Friday, May 30, 2008

குறுங்கதையும் குறுந்தொகையும் - 2

‘வரும்போது குட் ந்யூசோட வரனும். ஓக்கே வா?'
'பாப்போம் பாப்போம்'
தோழிகள் வழியனுப்ப, சிரித்துக்கொண்டே இளா கையசைக்க, எழும்பூரில் இருந்து
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கிளம்பியது.
அப்பர் பெர்த்திலேறி படுத்துக்கொண்டாலும் தூக்கம் வரவேயில்லை. நாளை
முதன்முறையாய் அவளைப் பெண்பார்க்க வருகிறார்கள். அங்கு போய் பொம்மை மாதிரி
உட்கார்ந்திருக்க வேண்டுமென்ற கடுப்பு கொஞ்சம் இருந்தாலும் ஒருமாதிரி
குறுகுறுப்பாகவும் இருந்தது.

அந்த வரனின் விவரங்களை அவளுடைய அம்மா தொலைபேசியில் முன்பே சொல்லியிருந்தார்.
அவனுடைய உயரம், எடையெல்லாம் தெரிந்தபோதே தனக்கு ஏற்ற மாதிரிதான் இருக்கிறது
என்று நினைத்துக் கொண்டாள். போட்டோவிலும் சுமாராக இருந்தான். ஓக்கேதான். ஆனால்
போட்டோவை வைத்து என்ன முடிவு செய்வது? நேரில் பார்த்தால் எப்படியிருக்கிறானோத்
தெரியவில்லை. முதல் இண்டர்வியூவிலேயே வேலை கிடைத்துவிட்டமாதிரி இப்பொழுதும்
நடந்துவிட்டாலென்ன என்று தோணியது. 'இளா! இது உன்னோட வாழ்க்கை…. லூசு மாதிரி
யோசிக்காதே' தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.

ஆனாலும் அப்படியொருவேளை நாளைக்கு வரப்போகிறவனுக்கே நம்மைப்
பிடித்துவிட்டாலும்…அது என்ன அவனுக்கு நம்மைப் பிடிப்பது? நமக்கு அவனைப்
பிடித்துவிட்டால் என்று வைத்துக்கொள்வோம். அது எப்படி இருக்கும் என்று யோசிக்க
ஆரம்பித்துவிட்டாள். 'மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனக்கும்
ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவனுக்கும் பொருந்தி வருமா?
இங்கிருக்கும் வொர்க் கல்ச்சர் அவனுக்குப் புரிந்திருக்குமா? ஆட்டோமொபைல்
கம்பெனியில் வேலையென்றால் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் தான் படித்திருப்பான்.
காலேஜில் பெண்களுடன் பழகியிருப்பானோ இல்லையோ தெரியவில்லை. நாம் இப்படி
நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவன் சரியான கடலை பார்ட்டியாக இருந்தாலும்
தெரியவாப் போகிறது. ச்சே இப்படியும் இருக்கக் கூடாது. அப்படியும்
இருக்கக்கூடாதென்று எதிர்பார்த்தால் பிறகு எப்படித்தான் இருப்பான்?' அவளால்
யோசித்துக் கொண்டிருப்பதை விட்டு வெளியேவரமுடியவில்லை. தானாக வலிய வேறு எங்கோ
நினைவைத் திருப்பினாள்.

எங்கெங்கோ சுற்றி விட்டு மறுபடியும் அங்கேயே வந்தது.
'இந்த அப்பா எப்படி இந்த வரனைப் பிடித்திருக்கிறது என்று சொன்னாரோ
தெரியவில்லையே!'
அவள் அப்பா அம்மா இருவருமே திருச்சியில் ஒரு துவக்கப்பள்ளியொன்றில்
ஆசிரியர்கள். அவன் குடும்பமோ சேலத்தில் இருந்தது.
'அவர்கள் ஏதோ பிஸினஸ் என்று மட்டும்தான் சொன்னார்கள். என்ன பிஸினஸ் என்று
நமக்கெப்படி தெரியும்? பெட்டிக்கடையும் பிஸினஸ்தான் எக்ஸ்போர்ட் கம்பெனியும்
பிஸினஸ் தான். குழந்தைகளுக்கு பாடம் எடுக்கிறவர்கள் மெண்டாலிட்டியும் பிஸினஸ்
பண்ணுகிறவர்கள் மெண்டாலிட்டியும் ஒன்று போலவா இருக்கும்?'
யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு திடீரென சிரிப்பு வந்தது. 'என்னமோ கல்யாணமே
நிச்சயமான மாதிரி எதற்கிப்படி யோசிக்கிறோம்? எதுவாக இருந்தாலும் அவனைப் பார்த்த
பிறகு யோசித்துக் கொள்ளலாம். ஆனால் எப்படியாவது அவனிடம் தனியாகப் பேசிப்
பார்த்துவிட வேண்டும். பேசிப் பார்த்தால்தான் ஆள் எப்படி என்று கொஞ்சமாவது எடை
போடலாம். இந்த சினிமாவில் எல்லாம் வருகிற மாதிரி 'பொண்ணுகிட்ட மாப்பிள்ள
கொஞ்சம் தனியாப் பேசனுமாம்' என்று யாராவது சொன்னால் நன்றாகத்தான் இருக்கும்.
ஆனால் அதெல்லாம் நம் வீட்டில் நடக்க வாய்ப்பில்லை. யாரிடமாவது அவன் செல்நம்பர்
வாங்கி வெளியில் எங்காவது சந்திக்கலாம். அதுவரை வீட்டில் எந்த முடிவும்
சொல்லிவிடக்கூடாது' கனவுகளில் முடிவெடுத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

மறுநாள் மாலை. அவளைப் பெண்பார்க்க வந்திருந்தார்கள். அவள் உள்ளறையில்
உட்கார்ந்திருந்தாள். மாப்பிள்ளை மட்டும் வரவில்லையாம். அவனோடு மற்றொரு நாள்
மீண்டும் வருவதாகப் பேசிக்கொண்டார்கள். அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. "ச்சே
இப்படி கவுத்துட்டானே! இதற்காக இன்னொரு நாள்வேறு வர வேண்டுமா?" என்று கோபமும்
இருந்தது. சம்பிரதாயமானப் பேச்சுக்கள் எல்லாம் முடிந்து இரு குடும்பங்களுக்கும்
அந்த சம்பந்தம் பிடித்துப் போயிருந்தாலும் மாப்பிள்ளையுடன் அடுத்த வாரம்
வந்தபிறகு மேற்கொண்டு முடிவெடுக்கலாம் என்று சொல்லி அவர்கள் கிளம்புகிற நேரம்.
மாப்பிள்ளையின் அக்கா மட்டும் உள்ளறைக்கு வந்தாள்.

'இவரிடம், அவனுடைய மொபைல் நம்பர் கேட்டுப் பார்க்கலாமா? குறைந்தது போனிலாவது
பேசிப் பார்ப்போம். பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடலாம். இதற்காக இன்னொரு முறை
எதற்கு வரவேண்டும்' என்று யோசித்தாள்.
'உன்னோட மொபைல்நம்பர் கொடுப்பா… தம்பி கேட்டிருந்தான்' என்று மெதுவாக கேட்டு
அவள் எண்ணையும் வாங்கிக் கொண்டு 'நாங்க கிளம்பறோம். அடுத்த வாரம் தம்பியோட
வர்றோம்' என்று சொல்லிக் கிளம்பிப் போய்விட்டார்கள்.
'ச்சே அவன் நம்பரை ஏன் கேட்காமல் போனோம்?' என்று வருத்தப்பட்டுக்கொண்டாள்.

அடுத்த நாள் காலை அவள் செல்பேசிக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
'ஹலோ. நான் அருள் பேசறேன். நேத்து பொண்ணு பாக்க வந்தாங்களே…'
'ம்ம்ம் சொல்லுங்க'
'உங்கள மீட் பண்ணலாம்னுதான் திருச்சி வந்திருக்கேன். மீட் பண்ண முடியுமா?'
'…' என்ன சொல்வதென்று யோசித்தாள்.
'இல்ல போன்லயே பேசலாம்னாலும் எனக்கு ஓக்கே. ஒரு அர மணி நேரம் போதும். எப்போ
ஃப்ரியா இருப்பீங்கன்னு சொல்லுங்க நானே கால் பண்றேன்'
'இல்லப் பரவால்ல எங்கனு சொல்லுங்க நானே வர்றேன்'

வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து யோசித்துக் கொண்டே வந்தாள். அவனைப்
பிடித்திருக்கிறதா இல்லையா என்று கேட்டால் எதையும் வாயைத் திறக்கக் கூடாது.
முதலில் அவனிடம் என்னவெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை வரிசைப்
படுத்திக் கொண்டாள். பேசும்போதே பொய் சொல்கிறானா என்பதையும் கவனிக்க வேண்டும்.
முடிவெல்லாம் பொறுமையாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் என்ன கேட்பது?
அவன் படித்த பள்ளி, கல்லூரியைப் பற்றி கேட்க வேண்டும்.
வீட்டிலிருந்து படித்தானா இல்லை ஹாஸ்டலா?
எந்த மாதிரிப் படங்கள் பார்ப்பான்?
புத்தகம் எதுவும் படிக்கிற பழக்கமிருக்குமா?
ஏற்கனவே யாரையாவது காதல், கீதல் பண்ணியிருக்கிறானா?
திருமணத்திற்குப் பிறகு நான் வேலைக்குப் போவதை பற்றி என்ன சொல்லுவான்?

கேட்க வேண்டியவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே சொன்ன இடத்திற்கு வந்து
சேர்ந்ததும் அவன் மொபைலுக்கு அழைத்தாள்.
அவனும் வந்ததும் தனியே சென்று அமர்ந்தார்கள். அவனே ஆரம்பிக்கட்டும் என்று
அமைதியாக இருந்தாள்.

'நேத்தே நான் வந்திருந்தா அங்கேயே எங்கிட்ட உங்களப் பிடிச்சிருக்கான்னு
கேட்டிருப்பாங்க. போட்டோவுல சிம்பிளா இருந்த உங்களப் பாத்ததுமே எனக்குப்
பிடிச்சிருந்தாலும், உங்களுக்கும் என்னப் பிடிச்சிருக்கான்னுத் தெரியல. அங்க
எல்லார் முன்னாடியும் நீங்க ஃப்ரியா உங்க விருப்பத்த சொல்லிட முடியுமான்னு
சந்தேகமா இருந்ததாலதான் தனியா மீட் பண்ணலாம்னு கூப்பிட்டேன்.'

ரொம்ப ஸ்மார்ட்டாக நடிக்கிறானோ? ஆனால் கண்களைப் பார்த்தால் அப்படியொன்றும்
தெரியவில்லை. அவனேப் பேசட்டும் என்று புன்னகைத்தபடியே இருந்தாள்.

'ஒரு மணி நேரத்துல ஒருத்தர முழுசா ஜட்ஜ் பண்ணிட முடியாதுதான். ஆனா வெளிப்படையா
பேசினோம்னா ஒரு சின்ன அண்டர்ஸ்டாண்டிங் வரலாம். அதுக்கப்புறம் உங்களுக்கும்
என்னைப் பிடிச்சிருக்குன்னுத் தெரிஞ்சா வீட்ல சொல்லிக்கலாம். அந்த ஐடியால தான்
வந்திருக்கேன். என்னப் பொருத்தவரைக்கும் எனக்கு ஆப்போசிட் கேரக்டர்
உள்ளவங்ககூடவும் என்னால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும்… சின்ன வயசுல இருந்தே பெரிய
எதிர்பார்ப்பு எதுவுமில்லாம வளர்ந்துட்டேன். அதனால எனக்கு வரப் போறவ
இப்படித்தான் இருக்கனும்னு கனவு கண்டதில்ல. அதனால உங்களப் பத்தி நீங்க
சொல்லுங்க தெரிஞ்சுக்கறேன்… எந்த காலேஜ்ல படிச்சீங்க? என்ன மாதிரி புக்ஸ்
பிடிக்கும்? இந்த மாதிரி…'

'உண்மைய சொன்னா எனக்கும் இப்போ உங்களப் பாத்ததுமே பிடிச்சிடுச்சு…சோ தாராளமா
வீட்ல சம்மதம் சொல்லிடுங்க…. அப்பறம் என்னப் பத்தி சொல்லனும்னா…'

எந்த முடிவை பேசிமுடித்தபிறகு எடுக்கலாமென்று நினைத்தாளோ, அதனை முதலிலேயே
எடுத்ததற்கும், அதனை அப்பொழுதே அவனிடம் சொல்லிவிட்டதற்கும், அரை மணிநேரம் என்று
சென்றவள் மூன்றுமணிநேரம் அவனிடம் பேசிக்கொண்டிருந்ததற்கும்… வீடுவரும்வரை
அவளுக்குக் காரணம் தெரியவில்லை.
வீட்டில் நுழைகையில் பண்பலையில் 'பிரிவோம் சந்திப்போம்' படத்திலிருந்து பாடல்
ஒலித்துக் கொண்டிருந்தது. 'கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை…கொண்டேன்
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை…'

o0o

குறுந்தொகை :

பாடல் எண் – 40 குறிஞ்சி. தலைவன் கூற்று.

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

-செம்புலப் பெயல்நீரார்

என் தாயும் உன் தாயும் யாரோ? எவரோ?
என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்?
நீயும் நானும் தான் எந்த வகையில் அறிமுகமாகியிருந்தோம்?
(ஆனாலும் முதல் சந்திப்பிலேயே)
செம்மண்ணில் விழுந்த மழைநீர்போல
நம்நெஞ்சங்கள் அன்பினால் இரண்டறக் கலந்துவிட்டன.

Thursday, May 29, 2008

எறும்புக்கு உப்புமா வைத்த எட்டாவது வள்ளல்

காரக்குழம்பு வைத்தால் காரமாக இருக்க வேண்டுமென்பதன் புரிதலில் உப்புமா என்றால் உப்பாக இருக்க வேண்டுமென என் அக்கா தவறாக புரிந்து கொண்ட ஒரு காலைப்பொழுதில் தட்டில் வைத்த உப்புமாவை தொடாமல், தொட்டுக்கொள்ள வைத்திருந்த சர்க்கரையை மட்டும் உள்ளே தள்ளி கொண்டிருந்தாள் ஜனனி. அதைக் கவனித்த அக்கா, ‘ஜனனி, இப்போ ரெண்டு பேர்ல யார் மொதல்ல சாப்பிட்றாங்கன்னு பாக்கலாம் சரியா? தட்டுல எதுவும் மிச்சம் வைக்கக் கூடாது.’ என்று சொல்லிவிட்டு அக்காவும் சாப்பிட ஆரம்பிக்க, என்ன செய்வதென்று புரியாமல் தவித்த ஜனனி, உப்புமாவை உருண்டை உருண்டையாக உருட்டி, அக்கா குனியும்போது, பக்கத்திலிருந்த நாற்காலிக்கு அடியில் உருட்டிவிட ஆரம்பித்தாள். நான்காவது உருட்டலில் இதனைக் கவனித்து விட்ட அக்கா, நாற்காலிக்கடியில் நான்கு உப்புமா உருண்டைகளைப் பார்த்ததும், ஜனனியைப் பார்த்து முறைத்தார். சற்றும் தாமதிக்காமல் ஜனனியிடமிருந்து பதில் வந்தது – ‘அம்மா, அந்த எறும்புங்க எல்லாம் பாவம்தான? அதுக்கெல்லாம் பசிக்கும் தான? அதுக்குதான் நான் உப்புமா போட்டேன்!’*அக்கா : ‘வெயில் காலத்துல தண்ணி ஜில்லுனு குடிக்காத பாப்பா’

ஜனனி : ‘அப்போ night காலத்துல?’*அக்கா : ‘துணி தேய்க்கறவங்களே ரெண்டு நாளா வரல. தொவச்ச துணியெல்லாம் அப்படியே இருக்கு’

மாமா : ‘அவங்க வரலன்னா, முன்னாடியிருக்கிற கடைல கொடுக்க வேண்டியதுதான’

ஜனனி : ‘ஐயோ, ரெண்டு பேரும் ஏன் இப்படி வம்பு பண்றீங்க? Iron box மேல தான இருக்கு. எடுத்து தேய்ங்களேன்!’

