மார்கழி விடியலில்
கோலமிடும் ஆயத்தத்துடன் வருகிறவள்
மேகம் துடைத்த தூய வானம் காட்டி
‘நீ என் வானம்’ என்றவாறு பார்க்கிறாய்.
நான் பதிலற்று நின்றிருக்க
அதிர்ச்சியுடன் முறைக்கிறாய்.
‘ஆமாம்.
நீ கோலமிடுவாயென
தன் மீது புள்ளி வைத்து
இரவெல்லாம் காத்திருக்கிறது வானம்.
நீயோ வாசலிலேயேக் கோலமிடுகிறாய்.
நான் வானமா? நிலமா?’ என்றேன்.
அச்சச்சோ!
அப்படியென்றால்
‘நீ என்னைத் தாங்கும் நிலம்’ என்று சொல்லி
வழக்கம்போல வாசலில் புள்ளி வைக்கத் துவங்குகிறாய்.
அதனை முத்தமாக ஏந்திக்கொள்கிறது இந்த நிலம்!
No comments:
Post a Comment