுன்னா எல்லாவளும் சீரியஸா படிக்க ஆரம்பிச்சுடுவாளுங்கடா..அப்புறம் இங்க ட்யூஷன் சேர்ந்து இந்த ஆளுக்கு 1500 ரூபா தண்டம் கட்றதுக்கு ஒரு பிரயோஜனமே இல்லாமப் போயிடும்” எல்லாருக்கும் நன்றாகவே மந்திரித்து விட்டான், மதன்.

“அது சரிடா ஒரு எடத்துலேயேப் பார்த்தா எப்படி?? சீக்கிரம் physicsக்கும் எந்த வாத்திகிட்ட சேரலாம்னு சொல்லு”, வினோத் கொஞ்சம் அகலக் கால் வைத்தான்.

“ஆமாடா சொல்ல மறந்துட்டேன்..நாம physicsக்கு சபாபதி கிட்ட சேர்றோம்..அந்தாளு வீடு தான் சேரன் ஸ்கூல் கிட்ட இருக்கு..கண்டிப்பா சேரன் ஸ்கூல் புள்ளைக எல்லாம் அங்கதான் வருவாளுக”

“டேய் சேரன் ஸ்கூல் புள்ளைகளா…அது high class ஆச்சே??”

“ஏண்டா அலர்ற…நான் என்ன அவளுக உங்கிட்ட வந்து எங்கள லவ்வு பண்ணு லவ்வு பண்ணுனு உன் பின்னாடியே சுத்தப் போறாளுகன்னா சொல்றேன்…physics tution சைட்டடிக்க மட்டும்…chemistry tution கரைக்ட் பண்ண..”

“அப்ப maths tution?”

“அங்கேயாவது படிப்போம்டா”

மதனும் வினோத்தும் இப்படி தேடல் படலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, அந்தப் பக்கம் படிப்பாளிகளாகவே மாறிப் போயிருந்தார்கள் செல்வாவும், பாஸ்கரும்.
போன வருடம் +2 முடித்தவர்களின் நோட்ஸ், டெஸ்ட் பேப்பர் எல்லாவற்றையும் பழையப் பேப்பர் காரனைப் போல சுமந்து கொண்டு வந்தார்கள் இருவரும்.

“டேய்..இந்த நோட்ஸ் போன வருஷம் செண்டம் வாங்கினவனோடதுடா…அருமையா நோட்ஸ் எடுத்து வச்சிருக்கான்…வேணுங்கறவங்க ஜெராக்ஸ் எடுத்துக்கோங்க…” தான் உருப்படப்போவதை மறைமுகமாக சொல்லிக்கொண்டிருந்தான் செல்வா.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே அமைதியாக நடந்துகொண்டிருந்தேன் நான்.
நால்வரும் என்னைப் பற்றி ஏதோ கண்ணில் பேசினார்கள்.

“இவன் மட்டும் ஏண்டா இஞ்சி தின்ன பாஸ்கர் மாதிரி உம்முனு வர்றான்” – என்னைக் காட்டிக் கேட்டான் வினோத்.

“டேய்..அவனப் பத்திப் பேசும்போது என்ன ஏண்டா இழுக்கறீங்க…அவன் என்ன யோசிக்கிறான்னு தெரியாதா? சாரதாவும் சபாபதிகிட்ட தான் physics tution சேர்றா-னு சொல்லித் தொலையுங்களேண்டா!” – பாஸ்கர் ஆரம்பித்து வைக்க எல்லோரும் கோரஸ் பாடினார்கள்.

“அட.. நாய்களா…நான் maths-க்கு யார்ட்ட சேரலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்டா…நீங்கல்லாம் MMகிட்ட தான் போவீங்கனு தெரியும்..அந்த ஆள் வைக்கிற entrance testல 90% வாங்கினாதான் சேர்த்துக்குவானாம்…அந்த அளவுக்கு அறிவு இருந்தா நாம எதுக்குடா அவங்கிட்ட tuition சேர்றோம்? நான் எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒருத்தர்ட்ட சேரப் போறேன்.”

“நான்…நம்பிட்டேன்டா….நீங்க?” –மதன்.

“நாங்களும் நம்பிட்டோம்” – மீதி பேரும் கத்தினார்கள்.

