Tuesday, February 27, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 190

இது காதல் பூக்கும் மாதம் -முதல் பகுதி


19.
குறிப்பறிவுறுத்தல்

எல்லாவற்றையும் பங்கிடுவோம் என்றாய்.
நான் காதலைக் கொண்டு வந்தேன்.

நீ பிரிவைக் கொண்டு வந்தாய்.

கொண்டு வந்த பிரிவை என்னிடம் கொடுத்து விட்டு,

காதலை மட்டும் நீ வாங்கிக் கொள்ளவே வில்லை!

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

நீ பேரழகி என்று நான் பிதற்றுவதெல்லாம் பொய்தான்.
ஆனால் அதைக் கேட்டதும் வெட்கப்படுகிறாயே

அப்போதே அது உண்மையாகி விடுகிறது.

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.

நீ கலந்து கொள்ளும் அழகிப் போட்டியில் மட்டும்
போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்

உன்னை!

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு.

மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

நீ சிரிக்கும் போதெல்லாம்
வழுக்கி வழுக்கி விழுகிறேன்

உன் கன்னக் குழியில்.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

என் ஆயுள் முழுவதுக்குமான
ஆனந்தம் முழுவதும் ஒளிந்திருக்கிறது

உன் அரை நொடிச் சிரிப்பில்!

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

“மீண்டும் சந்தித்தால்
கட்டிப் பிடிப்பாயா?” என்றால்,

“ம்ம்ம்… மீண்டும் பிரியாமலிருக்க

பிடித்துக் கட்டுவேன்” என்கிறாள்.

இவளைக் கட்டிப் பிடித்துக் கட்ட வேண்டும்

காதலால்!

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.

நீண்டப் பிரிவுக்குப் பிறகு என்னைக் கண்டதும்,
உன்னை விட்டுப் பிரியப் போகிற கவலை…

உன் ஆடைகளுக்கு!

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!

“என்னைப் பிரிந்திருந்த போது எப்படி உணர்ந்தாய்?” என்றவளிடம்
“சொர்க்கத்தில் இருந்ததைப் போல” என்றதும் அழுகிறாள்.

உயிர் போனால்தான் சொர்க்கத்துக்குப் போக முடியும் என்பது

இவளுக்குத் தெரியாதோ?

நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.

நீ சிகப்பாம்.
நான் கருப்பாம்.

கேலி பேசுகிறார்கள்.

உன்னையேத் தொடரும்

உன் நிழல் பின் எப்படியிருக்கும்?

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

“பிரிந்து விடு! பிரிந்து விடு!”
என்று ஆயிரம் வார்த்தைகளில் சொல்லிவிட்டு

ஒற்றைப் பார்வையில் உயிர் போகக் கெஞ்சுகிறாளே

இவளை விட்டு எப்படிப் பிரிய?

பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

இது காதல் பூக்கும் மாதம் - 200

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

ஒரு நொடிக் கவிதைகள் - 3




அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Friday, February 23, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 180

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

18. அவர்வயின் விதும்பல்

உன்னையே எதிர்பார்த்து
என் கண்ணெறிந்த கனலால்
வீதியில் தீ.


வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.

என் மனதுக்குத் தெரியாமல்
உன்னை நானும் மெதுவாய் விலக்க…
விலகிப் போகிறது என் உயிர்.
வேகமாய் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறேன்…
உன்னையும், என்னுயிரையும்!


இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.

நீ வரும் வரை
நுழையக்கூடாதென உத்தரவிட்டிருக்கிறேன்.
என் வீட்டு வாசலில்
மன்றாடிக் கொண்டிருக்கும்
மரணத்திடம்!

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.

உள்ளேயிருந்தால் உன் வருகையைப்
பார்க்க முடியாமல் போய்விடுமாம்.
மேலே வந்து
கண்வழியே எட்டி எட்டி பார்க்கிறது
என் இதயம்.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.

கருப்பு வெள்ளையாய்
இருக்கும் என் கண்களும்
உனைக் கண்டால்
வண்ணங்களாய்ப் பூக்கும்!


காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு.

கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.

நீண்ட பிரிவுக்குப் பிறகு சந்தித்ததும்,
கட்டிப் பிடித்து முத்த மழை பொழிகிறாள்.
“எங்கிட்ட பேசவே மாட்டேன்னு சொன்ன?” என்று கேட்டால்
“பேச மாட்டேன்னு தான சொன்னேன்” என்று
சுவரில் எழுதிக் காட்டுகிறாளே… இவளை என்ன செய்ய?
என் பங்குக்கு நானும் கொஞ்(சு)சம் முத்தமிடுவதைத் தவிர…


வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்.

பிரிந்தவர் கூடும்பொழுது
வார்த்தை கை விடுமாம்…
சரி விடு!
முத்தம் கை கொடுக்கும்!

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்.

கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.

வெற்றி பெற்று
உன்னிடம் வாழ்த்துப் பெறுவது இன்பம்தான்!
ஆனாலும் தோற்கும்போதெல்லாம்
ஆதரவாய் நீ தலை கோதுகிறாயே…
அந்த சுகத்துக்கே
எல்லாவற்றிலும் தோற்றுப் போகலாம்!

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்.