அக்காவும், மாமாவும் கப்சிப்.*ஜனனி : ‘மாமா, அம்மாவ விட்டுட்டு நான் மட்டும் தனியா கரூர்ல அம்மாச்சி வீட்டுக்கு போனேனே’

நான் : ‘அப்பறம் ஏன் அம்மாகிட்டப் போறேன்னு அடுத்த நாளே திருப்பூர் ஓடிட்ட?’

ஜனனி : ‘நான் தூங்கும்போது அம்மா காத பிடிச்சுட்டு தான தூங்குவேன்? கரூர்ல அம்மாச்சி காதுதான் இருந்தது. அதான் திருப்பூர் போயிட்டேன்’*அக்கா : ‘குட்டி, இவளுக்கு ஸ்கூல் லீவ் விட்டதுல இருந்த எப்போ பாத்தாலும் அந்த tom & jerry CD யே போட்டு பாத்துட்டு இருக்கா. Tom & jerry பைத்தியமாவே ஆகப்போறான்னு நெனைக்கிறேன்’

அக்காவிடமிருந்து செல்பேசியைப் பிடுங்கி ஜனனி சொன்னாள் – ‘மாமா, அம்மா எப்போ பாத்தாலும் சீரியலே பாத்துட்டு இருக்காங்க. சீரியல் பைத்தியமாவே ஆகப்போறாங்க’*கடந்த வாரம் குடும்பம் மொத்தமும் சென்னையில் இருந்த போது ஜனனிக்கு தூக்கம் வருகிற நேரம் மட்டும் எல்லோரும் காணாமல் போய்விடுவார்கள். பின்ன என்னங்க? கத சொன்னா தூங்கனும். திரும்ப திரும்ப கதையே கேட்டுட்டு இருந்தா? அவள கத சொல்லி தூங்க வைக்கிறதுக்குள்ள எனக்கு தூக்கம் வந்து நான் உளற ஆரம்பிச்சுட்றேன். அவளுக்கு கரடிக்கதை சொல்லிட்டே வந்து தூக்கத்துல சுந்தரா ட்ராவல்ஸ் ஓட்ட ஆரம்பிச்சுட்றேன். முதல் கத சொல்லும்போது ஒவ்வொரு வரிக்கும் ‘அப்பறம் மாமா’ ன்னு கேட்டுட்டே வருவா. கொஞ்ச நேரத்துல அது ‘அப்பறம்’ னு சுருங்கும். இன்னும் கொஞ்சம் கதை ஓட்டினோம்னா, அந்த ‘அப்பறமும்’, ‘ம்ம்ம்’ னு சின்னதாகிடும். அப்புறம் நாந்தான் கத சொல்லிட்டே இருப்பேன் அவகிட்ட இருந்து சத்தமே இருக்காது. மெதுவா அவ கைய எடுத்துட்டு, போர்வைய போத்தினதும், போர்வைய விலக்கிட்டு, காத பிடிச்சுட்டு ‘வேற கத சொல்லு மாமா’ னு மறுபடியும் ஃப்ரெஷ்ஷா ஆரம்பிப்பா பாருங்க.. எனக்கு அப்பவே கண்ண கட்ட ஆரம்பிச்சுடும். அடுத்து அவளுக்கு சொல்றதா வாக்கு கொடுத்திருக்கிற கதையோட பேரு – ‘அஞ்சு தல யான முட்டக் கத’. உங்களுக்கு யாருக்காவது இந்த கதை தெரியுமா?

நானும் ஒரு தெலுங்குப் படமும் - இறுதிப்பகுதி

இடைவேளைக்கு முன்னாடிப் படம் பார்க்காதவங்க இங்க
போயி முதல் பாதியப் பார்த்துட்டு வாங்க...
இதயம் பலகீனமானவங்க தொடர்ந்து படிக்க வேண்டாம்.
ஆங்..இடைவேளைக்கு முன்னாடி, நான் ஒரு விஷயத்த சொல்ல மறந்துட்டேன்….
அமெரிக்கா போறதுக்கு முன்னாடி, பானுவுக்கு, தேவ் ஒரு காதல் பரிசு கொடுப்பார்
--அது ஒரு, ஒரு ரூபாய் நாணயம்….
( கொடுக்கும் போதே, "ஆனந்தம்" படம் மாதிரி, இந்த ஒத்த ரூபாய வச்சி ஒரு பாட்டுப்
போடுவாங்கன்னு எதிர் பாத்தேன்!
நல்ல வேளை பாட்டெல்லாம் எதுவும் இல்ல…ஆனா அந்த ஒரு ரூபாய வச்சி……அப்புறம்
சொல்றேன்….)

இடைவேளைக்கப்புறம் பாரதியார் பானுவ , அமெரிக்கா கூட்டிட்டுப் போயிடறார்.
அமெரிக்காவுல ஒரு காட்சி:
ஒரு ரெஸ்டாரண்ட்ல பானு குடும்பத்தோட உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு
இருக்காங்க…
அப்போ பாரதியார் , பானுவுக்கு எப்படி தேவதாஸ மறக்க சொல்லி மறைமுகமா சொல்றதுன்னு
யோசிக்கிறார்…
உடனே பானுகிட்ட இருந்து தேவ் கொடுத்த அந்த ஒத்த ரூபாய எடுத்து, அத
பாத்துக்கிட்டே " பானு! இந்தியாக் காசெல்லாம் அமெரிக்காவுல செல்லாதுமா"ன்னு
சொல்லிட்டு அதத் தூக்கிப் போடறார். அந்த வசனத்துலேயே எல்லாத்தையும்
புரிஞ்சுக்கிற புத்திசாலி பானு, ஓடிப் போய் அந்தக் காச எடுத்துக்கறாங்க.
பானுவும் பதிலுக்கு ஒரு வசனம் பேசுறாங்க "அப்பா! நீங்க வேணா அமெரிக்கா வந்த
வுடனே இந்தியாவ மறந்திருக்கலாம், நான் மறக்கல" அப்பிடின்னு சொல்றாங்க…
அதுக்கு பாரதியார் நேரடியா விஷயத்த சொல்வாரு : "இங்க இருக்கவங்கள்ல ஒரு
மாப்பிள்ளைய செலெக்ட் பண்ணு, உனக்கு சீக்கிரமே கல்யாணம்"
கொஞ்சம் யோசிச்சுட்டு பானு சொல்வாங்க : "உங்க இஷ்டம்ப்பா"

( என்ன தேவதாஸ காதலிச்சுட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்க பானு
ஒத்துக்கிட்டாங்களேன்னு அதிர்ச்சியா இருக்கா…கொஞ்சம் பொறுங்க…முடிச்சு(!)
அவிழும் )

இப்போ இந்தியாவுல ஒரு காட்சி :

ஏமாத்தி, பானுவ அவங்கப்பா அமெரிக்கா கூட்டிட்டுப் போய்ட்டத, நண்பர்கள்ட்ட
சொல்லி வருத்தப்படறார் தேவ்.
தேவதாஸ உடனே அமெரிக்கா கெளம்ப சொல்லி நண்பர்கள் உசுப்பேத்துறாங்க….
நான்….எப்படி….அமெரிக்கா….ப்ச்….அப்பிடின்னு கமல் மாதிரி ரியாக்ஷன் காட்டுறார்
தேவ்….
அப்போ அது வரைக்கும் காமெடி பண்ணிக்கிட்டு இருந்த தேவோட நட்புவட்டாரம்…..,
நட்பப் பத்தி ஒரு மினி லெக்சர் எடுக்கறாங்க….
தியேட்டரே ஒரு மயான அமைதியில இருக்கு…
எல்லாத்துக்கும் மேல எனக்கு பக்கத்துல உக்காந்திருந்தவர் எங்க நான்
பார்த்திடுவனோன்னு எனக்குத் தெரியாம கண்ணத் தொடச்சிக்கிறார்… ( சோகத்துல
அழுகறாராமாம் )
எனக்கு அழுவதா இல்ல சிரிக்கிறதான்னு தெரியல ….
லெக்சர் முடிஞ்ச வுடனே எல்லாரும் ஆளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து தேவதாஸ
சென்னைக்கு அனுப்பி வைக்கறாங்க…
சென்னை வர்ற தேவ், அமெரிக்க தூதரகத்துக்குப் போறார்….
அவர் அனாதை, சொந்த வீடு இல்லை அப்பிடி இப்பிடி காரணம் சொல்லி அங்க அவரோட விசா
அப்ளிகேஷன ரிஜக்ட் பண்ணிடறாங்க……
( ரிஜக்டட் அப்பிடின்னு அந்த அபீஸர் சீல் குத்துறத 4 தடவ திருப்பி திருப்பி
காட்டுறாங்க…எங்களுக்கு நெஞ்சுலக் குத்தின மாதிரியே இருந்துச்சு! )

அப்பிடியே இடிஞ்சு போய் நிக்கற தேவ், ஒரு நடை பிணமா, பீச்ல
சுத்தறார்…பிண்ணனியில ஒரு சோகப் பாட்டு பாடுது….
ரோட்ல நடந்து வரும்போது தேவ் ஒரு கார்ல மோதி விழறார்…கார்ல இருந்து எறங்கி
வர்றது யாருன்னு பாத்தா…படம் ஆரம்பிச்சப்போ ஒரு குத்துப் பாட்டுக்கு தேவோட ஆடின
மழை ஷ்ரேயா…தேவோட கதைய முழுசாக் கேட்ட ஷ்ரேயா சோகம்+கோபத்துல கண் செவக்கறாங்க…
உடனே செல்லெடுத்து ஒரு மியூசிக் டைரக்டருக்கு போன் போடறாங்க….அவரு டைரக்டருக்கு
போன் போடறார்…
டைரக்டர் ஷ்ரேயாக்கிட்ட பேசறார்…. ஷ்ரேயா "கண்டிப்பா நீங்க எனக்காக இத பண்ணனும்
" அப்படின்னு சொல்றாங்க…

அடுத்த நாள் பாத்தா ஒரு ஷூட்டிங்க்காக ஒரு சினிமா குழு அமெரிக்காப் போகுது… ஒரே
ராத்திரியில அந்தப் படத்துக்கு அஸிஸ்டண்ட் டைரக்டராய்ட்டார் நம்ம தேவ்…
அஸிஸ்டண்ட் டைரக்டர்ங்கறதால உடனே விசா கெடைச்சுடுது….அந்த சினிமாக் கூட்டத்தோட
தேவும் அமெரிக்கா போய்டறார்…
( அப்ரூவ்ட் அப்பிடின்னு அந்த அபீஸர் சீல் குத்துறத 10 தடவ திருப்பி திருப்பி
காட்டுறாங்க…எங்களுக்கு முதுகுலக் குத்தின மாதிரியே இருந்துச்சு! )

அமெரிக்கா ஏர்போர்ட்ல எறங்குற தேவோட கெட்டப் : அமெரிக்க கொடி ப்ரிண்ட்
ஆகியிருக்கிற ஒரு கோட் மாதிரி ஒரு பனியன்…தலைக்கு ஒரு குல்லா….
ஏர்போர்ட்ட விட்டு "ஹே …ஹே…"ன்னு கத்திக்கிட்டே ஒரு "ஏ இந்தா..ஏ இந்தா" னு ஒரு
ஆட்டத்த போட்டுக்கிட்டு வெளியே வர்றார்….
தேவ் கையில ஒரு 2000 டாலரக் குடுத்துட்டு "All the Best" சொல்லிட்டு
மறைஞ்சுடறார் அந்த டைரக்டர்...( நீங்க புத்திசாலியா இருந்தீங்கன்னா இவர் தான்
இந்த படத்தோட உண்மையான டைரக்டர்னு நான் சொல்லாமலேயே புரிஞ்சுப்பீங்க! )

தேவ், எப்படியோ பாரதியாரோட வீட்ட கண்டுபிடிச்சு அது முன்னாடி நின்னு நோட்டம்
விட்டுக்கிட்டு இருப்பார். பாரதியார் வந்து அமெரிக்காவுல ஒரு செனட்டர்…அதனால
பாதுகாப்பு அதிகமா இருக்கும்….திடீர்னு தேவ போலீஸ் சுத்தி வளைச்சுடுது….
"who r u?"
"what r u doing here"
அப்பிடின்னு போலீஸ் துப்பாக்கி முனையில அவர மெரட்டுவாங்க….
(….தியேட்டரே திக் திக் னு துடிச்சுட்டு இருக்கு…)
அங்க தான் ஹீரோ தன்னோட மூளையப் பயன்படுத்துவார்…
தன்னோட Passport, visa எல்லாத்தையும் எடுத்துக் காட்டி தான் ஒரு Assistant
Director, location பாக்கிறதுக்காக வந்ததா சொல்லி தப்பிச்சுடுவார்…
( தியேட்டரில் விசில் பறக்கிறதுன்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணுமா? )

அப்புறம் தேவ் தனியா அமெரிக்காவுல சுத்திக்கிட்டு இருக்கும்போது ஒரு பொண்ணு (
கண்டிப்பா அது ஒரு தெலுங்குப் பேசற பொண்ணு! ) ஆத்துல குதிச்சு தற்கொலை
பண்ணிக்கப் போறத பாக்குறார்…
அதுக்கிட்ட போய் இங்க இருந்து குதிச்சா தப்பிக்க சான்ஸ் இருக்கு, அதோ அந்த
பில்டிங் மேல இருந்து குதிச்சீன்னா உடனே சாகலாம், அப்பிடின்னு ஐடியா
கொடுப்பார்.
தன்னோட மனச திசை திருப்பதான் சொன்னான்னு, லேட்டா புரிஞ்சிக்கிற அந்த பொண்ணு,
தேவ் பின்னாடியே வந்து "நீ போனதுக்கப்புறம் நான் தற்கொலை பண்ணிக்கிட்டா என்னப்
பண்ணுவ? " அப்பிடின்னு கேட்கும்…
"ஒரு தடவ தற்கொலை பண்ணிக்கப் போய் தப்பிச்சவங்க, அதுக்கப்புறம் சாகத் துணிய
மாட்டாங்க" அப்பிடினு ஒரு அற்புதமான(!) வசனத்த அசால்ட்டா சொல்லிட்டு கேஷுவலா
நடக்க ஆரம்பிச்சுடுவார் நம்ம தேவ்.

அதுல இம்ப்ரஸ் ஆகுற அந்தப் பொண்ணு தன்னோட "காதல் தோல்வி சோக"த்த தேவ்கிட்ட
கொட்டுது.
தேவ் தன்னோட சோகத்த கொட்டுவார். அதக் கேட்டுட்டு ஃபீல் ஆகுற அந்த பொண்ணு தேவ்
காதலுக்கு தான் உதவி பண்றதா சொல்லி,
அவளோட வீட்டுக்கு கூட்டிட்டுப் போகுது…

இதுக்கு நடுவுல பானுவுக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்திருப்பாங்க….
மாப்பிள்ளை குடும்பத்துக் காரங்க எல்லாம் பொண்ணு பாக்குற வைபவத்துக்காக நம்ம
பாரதியார் வீட்டுக்கு வருவாங்க….
( அமெரிக்கா போனாலும் பொண்ணு பாக்கப் போற பழக்கம் இன்னும் மறக்கல )
( பாரதியார் வீட்ல நீங்க பாக்க வேண்டிய விஷயம் சுவர்ல "புஷ்"சோட போட்டோ
மாட்டியிருப்பாங்க…அவர் அங்க அரசியல்வாதி இல்லையா? டைரக்டரோட அறிவப்
புரிஞ்சுக்குங்கப்பா!) ( புஷ் கால்ல பாரதியார் விழற மாதிரி ஒரு சீன்
கிராபிக்ஸ்ல பண்ணியிருந்தாங்களாம்…எடிட்டிங்ல போயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன் )
"சரி பொண்ண வரச் சொல்லுங்கப்பா"- மாதிரி ஒரு வசனத்த தெலுங்குல ஒரு பெருசு
சொன்னவுடனே மாடிப் படிய காட்டுறாங்க….
தழையத் தழையப் பொடவையக் கட்டிக்கிட்டு, வெட்கப்பட்டுக்கிட்டே பானு,
மாடிப்படியில இருந்து எறங்கி வரும்னு எதிர்பார்த்தா ஒரு கவர்ச்சிப்
பாட்டுக்குத் தேவையான காஸ்ட்யூம்ல எறங்கி வந்து நடு வீட்டுல ஒரு குத்துப்
பாட்டுக்கு டான்ஸ் ஆடுறாங்க….ஆடி முடிச்சுட்டு,
"நான் தேவதாஸ தான் கல்யாணம் பண்ணிப்பேன், தேவத் தவிர வேற யாருக்கும் எம் மனசுல
எடமில்ல" அப்பிடின்னு வசனம் பேசிட்டு மாடிப்படியேறிப் போய்டுது….
சரி வந்ததுக்கு ஒரு டான்ஸாவது பாத்தமே அப்பிடின்னு ஜொள்ள தொடச்சிட்டு
மாப்பிள்ளை வீட்டுக் காரங்களும் கெளம்பி போய்டுவாங்க….

