Friday, December 28, 2007

ஒன்றில் நான்கு ( 4 in 1)

கல்லூரி – பாலாஜி சக்திவேலின் படம் என்பதால் கொஞ்சம் அதிகமான எதிர்பார்ப்போடு போனேன். நாயகியைத் தவிர மற்ற அனைத்து நடிக, நடிகையர்களும் புதுமுகமாம். ஆனால் எல்லோருமே நம்மோடு பழகிய பழைய முகங்கள் போலவே இருப்பது இயல்பு. ஏழ்மைப் பின்னணியில் இருந்து கல்லூரிக்குப் படிக்க வரும் அந்த பள்ளி கால நண்பர்களை, தம் வீட்டுத் துயரங்களை மறந்தும் சிரிக்க வைக்கிறது அவர்களுக்கிடையேயான நட்பு. பயணம், உணவு, துயரம், நெருக்கடி என எல்லா சூழலிலும் இணைபிரியாத அந்த நட்பு வட்டத்துக்குள் இழுக்கப்பட்டு அவர்களுக்குள் ஒருத்தியாக மாறுகிறாள், பணக்கார பின்னணியுடன் வரும் நாயகி. நாயகியாகவும் மற்ற பாத்திரங்களைப் போலவே இயல்பான ஒரு தமிழ்முகத்தையே நடிக்க வைத்திருந்தாலும் இந்தத் திரைப்படம் இப்போதிருக்கும் தரத்திலிருந்து எந்தவிதத்திலும் குறைந்திருக்காது என்பது என் எண்ணம். நட்புக்கும் காதலுக்கும் இடையில் நாயகனும், நாயகியும் தவித்துக்கொண்டிருக்க, படம் கல்லூரி காலநிகழ்வுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாயகி தோழியிடம், நாயகன் மீதான காதலை வெளிப்படுத்துகையில் பொசுக்கென கிளைமேக்ஸ் வந்து கதை முடிகிறது. ‘காதல்’ படத்தின் கிளமேக்ஸ் காட்சியில் அழுகை ஓவர்டோசாக இருந்தது. அதனைத் தவிர்க்க நினைத்தோ என்னவோ இதில் கிளைமேக்ஸில் அந்த காட்சிக்குரிய அழுத்தம் இல்லாமலிருப்பதாக எனக்குப் பட்டது. தனித் தனியாக எல்லாம் சரியாக இருப்பது போலத் தோன்றினாலும் ஏதோ ஒன்று குறைவது போல இருக்கிறதே என்று யோசிக்கும்போது, நண்பன் சொன்னான் – ‘மச்சான்… மொதல்ல கிளைமேக்ச முடிவு பண்ணிட்டு, அப்புறம் கதையெல்லாம் யோசிச்சிருப்பாங்களோ?’ இருக்கலாம். படம் முடிந்த பிறகும் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள் - கயல்விழியும், நாயகனின் தங்கையும்.


*

பில்லா – பூவெல்லாம் கேட்டுப் பார் படத்திற்குப் பிறகு இதுதான் திரையரங்கம் சென்று பார்க்கும் அஜித்தின் படம். பில்லாவாக வரும் அஜித் நடந்தார், சூட்கேஸ் மாற்றினார், சுட்டார், கூலிங் கிளாஸ் கழற்றிப் பேசினார், மீண்டும் நடக்க ஆரம்பித்து விடுகிறார். பில்லாவாக மாறும் வேலு வந்தபிறகுதான் படத்தில் கொஞ்சம் கலகல. அதிலும் பிரபுவை அவர் கலாய்ப்பது கலகலகல. படம் ரிச்சாக வந்திருக்கிறது என்று வலைப்பதிவில் படித்திருந்தது உண்மைதான். பிரம்மாண்டம் என்ற பெயரில் ஒரு செட்டுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து எடுப்பதற்குப் பதில் இப்படி எடுக்கலாம். நயனைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை; வெள்ளித் திரையில் காண்க :) முக்கியமாக பின்னணி இசையும், ஒளிப்பதிவும் நன்றாக இருந்தன. கடைசி வரை படத்தில் நமீதாவை எதற்கு சேர்த்தார்கள் என்று புரியவில்லை. மொத்தமாகப் பார்த்தால் கொடுத்த காசுக்கு பாதகமில்லை.

*

நீலம் – சுனாமி குறித்து அறிவுமதி அவர்கள் இயக்கிய குறும்படம். இப்போதுதான் பார்த்தேன். பத்து நிமிடங்களுக்கும் குறைவான கால அளவில் அத்தனைப் பெரிய இழப்பின் வலியைச் சொல்லியிருக்கிறார். ஒற்றைப் பனைமரம் நிற்கும், காகம் கரையும் ஒரு கடற்கரை. கடலை நோக்கி நடந்து வரும் சிறுவன் + சிறுவனை நோக்கி வரும் கடலைலகள் என இரண்டு காட்சிகள். சோகம் அப்பிய முகத்துடன் நிற்கும் சிறுவன் கடலையேப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பிறகு எதனையோ கண்டு கொண்டவனாய் ஓடிப்போய் ஓரிடத்தில் மணலைத் தோண்டி உள்ளிருந்து ஒரு நண்டை எடுக்கிறான். அதனிடம் ‘எங்க அம்மாவப் பாத்தியா? நீ தான் தெனமும் கடலுக்குள்ள போயிட்டு வர்றல்ல. ஒனக்குத் தெரியும். சொல்லு எங்கம்மாவ பாத்தியா?’ என அழுகிறான். பின் மணலிலும் படுத்துக்கொண்டு மணலை அணைத்தபடி புலம்பியழுவதுடன் படம் முடிகிறது.கடலும், சிறுவனும், நண்டும் மட்டுமே நடித்திருக்கிறார்கள். சிறுவனாக அரவிந்த் பச்சானின் நடிப்பு சிறப்பாக இருந்தது. மண்ணுக்குள் புதைந்த நண்டை தோண்டியெடுத்து அதனைப் பார்த்து அவன் புலம்பியழும்போதும், மணலை அணைத்துக் கொண்டு அழும்போதும் நமக்கு துக்கம் தொண்டைக்குள் உருள்கிறது. அதற்கேற்றாற்போல் நிருவின் இசையும் சோகத்தைப் பின்னணியில் இசைக்கிறது. ஒளிப்பதிவு - தங்கர்பச்சான். சுனாமி வந்து மூன்றாண்டுகளுக்குப் பின்னும் அதன் பாதிப்பு இன்னும் இருக்கதான் செய்கிறது :(


*

மறைபொருள் – பொன்.சுதா என்பவர் இயக்கியிருக்கும் குறும்படம். வசனங்கள் ஏதுமில்லை. ஒரு வீட்டின் அறைக்குள் ஓர் இளம்பெண்ணைக் காண்பிக்கிறார்கள். குளித்துவிட்டு வந்து அலமாரியில் இருக்கும் உடைகளில் பிடித்தமான ஒன்றை வெகு நேரம் தேடியெடுக்கிறார். கண்ணாடி முன் நின்று உடையைத் தன்மேல் வைத்துக்கொண்டு நன்றாக இருக்கிறதா என பார்த்துக் கொள்கிறார். பிறகு அந்த உடையை அணிந்துகொண்டபின் கண்ணாடி முன் நின்றபடி தலைவாருகிறார். கண்மையிடுகிறார். நகப்பூச்சு பூசிக்கொள்கிறார். பவுடர் அடித்துக் கொள்கிறார். எல்லா ஒப்பனைகளையும் முடித்துவிட்டு அலமாரியிலிருக்கும் அதனை எடுத்து உடுத்திக் கொள்கிறார். இது வரை விருப்பத்துடன் அணிந்துகொண்ட உடை + ஒப்பனைகளை மறைத்தபடி திரையென விழுகிறது அந்த பர்தா. எல்லாம் மறைக்கப்பட்டு பெண்ணின் கண்கள் மட்டும் கேமராவின் பார்வையில் தெரிகின்றன. அதனுடன் முடிகிறது படம்.


*

ஒரு நினைவூட்டல் – சர்வேசனின் நச்சுனு ஒரு கதை போட்டியில் பங்கு கொண்டவர்களின் எண்ணிக்கை 57. அதற்கான வாக்கெடுப்பு மூன்று கூர்களாகப் பிரித்து சர்வேசன் வலைத்தளத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை பதிவான மொத்த வாக்குகள் 57 கூட தொடவில்லையாம். கதைகளை எழுதியவர்கள் + வாசித்தவர்கள் அனைவரும், நீங்கள் ரசித்த கதைக்கு மறக்காமல் வாக்களியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, December 21, 2007

எவனா இருந்தா எனக்கென்ன?

தலைப்ப பார்த்ததும் யாரும் திட்ட வந்துடாதீங்க. பேர் வைக்கிறதுக்காக நம்ம மக்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க பாருங்க. காங்கேயம் பக்கத்துல ஒரு டீக்கடையோட பேரு ‘அடேங்கப்பா’ டீஸ்டால். ஒரு தடவை மதுரை போற வழியில ‘திடீர் உணவகம்’னு ஒரு கடை பார்த்தேன். ஹைதரபாத் வந்த பின்னாடி இந்த மாதிரி பேரெல்லாம் சாதாரணம்னு தோண ஆரம்பிச்சுடுச்சு. சென்னைல ஒரு டைடல் பார்க், பெங்களூருல ஒரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மாதிரி இங்க ‘ஹைடெக் சிட்டி’ னு ஒன்னு இருக்கு. அதோட தாக்கம் அதிகமாகி நெறைய இடங்கள் ல பார்த்தா ‘ஹைடெக் சலூன்’, ‘ஹைடெக் ரெஸ்டாரண்ட்’, ‘ஹைடெக் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ னு ஹைதராபாத்தே இப்போ ஹைடெக் மயமாகிட்டு வருது :). படத்துக்கு பேரு வைக்கிறதுலையும் இங்க ஒருத்தர் கலக்கறார். ‘இதுதாண்டா போலீஸ்’ புகழ் டாக்டர் ராஜசேகர் தான். ‘எவனா இருந்தா எனக்கென்ன?’ னு ஒரு படம் வந்து பட்டயக்/பயத்த கிளப்புச்சாம். சமீபத்துல கூட ‘உடம்பு எப்படியிருக்கு’னு ஒரு படம் வந்துச்சே! அப்புறம் ஹைதராபாத் பிரியாணிக்கு பேர் போன ஊருங்க… எந்தளவுக்குன்னா, இங்க ஒரு தெலுங்கு பண்பலைல ஒரு இரவு நிகழ்ச்சியோட பேரு – மிட்நைட் பிரியாணி :)

*

முன்னலாம் தெலுங்குப் படம் பார்த்தா நக்கல் பண்ணிட்டே பார்க்கிறதுக்கு நல்லாருக்கும். அதுக்காகவே வாரம் ஒரு படம்னு குறி வச்சு பாத்துட்டு இருந்தோம். ( ஆனா அதுவே பழக்கமாகி இப்போ என்னையே அறியாம தெலுங்குப் படத்த ரசிக்க ஆரம்பிச்சுட்டனோன்னு ஒரு பயம் வந்துடுச்சுங்கறது வேற விசயம் ) போன மாசம் விஜயதசமினு ஒரு படத்துக்கு நண்பன கூப்பிட்டப்போ அவன் வர முடியாதுனு சொல்லவும் சரி சிங்கம் சிங்கிளாதாண்டா போகும்னு நான் மட்டும் போய் அசிங்கமானதுதான் மிச்சம். அந்த போஸ்டர்ல அந்த ஹீரோ(?) பட்டாச சுத்தினப்பவே நான் புரிஞ்சிருக்கனும். அது ‘சிவகாசி’யோட ரீமேக். விஜய் படத்த எல்லாம் போஸ்டர்ல கூட பாக்கக்கூடாதுனு தீர்மானம் பண்ணி வச்சிருந்தவன, அத தெலுங்குல ரீமேக் பண்ணி தியேட்டர்ல வந்து பாக்க வச்சிட்டாங்க. அடுத்தவாரம் ஸ்டேட்ரவுடி னு ஒரு படம் வந்துச்சு. சரி பேர்லையே ஒரு டெரர் இருக்குதே, இது பக்கா தெலுங்குப் படமாதான் இருக்கும்னு நெனச்சு, தூக்கம் வருதுனு சொன்ன நண்பனையும் இழுத்துட்டுப் போனா அது நம்ம ‘எதிரி’யோட ரீமேக் :( விக்ரமாதித்யன் மாதிரி நானும் விடாம அடுத்த வாரமும் போனேனே டக்கரி னு ஒரு படத்துக்கு! படம் பேரே டக்கரா இருக்குதுல்ல? ஆனா பாருங்க அதுவும் நம்ம ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தோட ரீமேக். இவ்வளவு டேமேஜான பின்னாடியும் தெலுங்குப் படம் பாக்க போறதுக்குக் காரணம் ‘கோதாவரி’ புகழ் சேகர் கம்முலாவோட சமீபத்திய ‘ஹேப்பி டேஸ்’, சண்டை, தனி காமெடி ட்ராக் எதுவும் இல்லாம, வந்த சுமாரான திகில் படமான ‘மந்த்ரா’ மாதிரியான படங்கள் தான்!

*

கொஞ்ச நாள் முன்னாடி பெங்களூர்ல இருந்து சேலத்துக்குப் போறதுக்கு புதுசா விட்டிருக்கிற தமிழ்நாடு பேருந்துல ஏறினேன். காசு அதிகம் தான். சரி சீக்கிரம் கொண்டு போய் சேர்த்துடுவாங்கன்னு அதுல ஏறிட்டேன். ஓசூர் தாண்டறதுக்குள்ள 15 பேருந்து, 23 லாரி, கணக்கு வழக்கு இல்லாம காருங்கனு எங்க பேருந்த முந்திகிட்டு போய்கிட்டு இருக்கு. கண்டக்டர்கிட்ட கேட்டேன் 'அண்ணே 60 ரூவா கூட வாங்குறீங்களே கொஞ்சம் வேகமா போகக்கூடாதா? டவுன் பஸ்செல்லாம் முந்திகிட்டு போகுதே' அப்படின்னு. அவர் என்ன சொன்னார் தெரியுங்களா? 'தம்பி இது சொகுசுப் பேருந்து! விரைவு பேருந்து கிடையாது! நம்ம வண்டி சொகுசாதான் போகும். வேகமா எல்லாம் போகாது' னு சொல்லிட்டார். அதுக்கப்புறம் நான் எதுவும் பேசாம சன்னல்ல வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன் :(

*

அதேமாதிரி தீபாவளிக்கு ஊருக்குப் போகும்போது சேலத்துல இருந்து கரூர் பேருந்துல ஏறி, இடப்பக்கம் இருக்கிற ரெண்டு பேர் இருக்கைல தனியா உட்காந்திருந்தேன். கொஞ்சம் நேரம் கழிச்சு ஏறின ஒரு ஒன்பதாவது/பத்தாவது படிக்கிற பொண்ணும் அவங்க அம்மாவும், உட்கார இடமில்லாம பாத்துட்டே இருந்தாங்க. அந்த பொண்ணு தனியா உட்காந்திருந்த என்ன பார்த்து, பக்கத்து இருக்கைல மாறி உட்கார சொல்லிட்டா. எனக்கு ஒரே வருத்தமா போயிடுச்சு. இடம் மாறி உட்காரனுமேங்கறதுக்காக இல்ல; என்னை அந்த பொண்ணு அப்படி கூப்பிட்டதாலதான். அட ‘அண்ணா’ னு கூப்பிட்டிருந்தா கூட சந்தோசப் பட்டிருக்கலாம். ‘அங்கிள்’ னு கூப்பிட்டுட்டாளே. இந்த கண்ணாடிய கழட்டிட்டு ஆறு மாசத்துக்கு முன்னாடி வாங்கி தொடாமலே வச்சிருக்கிற காண்டெக்ட் லென்சதான் இனிமே போடனும்!

