14. பொழுதுகண்டு இரங்கல்
உன்னை நினைக்கவைத்தே
என்னைக் கொல்கிறதே!
இது மாலையல்ல…
என் மரணத்தில் விழும் மாலை!
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!
அழுதழுது கண்ணெல்லாம் சிவந்து கிடக்கிறதே…
என்னைப் போல காதலியைப் பிரிந்துவருந்துகிறதா?
இந்த மாலைப் பொழுது.
புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?
உன்னோடு இருந்த காலங்களில்
பூனையைப் போல இருந்த மாலைப் பொழுது
நீ போன பின் புலியாய்ப் பாய்ந்து கொல்கிறது!
பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.
பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.
நீயில்லாத போது
மாலை அழகாய் வருவதில்லை...
மலையளவு துயராய் வருகிறது!
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்.
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.
புலரும்போதெல்லாம் காதலோடு மலரவைத்துவிட்டு
சாயும்போது மட்டும், உன்னைக் காணாத துயரில்
என்னை சாய்த்துவிட்டே சாய்கிறது
இந்தப் பொழுது!
காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.
மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ``காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?'' என்று புலம்புகிறது.
மாலைப் பொழுது…
இனிதிலும் இனிது - உன்னோடு இருந்தால்!
கொடிதிலும் கொடிது - நீயில்லையென்றால்!
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.
மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.
காலையில் அரும்பி
பகலில் மொட்டாகி
மாலையில் மலர்கின்றன
என் காதல் துயரங்கள்!
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.
நீ இருந்தால்
இரவின் இடிகளும் எனக்கு இன்னிசை…
நீ பிரிந்தால்
மாலையின் மெல்லிசையும் எனக்கு
கொல்லிசை!
அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.
இந்த மாலைப் பொழுது
என்னை மயக்கவே செய்கிறது…
நீயிருந்தாலும், பிரிந்தாலும்!
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.
நீ வருவாயென
நான் தேக்கி தேக்கி வைத்தாலும்,
என்னுயிரை கரைத்துக் கொண்டே இருக்கிறது...
இந்த மாலைப் பொழுது!
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயுமென் மாயா உயிர்.
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.
------------------------------------
15. உறுப்புநலன் அழிதல்
என் கண்கள் – மலர்கள்.
உன் கண்கள் – வண்டுகள்.
தேக்கி வைத்த தேனெல்லாம்
கண்ணீராய் வீணாகிறது!
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.
பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.
கண்ணீரும் ஒரு நாள் வற்றிப் போய்
செந்நீர் உதிர்க்கப் போகிறது
என் கண்கள்!
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.
ஓராண்டாய் ஏற்றி வைத்த உடம்பும்
உன்னைப் பிரிந்த ஒரு நாளில்
இளைத்துப் போனது!
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.
இது காதல் பூக்கும் மாதம் - 150
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
No comments:
Post a Comment