Monday, February 19, 2007

ஒரு காதல் பயணம் - 8

உன்னைக் காணும் வரை,
காதல் எனக்கு “கனவு காணும்” விஷயம் மட்டுமே!
ஆனால் இப்போதோ,
என் கனவுகளில் எல்லாம் காதலே நிறைகிறது!


ஒரு மாலைப்பொழுதில் என் வருகைக்காக
அந்தப் பூங்காவில் நீ காத்திருக்கிறாய்.

அதுவரை அந்தப் பூங்காவின் பழையப் பூக்களையேப் பார்த்து சலித்த வண்டுகள், உன்னைக் கண்டதும் உன்னையே சுற்றி சுற்றி வருகின்றன.

உன் ஒருத்தியால் அதை சமாளிக்க முடியாமல் எழுவதற்கு நீ எத்தனிக்கையில், உன்னருகே வந்து சேருகிறேன் நான்.

பெரு வண்டைப் பார்த்ததும் சிறு வண்டுகள் எல்லாம் சிதறி ஓடுகின்றன.

கையோடுக் கூட்டி வந்தக் காதலை உன்னிடம் கொடுத்து விட்டு,
உன்னருகே அமருகிறேன்.

உன்னிடம் தாவிச் சென்ற என் காதல் பல வருடம் பழகியதைப் போல
உன் மடியேறி ஒய்யாரமாய் உட்கார்ந்து கொண்டது.

அதனைக் கொஞ்சிக் கொண்டே என்னிடம் கேட்கிறாய்,
“ இன்னைக்கு புராணம், எதப் பத்தி?”.

உன் மடியில் இருந்தக் காதலைத் தூக்கி
என் தோளில் போட்டுக்கொண்டு சொன்னேன்,
“அதிலென்ன சந்தேகம் உனக்கு? எப்பவும் போலக் காதலப் பத்தி தான்!”.

பொய்க் கோபமாய் என்னை முறைத்தபடி, காதலை இழுத்து நம் இருவருக்கும் நடுவில் உட்கார வைத்தாய்.
நம் இருவரையும் முறைத்தபடி இருந்தது காதல்.

“ஏன்டா… உனக்குக் காதலைத் தவிர
வேறெதுவும் சிந்திக்கத் தெரியாதா?” என்கிறாய்.

“சிந்திக்கத் தெரியாததால தான நேற்றைக்கு இவ்வளவுப் பிரச்சினையும்!” புலம்புகிறேன் நான்.

இன்றைக்கொரு புதுக் கதை கிடைக்கப் போகிறதென உற்சாகமாகிற நீ, “அந்தக் கதையையுந்தான் சொல்லேன் கேட்போம்!” என்கிறாய்.

அதற்குத்தானே வந்திருக்கிறேன் என்றெண்ணிக்கொண்டு,
சொல்ல ஆரம்பிக்கிறேன்.

“கடந்த ஒரு வாரத்தில் உடல் மெலிந்த மாதிரி இருக்கிறதே என்று, நேற்று என்னுடைய எடையை சரி பார்த்தால் – அதில் ஓர் அதிர்ச்சி!”

“ஏன்? பத்து கிலோ குறைஞ்சுட்டியாக்கும்?” எனப் பாவமாய்க் கேட்கிறாய்.

“அது குறைத்துக் காட்டியிருந்தா தான் பரவாயில்லையே!
ஏழு கிலோக் கூட்டியல்லவாக் காட்டியது!”

“அப்படியா? எனக்கொன்னும் அப்படித் தோணலையே!”

“எனக்கும் அதே சந்தேகந்தான், அதான் போய் ஒரு மருத்துவரைப் பார்த்தேன்.
அவரும் எல்லாப் பரிசோதனையையும் பண்ணிட்டு,
இது உடல் சம்பந்தமானப் பிரச்சினை மாதிரி தெரியல,
எதற்கும் ஒரு நல்ல உளவியல் நிபுணரைப் போய்ப் பாருங்கனு சொல்லிட்டார்!”

“ஐயையோ! அப்படின்னா உனக்குப் பித்துப் பிடிச்சிருச்சா?” என சிரிக்கிறாய்.

அது தான் ஒரு வாரமாப் பிடிச்சிருக்கே, என மனதுக்குள் நினைத்துக்கொண்டு,
"எனக்குத் தெரிந்த ஒரே உளவியல் நிபுணர் – காதல் தேவதை தான?
நேரா அதுகிட்ட போனேன்.
என் பிரச்சினையக் கேட்ட காதல் தேவதை, என்னோட இதயத்துக்குள் இருந்து இந்தக் காதலை அப்படியே அள்ளி வெளியேப் போட்டு விட்டு, என்னிடம் “எவ்வளவு நாளாக் காதலிக்கிற ?” னுக் கேட்டது.
“ஒரு வாரமா” னு சொன்னேன்.

“ஒவ்வொரு நாளும் உன் இதயத்துக்குள்ள உற்பத்தியாகும் காதலை எல்லாம் உன் காதலியிடம் தந்துட்டியா?” - மறுபடியும் கேட்டது.
“ம்” - தலையாட்டினேன்.
வார்த்தையெதுவும் வரவில்லையென்றாலே
அது பொய்யெனத் தெரியாதா அதற்கு?

