Wednesday, April 30, 2008

தண்டவாளப்பயணம் (சங்கம்னா ரெண்டு போட்டிக்காக)

இரண்டு வாரப் பணிக்காக மும்பைக்கு வந்த எனக்கு வேலை செய்யும் நிறுவனமே 'கார்ரோட்' அருகே தங்குமிடம் கொடுத்திருந்தது. காலையிலும் மாலையிலும் மும்பையின் மின்தொடருந்தில் திருவிழாக்கூட்டமிருக்கும் என்று நண்பன் சொன்னது சரிதான். அதுவும் அன்று திங்கட்கிழமைவேறு. எனது அலுவலகம் இருக்கும் லோயர் பரேலுக்கு ஒரு சீட்டை வாங்கிக்கொண்டு நடைமேடைக்கு வந்து நின்றுகொண்டேன். 'கார் ரோட்' டுக்கும் 'லோயர் பரேலு'க்கும் இடையில் தான் இனி தினசரி பயணம். என் நிறத்தைப் பார்த்தோ என்னவோ 'தம்பி தமிழா?' என்று கேட்டு அறிமுகமானார் அவர். நாற்பது வயதிருக்கும். பேச்சில் இன்னும் கிராமம் இனித்தது. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்ததில் அவரைப் பற்றி தெரிந்துகொண்டது – 'பெயர்- பழனிச்சாமி.  ஊரை விட்டு வந்து பதினைந்து வருடங்கள் ஆகின்றன; மனைவி + இரண்டு பிள்ளைகளுடன் மும்பையில் வசிக்கிறார்; இங்கு வேறு யாரும் உறவினர்கள் இல்லை. மும்பைக்கு வந்தபிறகு இன்னும் ஊருக்கே சென்றதில்லை'. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பதினைந்து ஆண்டுகளாக ஊர்ப்பக்கமே போகாமல் இருந்திருக்கிறார். நான் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே, ஊரிலிருந்து வந்தபிறகு எல்லாத் தொடர்புகளும் விட்டுப் போய்விட்டதாக, தனக்கோ/எனக்கோ சொன்னார்.அவரிடம் செல்பேசிகூட இருந்ததாகப் படவில்லை.அதன்பிறகு நானாக எதுவும் கேட்டுக்கொள்ளாமலிருந்தேன். வண்டி மாதுங்காவைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது.கேட்க வேண்டாம் என்று நாகரிகம் தடுத்தும் ஒரு சந்தேகத்தில் அவருடையது காதல் திருமணமா என்று மட்டும் கேட்டேன்.ஆமாம் என்று சொல்லி, வெளியே பிற கட்டடங்களுடன் ஒட்டாமல் தனித்து நின்ற ஒரு கட்டடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறருடைய காதல் கதைகளை விளக்கமாக கேட்பதில் எனக்கு விருப்பமில்லாததால் ( வேறென்ன பொறாமைதான் ), அத்துடன் அமைதியானேன். லோயர் பரேலில் இறங்கும்போது அவரைப் பார்த்தால், கண்களில் ஒரு சோகம் வந்திருந்தது. கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டேனோ? ஒருவேளை ஊரைவிட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டிருப்பார்களாயிருக்கும். பிறிதொருநாள் சந்தித்தால் பேச்சுவாக்கில் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்றபடி அலுவலகம் நோக்கி நடக்கத் துவங்கினேன்.