“டேய் நான் சீரியஸாதான் சொல்றேன்…நான் MM கிட்ட வரல…சரி நாளைக்கு சபாபதியப் பார்க்கப் போலாம்… இப்பக் கெளம்புங்க” ஒரு வழியாக அவர்களைக் கலைத்து அனுப்பினேன்.

அடுத்த நாள் சபாபதி வீட்டில் ஐந்து பேரும் ஆஜரானோம். அன்று தான் tuition சேருபவர்களை அவர் வர சொல்லியிருந்ததால் நிறையக் கூட்டமாக இருந்தது.
ஆனால் அங்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி batch என்று சொன்னதால் வெறுத்துப் போனான் மதன்.
கோபத்தின் உச்சிக்கேப் போன வினோத் சபாபதிக் குடும்பத்தைக் கொஞ்ச நேரம் சேதப்படுத்திவிட்டு ஆசுவாசமானான்.

“இப்ப எதுக்கு டென்ஷன் ஆவறீங்க? ஸ்கூல் ஆரம்பிக்கிற வரைக்கும் நம்மள காலைல 9 to 10 வரசொல்லியிருக்காரு, பொண்ணுங்கள 8 – 9 வரசொல்லியிருக்காரு…பார்க்க முடியாமலாப் போயிடும்??” இருவரையும் சமாதானப் படுத்தினான் செல்வா.

“டேய் நீ படிக்கிறவனாட்டம் சீனப் போட்ட…இப்ப என்னடா இப்படிப் பேசற??” – செல்வா மீது பாஸ்கருக்கு சந்தேகம் வந்தது.

“ஆமா..அங்க அவளுக தாவணியப் போர்த்திக்கிட்டு வர்றாளுங்க..இங்க பாரு எல்லாம் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்…எல்லாம் எப்படி இருக்காங்க”

“அடப் பாவி குட்டப் பாவாடையப் பார்த்தவுடனே தாவணி எளக்காரமாப் போயிடுச்சா உனக்கு?” – தாவணிக்குப் பரிந்து பேசினான் மதன்.

அப்போதுதான் கவனித்தேன் அவளும் அங்கு வந்திருந்தாள். முன்பு பாஸ்கர் சொன்னபோது என்னைக் கிண்டல் பண்ணுவதற்காக சொன்னான் என்றே நினைத்தேன்.
ஆனால் உண்மையாகவே அவளும் physicsக்கு சபாபதியிடம் சேருவதற்கு வந்திருந்தாள்.

அந்த விடுமுறை முழுவதும் பள்ளிக்கு செல்வதுபோலவேக் கழிந்தது. காலையில் வீட்டை விட்டுக் கிளம்பினால் physics tuition முடித்துவிட்டு library போய் விடுவோம். மீண்டும் மதியம் சாப்பிட்டுவிட்டு ஊர் சுற்றக் கிளம்பினால் திரும்பவும் மாலை chemistry tuitionக்கு நேராய் வந்து விடுவோம்.

இந்த ஒரு மாதத்தில் chemistry tuition-இல் நடந்த நான்கைந்து தேர்வுகளிலும் நான் முதல் மார்க்கும், அவள் இரண்டாவதும் வாங்கியிருந்தோம். ஆனால் எங்கள் இருவருக்கும் மார்க் வித்தியாசம் அதிகமிருந்தது.

ஒரு நாள் tuition முடிந்தவுடன் என்னிடம் வந்தவள் “உங்க test paper லாம் கொஞ்சம் தர்றீங்களா..பார்த்துட்டுக் கொடுத்திட்றேன்” என்றாள். நான் எதுவுமேப் பேசாமல் எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டவள் நோட்டுக்குள் வைத்துக்கொண்டு ,”நாளைக்குத் தர்றேன்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.

அவள் போகும் வரை காத்திருந்த நான்கு பேரும், அவள் மறைந்தவுடன் ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். மதன் ஒரு படி மேலே போய் என் கன்னத்தில் ஒரு முத்திரையே பதித்து விட்டான்.
“டேய் கலக்கிட்டடா மச்சி…அவளையே வந்து பேச வச்சிட்ட…ம்ம்…பொண்ணு மடங்கிட்டா…இனி உங்காட்ல மழதான்!!” – என்னை உற்சாகப் படுத்தினான் மதன்.