*

இப்போ இந்த மொக்கையெல்லாம் எதுக்குனு நீங்க கேட்க வர்றது புரியுது. கிருஸ்துமஸ் விடுமுறைக்காக இன்னைக்கு சென்னை கிளம்பறேன். (முடிந்தால் சென்னை நண்பர்களைச் சந்திக்கனும். தொடர்புக்கு - 09948645533) ஒரு நாலு நாள் வலைப்பக்கம் வர முடியுமான்னுத் தெரியல. அதான் சர்வேசன் போட்டியையும் அதுக்கு நான் எழுதின கதையையும் நினைவூட்டுவதற்காகதான் இந்த மொக்கைப் பதிவு :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, December 18, 2007

சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்

சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்

“food court போகலாம் வர்றீங்களா?”

பக்கத்து கியூபிக்களிலிருந்து அவன் கேட்டதும் ‘ஓ போலாமே’ என்றவாறு கிளம்பினாள்.ட்ரெயினிங்கில் ஒரே பேட்சில் இருந்தபோது அவர்களுக்குள் ஆரம்பித்த பழக்கம் மூன்றாண்டுகளாக நீடிக்கிறது. கோவையில் ஒரு கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்து வந்த அவனுக்கும், மதுரையில் ஒரு மகளிர் கல்லூரியில் MCA முடித்து வந்த அவளுக்கும் எதிர் பால் நட்பு கொள்ள இங்கு வந்துதான் முதல் வாய்ப்பு. இவர்கள் பேட்சில் இருந்த பலரும் வேறு நிறுவனங்கள்/ஆன்சைட் என்று கிளம்பிவிட நிறுவனத்தின் சென்னை கிளையில் இவர்கள் பேட்சில் மிஞ்சியிருந்தது அவர்களிருவரும்தான் என்பதும் அவர்களுக்குள் நெருக்கம் கூடுவதற்கு ஒரு காரணம். ஒன்றாக சாப்பிடப் போவது, தாமதாமானால் அவளைக் கொண்டு போய் விடுதியில் விடுவது என்று ஆரம்பித்து தீபாவளிக்கு துணி தேர்வு செய்யக்கூட அவன் தேவைப்படும் நிலை வரை வந்த பின்னும், பேச்சில் மட்டும் இன்னும் ‘வாங்க போங்க’ தான். நட்பைத் தாண்டி எப்பொழுதோ அவனைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டோம் என்பதை அவள் உணர்ந்தே இருந்தாலும் இன்னும் அதனை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை, அவ்வளவே. அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தவளை, முதல்நாள் இரவு வீட்டிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் திருமணப் பேச்சு, விரைவுபடுத்தியிருந்தது. இப்பொழுதே கேட்டுவிடுவது என்ற முடிவோடு அவனுடன் நடந்தாள்.

‘தப்பா நெனச்சுக்க மாட்டீங்கன்னா நீங்க என்ன காதலிக்கிறீங்களானு நான் தெரிஞ்சக்கலாமா?’
‘ம்ம்ம்…ஆமா காதலிக்கிறேன்’
‘அப்புறம், இவ்ளோ நாளா எதுவுமே சொல்லல’
‘அதிருக்கட்டும். நீங்க என்னக் காதலிக்கிறீங்களா’
‘ம்ம்ம்’
‘நீங்களும் ஏன் எதுவுமே சொல்லல’

நெடுநேரத்திற்கான ஓர் உரையாடல் மிக எளிதாக துவங்கியிருந்தது.

*

திருச்சி நகருக்கு வெளியே இருந்த அந்தக் கல்லூரியில் எந்த அமர்க்களமுமில்லாமல் எளிமையாக நடந்து கொண்டிருந்தது முதலாமாண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு நடத்தப்படும் வரவேற்பு நிகழ்ச்சி. மூத்த மாணவர்களும் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தில் இரண்டாமாண்டு படிக்கும் அவள் மட்டும் தனியாக சுரத்தில்லாமல் நின்றிருந்தாள். கல்லூரி நிர்வாகிகளின் வழக்கமானப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. அவளுக்கு தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போலவே ஓர் உணர்வு வர சுற்றும் முற்றும் பார்த்தாள். பக்கத்தில் மேடையைப் பார்த்தபடி அவள் தோழிகள் மட்டுமே நின்றிருந்தனர். மீண்டும் அதே போலொரு உணர்வெழுந்து அவள் வலப்புறம் திரும்பிய போது புதிய மாணவர்கள் பக்கமிருந்த ஒரு தலை தன்னைத் திருப்பிக் கொண்டது. அவள் அவன் முதுகையே பார்த்தபடியிருக்க, கொஞ்ச நேரத்தில் அவன் தன் முகத்தை அவள் பக்கம் மெதுவாக திருப்பியதும் அவளுக்குள் வேகமாக அதிர்ச்சி பரவ ஆரம்பித்தது.

*

அவனிடம் காதலைப் பகிர்ந்துவிட்ட மகிழ்ச்சியிருந்தாலும், வீட்டில் எப்படி சொல்லுவது என்கிற குழப்பத்தோடு இருந்தவளை அன்று மாலை மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்றான்.
‘எனக்கு எங்க வீட்ல எப்படி சொல்றதுன்னுதான் பயமா இருக்குங்க. எங்கப்பா வேற சீக்கிரமா என் கல்யாணத்த முடிச்சிடனும்னு தீவிரமா மாப்பிள்ள தேடிட்டு இருக்கார்’

‘இப்போதான மாப்பிள்ள தேட ஆரம்பிச்சிருக்காங்க. ஜாதகமெல்லாம் பொருந்தி நல்ல வரம் அமையறதுக்கு எப்படியும் இன்னும் ஒரு வருசம் ஆகிடும். அதுக்குள்ள சொல்லிடலாம்’

‘ப்ச். புரியாமப் பேசாதீங்க. இந்த மார்ச்சுக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணனும்னு ஜாதகத்துல இருக்காம். அதனால இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள முடிச்சிடனும்னு எங்கப்பா சொல்லிட்டு இருக்கார். இந்த வாரம் நான் வீட்டுக்குப் போகும்போது சொல்லிடலாம்னு இருக்கேன். ஆனா வேற ஜாதினு தெரிஞ்சதும் எங்கப்பா கோபப்படறதையோ, எங்கம்மா அழறதையோ என்னாலத் தாங்க முடியாது. அதான் உங்களையும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாமானு யோசிக்கிறேன்’

‘இங்க பாரு. உங்க அப்பா கிட்ட நேர்ல வந்து பேசறதுல எனக்கு எந்தத் தயக்கமுமில்ல. ஆனா அதுக்கு முன்னாடி மொதல்ல எங்க வீட்ல சொல்லி பெர்மிஷன் வாங்கிக்கறது நல்லதுனு நெனைக்கிறேன். எனக்கு இப்போதான் இருபத்தஞ்சு வயசு முடிஞ்சிருக்கு இன்னும் ஒரு வருசம் போனாதான் எங்க வீட்ல இந்தப் பேச்சே எடுக்க முடியும். அதனாலதான் சொல்றேன். நீ எப்படியாவது உங்க வீட்ல கல்யாணத்த மட்டும் இன்னும் ஒரு வருசம் தள்ளிப் போடு. மீதியெல்லாம் நல்லதா நடக்கும்’

அவள் செல்பேசி சிணுங்கியது. அவளுடைய அப்பாதான்.
‘சொல்லுங்கப்பா’
‘நல்லாருக்கியாம்மா?’
‘நல்லாருக்கேன்ப்பா. அம்மா எப்படியிருக்காங்க’
‘ம்ம்ம் நல்லாருக்கா. அப்புறம் இந்த வாரம் ஊருக்கு வந்துட்டுப் போம்மா. ஒரு வரன் வந்திருக்கு. ஞாயித்துக்கிழம பொண்ணு பாக்க வர்றோம்னு சொல்லிட்டாங்க. நானும் சரினு சொல்லியிருக்கேன்’

*

கல்லூரி ஆரம்பித்து மூன்று மாதமாய் அவன், அவளிடம் பேசுவதற்கு முயற்சி செய்வதும் அவனைப் பார்த்தாலே அவள் விலகிப் போவதும் தொடர்ந்தபடியிருந்தது. அவளைக் காலையில் வந்து விடுவதற்கும், மாலையில் வந்து அழைத்துப் போவதற்கும் அவளுடைய அப்பா வந்துவிடுவதால், விடுதியில் தங்கியிருந்த அவனுக்கு அவளைத் தனியாக சந்திக்க கல்லூரி மட்டுமே ஒரே இடமா இருந்தது. ஆனால் அதையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் எல்லா வகுப்புகளும் அசைன்மெண்டிலும், தேர்விலும் பின்னப்பட்டிருந்தன. டீ, லஞ்ச் ப்ரேக் எதற்கும் அவள் கேண்டீன் பக்கம் வருவதில்லை. அவள் விலகலைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் அன்று லஞ்ச் ப்ரேக்கில் அவள் வகுப்புக்குள் நுழைந்தான். அப்போதுதான் சாப்பிட்டு முடித்திருந்தாள்.
‘ஏன் இப்படி லூசு மாதிரி பண்ணிக்கிட்டு இருக்க? உன் கூட இருக்கனும்னுதான் இந்த காலேஜ்லயே வந்து சேர்ந்தேன். என் கூட ஒரு பத்து நிமிசம் பேசக் கூட உனக்கு விருப்பமில்லையா?’
கண்ணீர் வர வர அதனைத் துடைத்தபடியே அமைதியாக இருந்தாள். அவள் தோழிகள் எல்லோரும் அவர்களையேப் பார்த்துக் கொண்டிருக்கவும்,
அவள் அழுவதைக் காணச்சகியாதவனாய் ‘ஈவினிங் கேண்டீன்ல வெயிட் பண்றேன். ஒரு பத்து நிமிசம் வந்துட்டுப் போ. ப்ளீஸ்’
மாலை கேண்டினில் அவளுக்காக காத்திருந்தான். ஆனால் அவள் வரவில்லை. அவள் தந்ததாய்ச் சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போனாள் அவள் தோழியொருத்தி.

*

அந்த வெள்ளிக்கிழமை அவளை வைகை எக்ஸ்பிரசில் மதுரைக்கு அனுப்பி வைக்க எக்மோர் சென்றான். கவலையுடன் இருந்தவளை ‘எதுக்கிப்போ இவ்ளோ சோகமா இருக்க? இப்போ என்ன பொண்ணு பாக்கதான வர்றாங்க. வரட்டும். நீ மாப்பிள்ளயப் பிடிக்கலன்னு சொல்லிடு. அட்லீஸ்ட் இன்னும் ஒரு ஆறு மாசமாவது வெயிட் பண்ணு. அதுக்குள்ள எங்க வீட்ல பெர்மிஷன் வாங்கிட்றேன்’
‘நானா வெயிட் பண்ண மாட்டேன்னு சொல்றேன்?’
அவள் கஷ்டமெல்லாம் கோபமாக வந்தது.
‘சரி சரி இந்த டைம் போயிட்டு வா. நான் அடுத்த தடவை ஊருக்குப் போகும்போது எங்க வீட்ல சொல்லிட்றேன்’
தைரியம் சொல்லி அவளை அனுப்பி வைத்தான். ரயில் நிலையம் விட்டு வெளியே வருவதற்குள் அவன் செல்பேசிக்கு அழைப்பு வந்தது, அவன் அக்காவிடமிருந்து.
சாதாரணமாய்ப் பேசிக் கொண்டிருந்தவன் ‘உங்க கம்பனில கங்கானு புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ணியிருக்காம். முடிஞ்சா விசாரிச்சு வச்சுக்கோ’ என்று அவன் அக்கா சொன்னதும் குழம்பினான்.
‘எதுக்கு?’
‘நீ தான் லவ் பண்றதுக்கு பொண்ணு கெடைக்கலன்னு சொல்லிட்டு இருந்தியே அதுக்குதான்’
‘கொஞ்சம் தெளிவா சொல்றியா?’
‘இல்லடா நம்ம சித்தப்பா அவருக்குத் தெரிஞ்ச வக்கீல் ஒருத்தர் பொண்ணுக்கு உன்னக் கேட்கிறாங்கனு சொல்லி அப்பாகிட்ட பேச வந்தாங்களாம். அப்பா இன்னும் ரெண்டு வருசம் போகட்டும்னு சொல்லிட்டாங்க போல. ஆனா பொண்ணு வீட்லையும் இன்னும் ரெண்டு வருசம் கழிச்சே வச்சிக்கலாம், ஜாதகப் பொருத்தம் மட்டும் பாத்துக்கலாம்னு கேட்ருக்காங்க. கடசில ஜாதகமெல்லாம் பொருந்தியிருக்காம். பொண்ணும் உங்க கம்பனிலதான் ஜாய்ன் பண்ணியிருக்காளாம். அதான் ஒரு இன்ஃபர்மேஷன் கொடுக்கலாமேனு கால் பண்ணினேன். விளக்கம் போதுமா?’
அவனுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. கோயம்பேட்டுக்குக் கிளம்பினான் கோவை பேருந்தைப் பிடிக்க.

*

அந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும் அவனுக்கு அவள் மேல் கோபம் கோபமாய் வந்தது. இந்தக் காரணத்துக்காக தான் அவள் அவனை தொடர்பு கொள்ளாமல் விலகி விலகிப் போகிறாள் என்பது புரிந்துதான் அவளோடு நெருங்கியிருக்க இந்தக் கல்லூரியில் வந்து சேர்ந்தான். ஆனால் அவனுக்கு அது புரியாதது போலவும், அதனைப் புரிய வைப்பதாகவும் நினைத்துக் கொண்டு ஏழு பக்கத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள். லூசு லூசு என்று மனதுக்குள் திட்டிக் கொண்டான். அடுத்த நாள் காலையில் அவளை கல்லூரியில் வந்து விட்டுப் போனதும் அவளுடைய அப்பாவை பைக்கில் தொடர்ந்தான். அந்த ஏரியாவில் குறுக்கும் நெடுக்குமாக பிரிந்த சாலைகளில் ஏதோ ஒன்றின் மத்தியில் ஒரு வீட்டுக்குள் நுழைந்தார் அவர். கொஞ்சம் நேரம் கழித்து அதே வீட்டுக்குள் அவனும் நுழைந்தான்.

*

கோவையில் தன் வீட்டிற்குப் போனதும் அவனுடைய சித்தப்பா வந்து போன விசயத்தை அவனுடைய அம்மா ஆர்வமாய்ச் சொல்ல ஆரம்பித்தார். கோனியம்மன் கோவிலில் வைத்து அந்தப் பெண்ணையும் ஒருமுறைப் பார்த்துவிட்டதாகவும் அவனுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறாளென்றும் பெருமையாக அவன் அம்மா சொல்லிக் கொண்டேபோக, தன்னுடையக் காதலைத் தன்னைப் பெற்றவர்களிடம் சொல்லுவது சினிமாவிலோ, கதைகளிலோ உள்ளபடி அத்தனை எளிதானதில்லை என்று உணரத் துவங்கினான். அவனுடைய அப்பாவும் அவனும் மட்டும் தனித்திருந்த மாலை நேரத்தில் எங்கேயோப் பார்த்தபடி ஒழுங்கில்லாத, இடைவெளிகள் நிறைந்த பேச்சில் தன் காதலைப் பற்றி சொல்லிவிட்டு அவர் பதிலுக்காகக் காத்திருந்தான். அவரோ அமைதியாக இருந்தார். அவருடையக் கோபங்களைப் பலமுறை எதிர்கொண்டு பழகிவிட்ட அவன், அதைப் போலொன்றையே எதிர்பார்த்திருந்தான். ஆனால் அவருடைய புரிந்துகொள்ள முடியாத மௌனம் வேதனையைக் கூட்டுவதாக இருந்தது.’வேற சாதியில பொண்ணெடுத்தா நாளைக்கு நம்ம சாதி சனத்துல யாராச்சும் மதிப்பாங்களா?’ அவர் கொடுத்த மௌனத்தையே அவருக்கும் பதிலாகக் கொடுத்தான். அவனைப் போலவே அவருக்கும் இந்த மௌனம் வேதனையைக் கொடுத்திருக்கலாம். ‘மொதல்ல அவங்க வீட்ல சொல்ல சொல்லு. அவங்க வீட்ல என்ன சொல்றாங்கன்னுப் பாப்போம்’ என்று மட்டும் சொல்லி வைத்தார். அதுவே அவனுக்கு பாதி சம்மதம் கிடைத்த மாதிரியிருந்தது. சந்தோசமாய் இந்த விசயத்தை அவளுக்கு சொல்ல நினைத்தவன் அங்கே அவளை பெண் பார்க்க வருகிற அவஸ்தையில் இருப்பாளென்பதால் அவளே அழைக்கட்டும் என்று காத்திருந்தான்.