கோபம் தலைக்கேறின நம்ம பாரதியார், நேரா மாடிக்குப் போறார்…
எதிர்பார்த்த மாதிரியே பானுவ ஒரு ரூமுக்குள்ள தள்ளிப் பூட்டி வச்சிடறார்.

நம்ம மாமி ( அதாம்ப்பா தேவதாஸையும், பானுமதியையும் சேத்து வைக்கிறதுக்கு உதவி
பண்றேன்னு சொன்ன பொண்ணு ) ,
தேவ்க்கு ஒரு புது செல்லு, ஒரு புது காரு…எல்லாம் வாங்கிக் கொடுக்குது….
எப்படி பானு வீட்டுக்குள்ள நுழையறதுன்னு ரெண்டு பேரும் யோசிக்கறாங்க…
ஒரு சூப்பர் ஐடியா ( பாரதியார பேட்டி எடுக்கிற மாதிரி அவர் வீட்டுக்கு போறது )
கண்டு பிடிச்சு அவர் வீட்டுக்குப் போறாங்க…
அங்க இருக்க பத்திரிக்கைக் காரங்க கூட்டத்துக்கு நடுவுல எப்படியோ பூந்து
வீட்டுக்குள்ள போய்டுவார், தேவ்…
அங்க பானு இருக்கிற ரூமக் கண்டுபிடிச்சு…ஜன்னல் வழியா பானுவக் கூப்பிட்டு எதோ
பேச ஆரம்பிப்பார்…அதுக்குள்ள பாரதியார் உள்ள வந்திடுவார்….
தேவ், ஒளிஞ்சு ஒளிஞ்சு ஒரு பேப்பர்ல எதையோ எழுதி அந்த வீட்டு நாய்(!)கிட்ட
கொடுத்திட்டு எஸ்கேப் ஆகிடுவார்…

நாய் வாயில ஒரு பேப்பர் இருக்கிறத பாத்துட்டு பாரதியார் அத எடுக்கப் போக,
அதுக்குள்ள வேலக்காரர் அத எடுத்து படிக்க ஆரம்பிச்சுடுவார்…
( பானு, பாரதியார், பானுவோடப் பாட்டி, அந்த நாய், எல்லார் முகத்தையும் க்ளோஸ்
அப் ல காட்டுறாங்க…ஒரு விதப் பதட்டமும், பரிதவிப்பும் தெரியுது எல்லார்
முகத்திலயும், இப்ப உங்க முகத்துல கூடத் தான் J)
"I MISS U" னு அதுல எழுதி இருக்கு ….எதையோ சொல்லி பானுவோட பாட்டி பாரதியார
சமாளிச்சுடுவாங்க…
ஆனா அத கவனிக்கிற பானு, பேப்பர், பென்ஸில் எடுத்து, அத டீக்கோட் பண்ணி, தகவலப்
புரிஞ்சுக்குவாங்க……

( அது என்ன தகவல்னு கதைய மேலப் படிக்காம சரியாக் கண்டுபிடிச்சு பின்னூட்டமாக
இடுபவருக்கு இந்தப் படத்தோட சிடி பரிசாக(!) உங்கள் செலவில் அனுப்பி
வைக்கப்படும்! )

அடுத்த நாள் பானு, தேவ்க்கு ஃபோன் பண்ணி பேசுறாங்க…ரொம்ப நாள் கழிச்சு
காதலர்கள் பேசிக்கிறத வெறும் வசனத்துல எப்படிக் காட்டறதுனு யோசிச்ச டைரக்டர்,
அவங்கள அப்படியே போன்லேயே ஒரு பாட்டு பாட வச்சிடறார்….ஃபோன்ல பாடிக்கிட்டே
அவங்களும் பீச், பார்க் எல்லாம் போய்ட்டு வந்திடறாங்க…

ஒரு தடவ, பாரதியார் வீட்டு மாடியில இருந்து கீழ லிஃப்ட்ல போய்க்கிட்டு
இருப்பார்…
அதப் பாக்குற பானு, ரூம்ல இருக்க பல்ப எடுத்துட்டு, பல்புக்கு பின்னாடி தேவ்
தந்த ஒரு ரூபாய வச்சி திரும்பவும் பல்ப மாட்டிட்டு, சுவிட்ச்சப் போட்டு, ப்யூஸ்
போக வச்சிடுவாங்க…
கரண்ட் போனதால லிஃப்ட் பாதியிலேயே நின்னுடும்…லிஃப்டுக்குள்ள மாட்டுன
பாரதியார், ஏதோ சுனாமியே வந்துட்ட மாதிரி கத்துவார், கதறுவார், கொஞ்ச நேரத்துல
செக்யூரிட்டி ஆளுங்க வந்து ப்யூஸ் சரி பண்ணி, லிஃப்ட கீழ எறக்குவாங்க…
லிஃப்டத் தொறந்து தொபுக்கடீர்னு வெளில வந்து விழுவார் – பாரதியார்… டிரெஸ்
எல்லாம் நனஞ்சு போயிருக்கும்.. ( பயத்துல வியர்த்து கொட்டிடுச்சி வேற ஒன்னும்
இல்ல! )

சந்திரமுகி மாதிரி லக..லக..லக…ன்னு சிரிச்சுட்டு "இந்தியாக் காசு அமெரிக்காவுல
செல்லாதுன்னு சொன்னீங்களே – இப்ப எப்படி உங்கள பயமுறுத்துச்சி பாத்தீங்களா"
அப்பிடின்னு பானு, தன்னோட அப்பாவப் பாத்துக் கேட்பாங்க…. தியேட்டர்ல ஒரே
கைத்தட்டல் தான் போங்க!!

பானுவ எப்படி வீட்டுச்சிறையில இருந்து மீட்கறதுன்னு தேவும், மாமியும் தீவிரமா
யோசிச்சு ஒரு ஐடியா பண்ணி பானுவுக்கு போன் பண்ணி சொல்றாங்க….

அடுத்த நாள் பானுவ கோயிலுக்கு கூட்டிட்டுப் போகறதுக்கு பாரதியார்ட்ட பர்மிஷன்
வாங்கிடறாங்க பானுவோட பாட்டி….கார்ல பானு, பானுவோட பாட்டி, பாரதியார்,
வேலைக்காரர் எல்லாரும் கோவிலுக்குப் போய்க்கிட்டு இருக்கும்போது வழியில ஒரு
பஞ்சாபிக் கூட்டம் "பல்லே பல்லே"னு டான்ஸ் ஆடிக்கிட்டு வருது….கார்ல இருந்து
எறங்கி எல்லாரும் வேடிக்கைப் பாக்குறாங்க…பஞ்சாபிப் பொண்ணு ஒன்னு ஒரு பஞ்சாபிக்
குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுது…. அத , பாரதியார், வாயப் பொளந்து வேடிக்கப்
பாத்துட்டு இருக்கிற கேப்ல, தேவும், மாமியும், வந்து பானுவ கடத்திட்டுப்
போய்டுவாங்க….

டென்ஷன் ஆகிடற நம்ம பாரதியார் போலீஸ், அடியாள் எல்லாரையும் அனுப்பி பானுவ தேடச்
சொல்றார்..

பானுவையும், தேவதாஸையும், கார்ல கூட்டிட்டுப் போற மாமி, ஒரு தனித் தீவுக்கு
வந்து சேர்றாங்க….

"இந்தத் தீவுக்கு யாரும் வர முடியாது, உங்கள யாரும் கண்டுபிடிக்க முடியாது,
எஞ்சாய்"- அப்பிடின்னு சொல்லிட்டு மாமி எஸ்கேப் ஆகிடறாங்க….

பானுவப் பாத்து தேவ் கேட்பார் : " நாம ஒரு விளையாட்டு விளையாடலாமா"
அப்பிடின்னு…
சரி ஏதோ கண்ணாமூச்சி, நொண்டி இது மாதிரி ஏதோ விளையாடப் போறாங்கன்னுப் பாத்தா
அது "செல்லமே" படத்துல வர்ற மாதிரி ஒரு வெவகாரமான வெளையாட்டு…
( என்ன விளையாட்டுன்னு கேட்கிறீங்களா? நான் மட்டும் 30 ரூபா குடுத்துப்
பார்ப்பேன்…நீங்க ஓசியிலயே கேட்டுக்கலாம்னு பாக்குறீங்களா? அஸ்கு…புஸ்கு….அது
மட்டும் முடியாது! )
விளையாட்டு முடிஞ்சவுடனே பாட்டு ஆரம்பிக்குது… ( பின்ன என்னப்பா தனித்தீவு
கெடைச்சதுக்கப்புறமும் ஒரு டூயட் பாடலைன்னா அவங்கல்லாம் என்ன காதலர்கள்? )

அவங்க அப்பிடியே இந்தியாவுக்கு தப்பிச்சுப் போயிட்டா படம் சப்புனு முடிஞ்சுடும்
இல்லையா? அதனால பானுவக் கொண்டுவந்து திரும்பவும் பாரதியார் வீட்லயே விட்டுட்டு
போனஸா ஒரு சவாலும் விட்டுட்டுப் போறார்…நம்ம ஹீரோ!

சவால் என்னன்னா :
" நீங்க பானுவ, எங்கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி, நானும் உங்க முன்னாடியே அவளக்
கடத்திட்டுப் போய் 24 மணி நேரத்துக்குள்ள அமெரிக்காவ விட்டேப்
போயிடுவோம்….உங்களால முடிஞ்சா தடுத்துக்குங்க…"
இதக் கேட்டு முதல் முறையா பாரதியார் ( ரொம்ப நேரமா நானும் பாரதியார் னே
சொல்லிட்டு இருக்கேன்! மன்னிச்சுக்குங்க நம்ம கதைல இனிமே அவர் – யூ. எஸ்.
செனட்டர் ) முகத்துல ஒரு கவலை ரேகை படியுது….

படம் இப்ப சூடு பிடிச்சுட்டுதா தியேட்டர்ல ஒரு பரபரப்பு பத்திக்குது….எனக்குப்
பக்கத்து சீட்காரர் தம்மெடுத்துப் பத்தவைக்கிறார்…

சொன்ன மாதிரியே பானுவ வூடு பூந்து கடத்திடறார் தேவ்…சோஃபா பின்னாடி, கதவு
பின்னாடி ஒளிஞ்சு ஒளிஞ்சு, யூ. எஸ் போலீஸ் காதுல ( நம்ம காதுலையும் தான்! ) ஒரு
ரெண்டு முழம் பூவ சுத்திட்டு பானுவக் கூட்டிட்டுப் போயிடறார்….

கோபப்படற செனட்டர், போலீஸ்கிட்ட கத்துறார்…எப்படியாவது பானுவ 24 மணி நேரத்துல
மீட்டுடனும்னு கட்டளை போடறார்…
போலீஸ் ஒரு பத்து ஹெலிகாப்டர எடுத்துக்கிட்டு அமெரிக்காவையே அலசி எடுக்கிறாங்க…

செனட்டரும் தன்னோட பங்குக்கு ஒரு கார எடுத்துக்கிட்டு தெரு தெருவா சுத்துறார்….
காருக்குள்ள செனட்டர க்ளோஸ்-அப் ல காட்டுற கேமரா, அப்பிடியே மெதுவா வெளிய வந்து
மேலப் போயி, கார டாப் ஆங்க்ள்-ல காட்டுது….கார் பின்னாடியே ஒரு அல்ட்ரா மாடர்ன்
பஸ் ( ஸ்வதேஷ் படத்துல ஷாருக்கான் வருவார்ல – அது மாதிரி அட்டாச்டு பாத்ரூம்,
பெட்ரூம், டி.வி., எல்லாம் இருக்கிற ஒரு மினி வீடு மாதிரியான பஸ்) போய்க்கிட்டு
இருக்குது….இப்போ கேமரா அப்பிடியே மெதுவா கீழ எறங்கி, அந்த பஸ்சுக்குள்ள
போகுது…..அங்க….ஹீரோ உக்காந்து சிப்ஸ் சாப்பிட்டுக்கிட்டு F-Tv பாத்துக்கிட்டு
இருக்கார்….

பஸ்சுக்குள்ளேயே இன்னொரு ரூம்ல இருந்து வர்ற பானு… இதப் பாத்துட்டு
கடுப்பாயிடறாங்க….
தேவ் ," இல்ல பானு, அந்த ட்ரெஸ்ல ரொம்ப கவர்ச்சியா இருக்காங்க இல்ல?"
அப்ப்டின்னு அசடு வழியறார்.
எங்கடா இவன் நம்மள விட்டுட்டு எதாவது அமெரிக்காப் பொண்ண செட்டப்
பண்ணிடுவானோன்னு பயந்த, பானு :
"இந்தியாவோட புடவைல இத விட கவர்ச்சி அதிகம்" அப்பிடின்னு சொல்லிட்டு உள்ளப்
போய்ட்டு கொஞ்ச நேரத்துல வெளிய வர்றாங்க…
ஜன்னல், பால்கனி, போர்ட்டிகோ எல்லாம் வச்ச ஒரு ஜாக்கெட் போட்டுக்கிட்டு
(பெண்ணியவாதிகள் சண்டைக்கு வந்துடாதீங்க !!!) ஒரு புடவைய சுத்திக்கிட்டு
பஸ்சுக்குள்ள ஒரு "கேட் வாக்" நடக்கறாங்க…
இது மாதிரி ஒரு நாலஞ்சு புடவைல மாறி மாறி நடந்து வந்து ஹீரோவத்
தெணறடிக்கிறாங்க……….
நாங்க தெலுங்கு படத்துக்கு தான் வந்திருக்கோமா இல்ல மலையாள படத்துக்கு
வந்திட்டோமான்னு ஒரு நிமிஷம் சந்தேகம் வந்திடுது….
பானு மொத புடவைல வரும்போது சோஃபா மேல உக்காந்திருந்த தேவ் கடைசி புடவைல
வரும்போது தரைல சரிஞ்சு கெடக்கறார்…
உள்ள கேட் வாக் நடக்கிற அதே சமயத்துல வெளிய நம்ம செனட்டர் பாவம் கார்லயே
அமெரிக்காவ குறுக்கும் நெடுக்கும் அளந்துக்கிட்டு இருக்கார்….

திடீர்னு செனட்டருக்கு ஒரு ஞாபகம் வருது….
வீட்ல நாய் வாயில இருந்து ஒரு லெட்டர்ல "I miss you "னு வேலக் காரன்
படிக்கும்போது, பானு பூடகமா சிரிக்கிறத நெனச்சிப் பாக்குறார்…அதுல ஏதோ விஷயம்
இருக்குன்னு திரும்பவும் வீட்டுக்குப் போறார்.. பானு பெட்ரூம்லத் தேடி ஒரு
பேப்பர எடுக்கிறார்…அதுல

I – 9 m-13 i-9 s-19 s-19 u-21
9139191921 னு ஒரு ஃபோன் நம்பர் எழுதியிருக்கு…

அந்த ஃபோன் நம்பர நெட்ல போட்டு தேடி, மாமியோட அட்ரெஸ கண்டுபிடிச்சிடறார்…
மாமி வீட்டுக்குப் போயி, மாமிய மெரட்டி, அவங்க மூலமா, பானுவும் தேவும்
போய்க்கிட்டு இருக்கிற பஸ் நம்பர வாங்கிடறார், செனட்டர்….
அடியாளுங்களுக்கு ஃபோனப் போட்டு பஸ் நம்பர சொல்லி மடக்கிப் பிடிக்க சொல்றார்…

அதே சமயம் பானுவும் தேவும் அந்த பஸ்ல இருந்து எறங்கி வேற ஒரு காருக்கு மாறப்
போறாங்க…
நம்ம பக்கத்து சீட்டுக்காரர் முகத்துல நிம்மதி தெரியுது….
விடுவாரா டைரக்டர்?
பஸ்ல எதையோ மறந்து வச்சிட்டதா சொல்லி திரும்ப எடுக்கப் போறாங்க பானு…
அதுக்குள்ள அவங்கள ரவுண்டு கட்டிடறாங்க…நம்ம அடியாட்கள்!
( ஆமா! நான்- அடியாட்கள், அடியாட்கள் னு சொல்றனே அமெரிக்காவுல அடியாட்கள்
எப்படி இருப்பாங்கன்னு யாரும் கேட்கவேயில்லையே? அடியாட்கள் எல்லாரும் நீக்ரோ )

பானுவையும், தேவையும் தனித் தனியா இழுத்துட்டுப் போயிடறாங்க…
ஒரு இருட்டான எடத்துல, ஒரு முரட்டு நீக்ரோகிட்ட, தேவதாஸ தனியா விட்டுடறாங்க…
அந்த நீக்ரோவும், தேவதாஸ கட்டி வச்சி, சரமாரியா அடிச்சுத் தாக்கிடுவார்….
திடீர்னு கட்ட எல்லாம் பிரிச்சிக்கிட்டு திமிறி வர்ற தேவதாஸ் பக்கத்துல இருந்த
ஒரு இரும்பு ராட கையில எடுக்கிறார்…

சரி நீக்ரோ தொலஞ்சார்னு பாத்தா…
அந்த இரும்பு ராடால தன்னோட மண்டையிலேயே, நச்சு, நச்சு, நச்சு, நச்சு, நச்சுனு
அடிச்சிக்கிறார் தேவ்……….
என்னடா ஒரு லூசுப்பயகிட்ட நம்மள தனியாவிட்டுட்டுப் போயிட்டாங்களேன்னு, பயந்து
போற நீக்ரோ, பானுவ எங்க தூக்கிட்டு போயிருப்பாங்கன்னு சொல்லிடறார்…

அந்த எடத்துக்கு கெளம்பிப் போறார் தேவ்….