“அடப் பாவிங்களா…அந்தப் பொண்ணு test paper வாங்கிட்டுப் போறா…அதுக்கு ஏன்டா இப்படி ஏத்தி வுட்றீங்க” – அவர்களிடம் அப்படி சொல்லித் தப்பித்துக் கொண்டேன்.

அடுத்து வந்த நாட்களில் படிப்பைப் பற்றி அடிக்கடிப் பேச ஆரம்பித்தாள். நான் “ஆமா” ,“இல்லை” யைத் தாண்டி பேசியதில்லை.

அடுத்த ஆண்டு பள்ளி ஆரம்பமானவுடன் tuition time எல்லாம் மாறிப் போனது. திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் மாலை 5 -6 physics tuition இருந்தது.( அதே நாட்களில் 6- 7 அவள் வரும் batch க்கு இருந்தது). வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 5-6 எங்களோடு chemistry tuition –இல் ஒரே batch-இல் இருந்தாள்.

MM-இடம் மீதி நான்கு பேரும் maths-க்கு tuition சேர்ந்து போக ஆரம்பித்து இருந்தார்கள். நான் maths-க்கு என் வீட்டருகில் ஒருவரிடம் சேர்ந்திருந்தேன்.
பள்ளி ஆரம்பித்த முதல் வாரம் சுவாரஸ்யமாய் எதுவுமில்லாமல் ஓடியிருந்தது.

அடுத்த வாரம் ஒரு நாள் chemistry tuition-இல் மாஸ்டர் வரும் வரை மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருந்தோம்.
“டேய்..சாரதா mathsக்கு MM கிட்ட வரலடா…வேற எங்க சேர்ந்திருப்பானுத் தெரியுமா??” என்னிடம் கேட்டான் மதன்.
“அவ எங்கப் போறா..எங்க வர்றானு எனக்கெப்படிடாத் தெரியும்?” – கொஞ்சம் கோபம் காட்டினேன்.
“ஏன் அவகிட்டயேக் கேட்டுத் தெரிஞ்சிக்க வேண்டியதுதான?”
“அத நான் தெரிஞ்சிக்கிட்டு என்னப் பண்ணப் போறேன்?”
“அப்ப நீ எங்கப் போறேன்னு சொல்லு!”
“நாயே! நாந்தான் முன்னயே சொன்னேனே..எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஐயப்பனுனு ஒருத்தர்ட்ட போறேன்னு”
அன்று அதோடு என்னை விட்டு விட்டான் மதன்.

அடுத்த நாள் காலையில் நான் maths tuition-இல் இருக்கும்போது அங்கு வந்தாள், அவள்… maths tuition-இல் சேர்வதற்கு! (தொடரும்..)

அடுத்தப் பகுதி
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, May 19, 2006

ஓருக் குட்டிக்(காதல்)கதை!

அந்தப் பூங்காக் குழந்தைகள் விளையாடுவதற்காக உருவாக்கப் பட்டது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
கொளுத்தும் வெயிலிலும் கூட அது எப்போதும் காதலர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும்.
சூரியன் தன் இருப்பைக் காட்ட ஆரம்பித்த அந்தக் காலை வேளையிலேயே அந்தப் பூங்காவுக்குள் நுழைந்தார்கள் இருவரும்.
அவளுடையத் தோள் மேல் தன் வலது கையைப் போட்டபடி அவனும், அவனுடைய இடுப்பைத் தன் இடது கையால் சுற்றியபடி அவளும்.

“அருள், இந்தப் பூங்காவுக்கு நாம இதுவரைக்கும் எத்தன தடவை வந்திருப்போம்?”
“இங்க இருக்கிற மரத்துக்கிட்ட தான் கேட்கனும், எனக்கென்னமோ நான் பிறந்ததுல இருந்தே இந்தப் பூங்காவுக்கு வந்துகிட்டு இருக்கிற மாதிரி தான் தோணுது”

ஒரு வகையில் அவன் சொல்வதும் உண்மைதான். அவன் வாழ்வில் இரண்டாவது முறைப் பிறந்தது இந்தப் பூங்காவில்தான்.
அப்போது இது குடும்பத்தோடு எல்லோரும் வரும் பூங்காவாய் இருந்தது.ஒரு நாள் தன்னுடையப் பூனைக்குட்டியோடு அவள் இந்தப் பூங்காவுக்கு வந்திருந்த போதுதான் முதன்முதலாய் அவளைப்பார்த்தான். அப்போதேப் பூனைக்குட்டியாய் மாறி விட ஆசைப்பட்டவன், இப்போது அவள் பின்னே ஒரு பூனைக்குட்டியாகவே மாறியிருந்தான்.

