Monday, September 10, 2007

காதல் கூடம் - 5

காதலும் முத்தம் தான்.
காதலிப்பது, கொடுக்கும் முத்தம்
காதலிக்கப்படுவது, வாங்கும் முத்தம்.
காதலிப்பவராலேயே காதலிக்கப்படுவது,
கொடுத்து வாங்கும் இதழ்முத்தம்!

முத்தத்தில் முதல்நிலை அடையவும்,
காதலில் மூன்றாம் நிலை கடந்தும்
நாம் நெடுந்தொலைவில் நிற்கிறோம்.

சற்றுமுன் பிறந்த சிசுவென இருந்த காதல்
குழந்தையென வளர்ந்து
தன் குறும்புகளைத் துவங்குகிறது.

மழலையின் ஆசைகள் நிறைவேற்றும்
தாய்மனமென மாறுகின்றன
நம் இதயங்கள்.

காதல் தனிமையாகிறதாம்.
நாம் சந்தித்துக் கொள்கிறோம்.
காதலும் சேர்ந்து கொள்கிறது.

காதலுக்கு வெயிலடிக்கிறதாம்.
மரநிழலில் அமர்ந்து பேசிக்கொள்கிறோம்.
காதல் குளிர்கிறது.

காதலுக்கு தாகமாம்.
ஒன்றாய் ஐஸ்க்ரீம்கடை செல்கிறோம்.
காதல் தணிகிறது.

காதலுக்கு சோம்பலாம்.
ஒரு மிதிவண்டியில் ஊர்வலம் வருகிறோம்.
காதல் சுறுசுறுப்பாகிறது.

காதலுக்கு குழப்பம்.
விருப்பு, வெறுப்பு பகிர்கிறோம்.
காதல் தெளிகிறது.

காதலுக்கு பயம்.
எதிர்காலம் திட்டமிடுகிறோம்.
காதல் துணிகிறது.

காதல் குறைகிறதாய்த் தோன்றுகிறது.
மீண்டும் முதல் நாளிலிருந்து நேசிக்கத் துவங்குகிறோம்.
காதல் பூரணமாகிறது.

காதல் பூரணமாகையில்
மூளை தூங்கிவிடுகிறது.
மனம் விழித்துக் கொள்கிறது.
விழித்த மனம் கவிதையெனப் பிதற்றுகிறது.

‘நிற்கிறாய்’,
‘பார்க்கிறாய்’,
‘புன்னகைக்கிறாய்’,
‘பேசுகிறாய்’,
என்பதையெல்லாம்…
“அழகுகிறாய்” என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிடுகிறேன்.
கேட்டதும் கலகலவென அழகுகிறாய்.

உன் வீட்டுக்கும்
என் வீட்டுக்கும்
கனவுகளில் அகவழிச்சாலை அமைக்கிறேன்.
வந்து வந்து போகிறாய்.
போய் போய் வருகிறாய்.

கணக்கு,இயற்பியல், வேதியியல் என வகுப்பில்
எந்த இயல் நடந்தாலும்
எனக்குள் உன் உயிரியலே நடக்கிறதென்கிறேன்.
நமட்டுச் சிரிப்பில் உதடு சுழித்து இதழியல் நடத்துகிறாய்.

உன்னிடம் ஒப்பிக்க
காதல் சிரத்தையோடு கவிதை புத்தகம் வாசிக்கிறேன்.
நீயோ இயல்பாக கவிதைகளைப் பேசி விட்டுப் போகிறாய்.

என் வீட்டுக் கண்ணாடியில் எனக்கு நீ தெரிகிறாய்.
உன் வீட்டுக் கண்ணாடியில் உனக்கு நான் தெரிகிறேன்.
இதயங்களைப் போல கண்ணாடிகளையும் இடம் மாற்றியிருக்குமோ, காதல்? – உளறுகிறேன் நான்.
நம் வீட்டுக்கண்ணாடியில் நாம் தெரிவோமென கண்ணடிக்கிறாய்.

நட்சத்திரங்கள் துடைத்து
என் இரவுகளை சுத்தமாக வைத்திருக்கிறேன்.
நிலவென நீ வருகிறாய்.
எங்கிருந்தோ வந்து மொய்க்கத் துவங்குகின்றன நட்சத்திரங்கள்.

கல்விக்கூடமே நம் காதல்கூடமானதென நகைக்கிறேன்.
கல்வி போல காதலும் கைகூடுமென நம்பிக்கை நல்குகிறாய்.

இப்படி
கணம் தோறும்
கனவுகள் சுமக்கும்
இரண்டு உயிர்களும்
உருகி உருகி
ஒற்றைக் காதலுக்கு
அடங்குகின்றன.