நாம் சேர்ந்திருந்த பொழுதுகளில்
நொடிமுள் வேகத்தில் மணிமுள்ளும்
பிரிந்திருக்கும் பொழுதுகளில்
மணிமுள் வேகத்தில் நொடிமுள்ளும் சுற்றுகின்றன.
இந்த கடிகாரத்தைப் பழுது பார்க்க வேண்டும்!

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.

நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.

தூக்கத்திலும்
தூக்கிக் கொஞ்சுகிறேன்
நீ தரும் துயரங்களை!

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்?

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, February 21, 2007

இவர்களுக்காகவே...

தவமாய்த் தவமிருந்து
தான் பெற்ற மகளும்
தாயாகிவிட்டப் பரவசம்
அம்மாவின் முகத்தில்…

அள்ளிக் கொஞ்சிட
அழகாய் ஒரு பேத்தி
அம்சமாகப் பிறந்ததில்
அப்பாவுக்கும் ஆனந்தம்…

மடியில் கிடத்தி
பாசத்தோடு சீர் செய்ய
மருமகள் கிடைத்துவிட்ட
மனநிறைவில் அண்ணன்…

தன்னை சித்தியென்றழைக்க
புதியதோர் ஜீவன்
பூத்துவிட்ட களிப்பில்,
பூரித்திருக்கும் தங்கை…

இப்படி...
எனக்குப் பிறந்தக் குழந்தையின் சிரிப்பில்
மகிழ்ச்சியைக் கொண்டாடும் இவர்களுக்கு,
கேட்டுவிட வேண்டாம்…

இவர்களுக்காகவே
எனக்குள் நான் கொன்று போட்ட
என் காதலின் அழுகை!


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, February 19, 2007

ஒரு காதல் பயணம் - 8

உன்னைக் காணும் வரை,
காதல் எனக்கு “கனவு காணும்” விஷயம் மட்டுமே!
ஆனால் இப்போதோ,
என் கனவுகளில் எல்லாம் காதலே நிறைகிறது!


ஒரு மாலைப்பொழுதில் என் வருகைக்காக
அந்தப் பூங்காவில் நீ காத்திருக்கிறாய்.

அதுவரை அந்தப் பூங்காவின் பழையப் பூக்களையேப் பார்த்து சலித்த வண்டுகள், உன்னைக் கண்டதும் உன்னையே சுற்றி சுற்றி வருகின்றன.

உன் ஒருத்தியால் அதை சமாளிக்க முடியாமல் எழுவதற்கு நீ எத்தனிக்கையில், உன்னருகே வந்து சேருகிறேன் நான்.

பெரு வண்டைப் பார்த்ததும் சிறு வண்டுகள் எல்லாம் சிதறி ஓடுகின்றன.

கையோடுக் கூட்டி வந்தக் காதலை உன்னிடம் கொடுத்து விட்டு,
உன்னருகே அமருகிறேன்.

உன்னிடம் தாவிச் சென்ற என் காதல் பல வருடம் பழகியதைப் போல
உன் மடியேறி ஒய்யாரமாய் உட்கார்ந்து கொண்டது.

அதனைக் கொஞ்சிக் கொண்டே என்னிடம் கேட்கிறாய்,
“ இன்னைக்கு புராணம், எதப் பத்தி?”.

உன் மடியில் இருந்தக் காதலைத் தூக்கி
என் தோளில் போட்டுக்கொண்டு சொன்னேன்,
“அதிலென்ன சந்தேகம் உனக்கு? எப்பவும் போலக் காதலப் பத்தி தான்!”.

பொய்க் கோபமாய் என்னை முறைத்தபடி, காதலை இழுத்து நம் இருவருக்கும் நடுவில் உட்கார வைத்தாய்.
நம் இருவரையும் முறைத்தபடி இருந்தது காதல்.

“ஏன்டா… உனக்குக் காதலைத் தவிர
வேறெதுவும் சிந்திக்கத் தெரியாதா?” என்கிறாய்.

“சிந்திக்கத் தெரியாததால தான நேற்றைக்கு இவ்வளவுப் பிரச்சினையும்!” புலம்புகிறேன் நான்.

இன்றைக்கொரு புதுக் கதை கிடைக்கப் போகிறதென உற்சாகமாகிற நீ, “அந்தக் கதையையுந்தான் சொல்லேன் கேட்போம்!” என்கிறாய்.

அதற்குத்தானே வந்திருக்கிறேன் என்றெண்ணிக்கொண்டு,
சொல்ல ஆரம்பிக்கிறேன்.

“கடந்த ஒரு வாரத்தில் உடல் மெலிந்த மாதிரி இருக்கிறதே என்று, நேற்று என்னுடைய எடையை சரி பார்த்தால் – அதில் ஓர் அதிர்ச்சி!”

“ஏன்? பத்து கிலோ குறைஞ்சுட்டியாக்கும்?” எனப் பாவமாய்க் கேட்கிறாய்.

“அது குறைத்துக் காட்டியிருந்தா தான் பரவாயில்லையே!
ஏழு கிலோக் கூட்டியல்லவாக் காட்டியது!”

“அப்படியா? எனக்கொன்னும் அப்படித் தோணலையே!”