“அரசி, இந்த மரத்துல இதுக்கு முன்ன நீ பூ பூத்துப் பார்த்திருக்க?”
“அது வருஷத்துல ஒரு தடவை மட்டும் தான் பூக்கும், போன வருஷம் பூத்திருந்தத நான் பார்த்தேன்”

“நான் எப்படிப் பார்க்காமப் போனேன்?”
“வெளியில வரும்போதாவது சுத்திலும் என்ன இருக்குன்னுப் பார்க்கனும், எப்பவும் என்ன மட்டுமேப் பார்த்துக்கிட்டு இருந்தா இப்படித்தான்”

“இப்ப மரத்த விட்டுட்டு, உன்னப் பார்க்கனும்..அதான? இரு.. இரு..இந்தப் பூவ மட்டும் பறிச்சுட்டு வந்துட்றேன்..”
“அது அவ்ளோ உயரத்துல இருக்கே, வேண்டாம் விடுங்க…”

“கொஞ்சம் இரு..அந்தப் பூ அப்ப இருந்து ஏக்கத்தோட உன்னையேப் பார்த்துட்டு இருக்கு, அதப் பறிச்சு உங்கிட்டக் கொடுக்கலேன்னா என்னதானத் திட்டும்”, சொல்லிக்கொண்டே ஒரு பெஞ்ச் மீது ஏறி கொஞ்சம் எக்கிப் பறித்தான் அந்தப் பூவை.
அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டவள், கையிலேயே வைத்துக் கொண்டாள்.
“அதப் போய் அப்படி எக்கிப் பறிக்கிறீங்களே, கீழ விழுந்தா என்னாகறது?”

“அந்தப் பூ விழுந்திருந்தா, வேறப் பூ பறிச்சுத் தந்திருப்பேன்”
“ம்ஹூம்…உங்களத் திருத்தவே முடியாது!” என்று சிணுங்கியவள் பூவைச் சூடிக்கொள்ளத் திரும்பி நின்றாள்.
அவன் கையால் பூவைச் சூடிக்கொண்ட பின் அவர்கள் வழக்கமாய் அமரும் அந்த மரத்தடிக்குச் சென்று அமர்ந்து கொண்டார்கள்.

“இன்னைக்கு என்னங்கக் கூட்டமே இல்ல?”
“எல்லாருமே நம்மள மாதிரிக் காதலிக்கிறது மட்டுமே வேலையா இருப்பாங்களா என்ன?”

“ம்ம்..அதுவும் சரிதான்”
அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் காதலில் பிதற்ற ஆரம்பித்தான்.

“எப்பவும் கூட்டத்துக்கு நடுவிலப் பார்த்தாலே நீ தனியா அழகாத் தெரிவ; இன்னைக்கு பூங்காவில உன்னமட்டும் தனியாப் பார்க்க நீ எவ்ளோ அழகா இருக்கத் தெரியுமா?”
“அழகா இல்லாமப் பின்ன எப்படி இருப்பேனாம்? ஒரு நாளைக்கு ஒரு தடவை சொன்னாப் பரவால்ல! காலைலத் தூங்கி எழுந்ததுல இருந்து ராத்திரித் தூங்கப் போற வரைக்கும் ஆயிரத்தெட்டு தடவ “நீ அழகா இருக்கடி”னு சொல்லி சொல்லி எனக்கே மனசுல நான் அழகினு பதிஞ்சு போச்சு, நாம நினைக்கிற மாதிரிதான நாம இருப்போம்..அதான் நான் எப்பவும் அழகா இருக்கேன்”

அவள் பேசுவதையே ரசித்துக் கொண்டிருந்தவன், “நீ அழகா இருக்கிறதுக்கு இதுதான் காரணம்னா ஒவ்வொரு பிறந்த நாள் முடிஞ்சவுடனே உனக்கு மட்டும் ஒரு வயசுக் கம்மியாயிடுதே அதுக்கென்னக் காரணமாம்??”
“ஆமா, ஒரு தடவ “நீ அழகா இருக்கடி”னு சொன்னா ஒன்பது தடவ “நான் உன்னக் காதலிக்கிறேன்”னு சொல்றீங்க…தினமும் சொல்ற உங்களுக்கும் சலிக்கல…தினமும் கேட்கிற எனக்கும் சலிக்கல..இப்படி தினம் தினம் காதலிக்கப் படறவங்களுக்கு எப்படி வயசுக் கூடுமாம்??”