(கொட்டாவியெல்லாம் அப்புறம் விட்டுக்கலாம் கதையக் கேளுங்க…)

ஒரு பெரிய சண்டையெல்லாம் நடக்குது, துரத்தல் சீனெல்லாம் முடிஞ்சு….கடைசியா…
தேவ்க்கு ரைட்ல ஒரு பைக் இருக்கு…
லெஃப்ட்ல பானு நின்னுட்டு இருக்காங்க…
எதிர்ல ஒரு 20 பேர் தேவ நோக்கி ஓடி வர்றாங்க…
வண்டிய ஸ்டார்ட் பண்ணி பானுவ உக்கார வச்சி எஸ்கேப் ஆயிடுவான்னு பாத்தா…
தேவ் மட்டும் தெறிச்சு ஓட ஆரம்பிச்சுடுவான்…..அவனத் தொரத்திக்கிட்டே
அடியாட்களும் போறாங்க…
பானுவும் என்னோட பக்கத்து சீட் காரரும் பேந்த பேந்த முழிக்கிறாங்க…
அப்போ ஓடிக்கிட்டு இருக்க தேவ் சரக்குனு ஒரு U turn அடிச்சு மறுபடியும் வந்து
வண்டிய ஸ்டார்ட் பண்ணி பானுவ உக்கார வச்சி தப்பிச்சு போயிடுவான்………

ஏர்போர்ட்ட நெருங்கும்போதே செனட்டர் கிட்ட சொன்ன 24 மணி நேரம் தாண்டி ஒரு
நிமிஷம் ஆயிடும்…

அடுத்த காட்சி..

செனட்டர் வீடு…. பானுவ கொண்டு வந்து அவங்க வீட்டுலயே வீட்டுட்டு செனட்டர பாத்து
தேவ் இந்த வசனத்த பேசுவார் :

"நீங்க இந்தியாவுல இருந்து பானுவ ஏமாத்தி இங்க அமெரிக்காவுக்கு கூட்டிட்டு
வந்தீங்க அது உங்க கேரக்டர்!
நான் சவால்ல சொன்ன மாதிரி 24 மணி நேரத்துக்குள்ள பானுவ கூட்டிட்டுப் போக
முடியல…
ஆனா சவால்ல தோத்துட்டு உங்கள ஏமாத்தி கூட்டிட்டுப் போக நான் விரும்பல…
அதனால தான் பானுவ இங்க விட்டுட்டுப் போக வந்தேன்….
இது தான் இந்த தேவோட கேரக்டர்"

அப்பிடின்னு சொல்லிட்டு பானுவ அங்கேயே விட்டுட்டு அவர் மட்டும் தனியா ஏர்போர்ட்
வந்துடுவார்….

சரி நம்மூர்ல ரெயில்வே ஸ்டேஷன்ல க்ளைமாக்ஸ் சீன் காட்டுற மாதிரி தெலுங்குல
கொஞ்சம் ரிச்சா, ஏர்போர்ட்ல காட்டுவாங்க போல இருக்குன்னு நெனச்சா….
தேவ் பாட்டுக்கு ஃப்ளைட்ல ஏறிடுவான்..ஃப்ளைட்டும் கெளம்பிடும்…..
இப்போ ஃப்ளைட்டுக்குள்ள காட்டுறாங்க…..
தேவ் அப்படியே நினவுகள்ல மூழ்கி சோகமா உக்காந்து இருப்பார்….
அப்போ Air Hostess வந்து excuse me sir…chocolates please … அப்பிடின்னு சொல்லி
சாக்லேட்ட நீட்டுவாங்க…
ஒரு சாக்லேட்ட எடுத்து, கவர பிரிப்பார்…. கவருக்குள்ள எழுதி இருக்கும் --"we
miss you" அப்பிடின்னு ….
பின்னாடி திரும்பிப் பாத்தா பானுவும், செனட்டரும் "ஈ"ன்னு இளிச்சுட்டு
நிப்பாங்க….

"ஏ தெலுசா தெலுசா பிரேமம் தெலுசா…" பாட்டு திரும்பவும் ஒலிக்குது…………..

நீங்க கொஞ்சம் இதயம் வீக்கானவர்னா இந்த படத்தோட சில ஸ்டில்ச மட்டும் இங்க
போயிப் பாருங்க :
லேசான மனசுக் காரங்களுக்கு<http://www.indiaglitz.com/channels/telugu/moviegallery/8001.html>

இந்த படத்தோட சில காட்சிகளையாவது பாக்கனும்னு உங்களுக்கு மனசுல ஆசையும்,
தெம்பும் இருந்தா இங்கப் போயி பாருங்க :
கொஞ்சம் தெம்புள்ளவங்களுக்கு<http://www.indiaglitz.com/channels/telugu/trailer/8001.html>
இவ்வளவுக்கப்புறமும், இல்ல ! நான் அந்தப் படத்தையே முழுசாப் பாக்கனும்னு
அடம்புடிச்சீங்கன்னா…
நீங்க ஆயுள் காப்பீடு எடுத்ததுக்கு ஒரு அத்தாட்சிய எனக்கு மின்மடலா அனுப்பி
வையுங்க…அந்த படத்தோட DVD- ய இலவசமா நானே உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்…

Wednesday, May 28, 2008

செல்லரிக்கும் காதல்

அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது.

*

காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்

*

நீ சொன்னபடியே
உன்னை மறந்துவிடுகிறேன்.
என்னுடன் கலந்துவிடு.

*

என்னை இதயத்தில் சுமந்தாய்.
உன்னை உயிரில் வைத்தேன்.
இதய மாற்று சிகிச்சை எளிது.
உயிர் மாற்று சிகிச்சை?

*

செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.

இம்சை அரசி திருமணம், எனது பயணம், ஒரு மலையாளக் கவிதை

16 மே 2008 வெள்ளிக்கிழமை

சுந்தரா ட்ராவல்ஸ் பதிவுக்கு பிறகு நான் ஊருக்கு கிளம்பினாலே ‘என்ன சுந்தரா ட்ராவல்ஸ்லயா?’ என்று அலுவலகத்தில் நண்பர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.அதனால் இம்முறை முன்பதிவு செய்துவிட வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். ஆனால் வழக்கம்போல் எனது பொறுமை, சோம்பேறித்தனமெனும் எல்லையைத் தொட்டுவிட்டதால் பயண நாள் வரை முன்பதிவு செய்யவில்லை.

மதியம் மணி 2:00 :

மதியம் உண்ட மயக்கத்தில் உறக்கம் தள்ள, அலுவலகத்துக்குள்ளேயே இருக்கும் விடுதியில் தங்கியிருந்த நண்பனிடம் அறை சாவியை வாங்கிக்கொண்டு அவன் அறைக்கு சென்றுவிட்டேன். ‘தூங்கக்கூடாது, கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருந்துவிட்டு எழுந்துவிடலாம்’ எனும் தெளிவான முடிவோடு படுக்கையில் சாய்ந்துவிட்டு எழுந்தபோது மணி 3:00.

மதியம் மணி 3:00 :

அலறியடித்து வண்டியைக் கிளப்பிக்கொண்டு வீட்டிற்குப் பறந்தேன். 6 மணிக்கு மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் பெங்களூர் செல்லும் கர்நாடகா அரசுப்பேருந்தை பிடித்துவிட திட்டம். அதற்கு லிங்கம்பள்ளியில் 5 மணிக்கு மின்ரயிலைப் பிடிக்கவேண்டும். 4:30 மணிக்காவது வீட்டிலிருந்து கிளம்பவேண்டும். வீட்டிற்கு 4 மணிக்கு போய்விட்டால் போதும். இன்னும் நேரமிருக்கிறது என்ற கெத்தில் வீட்டிற்கு அருகில் வந்ததும் அழகியதமிழ்மகனில்(ATM) பணமெடுத்துக்கொண்டு கடையில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு கரும்புச்சாறு கடைக்கு வந்தேன். இரண்டு கப் குடித்துவிட்டு பையிலிருந்து பணத்தையெடுக்கும்போது கையோடு வந்த நண்பனின் விடுதியறை சாவி என்னைப்பார்த்து எகத்தாளமாக சிரித்தது.

மதியம் மணி 3:45 :

‘மச்சான், நாந்தாண்டா பேசறேன். உங்கிட்ட இன்னொரு ரூம் சாவி இருக்கா’
‘இல்லடா.. என் ரூம்மேட் ஊருக்கு போயிட்டான். ஒரு சாவிதான் இருக்கு. ஏண்டா?’
‘ஒன்னுமில்ல. நீ ஆஃபிஸ் கேட்டுக்கு வா. நான் சாவிய எடுத்துட்டு வர்றேன்’
வந்த வழியே திரும்பி போய் அவனிடம் சாவியைக் கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தபோது மணி 5

மாலை மணி 5 :

இனிமேல் அந்த கர்நாடகா பேருந்தைப்பிடிக்க வாய்ப்பில்லாததால் 8 மணிக்கு கிளம்பும் ஆந்திரா பேருந்தை பிடிக்க பொறுமையாக கிளம்பலாமென்று பைக்குள் எல்லாவற்றையும் திணித்துவிட்டு ஒரு குளியலைப் போட்டேன். தலைக்கு குளித்ததும் தூக்கம் வருகிற மாதிரி இருந்தது. ‘தூங்கக்கூடாது, கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருந்துவிட்டு எழுந்துவிடலாம்’ எனும் அதே தெளிவான முடிவோடு படுக்கையில் சாய்ந்துவிட்டு எழுந்தபோது மணி 6:30.

மாலை மணி 6:30 :

ஆட்டோவுக்கு காத்திருந்து சலித்து, நடந்து, பின் லிஃப்ட் கேட்டு ஒருவழியாக ரயில் நிலையம் சென்றபோது மணி 6:45. நாம்பள்ளி செல்லும் அடுத்த ரயில் 6:55 க்கு கிளம்ப தயாராக நின்று கொண்டிருந்தது. கவுண்டரில் பயணச்சீட்டு வாங்க எனக்கு முன்னால் இன்னும் மூன்றே பேர் இருந்த போது அந்த ரியலும் ‘கூ’ என்று (எனக்கு சங்கு) ஊதியபடி கிளம்பிப் போய்விட்டது. அடுத்து செக்கந்தராபாத் செல்லும் ரயிலில் பேகம்பேட் வரை சென்றுவிட்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் போகலாமென்று அதி உன்னத முடிவெடுத்து பேகம்பேட்டுக்கே சீட்டு வாங்கினேன். 7:20 க்கு அந்த ரயில் கிளம்பியது.

இரவு மணி 8 :

பேகம்பேட் ரயில்நிலையத்துக்கு வெளியே வந்து ஆட்டோ பிடித்து பேரம் பேசி ஏறியமர்ந்தபோது பத்து நிமிடம் கழிந்திருந்தது.
‘அண்ணா கொஞ்சம் சீக்கிரம் போங்க. பஸ்ச புடிக்கனும்’
‘பஸ் எத்தன மணிக்கு?’
‘8 மணிக்கு’
‘மணி என்ன இப்போ?’
‘8:10’
என்னை முறைத்துவிட்டு முறுக்கினார் ஒரு இருட்டு சந்துக்குள். ஒரு கிலோ மீட்டர் போனதும் அங்கு ஒரு கடமை தவறாத கண்ணியமான காவல்துறை அகராதி ‘இது ஒன் வே. திரும்பிப் போ…போஓஓஓஓஓ’ என்று ஜெயம் சதா மாதிரி (ஆனால் தொப்பை இருந்தது) கை நீட்ட, வந்த வழியே ஆட்டோ திரும்பியது. நான் எங்காவது தனியாக கிளம்பினால் எனக்கு கம்பெனி கொடுக்க சனியனும் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிடும்போல! உருண்டு புரண்டு ஆட்டோ பேருந்து நிலையம் வந்தபோது மணி 8:45.

இரவு மணி 9 :

பெங்களூர் செல்லும் கடைசி அரசுப்பேருந்து கிளம்பிக்கொண்டிருந்தது. சீட்டிருக்கிறதா என்று நடத்துனரைக்கேட்டால் ஒன்றே ஒன்றுதான் இருப்பதாக பாவமாக சொன்னார். எனக்கு அரை டிக்கட் இருந்தாலே போதுமென்று சொல்லி ஏறிக்கொண்டேன். இருக்கையில் சாய்ந்து, ‘தூங்கலாமா? கண்ணை மட்டும் மூடிப் படுத்திருக்கலாமா?’ என்று யோசித்துக்கொண்டே தூங்கி விட்டேன்

17 மே 2008 சனிக்கிழமை

காலை மணி 9:00 :

மெஜஸ்டிக்கில் இறங்கியதும் நண்பனுக்கு தொலைபேசி, அலுவலகம் செல்ல இருந்தவனை வீட்டிலிருக்க சொல்லி, 171 பிடித்து கோரமங்களா போய் அவன் வீட்டைக்கண்டுபிடித்தபோது மணி 10 ஆகியிருந்தது. இரண்டு சமையலறை அளவுக்கு இருந்த அந்த வீட்டின் வாடகை 7500 ரூபாய்! குளித்து முடித்து சமைத்து வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி, வெண்டைக்காயையும், நண்பன் சூடாக்கிக்கொடுத்த தேநீரையும் பருகிய பிறகு உலகம் அழகாக தெரிந்தது.(எரிக் , நீ நல்லாருப்படா!) அப்பொழுதே கிளம்பி இரவுக்குள் நாமக்கல் செல்லலாமா அல்லது இரவு கிளம்பி காலை நேராக திருமணத்துக்கு போய்விடலாமா என்று குழப்பமாக இருந்ததால், இம்சையரசிக்கே தொலைபேசினேன். நள்ளிரவு 3:30 மணிக்கு (காலையில் என்று பொய் சொன்னார்) திருமணமென்பதால் இரவு தங்கிக்கொள்ள வசதி செய்திருப்பதாக சொல்லவும், உடனே கிளம்ப முடிவெடுத்தேன்.

காலை மணி 11 :

கோரமங்களா வாட்டர் டேங்க் அருகே ஓசூருக்கு பேருந்தேறினேன். ஊர்ந்து ஊர்ந்து சென்றது. மடிவாலா – எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலப்பணிகள் இன்னும் முடிவடையவில்லை. பல இடங்களில் மரங்களை வெட்டிப்போட்டிருந்தார்கள். ஆனாலும் பெங்களூருக்கே உரிய அந்த ‘பசுமை’ மாற வில்லை ;) 12:30 மணிக்கு ஒசூரை அடைந்தேன்.