நாந்தாங்க பழனிச்சாமி. பம்பாய்க்கு வந்த இந்த பாஞ்சு வருசத்துல பழசெல்லாம் மறந்துட்டுதான்  பொழப்பு ஓடிட்டிருக்கு. அன்னைக்கு ரயில்ல மொத தடவ பாத்தப்பவே  காதல் கல்யாணமானு பட்டுனு அருளு கேட்டுட்டாப்ல. எனக்கு பழசெல்லாம் நாவத்துக்கு வந்து கண்ணெல்லாங்கூட  கொஞ்சம் கலங்கிப் போயிருச்சு. அதுக்கப்புறம் ஒருநா சாயங்காலம் மறுநடைல பாத்துகிட்டப்ப, அத நெனப்பு வச்சிகிட்டு மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டாப்ல. எனக்கு ரொம்ப சங்கடமாப் போயிருச்சுங்க. என்ன கேட்கக் கூடாதத கேட்டுட்டாப்ல? ஊர்லையே இருந்திருந்தா என்னென்னப் பேச்செல்லாம் எங்க காதுல விழுந்திருக்கும்? தங்கத்தையும் சேர்த்துதான் சொல்றேன். என்னயவிட அவளுக்குதான் ரெண்டுபங்கு பேச்சும்,ஏச்சும். 'மொத தடவ நா அவளப் பாத்தது ஒரு தைப் பொங்க சமயத்துலதான். அப்ப எங்கூரு வயசுப்பயலுங்க ஒரு பத்து பேருக்கு மேல புலவர் வகுப்புக்குப் பக்கத்ல இருக்ற பிள்ளாபாளையத்துக்கு போயிகிட்டு இருந்தோம். கருப்பத்தூர்ல இருந்து வந்து சொல்லி கொடுத்துட்டு இருந்தாரு ஒரு புலவரு. தைப்பொங்கலன்னைக்கு அவுரு தோட்டத்துக்கு எங்களயெல்லாம் கூப்ட்ருந்தாரு. அவுரு வூட்டுக்குப் பக்கத்துலையே சால போட்டுக் குடியிருந்தாங்க அவுரோட பங்காளி வீட்டுப் பொறந்தவளும் அவுங்க மவ தங்கமும். தங்கத்தோட அப்பாரு சிறுவயசுலயே தவறிட்டாப்ல. கண்ணாலங்காச்சியெல்லாம் மாமம் மொறைல அந்த புலவரு பாத்து செய்றதுதான். நாங்க போனப்ப, வாசல்ல இருந்த மரத்துல காப்புக்கட்டுக்கு வேப்பந்தள ஒடிச்சிகிட்டு இருந்தா தங்கம். அவளுக்கு தங்கம்னு பேரு வெச்சது பொருத்தந்தான். ஒரு நா பொழுது அங்கிட்டு இருந்துட்டு வந்ததுலயே தெரிஞ்சுபோச்சு, அவ கொணமும், வேல செய்யற பாங்கும். சிரிச்ச மொவமா கலையா இருந்தா. எனக்கு அவளப் பாத்துட்டு வந்ததுல இருந்து கிறுக்குப் பிடிச்சாப்ல ஆயிருச்சு.' என்னோடக் கதைய சொல்லிகிட்டே வந்ததுல கார் ரோட் டேசன் வந்ததையே நாங்கவனிக்காம விட்டுட்டனே… 'மீதிக்கதைய நாளைக்கு வந்து கேட்டுக்கறேன்'னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டாப்ல அருளு. ஹும்….இனிமே பாக்கறோமோ இல்லையா. யாரு கண்டா?