“எனக்கு மட்டும் கூடுது!”
“உங்க அளவுக்கு என்னாலக் காதலிக்க முடியல இல்ல! அதான் நீங்கக் காதலிக்கிறத விடக் காதலிக்கப் படறது கம்மி! அதனாலதான் உங்களுக்கு வயசுக் கூடிக்கிட்டேப் போகுது!”

“அரசி! நீ எப்போ இந்த மாதிரியெல்லாம் பேச ஆரம்பிச்ச?” ஆச்சரியமாய்க் கேட்டான்.
வழக்கமாய் அவள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அவன் தான் இப்படி காதலில் உருகிக் கொண்டிருப்பான்.
நேரம் கரைந்து, வெயில் கொஞ்சம் அதிகமாகவே இருவரும் பூங்காவை விட்டு வெளியே நடந்து வந்தார்கள்.

அவள்,எதிரில் இருந்த ஐஸ்க்ரீம் கடையைக் காட்டிக் கேட்டாள், “அருள், ஒரே ஒரு ஐஸ்க்ரீம் ப்ளீஸ்”
“உன்ன ஐஸ்க்ரீம் சாப்பிடக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல…அப்புறம் குண்டாயிட்டீன்னா உன்ன வீட்ல எல்லாரும் ஜோதிகானு கிண்டல் பண்ணப் போறாங்க”

ஒவ்வொரு முறை அவள் ஐஸ்க்ரீம் கேட்கும்போதும் அவன் முதலில் மறுப்பதும், பின் அவளுடையக் கெஞ்சல், சிணுங்கலில் அவன் ஐஸ்க்ரீமாய் உருகி, ஒன்றை வாங்கித் தருவதும் வழக்கமாய் நடப்பதுதான். ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். ஒருக் குழந்தையைப் போல் அவள் ஐஸ்க்ரீமை ருசிப்பதை, ரசித்துக் கொண்டே வந்தான்.

“ம்ம்…இப்படிதான் ஐஸ்கிரீம சாப்பிடறதா..பாரு உதட்டுக்கு மேல எல்லாம்..”, சொல்லிக்கொண்டே அவள் உதட்டருகே கையைக் கொண்டுபோனான்.
“அருள்! இது பொது இடம்! ஞாபகம் இருக்கட்டும்”, என்று சொல்லி விட்டு உதட்டை அவளேத் துடைத்துக் கொண்டாள்.

“அடிப் பாவி! உன்னோட உதட்டப் போய் பொது இடம்னு சொல்றியே! அது நம்மோடத் தனி இடம்டி”
“ம்ம்..என்னோடத் தனி இடம்டா!”

பேசிக்கொண்டே அந்தத் துணிக்கடைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இருவரும் காலையில் கிளம்பியதே அடுத்த வாரம் அவர்களுக்கு நடக்க இருக்கும் கல்யாணத்திற்கு துணியெடுக்கத்தான். ஆனால் ஒருநாளைக்கு ஒருமுறையாவது அந்தப் பூங்காவுக்குள் நுழையாமல் அவர்களால் இருக்க முடியாது.அதனால்தான் காலையில் முதலில் பூங்காவில் கொஞ்ச நேரம் கழித்துவிட்டுப் பிறகுக் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
இருவருக்குமேப் பெற்றோர் இல்லாததால்தான் அவர்கள் மட்டும் தனியே வந்திருந்தனர்.