மதியம் மணி 1 :

சேலம் செல்லும் அரசு விரைவுப்பேருந்திலேறி படுத்ததுதான் தெரியும். எப்பொழுது சேலம் வந்ததென்றே தெரியவில்லை. 6 மணிக்கு சேலத்திலிறங்கி கடைவீதிக்கு சென்று பரிசுப்பொருள் வாங்கிக்கொண்டு திரும்பினேன். அன்று/அடுத்தநாள் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்திக்கு திருமணமென்பதால் சேலமே ஒளிமயமாக இருந்தது. அடுத்த பேருந்தைப்பிடித்து நாமக்கல்லை அடைந்தபோது மணி 8.

இரவு மணி 8 :

‘ஹலோ’
‘சொல்லுங்க’
‘sam பேசறேன்’
‘யாரு?’
‘சாம்ராஜ் பேசறேன்’
‘ ’
‘அருட்பெருங்கோ பேசறேங்க’
‘அவ தூங்கறா. நான் அவ ஃப்ரெண்ட் பேசறேன். ஒரு நிமிசம் இருங்க அவ தம்பிக்கிட்ட கொடுக்கறேன்’
‘சரிங்க’
‘அண்ணா நீங்க இப்போ எங்க இருக்கீங்க?’
‘பஸ்டாண்ட்லதான்ப்பா’
‘பஸ் எல்லாம் வெளிய வர்ற இடத்துல வெயிட் பண்ணுங்க. நான் வந்துடறேன்’
‘ஓக்கே’

‘ஹலோ…அண்ணா எங்க நிக்கறீங்க?’
‘நீ சொன்ன எடத்துலதாம்ப்பா’
‘நானும் பஸ் வெளிய வர்ற இடத்துலதான் நிக்கறேன்’
‘பக்கத்துல ஒரு டைட்டன் வாட்ச் கடை இருக்கு’
‘நானும் அங்கதான் நிக்கறேன்’
‘தம்பி கொஞ்சம் பின்னாடி திரும்பு’
‘ஹை’
‘ஹை’

இரவு மணி 9 :

விடுதிக்கு சென்று மீண்டுமொரு குளியலைப்போட்டேன். அறையில் கட்டில் ஒரு மூலையிலும் தொ.கா.பெட்டி இன்னொரு மூலையிலும் இருந்தது. அதில் நமீதாவே த்ரிஷா மாதிரிதான் தெரிந்தார். சின்னத்திரையை விட்டு பெரிய திரைக்கு போக முடிவெடுத்து வெளியே வந்தேன். நடக்கும் தூரத்தில் இருந்த KS திரையரங்கில் யாரடி நீ மோகினி ஓடிக்கொண்டிருந்தது. கூட்டம் அதிகமில்லை. பக்கத்திலேயே ஒரு பரோட்டா கடையில் சாப்பிட்டுவிட்டு (வெகுநாட்களுக்கு பிறகு நிறைவாக சாப்பிட்ட திருப்தி) திரையரங்கிற்குள் நுழைந்தேன். வலைப்பதிவில் வேண்டிய அளவுக்கு இதன் விமர்சனங்களைப் படித்துவிட்டதால் சில காட்சிகள் தவிர மீதிப்படம் சப்பென்று இருந்தது.
நயன் அழகாக இருந்தார். அவர் தங்கையாக வந்த மலையாளக் கவிதை அழ்ழகாக இருந்தார்.

இரவு மணி 1:30 :

விடுதியறைக்கு திரும்பி ‘தூங்கலாமா, கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருக்கலாமா’ என்று யோசித்ததில், இரண்டில் எதைச் செய்தாலும் திருமணத்துக்கு போக முடியாதென்று அனுபவ அறிவு சொல்லவும் விழித்தபடியே ஒரு லோக்கல் சேனலில் இளையராஜாவை ரசித்துக்கொண்டிருந்தேன்.

இரவு மணி 2:30 :

‘ஹலோ..ஜெயந்தி பேசறேன்’
‘சொல்லுங்க முழிச்சுட்டுதான் இருக்கேன்’
‘3 மணிக்கு அங்க பஸ் வரும். கிளம்பி ரெடியா இருங்க’
‘நான் கிளம்பிக்கறேன். நீங்கதான் கல்யாணப்பொண்ணு நீங்க மொதல்ல கெளம்புங்க’
‘நானும் கிளம்பி ரெடியா இருக்கேன். சும்மாதான உட்காந்திருக்கேன்னு எல்லாரையும் எழுப்பி விட்ற வேலைய எனக்கு கொடுத்துட்டாங்க’
‘சரி நீங்க அடுத்த ஆள எழுப்புங்க. நான் போய் கெளம்புறேன்’

இரவு மணி 3:00 :

குளித்து முடித்து கிளம்பி பேருந்துக்காக காத்திருந்தபோது அறைக்குள் புயல் மாதிரி ஒருவர் நுழைந்தார்.
‘ஹாய்.. ஐ யாம் பாலா’
என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கேட்டேன், ‘ஜெயந்தி ஃப்ரெண்டா?’
‘ம்ம்ம் ப்ளாக் மூலமா தெரியும்’
‘ஓ.. நீங்களும் ப்ளாக் எழுதுவீங்களா?’
‘இல்ல இல்ல படிக்கறதோட சரி. உங்களுக்கு எப்படி ஜெயந்திய தெரியும்?’
‘எனக்கும் ப்ளாக் மூலமாதான். அப்பறம் ஒரே கம்பனிலதான வேலை செய்யறோம்’
‘நீங்களும் ப்ளாக் எழுதறீங்களா?’
‘ம்ம்ம் ஆமாங்க’
‘என்ன பேர்ல?’
‘அருட்பெருங்கோ ங்கற பேர்ல எழுதறேன்’
‘நீங்க தான் அருட்பெருங்கோவா?’ நம்பிக்கையே இல்லாமல் கேட்டார். இது எப்பொழுதும் நடப்பதுதான். என்னை நேரில் பார்க்கும் யாருமே நான்தான் அருட்பெருங்கோ என்று சொன்னால் நம்ப தயங்குகிறார்கள் :)

18 மே 2008 ஞாயிற்றுக்கிழமை

அதிகாலை மணி 4:00 :

நாமக்கல் அருகே இருக்கும் வள்ளிபுரம் சிவன் கோவில் களை கட்டியிருந்தது.உறவினர், நண்பர்கள் புடை சூழ சரியாக 4:42 மணிக்கு மோகன் பிரபு கைது செய்யப்பட்டார். கைது செய்த ஜெயந்திக்கு பரிசு கொடுத்து வாழ்த்தலாமென்றால் அம்மணியை பிடிக்க முடியவில்லை. மாப்பிள்ளை வீட்டு அழைப்பு என்று மாயமாக மறைந்துவிட்டார். ஒருவழியாக காத்திருந்து அவர்களிருவரும் சாப்பிடப்போன நேரம் தட்டைப்பிடுங்கிவிட்டு பரிசைக்கொடுத்துவிட்டு கிளம்பினோம்.

காலை மணி 8 :

நானும் பாலாவும் அறைக்குத் திரும்பி பைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். கோவையிலிருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் ரயிலை சேலத்தில் 10 மணிக்கு பிடித்துவிட திட்டம். எந்த பேருந்தும் அந்த இடத்தில் நிறுத்தாததால் ஆட்டோ பிடித்து பேருந்துநிலையம் சென்று, காத்திருந்து, பேருந்து வந்ததும் அடித்து பிடித்து ஏறி நிற்பதற்கு இடம் பிடித்தபோது மணி 8:45. ஒரு மணி நேரத்தில் சேலத்துக்கு சென்று ரயிலை பிடிப்போமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. அம்மா, அப்பா, அக்கா எல்லோரும் அந்த ரயிலில்தான் திருப்பூரிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து கொள்ளலாமென்றுதான் அடுத்தநாள் வரவேற்புக்கு செல்லாமல் முதல்நாள் திருமணத்துக்கு சென்றிருந்தேன். 9:55 க்கு பைபாஸ் சாலையில் இறங்கியதுமே, ‘ரயில், சேலம் சந்திப்பில் நின்று கொண்டிருப்பதாக’ அக்கா தொலைபேசினார். அவசரமாக ஆட்டோ பிடித்து ஜங்சனை அடைந்து வரிசையில் நின்று டிக்கட் வாங்கி முதலாம் பிளாட்பாரத்திற்கு நாங்கள் போவதற்குள்…. ரயில் போய்விடவில்லை :) நிதானமாக ஏறி, ஜனனியோடு விளையாடி, பின் நன்றாக தூங்கிக்கொண்டே சென்னை சென்று சேர்ந்தேன்.

கவிதைப் பிரியர்களுக்காக அந்த மலையாளக் கவிதை :
[slideshow id=1 w=320 h=400]

Monday, May 26, 2008

காதல் பார்வை

என் கண்களைக் கட்டிப்பிடித்து
உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
‘கண் கட்டி வித்தை’யா?

*

விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்.

*

நீ பார்க்கும்பொழுதெல்லாம்
கண்களை மூடிக்கொள்கிறேனா?
உன் பார்வைகளை இமைக்குள் சேமிக்கிறேன்!

*

நேற்றிரவு நிலவை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
நிலா குளிர்ச்சியாக இருந்தது!

*

செடி நீட்டும் பூவுடன் சேர்த்து
பூ நீட்டும் செடியினையும் நேசிக்க
உன் பார்வைதான் கற்றுக் கொடுத்தது.

Friday, May 16, 2008

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - நிறைவுப் பகுதி

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - முதல் பகுதி

"ஹலோ, நான் வினோத் பேசறண்டா"

"ம்ம்ம்… சொல்றா, உயிரோடதான் இருக்கியா?" சலிப்பு + கோபத்துடன் கேட்டான் அருள்.

"மச்சி போனவாரம் வந்தவுடனே ஆஃபிஸ்ல கொல்கத்தா அனுப்பிட்டானுங்கடா இன்னைக்குதான்
வர்றேன்.. சாரிடா போறதுக்கு முன்னாடி கால் பண்ண முடியல"

"சரி சரி ஈவினிங் ஃப்ரியா இருந்தா வீட்டுப் பக்கம் வா"

"வர்றேன் வர்றேன்… இளவரசிகிட்ட இருந்து எதுவும் கால் வந்துச்சா? என்ன சொன்னா?
எப்படி ஃபீல் பண்ணா"

"காலும் வரல.. கையும் வரல… நீ ஈவ்னிங் வா நேர்லப் பேசிக்கலாம்"

வினோத்துக்குக் கொஞ்சம் குழப்பமாயிருந்தது.
அன்று மாலையே வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு அருள் வீட்டுக்கு வந்தான்.

மாடியில் தனியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான் அருள்.

"டேய் என்னடா தனியா மொட்டமாடியில உட்காந்திருக்க?"

தன்னுடைய வீட்டில் விசயத்தைச் சொல்லி பாதி சம்மதம் வாங்கியது, இளவரசி இன்னும்
அவனிடம் பேசாதது எல்லாம் சொல்லி முடித்தான்.

"அவ கிட்டப் பேசனும் போல இருக்குடா"

"அதான் இந்த வாரம் நேர்ல சந்திக்கப் போறீங்கல்ல.. அப்போ நேர்லையேப் பேசிக்க
வேண்டியதுதான?"

"நேர்லப் பாக்கறதுக்கு முன்னாடி ஒரு தடவையாவதுப் பேசலாம்னு பாத்தேன் "

"சரி இரு நம்ம ஜூனியர் பசங்க மூலமா ட்ரை பண்ணிப் பாக்கறேன்"

கல்லூரி ஜூனியர் ஒருவனை அழைத்து அவன் மூலம் இன்னொரு பெண் நம்பர் வாங்கி,
அவளிடம் ஒரு பொய்யை சொல்லி இளவரசி நம்பரை வாங்கிக் கொண்டான்.

"ஜாப் விஷயமா.. அப்டி இப்டி னு சொல்லி அவ நம்பர் வாங்கியாச்சு… ந்தா ட்ரை
பண்ணு"

"மச்சி… நீயே மொதல்லப் பேசுடா… அவங்கப்பா விசயத்த அவகிட்ட சொல்லிட்டாரா
இல்லையான்னு தெரியல… நான் பேசினா உடனே கட் பண்ணிட்டான்னா?"

"சரி இரு நானேக் கால் பண்றேன்"

"ஹலோ இளவரசி… நான் வினோத் பேசறேன்"

"வினோத்?"

"சுத்தமா மறந்தாச்சா? 'மாடு' வினோத் பேசறேன்… இப்பவாது ஞாபகம் இருக்கா?"
.கல்லூரியில் அவன் செல்லப் பெயர் 'மாடு'.

"ஹே சாரிப்பா… நீ எப்படியிருக்க? இப்போ எங்க இருக்க?"

"நான் நல்லா இருக்கேன்.. இப்போ சென்னைல இருக்கேன்… சரி ஒரு நிமிசம், அருள்
பக்கத்துல தான் இருக்கான்.. உங்கிட்டப் பேசனுமாம்… இரு கொடுக்கறேன்" அவள்
இயல்பாகவே பேசுவதைக் கேட்டு விட்டு செல்லை அருளிடம் கொடுத்தான்.
செல்லை வாங்கியவன் அவள் பேசட்டுமென்று செல்லைக் காதில் வைத்து அமைதியாகவே
இருந்தான்.

அந்தப் பக்கம் இன்னும் அமைதியாகவே இருக்கவும், அவனே "ஹலோ…" என்றான்.

பதில் எதுவும் இல்லை. மறுபடி மறுபடி ஹலோ… ஹலோ… என்று சொல்லிப் பார்த்தும்
பயனில்லை.இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது.

"கால கட் பண்ணிட்டாடா"

"சரி போன்ல எதுக்குப் பேசிக்கிட்டு? எல்லாத்தையும் நேர்ல பாக்கும்போது பேசிக்க…
ஓக்கேவா? சரி நான் கிளம்பறேன்… எதுவா இருந்தாலும் எனக்குக் கால் பண்ணுடா"

"ம்ம்.. போயிட்டு வந்து கூப்பிட்றேன்"
தானே அழைத்தும் அவள் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது அவனுக்கு வேதனையாக
இருந்தது. அன்றிரவு முழுவதும் எதை எதையோ நினைத்துக்கொண்டேப் படுத்திருந்தவன்
விடிந்ததும் தூங்கிப் போனான். நேரில் பார்ப்பதற்குமுன் ஒருமுறையாவதுப் பேசிவிட
வேண்டுமென்று நினைத்து அவள் செல்லுக்கு அழைக்கும்போதெல்லாம் முதல் முறை யாருமே
எடுப்பதில்லை. அடுத்தமுறை அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருக்கும்.

அவள் தன் மேல் கோபத்தில் இருக்கிறாள் என்ற கவலையை விட ஏன் கோபமாய் இருக்கிறாள்
என்றக் குழப்பமே அவனை அதிகமாக வாட்டியது.
அடுத்த வாரம் இரு குடும்பமும் சந்தித்த போது, அவனுடைய அப்பாவும் அவளுடைய
அப்பாவும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்ற விசயம் தெரிய வர, நண்பர்களே
சம்பந்திகளாவதில் இருவருக்குமே மகிழ்ச்சிதான். இரண்டு குடும்பத்திலும்
எல்லோருக்குமேப் பிடித்துப் போக அப்பொழுதே அடுத்த மாதத்தில் திருமணத் தேதியும்
குறிக்கப்பட்டது. பெண் பார்க்க வருவதற்கு மட்டும் ஒத்துக் கொண்ட அப்பா,
கடைசியில் திருமணத்தையே முடிவு செய்தது அவனுக்கு ஆச்சர்யமாகவும், சந்தோசமாகவும்
இருந்தது. ஆனால் இளவரசி வீட்டில் இருந்த அன்று முழுவதும் இளவரசியிடம் தனியாகப்
பேச எவ்வளவோ முயற்சி செய்தும் அவனால் அவளிடம் பேச முடியவில்லை. அவளுடைய
அப்பாவிடம் தான் பேசியபோது அவர்கள் காதலித்ததை அவன் சொல்லவே இல்லை என்பதும்,
அவர்கள் நண்பர்களாக தான் பழகினார்கள் என்று சொன்னதும் அவளுக்குத் தெரியுமா,
தெரியாதா என்பதையும் அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. மற்றவர்களும்
"அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னா நாம சம்மதம் சொல்லிட்றதுதான் மரியாதை" என்ற
ரீதியில் பொதுவாகவேப் பேசிக்கொண்டிருக்க அவனால் எதையும் தெரிந்து கொள்ள
முடியவில்லை. இரண்டு பேர் வீட்டிலுமே அவனால் இதைக் கேட்க முடியாத நிலையில் என்ன
செய்வதென்றே தெரியாமல் இருந்தான். ஆனால் அவள் முகத்தில் சொல்ல முடியாத ஓர்
உணர்ச்சி இருப்பதை மட்டும் அவனால் கவனிக்க முடிந்தது. அது சோகமா தன் மேல்
இருக்கும் கோபமா எனத் தெரிந்து கொள்ள முடியாமலேயே சென்னைக்குத் திரும்பி
விட்டான்.
மெரீனாக் கடற்கரை.