“நீ உன் காதலை தினமும் அவளிடம் தந்திருந்தால், உன் இதயத்தில் ஏன் இவ்வளவு சேர்ந்து கிடக்கிறது?” என சொல்லிவிட்டு,
“இதோப் பாரப்பா, உடம்புலக் கொழுப்பையும் இதயத்துலக் காதலையும் சேர்த்து வைக்கக்கூடாது!
அது ரெண்டுக்குமே நல்லதல்ல! சேருகிறக் காதலையெல்லாம் உன் காதலியிடம் அந்தக் கணமே சேர்த்து விடு” என்று சொல்லி,
என்னை அனுப்பி வைத்தது.
அது சொன்னதும் உண்மைதான்.

“இந்த ஏழு நாட்களாக நான் உன்னிடம் கொட்டியக் காதல் எல்லாம் ஏழு கிராம் கூட இருக்காது.
உன்னிடம் சொல்லாமல் நான் எனக்குள் சேர்த்து வைத்ததுதான் இவ்வளவும்!”
என சொல்லிக் காதலைத் தூக்கி உன் கையில் கொடுத்து விட்டு,
“இனிமேல் காதல் சேர சேர அப்படியே உன்னிடம் அனுப்பி விடுகிறேன்” என்று சொல்லி விட்டு எழுகிறேன் லேசான இதயத்தோடு.

நீயும் இரு கைகளால் காதலைத் தூக்கிப் பார்த்து விட்டு,
“ இதுவேப் பத்து கிலோ தேறும் போலிருக்கே!” என மகிழ்ச்சியாகிறாய்.

காதலைத் தூக்கி உன் தோளில் போட்டுக் கொண்டு நீயும் கிளம்புகிறாய்.

உன்னைக் கழுத்தோடு கட்டிக் கொண்டு செல்லமாய்ச் சிரிக்கிறது காதல்.

நம் கதையைக் கேட்டு விட்டு, நாளை விடியலில் பூக்க வேண்டிய அந்தப் பூங்காவின் மொட்டுக்கள் எல்லாம்
இன்று அந்தியிலேயேப் பூக்கின்றன!

( காதல் பயணம் கண்டிப்பாகத் தொடரும் )

அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

12 comments:

  1. different thought, very nice.

    ReplyDelete
  2. வாங்க ப்ரியா,

    / different thought, very nice./

    நன்றி!!!

    ReplyDelete
  3. ஹீம்ம்... ஹீம்ம்ம்... தொடருங்கோ உங்கப் பயணத்தை...

    பயணிகளான எங்களுக்கு அனுமதி இலவசம்தானே...

    ReplyDelete
  4. இனி உன் பதிவுகளில் பின்னூட்டமிட என்னிடம் பாராட்டு மொழிகள் மிச்சமில்லை. நல்ல ரசிகன் நீ..

    ReplyDelete
  5. ஆஹா...ஆஹா...அருள் உங்கள் கற்பனை மிகவும் அருமை (ஆமா..இது கற்பனை தானா இல்ல :)))

    மிகவும் ரசித்தேன்...அடுத்த பயணத்தை பார்பதற்கு காத்திருக்கும் பயணி..

    ReplyDelete
  6. வாங்க ஜி,

    / ஹீம்ம்... ஹீம்ம்ம்... தொடருங்கோ உங்கப் பயணத்தை.../

    தொடருகிறேன்... ஆனால் எவ்வளவு வேகமாக என்று தான் தெரியவில்லை!

    /பயணிகளான எங்களுக்கு அனுமதி இலவசம்தானே.../

    கண்டிப்பாக இலவசம் தான்... :-)

    ReplyDelete
  7. வாங்க தேவ்,

    / இனி உன் பதிவுகளில் பின்னூட்டமிட என்னிடம் பாராட்டு மொழிகள் மிச்சமில்லை. நல்ல ரசிகன் நீ../

    இனிமே பின்னூட்டம் போட முடியாதுன்னு சொல்லிட்டுப் போறீங்களா? இருங்க இருங்க ...

    ReplyDelete
  8. வாங்க கோபி,

    / ஆஹா...ஆஹா...அருள் உங்கள் கற்பனை மிகவும் அருமை (ஆமா..இது கற்பனை தானா இல்ல :)))/

    கற்பனை கற்பனையைத் தவிர வேறில்லை!!!

    /மிகவும் ரசித்தேன்...அடுத்த பயணத்தை பார்பதற்கு காத்திருக்கும் பயணி../

    உங்கள் ரசனையோடு பயணம் இனிதே தொடரும்...

    ReplyDelete
  9. அருட்பெருங்கோ

    பிரமாதம், போங்கள்

    கவிதைத் தருணங்கள் சரிவர அமைந்து விட்டன போலிருக்கிறது.

    தொடருங்கள்.

    நண்பன்

    ReplyDelete
  10. wonderful. felt so nice when I went through your lines.. Excellent skill Mano. Hats off to you. Keep it up and make us happy too.

    ReplyDelete
  11. வாங்க நண்பன்,

    / அருட்பெருங்கோ

    பிரமாதம், போங்கள்

    கவிதைத் தருணங்கள் சரிவர அமைந்து விட்டன போலிருக்கிறது.

    தொடருங்கள்.

    நண்பன்/

    பிர மாதமா? காதல் பூக்கும் மாதம்!!! :-)

    ஆம் நண்பரே தருணங்களும் ஒரு காரணம் தான்!!!

    ReplyDelete
  12. வாங்க சத்தீஷ்,

    /wonderful. felt so nice when I went through your lines.. Excellent skill Mano. Hats off to you. Keep it up and make us happy too./

    உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றீ...

    வாழ்த்துக்களில் தான் வளர்கிறேன் என்று நினைக்கிறேன்...

    அப்புறம் மனோகரன் எங்க அப்பா பேரு அவரு சண்டைக்கு வந்துடப் போறாரு!!! ;-)

    ReplyDelete