*
அவளுடைய அப்பாவைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தவன், தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, வந்த விசயத்தை பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தான்.
“தம்பி நீங்க சொல்றது எல்லாம் சரிதான். எனக்கும் சந்தோசம்தான். மொதல்ல ரெண்டு பேருக்கும் படிப்பு முடியட்டும். ஆனா உங்களுக்கு மட்டும் இதுல சம்மதம் இருந்தாப் போதாது. உங்க வீட்ல இருக்கிறவங்களும் முழுமனசோட சம்மதிச்சு இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாதான் எங்களுக்கும் நிம்மதியா இருக்கும். மொதல்ல உங்க வீட்ல சம்மதம் வாங்குங்க. அதுக்கப்புறம் நானே உங்க வீட்டுக்கு வந்து உங்க அப்பா அம்மா கிட்டப் பேசறேன்.”
“சரிங்க. நான் எங்க வீட்ல சம்மதம் வாங்கிட்டு மறுபடி வர்றேன்”
ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய் அவன் வீட்டிற்குப் போக சத்திரம் பேருந்து நிலையம் வந்தான்.

*
அடுத்த நாள் மதியம் அவளிடமிருந்து அழைப்பு வந்தது. எடுத்ததும் அவசரமாய்க் கேட்டான்
‘ஏ…என்னாச்சு?’
‘ம்ம்ம் கல்யாணம் நிச்சமாயிடுச்சு’
‘…’
‘என்ன சார் பயந்துட்டீங்களா? ஒன்னும் ஆகல. அவங்க வரும்போது யாரோ தெருவுல வெறகு எடுத்துட்டுப் போனாங்களாம். சகுனம் சரியில்லனு கடமைக்கு வந்து பாத்துட்டுப் போயிட்டாங்க’
‘அப்பாடா… ஏ இன்னொரு விசயம். நான் இப்போ கோயம்புத்தூர்ல இருக்கேன் தெரியுமா?’
‘என்ன விசேசம். சொல்லாமக் கூட போயிருக்கீங்க?’
‘சென்னை வா ஒரு குட் நியூஸ் சொல்றேன்’

அடுத்த நாள் அலுவலகத்தில் மீண்டும் அவர்கள் சந்தித்தபோது எல்லாக் கதையையும் சொல்லிவிட்டு அவளிடம் கேட்டான்
‘இப்போ சொல்லுங்க மேடம். நான் எப்போ மதுரை வந்து உங்கப்பாவ மீட் பண்ணனும்?’
‘எங்க வீட்ல இப்படி பொண்ணுப் பாக்கறதுக்கு எல்லாம் போயிட்டு வந்துட்டு இப்போ திடீர்னு நான் இந்த விசயத்த சொன்னா நான் காதலிக்கிறேன்ங்கற கோபத்த விட அவர்கிட்ட கடைசி நேரத்துல சொல்றேனேங்கற கோபம் அதிகமா இருக்குமோனு பயமா இருக்கு’
‘சரி நானே உங்கப்பாகிட்ட பேசவா?’
‘இல்லங்க. நேர்ல சொல்றதுக்கு எனக்கே ரொம்ப தயக்கமா இருக்கு. இதுல நீங்க அங்க வந்து…எங்க ஊரப் பத்தி உங்களுக்குத் தெரியாது’
‘அப்போ எப்படிதான் சொல்றது?’
‘ம்ம்ம் எல்லாத்தையும் லெட்டரா எழுதியனுப்பலாம்னு இருக்கேன்’
‘அது அவ்வளவு மரியாதையா இருக்காது. உனக்கு நேர்ல பேசறதுக்கு தயக்கமா இருந்தா எல்லாத்தையும் லெட்டரா எழுதி அடுத்த தடவ ஊருக்குப் போகும்போது நேர்லயே உங்கப்பாகிட்ட கொடுத்துடு’
‘ம்ம்ம் அப்படிதாங்க பண்ணனும்’
‘இன்னும் என்ன வாங்க போங்க் னே சொல்லிட்டு இருக்க?’
‘ம்ம்ம் மாத்திக்கறேன்’

*

பேருந்து திருச்சியை விட்டு வெகு தொலைவு வந்திருந்தது. திருச்சியில் அவளுடைய அப்பா சொன்னதை மீண்டும் ஒருமுறை நினைத்துக்கொண்டான். “உங்களுக்கு மட்டும் இதுல சம்மதம் இருந்தாப் போதாது. உங்க வீட்ல இருக்கிறவங்களும் முழுமனசோட சம்மதிச்சு இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாதான் எங்களுக்கும் நிம்மதியா இருக்கும்”. உண்மைதான். வீட்டில் முழுமனதோடு சம்மதிப்பார்களா? அப்பா சம்மதித்தாலும் அம்மா ஒத்துக் கொள்வது சாத்தியமா? என்று யோசித்தபடியே உறங்கிப் போனான். ஊருக்கு வந்து சேரும்போது மாலையாகியிருந்தது. சோர்ந்து போனவனாய் வீட்டுக்குப் போனதும் அவன் அம்மாவின் மடியில் சாய்ந்தான். ‘என்னப்பா சொல்லாம கூட வந்திருக்க? காலேஜ் லீவா? ஒடம்பெதுவும் சரியில்லையா?’ பரிவாய்க் கேட்டார். வெகு நாட்களுக்குப் பிறகு அவனுக்கு அழ வேண்டும் போலிருந்தது. உடைந்து போனவனாய் ஆரம்பம் முதல் எல்லாவற்றையும் சொல்லத் துவங்கினான்.முழுவதும் சொல்லி முடித்ததும் ‘அவளுக்கு என்ன விட்டா வேற யாரும் இல்லனு நான் இத கேட்கலம்மா. எனக்கும் அவள விட்டா வேற யாரும் இல்ல. அவ கூட இருக்கிற மாதிரி வேற எந்தப் பொண்ணுகூடவும் என்னால வாழ முடியாது. நீதான் அப்பாகிட்ட எப்படியாவது சொல்லனும்’ மீண்டும் அவள் மடியில் முகம் புதைந்தான். அன்று வீட்டில் நடந்த மிக உருக்கமானப் பேச்சுக்களுக்களின் கடைசியில் அவன் அப்பாவிடம் அவன் அம்மா சொன்னார் ‘கல்யாணத்துல வந்து மொய் வச்சிட்டு போறதோட சொந்தக்காரங்க வேல முடிஞ்சு போயிடும்ங்க. கல்யாணத்துக்கப்புறமும் நம்ம பையன் சந்தோசமா இருக்கானான்னு யாரும் வந்து பாத்துகிட்டு இருக்கப் போறதில்ல. அதுக்கப்புறம் அவனுக்கொன்னுன்னா அத நாமதான் பாக்கனும். சொந்த பந்தம் என்ன சொல்லுதுன்னு பாக்காம பையன நெனச்சுப் பாப்போம். நாமளே திருச்சிக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடுவோம்’ புயலுக்குப் பின் அமைதி மாதிரி எல்லாம் தெளிந்து ஒரு தீர்வு வந்தது.

*

மதியம் சாப்பிடும்போது கேட்டான் ‘என்ன அப்பாவுக்கு எழுத வேண்டிய லெட்டர் எழுதி முடிச்சுட்டியா? எப்போ ஊருக்குப் போறதா இருக்க?’
‘ம்ம்ம் பாதி எழுதிட்டேன். இன்னும் பாதி எழுதனும்’
‘சரி போறதுக்கு முன்னாடி எங்கிட்ட காட்டிட்டுப் போ’
‘அதெல்லாம் முடியாது. நான் போயிட்டு வந்துட்டு அந்த டைரிய உங்கிட்டவே கொடுத்துட்றேன் அப்புறம் அத நீயே வச்சிக்க’
‘டைரியா?’
‘ஆமா லெட்டர் எல்லாம் பத்தல. அதான் டைரி’
சிரித்துக் கொண்டான்.
அந்த வெள்ளிக்கிழமை இரவு அவளிடம் இருந்து வந்த மெசேஜ் : ‘டைரிய அப்பாகிட்ட கொடுக்கிறதுக்கு நான் மதுரைக்குப் போயிட்டு இருக்கேன். எனக்கு ரொம்ப டென்சனா இருக்கு. நீ கால் எதுவும் பண்ண வேணாம். நான் திங்கட்கிழம வந்து எல்லாத்தையும் சொல்றேன்’
அந்த வெள்ளி இரவிலிருந்து திங்கள் காலை வரை அவனுக்கு எதுவுமே ஓடவில்லை. மொத்தம் மூன்று முறை கூட சாப்பிட்டிருக்க மாட்டான். ஞாயிறு இரவே அவளை அழைத்தான். அவளுடைய செல்பேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. காலை எழுந்ததும் மீண்டும் அழைத்தான். ஸ்விட்ச் ஆஃப். அவசரமாக அலுவலகத்துக்கு சென்றான். அவள் வரவில்லை. மீண்டும் அழைத்தான். ஸ்விட்ச் ஆஃப். மாலை வரை அவளும் வரவில்லை. மறுநாள் முழுக்க, ஸ்விட்ச் ஆஃப். அதற்கு மறுநாளும், ஸ்விட்ச் ஆஃப். அலுவலகத்துக்கும் அவள் வரவில்லை. நேரடியாக ஹெச் ஆரிடமே கேட்டான். ‘அவங்க மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சுனு ரிசைன் பண்றதா போன்ல சொன்னாங்களே’
அவனுக்கு உடல் முழுக்க ரத்தம் வற்றியது போலானது.

*
அடுத்த நாள் மாலை திருச்சியில் தன்னுடைய பெற்றோருடன் அவள் வீட்டில் இருந்தான். மகனின் விருப்பம் தான் தங்களின் விருப்பம் என்றும் இந்தத் திருமணத்துக்கு முழுமனதோடு சம்மதிப்பதாகவும், அவளை தங்களின் மகளாகவேப் பார்த்துக் கொள்வதாகவும் அவன் அம்மா சொல்ல, அவன் அப்பாவும் அதையே மீண்டும் சொன்னார். இதெல்லாம் முன்னாடியே நடந்திருக்கலாமென அவளுடைய அப்பா வருத்தப்பட்டுக் கொண்டார். அவளும் அங்கே ஓரமாய் நின்று கொண்டிருந்தாள். இருவருக்கும் படிப்பு முடிந்த பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாமென்று உறுதி செய்யப்பட்டது. தன்னுடைய பெற்றோரை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு அடுத்த நாள் காலை அவளைக் கல்லூரியில் சந்தித்தான்.
‘thanks’
‘போடி லூசு’
எல்லாம் கனவு போல இருந்தது அவளுக்கு.

*
ஹெச் ஆரிடமிருந்து அப்படியொரு செய்தியைக் கேட்டதும் அலுவலகம் போவதற்கே அவனுக்கு வெறுப்பாய் இருந்தது. அவளோடு அமர்ந்து பேசிய இடங்கள் எல்லாம் கேலி பேசுவது போல இருந்தன. அடுத்த வாரம் அவளுடைய ஜிமெயிலிலிருந்து ஒரு மடல் வந்திருந்தது. ஆர்வமாய்ப் படித்தான். அவனிடம் பேசுவதற்கே அவளுக்குத் தகுதியில்லையென்றும் அதனால்தான் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டதாகவும் எழுதியிருந்தாள். டைரியோடு அவள் வீட்டுக்குப் போனபோது அன்றைக்கும் அவளைப் பெண் பார்க்க ஒரு குடும்பம் வந்திருந்ததாகவும், அவளுக்கு அது முன்பே தெரியாதென்றும், வந்தவர்களுக்கு அவளைப் பிடித்துப் போக இரண்டு குடும்பங்களிலும் சம்மதம் சொல்லி கடைசியாக இவளிடம் கேட்ட போது அந்த சூழ்நிலையில் இந்த விசயத்தை சொல்ல அவளுக்கு தைரியமில்லையென்றும், தன்னை மன்னித்து விடும்படியும் இன்னும் பல அறிவுரைகளும் சொல்லப்பட்டு பெரிதாய் நீண்டிருந்தது அந்த மடல்.

*
‘என்னக் கல்யாணம் பண்ணிக்கிறியே நீ தான்டா லூசு’
‘ஆமா. லூச லூசுதான் கல்யாணம் பண்ணிக்க முடியும்’
‘நான் சீரியசா கேட்கறேன், முழு சம்மதத்தோடதான் என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?’
‘உண்மைய சொன்னா இதுகூட என்னோட சுயநலம் தான். உன்னத் தவிர வேற யார்கூடவும் என்னால சந்தோசமா வாழ முடியாது தெரியுமா?’
அவனை அணைத்துக்கொண்டாள்.

*
அவளுக்குத் திருமணம் முடிந்த இரண்டாவது மாதத்தில் அவனுக்கு அலுவல் நிமித்தம் ஓராண்டு அமெரிக்கா செல்ல வேண்டி வந்தது. அவளைப் பிரிந்த மன உளைச்சலில் இருந்து விடைபெற அவனும் அதனை ஒப்புக்கொண்டான். அமெரிக்கா சென்ற ஒரு மாதத்தில் கங்கா என்ற பெண்ணிடமிருந்து அவனுக்கு ஒரு மடல் வந்திருக்கவும் ஆர்வமில்லாமல் திறந்து பார்த்தான்.
‘நான் **வோட ப்ரெண்ட். மதுரையிலிருந்து இந்த மெயில் அனுப்புறேன். அவளப் பெண் பார்க்க வந்தப்பவே உங்க விசயம் எல்லாம் எங்கிட்டதான் சொல்லி அழுதா. உங்க மெயில் ஐடி கொடுத்து என்னதான் உங்களுக்கு அந்த விசயத்த மெயில் அனுப்ப சொல்லியிருந்தா. நான் அவளையே உங்களுக்கு கால் பண்ணி எல்லாத்தையும் சொல்லிட சொன்னேன். அவ அப்போ உங்ககிட்ட பேசினாளா இல்லையானு எனக்குத் தெரியாது. நானும் மெயில் அனுப்பல. ஆனா இப்போ நான் இந்த மெயில் அனுப்புறதுக்கு ஒரு காரணம், அவ இப்போ ஒரு விதவை. அவளோட ஹஸ்பெண்ட் ஒரு ஆக்சிடெண்ட்ல போன வாரம் எறந்துட்டார். இத உங்களுக்கு சொல்லனும்னு தோணுச்சு. அதனால சொல்லிட்டேன்’

அதன் பிறகு அந்த கங்கா மூலம் அவளுடைய செல்பேசியெண்ணை வாங்கி அவளிடம் பேசினான். இவன் குரலைக் கேட்டதும் துண்டித்தாள். மீண்டும் மீண்டும் இவன் அழைக்க ஓரிரு நாட்களில் இந்த செல்பேசியெண் உபயோகத்தில் இல்லை என்று குரல் வந்தது. ஏற்கனவே அவள் துயரத்தில் இருப்பாள் அவளைத் தொல்லைபடுத்த வேண்டாமென அவளைத் தொடர்புகொள்வதை நிறுத்தினான். ஓரிரு மாதங்கள் கழித்து அந்த கங்காவுக்கே மீண்டும் மடலனுப்பி அவளைப் பற்றி விசாரித்த போது அவள் திருச்சி BIM –இல் MBA படிக்கப் போய்விட்டதாகவும் அவர்கள் குடும்பமே திருச்சிக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும் தெரியவந்தது. அமெரிக்காவில் அந்த ஒரு வருடத்தை மிக வேகமாகக் கடத்தி விட்டு சென்னை திரும்பியவன் வேலையிலிருந்தும் விலகிவிட்டு அடுத்த ஆண்டு அவனும் BIM –இல் MBA சேர்ந்தான். முதல் நாள். அவளைப் பார்க்கும் ஆர்வத்தில் கல்லூரிக்கு செல்ல,
அங்கு எந்த அமர்க்களமுமில்லாமல் எளிமையாக நடந்து கொண்டிருந்தது முதலாமாண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு நடத்தப்படும் வரவேற்பு நிகழ்ச்சி...


