Sunday, December 18, 2011

மார்கழிப்பாவை 2

மார்கழி விடியலின் பனிக்குளிரில்
கோலமிடும் எனது தங்கைக்கு
நான் உதவுவதெல்லாம்,
எதிர் வாசலில் கோலமிடும்
உன்னை ரசிக்கத்தானென்பதை
புரிந்துகொள்கிற அறிவாளியும் நீதான்.

முன்பகலுக்குள்
வீதியின் மற்றக் கோலங்ககெல்லாம்
கால் தடங்களாலும் வாகனத்தடங்களாலும் சிதைந்துபோக
உன் வாசல் கோலம் மட்டும்
மாலைவரை சிதையாமல் இருக்க
அந்த கோலத்தின் அழகு மட்டுமே காரணமென நம்பும்
முட்டாளும் நீதான்.

எனது தங்கையும் நீயும்
மிகப்பெரிய கோலங்களை வரையத்துவங்கி
இடமில்லாததால்
இரண்டு கோலங்களையும் இணைத்து
ஒரே கோலமாக்கிவிட்டு நீ பார்த்த பார்வையில்
நம் காதலுக்கான முதல் புள்ளி வைக்கப்பட்டது!

No comments:

Post a Comment