“எனக்கும் அதே சந்தேகந்தான், அதான் போய் ஒரு மருத்துவரைப் பார்த்தேன்.
அவரும் எல்லாப் பரிசோதனையையும் பண்ணிட்டு,
இது உடல் சம்பந்தமானப் பிரச்சினை மாதிரி தெரியல,
எதற்கும் ஒரு நல்ல உளவியல் நிபுணரைப் போய்ப் பாருங்கனு சொல்லிட்டார்!”

“ஐயையோ! அப்படின்னா உனக்குப் பித்துப் பிடிச்சிருச்சா?” என சிரிக்கிறாய்.

அது தான் ஒரு வாரமாப் பிடிச்சிருக்கே, என மனதுக்குள் நினைத்துக்கொண்டு,
"எனக்குத் தெரிந்த ஒரே உளவியல் நிபுணர் – காதல் தேவதை தான?
நேரா அதுகிட்ட போனேன்.
என் பிரச்சினையக் கேட்ட காதல் தேவதை, என்னோட இதயத்துக்குள் இருந்து இந்தக் காதலை அப்படியே அள்ளி வெளியேப் போட்டு விட்டு, என்னிடம் “எவ்வளவு நாளாக் காதலிக்கிற ?” னுக் கேட்டது.
“ஒரு வாரமா” னு சொன்னேன்.

“ஒவ்வொரு நாளும் உன் இதயத்துக்குள்ள உற்பத்தியாகும் காதலை எல்லாம் உன் காதலியிடம் தந்துட்டியா?” - மறுபடியும் கேட்டது.
“ம்” - தலையாட்டினேன்.
வார்த்தையெதுவும் வரவில்லையென்றாலே
அது பொய்யெனத் தெரியாதா அதற்கு?

“நீ உன் காதலை தினமும் அவளிடம் தந்திருந்தால், உன் இதயத்தில் ஏன் இவ்வளவு சேர்ந்து கிடக்கிறது?” என சொல்லிவிட்டு,
“இதோப் பாரப்பா, உடம்புலக் கொழுப்பையும் இதயத்துலக் காதலையும் சேர்த்து வைக்கக்கூடாது!
அது ரெண்டுக்குமே நல்லதல்ல! சேருகிறக் காதலையெல்லாம் உன் காதலியிடம் அந்தக் கணமே சேர்த்து விடு” என்று சொல்லி,
என்னை அனுப்பி வைத்தது.
அது சொன்னதும் உண்மைதான்.

“இந்த ஏழு நாட்களாக நான் உன்னிடம் கொட்டியக் காதல் எல்லாம் ஏழு கிராம் கூட இருக்காது.
உன்னிடம் சொல்லாமல் நான் எனக்குள் சேர்த்து வைத்ததுதான் இவ்வளவும்!”
என சொல்லிக் காதலைத் தூக்கி உன் கையில் கொடுத்து விட்டு,
“இனிமேல் காதல் சேர சேர அப்படியே உன்னிடம் அனுப்பி விடுகிறேன்” என்று சொல்லி விட்டு எழுகிறேன் லேசான இதயத்தோடு.

நீயும் இரு கைகளால் காதலைத் தூக்கிப் பார்த்து விட்டு,
“ இதுவேப் பத்து கிலோ தேறும் போலிருக்கே!” என மகிழ்ச்சியாகிறாய்.

காதலைத் தூக்கி உன் தோளில் போட்டுக் கொண்டு நீயும் கிளம்புகிறாய்.

உன்னைக் கழுத்தோடு கட்டிக் கொண்டு செல்லமாய்ச் சிரிக்கிறது காதல்.

நம் கதையைக் கேட்டு விட்டு, நாளை விடியலில் பூக்க வேண்டிய அந்தப் பூங்காவின் மொட்டுக்கள் எல்லாம்
இன்று அந்தியிலேயேப் பூக்கின்றன!

( காதல் பயணம் கண்டிப்பாகத் தொடரும் )

அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Sunday, February 18, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 170

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

17. நிறையழிதல்


நீயிருந்தவரை உனக்கு அடங்கிக் கிடந்துவிட்டு
நீ பிரிந்ததும் என்னையே அடக்குகிறது
காதல்.


காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது.


நள்ளிரவிலும் விழித்தெழிந்து
கண் கசக்கினால்
நீ தான் தெரிகிறாய்.

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.


காதலும் தும்மலும்
ஒன்றுதான் என்றேன்.
ஒரு முறை தும்மிவிட்டு
விலகி விட்டாய்.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.


இலை மறை காயாக இருந்துவிட்டு
இப்போது பறவை கொத்தும் கனியாகிவிட்டது
நம் காதல்!


நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
மறையிறந்து மன்று படும்.

மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.


அடித்துவிட்டு ஓடுகிற குழந்தையைத்
திருப்பியா அடிக்கிறோம்?
ஒரு முத்தம்தானே கொடுக்கிறோம்?
நீ - குழந்தை.
என் காதல் – முத்தம்.

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று.

தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை.


நீ விலகியதும்
உன்னிடமிருந்து என்னிடம் ஓடி வருகிறது காதல்.
என்னிடமிருந்து உன்னிடம் ஓடிப் போகிறது என் இதயம்!


செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.


‘முத்தமிடுகையில்
இதழ்களைத் திறக்கிறாய்…ஆனால்
கண்களை மூடிக் கொள்கிறாய்’
என்று சொன்னதுதான் தாமதம்…
கண்களையும் அகலத் திறந்து
ஒரு முத்தம் கொடுத்துவிட்டு
முகத்தையே மூடிக் கொண்டாய்!


நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.


“என்னிடம் என்ன பிடித்திருக்கிறது” என்றாய்.
“உன்னிடம் எதுவும் பிடிக்கவில்லை” என்றேன்.
திரும்பிக் கொண்டாய்.
“மொத்தமாய் உன்னையேப் பிடித்த பிறகு
உன்னிடம் எது பிடிக்கிறதென தனியாக எப்படி
சொல்ல?”


பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?


கழுத்தைப் பிடித்து
சண்டையிட வந்தவன்
உன்னைப் பார்த்ததும்
கட்டிப்பிடிக்கிறேன்…
உன் வெட்கத்தை!

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.


நீ விலகியதால்
காட்டுத்தீயாய் எரிந்து கொண்டிருந்த என் கோபம்
உன்னுடைய ஒரு துளி கண்ணீரில் அணைந்தது.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?

இது காதல் பூக்கும் மாதம் - 180

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Saturday, February 17, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 160

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

16. நெஞ்சொடு கிளத்தல்


காதல் நோய்க்கு
காரணம் யாரெனக் கேட்டால்
உன்னைக் காட்டியது…
மருந்து என்னவென்று கேட்டாலும்
உன்னையேக் காட்டுகிறது
உன்னைப் போல தான் குறும்பு செய்கிறது
இந்த மனமும்!


நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து.

எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?


உன்னை எதிர்பார்த்து,
காற்றிருக்கும் வரை
காத்திருக்கும்…
இந்த மனம்!

காத லவரிலர் ஆகநீ நோவது
பேதமை வாழியென் நெஞ்சு.

அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.


என் கவிதைகள்
எதனையும் வாசிக்காமல்
உன்னையே யாசித்துக் கொண்டிருக்கிறது
என் காதல்!

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?


தங்களை விட்டுவிட்டு
உன்னோடு போய்விட்டதாம்…
மனதிடம் சண்டையிடுகின்றன
கண்கள்!


கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன.


‘உன்’ , ‘என்’ என்பன போய்
‘நம்’ ஆனதால்…
உன்னையே நம்மையே
நினைத்திருக்கிறது என் நம் மனம்!


செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?


உன்னை நோக்கி வரும்
என் சின்னக் கோபங்களும்
உன் புன்னகையைப் பார்த்ததும்
மன்னிப்போடு மண்டியிடுகின்றன!

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.

நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?


இந்த மனமும்
உன்னைப் பற்றியே
புலம்பிக் கொண்டிருந்தால்…
என்னைப் பற்றி
நான் யாரிடம் புலம்ப?



காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு.

நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.


“பிரிந்து விட்டாள்”, “பிரிந்து விட்டாள்” என்று புலம்பிக் கொண்டே
உன் பின்னேப் போய்க் கொண்டிருக்கிறதே இந்த இதயம்…
இனியெப்படி நான் வாழ்வது?

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.

நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.


உன்னைத் தொலைத்து விட்டு,
இப்போது உன்னைத் தேடியே
நானும் தொலைந்து போகிறேன்.


உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?


என் எடையும்
உன் எடைக்கு சமமாகி விட்டது!
மனதில் உன்னை சுமக்கும் போதும்…


துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.

இது காதல் பூக்கும் மாதம் - 170

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, February 16, 2007

ஒரு நொடிக் கவிதைகள் - 1


மனதில் பூகம்பம்.
மோதியது,
ஒரு பூக் கம்பம்!

உன் பூவிதழ்.
முத்த
அழைப்பிதழ்!

ஒரு முத்தமிடு.
பயப்படாமல்...
அல்லது
பையப் படாமல்!

ஒரு போர்வை.
உள்ளே
ஒரு போர் வை!

ஏன்
காதலித்தேன்?
என்
காதலி தேன்!

ஏய் அழுகுணி
அழுகையிலும்
அழகு நீ!

திருமணம் மறுத்தாய்.
இரு மனம் அறுத்தாய்.

என் மரணம்
சாதாரணம்.
காதலின் மரணம்
மா ரணம்!

காதலி,
காதல் ஈ.
என்னைக் காதலி!

இதயத்தைக்
கிழித்தாள் ஒரு தையல்!
அவளேப் போடட்டும் 'தையல்'!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Thursday, February 15, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 150

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

15. உறுப்பு நலன் அழிதல்



வளையல் கழன்று விழுமளவுக்கு
இளைத்துப் போனதாய் சொல்கிறாய்

உன் வளையலில் நுழையுமளவுக்கு

நான் இளைத்ததை யாரிடம் சொல்ல?


பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள்.


பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து
, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.


உன் அழகை அழிக்கிறது…

எனக்கு அழுகையை அளிக்கிறது…

நம் பிரிவு!


கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள்.


வளையல்களும் கழன்று விழ
, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.


உன்னை நினைத்தே
இளைத்துப் போகிறது உடல்…

உன்னால்தான் இளைக்கிறேனென உலகம் பேச

களைத்துப் போகிறது மனமும்!


தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்

கொடியார் எனக்கூறல் நொந்து.


என் தோள்கள் மெலிவதையும்
, வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.


என் வருத்தங்களை எல்லாம்

உன்னிடம் சொல்ல

வாய் வந்தால் மனம் தடுக்கிறது..