அந்த மரநிழலில்
நம் காதல் குளிர்ந்து கொண்டிருந்த
ஒரு மதியவேளையில்,
நம்மிருவரையும் தலைமையாசிரியர் அழைத்து வரச்சொன்னதாக
உன் தோழி சொல்ல,
நம்மை நாம் பார்த்துக் கொண்டோம்.
நான்கு கண்களிலும் ஒரே பயம்.

(தொடரும்…)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

(வாரநாட்களில் பணிச்சுமை அழுத்துகிறது + வரிசையாக வாரயிறுதிகளில் பயணங்களும் இருக்கின்றன. அதனால் ஒரு சிறு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்கிறேன் – கண்டிப்பாக!)

Tuesday, September 04, 2007

ஐதராபாத் - கோவை - கரூர் - பழனி

கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் வெள்ளிக்கிழமை கரூரில் நடந்தது எங்கள் புதுமனைப் புகுவிழா.
வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு ஹைதரபாத்தில் இருந்து கோவைக்குப் புறப்பட்டேன். அது கோவை வழியாக கொச்சி செல்லும் ஏர் டெக்கான் விமானம்.
ஓணம் நெருங்கியதால் விமானத்தில் சேட்டன், சேச்சிகளின் கூட்டம்தான் அதிகமாக இருந்தது. முத்து நகரத்தை வானில் இருந்து கொஞ்சம் ரசித்துக்கொண்டிருக்கும்போது,
பணிப்பெண் டீ வேண்டுமா என்றார். தலையாட்டினேன். வெந்நீரும் , டீத்தூளும் கொடுத்துவிட்டு நகர்ந்து விட்டார் நானே கலந்து குடித்த டீ க்கு 20 ரூபாய் அதிகம்தான். கரூர் டீக்கடையில் மாஸ்டரே கலந்து கொடுக்கும் டீ, இரண்டு ரூபாய் ஐம்பது காசுதான் :)

கோவையில் இறங்கி அக்கா, அண்ணன் மகள்களுக்கு ஆடைகள் வாங்க ஸ்ரீதேவிக்கு சென்றபோது அங்கும் சேச்சிகளின் கூட்டம். ஸ்ரீதேவியில் ஓணம் வரை ஆடித்தள்ளுபடியை நீட்டித்திருந்தார்கள்.பிறகு கோவை – கரூர் பேருந்து பயணம். இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரியில் படித்த காலங்களில் மாதமொருமுறையோ இரண்டுமுறையோ பயணம் செய்த பழக்கமான பாதை. சன்னலோரத்தில் மழையை ரசித்தபடியே விகடனில் மூழ்கியிருந்தேன். காங்கேயம் வந்ததும் “வண்டி 5 நிமிசம் தாங்க நிக்கும் டீ குடிக்கிறவங்க சீக்கிரமா குடிச்சிட்டு வாங்க” கண்டக்டர் சத்தம் கொடுத்து விட்டு அவரும் டீ குடிக்கப் போய் விட்டார். கல்லூரி காலங்களில் எப்போதும் இங்கே இறங்கி ஒரு கிங்ஸும் ஒரு டீயும் வாங்கிக் கொண்டு டீ ஒரு சிப் உறிஞ்சிக்கொண்டு கிங்ஸ் ஒரு பஃப் இழுத்துக்கொள்வேன். அது ஒரு கனாக் காலம் :) அன்று இரண்டு டீ டோக்கன் மட்டும் வாங்கி இரண்டு டீயைமட்டும் குடித்து விட்டு வந்து விட்டேன். வீட்டுக்குப் போய்ச் சேர இரவாகிவிட்டது.

வெள்ளிக்கிழமை புதுமனைப் புகும்விழா எல்லாம் முடிந்து கொஞ்சம் ஓய்வு. அடுத்த நாள் சனிக்கிழமை அக்கா மகளுக்கு மொட்டையடிக்க பழனிக்குப் பயணம் அதையும் முடித்துக்கொண்டு அன்று மாலை வந்து பழைய வீட்டில் இருந்த பொருட்களைக் அடுக்கிக் கட்டிக் கொண்டிருந்தோம். நண்பர்களின் அழைப்புகள் துவங்கின.
“டேய் நீ எஸ்கேப்பாகிட்டியா?”
“என்னடா கால அட்டண்ட் பண்ற? அச்சச்சோ அப்ப உயிரோடதான் இருக்கியா”
“உனக்கு ஒன்னும் ஆகலியா? மச்சான் தப்புச்சிட்டியா?”
நக்கலோடு நண்பர்கள் நலம் விசாரித்தபோதுதான் தெரியும் ஹைதராபாத் குண்டுவெடிப்பைப் பற்றி. நான் இருப்பது ஹைதராபாத்துக்கு பக்கத்து மாவட்டத்தில் ஒரு கிராமம் அங்கெல்லாம் யாரும் குண்டுவைக்கமாட்டார்கள் என்று சொல்லி அவர்களைக் கடுப்பேத்திவிட்டு ஐதராபாத் நண்பனை அழைத்தேன். அவனோ, “நமக்கெல்லாம் ஒன்னுமில்லடா ஒருவேளை நீயும் இங்க இருந்திருந்தா குண்டு வெடிச்ச ஏரியாவுக்குதான் சுத்தப் போயிருப்போம்” என்று சொல்லி என்னைக் கடுப்பேத்தினான் :)