"மச்சி உனக்கு எங்கேயோ மச்சமிருக்குடா… எல்லாத்தையும் இவ்வளவு ஈசியா
முடிச்சிட்ட… அடுத்த மாசம் குடும்பஸ்தனாகப் போற…" சிரித்துக் கொண்டே சொன்னான்
வினோத்.

"டேய் எனக்கு எல்லாமே கனவு மாதிரி இருக்குடா… நாந்தான் அவங்கப்பாகிட்டப் போய்
அப்படியெல்லாம் பேசினேனா? எங்கப்பா கிட்ட எந்த விஷயமும் ஓப்பனா நான்
பேசினதேயில்ல… எந்த தைரியத்துல அவர்ட்ட பேசினேன்னும் தெரியல… இளாவ விட்டுப்
பிரிஞ்சிடுவேனோன்ற பயமே எனக்கு தைரியமா மாறிடுச்சுனு நெனைக்கிறேன்"

"அதான் எல்லாமே சுபமா முடிஞ்சிடுச்சுல்ல… அப்புறம் ஏண்டா பழையக் கதையெல்லாம்?"

"இல்லடா… யாரால எல்லாம் காதலுக்குப் பிரச்சினை வரும்னு நெனச்சனோ அவங்க எல்லாம்
சமாதானம் ஆயிட்டாங்க… ஆனாக் காதலிக்கிறப் பொண்ணே இப்பக் கண்டுக்கலன்னா…
கஷ்டமாருக்குடா"

"மச்சி நீ ஃபீல் பண்ணாத… நான் அவ ஃப்ரெண்டுகிட்டப் பேசி அவ மனசுல என்னதான்
இருக்குனு தெரிஞ்சிக்குறேன்…நீ கல்யாண வேலைய மட்டும் பாரு… எல்லாம் நல்லபடியா
முடியும்"

அருளுக்கு,அவன் பேசுவதுக் கொஞ்சம் நம்பிக்கையாக இருந்தது.
அந்த ஒரு மாத இடைவெளியிலும் கூட அவன் இளவரசியோடு எதுவும் பேசமுடியவில்லை.
வீட்டிலிருப்பவர்களிடமும் அதை சொல்ல முடியாத நிலை. அந்த விசயம்
மற்றவர்களுக்குத் தெரியாமலும் சமளித்துக் கொண்டான். திருமண ஏற்பாடுகள்
எல்லாவற்றிலுமே அவனை சந்திக்காமல் தப்பித்துக் கொள்ளவேப் பார்த்தாள். சந்திக்க
வேண்டிய நிலையிலும் கூட நேருக்கு நேராக அவனைப் பார்ப்பதை அவள் தவிர்ப்பது
அவனுக்குப் புரிந்தது. திருமணம் முடிந்தபிறகு தன்னிடமிருந்த அவள் தப்பிக்க
முடியாது என்றெண்ணியவன், எந்தக் கோபமாக இருந்தாலும் திருமணம் முடிந்தபிறகு
அவளிடம் கேட்டு சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்
இருந்தான்.திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு. திருமண மண்டபத்தில், மணமகன்
அறையில் நண்பர்கள் எல்லோரும்போன பிறகுத் தனிமையில் இருந்தவன் தன்னுடையப்
சூட்கேஸில் தேடி, அதையெடுத்தான்.

அவனுக்கு அவள் எழுதியக் கடைசிக் கடிதம். மீண்டுமொரு முறை படித்துப் பார்த்தான்.
கண் லேசாகக் கலங்கியது.
"எப்படி இளவரசி உன்னால இன்னொருத்தர கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சாதாரணமா
சொல்ல முடிஞ்சது? காதலிக்கிறப்ப பேசின வார்த்தையெல்லாம் ஆயுசுக்கும் மறக்காதே?
அப்போ செஞ்ச சத்தியமெல்லாம் காத்தோடப் போகட்டும்னு விட்டிருந்தியா? எவ்வளவு
கனவு கண்டோம்… எல்லாத்தையும் கனவாவே நெனச்சுக்கலாம்னு விட்டுட்டியா? எப்படி
இந்த மாதிரி ஒரு லெட்டர் எழுத உனக்கு மனசு வந்தது?" அவளிடம் கேட்பதாக
நினைத்துக் கொண்டு கடிதத்திடம் கேட்டுக் கொண்டிருந்தான். அதை மடித்து
வைத்துவிட்டுக் கண்களை மூடியபடி மறுபடி மனசுக்குள் பேச ஆரம்பித்தான்.
"இளவரசி, இப்ப உனக்கு எம்மேல என்னக் கோபம்னு எனக்குத்தெரியல… உங்க அப்பாவே
சம்மதம் சொன்ன பின்னாடி நீ ரொம்ப சந்தோசப்படுவன்னு எவ்வளவு ஆசையா இருந்தேன்…
ஆனா இப்பவரைக்கும் நீ எங்கிட்டப் பேசாம இருக்கிறது ஏன்னே எனக்குப் புரியல…
உன்கிட்ட சொல்லாமலயே உங்கப்பாகிட்ட வந்து பேசிட்டேன்னுக் கோபமா? நாமக் காதலிச்ச
விசயமே அவருக்குத் தெரியாதே… அது உனக்கு தெரியுமா தெரியாதான்னும் என்னால
தெரிஞ்சிக்க முடியல… ஒரு தடவையாது எங்கிட்டப் பேசியிருந்தீன்னா எல்லாத்தையும்
சொல்லியிருப்பேன்…மனசுக்குள்ள ஒருத்தர நெனச்சுட்டு இன்னொருத்தரோட வாழ என்னால
முடியாதும்மா… அதனாலதான் உங்கிட்ட சொல்லாமலேயே உங்கப்பாகிட்ட நேர்ல வந்து
பேசிட்டேன்… என்ன மன்னிச்சுடு! நாமக் காதலிச்ச விசயத்த உங்கப்பாவுக்குத் தெரிய
வச்சு, உம்மேல அவருக்கு இருந்த நம்பிக்கைய இல்லாமப் பண்ணிட்டனோன்னு என்னத்
தப்பா நெனச்சிக்கிட்டு இருந்தாலும் பரவால்ல… எல்லா விவரத்தையும் நாளைக்கு
சொல்லிட்றேன்… நாளைக்காவது என்னோட பேசுவியா?" அவன் குழப்பத்தில் இருப்பது
அவனுக்கேத் தெளிவாகத் தெரிந்தது. சம்பந்தமில்லாமல் எதை எதையோ யோசித்துக்
கொண்டிருந்தான். கொஞ்சம் மனதை மாற்ற, கதவைத் திறந்து பாலக்னி பக்கம்
போனான்.அப்போது மணமகள் அறையில் இருந்து ஒரு பேச்சு சத்தம் அவன் காதில் விழ
ஆரம்பித்தது.
"இளா! உனக்கு அருள் மேல இவ்வளவு நம்பிக்கையாடி? ஒரு வேளை உன்னோட லெட்டரப்
பார்த்துட்டு சரி எங்கிருந்தாலும் வாழ்கனு போயிருந்தார்னா என்னப் பண்ணியிருப்ப"

"அதெப்படிப் போக முடியும்? லவ்வர்ஸ்க்கு காதல விட அதிகமா இருக்க வேண்டியது
நம்பிக்கை! எங்கிட்ட அருள் காதல சொன்னப்ப நான் மறுத்தாலும் ஆறு மாசமா
எங்கிட்டப் பேசாமலே எந்த நம்பிக்கைல அவன் காத்திட்டிருந்தான்? அதே நம்பிக்கைல
தான் நானும் அப்படி ஒரு லெட்டர் எழுதினேன்! நானாவது ஆறு மாசம் கழிச்சுதான்
என்னோட லவ்வ சொன்னேன், அருள் பார்த்தியா லெட்டரப் பார்த்த அடுத்த வாரமே
எங்கப்பாகிட்ட பொண்ணு கேட்டு வந்துட்டான். என்ன விட அவனுக்கு தான்டி எம்மேல
காதல் அதிகம்! அதுவும் நாங்க லவ் பண்ண மாதிரி எங்கப்பாகிட்ட அவன் காட்டிக்கவே
இல்ல! அதனாலேயே எங்கப்பாவுக்கு அவனப் பிடிச்சுப் போயிருக்கும்!"
"அடிப்பாவி அருள டெஸ்ட் பண்றதுக்குதான் இப்படி சீரியஸா ஒரு லெட்டர் எழுதினியா?"

"சீச்சீ…எனக்கு அருளப் பத்திதான் முழுசாத் தெரியுமே அப்புறமென்னப் புதுசா
டெஸ்ட் பண்ணப்போறேன்? இன்னமும் அவனுக்கு அந்த inferiority complex மட்டும்
போகல. நான் பல தடவை எங்கப்பாகிட்ட வந்து பேசுன்னு சொல்லியும் என்னதான் பேச
சொன்னானேத் தவிர அவன் வந்து பேசறேன்னு சொல்லல. எங்க வீட்ல வேற, ஜாதகத்தப்
பாத்துட்டு சீக்கிரம் கல்யாணம் முடிக்கனும்னு சீரியசா அலையன்ஸ் பாக்க
ஆரம்பிச்சுட்டாங்க, அதான் அப்படி ஒரு லெட்டர் எழுதிட்டேன். அதுவும் சரியா
வொர்க் அவுட் ஆயிடுச்சு! பின்ன என்னடி வீட்டுக்கு வந்து பொண்ணுக் கேட்கவே
தைரியமில்லாதவன எந்தப் பொண்ணோட அப்பாவுக்கு தான் பிடிக்கும்?"
"அது சரி நீ அப்படி ஒரு லெட்டர் எழுதிட்டேன்னு சொன்னவுடனே நானே உண்மையாதான்
இருக்குமோன்னு நெனச்சிட்டேன். நீயும் காலேஜ்லேயே அருள்கிட்டப் பட்டும்
படாமதானப் பழகின!"

"ம்ம்… வெளியில அப்படித் தெரிஞ்சிருக்கலாம்… ஏன்னுத் தெரியல அருளுக்குப்
பணக்காரங்களப் பார்த்தாலேக் கொஞ்சம் அலர்ஜி. அதான் நானும் சினிமா,
ரெஸ்டாரண்ட்னு அவன வெளியில கூட்டிட்டு சுத்தியிருந்தேன்னு வச்சிக்கோ, என்னையும்
பிடிக்காமப் போயிடுச்சுன்னா என்னப் பண்றதுன்னு பயந்துட்டேன். எனக்கும் அதுல
இஷ்டம் இல்லாததும் ஒரு காரணம்"
"அதெல்லாம் சரி, ஆனா ஒரு நாள் அருள்ட்ட ஃபோன்ல பேசலன்னாக் கூட மூடவுட் ஆன
மாதிரி இருப்ப, எப்டி அவ்ளோ நாளாப் பேசாம இருந்த???"

"தினமும் மனசுக்குள்ளேயே சாரி கேட்டுக்கிறதத் தவிர வேற என்னப் பண்ண முடியும்?
தனக்குப் பிடிச்சது தன்ன விட்டு விலகிப் போறப்பதான எவ்வளவுக் கஷ்டப்பட்டாவது அத
அடையனும்னு தோணும்? அதனாலதான் பேசாம இருந்தேன்"
"அதுக்காக… எல்லாம் நல்ல படியா முடிஞ்சபின்னாடியுமா அலையவிடனும்?"

"அவன் வந்து எங்கப்பாகிட்டப் பேசிட்டுப் போனதுல இருந்து இன்னைக்கு வரைக்கும்
அவன்ட்டப் பேசனும்னுதான் துடிக்கிறேன்… ஆனா இவ்வளவு நாள் பேசாம இருந்து அருளக்
கஷ்டப்படுத்திட்டு இப்போ பேசனும்னு நெனச்சா வார்த்தை வர்றதுக்கு முன்னாடி
எனக்கு அழுகதான் வருது, அதனாலேயே அவனப் பார்க்கிறதையே அவாய்ட் பண்ணிட்டு
இருந்தேன்! ரொம்ப கஷ்டமா இருக்குடி" விட்டால் அழுது விடுவாள் போலிருந்தாள்.

"ஏ..ஏ…இன்னைக்கு அழாதம்மா…நாளைக்குப் போய் உன் ஹப்பிய கட்டிப்புடிச்சு
அழுதுக்கோ…இப்ப தூங்கு நானும் தூங்கப் போறேன்"

"ஆமாக் கண்டிப்பா நாளைக்கு first nightல அவனக் கட்டிப்பிடிச்சு அழத்தான்
போறேன்" கண்ணீரோடு் சிரித்தாள்.
தன் மேல் உள்ளக் கோபத்தில்தான் பேசாமள் இருக்கிறாள் என்று நினைத்துக்
கொண்டிருந்தவனுக்கு, தான் கோபப்படுவேனோ என்றுதான் அவள் பேச முடியாமல்
இருக்கிறாள் எனத்தெரிந்ததும் கவலை குறைந்தது.

"நீ சரியான லூசுடி" என்று நினைத்துக்கொண்டே கனவோடுத் தூங்கினான்.
அடுத்த நாள், திருமணம் முடிந்தது. முதலிரவு அறை. அருளைப் பார்த்ததும் பொங்கி
வந்த அழுகையோடு அவனை நெருங்குகையில், அவனும் கண்ணில் கண்ணீரோடு நிற்பதைப்
பார்த்து ஒன்றும் புரியாமல், அழுதுகொண்டே அவனைக் கட்டிப்பிடித்தாள் இளவரசி.
அழுகையோடு ஆரம்பமானது ஒரு முதலிரவு.