(சர்வேசன் போட்டிக்கு அனுப்புற மாதிரி ‘நச்’ இருக்கானு சொல்லிட்டுப் போங்க :-))

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Thursday, December 06, 2007

ஊடல்

ஊடலும் காமத்துக்கின்பம்னு வள்ளுவர் சொல்றாராம். அவருக்கென்னங்க சொல்றது ஈசியா சொல்லிட்டுப் போயிட்டார். அனுபவிக்கிறவனுக்குதான் அதோட கஷ்டம் தெரியுது. ஒருவேளை ஊடல் முடிஞ்ச பின்னாடி அது இன்பமா தெரியறத அவர் சொல்லியிருக்கலாம்.ஆனா ஊடல் நடக்கும்போது அது இன்பமாவா இருக்கு? நரக வேதனைங்க. ஆளையேக் கொல்ற அவஸ்தைதான். அதுவும் பேசாம இருந்து, ஆண்கள அலைய விடுறதுல இந்த பெண்களுக்கு அப்படியென்னதான் சுகமோ தெரியல. இப்படியெல்லாம் பொதுவா எல்லாப் பெண்களையும் தப்பாப் பேசக்கூடாதுதான். நானும் எல்லாப் பெண்களையும் சொல்லலைங்க. காதலிக்கிற, காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட பெண்கள மட்டும் தான் சொல்றேன்.

இப்ப மணி ஆறு ஆகுது. அவ என் கூடப் பேசி முழுசா ரெண்டு நாள் முடியப் போகுது. காதலிச்ச காலத்துலயும் சரி கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் சரி இந்த மாதிரி நெறைய தடவ கோவிச்சுக்கிட்டு பேசாம இருந்திருக்கா. ஆனா எப்பவும் தொடர்ந்து ஒரு நாளைக்கு மேல பேசாம இருந்ததில்ல. இந்த தடவதான் இப்படி ரெண்டு நாளா என்னக் கொன்னுகிட்டு இருக்கா. இத்தனைக்கும் கோவிச்சுட்டுப் பேசாம இருக்கிற அளவுக்கு நான் பெரிய தப்பு எதுவும் பண்ணல. அன்னைக்கு சாதாரணமாதான் பேசிட்டு இருந்தோம். ஏதோ பேச்சு வாக்குல தெரியாத் தனமா அந்தப் பழமொழிய சொல்லிட்டேன். தேன் விக்கறவன் புறங்கைய நக்காமலா இருப்பான் அப்படின்னு. இதுல என்ன பிரச்சினைன்னா அவங்க அப்பாவும் பெரிய அளவுல தேன் வியாபாரம் தான் பண்றார். நான் வேணும்னே அவங்கப்பாவ கிண்டல் பண்றதுக்காக தான் அப்படி சொன்னேன்னு நெனச்சுக் கோவிச்சுக்கிட்டுப் பேச மாட்டேங்கறா. இந்தப் பொண்ணுங்க கிட்ட மட்டும் அவங்க பிறந்த வீட்டப் பத்தி தெரிஞ்சோ தெரியாமலோ சின்னதா கிண்டல் பண்ற மாதிரி ஏதாவது சொல்லிட்டாப் போதும்; கோபம் சுள்ளுனு வந்துடுது. அதுக்கப்புறம் நாம தலகீழா நின்னாலும் ஒன்னும் நடக்காது.

நான் அவளக் காதலிச்சது, கல்யாணம் பண்ணிக்கிட்டது எதுவுமே அப்போ எங்க வீட்ல யாருக்கும் தெரியாது. நாங்களும் அவங்களும் வெவ்வேற சாதியாப் போயிட்டோம். அதுவுமில்லாம என்னோட அண்ணனுக்கே அப்போ கல்யாணம் ஆகாம இருந்தது. ( இன்னும் ஆகலங்கறது வேற விசயம் ). சூழ்நிலை இப்படி இருக்கும்போது அன்னைக்கு எங்க வீட்ல இந்த விசயத்த சொல்ற நிலமைல நான் இல்ல. அதனால அவங்க வீட்ல மட்டும் சம்மதம் வாங்கிட்டு திருத்தணில ரொம்ப சிம்பிளா கல்யாணத்த முடிச்சுக்கிட்டோம். அதுக்கே நான் அவங்கப்பாவுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன். இப்படியிருக்கும்போது நானே அவங்கப்பாவ கிண்டல் பண்ணேன்னு அவ நெனச்சுக்கிட்டதுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு

அவளுக்கு நல்ல குரல் வளம்ங்க. பாடினா நாள் பூரா கேட்டுகிட்டே இருக்கலாம். ம்ஹும்… இன்னைக்குப் பேசுறதுக்கே வழியக் காணோம். பாட்டெல்லாம் டூ மச் தான். இன்னைக்குனு பாத்து நானும் வடபழனி ஆபிசுக்கு வரவேண்டியதாப் போச்சு. இங்க கஸ்டமர் சைட்ல இருந்து இஸ்யூஸ் அடுத்தடுத்து வந்துகிட்டே இருக்கு. அவங்க எதுவுமே பண்ணாம எந்தப் பிரச்சினைனாலும் எல்லாத்துக்கும் நம்மகிட்டவே வர்றாங்க. நானும் முடிஞ்ச வரைக்கும் சால்வ் பண்ணிகிட்டுதான் இருக்கேன். ஆனா இவங்களுக்கு இதுவே பழக்கமாப் போச்சு. கொஞ்ச நேரம் கூட நம்ம பெர்சனல் மேட்டர பாக்க விட மாட்டேங்கறாங்க. இருங்க. ஏதோ சத்தம் கேட்குது. அடுத்த கஸ்டமர் கால் னு நெனைக்கிறேன்.


“முருகா… நேத்துல இருந்து என்னோட இளா என்கூட பேச மாட்டேங்கறா! நீ தான் அவ கோபத்த
தீர்த்து என்கூட பேச வைக்கனும். உன்ன தான் மல போல நம்பியிருக்கேன்”

நானே ரெண்டு நாளா வள்ளி என் கூட பேச மாட்டேங்கறான்னு உங்ககிட்ட பொலம்பிகிட்டு இருக்கேன். இவரு எங்கிட்ட வந்து பொலம்புறாரு. காதலிச்சா ஆண்டவனுக்கே இந்த நிலமதான்னு இவருக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்.

---------

இந்தக் கதையை சர்வேசனின் நச்சுனு ஒரு கதை போட்டிக்கு அனுப்பலாமானு சொல்லுங்க நண்பர்களே!!!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Friday, November 30, 2007

அன்பே காதல் இமை மழை குடை


இந்த பதிவெழுதத் தூண்டிய அய்யனாருக்கு நன்றி :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Monday, November 19, 2007

என்னாது? எனக்கு கூட ‘போலி’யா??? :-)

நம்ம பேர்ல வேற ஒருத்தர் எழுதினா அவர போலினு சொல்லலாம்
நாம எழுதினத, மத்தவங்க அவங்க பேர்ல எழுதினா அவங்கள என்னனு சொல்ல?

இது நான் எப்பவோ எழுதினது.

அதுல ஒரு பகுதி
இங்கே நாசர் என்பவர் பெயரில் இருக்கிறது

இதைப் போலவே என்னுடைய இன்னும் சில பதிவுகளும் அவர் பெயரில் அங்கே இருக்கின்றன.

நான் எழுதிய
காதல் கூடம் முதலான சில பதிவுகள், இந்த Forum –இல் காதலன் என்பவர் பெயரில் இருக்கின்றன. இங்கே உள்நுழைந்து பார்க்க முடியாததால் என் பக்கத்திற்கு லிங்க் எதுவும் கொடுத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. கொடுத்திருந்தால் நன்றி.

இதே போல ஆர்க்குட்டில் சில கவிதை குழுக்களில் நான் எழுதிய சில கவுஜைகளை மற்றவர்கள் பெயரில் பார்த்துவிட்டு, எழுதியவருக்கு மடலனுப்பினால் ரிப்லை இல்லை. ஸ்க்ராப் பண்ணினால் மிக வேகமாக அதனை டெலிட் செய்து விடுகிறார் :) இப்போது அலுவலகத்தில் ஆர்க்குட் தடை செய்யப்பட்டிருப்பதால் ஆர்க்குட் பக்கம் எட்டிப் பார்த்து மாதங்களாகிவிட்டது.

இப்படியெல்லாம் நடக்கிறதென்றுதான் நண்பன் ஒருவன் சொன்ன மாதிரி, கவிதைகளை எழுதி அனுப்பாமல், Paint –இல் பிக்சராக எழுதி ஒரு ஓரமாக நம்ம வலைப் பக்க முகவரியும் எழுதி
படங்களாக அனுப்பினேன். எங்கேப் போனாலும் நம்ம முகவரியும் கூடவேப் போகும் என்று ;-) ஆனால் அதையும் கில்லாடிகள், படத்தில் இருக்கும் வலைப்பக்க முகவரியை மட்டும் வெட்டிவிட முயற்சி செய்திருக்கிறார்கள். அதில் வலைப் பக்க முகவரியை வெட்டினால் கவிதை வரியும் கொஞ்சம் சேதாரமாகும் என்ற நிலையில் சில படங்களில் மட்டும் வெட்ட முடியாமல் போய் விட்டது என்று நினைக்கிறேன். முகவரியில்லாத கவிதைப் படங்கள் சில இங்கேஇப்பொழுதெல்லாம் எல்லாப் படத்திலும் குறுக்கும் நெடுக்குமாக வலைப்பக்க முகவரியோ, மின்னஞ்சல் முகவரியோ போட்டு விடுகிறேன். எனக்கே இது ஓவராகத்தான் தெரிகிறது :-) ஆனால் வேறு வழியில்லை.

இன்னொருவர் என் பதிவுகளுக்காக
தனியே ஒரு வலைப்பதிவே ஆரம்பித்துவிட்டார். கடைசி வரியில் மட்டும் இவர் பெயரைப் போட்டுக் கொண்டாலும் இவர் கொஞ்சம் நல்லவர். எல்லாப் பதிவுகளுக்கும் இரண்டு லிங்க் கொடுத்திருக்கிறார். ஒன்று இவர் பதிவுக்குப் போகும். இரண்டாவது என்னுடைய பதிவுக்கு வரும் :-)

புத்தகமாகப் போட்டால் தான் நாம் எழுதுவதற்கு எல்லாம் காப்பிரைட் கிடைக்குமோ??? மக்கா, நான் எழுதினத யாரும் எங்கேயும் எடுத்துப் போடக்கூடாதுனு எல்லாம் சொல்லல. அப்படி போடும்போது என்னோட பக்கத்துக்கும் ஒரு லின்க் கொடுத்திடுங்கனு மட்டும் தான் சொல்ல விரும்பறேன். நன்றி.


***

இன்னொரு Forum – இல் என்னுடைய கவிதையை சிறந்த காதல் கவிதையாக குறிப்பிட்டிருந்தார் வெங்கிராஜா என்பவர். அவருக்கு நன்றி. ஆனாலவருக்கு, நான் பெரிய கவிஞனாக இருப்பேனோ என்று என்னைப் பற்றி தவறான எண்ணமும் இருக்கிறது போல.
இங்கே தபூ சங்கரைப் பற்றி குறிப்பிடும்போது “இவர் அருட்பெருங்கோ என்ற துணைக்கவிஞரோடு இணைந்தும் கவி புனைவார்” என்று இருக்கிறது :-) அண்ணே, நான் தபூ சங்கர நேர்ல பாத்தது கூட கிடையாது :-) அவரோட சில புத்தகங்கள மட்டும் தான் வாசிச்சிருக்கேன்.

***

இந்தப் பதிவில் எதாவது கவுஜை எழுதியிருப்பேன் என்று நம்பி வந்தவர்கள் மன்னிக்கவும். புதன் கிழமையன்று கொஞ்சம் அழுகாச்சி கவுஜைகள் போடுகிறேன் ;-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, November 14, 2007

இந்த தீபாவளி… இப்படி…

தீபாவளியை அதன் காரணங்களுக்காக என்றுமே கொண்டாடியதில்லை நான். எனினும் பட்டாசு, புத்தாடை இனிப்பு இவை மட்டுமே தீபாவளியைக் கொண்டாட போதுமான காரணிகளாய் இருந்த காலமும் பத்தாண்டுகளுக்கு முன்பே கரைந்து போய் விட்டது. இந்த முறை தீபாவளிக்கு வீட்டுக்கு சென்றிருந்த போது தீபாவளியை பின்னுக்குத் தள்ளி குடும்பத்தின் முழுக் கொண்டாட்டத்தையும் தனியொருத்தியாய் ஆக்கிரமித்துக் கொண்டாள் அக்காவின் மகள் ஜனனி.


அவளுக்குப் பிடித்த இனிப்பு, அவள் வெடிக்க பட்டாசு, அவள் கேட்ட சுடிதார், அவள் கேட்ட crayons என குடும்பத்தில எல்லோருக்கும், இந்த தீபாவளியின் முன் தயாரிப்புகள் எல்லாமே, அவளைச் சுற்றியேதான் இருந்தது. வீட்டுக்கு அவள் வந்ததில் இருந்து, கிளம்பி செல்லும் வரை எல்லோரையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைக்க முடிந்திருக்கிறது அவளால். மூன்று நாட்களின் எந்த நிமிடத்தையும் அவளோடு இல்லாத காலமாக கணக்கிட முடியவில்லை.