அன்று இரவு புதிய வீட்டில் மின்விசிறிகளை மாட்டுவதற்கு ஆட்கள் வந்திருந்தார்கள். மூன்று விசிறிகளை முடித்துவிட்டு நான்காவது மாட்டும்போது அது கொஞ்சம் புதிய மாடல் மாதிரி இருக்கவும் உள்ளே கைவிட்டு போல்ட் மாட்ட வசதியாக இல்லை. ரொம்ப நேரம் முயற்சி செய்து கடுப்பானவர் திட்ட ஆரம்பித்துவிட்டார், “ இவனுங்க புதுசா டிசைன் பண்றன்னு சொல்லி ஏசியில உட்காந்துகிட்டு கம்ப்யூட்டர்ல டிசைன் பண்ணிட்றானுங்க… நம்ம தாவு தான் தீருது… @$@#$ டிசைன் பண்ணவனையே கூட்டிட்டு வந்து நீயே மாட்றான்னு சொல்லனும்…அப்பத் தெரியும்… ஒரு நாள் முழுக்க நெம்புனாலும் ஒரு ஃபேனக் கூட மாட்ட மாட்டான்” எப்படியோ திட்டிக் கொண்டே அதை மாட்டி விட்டார். கடைசி வரைக்கும் நான் ஒரு பொட்டி தட்றவன்னு காட்டிக்கவே இல்லையே :)

ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்தே பொருட்களையெல்லாம் புதியவீட்டிற்கு மாற்றிவிட்டு கரூர் பேருந்து நிலையத்திற்கு நான் வந்த போது மணி 2:30 ஆகியிருந்தது.
6 மணிக்கு எனக்கு சேலத்தில் ரயில்! சேலம் பேருந்தில் ஏறினாலும் நாமக்கல்லுக்கே சீட்டு வாங்கினேன். நாமக்கல்லில் எல்லாப் பேருந்துமே 15 நிமிடம் நிறுத்துவார்கள். அதனால் நாமக்கல்லில் இறங்கி முன்னால் செல்லும் (அப்ப மத்தவண்டிலாம் பின்னால போகுமான்னு கேட்காதீங்க) வண்டியில் ஏறிப் போய்க்கொண்டிருந்தபோது கொஞ்ச நேரத்தில் நான் கரூரில் இருந்து வந்த வண்டி எங்களை முந்திக் கொண்டு சென்றது. அதிலேயேப் போயிருக்கலாமோ என்று யோசித்தேன். ஆனால் முந்தி சென்ற வண்டி வாழைக்காய் ஏற்றி வந்த ஒரு லாரியோடு மோதி லாரி கவிழ்ந்திருந்தது. பேருந்திலிருந்தவர்களுக்கு பெரிதாக பாதிப்பில்லை என்றே நினைக்கிறேன். நல்ல வேளை நான் அதில் செல்லவில்லையென்று நினைத்துக் கொண்டது மனம். கொஞ்ச நேரத்தில் எப்படியெல்லாம் மாற்றி நினைக்க ஆரம்பித்து விடுகிறது அது!