கடைக்குள் நுழைந்ததும், அவளே ஆரம்பித்தாள்:
“எப்பவும் சொல்ற மாதிரி புடவை வேண்டாம்னு சொல்லிடாதீங்க, கல்யாணத்தன்னைக்காவது நான் புடவையக் கட்டிக்கிறேன்”
“என்னை…”
“உங்களையுந்தான்…”, சிரித்தாள்.
“சரி என்ன மாதிரிப் புடவை பார்க்கலாம்”
“பட்டெல்லாம் வேண்டாம், சிம்பிளா ஒரு கைத்தறிப் புடவை, தலைல ஒரே ஒரு ரோஸ், கழுத்துல ஒரு சின்ன செயின் இது மட்டுதான் என்னோடக் கல்யாண costume! So கைத்தறிப் புடவையேப் பார்க்கலாம்”
“என்னக் கலர்ல பார்க்கலாம்?”
“உங்களுக்குப் பிடிச்ச பச்சை”
“ம்ஹூம்… உனக்குப் பிடிச்ச ப்ளூ”
இருவரும் மாறி மாறி சண்டை போட்டு முடிவில் அவள் சொன்னாள்,
“சரி எனக்குப் புடவை பிடிக்கும், அத உங்களுக்குப் பிடிச்ச பச்சைக் கலர்ல எடுத்துடுவோம்..உங்களுக்கு சுடிதார் பிடிக்கும், ஒரு சுடிதார் எனக்குப் பிடிச்ச ப்ளூ கலர்ல எடுத்துடுவோம்! சரியா??”
“ம்ம்ம்…எக்ஸ்ட்ராவா ஒரு சுடிதார் வேணும், அதுக்கு இப்படியெல்லாம் ஒரு காரணமா? சரி சரி ரெண்டுமே எடுத்துடுவோம்!”
அவனுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் ஒரு புடவையை எடுத்துக் கொண்டு, சுடிதார் பகுதிக்கு வந்தார்கள்.
“அருள், இந்த மெட்டிரியல் எப்படி இருக்குன்னுப் பாருங்க?”
“இதுக்கென்னத் துப்பட்டாக் கிடையாதா?”
“இல்ல இந்த மாதிரி தச்சா துப்பட்டாப் போடாம இருக்கிறதுதான் இப்ப ஃபேஷன்”
“அப்போ plain-material வேண்டாம் embroidery பண்ணது எடுக்கலாம்…இந்தா இது எப்படி இருக்குன்னுப் பாரு”
“ம்ம்..பரவால்லியே உங்களுக்குக் கூடக் கொஞ்சம் dressing sense இருக்கு!”
“என்னோட dressing sense-ச வச்சி உனக்கு எது நல்லா இருக்குனுதான் சொல்லத் தெரியும்; எனக்கு நீயே பார்த்து ஒன்ன select பண்ணு”
அவனுக்கு அவளே ஓர் ஆடையைத் தேர்ந்தெடுத்தாள், அவளுக்குப் பிடித்த நிறத்தில்.
எல்லாம் முடித்துக் கொண்டு வீடு திரும்புகையில் வாசலிலேயே அவர்களுக்கு வரவேற்புக் காத்திருந்தது.

“ஏன் தாத்தா! Dress வாங்கப் போறோம்னு காலையிலேயேக் கிளம்பிப் போய்ட்டு இப்பதான் வர்றீங்க…இவ்ளோ நேரம் எங்கப் போய் லவ் பண்ணிட்டு இருந்தீங்க?”
கேட்டு விட்டு உள்ளே ஓடும் பேத்தியைத் துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள், அடுத்த வாரம் அறுபதாம் கல்யாணம் செய்துகொள்ளப் போகும் அருளும், அரசியும்!


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Thursday, May 18, 2006

+2 காதல் - 1

பத்தாவது வரைக்கும் நன்றாகப் படித்துவிட்டு 12-வது வந்து உருப்படாமல் போனவர்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த இரண்டு வருடத்துக்குள் “ஏதாவது ஒன்று” நடந்து அவர்களை அலைய விட்டிருக்கும். அப்படி 12-வது படிக்கும்போது எனக்கு நடந்த அந்த “ஏதாவது ஒன்று” தான் இது…