அவளோடு ஒளிந்து விளையாடும்போது, விளையாட்டின் விதி இரண்டே இரண்டு தான். ஒளிந்து கொள்வது நீங்கள் என்றால், அவள் சொல்கிற இடத்தில் தான் நீங்கள் ஒளிந்து கொள்ள வேண்டும். பத்து வரை எண்ணிவிட்டு அவள் சொன்ன இடத்தில் ஒளிந்திருக்கும்(?) உங்களைச் சரியாக வந்து கண்டுபிடித்து(!) விடுவாள். நீங்கள் தோற்றுப் போவீர்கள். கண்டுபிடிக்க வேண்டியது நீங்கள் என்றால், எத்தனை முறை விளையாடினாலும் அவள் ஒளிந்து கொள்ளப்போவது அதே கதவு சந்துதான் என்று தெரிந்தாலும் அதனைத் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் நீங்கள் தேட வேண்டும். கண்டுபிடிக்க முடியாமல் நீங்கள் மீண்டும் தோற்றுப் போக “நான் இங்க இருக்கேன்” என கதவு சந்தில் இருந்து அவள் வெற்றிப் புன்னகையுடன் ஓடி வருவாள். அவளோடு விளையாடும் இந்த விளையாட்டில் இந்த இரண்டும்தான் திரும்ப திரும்ப நடைபெறுகிறதென்றாலும் அந்த சுவாரசியம் கடைசி வரை குறையாமல் இருப்பதற்கு என்ன காரணமெனத் தெரியவில்லை.சாப்பிடும்போதும், தூங்கும்போதும் அவளுக்கு தேவையானவை உணவும், மடியும் மட்டுமல்ல, கேட்டுக் கொண்டே சாப்பிடுவதற்கு/தூங்குவதற்கு சில கதைகளும். கதையைத் தவறாக சொன்னால் அதை திருத்துகிற அளவுக்கு, அவை ஏற்கனவே கேட்ட கதைகளாக இருந்தாலும், மீண்டும் கேட்பதில் அவளுக்கு அதே ஆர்வம் இருக்கதான் செய்கிறது. ஒருமுறை அவளை தூங்க வைக்க கதை சொல்லிக்கொண்டே நான் தூங்கிப் போக என்னை எழுப்பி ‘மாமா அந்த நரிக்கத சொல்லு மாமா’ என்று விடாமல் கேட்கிறாள். அவளுக்காக அனிமேசனில் கதை சொல்லும் சிடிக்கள் வாங்கி வந்து தொலைக்காட்சியில் ஓடவிட்டபோது, கரடிக்கதை, விறகுவெட்டி கதை, முதலைக் கதை என ஏற்கனவே அக்கா சொன்ன அத்தனைக் கதைகளும் அங்கே காட்சிகளோடு வந்து கொண்டிருந்தன. முன்பு அக்கா சொல்ல சொல்ல அவளாக மனதில் உருவாக்கிக் கொண்ட காட்சிகள் எப்படியிருந்தனவோ தெரியவில்லை, தொலைக்காட்சியில் எல்லாக் கதைகளுக்கும் அனிமேசன் காட்சிகள் வர வர அவளால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. “இப்ப கரடி வந்துடும், ராமு மரத்துல ஏறிக்குவான், சோமு கீழப் படுத்துக்குவான்” என அடுத்து என்ன நிகழப் போகிறதென அவள் சொல்ல, அதுவே அங்கே காட்சியாகவும் வர… அப்போது அவள் முகத்தில கண்ட பூரிப்பு ஆயிரம் பூக்களுக்குச் சமம்.

என் அம்மா அவளை எதற்கோ மிரட்டிவிட அழுது கொண்டே என்னிடம் வந்தவளை சமாதானப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு அம்மாவை பொய்யாக நான் ஒரு அடி வைக்க, நிஜமாகவே எனக்கு கன்னத்தில் ஒரு குத்து விழுந்தது அவளிடமிருந்து. எத்தனை மிரட்டினாலும் அவள் அம்மாச்சியை யாரும் அடிக்கக் கூடாதாம். ம்ம்ம்… இந்த தாத்தா- பாட்டிகளுக்கும், பேரன் – பேத்திகளுக்குமிடையே அப்படி என்னதான் பாசம் இருக்குமோ தெரியவில்லை. கடைசியில் அவர்கள் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். நாம் பொது எதிரியாகி விடுகிறோம்.


அவளுக்கு இணையாக போட்டி போட முடியா விட்டாலும் வீடே அதிர சத்தம் போட்டு தனது இருப்பை அவ்வப்போது உணர்த்தி விடுகிறாள், அண்ணன் மகள் மித்ரா. இவள் இன்னும் நடக்க/பேச ஆரம்பிக்கவில்லையென்பதால் கொஞ்சம் சமாளிக்க முடிகிறது. இவளும் வளர்ந்துவிட்டடல் அடுத்த தீபாவளி இரட்டை வெடியாகதான் இருக்கும் :-)எல்லாக் குழந்தைகளையும் போலவே கேள்விகள் கேட்டு அதற்கு நம்மிடமிருந்து பதில் வாங்குவது அவளுக்குப் பிடித்தமான இன்னொன்று. அதிக சளியால் அவளை மருத்துவரிடம் கூட்டிச் சென்ற போது,

“எப்போம்மா டாக்டர் வருவாங்க?”

“டாக்டர் பேசிக்கிட்டு இருக்காங்களாம்… இப்போ வந்துடுவாங்க”

“என்னம்மா பேசிக்கிட்டு இருக்காங்க?”

“அவங்க பிரெண்ட் கூட பேசிட்டு இருக்காங்களாம். நீ இந்த மாதிரி சத்தம் போட்டா அப்புறம் உனக்கு ஊசி போட்டுடுவாங்க”

கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தவள் மறுபடியும்,

“எதுக்கும்மா இவங்கல்லாம் வந்திருக்காங்க?”

“எல்லாருக்கும் உன்ன மாதிரி சளி புடிச்சிருக்கு…அதான் டாக்டர்கிட்ட வந்திருக்காங்க”

“எப்படிம்மா இவங்களுக்குலாம் சளி புடிச்சிச்சு?”

“உன்ன மாதிரியே அவங்களும் தண்ணியில விளையாண்டாங்களாம் அதான் சளி புடிச்சிக்கிச்சு”

“ஏம்மா தண்ணியில விளையாண்டாங்க?”

“அதெல்லாம் அம்மாவுக்குத் தெரியாது பாப்பா… அவங்கள தான் கேட்கனும்”

அங்கிருப்பவர்களிடம் கேட்பதற்கு அவள் போக, அவளை இழுத்து அண்ணனிடம் விட்டு அக்கா எஸ்கேப் ஆகிவிட,

“ஏன் மாமா… அவங்க தண்ணியில வெளையாண்டாங்க?”

பதில் சொல்ல ஆரம்பித்தால், இப்போதைக்கு இது முடியாது என்பதை உணர்ந்த அண்ணன், கேட்டான்…

“ஆமா கண்ணு… ஏன் அவங்க தண்ணியில வெளையாண்டாங்க?”

அதன்பிறகு அமைதியாகி விட்டாள் :-)

சொல்லிக்கொடுப்பதைத் திருப்பி சொல்லிவிட்டாலே அந்த குழந்தையைப் பாராட்டும் போது, யாரும் சொல்லித் தராமலே வெளியில் பார்த்துணர்ந்து அவள் பேசுகிற/ செய்கிறவை ஆச்சர்யமளிக்கின்றன. யாரும் சொல்லித் தராமலேயே சுடிதாரின் துப்பட்டாவை எல்லா விதமாகவும் அணிந்து கொள்கிறாள். குடும்பத்தில் எல்லோருக்குமிடையே இருக்கும் உறவுமுறையை அவளால் யாரும் சொல்லித் தராமலேயே தெரிந்து கொள்ள முடிகிறது.


அவளுக்கு என்று வீட்டில் சில இடங்கள் இருக்கின்றன. கோபித்துக் கொண்டு உட்கார்ந்து கொள்ள ஒரு வெளிவாசல்படி, ஒளிந்துகொள்ள ஒரு கதவுசந்து, பொம்மையோடு விளையாட மாடிப்படி, நீரோடு விளையாட துணி துவைக்கிற இடம் இப்படி…தண்ணீரில் விளையாடினால் சளி பிடிக்கும் என்றும் தெரிகிறது. சளி பிடித்தால் ஊசிப் போடப்படும் என்றும் தெரிகிறது. ஆனாலும் தண்ணீரை விட்டுப் பிரிவதில்லை அவள்.அவளைப் போலவே கையில் அகப்படாமல் ஓடிக்கொண்டே இருப்பதால்தான் அவளுக்கு தண்ணீரையும் பிடித்துப் போனதோ என்னமோ. குழாயில் தண்ணீரை நிரப்பி விளையாடுவதற்காகவே துணி துவைக்கிற இடம் வாகாக அமைந்துவிடுகிறது அவளுக்கு. கடைக்குப் போகும்போது கூடவே வருவதில் அப்படியென்ன சுகமோ இந்த குழந்தைகளுக்கு. ஓவ்வொரு முறையும் கடையில் ஏதேனும் ஒன்று (எப்படியும் உடையப் போகிறது எனத் தெரிந்தாலும் ஒரு பலூனோ, கண்ணாடியோ வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும்) வாங்கிக் கொள்கிறாள்.

பெரியவர்களைப் போல, அறிமுகமில்லாத புதியவர்களிடம் பேசுவதற்கு அவளுக்கு எவ்வித கூச்சமும் இல்லை. வாசலில் நின்று ஓடிக்கொண்டிருக்கிற கோழியையும், நாய்க்குட்டிகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், தெருவில் போய்க்கொண்டிருந்த ஓர் அம்மாவை அழைத்தாள்.

“ஏங்க… இங்க வாங்க”

“என்ன பாப்பா? உம் பேரென்ன”

“என் பேரு ஜனனி. இது எங்க அம்மாச்சி வீடு தெரியுமா?”

“ஓ அம்மாச்சி வீட்டுக்கு வந்திருக்கியா?…உங்க வீடு எங்க இருக்கு?”

“எங்க வீடு திருப்பூர்ல இருக்கு. இது எங்க தாத்தா புதுசா கட்டின வீடு. நல்லா இருக்குதா?”

“ம்ம்ம் நல்லா இருக்கு கண்ணு”

“சரி போங்க”

சிரித்துக் கொண்டே போய் விட்டார் அவரும்.
ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன் அவளிடம் சொன்னேன் - “ஜனனி இப்போ இங்க அம்மாச்சி வீட்ல இருக்கிற மாதிரியே திருப்பூர் போயும் இருக்க கூடாது. அடம் பண்ணாம ஸ்கூல் போய் நல்லாப் படிக்கனும் சரியா?”

அதற்கு அவள் சொன்ன பதில் -

“ஹையோ மாமா… உங்கக்காதான் காலைலயே என்ன குளிக்க வச்சு, யூனிஃபார்ம் போட்டு, லஞ்ச் எல்லாம் பாக்ஸ்ல போட்டு ஸ்கூல்ல கொண்டு வந்து விட்றாங்களே… சாயங்காலமும் ஸ்கூல் வந்து என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வர்றாங்க… எனக்கு A, B, C, D எழுத வைக்கிறாங்க… எல்லாம் பண்றாங்கல்ல? உங்கக்கா இருக்கும்போது எனக்கென்ன மாமா?”

அவளுக்கு மூன்று வயது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? இதுவரை யாரும் நம்பவில்லை.

குழந்தை (உள்ள(ம் கொண்ட)) வலைப்பதிவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் நாள் வாழ்த்துகள் :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, November 06, 2007

Monday, November 05, 2007

கல்யாண வீட்ல மொய் எழுதியிருக்கீங்களா?

முன்னலாம் கல்யாண வீடுகள்ல ஒவ்வொரு வேலையையும் செய்யறதுக்குனு சொந்தக்காரங்கள்ல சில நிபுணர்கள் இருப்பாங்க.

ஸ்டோர் ரூம் பாத்துக்கிறதுக்குனு ஒருத்தர் இருப்பார். சமையல் காரங்க சொன்ன அளவவிட கொஞ்சம் அதிகமாவேதான் நாம பொருட்கள் எல்லாம் வாங்கிப் போடுவோம். அத அளவா வேணுங்கும்போது மட்டும் கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணி கால்வாசிப் பொருட்கள மிச்சம் பண்ணி கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துடுவாங்க இந்த ஸ்டோர் கீப்பர்ஸ்.

அப்புறம் பந்தி பரிமாறுவதும் ஒரு கலை. வரிசையா ஒவ்வொரு ஐட்டமா வச்சிட்டுப் போறதுதானன்னு சாதாரணமா நெனச்சுட முடியாது. பந்தியில பொதுவா யாருமே என்ன வேணும்னு கேட்கிறதுக்கு தயங்குவாங்க. அவங்க முகக்குறிய வச்சே என்ன வேணும்னு கேட்டுப் பரிமாறுறதுல இருந்து, எவ்வளவு பேர் சாப்பிட்டாங்க, இன்னும் எவ்வளவு பேர் வருவாங்க, என்னென்ன ஐட்டம் தீந்து போச்சு, பத்தலன்னா ரெடி மேடா என்ன செய்யலாம்? இப்படி முடிவெடுக்கிற வல்லமை படைச்ச ஆளுங்க தான் இதுக்கெல்லாம் லாயக்கு.

அடுத்தது பந்தல், மேளம், போக்குவரத்து வசதி, லைட் செட், மேடை அலங்காரம் இப்படி அததுக்குனு இருக்கிற ஆளுங்களப் பிடிச்சி சேர்க்கிறதுக்கு நல்ல வெளிவட்டார தொடர்பு இருக்கிற ஆளு வேணும். கடைசி நேரத்துல எது வேணும்னாலும் இவருகிட்ட சொன்னா போதும் எங்க இருந்தோ, எப்படினோ தெரியாது ஆனா கேட்டது கிடைச்சிடும். எப்பவும் கல்யாணம் முடிஞ்சு மண்டபத்த விட்டு கடைசியா போற ஆளு இவராத்தான் இருப்பாரு.

ஆனா இப்போ இந்த மாதிரி எல்லா வேலைகளையும் அவுட்சோர்சிங் பண்ணிடறாங்க. சமையல் + பரிமாற ஒரே காண்ட்ராக்ட். யூனிஃபார்ம போட்டுகிட்டு அவங்களும் மெசின் மாதிரி வேலைய முடிச்சிட்றாங்க. அப்புறம் மண்டபம் + மேடை + பந்தல் எல்லாம் ஒரே கணக்கில் வந்துடுது. எதுக்கும் பெரிசா அலைய வேண்டியதில்லை. ஆனா எல்லா வேலையும் இப்படி அவுட்சோர்சிங்க்ல போனாலும் இன்னமும் சொந்தக்காரங்களே பாத்துக்கிட்டு இருக்கிற வேலை இந்த மொய்யெழுதுறது மட்டும்தான். பண விசயமாச்சே... நம்மாளுங்க உசாராத்தான் இருப்பாங்க :)

தாலி கட்டின அடுத்த நொடியே மண்டப வாசல்ல ரெண்டு பக்கமும் ஆளுக்கு ஒரு டேபிள் சேர இழுத்துப் போட்டு மாப்பிள்ளை & பொண்ணு வீட்டு ஆளுங்க உக்காந்துடுவாங்க. பொண்ணு வீட்டு மொய், மாப்பிள்ள வீட்டு மொய் ரெண்டும் கலந்துடக் கூடாதுனு கொஞ்சம் உசாரா எதிர் கோஷ்டி பக்கம் போற ஆளுங்கள நோட் பண்ணிகிட்டே இருக்கனும். நாற்பது பக்க நோட்டெல்லாம் போய் இப்போ அர குயர் நோட்டு வந்துடுச்சு. ஒரு ஆள், பெயர் + தொகை எழுதிகிட்டே வர இன்னொரு ஆள் பணத்த வாங்கி ஒரு மஞ்ச பைக்குள்ள போட்டுக்குவாரு.(இந்த மஞ்ச பை எப்போதான் மறையும்?) எங்க வீட்டு விசேசங்கள்ல எப்பவும் எல்லா வேலைகள்லையும் கை வச்சிட்டாலும் இந்த மொய்யெழுதுற வேலைல இப்போ கடசியா ரெண்டு மூனு கல்யாணத்துலதான் உக்காந்தேன். எனக்கு இருக்கிற பயம் என்னன்னா என்னோட கையெழுத்து பதினாலு கோழி சேந்து கிறுக்கின மாதிரியே இருக்கும். அத அந்த மொய்நோட்டுல காலத்தால் அழியாச்சின்னமா வைக்கனுமாங்கறதுதான். ஆனா பழைய மொய் நோட்டுகளப் பாத்த பின்னாடி என் கையெழுத்து எனக்கே அழகா தெரிஞ்சது. அப்புறம் துணிச்சலா உக்காந்தாச்சு. இப்ப போன மாசம் தங்கச்சி (சித்தப்பா பொண்ணு) கல்யாணத்துல மொய் எழுத உக்காந்தப்ப அத ஒரு பதிவா போடுவேன்னு நெனைக்கல ;-)

மொத பேரு எழுதும்போதே கஷ்டமாப் போச்சு. பேர ஏழுமலை னு சொன்னா எனக்கு ஏழுமலைனு எழுத வர மாட்டேங்குது. Ezumalai னு எழுதப் போறேன். மொத பக்கம் ஒரு இருபது பேர் எழுதின பின்னாடிதான் தமிழ் கொஞ்சம் தானா வர ஆரம்பிச்சுது. இனிமே அப்பப்போ தமிழ்ல பேனா எடுத்து எழுதனும்.

