Monday, February 05, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 50

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

5. காதல் சிறப்புரைத்தல்
பசும்பால் தருகிறாய். தேனும் தருகிறாய்.
இரண்டும் கலந்து தாஎன்றால்

முத்தமிட்டு விட்டு ஓடுகிறாய்!


பாலொடு
தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.

மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர், பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

என்னுயிரின் உருவம் நீ!
உன்னுயிரின்
உருவம் நான்!

நம்
காதலின் உருவம்?

வேறென்ன
குழந்தைதான்!
உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன
மடந்தையொ
டெம்மிடை நட்பு.

இம்மடந்தையோடு என்னிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள் எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

நீயென் கண்ணில் இருக்கிறாயென்றேன்.
எந்தக்
கண்ணில்? என்கிறாய்.

அகக்கண்ணில்!


கருமணியுட்
பாவாய்நீ போதாயாம் வீழுந்
திருநுதற்
கில்லை யிடம்.

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய்விடும்! யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!

நீ என்னைவிட்டுப் பிரிகிறபோதும்
கையற்ற
நிலையில் நான்.
உயிர்
பிரிவதற்கு சாட்சியாய்

உயிரே
நிற்கிறது.


வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாதல்
அதற்கண்ணள்
நீங்கு மிடத்து.

ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள்; பிரியும் போது உயிருக்குச் சாவு போன்றவள்.

உன்னை மறந்தால் மறுபடி நினைப்பேனா?
தெரியவில்லை

எனக்குதான்
உன்னை மறக்கவேத் தெரியாதே!


உள்ளுவன்
மன்யான் மறப்பின் மறப்பறியே
னொள்ளமர்க்
கண்ணாள் குணம்.

போர் செய்யும் கண்களை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும்; ஆனால் ஒருபோதும் மறந்ததில்லையே!

என் கண்ணுள்ளிருக்கும் நீ
இமைக்கிற
போது மட்டும் வருந்துகிறாய்

என்னிமைக்கு
வலிக்குமோ என!


கண்ணுள்ளிற்
போகா ரிமைப்பிற் பருவரார்
நுண்ணியரெங்
காத லவர்.

எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போகமாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்தமாட்டார்; அவர் அவ்வளவு நுட்பமானவர்.

மையிடுகிறாயா?
உன்
கண்ணுள்ளிருக்கும் எனக்கு
வேலிபோடுகிறாயா?


கண்ணுள்ளார்
காத லவ்ராகக் கண்ணும்
மெழுதேங்
கரப்பாக் கறிந்து.

எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார். ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.

நீ சூடாக எதுவும் உண்பதில்லை.
உன்னுள்
நான்!

நான்
வெந்நீரில் குளிப்பதே இல்லை.

என்
ஒவ்வோர் அணுவிலும் நீ!


நெஞ்சத்தார்
காத லவராக வெய்துண்ட
லஞ்சுவதும்
வேபாக் கறிந்து.

எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார்; ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்.

உன் கண்ணுள்ளிருக்கும் நான் மறைகிறேனெனெ
இமைக்காமல்
இருக்காதே.
உன்னைத் தூங்கவிடவில்லையென
உலகம் என்மேல் பழி சுமத்தும்.


இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே
யேதில
ரென்னுமிவ் வூர்.

கண் இமைத்தால் காதலர் மறைந்துபோதலை அறிகின்றேன். அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

உன்னைப் பிரிந்துவிட்டேனா?
வசிப்பதுதானடி
இங்கே

வாழ்வதெல்லாம்
உன்னுள்ளே!


உவந்துறைவ ருள்ளத்து ளென்று மிகந்துறைவ
ரேதில
ரென்னுமிவ் வூர்.

காதலர்
எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார்; ஆனால் அதையறியாமல் பிரிந்து வாழ்கின்றார், ‘அன்பில்லாதவர்என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.


இது காதல் பூக்கும் மாதம் - 60

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

4 comments:

  1. கொடுத்தாலும் கொடுத்தாங்க 'காதல் முரசு'ன்னு இப்படி பொழந்துக் கட்டுறீங்க... முரசு பிஞ்சுறப் போகுது...

    ReplyDelete
  2. ஒவ்வொன்றும் அருமை அருட்..

    \\நீ சூடாக எதுவும் உண்பதில்லை.
    உன்னுள் நான்!
    நான் வெந்நீரில் குளிப்பதே இல்லை.
    என் ஒவ்வோர் அணுவிலும் நீ!
    \\

    அவளுக்கு அவன்
    அவனுக்கு அவள் என்று பின்னிபினைந்து இருக்கிறது உங்களின் கவிதை மொழிகள்

    உங்களின் கவிதையும், காதலும் இன்னும் வளர்க...வளர்க.

    ReplyDelete
  3. வாங்க ஜி,

    / கொடுத்தாலும் கொடுத்தாங்க 'காதல் முரசு'ன்னு இப்படி பொழந்துக் கட்டுறீங்க... முரசு பிஞ்சுறப் போகுது.../

    ஏய்யா இப்படி நெகட்டிவா பேசறீங்க??? ச்சே ச்சே

    ;-)

    ReplyDelete
  4. வாங்க கோபி,

    /அவளுக்கு அவன்
    அவனுக்கு அவள் என்று பின்னிபினைந்து இருக்கிறது உங்களின் கவிதை மொழிகள்/

    + அவர்களுக்கு காதல் என்றும் :)))

    /உங்களின் கவிதையும், காதலும் இன்னும் வளர்க...வளர்க./

    வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா!!!

    ReplyDelete