அன்று மாலை அவராக அவருடையக் கதையை சொல்லத் துவங்கியதும் வேண்டாமென்று சொல்ல மனமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேனா இல்லை அடுத்தவர் அந்தரங்கத்தை அறிந்துகொள்ளும் ஆழ்மன எண்ணமா என்று புரியவில்லை. ஆனால் கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தது. அவர் மனைவி தங்கத்தை முதல் தடவை பார்த்ததும் காதல் வந்ததைச் சொன்னவர், யார் முதலில் காதலைச் சொன்னது என்பதை சொல்வதற்குள் நான் இறங்கிவிட்டேன். அடுத்து மீண்டும் ஒரு திங்கட்கிழமை காலை எதிர்பாராதவிதமாக பழனிச்சாமியை சந்தித்தபோது, பேச்சினூடாக அவர் கதையை நினைவூட்டினேன்.நான் எதிர்பார்த்த படியே இவர்தான் காதலை முதலில் சொல்லியிருக்கிறார். இருவரும் ஒரே சாதி என்பதும், திருமணம் செய்துகொள்ளும் முறையிலான உட்பிரிவுதான் என்பதும் அவருக்கு தைரியம் கொடுத்திருந்தாலும், தங்கம் என்ன சொல்லுவாரோ என்கிற தயக்கம் இருந்திருக்கிறது. அவருடன் பழகுவதற்காகவே புலவர் வீட்டில் நடக்கும் அரசியல் கூட்டங்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும் போய்வந்திருக்கிறார். தங்கத்திடம் கொஞ்சம் பேசிப்பழகியதும் நேரடியாக விருப்பத்தைச் சொல்லிவிட, அவர் முதலில் தயங்கினாலும் பிறகு ஒப்புக் கொண்டிருக்கிறார். தங்கத்தின் அம்மாவிடமும், அந்த புலவரிடமும் உடனே பேசி அவர்களும் இவருடையக் குடும்பத்தினரிடம் பேச வருவதாக சொல்லியிருக்கிறார்கள். எல்லாம் நல்லபடியாக நடப்பதாக தெரிந்தாலும் அப்புறம்தான் பிரச்சினை துவங்கியதாக சொன்னார். அவருடனேயே கதை கேட்டுக்கொண்டே போய்விட்டு இன்னொரு வண்டியில் திரும்பிவிடலாமா என்று யோசிக்கும்போது லோயர்பரேல் வந்து விட்டதாக அவரே நினைவுபடுத்தவும் மனமில்லாமல் இறங்கவேண்டியதாகப் போய்விட்டது.

இன்னோரு நா கால வண்டியில போவும்போது கார் ரோட் டேசன்ல அருளு நின்னுகிட்டிருந்தாப்ல. வெளிய கையாட்டுனேன். பாத்துட்டு என்னோட பெட்டியிலயே ஓடி வந்து ஏறிகிட்டாப்ல. சௌக்கியமா இருக்கீங்களான்னு கேக்றதுக்கும் புதுசா ஒரு ஆளு கெடச்சா சந்தோசமாத்தான் இருக்கு.'ஒங்க கதைய நீங்க முடிக்கவே இல்லையே'ன்னு உரிமையோட கேட்டுகிட்டு, 'இன்னைக்காவது எறங்கறதுக்குள்ள எல்லாக் கதையும் சொல்லிடுங்க'ன்னு சிரிச்சாப்ல. 'ஹும்…சொல்றேன்'னு நானுஞ்சிரிச்சேன். “தங்கத்த எனக்குப் புடிச்சிருக்குன்னு அவங்கம்மாகிட்ட நாம்பேசுன மக்யாநாளு, தங்கத்தோட அம்மாவும், அந்த புலவரும் எங்க தோட்டத்துக்கு வந்து எங்க வூட்ல பேசுன அன்னைக்குதான் எங்களுக்கு சனி புடிச்சுது. எப்பவோ செத்துப் போன எங்கப் பாட்டனுக்கு ரெண்டு சம்சாரமாம். கலியாணமான கொஞ்ச நாள்ளையே மொத சம்சாரம் தவறிப் போயிருக்கு. அப்புறம் கட்ன ரெண்டாவது சம்சாரத்துக்குக்குப் பொறந்ததுதான் எங்க அம்மாவெல்லாம். செத்துப் போன அந்த மொதக் கெழவியோட கெளைல வந்தவருதான் தங்கத்தோட அப்பா. மொறையெல்லாம் கணக்குப் பாத்தா தங்கத்தோட அப்பாவும், நானும் பங்காளி மொறையாவுது. அதாவது தங்கத்துக்கு நாஞ் சித்தப்பா மொற! பெரியவங்க வுடுவாங்களா? ரெண்டு தலமொறைக்கு முன்னாடி இருந்ததெல்லாம் கணக்குப் பண்ணவேணாம்னு அந்த புலவரு பேசறாரு. ஆனா தங்கத்தோட அம்மா அதுக்கு ஒத்துக்கவே இல்ல. அன்னைக்கு நடந்ததெல்லாம் ஒரே சண்டையா முடிஞ்சு போச்சு. அதுக்கப்புறம் ஒருநா என்னையும் தங்கத்தையும் தனியா கூப்ட்டு பேசினாரு அந்த புலவரு. ரெண்டு பேரும் வலுசா கட்டிக்கனும்னு எங்க ஆசய சொன்னோம். 'சரி ஊரு ஒத்துக்காது. வெள்ளிக்கெழம விடியக்காலைல அய்யருமலைல வச்சி தாலிய கட்டிட்டு வந்துருவோம். நானும் வர்றேன். தாலி கட்டிட்டு வந்தபிற்பாடு ஊரெதுவும் பேசாது'னு சொல்லி எங்களுக்கு தெகிரியம் சொன்னாரு. அதே மாதிரி வெள்ளிக்கெழம அய்யருமலைக்குப் போனோம்.” கதைய சொல்லிகிட்டே வந்தேன், ஆனா அன்னிக்கும் கதைய முடிக்கிறதுக்குள்ள லோயர் பரேல் டேசன் வந்துருச்சு. “அண்ணே சாயங்காலம் வந்து அந்த படிக்கட்டு பக்கத்துலயே நிக்கிறேன் . நீங்க கையாட்டுங்க உங்க வண்டியிலேயே ஏறிக்கிறேன்”னு கத்திகிட்டே ஓடிட்டாப்ல.