அது பதினொன்றாம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வு முடிந்து எல்லோரும் +2 க்கு ட்யூஷன் சேர ஆரம்பித்திருந்த நேரம்.
அடுத்த ஆண்டு பொதுத்தேர்வுக்குப் படிக்க வேண்டுமே என்கிற அக்கறை ஒரு காரணமாக இருந்தாலும், ட்யூஷன் சேர்வதில் எல்லோரும் காட்டிய ஆர்வத்திற்கு இன்னொரு முக்கியமான காரணம் இருந்தது. அதாவது 11-வது வரைக்கும் ஆண்கள் மட்டுமேப் படிக்கும் பள்ளியிலேயே படித்து(?) வளர்ந்தவர்களுக்கு ட்யூஷனிலாவது பெண்களைப் பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம் இருப்பது நியாயம்தானே.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த மாஸ்டரிடம் பெண்கள் அதிகமாக ட்யூஷன் சேர்ந்தார்கள் என இதற்காக ஒரு சர்வே எடுத்து எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தவன் மதன். அவனுடைய சர்வே முடிவுப்படி கெமிஸ்ட்ரிக்கு ஜோசப் சாரிடம் சேருவது என நாங்கள் எல்லோரும் ஏக மனதாக முடிவு செய்தோம்.
நாங்கள் என்றால் அதில் நான், மதன், செல்வா, வினோத், பாஸ்கர் ஆகிய பஞ்சப் பாண்டவர்களும் அடக்கம்.

அந்த வருடம் பொங்கல் அன்றைக்கு கெமிஸ்ட்ரி ட்யூஷனில் +2 வுக்கான முதல் க்ளாஸ் நடந்தது.
அப்போதே யார் யார் எந்த batch வரவேண்டும் என்றும் சொல்ல ஆரம்பித்தார் மாஸ்டர்.
அங்கு ட்யூஷன் நடக்கும் அறை ஒரே சமயத்தில் 30 பேர் மட்டுமே உட்காரக் கூடிய அளவில் சிறியதாக இருந்ததால் சில சமயம் இரண்டு, மூன்று பள்ளிகள் கலந்து வர வேன்டியிருக்கும். மாலை 5 மணி பேட்சில் எங்கள் பள்ளியின் 20 பேரையும் சாரதாப் (பெண்கள்!) பள்ளியின் 12 பேரையும் மாஸ்டர் வர சொன்னவுடன்,
எங்கள் பத்துக் கண்களிலும் 1000 வாட்ஸ் பவர்!.

“அப்பாடா…எங்கடா நம்மள அந்த TNPL convent கம்மனாட்டிகளோட சேத்துடுவாரோனு பயந்தேன்…மனுசன் நம்ம மனசறிஞ்சு batch பிரிச்சிருக்கான் டா…ஜோசப் வாழ்க” உற்சாகத்தில் மதன், மன்மதனாகிக் கொண்டிருந்தான்.

“நல்லவேளை தெரசா ஸ்கூல் புள்ளைகளோட சேர்த்திருந்தான்னா நம்ம கத கந்தல்டா…அவுளுக அலம்பலுக்கு நாம தாங்கமாட்டோம்…ஏதோ சாரதா ஸ்கூல் புள்ளைக நம்ம ரேஞ்சு… பார்ப்போம் ஏதாவது செட் ஆகுதான்னு” – சொல்லிக்கொண்டே அந்தப் பக்கம் நோட்டம் விட்டான் வினோத்.

“உனக்கு ஏண்டா எப்பவும் தெரசா ஸ்கூல் புள்ளைக மேல இவ்ளோ காண்டு..அவங்க என்னப் பண்ணாங்க உன்ன??” வினோத்தை வம்புக்கிழுத்தான் செல்வா.
“டேய் இங்கப் பாருங்கடா இவன் பேசறத “அவங்க”லாம்…எப்படா மரியாத கொடுத்துப் பேச ஆரம்பிச்ச?...மச்சி நீ எந்த ரூட்ல போறேன்னு எனக்கு நல்லாத் தெரியும்டா…நீ நடத்து…” செல்வா தனது பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தி பின்னாடி சுற்றுவதும் அவள் தெரசா ஸ்கூலில் படிக்கிறாள் என்றும் ஏற்கனவே எங்களிடம் சொல்லியிருக்கிறான் வினோத்.
“டேய் மச்சி தெரசா ஸ்கூல் co-ed. அந்தப் புள்ளைக எல்லாம் நம்மள மதிக்கக் கூட மாட்டாளுங்க…அவளுக வர்றதே மொபட்லதான்…உன்னோட சைக்கிளப் பாரு…அதுல பெல்லத் தவிர எல்லாமே சத்தம் போடும்…சாரதா ஸ்கூல்னா நம்மள மாதிரிக் கேசு..நமக்குத் தாவணியேப் போதும்டா..சுடிதாரெல்லாம் வேணாம்” – வினோத்.
சாரதா ஸ்கூலில் தாவணிதான் யூனிபார்ம். அதற்காகவே அந்த ஸ்கூல் வழியாகதான் நாங்கள் எங்கள் பள்ளிக்கு எப்போதும் போவோம்.

