Thursday, February 08, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 80

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

8.படர் மெலிந்து இரங்கல்


எப்படித்தான் இருகையால்
பொத்திவைத்தாலும்
விரலிடுக்கில் வழிகிற நீரைப் போல
வெளிவந்துவிடுகிறது.
என் காதல்!


மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

இக்காமநோயைப் பிறர் அறியாமல் யான்மறைப்பேன்; ஆனால், இது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் மிகுவது போல் மிகுகின்றது.



உன்னைப் பார்த்து முதன்முதலாய்
வெட்கம் வந்தபோது
காதல் வந்ததை உணர்ந்தேன்!
உன்னிடம் காதலைச் சொல்ல வந்தாலோ
மறுபடி வெட்கம்தானடா வருகிறது!


கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலு நாணுத் தரும்.

இக்காதல் நோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை. நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.



காதலும் நாணமும்
இரட்டைக் குழந்தைகளா?

காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்
நோனா வுடம்பி னகத்து.

துன்பத்தைப் பொறுக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருபக்கமும் தொங்குகின்றன



கடலைக் கரையில் இருந்து வேடிக்கை பார்க்கும் சிறுவனைப் போல
காதலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
முழுவதுமாய் உள்ளிழுத்துக் கொண்டு சிரிக்கிறாய்.

காமக்கடல் மன்னு முண்டே யதுநீந்து
மேமப் புணைமன்னு மில்.

காமநோயாகிய கடல் இருக்கின்றது; ஆனால் அதை நீந்திக் கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.


இன்பத்துள் இன்பமா?
துன்பத்துள் துன்பமா?
காதல்.

துப்பி லெவன்செய்வார் கொல்லோ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்.

இன்பமான நட்பிலேயே துயரத்தி வரச்செய்ய வல்லவர், துன்பம் தரும் பகையை வெல்லும் வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?


காதலின்பம் – மலை.
பிரிவுத்துயர் – கடல்.
அதிகமெது,
உயரமா? ஆழமா?

இன்பங் கடலற்றுக் காமமற் றஃதடுங்கால்
துன்ப மதனிற் பெரிது.

காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.



காதல் - கடல்.
நீந்தினால் கரையேரலாம்.
பிரிவு - கரையில்லாத கடல்.
நீந்தலாம்…அவ்வளவுதான்!

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே யுளேன்.

காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.



நான் துணைதான்!
பரிவில் உனக்கும்…
பிரிவில் இரவுக்கும்…

மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா
வென்னல்ல தில்லை துணை.

இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமலிருக்கின்றது.



கூடிக்களித்த பொழுதுகளில் ஓடிப்போகிறது.
நரக வேதனையில் நானிருக்க
நகர மறுக்கிறது.
உன்னைவிடக் கொடுமையானது இந்த இரவு.

கொடியார் கொடுமையில் தாங்கொடிய விந்நாள்
நெடிய கழியு மிரா.

பிரிந்து துன்புறுகின்ற இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையைவிடத் தாம் கொடியவை.



என் இதயத்தைப் போல
உன் கூடவேப் போயிருந்தால்
என்னிடமிருந்து அழவேண்டிய பாவமில்லை
இந்தக் கண்களுக்கு.

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்.

காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல செல்ல முடியுமானால் என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

இது காதல் பூக்கும் மாதம் - 90

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

6 comments:

  1. கோ, அந்தக் காதலும் நாணமும் ரெட்டைக் குழந்தைதாங்க. ஒரு சங்கப்பாட்டு. காதல் வந்துருச்சு. ஆனா காதலன் பக்கத்துல இல்ல. இப்ப என்ன செய்யனும்? பொலம்பனும். காமத்துக்குப் பொலம்பனும். அதுதான் இது.