ஒரே சாதியில் காதலித்தும் கூட ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை முளைத்துவிடுகிறது. ஊருக்குத் தெரியாமல் திருமணம் என்றாரே… இறுதியில் என்னதான் நடந்திருக்கும்? போகிற வண்டியிலேயே நின்றிருந்தது என் பார்வை.மாலையில் தெரிந்துவிடப் போகிறது என்று நினைத்தபடி அலுவலகம் செல்லத் தொடங்கினேன். இங்குள்ள வங்கி அலுவலகத்துக்கு நான் வந்திருந்தது என் நிறுவனம் செய்யும் திட்டப்பணியின் தகவல்நுட்ப உதவிக்காக. முதலில் ஒரு மாதத்துக்கும்,தேவைப்பட்டால் இன்னொரு மாதம் நீட்டித்துக் கொள்ளலாம் என்ற அளவிலும் இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.. ஆனால் ஒரு மாதத்துக்குள்ளாகவே வங்கியின் தகவல்நுட்பப் பிரிவின் பிரச்சினைகள் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததால் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் என்னை திரும்ப அழைத்துக் கொள்வதாக சனிக்கிழமை இரவே மடல் வந்திருந்தது. அடுத்த நாள் காலை டெல்லியில் உள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடக்கும் மற்றொரு திட்டப்பணி தொடர்பான சந்திப்புக்காக நானும் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அன்று மதியமே டெல்லிக்கான விமான பயணச்சீட்டும் இணைக்கப்பட்டிருந்தது. மதியம் 1 மணிக்கு விமானம். வங்கியில் இருந்தவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அறைக்குத் திரும்பினேன். மாலையில் பழனிச்சாமி என்னைத் தேடக்கூடும். நான் மும்பையைவிட்டுப் போய்விட்டேன் என்பதை அவருக்குத் தெரிவிக்காமல் வந்த குற்றவுனர்ச்சியைவிட அவர் கதையின் முடிவு என்ன என்ற குழப்பம் அதிகமாக இருந்தது. விமானத்தில் ஏறியபின்னரும் மனம் பழனிச்சாமி திருமணத்திலேயே நின்றுகொண்டிருந்தது. ஊரை விட்டே ஒதுக்கி வைத்திருப்பார்களா? இவர்களாக ஓடி வந்திருப்பார்களா? குழந்தைகளுடன் திரும்பிப் போயிருந்தால் அவர்களுடையப் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்களா? மீண்டுமொருமுறை மும்பை வந்தால் பழனிச்சாமியை தேடிப் பிடித்து கேட்டுவிடலாம் என்ற சமாதானத்துடன் ஜன்னலில் பார்த்தேன். விமானம் மும்பையை விட்டு விலகிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை மும்பைக்கு வராமலாப் போய் விடுவேன்?