ரயில் தர்மபுரியை நெருங்கும்போது அக்காவிடமிருந்து அழைப்பு, “குட்டி, நியூஸ் தெரியுமா பழனியில இன்னைக்கு ரோப் கார்ல ஒரு கேபின் அறுந்து விழுந்ததுல 4 பேர் எறந்துட்டாங்களாம்” எனக்கு பயங்கர அதிர்ச்சி. நாங்களும் பழனி ஏறி இறங்கியது அதே ரோப் காரில்தான். அதுவும் முதலில் நாங்களும் ஞாயிறுதான் பழனி செல்வதாக இருந்தது, நான் ரயிலைப் பிடிக்க தாமதமாகிவிடுமென்றுதான் சனிக்கிழமையன்றே போய் வந்தோம். ஐதராபாத், பழனி, நாமக்கல் னு எல்லா எடத்துலயும் எஸ்கேப்பாகிட்டே வந்திருக்கேன் :) ரயிலில் எனக்கு லோயர் பெர்த் கிடைத்திருந்தது. சைட் லோயரில் 0.1 டன் எடையில உட்காந்திருந்த ஒருத்தர் படுக்கும்போது எனக்கு மேல் இருந்த மிடில் பெர்த்தில் ஏறினார். எனக்கென்னமோ அதுதான் எமனுடைய அடுத்த அட்டெம்ட்டா இருக்குமோ என்று தோன்றியது. போன வாரம் பார்த்த எமதொங்கா தெலுங்கு படமெல்லாம் அப்போ எதற்கு ஞாபகத்துக்கு வந்ததுன்னே தெரியல. மிடில் பெர்த்த தாங்கிப் பிடித்திருக்கும் அந்த சங்கிலியைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தேன். நல்லா உறுதியாகதான் இருந்தது. அந்த நம்பிக்கையிலேயே தூங்கி ஒருவழியாக பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்! :)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, September 03, 2007

காதல் கூடம் - 4

எல்லோரும் குடையுடன் வருகையில்
நீ மட்டும் மழையுடன் வரும் மழைக்காலமது.

வயலுக்கு உரம் தெளிக்கும் பெண்ணைப் போல
நிலமெங்கும் நீர்த்துளிகளை
சாரலென தூவிக் கொண்டிருக்கிறது மேகம்.

கைக்குட்டையை தலைக்கு(ட்)டையாக்கி
நீர் வழியும் முகத்தோடு பாலம் நெருங்குகிறேன்.

பாலிதீன் உடையணிந்த பூங்கொத்து போல,
மழையங்கியில் ஒரு மலர்ச்செடியாய்,
மரத்தடியில் நின்றிருக்கிறாய்.

புடவை முந்தானையால்
குழந்தையைப் போர்த்தும் தாயென,
கிளைகளால் உன்னைப் போர்த்தி நிற்கிறது மரம்.

‘மழையிலும் காத்திருக்க வேண்டுமா?’
பார்வையில் சிறு கோபம் கலக்கிறேன்.
‘மழையில்லை, வெறும் சாரல்தான்’ எனும் பொருளோடு
என் கோபத்தையும் புன்னகையோடு வரவேற்கிறாய்.
சாரலில் கரைந்து நிலத்தில் விழுந்து தெறிக்கிறது என் கோபம்.

குளித்துக்கொண்டிருந்த மிதிவண்டிக்கு
தலை துவட்டிவிட்டு ஏறிக்கொண்டாய்.
பாலத்தில் நீர்க்கம்பளம் விரித்து
நம்மை அழைக்கிறது மழை.

மழைத்துளிகளின் ஸ்பரிசத்தில் நானும்
துளியொலிகளின் இசையில் நீயும்
நனைந்து கொள்கிறோம்.
புன்னகை கோர்த்தபடி சாரலோடு துவங்குகிறது இன்றைய நம் பயணம்.

நாம் வகுப்பறை நுழையும் வரை
ஒரு மெல்லிசையாய் வழிந்த சாரல்
சில பொழுதில் பெரு மழையாய் மாறுகிறது.

ஈரமானத் தலையை
ஈரமானக் கைக்குட்டை கொண்டே
துவட்டிக் கொள்கிறேன்.

உணவுக் கூடை மூடும்
பூத்துண்டை நீட்டுகிறாய்.
வாங்கிக் கொண்டு என் இடம் அடைகிறேன்.
முதல் பாடவேளை - இயற்பியல் - துவங்குகிறது.
நொடிக்கொரு முறை
தலை துவட்டினேனா என
திரும்பி திரும்பிப் பார்க்கிறாய்.
அதற்காகவே
துவட்டாமல் வைத்திருந்த
துண்டுக்கு நன்றி.

மழையோடு காற்றும் கைகோர்க்க
நட்டு வைத்த மதயானைகளென
மரங்கள் திமிருகின்றன.
மழையின் காரணமாக முதல் பாடவேளையோடு
பள்ளிக்கு விடுமுறை விடப் படுகிறது.

எல்லோரும் வீடு கிளம்ப,
ஏடு திறந்து எழுதுபவனைப் போல
நண்பர்களை விரட்டுகிறேன்…
போக மனமில்லாமல்!

என் குறிப்பறிந்தவளாய்
புத்தகம் விரித்து படிப்பவளைப் போல
தோழிகளைத் துரத்துகிறாய்.