மனம் வந்தால் சொல் மறுக்கிறது!


பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

வாடுதோட் பூசல் உரைத்து.


நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ
?


எல்லோருக்கும் முன்னும்
என் கைகோர்த்தே நடக்கிறாய்…

கூச்சத்தில் நானும் கைகளையெடுத்தால்

அழ ஆரம்பித்து விடுகிறாய்.

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.


இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி
, பசலைநிறம் கொண்டு விட்டது.

காற்று கூட
நம்மைப் பிரிக்கப் பார்க்கிறதென அழுகிறாய்.

வா! காற்றில்லாத கனவுலகம் ஓடிப் போகலாம்!


முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண்.


இறுகத் தழுவியிருந்த போது
, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.


என் கன்னங்களில்
முத்தங்களாய் வழிந்தவள்

கண்ணீராய் வழிகிறாய்


கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.


பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது.


இது காதல் பூக்கும் மாதம் - 160


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

இன்னொரு பிறவியிருந்தால்...

நான் மட்டுமே என்னிடம் பேசிக்கொண்டிருந்த நாட்களில் என்னோடு சேர்ந்து என்னிடம் பேச ஆரம்பித்தவள் நீ. என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத் தள்ளிவிட்டு முழுவதுமாய் என்னிடம் நீயேப் பேசிக்கொண்டிருந்தாய். பின் என் இதயத்தின் நான்கு அறைகளின் எல்லாப் பக்க சுவர்களிலும் எப்போதும் உன் குரலே எதிரொலித்துக் கொண்டு இருக்கவும் செய்துவிட்டு எங்கோ மறைந்துவிட்டாய். இப்பொழுது நான் கூட என்னிடம் பேசுவதில்லை.

கோடைக்கு மட்டும் வந்து தங்கும் பறவையைப் போல வந்த வேகத்தில் மறைந்து விட்டாய். எல்லா காலமும் கோடையாகவே இருந்திருக்க கூடாதா என ஏங்குகிறது மனது. இரவானதும் புற்களில் வந்து படியும் பனித்துளிகளைப் போல என் இதயத்தில் உன் நினைவுகள் படிந்து கொண்டிருக்கிறது. காலையில் வந்து கதிரவன் கேட்டால் திருப்பித்தானேக் கொடுக்க வேண்டும்? நானோ விடியவேக் கூடாதென வேண்டிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கும் கவிதை எழுதத் தெரியுமென்று எனக்கே தெரியவைத்தவள் நீ! உண்மையைச் சொன்னால் இன்று வரை நானும் கவிதையெல்லாம் எழுதியதில்லை. ஆனால் உன்னை நினைத்து என்ன எழுதினாலும் கவிதையாகி விடுகிறது. என்னை கவிஞனாக்கிய நீயேதான் என்னை நடிகனாகவும் மாற்றினாய். நீ பிரிந்ததும் மரித்துப் போனவன், உயிரோடிருப்பதைப் போல நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் கவிதை வந்த அளவுக்கு நடிப்பு வரவில்லை. கவிஞனுக்கும் நடிகனுக்குமிடையே நடந்த போராட்டத்தில் கவிஞன் ஜெயிக்கிறான். ஆனால் காதல் தோற்கிறது!

மை தீர்ந்து போனபின்னும் உதறி உதறி எழுதப்படும் பேனாவின் உலர்ந்து போன நிப்பை போல கண்ணீரெல்லாம் வற்றிய பின்னும் கதறி கதறி அழுது வார்த்தையின்றி வறண்டு கிடக்கிறது இதயம். எல்லாவற்றையும் பேசிவிட வேண்டும் என்கிற உந்துதலில் மொத்த வார்த்தைகளும் சண்டையிட்டு மடிந்து போக எதுவுமேப் பேசாமல் திரும்பியவன், இன்றோ எதையும் பேசிவிடக்கூடாதென்கிற கவலையில் வார்த்தைகளெல்லாம் சோர்ந்து போக மௌனமாய் அழுகிறேன். உன்னிடம் சொல்ல வந்து சொல்லாமல் விழுங்கிய துக்கம் தோய்ந்த வார்த்தைகளால் ரணமேறிக் கிடக்கிறது தொண்டை.

கண்ணில் நீ இருப்பதால், அழும்போது கண்ணீராய் ஓடிவிடுவாயோ என்ற பயத்தில் நீர் வராமல் அழப் பார்த்தேன். கண்ணுக்குள்ளும் வலி! அடக்கி வைத்தக் கண்ணீரெல்லாம் அறுத்துக் கொண்டு ஓட கன்னத்தில் உண்டானது ஒரு கண்ணீர்க் கால்வாய். உன்னைக் காதலித்த போது பறப்பது போல தான் இருந்தது. இப்போதோ கொஞ்சம் பலமாக காற்றடித்தாலும் உண்மையிலேயே பறந்து விடுகிறேன். என் உடையின் எடையை விட உடலின் எடை குறைந்து விட்டது. தண்ணீரில் விழுந்து, ஈரமான தன் இறக்கையை இழுப்பதற்கு முயற்சி செய்து, பின் இறக்கையையே இழந்துவிடுகிற ஈசலைப் போல உன்னிடம் இருந்து என்னை இழுக்க முயன்று என்னையே இழந்து கொண்டிருக்கிறேன் நான். இழந்தாலும் என்ன உன்னிடம் தானே இழக்கிறேன்.