அன்னைக்கு சாயங்காலம் திரும்பி வந்தப்ப லோயர் பரேல் டேசன்ல படிக்கட்டுக்குப் பக்கத்துல எட்டிப் பாத்தா அருளக் காணோம். அப்புறம் நெதம் காலைல வர்றப்ப கார் ரோட்லையும் , சாயங்காலம் போறப்ப லோயர் பரேல்லயும் எட்டிப் பாத்துகிட்டேதான் போறேன். ஒரு மாசத்துக்கு மேல ஆயிப் போச்சு. பம்பாய்ல ரெண்டு மாசம்தான் வேலன்னு சொல்லிகிட்டு இருந்தாப்ல. வேல முடிஞ்சு போயிருக்கும். போன் நெம்பரு கூட வாங்கி வச்சுக்காமப் போயிட்டேன். பம்பாய்க்கு வந்தபொறவு எங்க கதைய சொல்லியழுவக் கூட ஒரு நாதியத்துப் போனோம். தாலி கட்டிகிட்டு வந்தா ஏத்துக்குவாங்கன்னு கட்ன தாலியோட அவங்கம்மா கால்ல விழுந்துடலாம்னுதான் அய்யருமலைல தாலிகட்னகழுத்தோட ஊருக்குப் போனோம். வெளிய வந்து பாத்துட்டு வூட்டுகுள்ளப் போயிட்டாங்க அவங்கம்மா. சுத்திப்போடதாஞ் செந்தண்ணி கரச்சுட்டு வர்றதுக்கு போறாங்கன்னு நின்னுகிட்டு இருந்தோம். நடு வூட்ல தூக்குலத் தொங்குவாங்கன்னு யாரும் நெனைக்கவேயில்லியே. அன்னைக்கு ஊர்சனமெல்லாம் எங்களப் பேசாத பேச்சில்ல. அழுதழுது ஓஞ்சு போனா தங்கம். எங்கூட்டுக்கும் போகப் புடிக்காம பம்பாய்க்கு ரயிலேறி வந்து பதனஞ்சு வருசம் ஆகிப்போச்சு. சாதி சனம்னு யாருமில்லாம தனியாவே வளருதுங்க புள்ளைங்க ரெண்டும். பொறந்த ஊரு, சாதி சனம்னு இப்பதான் மனசு அல்லாடுது. இன்னொரு தடவ அருளு பம்பாய்க்கு வந்தா, வூட்டுக்குக் கூட்டிட்டுப் போய் புள்ளைங்ககிட்ட மாமான்னு சொல்லிக் காட்டனும். அருளு இன்னொருதரம் பம்பாய்க்கு வராமலாப் போயிடுவாப்ல?

பின்குறிப்புகள் :

1. இதனை வ.வா.சங்கத்தின் சங்கம்னா ரெண்டு போட்டிக்கு இணைக்கிறேன்.
2. இது தமிழ்மண நட்சத்திர வாரத்தின்போது பதிவிடுவதற்காக எழுதப்பட்டது. ஆனால் முழுமையாகாமல் இருந்தது, வவாசங்கத்தின் போட்டிக்காக முழுமையாக்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது.

42 comments:

  1. மண்வாசனையோடு கதை அருமையா இருக்கு.......!!! :-)

    ReplyDelete
  2. நன்றிங்க ஸ்ரீ. அது எப்படி எல்லா பதிவுக்கும் முதல் ஆளா வந்துட்றீங்க?

    ReplyDelete
  3. :-) morning open pannen ungal post update aagiirundhathu.....!!
    apparam yenna padichittu comment ezhuthitten.......!!

    ReplyDelete
  4. yen neenga vera yaaroda comment-avathu first varanumnu expect panningala..?!?

    ReplyDelete
  5. வணக்கம் அருள்,
    நல்ல நடை.
    பழனிசாமியின் பேச்சு என்னை கிராமத்திற்கு கொண்டு சென்றது.
    போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.


    Regards,
    Asha Peter
    Bangalore

    ReplyDelete
  6. நல்லா வந்திருக்கு கதை.. என்ன தான் இருந்தாலும் அந்த கிராமத்து பாசை பகுதி தான் ரொம்பவும் பிடிச்சிக்குது.

