Monday, August 20, 2007

காதல் கூடம் - 2


அடுத்த ஆண்டு பள்ளியின் முதல் நாள்.

காத்திரு என்று நானும்
காத்திருக்கிறேன் என்று நீயும்
சொல்லிக் கொண்டதில்லை.
ஆனாலும் காலைதோறும் காத்திருப்பாய்
ஆற்றுப்பாலத்தில் மிதிவண்டி துணையோடு.

காலைக் கதிரவனுக்கு
உன்னை ரசிக்க ஒருகண் போதவில்லை.
ஆற்றுநீர் பிம்பமாய்
மறுகண்ணும் மையலில்.

ஆற்றை ரசித்தபடி...
நகத்தை கடித்தபடி...
ஒரு காலால் பெடலை மிதித்தபடி...
அப்படி, இப்படியென
நொடிக்கொரு முறை மாறிக்கொண்டேயிருக்கும்
உன் காத்திருப்பின் '...படி'

தூரத்தில் வருகிறேன் நான்.
ஒரு புன்னகை கொடுத்து
மறு புன்னகை பெறுகிறோம்.
அன்றைய முதல் புன்னகை
கண்ணிடுக்கில் பத்திரமாகிறது.

பாடங்களைத் தாண்டி வேறெதும் பேசியதில்லை
நம் உதடுகள்.
காதலைத் தாண்டி வேறெதும் பரிமாறியதில்லை
நம் கண்கள்.

பதினோராம் வகுப்பானதால்
நீலம் துறந்து பச்சை உடுத்தியிருந்தது
உன் சீருடை.
மழை கழுவிய மலரென
இன்னும் கொஞ்சம் மெருகேறியிருந்தது
உன் பொன்னிறம்.

பக்கம் பார்த்தபடியே
பாலத்தில் துவங்கும்
நம் பள்ளிப் பயணம்.

இடம் நான்.
வலம் நீ.
ஆனாலும் என்னிடம் நீ.

ஒன்றாய் ஒத்திசைந்து
ஒரு நான்குசக்கர வாகனமாய்
பவனிவரும் நம் மிதிவண்டிகள்,
பள்ளியருகே வந்ததும்
தொடர்வண்டியாய் மாறும்.

உள்நுழைந்ததுமே அறிவிப்புப் பலகையில்
நம் பெயர்கள் பளிச்சிடுகின்றன.
முதல், இரண்டாமிடம் பெற்றதற்கான வாழ்த்துக்களுடன்.நம் பெயர் பொறித்த திருமண அழைப்பிதழாய்
அதனை உருமாற்றிப் பார்த்து தடுமாறுகிறது மனம்.

அங்கிருந்து மீண்டு
மிதிவண்டி நிறுத்துமிடம் நோக்கிப் பிரிகிறோம்.

இப்போது,
வலம் நான்.
இடம் நீ.
ஆனாலும் என் வளம் நீ.

புதிய வகுப்பறை கண்டுபிடித்து
வழக்கம்போல இடம்பிடிக்கிறோம்.
நீ முதல் பெஞ்சிலும்.
நான் கடைசி பெஞ்சிலும்.

ஏதோ சொல்ல நீ வாயெடுக்க, “டாண் டாண் டாண்”.
வணக்கக்கூட்டத்திற்கான மணி அடிக்கிறது.
பள்ளி மைதானத்தில் “ப” வடிவில்
நாங்கள் கூடுகிறோம்.
கடவுள்வாழ்த்துப் பாட மேடையோரப் பூங்காவாய்
நீ நின்றிருக்கிறாய்.

*ஒலிவாங்கி முன்னால் வருகிறாய்.
ஒளி வாங்கிக் கொள்கிறது கூட்டம்.

மேடையில் நின்றவாறு நீ என்னைத்தேட…
சீருடைகளுக்கிடையே ஒளிந்து நான் உன் தேடல் ரசிக்க…
தினம் தினம் பார்த்துப் பழகியவைதானென்றாலும்
சந்தித்த நொடியில்
தொட்டுவிட்ட விரல்களைப் போல
சட்டென விலகுகின்றன நம் பார்வைகள்.

கண்களை மூடி
சன்னக்குரலெடுத்து
பாடத் துவங்குகிறாய்.
காற்றில் தேன் தெளிக்கப் படுகிறது.

அந்தப் பூவரச மரத்தில் இருந்து விழுந்த இலையொன்று
காற்றில் அலைந்து அலைந்து நிலம் தொடுகிறது.
இசைத்தட்டு ஒலிக்காமல் நீ இசைக்கும் பாடல்
செவிவழி நுழைந்து அலைந்து உயிர் தொடுகிறது.

கண்மூடி நீ செய்யும் பாவனையெல்லாம்
காதல் செய்த காட்சிக் கவிதையென
ஒற்றைக்கண்ணில் படம்பிடிக்கிறேன்.

தலைமையாசிரியரின் உரை தொடர்ந்து
அப்பொழுதே பரிசளிப்பு விழாவும் தொடங்குகிறது.
“பத்தாம் வகுப்பு – மொத்த மதிப்பெண் முதலிடம்” என்று நிறுத்தி விட்டு,
என்னைப் பார்த்தபடியே என் பெயர் வாசிக்கிறாய்.
இல்லை சுவாசிக்கிறாய்.

உயிர் கட்டி இழுத்தது போல் மேடையேறி
நீயெடுத்துக் கொடுத்த சான்றிதழை
தலைமை ஆசிரியர் கையால் பெறுகிறேன்.

“பத்தாம் வகுப்பு – மொத்த மதிப்பெண் இரண்டாமிடம்” என்று சொல்லி
வெட்கம் சேர்த்து உன் பெயரை நீயே உச்சரித்தாய்.
இல்லை உள் சரித்தாய்.

உயிர்பெற்ற கட்டடங்கள் மீண்டும் அதனை உச்சரிக்க
மைதானமெங்கும் எதிரிசைக்கிறது உன் பெயர்.
உண்மையில் உன் பெயர் அழகு!
நீயே சொல்லும்போது பேரழகு!!

தமிழிலிலும் நான் முதலிடம், நீ இரண்டாமிடம்.
மற்றப் பாடங்களுக்கு முதலிடம் என்று சொல்லி
நம் பெயர்களை சேர்த்தே நீ சொல்லும்போது
ஒலிபெருக்கிபோல எனக்குள்ளும் அதிர்வலைகள்!

கூட்டம் முடிந்து திரும்புகையில்
நீ மந்திரித்த நம் பெயர்கள்
காற்றில் மயங்கியபடி இருந்தன.

உற்றுப் பார்க்கிறேன்.
உன் பெயரின் பின்னே
கிறங்குகிறது என் பெயர்.

நானும் வகுப்பறை நோக்கி உன்னைத் தொடருகிறேன்.
உன் நிழலை என்மேல் சுமந்தபடி.
நிழல் நிசமாகும் நம்பிக்கையோடு.

(அடுத்தப் பகுதி)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

*ஒலிவாங்கி - Mic