முதல் தளத்தில் இருந்த ஓட்டுக்கூடம் நம் வகுப்பு.
கழுத்தளவு உயரத்தில் சுற்றுச்சுவர்.
நட்பு எல்லாம் விலகிப் போக
மழை மட்டுமே சுற்றம்.

ஒரு கண்ணாடிக்கூடு போல
எல்லாத் திசையிலும் நம்மை சூழ்ந்து நிற்கிறது மழை.
மழைக்கூட்டில் குடியிருக்கும்
இணைப் பறவைகளென
வார்த்தைச் சிறகுகள் ஒடுக்கி
மௌனமாய் இருக்கிறோம்.

பேனா மூடுகிறேன் நான்.
புத்தகம் மூடுகிறாய் நீ.

முதலில் சிறகடிக்க ஆவலாகிறேன்.
உன்னை நெருங்கி துண்டைத் திருப்பிக் கொடுத்து,
நினைத்ததை சொல்வதற்குள்,
வார்த்தை வந்து விழுகிறது “இயற்பியல் புத்தகம் இருக்கா?”
என் தவிப்புகளையெல்லாம் ரசித்துக்கொண்டவள்
சிரித்தபடி புத்தகம் நீட்டினாய்.

என் இயல்பை நொந்தபடி
இயற்பியல் புத்தகத்தோடு
என் இடம் திரும்புகிறேன்.

காலை நடத்தியப் பாடம் விரிக்கிறேன்.
பக்க எண் 143 எனக் காட்ட,
பக்க எண்ணுக்குப் பக்கத்தில்
உன் பெயர் எழுதுகிறேன்.
அன்று நடத்தியது புரியாததால்
மறுபடி படித்ததாய்ச் சொல்லிப் புத்தகத்தை
உன்னிடமேத் திருப்பித் தருகிறேன்.

பாடநூலில் நான்
நூல் விட
மனம் பட்டமாய்ப் பறக்கிறது.

முகம் மழையைப் பார்த்துக் கொண்டிருக்க
விழி உன்னை நோக்கியபடியே இருந்தது.
புத்தகம் திறக்கப்படாமலே பைக்குள் நுழைய
சிறகொடிந்து மீண்டும் அமைதியாகிறேன் நான்.

அமைதியிழந்தவளாய்
உணவுக்கூடை தூக்கிக்கொண்டு
என்னிடம் வந்து அமர்ந்தாய்.
முதன்முறையாய்ப் பகிர்ந்து உண்ணுகிறோம்.

‘குழம்பு எப்படி?’ என்கிறாய்.
‘சுவையாயிருக்கிறது’ என்கிறேன்.
‘நாந்தான் வெங்காயம் உரிச்சேன்’ என
முழுச்சமையலும் செய்தவள் போல பெருமை பட்டுக்கொள்கிறாய்.
வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்.

எவருமில்லாததால் தயக்கம் நீங்கியவளாய்
சாரலெனத் துவங்கி பெருமழையெனப் பேசுகிறாய்.
தட்டுத்தடுமாறி நடை பழகும் மழலை போல
உன்னிடம் உரை பழகுகிறேன்.

அத்தனை நாளும் தேக்கிவைத்த நம் எண்ணமேகங்கள்
எல்லாம் ஒரே நாளில் உடைந்து மழையெனப் பொழிந்தன.

அன்று மாலை மழை நிற்கும் வரை பேசினோம்.
நின்ற பிறகும் பேசினோம்.
வீடு திரும்புகையில்
உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மறந்து போனாலும்,
நீ உச்சரித்த ஒவ்வொரு ‘ம்’ மும் நினைவில் நின்றது.

அன்று இரவு முழுவதும்
அந்த 143 – ஆம் பக்கம் கனவில் படபடத்தபடியே இருக்க,
அடுத்தநாள் உனக்கு முன்னே வந்து பாலத்தில் காத்திருக்கிறேன்.

நிதானமாய் வந்தவள் நின்று புத்தகம் நீட்டி சொன்னாய் -
‘நேத்தே முதல் பக்கத்திலிருந்து படிச்சிருந்தா எல்லாம் புரிஞ்சிருக்கும்’

முதல் பக்கம் விரிக்கிறேன்.
மேலே மையமாய் எழுதியிருந்தாய் ‘அருள்முருகன் துணை!’
படித்துமுடிக்குமுன் நாணம் வந்தவளாய்
புத்தகம்பிடுங்கி மிதிவண்டியில் பறக்கிறாய்.
தொட்டுவிடாமல் துரத்துகிறேன்.

காதல் மனத்தில் துவங்கியது முதல் ‘பருவ’ மழை!

அடுத்த பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.