    ReplyDelete
  7. ஸ்ரீ, சும்மாதான் கேட்டேன். நீங்களா கேள்வி கேட்டு ஒரு கும்மிய ஆரம்பிச்சுடாதீங்க! :)

    ReplyDelete
  8. வாழ்த்துகளுக்கு நன்றிங்க ஆஷா.
    முதல் வருகைனு நெனைக்கிறேன் :)

    ReplyDelete
  9. @முத்துலெட்சுமி

    நன்றிங்க்கா. கிராமத்து வழக்குதான் எனக்கும் எழுத எளிது. யோசிக்காம எழுதிடலாம் பாருங்க..

    ReplyDelete
  10. சிறப்பாக வந்திருக்கிறது.
    இரண்டு போட்டிக்கு சரியான கதை.
    வெற்றிபெற வாழ்த்துகள் அருள்..!

    ReplyDelete
  11. கிராமத்து வாசனையில் சூப்பர் கோ...

    ReplyDelete
  12. பம்பாய்ல இதான் நடந்துதா மாப்பி? அட்ராசிட்டி கதை. ரொம்ப சூப்பர். முடிவை இப்பவே அறிவிச்சிட சொல்லிடட்டுமா? கதை சுழலும் பாங்கு அழகு. அது சரி ஒரு டவுட்டு. இந்த கதைல ரெண்டு இருக்குறது கதாபாத்திரங்களிலா? இல்லை ஒரு பாட்டனார் ரொண்டு பொண்டாட்டி கட்டுனாரே அந்த ரெண்டா? ;) எதுவா இருந்தா என்ன கதை டாப்பு. நீ நடத்து மாப்பு.

    ReplyDelete
  13. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க நாடோடி இலக்கியன்!

    ReplyDelete
  14. நன்றி ஜேகே! நமக்கு அதுதான் எளிமையா வருது

    ReplyDelete
  15. ரெண்டு கதாபாத்திரங்கள்
    ரெண்டு மனைவிகள்
    ரெண்டு தண்டவாளங்கள்
    எத்தனை ரெண்டு?
    பரிசு பெற வாழ்த்துக்கள்!!!!!!!

    ReplyDelete
  16. நன்றி ஸ்ரீ.

    பம்பாய் அனுபவம் சும்மா ஒரு சூழலுக்காக.
    ரெண்டு கதாபாத்திரங்கள் கத சொல்லுது. ஆனா ஒருத்தரோட முடிவு இன்னொருத்தருக்கு தெரியாமலே கத முடிஞ்சிடும். ஆனா வாசிக்கிறவங்களுக்கு ரெண்டு பேரோட முடிவும் தெரியும். இப்படிதான் நான் யோசிச்சு ரெண்டு போட்டிக்கு அனுப்பிருக்கேன். அதனாலதான் தலைப்பும் ரயில் பயணம் னு வைக்காம தண்டவாளப்பயணம்னு வச்சேன்.

    மத்தபடி அந்த தாத்தாவுக்கு ரெண்டு பொண்டாட்டிங்கறதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான் ;)

    ReplyDelete
  17. \\அதனாலதான் தலைப்பும் ரயில் பயணம் னு வைக்காம தண்டவாளப்பயணம்னு வச்சேன்.//
    ஆகா என்ன ஒரு யோசனை.. பாட்டெழுத மட்டுமில்லப்பா.. நீங்க கதையெழுதவும் போலாம் போலயே சினிமாவில்.. பேட்டி குடுக்கும் போது இப்படித்தா சொல்லுவாங்க அவங்க :))

    ReplyDelete
  18. மாப்பி....கதை ரொம்ப அருமையாக வந்திருக்கு ;))

    வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  19. வாழ்த்துகளுக்கு நன்றிங்க வெயிலான்.