என்னிடம் மட்டுமே நான் பேசிக்கொண்டிருந்த நாட்களில் உன்னிடமும் பேச வைத்தவள் நீ. என்னிடம் பேசுவதெல்லாம் மெதுவாக நின்று போக உன்னிடம் மட்டுமேப் பேசிக்கொண்டிருந்தேன் நான். என்னிடம் கணக்கு வழக்கில்லாமல் வார்த்தைகளைக் கடன் வாங்கிவிட்டு சிரிப்பு வட்டியை மட்டும் செலுத்திக்கொண்டிருந்தவள் அசலோடு போய்விட்டாய். இப்பொழுது என்னிடம் கூட நான் பேசுவதில்லை.

உன் பிரிவின் கொடுமை
ஒரு பிறவியிலேயேத் தாங்க முடியவில்லை!

இன்னொரு பிறவியிருக்குமென்றால்

என் காதலியாய் அல்ல…

எனக்கு மகளாய்ப் பிறந்து விடு!

கொசுறாக ஒரு பாடல் : என்ன படம் என்று தெரியவில்லை வரிகள் பிடித்திருந்ததால் இங்கே :

சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

ஒரு கோடி புள்ளி வச்சு
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சிருச்சு காலம்! காலம்!
இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்…
அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா
பொறக்காமல் போயிடுவேன்…

சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி…
கல்லெறிஞ்சா கலையும்? கலையும்?
நெஞ்சக்குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும்? எரியும்?
நீ போன பாத மேல…
சருகாக கடந்தா சுகமா?
உன்னோட ஞாபகம் எல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரணமா?
கட்டுக் காவல் மீறி வர
காதல் நெஞ்சு கெஞ்சுதே…

சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

மனசுக்குள்ள பொத்தி மறச்ச…
இப்ப எதுக்கு வெளியில சிரிச்ச?
கனவுக்குள்ள ஓடிப் புடிச்ச…
நெசத்திலதான் தயங்கி நடிச்ச…
அடி போடி பயந்தாங்கொள்ளி…
எதுக்காக ஊம ஜாட?
நீ இருந்த மனச அள்ளி
எந்த தீயில் நானும் போட?
உன்னை என்னை கேட்டுகிட்டா காதல் நெஞ்சில் தட்டுச்சு?

சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…
சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, February 14, 2007

பிப்ரவரி 14(3) சிறப்புக் கவிதைகள் :-)

















நான் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை

தமிழ் சிஃபியின் இன்றைய காதல் நாள் சிறப்பிதழில் வெளிவந்திருக்கிறது. தமிழ் சிஃபி ஆசிரியர் அண்ணா கண்ணன் அவர்களுக்கும் , ஷைலஜா அவர்களுக்கும் நன்றிகள்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

காதல் படிக்கட்டுகள் - அறிவுமதி

இது காதல் படிக்கட்டுகள் என்று ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோது அறிவுமதி அவர்கள் எழுதியது. காதல் நாளுக்காக இங்கு....

என் பேனாவிலும்
மை உண்டு
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…
நீ இன்னும்
எழுதிக் கொண்டிருக்கிறாய்.

காதல் – கொடுப்பதன்று. எடுப்பதன்று. ஈர்த்துக் கவிழ்ப்பதன்று. மடக்குதல் அன்று. மடங்குதல் அன்று. எதிர்பார்த்த வெறியில்… எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று. இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

தேடல்கள்… தம் காத்திருத்தலின் தற்செயல் நிமிடத்தில் திகைத்துச் சந்தித்து… உள்திரும்பித் திருப்தியுறுவது. இரு ஞாபகங்கள் விரும்பி, ஒற்றை மறதிக்குள் அமிழ்வது.

அதை அறிய மனசு பூத்திருக்க வேண்டும். நிலா… மொட்டின் மீது வழிந்து விடுகிறது. பூதான் விந்துவாய் வாங்கிக் கொள்கிறது. காதலை வாங்கிக் கொள்ள எத்தனை பேருக்கு வாய்க்கிறது? காதலால் வாழ்ந்துகொள்ள எத்தனை பேருக்கு நேர்மை இருக்கிறது?

அது ஆணுக்கும் பெண்ணுக்குமாக நிகழ்வதா? ஆணுக்குள் இருக்கிற பெண்ணுக்கும் பெண்ணுக்குள் இருக்கிற ஆணுக்குமாக… எதிரெதிர் கண்ணாடிக்குள் நீளும் தொடர் பதிவுகளாய் நிகழ்வது.

அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது… உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது. கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்! வானமற்றுப் போன வாழ்வில் சிறகுகளின் பாடல்கள் ஏது?

இந்தப் பிறவியில் சேர முடியாவிட்டால் என்ன… அடுத்தப் பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்…உடல்களால் இணையாவிட்டால் என்ன… உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று. பொய்!

அது உடல் கடந்து நடப்பதா? உடல்களால் நடப்பது. சம அதிர்வுகளாலான மின்சேர்க்கை அது.

உடல்தொட்டதும் காதலை இழந்துவிடுகிறவர்கள் அதிகம். காதலைத் தொட்டு உடலை அடைபவர்கள் குறைவு – மிக மிக குறைவு.