    கன்றும் உண்ணாது
    கலத்தினும் படாது
    நல்லான் தீம்பால்
    நிலத்து உக்காங்கு
    எனக்கும் ஆகாது
    என் ஐக்கும் உதவாது
    பசலை உணீஇயர் வேண்டும்
    திதலை என் மாமைக் கவினே

    பொருள் புரியலையா?

    பால் இருக்கே பால். அது ஒன்னு கன்னுக்குட்டி குடிக்கனும். இல்லைன்னா கலத்துல சேமிச்சு வைக்கனும். அப்படியில்லாம நிலத்துல சிந்தீருச்சுன்னா?

    அது மாதிரி இந்த ஒடம்பு இருக்கே. அது எனக்கும் உதவாது. என் காதலனுக்கும் உதவாமல் இங்க இருக்கு. இப்படிப் பசலை வந்து வாட்டுறதுக்கா இந்த அழகான மாநிற கவின்மிகு மேனி.

    ReplyDelete
  2. ராகவன்,

    அந்தப் பாட்டும் படிச்சிருக்கேனே...
    படத்துல கூட வந்திருக்கே...

    அகநானூறுக்குள்ளப் புகுந்தா இன்னும் காதல் கிடைக்கும்!!!

    இப்போதைக்கு இப்படி வச்சுக்கறேன்...

    கன்றும் உண்ணாது
    கலத்தினும் படாது
    நல்லான் தீம்பால்
    நிலத்து உக்காங்கு
    எனக்கும் ஆகாது
    என் ஐக்கும் உதவாது
    கண்ணீர் சிந்துதே
    என்காதல் சிசு!!!

    ReplyDelete
  3. "கூடிக்களித்த பொழுதுகளில் ஓடிப்போகிறது.
    நரக வேதனையில் நானிருக்க
    நகர மறுக்கிறது.
    உன்னைவிடக் கொடுமையானது இந்த இரவு."

    ம்ம்... இரவின் மடியில் பிரிவின் துயர் மிகவும் கொடுமையானதுதான்.
    அதை மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள்.


    "என் இதயத்தைப் போல
    உன் கூடவேப் போயிருந்தால்
    என்னிடமிருந்து அழவேண்டிய பாவமில்லை
    இந்தக் கண்களுக்கு."

    அடடா!... இது கூட அற்புதம்தான்.
    ம்ம். நீங்கள் சொல்வது சரிதான் அருள்!

    ReplyDelete
  4. வாங்க சத்தியா,

    /"கூடிக்களித்த பொழுதுகளில் ஓடிப்போகிறது.
    நரக வேதனையில் நானிருக்க
    நகர மறுக்கிறது.
    உன்னைவிடக் கொடுமையானது இந்த இரவு."

    ம்ம்... இரவின் மடியில் பிரிவின் துயர் மிகவும் கொடுமையானதுதான்.
    அதை மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள்./

    ம்ம்ம்... இரவில் தானே இருண்டு போகிறது உலகும், மனமும்!


    /"என் இதயத்தைப் போல
    உன் கூடவேப் போயிருந்தால்
    என்னிடமிருந்து அழவேண்டிய பாவமில்லை
    இந்தக் கண்களுக்கு."

    அடடா!... இது கூட அற்புதம்தான்.
    ம்ம். நீங்கள் சொல்வது சரிதான் அருள்! /

    பிரிவின் போது அழுவதற்கு மட்டும் தான் கண்கள் படைக்கப்பட்டனவோ என்னமோ...

    நன்றி சத்தியா...

    ReplyDelete
  5. எல்லாமே நல்லா இருக்கு. ஜிராவின் பொருத்தமான மறுமொழியுடன் இன்னும் சுவை.

    ReplyDelete
  6. / எல்லாமே நல்லா இருக்கு./

    நன்றி சேதுக்கரசி...

    / ஜிராவின் பொருத்தமான மறுமொழியுடன் இன்னும் சுவை./

    அவர்தான் ரொம்ப பெரிய ஆள் ஆச்சே.... :-)

    ReplyDelete