ஆனா கிராமத்து ஆளுங்க இன்னமும் தமிழோடதான் இருக்காங்க. பேர் சொல்லும்போது ஒருத்தர் ஆவன்னா திருஞானம் னு சொன்னார். நானும் 'ஆவன்னா திருஞானம்'னே தான் எழுதினேன். அவரு தம்பி ஆவன்னா தலையெழுத்துப்பா ன்னாரு. தலையெழுத்தா? இவருக்கு தலையெழுத்து கூட தெரிஞ்சிருக்குமோனு பாத்தா இனிசியல தான் தலையெழுத்துனு சொல்றாருனு புரிஞ்சது. அப்புறம் அவர் பேர ஆ. திருஞானம்னு ஒழுங்கா எழுதியாச்சு. தலையெழுத்த அதாங்க இனிசியல இன்னமும் தமிழ்ல சொல்ற ஆளுங்களும் இருக்காங்க.

இன்னொருத்தர் பேர சொல்லிட்டு 'முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்'னு அடுப்புக்குள்ள போடுங்கன்னாரு. எந்த அடுப்புக்குள்ள போட்றதுன்னு நான் முழிக்க, அவர் திரும்ப திரும்ப அடுப்புக்குள்ள போடுங்க அடுப்புக்குள்ள போடுங்கன்னே சொல்லிட்டு இருந்தாரு. எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது அவர் அடப்புக்குள்ள ( இந்த மாதிரி அடைப்புக்குறிக்குள்ள:-) ) போட சொல்றாருன்னு. நாந்தான் இன்னும் ப்ராக்கெட்டுக்குள்ள போட்டுட்டு இருக்கேன் :(

இன்னொரு பாட்டி வந்தாங்க. 'யாரு சின்னபுள்ளயோட சின்ன மவனா? நல்லாருக்கியா கண்ணு'னு கேட்டுட்டு சுருக்குப் பையில இருந்து பணத்த எடுத்து கொடுத்துட்டு தாத்தா பேர்ல எழுதீருனு சொல்லிட்டாங்க. நான் காலேஜ் சேந்த பின்னாடி எங்க வீட்டுக்குப் போறதே எப்போவாதுதான். சொந்த கிராமத்துக்குப் போய் பல வருசமாச்சு. சொந்தக்காரங்க பேரு, உறவுமுறையெல்லாம் அம்மாகிட்ட அடிக்கடி கேட்டுதான் ரெப்ரஷ் பண்ணிக்குவேன். இவங்களே எந்த பாட்டி, அம்மா வழி சொந்தமா, அப்பா வழி சொந்தமானு ஒன்னும் புரியல. இதுல தாத்தா பேருக்கு நான் எங்க போறது? தாத்தா பேரு என்னனு அவங்க கிட்டவே கேட்கிறதுக்கும் தயக்கமா இருந்துச்சு. எப்பவும் ஒரு மூலைல அமைதியா இருந்தாலும் அப்பப்போ என் மூளையும் வேலை செய்யும். 'தாத்தாவோட முழுப் பேரு (என்னமோ பாதிப் பேரு எனக்குத் தெரிஞ்சுட்ட மாதிரி) என்னம்மாயி?' னு கேட்டேன். (அந்த பாட்டி எனக்கு அம்மாயி முறையா அப்பாயி முறையானும் தெரியல) நல்லவேளை பாட்டிக்குத் துணையா வந்த ஒரு அக்கா தாத்தாவோட முழுப் பேர சொல்லிக் காப்பாத்திட்டாங்க. அப்புறம் ஊர்ப்பேரயும் நான் கேட்டதும் 'ஒம் பேரன் ஊர் பேரு கூட தெரியாத மாதிரி கேக்குது பாரு'னு சொல்லி சிரிச்சுட்டு அந்த அக்காவும் கைவிரிச்சுட்டுப் போய்ட்டாங்க. எனக்கும் ஒரு வழியும் தெரியல. தாத்தா பேருக்கு முன்னாடி அம்மா சொந்த ஊரையும், பின்னாடி அப்பா சொந்த ஊரையும் போட்டுட்டேன். ரெண்டுல ஒரு ஊராதான் கண்டிப்பா இருக்கும் :-)

அப்புறம் ஒருத்தர் வந்தாரு. 'பொனாசிப்பட்டி நரசிங்கபுரம் வடக்குத் தோட்டம் சொக்காஞா பெரிய மவ வூட்டுப் பேரன், கான்னா ராமலிங்கம், தாய் மாமன் பணமாக எழுதிக்கொண்டது...' னு ஒரு தொடர்கதை எழுதற மாதிரி சொல்லிக்கிட்டே போறாரே ஒழிய நிறுத்தமாட்டேங்கறாரு. அவரு பேர எழுதுறதுக்கே தனியா மொய் வசூலிச்சிருக்கனும்.

அப்புறம் இப்போ புதுசா இன்னொன்னு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பணத்த ஒரு கவருக்குள்ள போட்டு வெளிய ஊரு பேரு எல்லாம் தெளிவா எழுதிக் கொடுத்துட்றாங்க. நமக்கும் அது வசதிதான். ஆனா என்ன... உள்ள பணம் இருக்குதான்னு கொஞ்சம் பாத்துக்கனும் :-) அப்படிதான் ஒருத்தரு வந்தாரு கையில ஒரு ஏழு கவரோட. தம்பி அமவுண்ட் கரெக்டா இருக்கானு பாத்துக்கப்பானு பக்கத்துலையே நின்னுட்டாரு. கவருக்கு வெளிய குறிச்சிருந்த தொகையும் உள்ள இருக்கிற பணமும் சரியா இருக்கானு ஏழு கவர்லையும் சரி பாத்துட்டு சரியா இருக்குண்ணே னு சொன்னேன். போகும்போது கேட்டாரு. இது மாப்பிள்ள வீட்டு மொய் தான னு. அத மொதல்லையே கேட்டிருக்கலாம்ல? 'இது பொண்ணு வீட்டு மொய்ணே மாப்பிள்ள வீட்டு மொய் அந்தப்பக்கம்'னு சொல்லி அனுப்பிட்டேன். அவர் கிட்ட ஆமான்னு சொல்லியிருந்தா சித்தப்புக்கு ஒரு அமவுண்ட் லாபம் தான் ;-)ஆனா விட்டுட்டேன்...

இதனால நான் சொல்ல வர்றது என்னன்னா அடுத்த முறை சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனா மொய் வைக்கிறீங்களோ இல்லையோ மொய் எழுதுங்க, இந்த மாதிரி ஒரு மொக்கப் பதிவு போடறதுக்காகவாவது பயன்படும் :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, November 02, 2007

கணக்கம்பட்டியாரு கத - இறுதி பகுதி

கதய மொதல்ல இருந்து கேட்க


'என்ன சரோசா… எப்பவும் மவளப் பாக்க அந்தாளுதான் கெளம்பிருவாரு… இன்னைக்கு அப்பனப் பாக்க நீ வந்திருக்க'

'நல்லாருக்கீங்களாஞா? இந்த பொட்ட புள்ள பொறந்து பத்து மாசம் முடிஞ்சிருச்சு…அதான் மூனுக்கும் சேத்து ஒன்னா காது குத்திரலாம்னு ஒரு ஓசன…ஆஞா என்ன சொல்லுதுன்னு கேட்டுக்கலாம்னுதான் ஒரெட்டு நானே வந்துட்டேன்'

'ஓ காதுகுத்தா…ஆமாமா அந்தாளும் சொல்லிக்கிட்டே தான் இருந்தாரு… கெடா வுட்ருக்கார்ல…இந்த மாசமே நாளு பாத்துருவாரு வா…சைக்கிள்ல ஏறு வூட்ல எறக்கி வுட்றேன்'

மவ வந்த விசயம் தெரிஞ்சதும் பஞ்சாங்கத்த எடுத்த கணக்கம்பட்டி அந்த மாசத்துல இருந்த நல்ல நாளெல்லாம் குறிச்சுக்கிட்டாரு. மொத்தம் ஆறு நாளுதான் தேறுச்சு. ஆறையும் மனசுல வச்சிக்கிட்டு சோழி போட்டாரு. மொத சோழியிலயே ரெண்டு நாளு அடிபட்டு போயிருச்சு. அடுத்த சோழியில இன்னும் ரெண்டு கழிய மூனாவது சோழியில நாள முடிவு பண்ணிட்டாரு. ஐப்பசி மாசம் பத்தா நாளு காது குத்திரலாம்னு அவரு சொல்லவும் பழனி மூலைல கவுளி சத்தம் கேட்டுச்சு. கிட்டாஞா சொன்னாரு – 'நல்ல சவுனந்தான் சரோசா… நீ போய் வேலைய ஆரம்பி…நாங்க கெடாவ இழுத்துட்டு ரெண்டு நாளு முந்தியே வந்துர்றோம்' னு சொல்லி அனுப்பி வச்சாரு.

மூனு பிள்ளைக போட்டோவும் போட்டு பத்திரிக்கை அடிச்சு ஊர்ல எல்லாருக்கும் கொடுத்தாரு கணக்கம்பட்டியாரு. எல்லாரையும் மொத நாளே பொனாசிப்பட்டில* மவ வூட்டுக்கு வந்துர சொல்லிருந்துது. மவ வூட்டு கொலதெய்வம் திருச்சிக்குப் பக்கத்துல இருக்குது. பொனாசிப்பட்டில இருந்து கோயிலுக்கு போறதுக்கும் வர்றதுக்கும் லாரி பேசிட்டாரு. எப்பிடியும் ஒரு எரநூறு சனம் சேந்துரும்ங்கறது அவுரு கணக்கு. காலைல ஆறு மணிக்கு தான் காது குத்தறதுக்கு நேரம் குறிச்சிருந்தாங்க. விடியகாலைல ஒரு நாலு மணி வாக்குல பயணப்பட்டா செரியா இருக்கும்னு நேரத்த கணக்கு பண்ணிருந்தாங்க. அதனால மொதநா ராத்திரியே சரோசா வூட்ல சாப்பாடு ஏற்பாடு பண்ணிரவும் சனமெல்லாம் சாய்ங்காலமே வந்து சேந்துருச்சுங்க. சாப்ட்டு முடிச்சுட்டு எல்லா சனமும் படுத்துருச்சு.

காலைல எல்லாசனத்தையும் எழுப்பி அரக்க பரக்க கெளம்பி வூட்ட வுட்டு லாரிய எடுக்க நாலர மணியாயிருச்சு. லாரிக்குள்ள பொம்பளையாளுங்க எல்லாம் குந்திகிச்சுங்க. ஆம்பளையாளுங்க எல்லாம் ஓரத்துல நின்னுகிட்டாங்க. கிட்டாஞாவும், கணக்கம்பட்டியாரும் பின்னாடி ரெண்டு மூலைலயும் நாக்காலிய போட்டு குந்தியிருந்தாங்க. பாதி பொம்பளைங்க குந்துன சாயல்லயே தூங்குனாலும் தூக்கம் வராத பெருசுங்க ஊர்ப்பழமைல புடிச்சிருச்சுங்க.. வண்டி அப்பதான் குளித்தல தாண்டுச்சு.

'மாமா… பேத்திக்கு காது குத்து வச்சுட்ட…எப்ப கல்யாண சோறு போடப் போற?' இருட்டுல எந்த கெழவி கேட்டுச்சுனு செரியாத் தெரியல.

'எவடி அவ? புள்ள வயசுக்கு வந்ததும் கேட்டின்னா…அது நாயம்…காது குத்தும்போது புத்தி கெட்டத் தனமா கல்யாணத்தப் பத்தி கேட்கிறவ' கிட்டாஞா சத்தம் போட்டாரு.

'அட பெரியாஞா… அம்மாயி சொன்னது பேத்தியோட கல்யாணத்த இல்ல…தாத்தனோட கல்யாணத்த' னு ஒரு கொமரி சொல்லிட்டு சிரிக்கவும் கூட எல்லாப் பொம்பளைகளும் சேந்துக்கவும், கிட்டாஞாவும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு.

'யோவ் கிட்டு, புடிமானம் பத்திரம்யா சிரிச்சுகிட்டு கீழ வுழுந்துரப் போற' சிரிப்புலயும் கணக்கம்பட்டி கவனமாத்தான் இருந்தாரு.

இப்ப வண்டி சிறுகமணி, பெருகமணியெல்லாம் தாண்டி தெக்க மண்ணுரோட்டுல திரும்பிருச்சு. தெக்க இன்னும் ஏழு மைலு போவனும் ஏவுரிமங்கலம் சேர.

'ஏம் பக்கட்டு வண்டி எதுவும் வாராதுய்யா…ஒம் பக்கட்டுதான் எதுத்தாப்டி வார வண்டிலாம் ஒரசுனாப்ல போய்க்கிட்டிருக்கு நீ சூதானமா குந்திக்க' னு கிட்டாஞா பதிலுக்கு அவர சாக்கிரத பண்ணுனாரு.

'அதான் தெக்க திரும்பியாச்சே இதுல எங்கன எதுத்தாப்ல வண்டி வரப் போவுது'னு சொல்லி கணக்கம்பட்டி வாயமூடுல… அது நடந்து முடிஞ்சிருச்சு.

எதுத்தாப்ல வெறவு செரா ஏத்திகிட்டு ஒரு லாரி வந்திருக்கு. அந்த லாரிக்கு பக்கவாட்டுல ரெண்டடிக்கு வெறவு செராயெல்லாம் நீட்டிகிட்டு இருந்ததுல இவுங்க போன லாரியில ஓரத்துல நின்னவங்க மேலயெல்லாம் வெறவு செரா இடிச்சுட்டு போவ, ஆம்பளையாளுக அஞ்சு பேருக்கு மண்டையில அடி. மூலையில குந்திருந்த கணக்கம்பட்டி மண்டைய பெரிய செறா ஒன்னு பதம்பாத்து, கட்டியிருந்த துண்டோட அவரு மண்டய பேத்துகிட்டு போயிருச்சு. லாரியும் கொட சாஞ்சு கவுந்து போவவும் சனமெல்லாம் ஐயோ அம்மானு அலறுச்சுங்க. வாய்க்காலுக்குள்ள வுழுந்து கெடந்த கிட்டாஞா எந்திரிச்சு ஓடியாந்து கணக்கம்பட்டியோட ஒடம்பதான் பாத்தாரு அப்பவே மண்ட பொளந்து உசுரு போயிருச்சு. ஐயோ னு வாய்வுட்டு கதறிபுட்டாரு. யாருக்கும் என்ன செய்யறதுன்னு ஒன்னும் வெளங்கல. அப்புறம் எளவட்டப் பயலுக போன் பண்ணி போலிசுக்கு சொல்லி ஆசுப்பத்திரி வண்டி வந்து கொள்ளபட்ட சனத்த அள்ளிப்போட்டுகிட்டு திருச்சி பெரியாசுபத்திரிக்கு போச்சு. எத்தன பொழக்கும். எத்தன நெலக்கும்னு அப்ப ஒன்னும் சொல்லுறாப்ல இல்ல.

அன்னைக்குப் பொழுது அவங்களுக்கு அழுதுகிட்டுதான் விடிஞ்சுது ஆசுபத்திரில. கணக்கம்பட்டியாரு மட்டுமில்ல, பங்காளி வூட்டு ஆளுங்க மூனு பேரு, அப்பறம் கெடா உரிக்க வந்த சுரும்பன் னு மொத்தம் அஞ்சாளுங்க பொணமாயிட்டாங்க. தலைல அடிவாங்குன ரெண்டு பேருக்கு சீரியசுன்னு சொல்லிருக்காங்க. போலிசுக்கெல்லாம் காசுவெட்டி பொணத்த ஊருக்கு கொண்டாரதுக்கு அன்னைக்கு மத்தியானமாயிருச்சு. ஆசுபத்திரில அறுத்த பொணம்ங்கறதால சாய்ங்காலத்துக்குள்ள தூக்கிரனும்னு காரியமெல்லாம் சீக்கிரமா நடந்துச்சு. "புள்ளைக்கு மொட்டையடிக்கப் போயி அப்பன காவு கொடுத்துட்டனே"னு நெஞ்சு நெஞ்சா அடிச்சுகிட்டு அழுவுறா சரோசா. அவளத் தேத்தற தெம்புல அங்கன யாருமில்ல. அவ அழுவுறத பாத்து எல்லா சனமும் சேந்துகிட்டு அழுவுதுங்க.