    ReplyDelete
  20. \ஆகா என்ன ஒரு யோசனை.. பாட்டெழுத மட்டுமில்லப்பா.. நீங்க கதையெழுதவும் போலாம் போலயே சினிமாவில்.. பேட்டி குடுக்கும் போது இப்படித்தா சொல்லுவாங்க அவங்க :))\

    ஆகா...அக்கா, காலைலதான் ஒரு தங்கச்சி கும்ம ஆரம்பிச்சாங்க. இப்போ நீங்களுமா? நான் இந்த வெளாட்டுக்கு வரல :)

    ReplyDelete
  21. \மாப்பி….கதை ரொம்ப அருமையாக வந்திருக்கு ;))
    வாழ்த்துக்கள் \

    வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி கோபி!

    ReplyDelete
  22. நல்லாயிருக்கு தல...

    ReplyDelete
  23. எங்க ஊரு பாஷ நல்லாவே எழுதி இருக்கீங்க...

    ReplyDelete
  24. கதையும் நல்லா எழுதுறீங்க அருள்
    அன்புடன் அருணா

    ReplyDelete
  25. நன்றிங்க வசந்தகுமார். ஆனா நீங்க எந்த ஊரு பாசைய சொல்றீங்க?

    ReplyDelete
  26. நன்றிங்க அருணா. ஆனா கதைகள் அதிகமா எழுதினதில்லங்க

    ReplyDelete
  27. இது கொங்கு பாசையான்னு எனக்கு தெரியலங்க. அது வேற மாதிரியில்ல இருக்கும்? இது கரூர் பக்கம் எங்க கிராமத்துல பேசற நடை!

    ReplyDelete
  28. பின்னூட்டம் போடுற நிலைமையிலேயே இல்லாம போயிட்டேன், என்னெனமோ நாபகம், சொல்லனும் நிறைய சொல்லனும், ஒரு பதிவா..

    ReplyDelete
  29. என்னங்க இளா இப்படி சொல்லிட்டீங்க?
    ம்ம்ம்...பழனிச்சாமியோட கதை உண்மைக்கதைதான். 40 வருசத்துக்கு முன்னாடி கோயம்புத்தூர் பக்கத்துல நடந்தது. அத இங்க கொஞ்சமா மாத்தி எழுதியிருக்கேன்.

    ReplyDelete
  30. Arumaiyana Story...
    Poottiyil Vetripera Vazththugal....



    Senthil,
    Bangalore.

    ReplyDelete
  31. பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க செந்தில்!

    ReplyDelete
  32. தல நான் உங்கள் ரசிகன்...
    வேர்ட் பிரஸ்சிற்கு மாறின பதிவு எப்ப போடுறிங்க...

    ReplyDelete
  33. //பிறருடைய காதல் கதைகளை விளக்கமாக கேட்பதில் எனக்கு விருப்பமில்லாததால் ( வேறென்ன பொறாமைதான் ) //
    ஹா..ஹா...:)))))) சேம் பிளட்..:)) கலக்கிட்டிங்க மாமேய்..:)

    ReplyDelete
  34. @king,

    ரசிகனா? நண்பன்னு சொல்லுங்க போதும் :)
    ஏற்கனவே ஒரு பதிவு போட்டேனே. இன்னும் விளக்கமா வேணும்னா கொஞ்சம் பொறுங்க. விடியோ பதிவு முடியுமான்னு பாக்கறேன்.

    ReplyDelete
  35. /ஹா..ஹா…:)))))) சேம் பிளட்..:)) கலக்கிட்டிங்க மாமேய்..:)/

    நன்றிங்க ரசிகன்.

    ReplyDelete
  36. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. gr8 innovative story narrating style
    and touching theme
    hats off..arun rk..iflex..mumbai

    ReplyDelete
  38. இந்த கதை முதல் பரிசு'க்கு தேர்வாகி இருக்கு.... வாழ்த்துக்கள்.... :)

    ReplyDelete
  39. போட்டியில் வெற்றி பெற்றதற்க்கு வாழ்துக்கள் அருட்பெருங்கோ

    ReplyDelete
  40. வாழ்த்துகளுக்கு நன்றிங்க ராஜ்.

    நன்றிங்க அருண். இன்னும் மும்பைல தான் இருக்கீங்களா?

    வாழ்த்துகளுக்கு நன்றிங்க இராம்.

    வாழ்த்துகளுக்கு நன்றிங்க ரம்யா!

    ReplyDelete