ஒருவழியாக எங்கள் சண்டையை முடித்துவிட்டு மாஸ்டரிடம் முதல் தவணை ட்யூஷன் ஃபீஸ் கொடுத்துவிட்டு எங்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டு விடைபெற்றோம்.

ட்யூஷன் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே மதனும், வினோத்தும் ஆளுக்கொருப் பெண்ணைப் பார்க்க(!) ஆரம்பித்திருந்தார்கள். பாஸ்கரும், செல்வாவும் படிப்பதற்காகவே அவதரித்த மாதிரி எப்போதும் பாடத்திலேயேக் குறியாய் இருந்தார்கள். நான் இரண்டிலும் சேராமல் ஏதோக் கடமைக்குப் போய்க்கொண்டிருந்தேன்.
ட்யூஷன் ஆரம்பித்து ஒரு மாதம் கழிந்த பிறகுப் புதிதாய் இன்னொருத்தி வந்து சேர்ந்தாள்.
அவள் ஸ்கூலைப் போலவே அவள் பெயரும் சாரதா. பெயரைச் சொல்லும்போது M.சாரதா என்று இனிஷியலோடு அவள் சேர்த்து சொன்னதும் நான்கு பேரும் என்னையேப் பார்த்தார்கள்.மதன் ஒரு துண்டுப் பேப்பரில் எழுதி என் கையில் திணித்தான் “M.S – M.S” படித்ததும் கிழித்து அவன் கையிலேயேத் திணித்து விட்டேன்.

இன்றைக்குமுழுவதும் இவர்கள் நான்கு பேரும் என்னையேதான் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என எனக்குத் தெரியும். அதனால் நான் அவளைப் பார்ப்பதை வேண்டுமென்றேத் தவிர்த்தேன். கொஞ்ச நேரத்தில் அவள் ஒருபக்கம் திரும்பி நோட்டை எடுத்த போது எதேச்சையாக அவள் முகத்தைப் பார்த்தேன். அவளை அழகி என்று சொல்லமுடியாது ஆனால் எந்தக் குறையுமில்லாத எளிமையான முகம். மாநிறம். நான்கு பேரும் என்னையேப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். நான் பார்வையைத்திருப்பினேன்.கொஞ்ச நேரம்தான். ட்யூஷனில் தரையில்தான் உட்கார்ந்திருப்போம்.அவளுடைய ஜடை தரையில் ஒரு அரை அடிக்கு சுருண்டு கிடந்தது.எனக்கு அடுத்த துண்டு சீட்டு வந்தது “கூந்தல் நீளமா இருக்கா?” எனக்கு நீளமானக் கூந்தல் பிடிக்கும் என்று இவர்களிடம் உளறியது வம்பாகப் போனது.
ட்யூஷன் முடிந்து அவள் எழுந்தபோதுதான் கவனித்தேன். எல்லோரும் தாவணியில் ஒரு இடத்தில் மட்டும் “பின்” குத்தியிருக்க அவள் மட்டும் இரண்டு இடத்தில் குத்தியிருந்தாள்.

நான் நோட்டில் கிறுக்கினேன் :
“அவள் மனதை மூடிக்கொண்டு
என் மனதைத் திறந்து விட்டாள்”
நோட்டைப் பிடுங்கிய மதன் சிரித்துவிட்டுக் கத்தினான் “இங்கப் பாருங்கடா ஒரு கழுத , கவித எழுத ஆரம்பிச்சுடுச்சு”



(தொடரும்...)
பகுதி 2

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Sunday, May 14, 2006

யார் முதலில்?

நம் காதலை
நீ முதலில் சொல்வாய் என நானும்
நான் முதலில் சொல்வேன் என நீயும்
காத்திருக்கிறோம்.
யாரோ ஒருவர் சீக்கிரம் சொல்லுங்களேன்
எனத் தவிக்கிறது
நம் காதல்!


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.