ஸ்பரிசமும்…புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச் சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும். வாழ்வின் வழிகள் முறித்துக் குளிர்காய்கிற எந்தச் சடங்கும் காதலைச் சிதைக்கும். பொருந்த நெருங்கும் முழுமைக்குள் சந்தேகங்கள் திணித்துச் சிரமம் செய்யும்.

அதனால்தான்… அடிமைச் சமூக அமைப்பில் வரலாற்று வழிநெடுக வாழ்ந்து பழகிவிட்ட நமக்கு, வாழ்க்கை மட்டுமல்லாது காதலும் போராட்டமாகிவிட்டது. அடுத்தவர்களிடமிருக்கிற நம்மை மீட்பதும்…நமக்குள் இருக்கிற அடுத்தவர்களை வெளியேற்றுவதுமான சிக்கல்கள் நிறைந்த போராட்டமிது!

இத்தகைய நெருடல்கள் நிறைந்த வாழ்வில்… காதலைச் சந்தித்ததாக யாரேனும் கூறினால் நம்ப மாட்டேன்! காதலிகளைச் சந்தித்திருக்கலாம். காதலன்களைச் சந்தித்திருக்கலாம். காதலை மட்டும் சந்தித்திருக்கவே முடியாது!

சூழ்ந்தார் துயரங்களை வீழ்த்தி எழாத எவருக்குள்ளும் காதல் எழாது – எழ முடியாது. காதலைப் போல ஒன்று எழலாம். அதுவே காதல் ஆகாது.

காதலென்பது என்ன… இழந்துவிட்டு வருந்துவதா? பிரிந்துகொண்டு அழுவதா? இல்லை…இல்லை.. ‘காதல்… காதல்… காதல்… காதல் போயின் சாதல்… சாதல்… சாதல்…’ சொன்ன பாரதியின் காதல் என்ன ஆனது? அவனது தொகுப்பில் பதினாறு விருத்தங்கள் ஆனது. ஆனாலும் சொல்கிறேன்…அவனது பிள்ளைக் காதல்தான் அவனைப் பிரபஞ்ச காதலனாக்கியது. அந்தத் தனிமனிதனை அதுதான் சமூக மனிதனாக்கியது. அதுதான் அவனிலிருஎந்து எழுந்து இன்னும் நித்திய நெருப்பாக நின்று எரிகிறது. அவனது போராட்ட உணர்வுக்குள் ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி ஊடுருவியிருக்கிறாள் என்கிற உண்மையை உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும் – காதலின் பெருமை!

என்னை
எல்லோருக்கும்

பிடித்திருக்கிறது.

அவனையும்

எல்லோருக்கும்

பிடித்திருக்கிறது.

எங்களைத்தான்

யாருக்குமே

பிடிக்கவில்லை.

மற்றபடி இங்கே காதல் கடிதங்கள் எழுதிக் கொள்பவர்களையும்… பரிசுப் பொருட்களை மற்றிக் கொள்பவர்களையும்.. எச்சில் இனிப்புகளை ருசிபார்ப்பவர்களையுமா காதலர்கள் என்கிறீர்கள்?

ஸ்கூட்டரில் அணைத்துப் போவதையும்… திரையரங்குகளில் உரசிப் படம் பார்ப்பதையும்…கடற்கரை இருளில் மடியில் படுத்துக் கிடப்பதையும் காதல் என்று நம்பச் சொல்கிறீர்கள்?

காதலின் எல்லை திருமணம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவும் உரத்துச் சொல்லவும் இங்கே எத்தனை பேருக்குத் தெம்பு இருக்கிறது? தம் காதலை வெற்றி கொள்ளவும் தம் பிள்ளைகளின் காதலுக்கு வரவேற்புச் சொல்லவும் இங்கே எத்தனை பேருக்குப் பக்குவம் இருக்கிறது?

அதற்குக் காரணம் அவர்களல்ல; நீங்களுமல்ல. நானுமல்ல. குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நாமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை. நமது மனம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக் கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்பிக்கப்பட்ட மனோபாவங்களுக்குள் வாழப்பழகிவிட்டதனாலேயேயே, காதல் செய்தலும் மிகப்பெரிய சமூக குற்றமென நமக்குள்ளாகவே ஒருவன் எழுந்து நம்மை எச்சரிக்கிறான்.

காதல் குற்றமா? சமூக குற்றமா? நமக்குள் இருக்கிற புற மிருகங்களையும் அக மிருகங்களையும் உசுப்பிவிட்டு கடித்துக் குதற்ச்சொல்லி ரத்தம் ரசிப்பவனே அப்படிச் சொல்வான். சமூகச் சூழல்களின் சிலந்தி இழைகளிலிருந்து விடுபட்டு… வாழ்வின் இயல்புத் தளத்தில் இயற்கையின் இயக்கமாகிவிடச் சம்மதிக்கிற எவனும், அதனை அப்படி சொல்ல சம்மதிக்க மாட்டான்!

நாம் பிளந்து கிடக்கும் பிரபஞ்ச பிசிறுகள். காதலில் இணைகிற ஆணும் பெண்ணும் பிரபஞ்ச இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள். அது இருவரின் முழுமையடைதல் இல்லை. முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில் அது ஒரு பகுதி.

