Wednesday, December 28, 2011

மார்கழி பாவை 12

விடியும்வரை தூங்கிப்பழகிய உன்னை
மார்கழியில் மட்டும்
விடியலுக்கு முன்னே எழுப்புகிற
உன் அம்மாவுக்குத் தெரியுமா?
மார்கழியில் மட்டும்
உனது கோலத்தில் தான்
சூரியனே கண்விழிக்கிறானென்பது?

Tuesday, December 27, 2011

மார்கழி பாவை 11

மார்கழி விரதமென்றால்
அசைவம் உண்ண மாட்டாயா?
பார்வையிலேயே
என்னை விழுங்குவதெல்லாம்
என்ன வகை?

மார்கழி பாவை 10

நகர்ந்து நகர்ந்து
நீ வரையும்
அரிசிமாவுக் கோலத்துக்கு போட்டியாக,
தொடர்ந்து வந்து
நீர்க்கோலம் வரைகிறது
உனது ஈரக்கூந்தல்!

Sunday, December 25, 2011

மார்கழி பாவை 9

இத்தனை நாட்களாய்
முற்றத்திலமர்ந்து
ஓர் ஓவியனின் நேர்த்தியோடு
உள்ளங்கையில் நீ வரைந்த
மருதாணி ஓவியங்களைப்
பொறாமையுடன் பார்த்துவந்த
நிலத்தின் ஏக்கத்தையெல்லாம்
வண்ணம் கொண்டு
தீர்த்து வைக்கின்றன
உனது மார்கழி ஓவியங்கள்!

Saturday, December 24, 2011

மார்கழி பாவை 8

அழகாய்ப் பூத்தும்
காய்த்தபின்னே பூப்பதால்,
பூசணிச்செடியைக் கேலி செய்தனவாம்
நீ விரும்பும் மல்லிகையும் ரோஜாவும்!

ஆனால்
மார்கழிக் கோலத்திற்கென
நீ பூசணிப்பூக்களைப்
பறிக்கத் துவங்கியதிலிருந்து
பூச்செடிகளுக்கு மத்தியில்
பூசணிக்குத் தனி மரியாதையாம்.
அந்த மகிழ்ச்சியில்
இப்பொழுதெல்லாம்
முதலில் பூத்து
அப்புறம்தான் காய்க்கிறது தெரியுமா?

Friday, December 23, 2011

மார்கழி பாவை 7

மார்கழி விடியலில்
கோலமிடும் ஆயத்தத்துடன் வருகிறவள்
மேகம் துடைத்த தூய வானம் காட்டி
‘நீ என் வானம்’ என்றவாறு பார்க்கிறாய்.
நான் பதிலற்று நின்றிருக்க
அதிர்ச்சியுடன் முறைக்கிறாய்.

‘ஆமாம்.
நீ கோலமிடுவாயென
தன் மீது புள்ளி வைத்து
இரவெல்லாம் காத்திருக்கிறது வானம்.
நீயோ வாசலிலேயேக் கோலமிடுகிறாய்.
நான் வானமா? நிலமா?’ என்றேன்.

அச்சச்சோ!
அப்படியென்றால்
‘நீ என்னைத் தாங்கும் நிலம்’ என்று சொல்லி
வழக்கம்போல வாசலில் புள்ளி வைக்கத் துவங்குகிறாய்.
அதனை முத்தமாக ஏந்திக்கொள்கிறது இந்த நிலம்!

Thursday, December 22, 2011

மார்கழி பாவை 6

மார்கழி முழுவதும்
நம்வீதியெங்கும் தேனீக்கள் கூட்டம்.
உனக்குத் தெரிந்தது 'பூக்கோலம்' மட்டும்தானா?

Wednesday, December 21, 2011

மார்கழிப்பாவை 5

மார்கழி மாதத்தின்
அதிகாலையில் எழுந்து
பனியில் நீராடி
உன் வாசல் வந்து காத்திருக்கிறார்கள்...
திருப்பாவை பாடுவாயென... எம்பெருமானும்,
திருவெம்பாவை பாடுவாயென... சிவபெருமானும்.
உனது குரலில் மயங்கி விடுவார்களோவென
பயந்தபடி ஓடி வருகிறார்கள் ஆண்டாளும், மீனாட்சியும்.
வெளியே நடப்பது எதுவுமறியாமல்
போர்வைக்குள் பதுங்கியபடி
செல்பேசியில் எனது குறுஞ்செய்தி வாசித்துக்கொண்டிருக்கிறாய்...
‘ஐ லவ் யூ’

Tuesday, December 20, 2011

மார்கழிப்பாவை 4

ஐப்பசியிலும்
கார்த்திகையிலும்
உன்னை நனைத்து
மகிழ்ந்த மழை,
மார்கழியில் மட்டும்
உனது கோலங்களை
அழிக்க மனமில்லாமலும்,
உன்னைத் தீண்டாமல்
இருக்க முடியாமலும்
பட்டும் படாமல் தொட்டுப் போகிறது...
மார்கழிப் பனியாக!

Sunday, December 18, 2011

மார்கழிப்பாவை 2

மார்கழி விடியலின் பனிக்குளிரில்
கோலமிடும் எனது தங்கைக்கு
நான் உதவுவதெல்லாம்,
எதிர் வாசலில் கோலமிடும்
உன்னை ரசிக்கத்தானென்பதை
புரிந்துகொள்கிற அறிவாளியும் நீதான்.

முன்பகலுக்குள்
வீதியின் மற்றக் கோலங்ககெல்லாம்
கால் தடங்களாலும் வாகனத்தடங்களாலும் சிதைந்துபோக
உன் வாசல் கோலம் மட்டும்
மாலைவரை சிதையாமல் இருக்க
அந்த கோலத்தின் அழகு மட்டுமே காரணமென நம்பும்
முட்டாளும் நீதான்.

எனது தங்கையும் நீயும்
மிகப்பெரிய கோலங்களை வரையத்துவங்கி
இடமில்லாததால்
இரண்டு கோலங்களையும் இணைத்து
ஒரே கோலமாக்கிவிட்டு நீ பார்த்த பார்வையில்
நம் காதலுக்கான முதல் புள்ளி வைக்கப்பட்டது!

Saturday, December 17, 2011

மார்கழிப்பாவை 1

[caption id="attachment_629" align="alignleft" width="600" caption="மார்கழிப்பாவை 1"]மார்கழிப்பாவை 1[/caption]