Monday, August 13, 2007

காதல் கூடம் - 1

(ஒரு முன்குறிப்பு : நான் படித்தது ஓர் ஆண்கள் பள்ளியில்(அத பொறுக்கிப்பசங்க பள்ளிக்கூடம்னு கரூர்ல சொல்லுவாங்க :)) எனவே இது ஒரு கற்பனைக் கதைதான் என்பதை துவக்கத்திலேயே தெரிவித்து விடுகிறேன்! )
அது ஒரு வெயில்மாதத்தின்,
வெயில் பிறக்காத காலைப் பொழுது.

நம் ஊரில்
உன் கோவில் துவங்கி
மாரியம்மன் வீடு
வரையிலான பாதை
தேவதையின் பாதை.

அந்தப் பாதையெங்கும்
உன் மிதிவண்டி வேகத்தில்
நீர்க்கோலங்களை வரைந்தவண்ணம் செல்கிறது,
உன் கூந்தல் அருவி சிந்தும்
தலைக்குளியல் நீர்.

உன் வருகையை எதிர்பார்த்து
கர்ப்பகிரகத்துக்கும், வாசலுக்கும்
நடையாய் நடந்து கொண்டிருக்கிறாள் அம்மன்.
நீ நெருங்கியதும்,
உன் நுதலில் சிறுபிறையென
குங்குமத்தை அவள் கீற்ற,
கொஞ்சமாய்ச் சிவந்தது,
குங்குமம்!

பின், அங்கிருந்து மேற்காக
ஈசுவரன் கோவிலுக்குப்
பயணமானது உன் மிதிவண்டி…
உன் தாவணி சிறகுகளை விரித்தபடி!

உனக்காக
நந்திமேல் கைவைத்தபடி காத்திருந்தான் ஈசுவரன்.
அவனிடமிருந்து திருநீற்றை சிறுகீற்றாய்
உன் நெற்றி ஏந்திக்கொள்ள
மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்புகிறது பயணம்.

நம் பள்ளியின் வாசல் அடைத்திருக்க,
அங்கே ஓய்வெடுக்க சாய்ந்தன,
மிதிவண்டியின் சக்கர கால்கள்.
படபடக்க துவங்கியது உன் இதயம்.

அதேகணம்
சிலமைல்களுக்கு அப்பாலிருந்து
சோம்பல் முறித்தபடி
தனது பயணத்தைத் துவங்கியது
எனது மிதிவண்டி.

எனக்காக என்மிதிவண்டியின் சக்கரங்களும்
உனக்காக காலத்தின் நேரமுட்களும்
வேகமாய்ச் சுழன்றன.

நானும் பள்ளிவந்து சேர்கையில்
மணியடித்து நலம் விசாரித்துக் கொண்டன
நம் மிதிவண்டிகள்.

எல்லோருக்கும்
ஒரே நாளில் பிறந்தநாள் வந்ததைப்போல
சீருடை தொலைத்து
வண்ண உடைகளில்
பள்ளிமுன் குழுமியிருந்தோம்.

நெடுநாள் நண்பனைப் போல்
எல்லோர் தோளிலும் கைபோட்டு
நின்று கொண்டிருந்தது வெயில்.

உனக்கு மட்டும் தோழியாகி
விசிறிக் கொண்டிருக்கும் தென்றல்.

நாம் எதிர்பார்த்திருந்த
பத்தாம்வகுப்பின் தேர்வுமுடிவுகள்
சற்றுநேரத்தில் ஒட்டப்படும் என்றறிந்து
உள்சென்று அமர்கிறோம்.

என்னைச் சுற்றி என் நண்பர்கள்.
உன்னைச் சுற்றி உன் தோழிகள்.

இருந்தும்,
உனக்கும் எனக்குமாக
நான்கு விழிச்சாலையில்
பார்வை போக்குவரத்து துவங்குகிறது.

வெள்ளைச் சீருடையில் சிறியவளான நீ
கத்திரிப் பூ தாவணியில் பெரியவளாயிருந்தாய்.
அம்மனும், ஈசுவரனும் நெற்றியில் முகாமிட்டிருக்க
முகமுழுக்க பவ்யமாய்க் குடியிருந்தது பயம்.

‘திருநீறு வேண்டுமா?’ எனும் பாவனையில் கை நீட்டுகிறாய்.
‘நீ வைத்துக் கொள்’ எனும் பொருளில் கை + தலை அசைக்கிறேன்.
பார்வையால் எனை அறைந்துவிட்டு
திரும்பிக்கொண்டன உன் விழிகள்.

முடிவுகள் ஒட்டப்பட்டப் பலகைகள் கொண்டுவரப்பட
எல்லாத் தெய்வங்களையும் துணைக்கழைத்தபடி நீயும்
உன் பெயரை ஒருமுறை உச்சரித்தபடி நானும்
நெருங்குகிறோம்.

நான் 468
நீ 467

முதல் மதிப்பெண் வரிசையில்,
முதலிடம் எனக்கு.
இரண்டாமிடம் உனக்கு.

வாழ்த்திய நண்பர்கள், தோழிகள் மறைந்து
நாம் தனித்திருந்த நொடியில்
ஒரு துளி கண்ணீரும்
ஒரு புன்னகையும் சிந்துகிறாய்.
ஒன்று உனக்கு.
மற்றொன்று எனக்கு.
இரண்டையுமே ஏந்திக்கொள்கிறேன்.

பள்ளியில் இருந்து ஒன்றாய் வெளிவந்தோம்.
உனக்கு பயந்து
ஈசுவரனும், அம்மனும் எங்கோ ஒளிந்துகொண்டார்கள்.
பிரிந்து செல்கையில் சொல்லிவிட்டுப் போனாய்.
“எப்போதுமே உன் பின்னால்தான் நானா?”

அந்த வரியை
ஆயிரம் அர்த்தங்களுடன்
நான் உச்சரித்துப் பார்த்த
அந்தப் பௌர்ணமி இரவில்…
நிலவு, கத்திரி பூ நிறத்தில் இருந்தது.


( காதல் கூடம் - அடுத்த பகுதி )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