இருட்டிக் கொண்டு வருகிற ஏதோ ஒரு மழைக்காலத்தில்… பாறையின் மீது வந்து ஒரு பெண் படுக்கிறாள் என்பது…அந்தப் பாறையிலிருந்து என்றோ தெறித்துச் சிதறிய ஒரு பகுதி மீண்டும் வந்து அதே இடத்தில் பொருந்துவதாக அர்த்தம். அந்தப் பெண்மீது அவலது அந்தக் கணத்தின் முழுச்சம்மதத்தில்…அவளது ஆண் கவிழ்ந்து இயங்கப் போகிறான் என்கிறபோது அவர்கலள் மட்டுமல்ல… அவர்களைச் சுமந்துள்ள பாறையும் சூழ்ந்துள்ள செடிகளூம்…செடிகளில் அமர்ந்துள்ள வண்ணத்துப் பூச்சிகளும் கூட அவர்களோடு சேர்ந்து இயங்கப் போகின்றன என்று அர்த்தம். காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரிசெய்கிறவர்களாகவே இருப்பார்கள்.

மேல் இமைகளில்
நீ இருக்கிறாய்.

கீழ் இமைகளில்

நான் இருக்கிறேன்.

இந்தக் கண்கள் கொஞ்சம்

உறங்கி விட்டாலென்ன?

வாழ்வின் இடையில் வந்து இடையில் போய்விடுகிற தற்காலிக அதிர்வு அல்ல அது. ஆயுளைக் கடந்தும் உடல்மாறிக்கொள்கிற நிரந்தர அதிர்வு.

காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களூக்கே அது தற்காலிகம். உடல்களால் காமம் பேசிமுடித்த திருப்தியில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களூக்கு மட்டுமே அது நிரந்தரம். அப்படிப் பேசிப் பழகப் பயிற்சி வேண்டும்.

எவரும் எவருக்கும் நன்றி சொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும், அதனை. உதடுகளின் மெல்லிய அதிர்வுகள் சாட்சியாக… ஈரத்தில் நனைந்த விழிகள் சாட்சியாக… அக்குளில் பூக்கும் வியர்வையின் வாசம் சாட்சியாக…ஏன் கூச்சங்கழிந்த நிர்வாணம் சாட்சியாக… இழையும் பெருமூச்சுக்களால் பேச வேண்டும் அதனை. பேசப் பேசப் பேசத் தெவிட்டாத பேச்சு அது. பேசியிருக்கீர்களா நீங்கள்?

நான் பேசியிருக்கிறேன். ஆணாக இருந்தல்ல. பெண்ணாக இருந்துதான் பேசியிருக்கிறேன். என்ன சிரிக்கிறீர்கள்? பெண்ணாகித்தான் பேசமுடியும். அதனை!

பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் தரிசனம் வாய்க்குமென்று நான் நம்பவில்லை. ஆயிரம் பெண்களுக்குரிய தாய்மையைத் தன் இதயத்துக்குள் ஏற்றுக்கொள்கிற ஆண்தான், ஒரு பெண்ணின் இதயத்துக்குள் இடம்பெறுகிற அருகதையுள்ளவனாகிறான்.

இருவராய் இணைந்து இருக்கையில் கூடத் தனிமையாய் இருக்கிற சுந்தந்திர சுகத்தை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவண்தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான்!

அழகியக் கூண்டு செய்து… அதற்குள் அடக்கி வைத்து… ‘இது என் பறவை.. இது எனக்கு… எனக்கு மட்டுமே’ என்று எந்தப் பெண்ணையும் சொல்ல எந்த ஆணும் வெட்கப் படவேண்டும். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பியவண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் சிரமமற்றபடி கிளையாக இருக்கச் சம்மதித்தலே அணுக்கு அழகு.

உரிமை கொண்டாடுதல் அன்று உரிமை தருதலே காதல். தருதல் என்ற சொல்லுக்குள்ளும் ஓர் ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்? தருதலும் பெறுதலுமற்ற கருனைப் பெருவெளியில் சிறகுச் சிக்கலின்றிப் பறத்தலே காதல்!

முழுவிடுதலையைச் சுவாசித்துப் பூப்பதுதான் காதல். எந்தச் சிறைக்குள்ளும் … எந்த விலங்குக்குள்ளும்… அடைபட்டு கட்டுப்பட்டு இருக்க சம்மதிக்காது அது.

என்னைச் செதுக்கியது பெண்மை. என்னில் சிற்பமானது காதல். எனக்குள் எல்லாமும் அதுதான். எல்லாமும் கற்றுத் தந்ததும் அதுதான்!

பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து ரசிக்க… கைகளின் முடிப்பிசிறுகளில் சிக்கி நகரும் எறும்பை நசுக்கிவிடாமல் மெல்ல எடுத்து ஊதிவிட…அசையும் ஊதுவத்திப் புகையில் இசை கேட்க… பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ... இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூசியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய… போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க… அதுதான்… ஆம் … அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது. காதல் கற்றுத் தரும். காதல் எல்லாம் தரும். காதலியுங்கள். புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம். உணர்ந்து கொள்வதை?

அணுஅணுவாய்
சாவதற்கு

வாழ்வதற்கு

முடிவெடுத்துவிட்ட பிறகு

காதல்

சரியான வழிதான்.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.