செய்ய வேண்டிய காரியமெல்லாம் கிட்டாஞா முன்ன நின்னு செஞ்சுகிட்டு இருந்தாரு. செதைய* குளிப்பாட்டி, பேரம்பேத்திங்க எண்ண வச்சி நெய்ப் பந்தம் புடிச்சு கடேசில செதையத் தூக்கி தேருல வச்சதும் 'கே' னு சத்தம் போட்டு அழுதா சரோசா. கிட்டாஞாவுக்கு தொண்டக்குழிக்குள்ள பாறாங்கல்லு எறங்குனாப்ல இருந்துது. தேரு நத்தமோட்ட* நெருங்கிருச்சு. கிட்டாஞா பக்கத்துல வந்துகிட்டு இருந்த ஆறுமுவம் பொலம்புனான் 'எல்லாருக்கும் நல்ல நாளா குறிச்ச ஆளு, தாங்குடும்பத்துக்கு இப்புடியொரு நாள குறிச்சுட்டாரே'. அத கேட்டதும் கிட்டாஞா தொண்டையில இருந்த பாறாங்கல்லு ஒடையறாப்ல இருந்துச்சு.
ஒடஞ்ச பேச்சுல, 'அவந் தலமாட்டுக்கு தேங்கா ஒடச்சத பாத்தல்ல…செம்பாகமா ஒடஞ்சுதுய்யா…இன்னைக்குதான் அவன் ஆயுசு முடியற நாளு… அவன் சாமிய்யா…அதான் அவன் நாள அவனேக் குறிச்சிருக்கான்' சொல்லிட்டு என்னைக்குமில்லாம ஓ னு அழ ஆரம்பிச்சுட்டாரு கிட்டாஞா.
அது, அவன் மனுசனாவே இருந்திருக்கலாமோனு அவரு அழுவுறாப்ல இருந்துச்சு ஆறுமுவத்துக்கு.

(கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் கற்பனையும் கலந்து சொன்ன கததான் இது. நேத்துதான் கணக்கம்ப்பட்டியாருக்கு மொத நெனவு நாளு...)

__________
*ஆஞா – அப்பா எனும் பொருளில் போன தலைமுறை வரை எங்கள் ஊரில் புழக்கத்தில் இருக்கும் சொல்.
*துண்ணூறு – திருநீறு, விபூதி
*தவுதாயப் படுதல் – எனக்கும் சரியான சொல் தெரியவில்லை. வருத்தப்படுதல் எனும் பொருள் வரும்.
*ஒசத்தியா – உயர்வா
*மக்யா நாளு – மறுநாள்
*கவுளி – பல்ல
*வெரசா – விரைவா
*கவுச்சி – அசைவம்
*முச்சூடும் – முழுவதும்
*பொனாசிப்பட்டி – புனல்வாசல்பட்டி எனும் ஊரின் பெயர் மருவி எழுத்து வழக்கில் புனவாசிப்பட்டி, பேச்சுவழக்கில் பொனாசிப்பட்டி. ஊரின் பெயருக்கு பொருள் 'நீர்நிறைந்த ஊர்'.
*செதைய – சிதைய
*நத்தமோடு – சுடுகாடு

__________
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, October 31, 2007

கணக்கம்பட்டியாரு கத - 2

நேத்தைக்கு சொன்னது இங்க

"இதோ பாருங்கோ… பொதுவாவே சித்திரை மாசம் அம்பாளுக்கு உகந்த நாள்… கும்பாபிஷேகத்துக்கு உகந்த நட்ஷத்திரம் வெள்ளிக்கிழமையிலயே வர்றதும் ரொம்ப விஷேஷமானது. வளர்பிறையும்கூட" வந்திருந்த ஐயன், கிட்டாஞாகிட்ட சொன்னதையே எல்லாருக்கும் கேக்குறாப்ல திரும்பி ஒருதரம் சத்தமா சொன்னாரு.

"அதில்ல சாமி… எங்க ஊருல சித்திர மாசம் ரெண்டாவது வெள்ளிக்கிழம ஏற்கனவே ஒரு கெட்டது நடந்து போச்சு…அதே நாள சாமி சொல்லவுந்தான்…" – இழுத்தாரு கிட்டாஞா.
அது வரைக்கும் பேசாம இருந்த கணக்கம்பட்டியாரு சித்திரையிலேயே மொத வெள்ளிக்கிழம நல்லாருக்குதான்னு பாக்கலாம்னு யோசனை சொன்னாரு.

சொல்லிக்கிட்டே பைக்குள்ள இருந்து சோழிய எடுத்து கைக்குள்ள வச்சி கண்ண மூடி நடுநெத்தில வச்சி என்னமோ முணுமுணுத்துட்டு, சோழிய கீழ விசுறுனாரு.
பனெண்டு சோழில பதினொன்னு மூடிருந்துது. ஒன்னு மட்டும் தெறந்திருந்தது.

'மொத மாசம் சித்திர தான் தாயே நாங்களும் பாக்குறோம்'னு சொல்லிகிட்டே அஞ்ச கழிச்சுட்டு ஏழு சோழிய மட்டும் கையில எடுத்தாரு.

'மாசத்த சொன்னவ கெழமையும் சொல்லும்மா' னு மறுபடியும் ஏழ விசுறுனாரு. அஞ்சு தெறந்திருந்துது. ரெண்டு மூடிருந்துது.

'அஞ்சாங்கெழமதான் ஆத்தாளும் சொல்றா' னு எல்லாரையும் பாத்து சொல்லிட்டு கடசியா நாலு சோழிய மட்டும் கையில எடுத்துகிட்டு
'எந்த வாரம்னும் ஆத்தாளையே கேட்ருவோம்'னு நாலையும் விசுறுனாரு. எல்லாரும் சோழி போன எடத்தையே எக்கிகிட்டு பாத்தாங்க.

அங்க ஒரு சோழி தெறந்திருந்துது. மூனு மூடிருந்துது. அவரு சொல்லாமயே எல்லாருக்கும் புரிஞ்சிருச்சு. எல்லாரும் ஐயனப் பாத்தாங்க. அவரு பஞ்சாங்கத்த தொறந்தவரு மொத வெள்ளிக்கிழம கரிநாளு அது ஒகந்த நாளு இல்லனு கைய விரிச்சிட்டாரு. பாத்தவங்களுக்கெல்லாம் மொகம் வாடிருச்சு. என்னப் பண்றதுன்னு யாருக்கும் புரியல.

கணக்கம்பட்டியாரே சொன்னாரு 'கரிநாளெல்லாம் சூரியங்கணக்குதான், நாம உதயத்துக்கு முன்னாடியே கும்பாசியேகத்த முடிச்சிரலாம்'னு அவரு சொல்லி வாய மூட்றதுக்குள்ள பழனி மூலையில கவுளி* சத்தம் கேட்டுச்சு. அந்தப் பக்கம் திரும்பி பாத்து கன்னத்துல போட்டுக்கிட்டாரு கிட்டாஞா. நல்ல சகுனம்னு எல்லாருக்கும் தெரியும் ஆனா ஐயன் அந்த தேதிக்கு ஒத்துக்கலயே. ரெண்டாவது வெள்ளின்னா தான் வர்றதாகவும் இல்லன்னா அவங்களயே கும்பாசியேகம் நடத்திக்க சொல்லிட்டுப் போயிட்டாரு. அவரு போனதுக்கப்புறம் கோயில்ல ரெண்டு பக்கமும் பேசறதுக்கு ஆளுங்க இருந்தாங்க.

'ஐயன் சொல்றபடியே அவனக் கூப்ட்டே பண்ணிரலாம்…சாமி சமாசாரமெல்லாம் அவனுக்குத் தெரியாததா நமக்குத் தெரிஞ்சிரப் போவுது?'

'ஏன் ஐயனக் கூப்பிட்டுதான் பண்ணனும்னு எதாவது கணக்கு இருக்குதா? தெக்கியூர் கோயில்ல நம்மாளுங்கதான பண்ணாங்க?'

'நாளு நல்லா இல்லைன்னா நாம என்னைய்யா பண்ண முடியும்? ரெண்டாவது வெள்ளிக்கிழமன்னு முடிவு பண்ணுவோம் அதுக்கு மேல ஆத்தா விட்ட வழி'

'அதே ஆத்தா விட்ட வழியில மொத வெள்ளிக்கிழம நடத்த வேண்டியதுதானா? கும்பாயிசேகம் நம்மூர்க்கோயிலுக்கு! இதுல நம்மூர்க் காரனவிட அசலூர்க்காரன் சொல்றத கேக்கனுமாங்கறேன்'

'யாருப்பா அது? கணக்கம்பட்டியான் நம்மூரா? அவனும் அசலூர்ல இருந்து பொழைக்க வந்தவந்தானப்பா' – பின்னாடி இருந்து எவனோ ஒருத்தன் இப்படி சொன்னதும் அதுக்கப்புறம் யாரும் பேசல.

அதுவரைக்கும் கணக்கம்பட்டியார அசலூர்க்காரனா யாரும் பாத்ததில்ல. அந்த சொல்லு வந்தபின்னாடி யாரும் எதுவும் பேசாம இருக்கவும் எல்லாருமே அப்பிடிதான் இவ்வளவுநாளா நெனைச்சிருக்காங்கன்னு கிட்டாஞாவுக்கு கோவம் வந்துருச்சு.

'எவண்டா அவன் கணக்கம்பட்டியான பொழைக்க வந்தவன்னு சொன்னது? நாளைக்கே ஒங்களுக்கு ஒரு நோக்காடுன்னா அவன் வீட்டுக்குதாண்டா வரணும் மசுராண்டிகளா. நீங்க என்னைக்கு வேணா கும்பாயிசேகம் நடத்திக்கோங்க..எங்கள ஆள விடுங்க' னு கோவமா கத்திட்டு கணக்கம்பட்டியானையும் இழுத்துகிட்டு போயிட்டாரு.

அதுக்கப்புறம் ஐயன் சொன்ன மாதிரியே சித்திர மாசம் ரெண்டாவது வெள்ளியே கும்பாயிசேகம் நடத்தறதுனு முடிவு பண்ணி வேலையெல்லாம் ரொம்ப வெரசா* நடந்துது. நாள் குறிச்சதுல இருந்து ஊரே கவுச்சி* தொடாம சுத்தபத்தமா இருந்துதுன்னுதான் சொல்லனும். வெசாலக்கெழம ராத்திரியே ஐயனுங்க வந்து அவங்க வேலைய செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. கும்பாயிசேகமும் நல்லபடியா முடிஞ்சுது. ஆனா செத்த நேரத்துலையே கோயிலுக்குள்ள ரைட்டுக்கு இழுத்திருந்த ஒயரு அறுந்து வுழுந்து ஈரத்துல நின்னவங்க பதினேழு பேரு கட்டையாப் போயிட்டாங்க. ராமக்கல்லாசுபத்திரிக்கு கொண்டுபோயும் இன்னும் மூனு உசுரு முடிஞ்சிருச்சு. மொத்தமா இருவது பேர காவு வாங்கிட்டா மாரியாயி. அதுக்கப்புறம் ஒரு வருசம் கழிச்சு கணக்கம்பட்டியாரு குறிச்சு கொடுத்த தேதியிலதான் மறுபடியும் கும்பாயிசேகம் நல்ல விதமா நடந்து முடிஞ்சது. அப்போதான் ஊராளுங்களுக்கெல்லாம் கணக்கம்பட்டியான் மகிம புரிஞ்சுதுங்கறது கிட்டாஞாவோட கணக்கு.

அந்த வருசம் இன்னொன்னும் நடந்துச்சு. கிட்டாஞா மவளுக்கு பொட்டபுள்ள பொறந்து மூனு மாசம் இருக்கும்போது ஓயாம ஒரு ராத்திரி முச்சூடும்* அழுதுகிட்டே இருந்துது. அவரு பொண்டாட்டியும், மவளும் வசம்ப தேச்சுப் பாக்குறாங்க, புள்ள மருந்த சங்குல ஊத்தி ஊத்தி பாக்குறாங்க. அது அழுவறதுக்கேப் பொறந்த மாதிரி அழுதுகிட்டே கெடந்துது. மூச்சு வாங்கி மூச்சு வாங்கி அழுததுல புள்ள பொழைக்குமாங்கறதே சந்தேகமாப்போச்சு. அப்புறம் கணக்கம்பட்டியாரு வந்துதான் துண்ணூறு மந்திரிச்சு அழுகறது நிப்பாட்டுனாரு. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பொக்க வாய சிரிச்சுக்கிட்டு பால குடிச்சுட்டு ஒன்னுந்தெரியாத புள்ள கணக்கா அது தூங்கிருச்சு. அப்போ கிட்டாஞா பொண்டாட்டியும், மவளும் கணக்கம்பட்டி கால்லையே வுழுந்துட்டாங்க.அன்னைய பொழுதுக்கு அவருதான் அந்த குடும்பத்துக்கு தெய்வம்.

அப்பறம் ஒரு தடவ கிட்டாஞாவுக்கும் மேலுக்கு சொகப்படாமப் போயிருந்துது. கணக்கம்பட்டியாரு, பேத்திக்கு கொடுத்த துண்ணூறுல மீந்து போனத மடிச்சு வச்சிருந்தத எடுத்துப் பூசிப் பார்த்தாரு கிட்டாஞா. ஆனா அது ஒன்னும் கேக்கலயாம். அப்பறம் அவருகிட்டையே போயி அவரு கையால மந்திரிச்சதும் தான் சரியாப் போச்சாம். அப்பறந்தான் இந்தாளுக்கு ஒரு அருளு இருக்குனு கிட்டாஞா அசலூரு போனாலும் கணக்கம்பட்டியாரப் பத்தி பெருசா சொல்ல ஆரம்பிச்சதெல்லாம்.

அந்தக்கதையெல்லாம் டீக்கட ஆறுமுவம் கேட்டூட்டு பெருமூச்சு விட்டுகிட்டான். 'சாமி செல பேருக்கு நாக்குலையே குடியிருக்கும் போல'னு சொல்லிட்டு க்ளாசக் கழுவப் போயிட்டான்.

செம்பட்டையன் மவளுக்கு மாப்ள கெழக்க இருந்துதான் வருவான்னு சோழி போட்டு சொன்னது, காணாமப் போன கங்காணி மவன கண்டுபுடிச்சது, தண்ணியில்லாத மேட்டாங்காட்ல கெணறு தோண்ட எடம்பாத்து சொல்லி, அங்கன மூனு ஊத்து கண்டது னு கணக்கம்பட்டியாரப் பத்தி கிட்டாஞா பேச ஆரம்பிச்சா அன்னைய பொழுதுக்கும் நிப்பாட்ட மாட்டாரு. கணக்கம்பட்டி தன்னோட கூட்டாளிங்கறதுலையும் அவருக்கு ஒரு பெருமை.

பழைய கதையெல்லாம் பேசிட்டு டீக்கடைய வுட்டு எந்திரிச்சு சைக்கிள எடுக்கவும், அரச மர முக்குல ஒம்பதர மணி வண்டி வாரதுக்கும் சரியா இருந்துச்சு. யாராவது ஊர்க்காரங்க வர்றாங்களான்னு பாக்க சைக்கிளப் புடிச்சிக்கிட்டே நின்னுட்டாரு கிட்டாஞா. வந்த வண்டியில இருந்து எறங்குனது கணக்கம்பட்டியாரு மவதான். கையில பத்து மாச புள்ள.