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - 3

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - முதல் பகுதி

"ஒரு ரெண்டு நிமிசம் நான் சொல்றத முழுசாக் கேட்டீங்கன்னா
சந்தோசப்படுவேன்…எம்ப்பேர் அருள். நான் காலேஜ்ல இளவரசியோட கிளாஸ்மேட். இப்போ
இளவரசிக்கு நீங்க மாப்பிள்ள பார்த்துட்டு இருக்கிறதாக் கேள்விப்பட்டு தான்
உங்களப் பார்க்க வந்திருக்கேன். உங்களுக்கு மருமகனா வர்றதுக்கு நீங்க என்னத்
தகுதிகள் எதிர்பார்க்கறீங்கனு எனக்குத் தெரியாது, நான் என்னோடத் தகுதிய
சொல்லிட்றேன். இப்போ நான் சென்னைல ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில ப்ராஜெக்ட் லீடரா
வொர்க் பண்றேன். மாசம் 30000 சம்பாதிக்கிறேன். எனக்கு எப்பவுமே எந்தக் கெட்டப்
பழக்கமும் இல்லனு சொல்ல முடியாது. காலேஜ்ல ஸ்மோக், ட்ரிங்க்ஸ் பண்ணதுண்டு, ஆனா
அதெல்லாம் நிறுத்தி இப்போ 5 வருஷம் ஆச்சு. இது நான் போன வருஷம் ஹெல்த் செக்கப்
பண்ணிக்கிட்ட ரிப்போர்ட். அப்புறம் எனக்கு ஜாதகத்துல நம்பிக்கை இல்ல,
இருந்தாலும் உங்க திருப்திக்காக இந்தாங்க என்னோட ஜாதகம். இளவரசிக்கூட 7
வருஷமாப் பழகினதுல எனக்கு அவளோட பாஸிட்டிவ், நெகட்டிவ்னு அவளப் பத்தி முழுசாத்
தெரியும். நான் இவ்வளோப் பேசறதுனால நானும், உங்கப் பொண்ணும் லவ் பண்றோம்னு
நெனச்சிடாதீங்க. இதுவரைக்கும் இளவரசிக்கிட்ட இதப் பத்தி நான் பேசினதில்ல. உங்க
அனுமதி இல்லாம அவகிட்ட நான் இதப் பத்திப் பேசறதும் நல்லா இருக்காதுனு
நெனைக்கிறேன். இதுல என்னப் பத்தி, என்னோடக் குடும்பத்துல இருக்கவங்களப் பத்தி
முழுசா எழுதியிருக்கேன்…படிச்சுப் பாருங்க… கிழிக்கிறதா இருந்தாலும் பரவால்ல,
ஒரே ஒரு தடவப் படிச்சுட்டு அப்புறமா கிழிங்க….அதுலையே என்னோட க்ளோஸ்
ஃப்ரெண்ட்சோட போன் நம்பர்ஸ் கூட இருக்கு, என்னப் பத்தி முழுசாத் தெரிஞ்சவங்க
இவங்க. என்னப் பத்தி விசாரிக்கனும்னா இவங்ககிட்ட நீங்கப் பேசலாம். நீங்க என்ன
ஜாதினு எனக்குத் தெரியாதுங்க, அதனால நான் உங்க ஜாதிதானான்னும் எனக்குத்
தெரியாது. உங்க statusசுக்கும் நான் சமம்னு சொல்ல முடியாது. ஆனா அவளோட
கேரக்டருக்கு நான் பொருத்தமானவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால, உங்களோட
statusக்கு ஏத்த மாதிரி உங்க ஜாதியில மாப்பிள்ள பார்க்கிறதுதான் உங்களோட
விருப்பம்னா, நான் எதுவும் சொல்லல. ஏன்னா அவ உங்கப் பொண்ணு, அவளோட வாழ்க்கையப்
பத்தி முடிவெடுக்கறதுல உங்களுக்கும் பங்கு இருக்கு. நான் என்னோட விருப்பத்த
மட்டும் தான் சொல்லியிருக்கேன், முடிவு உங்களோடதாவே இருக்கட்டும். ஒருவேளை
நீங்க என்ன நிராகரிச்சா, நான் வந்துப் பேசின விஷயம் எதுவும் இளவரசிக்குத் தெரிய
வேண்டாம்!"
சொல்லவந்ததை எல்லாம் சுருக்கமாக சொல்லிவிட்டு அவரிடம் தான் கொண்டு வந்திருந்த
கடிதத்தைக் கொடுத்தான். ஒரு மாதிரியாக அவனைப் பார்த்துவிட்டுக் கடிதத்தை
வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்கும் வரை அமைதியாகவே இருந்தவன்,
அவரும் படித்து விட்டு அமைதியாகவே இருக்கவும் அவரைப் பார்த்துப் பேசினான்.
"சார் நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிக்க விரும்பல, ஆனா எங்கம்மாகிட்ட எங்கப்பா
எப்படி நடந்துக்கனும்னு நான் விரும்பறனோ, அப்படிதான் என்னோட மனைவிகிட்ட நானும்
நடந்துக்குவேன். இதுக்கப்புறமும் நான் சொல்றதுக்கு எதுவுமில்ல. நாங்க வர்றோம்
சார்"
சொல்லிவிட்டு கேட்டை நோக்கி இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
"தம்பி ஒரு நிமிஷம்…"
திரும்பிப் பார்த்தார்கள்.
"வீட்டுக்குள்ள வாங்க…" புன்னகையோடு சொன்னார்.
எதையோ எதிர்பார்த்து வந்த வினோத் ஒன்றும்புரியாமல் அவனோடு உள்ளே சென்றான்.
இளவரசியின் அப்பா, அம்மாவோடு பேசி விட்டு "அடுத்த வாரம் அப்பாகிட்டப் பேசிட்டு
உங்ககிட்ட பேச சொல்றேங்க" என்று சொல்லிவிட்டு வெளியே வரும்போது காற்றில்
மிதப்பவனை போல இருந்தான் அருள்.விஷயம் இவ்வளவு சுலபமாக முடியும் என்று அவன்
எதிர்பார்க்கவேயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அன்று இரவு இருவரும் சென்னை திரும்ப ரயிலேறினார்கள். அதுவரைக்கும் எதுவுமேக்
கேட்காமல் இருந்த வினோத் வாயைத் திறந்தான்.
"மச்சி ஏண்டா அவர்ட்ட நீங்கக் காதலிச்ச விசயத்த சொல்லவேயில்ல?"
"டேய் எந்த அப்பன்கிட்டப் போய் நான் உங்கப் பொண்ணக் காதலிக்கிறேன்னு சொன்னாலும்
அது அவங்களுக்கு நம்ம மேல கோபத்ததான் வரவழைக்கும்… இல்ல உங்கப் பொண்ணும்தான்
என்னக் காதலிச்சான்னு சொன்னாலும் கோபம் அப்படியே பொண்ணு மேலத் திரும்பிடும்…
என்னமோ உலகத்துலப் பண்ணக்கூடாத பெரியத் தப்ப தான் பொண்ணு பண்ணிட்ட மாதிரி…
அதான் சொல்லல"
"சரி அந்த லெட்டர்ல அப்படி என்னதான் எழுதியிருந்த?"
"ம்ம்ம்… I am suffering from love. Please grant me your daughter னு
எழுதியிருந்தேன்"
"மச்சி நக்கல் பண்ணாதடா… அதுல ஒரு காப்பி கொடுத்தா நமக்கும் பின்னாடி உதவியா
இருக்கும்ல?"
"டேய் கடுப்பக் கிளப்பாத… இந்நேரம் இளவரசிக்கு விஷயம் தெரிஞ்சிருக்கனும்… நான்
அவ கால் பண்ணுவான்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்"
"அவங்கப்பா கிட்டயே அவ நம்பர வாங்கியிருக்கலாம்ல"
"போடாங்க… 7 வருச ஃப்ரெண்டுனு சொல்லிட்டு… மொபைல் நம்பர அவர்கிட்டயேக் கேட்க
சொல்றியா?"
"சாரி"
ரொம்ப நேரம் படியிலேயே அமர்ந்திருந்தவன், கடைசி வரை அவளிடமிருந்து கால் எதுவும்
வராததால், வந்து படுத்துக் கொன்டான், செல்போனைக் கையில் பிடித்தபடியே.
அடுத்த இரண்டு நாட்களும் அவளிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்துபோனான். தன்னுடைய வீட்டில் இந்த விசயத்தை எப்படிக் கொண்டுபோவது என்பதும்
பெரும் கவலையாகவே இருக்க, இரண்டு நாள் வேலை பார்த்தவன், மூன்றாம் நாளே
ஊருக்குக் கிளம்பினான். அப்பாவிடம் நேரடியாக இதை எப்படி சொல்வதெனத் தெரியாமல்
துணைக்கு அக்காவையும் அழைத்துக் கொண்டான். அப்பா வேலைக்கு போன பின், அக்கா
மூலமாக, அம்மாவுக்கு விசயத்தை முதலில் சொல்ல அம்மா குதித்த குதியில் இருவரும்
ஆடிப்போனார்கள். அவன் அம்மாவுக்கு எவ்வளவு வேகமாக கோபம் வந்ததோ, இரண்டு பேரும்
பேசப் பேச அவ்வளவு வேகத்திலேயேக் குறைந்தது.
"நான்லாம் உங்கப்பாகிட்டப் பேச மாட்டேண்டா… நீயாச்சு உங்கப்பாவாச்சு" என்று
சொன்னவள், "எல்லாம் பெரிய மனுசனாயிட்டாங்க நாம சொல்றத இனிமே எங்க கேட்கப்
போகுதுங்க" என்று முனக ஆரம்பித்தாள்.
"ம்மா… அந்தப் பொண்ணும் உன்ன மாதிரி ரொம்ப நல்லப் பொண்ணுதாம்மா" – என்கிற
ரீதியில் ஐஸ் வைக்க ஆரம்பித்தான்.
கிட்டத்தட்ட அம்மாவை சமாளித்துவிட்ட சந்தோசம் இருந்தாலும் அப்பாவை நினைத்தாலே
பயமாக இருந்தது.

அவன் எப்போதுமே அம்மா செல்லம் தான். அப்பாவிடம் அளவுக்கு அதிகமாகப்
பேசுவதில்லை.
அக்காவிடம் சொன்னான், "க்கா… அப்பாகிட்ட நீதான் பேசி எப்படியாவது சம்மதிக்க
வைக்கனும்…"
"அப்பாகிட்ட விஷயத்தக் கொண்டு போறது வரைக்கும்தான் என்னோட வேல… அதுக்கப்புறம்
அவர சம்மதிக்க வைக்கிறது உங்கைல தான் இருக்கு"
இரவு எல்லோரும் சாப்பிட்டு முடித்தப் பிறகு, அவன் அக்கா மெதுவாக அப்பாவிடம்
விசயத்தைச் சொல்ல… கேட்டு முடித்தவர் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தார். அவன்
தரையைப் பார்த்தான். அவராக எதுவும் கேட்டால் பதில் சொல்லலாம் என்று இருந்தான்.
"கொஞ்சம் தண்ணிக் கொடும்மா"
"நம்மத் தலைல தெளிச்சு வெளிய அனுப்பிடுவாரோ" என்று பயத்தோடே இருந்தான்.
தண்ணீரை வாங்கி மிச்சம் வைக்காமல் குடித்தார்.

அக்கா அவளைப் பார்த்து "எதாவது பேசுடா" என்ற அர்த்தத்தில் முறைத்தாள்.
"அந்தப் பொண்ண எனக்குப் பிடிச்சிருக்குன்னு மட்டும் நான் சொல்லல… கண்டிப்பா
உங்க எல்லாருக்கும் பிடிக்கும்" நிமிராமல் பேசினான்.
"எங்களுக்குப் பிடிக்கும்னு நீயே முடிவு பண்ணிட்டியா?" - அவன் அப்பா.
"உங்களுக்குப் பிடிச்ச மாதிரி நீங்களே எனக்கு ஒருப் பொண்ணப் பார்த்தாலும்,
எனக்கும் அந்தப் பொண்ணப் பிடிக்கும்னு நீங்களே முடிவுபண்ணிதானப் பாப்பீங்க" –
சத்தமாக பேச வேண்டும் என்று நினைத்தாலும் அவனிடமிருந்து சத்தம் அதிகம்
வரவில்லை.
"நாங்க ஒரு பொண்ணுப் பார்த்து அது உனக்கு பிடிக்கலன்னா… கண்டிப்பா வேற
பொண்ணதான் பாப்போம்… ஒரேப் பொண்ணக்காட்டி இவளதான் கல்யாணம் பண்ணனும்னு
சொல்லமாட்டேன்"
"நீங்க வந்து அந்த பொண்ணப் பாருங்க…அவங்க அப்பாகிட்டப் பேசுங்க… உங்களுக்குப்
பிடிக்கலன்னா அதுக்கப்புறம் நான் எதுவும் சொல்லல"
"ப்பா… அந்தப் பொண்ண எனக்கு நல்லாத் தெரியும்ப்பா… என்னோடக் கல்யாணத்துக்கு
வந்திருக்கு… நம்ம வீட்டுப் பொண்ணு மாதிரி நல்லாதான் பேசினா… ஒரு தடவ நீங்கப்
போய்ப் பார்த்துட்டு வர்றதுல என்ன இருக்கு" – அவன் அக்காவும் துணைக்கு வந்தாள்.
ரொம்ப நேரம் எதுவும் பேசாமல் இருந்தவர் , சொன்னார், "சரி இந்த ஞாயித்துக் கிழமை
வர்றோம்னு அவங்க கிட்ட சொல்லிடு… பொண்ணு ஃபோட்டோ இருக்கா?"
"நான் என்ன அவள லவ்வாப் பண்றேன் போட்டோ வச்சிக்கிறதுக்கு… அக்கா கல்யாண
ஆல்பத்துல இருப்பான்னு நெனைக்கிறேன்" - தான் அவளைக் காதலிக்கவில்லை என்று
நம்பவைக்க பொய் சொன்னான்.
எப்படியோ தன்னுடைய வீட்டிலும் பாதி சம்மதிக்க வைத்துவிட்டதில் சந்தோசமாய்
இருந்தாலும் இளவரசியிடம் இன்னும் பேசாமலே இருப்பது அவனுக்குக் கஷ்டமாயிருந்தது.
சென்னை திரும்பிய பிறகும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்துக்
கொண்டிருந்தான். எப்பொழுது வேண்டுமானாலும் அவளிடம் இருந்து அழைப்பு வரும் என்று
எங்கு போனாலும் செல்லைக் கையில் வைத்துக் கொண்டே இருந்தான். அன்று மதியம்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவன் செல் அலறியது.

( அடுத்தப் பகுதி )

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - 2

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - முதல் பகுதி

மறுபடியும் இருவரும் தனியாக சந்தித்துப் பேசிய போது சொன்னாள்,

"சத்தியமா உன்னோடப் பிறந்த நாளன்னைக்கு நீ சொன்னப்போ எனக்கு உம்மேல 1% கூடக்
காதல் இல்ல, ஆனா அதுக்கப்புறம் நீ என்ன avoid பண்ணப்போ தான் நான் உன்ன ரொம்ப
மிஸ் பண்ணேன். உன்னப் பார்க்காமலே இருந்திருந்தாக் கூடப் பரவால்ல, ஆனா தினமும்
உன்னப் பார்த்தும், பேசாம இருக்கிறது எனக்கு என்னமோ மாதிரி இருந்தது.நல்லா
யோசிச்சுட்டுதான் முடிவு பண்ணியிருக்கேன், when we miss someone, we really
love them! I missed u so much!"

அவனுக்கு ஒருபக்கம் சந்தோசமாய் இருந்தாலும் ஒருபக்கம் தயக்கமாகவும் இருந்தது.
அவனுடையத் தகுதிக்கு அவள் அதிகமோ என்று யோசித்தாலும் அவளும் முழுமையாக தன்னைக்
காதலிக்கிறாள் என்பதே அவனுக்கு பெரும் தைரியத்தைக் கொடுத்தது.
அதற்குப்பிறகு இரண்டு வருடமாய் அவர்கள் ஒன்றாய் சினிமாவுக்கு சென்றதில்லை;
ஐஸ்க்ரீம் பார்லரில் மணிக்கணக்கில் பேசியதில்லை; பூங்காவில் உட்கார்ந்து
அரட்டையடித்ததில்லை, ஆனால் காதலித்தார்கள். கடைசி வருடம் முடியும்போது அவனுக்கு
சென்னையில் நல்ல வேலை கிடைத்திருந்தது. அவள் மேலேப் படிக்க பெங்களூரில் ஒரு
கல்லூரியில் சேரப் போவதாக சொல்லியிருந்தாள். கடைசி நாள் இருவரும் பிரியும்போது
அவன் கையைப் பிடித்துக் கொண்டு அவள் பேசினாள் : "அருள் நான் MBA முடிக்க
இன்னும் ரெண்டு வருஷம் ஆகும், அப்புறம் ஒரு வருஷத்துக்குள்ள எங்க வீட்ல எனக்கு
அலைன்ஸ் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க, அதுக்குள்ள நீ தான் வந்து எங்க
அப்பாகிட்டப் பேசனும்!"

"நான் வந்து பேசறதுக்கு முன்னாடி நீயும் சொல்லி வை"

"இல்ல அருள், நான் பேசற சூழ்நிலைல எங்க வீடு இல்ல, நீ தான் பேசனும்!"

"சரி விடு, அதுக்கு இன்னும் நாள் இருக்கு, டைம் வரும்போது பார்த்துக்கலாம்"
மூன்று வருடத்துக்கு முன்னால் நடந்ததையெல்லாம் அசை போட்டுக் கொண்டிருந்தான்
அருள்.

"டேய் அருள், என்னடா இந்த நேரத்துல ஃபோன் பண்ணி பாருக்கு வரச் சொல்லியிருக்க!
உனக்கு என்ன ஆச்சு???"

"மொதல்ல உட்காருடா, வினோத்" என்று சொல்லிவிட்டு, வெயிட்டரிடம் ஆர்டர்
பண்ணினான்.

"ரெண்டு 5000 பியர், teachers ஒரு ஆஃப், கிங்ஸ் ஒரு பாக்கெட்"

""டேய் என்னடா இதெல்லாம்? நீ செகண்ட் இயர்லயே தண்ணி அடிக்கிறத நிறுத்தினவன்
தான? உனக்கு இப்ப என்ன ஆச்சு?"

கேட்ட வினோத்திடம் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த கடிதத்தை எடுத்து
நீட்டினான்.
----------
அருள்,

மூனு மாசமா உங்கிட்டப் பேசாம இருக்கிறதுக்கு மொதல்ல என்ன மன்னிச்சுடு. என்னால
அதத்தவிர வேற எதுவும் பண்ண முடியல.

எனக்கு எப்படி சொல்றதுனுத் தெரியல எங்க வீட்ல எனக்கு சீரியஸா மாப்பிள்ள பார்க்க
ஆரம்பிச்சுட்டாங்க.

இன்னும் ஒரு மாசத்துக்குள்ள எனக்குக் கல்யாணம் பண்றதுனு முடிவு பண்ணிட்டாங்க.
எங்க அப்பாவும் அம்மாவும் என்னப் பத்தி பேசிக்கிறதப் பார்த்தா அவங்க கனவெல்லாம்
வேற மாதிரி இருக்கு. இப்பப் போய் நான் நம்ம விஷயத்த சொன்னா ஏத்துப்பாங்கங்கற
நம்பிக்கை எனக்கு சுத்தமா இல்ல!

நடக்காதத நம்பிட்டு இருக்கிறதவிட நடக்கப் போறதையே ஏத்துப்போம்னு அவங்கக் கனவையே
நிறைவேத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன்! எங்க வீட்டோட + என்னோட நிலமைய இன்னும்
விரிவா சொல்லி உன்னக் காயப்படுத்த வேணாம்னுதான் இவ்வளவு சுருக்கமா
எழுதியிருக்கேன்.

நான் சொல்றத நீ புரிஞ்சிப்பேன்னு நெனைக்கிறேன். என்ன மறந்திடுனு சொல்லல, ஆனா
என்னையே நெனச்சிட்டு இருக்க வேண்டாம்.

- இப்படிக்கு இளவரசி.

( இதப் பத்தி எதுவும் பேச என்ன நேர்ல சந்திக்க முயற்சி பண்ண வேணாம். அது என்னோட
வேதனையக் கண்டிப்பா அதிகப் படுத்தும்! )

----------

"அருள், உங்களுக்குள்ள எதுவும் பிரச்சினை இல்லியே? நல்லாத்தானப் போய்கிட்டு
இருந்தது"

"ம்ம்ம்…நல்லா தான் போயிக்கிட்டு இருந்தது…ஆனா இப்படி மொத்தமாப் போகப்போகுதுனு
அப்போத் தெரியலையே"

ஒரு பியரையும் முழுசாகக் குடித்துவிட்டு, teachersஐயும் ரெண்டு லார்ஜ்
கவிழ்த்தான்.

வெளியே வாங்கி வந்திருந்த ஊறுகாய் பாக்கெட்டைப் பல்லால் கடித்து உள்ளேப்
பிதுக்கி விட்டு, ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.

அதுவரை அமைதியாய் இருந்த வினோத் புரியாமல் கேட்டான், "நீ என்னடா சொல்ற, எனக்கு
ஒன்னும் புரியல!"
"மொதல்ல இருந்தே சொல்றேண்டா! நான் தான் அவகிட்ட மொதல்ல காதலிக்கிறேன்னு
சொன்னேன். அவ அதுக்கு மறுத்துட்டதுக்கப்புறம் நான் அவகிட்டப் பேசறதயே
நிறுத்தியிருந்தேன். அப்புறம் ஆறு மாசமா அவ எங்கிட்டப் பேசறதுக்கு வந்தப்ப
எல்லாம் நான் அவகிட்டப் பேசவே இல்ல. சில சமயம் நம்ம ஃபிரெண்ட்ஸ்ங்க முன்னாடியே
அவளத் திட்டியிருக்கேன், ஆனா அவக் கண்டிப்பா என்னக் காதலிப்பான்னு ஒரு
நம்பிக்கை மட்டும் இருந்துச்சு"

"இதெல்லாமே நீ சொல்லியிருக்கியேடா , அப்புறம் அவளே வந்து உங்கிட்ட I love you
சொன்னதாக இல்ல சொன்ன"

"I love you னு சொன்னா, I will marry you னு சொல்லலையே" விரக்தியில் பேசினான்.

அதற்குள் மேலும் மூன்று லார்ஜ் இறங்கியிருந்தது.

"அவ நல்லப் பொண்ணுதாண்டா… ஆனா அவங்க அப்பாவுக்கு ரொம்ப பயப்படுவா… காலேஜ்ல
படிச்சப்பவே என்னோட வெளிய எங்கேயும் வந்ததில்ல…அவ்வளவு ஏன் காலேஜ் லைப்ரரி,
கேண்டீன விட்டு வேற எடத்துல நாங்க சந்திச்சதே இல்ல! ஒரு வேளை இந்த விஷயத்த
வீட்ல சொல்லி அவங்க அப்பா மறுத்துட்டாரோன்னும் என்னால யோசிக்க முடியல… ஏன்னா
அவங்க அப்பாகிட்ட இத சொல்ற அளவுக்கெல்லாம் அவளுக்கு தைரியம் கிடையாது!
அவருக்கேத் தெரிஞ்சு போயிதான் அவசர அவசரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு
பண்ணிட்டார்னு நெனைக்கிறேன்! கால் பண்ணாலும் போகல…நம்பர் மாட்டிட்டாப் போல… அவ
ஃப்ரெண்ட்ஸ்க்கு கால் பண்ணாலும் கால கட் பண்றாங்க!"

"சரி விடு மச்சி… உன்னக் கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு கொடுத்து வைக்கல"

"எப்படிடா இத்தன வருசமா உருகி உருகி காதலிச்சுட்டு இன்னொருத்தங்களக் கல்யாணம்
பண்ணிக்க முடியும்?" கண்ணீர் வந்தே விட்டது அவனுக்கு. தண்ணீர் ஊற்றி முகத்தைக்
கழுவிக்கொண்டான்.

"சாப்பிட்றது , ட்ரெஸ் பண்ணிக்கிறதுனு சின்ன விசயத்துல எல்லாம் எது புடிக்கும்
எது புடிக்காது சொல்றப் பொண்ணுங்க இந்த லைஃப் விசயத்துல மட்டும் ஏண்டா இப்படி
இருக்காங்க?"

" "

"ஏண்டா எல்லா அப்பாங்களுமே காதல எதிர்க்கறாங்க? அந்தாளு ஏண்டா கவித மாதிரி
பொண்ணப் பெத்துட்டு காதலுக்கு எதிரியா இருக்காரு?"

"மச்சிப் போதும்டா… நீ இப்போ போதைல இருக்க, நாம நாளைக்குப் பேசலாம், இப்ப
போதும் எந்திரிடாப் போகலாம்"

"நான் இப்பதாண்டாத் தெளிவா இருக்கேன். அந்தாள என்னப் பண்ணனும்னு எனக்குத்
தெரியும்டா"

அன்றைக்கு ஒருவழியாய் அவனை அவன் வீட்டுக்குக் கொண்டுபோய் சேர்த்துவிட்டான்,
வினோத்.
அதற்குப் பிறகு அருளிடம் இதைப்பற்றி அவன் எதுவும் பேசவில்லை.

அந்த வெள்ளிக்கிழமை அருள் அவனுக்கு ஃபோன் பண்ணியிருந்தான்.

"டேய் வினோத் நீ நாளைக்கு ஃப்ரியா?"

"ஏண்டா, ஒன்னும் வேலை இல்ல, சொல்லு!"

"இன்னைக்கு நைட் நாம கோயம்புத்தூர் போறோம் ரெடியா இரு, நான் வந்து உன்ன பிக்கப்
பண்ணிக்கிறேன்"

இளவரசி வீட்டுக்குத்தான் போகிறான், என்று யூகித்தாலும் எதற்காகப் போகிறான்
என்று அவனால் யோசிக்க முடியவில்லை.

அன்றைக்கு போதையில் அவன் பேசியதை நினைத்துப்பார்த்து விட்டு அவனுடன் செல்வதே
நல்லதென்று முடிவு செய்தான்.
சனிக்கிழமை காலை ஏழு மணி. கோயம்புத்தூரில் இளவரசி வீட்டின் முன் இருவரும்
நின்று கொண்டிருந்தார்கள்.

"டேய் இப்பவாது சொல்லுடா, எதுக்கு வந்திருக்கோம்னு"

"உள்ள வந்து கவனி"

அந்த பங்களாவின் உள்ளே நுழைந்தார்கள். முன்புறம் உள்ள புல்வெளியில் சேரில்
அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பவர்தான் இளவரசியின் அப்பாவாக இருக்க
வேண்டும் என்பது யாரும் சொல்லாமலே அவர்களுக்கு தெரிந்தது.

அவரை நெருங்கியதும் அருள் பேச ஆரம்பித்தான்.

"சார், மிஸ்டர் சுந்தரம்…"

"நான் தான் , உங்களுக்கு என்ன வேணும்?"

"உங்க கிட்டக் கொஞ்சம் பேசனும்"

"சொல்லுங்க" பேப்பரை மடித்து வைத்துவிட்டு, அவர்களைக் கவனித்தார்.

( அடுத்தப் பகுதி )

Wednesday, May 14, 2008

பகல் கனவு – குறுந்தொகை – அணிலாடுமுன்றில்

தீப்பெட்டியென
நிலையாய் உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது.

*

என்னுடன் வாழாமல்
என்னில் வாழத்தான்
பிரிந்தாயா?

*

என் சொற்களுக்கும்
உன் மவுனத்திற்குமான இடைவெளியில்
புதைக்கப்பட்டது நம் காதல்.

*

உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
உன்னை மறந்து விடுகிறேன்.

*

இரவுதோறும் வரும்
பகல் கனவு நீ!

***

வெறும் உவமை மட்டுமே கவிதையாக முடியுமா? மலரைப்போன்ற முகம், இசை மாதிரி குரல், கவிதை மாதிரி பெண் – இந்த கிளிஷேக்கள் எல்லாம் சலித்துப்போனாலும் சில உவமைகள் காலம் கடந்தும் நிற்கின்றன. பொருட்களை உவமையாக காட்டுவதைக் காட்டிலும் நிகழ்வுகளை உவமையாகக் காட்டுவது கவித்துவத்தோடு இருப்பதாகப்படுகிறது.

குறுந்தொகையில் பிரிவுத்துயரைச்சொல்லும் ஒரு பாடலில் வரும் உவமை :

‘மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று அலப்பென்’


மக்கள் சென்றபிறகு முற்றத்தில் அணில் விளையாடும் தனிமை/வெறுமை நிறைந்த வீட்டைப்போல தனிமையில் வாடுவதாக தலைவி வருந்துகிறாள்.

அணில் விளையாடுவது பெரிய உவமையா? எனத் தோன்றக்கூடும். ஆனால் அணிலின் இயல்பு மக்கள் இருக்குமிடங்களில் நெருங்காமல் இருப்பதுதான். அத்தகைய அணில் முற்றத்தில் துள்ளி விளையாடுகிறது எனும்போது மக்கள் இல்லாமல் அந்த வீடு நெடுங்காலம் வெறுமையாகக் கிடக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கரூரில் நாங்கள் கடந்த ஆண்டு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த பிறகும் சில பொருட்கள் மட்டும் பழைய வீட்டிலேயேக் கிடந்தன. அடுத்து யாரும் குடி வராத அந்த அரசு குடியிருப்புக்கு ஒரு மாதம் கழித்து சென்ற போது இந்த சங்க காலத்துப் பாடலில் வரும் உவமை நிகழ்வு அங்கு கண்ணெதிரே நிகழ்ந்து கொண்டிருந்தது. சமையலறை அடுக்குகளில் பிறந்த குழந்தையின் பிஞ்சுக்கரம் போல மென்மையான கூடு கட்டிக்கொண்டு அணில்கள் விளையாடிக்கொண்டிருந்தன. எங்கள் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு அணில்களின் வீட்டை அணில்களிடமே விட்டுவிட்டுத் திரும்பினோம். அன்று, அந்த அழகான உவமை, அழகான காட்சியாகியிருந்தது.

இந்த பாடலின் ஆசிரியர் பெயர் தெரியாததால் இந்த உவமையாலேயே ‘அணிலாடு முன்றிலார்’ என அவருக்கு பெயர் வைத்துவிட்டார்கள்!

குறுந்தொகை – பாலைத்திணை – பாடல் எண் 41

காதலர் உழையர் ஆகப்பெரிது உவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் – தோழி! – அவர் அகன்ற ஞான்றே.

- அணிலாடு முன்றிலார்

(எனக்குத் தெரிந்த) பொருள் :

காதலன் அருகிலிருக்கும்பொழுது, திருவிழா நடக்கும் ஊரைப்போல பெரிதும் மகிழ்ந்தேன். அவன் விலகிய நாளில், நெறி நிறைந்த நல்லவர் வாழும் ஊரில், மக்கள் சென்றபிறகு முற்றத்தில் அணில் விளையாடுகிற துயரமான வீட்டைப்போல தனிமையால் அழகழிந்து வாடுகிறேன்.

Tuesday, May 13, 2008

காதலும் கோபமும்

உன்னில் வெட்கம் ஒளிந்திருக்கும் இடத்திலெல்லாம்


கோபமும் சேர்ந்தே ஒளிந்திருக்கிறது.


மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்


உன் வெட்கத்தைப் போலன்றி


சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது


உன் கோபம்.


 


அந்த ஒரு நொடி


என் காதல் காயப்படுவதெல்லாம்


உன் கோபங்களுக்கு புரிவதில்லை.


 


ஆனாலென்ன?


மழையாக விழுந்தாலும்


வெள்ளமாக அடித்தாலும்


கடலாக அணைத்தாலும்


நிலத்துக்கு நீர் நீர் தான்!
ஊடலில் பிரிந்தாலும்


பேசாமல் மௌனித்தாலும்


கோபமாக முறைத்தாலும்


எனக்கு நீ நீ தான்!


 


துயரம் தானென்றாலும்


உன் கோபங்களை வரவேற்க


என் கோபங்களுக்கு என்றும் அனுமதியில்லை.


 


ஒரு மௌனம்


ஒரு மன்னிப்பு


ஒரு சின்னக் காதல்


எப்பொழுதும் இவை மட்டுமே


என்னிடமிருந்து எட்டிப்பார்க்கும்.


 


கோபங்கள் களையப்பட்டு


நிர்வாணமான உன் மனம்


காதலையணிந்து கொண்டு கெஞ்சும் :


‘இனிமே கோபமாப் பேச மாட்டேண்டா’


 


அடிப்போடி…


உனக்கிருக்கும் காதலுக்கு


நீ இன்னும் நூறு மடங்கு கோபிக்கலாம்!

Thursday, May 08, 2008

முதல் மரியாதை (ரீ)மிக்ஸ்

முதல் மரியாதை படத்தின் பாடல்களிரண்டு கலக்கப்பட்டிருக்கின்றன. இசையறிவு எதுவுமில்லாமல் செய்த இது நல்லாருக்கா இல்ல இசைக்கொலையான்னு நீங்கதான் சொல்லனும் ;)

[audio:remix/poonkaathu_remix.mp3]

[audio:remix/vetiveruvaasam_remix.mp3]

பிறந்த வீடா? புகுந்த வீடா?

இனி பகலில் முத்தமிடாதே.
நிழல்கள் வெட்கப்படுகின்றன.

*

நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.

*

ஒரு
'முத்தக்கவிதை' கேட்டாய்.
தனித்தனியாகதான் கிடைக்கும்
பரவாயில்லையா?

*

பாதி முத்தங்களைப்
பார்வைகளே தந்துவிட்டால்
இதழ்கள் என்ன செய்யும்?

*

முத்தப்பெண்ணுக்கு
உன் இதழ்கள்
பிறந்த வீடா? புகுந்த வீடா?

Monday, May 05, 2008

காதல் (திங்)கள் (குரல் பதிவு)

நீ நினைக்கிறேன்.


நான் பேசுகிறாய்.


நமக்குள் காதல் வராமல்


என்ன செய்யும்?


 


*


 


பூக்களற்ற தீவுகளுக்கு


மணம்வீசப் பயணிக்கிறது.


உன் கூந்தலிலிருந்து


பிரிந்த இழையொன்று.


 


*


 


நேரில் கோபித்துக்கொண்டு


கனவில் வந்து கொஞ்சும்


மக்கு நீ!


 


*


 


குடையின்றி நீ வருகையில்


வெயிலுக்கும் மழைக்கும் சண்டை!


 


*


 


நீ நிலாச்சோறுண்ணும்


பௌர்ணமி இரவுகளில்


காதல் கள்ளுண்ணும்


நிலா!


 


இசையுடன் கேட்க : (நன்றி ஜோஷ்வா ஸ்ரீதர் ;))


[audio:kaadhal_thingal_arutperungo.mp3]