(நாளைக்கு கதய முடிச்சிட்றேன்...)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, October 30, 2007

கணக்கம்பட்டியாரு கத...

கொஞ்சங்கூட விடியாத நல்ல இருட்டு. இன்னும் கோழி கூட கூப்புட்ல. வெங்காயத் தோட்டத்துல தண்ணியடைக்கறதுக்காவ தெக்கியூர் ரோட்ல சைக்கிள்ல பறந்துகிட்டு இருந்தாரு கிட்டாஞா.சாமியாடித் தோட்டத்துக்கிட்ட மேக்கத் திரும்பும்போதுதான் - அந்நேரத்துல தெக்க இருந்து யாரோ வெக்கு வெக்குனு ஓடியார மாதிரி இருந்துது. வர்றவங்க என்னமோ கத்திகிட்டே வாராப்ல இருந்துது. காதோட சேத்து துண்ட உருமா கட்டிருந்ததால கிட்டாஞாவுக்கு ஒரு சத்தமும் கேக்கல. ஏதாவது கெட்டது நடந்து போச்சோனு வெசனப்பட்டவரு துண்ட அவுத்துக்கிட்டே மேக்கத் திரும்பாம தெக்கையே விட்டாரு சைக்கிள.

'அது யாரு கிட்டாஞாவா? ஆஞா*… கணக்கம்பட்டியாரு ஊர்ல இருக்காரா?' ஓட்டத்துலையே சத்தம் போட்டுகிட்டு வந்தது வேற யாருமில்ல. நம்ம வடவத்தூர் பால்காரன் பொண்டாட்டிதான். அவளும் ஓடியார இவரும் சைக்கிள மிதிக்க ரெண்டு பேரும் கிட்டத்துல வந்துட்டாங்க.

'இருக்காப்ல… இருக்காப்ல… என்ன சமாசாரம்… நீ இந்நேரத்துல ஒத்தைல வர்றவ? வூட்ல ஆம்பளையாளு இல்லியா'

'அதையேன் ஆஞா கேக்குற… அந்தாளுக்கு ராத்திரில இருந்து வவுத்துநோவு… அனத்திகிட்டே இருக்குது… சுக்குத்தண்ணி கொடுத்தும் ஒன்னும் கேக்கல.. இன்னும் பால்கறக்கவும் கெளம்பாம வவுத்தப் புடிச்சுக்கிட்டு படுத்துருக்கு… அதான் கணக்கம்பட்டியாருகிட்ட துண்ணூறு* வாங்கியார சொன்னுச்சு… குறுக்கால ஓடியாரேன்… என்ன செத்த அவர் வூட்ல எறக்கி வுட்றீயா' - மூச்சுவுடாம பொலம்புறா அவ.

'ஏறு ஏறு இதுக்குதான் இந்தக் கோலத்துல ஓடி வந்தவளா.. நான் என்னமோ ஏதோனு தவுதாயப்* பட்டுட்டேன்' அவள ஏத்திகிட்டு கணக்கம்ப்பட்டியாரு வூட்டுக்கு சைக்கிள மிதிச்சாரு கிட்டாஞா.

ருமப்பட்டிக்கு தெக்க இருந்து வலையப்பட்டிக்கு வடக்க வரைக்கும் கணக்கம்பட்டியாருன்னா தெரியாதவங்க இருக்க மாட்டாங்க. அவரு பேரு அங்கமுத்துப்புள்ள னு ஊர்ல கொஞ்சம் பெருசுங்களுக்குதான் தெரியும். கணக்கம்பட்டியில இருந்து இங்க பொழைக்க வந்ததால கணக்கம்பட்டியாருனு பேராகிப்போச்சு. அந்தக்காலத்துல அவரு, கிட்டாஞா, கங்காணியெல்லாம் ஒரு சோட்டு. கணக்கம்பட்டியாருக்கு கொலதெய்வமெல்லாம் அவங்கூரு அங்காயிதான்னாலும் முருகனதான் மொதல்ல கும்புடுவாரு. காலங்காத்தால குளிச்சி முடிச்சு வந்தாருன்னா குறி கேக்க, நல்ல நாள் குறிச்சுட்டு போவ, துண்ணூறு மந்திரிச்சு வாங்கிட்டுப் போறதுக்குன்னு ஒரு கூட்டம் நிக்கும். அவருக்கும் சோசியம் கீசியமெல்லாம் எதுவும் தெரியாது. பஞ்சாங்கத்துல நல்ல நாளு பாத்து சொல்லுவாரு. சோழி போட்டு முடிவு சொல்லுவாரு. முருகனக் கும்புட்டு கொஞ்சம் துண்ணூறு அள்ளிக் கொடுப்பாரு. அவ்வளவுதான். ஆனா அவரு சொல்ற நாளு கெழமையெல்லாம் நல்லதாதான் நடந்திருக்கு. சோழி போட்டு முடிவு சொன்னாருன்னா பத்துக்கு எட்டு பெசகாம நடந்திரும். அவரு மந்திரிச்சத் துண்ணூற பூசிக்கிட்டு கொஞ்சம் வாயில போட்டுகிட்டா எல்லா நோவும் போன எடந்தெரியாம ஓடீரும். அப்பிடி ஒரு ராசி.

எப்பவாது மவளப் பாக்கனும்னு இருந்தா பொனாசிப்பட்டிக்கு சொல்லாம கொள்ளாம ஓடிருவாரு. நல்ல வேள அன்னைக்கு கணக்கம்பட்டியாரு ஊர்லதான் இருந்தாரு.
வாசல்லயே கட்டுல்ல குறுக்கிகிட்டுப் படுத்திருந்தவரு சைக்கிளு சத்தம் கேட்டு நாய் கொலைக்கவும் எந்திரிச்சுக்கிட்டாரு. துண்ணூறுக்கு இந்தமாதிரி நேரங்கெட்ட நேரத்துல அடிக்கொருதரம் ஆளுங்க வர்றதுதான். பால்காரன் பொண்டாட்டிய பாத்ததும் 'யாரு பால்காரன் பொண்டாட்டியா? ஓம்புருசனுக்குன்னுதான் வவுத்துநோவு வரம் வாங்கிட்டு வந்திருக்குமே' ன்னு சிரிச்சுகிட்டே கேணி மோட்டுக்குப் போயிட்டாரு. எந்நேரமா இருந்தாலும் அவரு குளிச்சிட்டு வந்துதான் துண்ணூறு மந்திரிக்கிறது. இந்நேரத்துல தொட்டித்தண்ணி சிலீர்னு இருக்குந்தான். ஆனா அவரு குளிக்காம துண்ணூறு அள்ளித் தர்றதில்ல. வேட்டிய அவுத்துட்டு துண்ட கட்டிகிட்டு தொட்டித்தண்ணிய மூனு வாளி மொண்டு தலையோட ஊத்திக்கிட்டு நிமுசத்துல வந்து சேந்துட்டாரு. மொதல்ல துண்ட அவுத்து இடுக்குல இறுக்கி துண்ணூற அள்ளி அவரு பூசிக்கிட்டதும், அவரப் பாக்க கோயில் பூசாரி கணக்காதான் இருந்துச்சு. சாயம்போன முருகன் படத்துக்கு முன்னாடி கையெடுத்து கும்பிட்டவரு 'இந்தப் பூசத்துக்கு பழனி போவும்போது புது படம் வாங்கியாரனும்'னு நெனச்சுக்கிட்டே ஒரு முருகன் பாட்ட மனசுக்குள்ள பாடுனாரு. பயபத்தியோட கொஞ்சம் துண்ணூற அள்ளி அவகிட்ட நீட்டுனதும், அத வாங்கி முந்தியில முடிஞ்சுகிட்டு பால்காரன் பொண்டாட்டியும் கெளம்பிட்டா. கிட்டாஞாவும் வெங்காயத்தோட்டத்துக்கு கிளம்பறதையும் பாத்துகிட்டே மனசுக்குள்ள, 'முருகா பால்காரனுக்கு நோவு கொணமாவனும்'னு வேண்டிகிட்டு கணக்கம்பட்டியாரும் டீத்தண்ணி வைக்க போயிட்டாரு. இன்னும் கோழி கூப்புட்லன்னாலும் அன்னைக்குப் பொழுது கணக்கம்ப்பட்டியாருக்கு விடிஞ்சிடுச்சுனுதான் சொல்லனும். முருகனக் கும்பிட்டு துண்ணூறு பூசிட்டா அவருக்கு பொழுது விடிஞ்சிருச்சுன்னு அர்த்தம்.

அன்னைக்குக் காத்தால ஆறுமுவம் டீக்கடையில பெருசுங்க எல்லாம் நாயம் பேசிக்கிட்டு இருக்கும்போது ரெண்டாவது வட்டம் பால் ஊத்த வந்தான் வடவத்தூர்க்காரன்.

'ஏய் என்னப்பா மொத சாமந்தான் ஒனக்கு வவுத்துநோவுன்னு ஒம்பொண்டாட்டி கணக்கம்பட்டியாருகிட்ட துண்ணூறு வாங்கிட்டுப் போனா… நீ என்னடான்னா 'எனக்கென்னா நோவு எனக்கேது சாவு'ங்கற கணக்கா பாலத்தூக்கிகிட்டு சைக்கிள்ல சுத்துறவன்' - கேட்டது கிட்டாஞாதான்.

'கிட்டாஞா…. கணக்கம்பட்டியாரு துண்ணூறு உள்ள போனதுக்கப்புறமும் வவுத்து நோவு வவுத்துல தங்குமா? நோவுக்கே நோவு கண்டிருக்குமில்ல?' சிரிச்சுக்கிட்டே போயிட்டான் பால்காரன்.

கணக்கம்பட்டியார இப்படி யாராவது ஒசத்தியா* சொல்லிட்டா ஒடனே கிட்டாஞாவுக்கு உச்சி குளுந்துரும். பால்காரன் போனதும் கிட்டாஞா ஆறுமுவத்துகிட்ட சொன்னாரு - 'கணக்கம்பட்டியான்கிட்ட துண்ணூறு வாங்கிப் பூசுனா பழனி மல முருகங்கையால பூசிக்கிட்ட மாதிரிடா'

கணக்கம்பட்டியார் மேல எல்லாருக்கும் எப்பிடி இப்படி ஒரு நம்பிக்கனு ஆறுமுவத்துக்கு ஆச்சர்யமா இருக்கும். அவன் இந்தூருக்கு வந்து கட போட்டு ஏழு வருசந்தான் ஆச்சு.
'ஏன் ஆஞா கணக்கம்பட்டியாருக்கு நெசமாலுமே அருளிருக்கா?' அவன் அப்படி கேட்டதும் கிட்டாஞா பழைய கதைய எடுத்து விட்டாரு. அது பத்து வருசத்துக்கு முந்தி நடந்தது.

த்து வருசத்துக்கு முந்தி ஒரு நாளு மாரியாயிக் கோயிலுக்கு கும்பாயிசேகம் பண்ணீட்றதுன்னு கோயில்ல வச்சு ஊர் பெருசுங்க முடிவு செஞ்சாங்க.ஆளாளுக்கு இன்னின்ன வேலைனு போனமாசம் செத்துப்போன கந்தசாமிதான் சொல்லிக்கிட்டு வந்தாரு. கிட்டாஞாவுக்கு ராமக்கல் ஐயனப் பாத்து பேசியாரப் பொறுப்பக் கொடுத்திருந்தாங்க. கணக்கம்பட்டியார வரவு செலவ பாத்துக்க சொல்லிருந்துது.மக்யா நாளே*, ராமக்கல்லுக்கு ஐயனப் பாக்கப் போன கிட்டாஞா சித்திர மாசம் பத்தாந்தேதினு நாள் குறிச்சுகிட்டு வந்துட்டாரு. வளர்பெறையில வெள்ளிக்கிழமையா அமஞ்சது நல்ல அம்சமுன்னு ஊராளுங்களுக்கெல்லாம் சந்தோசம்.ஆனா கணக்கம்பட்டியாருக்கு அந்த நாள சொன்னதும் சுருக்குனு ஆகிப்போச்சு. ஏன்னா அதுக்கும் ஆறு வருசத்துக்கு முந்தி சித்திர மாசம் இதே ரெண்டாவது வெள்ளிக்கிழம தான் பிடாரியம்மங் கோயில் திருநாள்ல ஒரு கெட்டது நடந்துது. பங்காளிங்களுக்குள்ள இருந்த வாப்பேச்சு சண்ட முத்தி வெட்டுக் குத்துனு ஏழு உசுர இந்த ஊரு காவு கொடுத்துது அன்னைக்குதான். அதனாலயே கணக்கம்பட்டியாரு அந்த நாள கேட்டதும் கிட்டாஞாகிட்ட மெல்ல விசயத்த சொல்லிட்டாரு. அன்னைக்கு சாய்ங்காலமே கிட்டாஞா ராமக்கல்லுக்குப் போய் அந்த ஐயனையே ஊருக்கு இழுத்துட்டு வந்துட்டாரு. கோயில் திண்ணையிலயே இந்த சமாசாரத்தப் பேசி முடிவு பண்ணீர்றதுன்னு கூட்டம் போட்டிருந்தாங்க.

(மீதிக்கதய நாளைக்கு சொல்றேன்...)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, October 29, 2007

பதிவு எண் - 143 :)

நூறாவது பதிவு, இருநூறாவது பதிவு எல்லாம் சிறப்புப் பதிவா? நமக்கு 143 தான் சிறப்பு :) அதனால் 143 கவிதைகள் பதிக்கலாமென ஆசைப்பட்டு முயன்றதில் தேறியவை இவை மட்டுமே!
முதலில் 1 :அப்புறம் ஒரு 4 :

அப்புறம் ஒரு 3 :அப்படியே இலவச இணைப்பாக இன்னொன்னும் -> ஏற்கனவே ஒரு தெலுங்கு மெட்டுக்கு தமிழ் வரி எழுதின மாதிரி இப்போ ஒரு மலையாளப் பாட்டுக்கு நான் எழுதிய தமிழ் வரிகள்.அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, October 03, 2007

எதனை பரிசென தருவது?

புதிதாய் வாங்கிய கேமராவில்
முதல் படம் உன்னைத்தான் எடுக்கவேண்டுமென
நீ கேட்டுக்கொண்ட போதும்,
நான் படமெடுத்தது
உன் நிழலை.

என் பிறந்தநாளுக்கு,
கடையில் நீ வாங்கித்தரும் பரிசுகளை மறுத்து
உன்னிடம் நான் கேட்டுப் பெற்றது
உன் கைக்குட்டையை.

இயற்கை பின்புலங்களில் எடுத்த
உன் வண்ணப்படங்களை நீ நீட்டியபோதும்
எல்லாம் ஒதுக்கி, நான் விரும்பி வாங்கியது
கிராமத்தில் பாட்டிகளோடு நீ நிற்கும்
அந்த பழைய படத்தை.

‘நான்’ எனும் தலைப்போடு
என்னறைச் சுவரில்
தொங்கும் உன் நிழல் (படம்)…

என் கவிதைகளில்
உனக்கு மிகப் பிடித்ததொன்றை
பூத்தையலில் இழைத்து வைத்த
அந்த வெள்ளை கைக்குட்டை…

உன்னை வரைவதற்காகவே ஓவியம் பழகி
பென்சிலில் வரைந்த, பாட்டிகள் இல்லாத
உன் கருப்புவெள்ளைச் சித்திரம்…

இவற்றில் எதனை பரிசென தருவது?
நாளைய உன் திருமணத்திற்கு.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, September 10, 2007

காதல் கூடம் - 5

காதலும் முத்தம் தான்.
காதலிப்பது, கொடுக்கும் முத்தம்
காதலிக்கப்படுவது, வாங்கும் முத்தம்.
காதலிப்பவராலேயே காதலிக்கப்படுவது,
கொடுத்து வாங்கும் இதழ்முத்தம்!

முத்தத்தில் முதல்நிலை அடையவும்,
காதலில் மூன்றாம் நிலை கடந்தும்
நாம் நெடுந்தொலைவில் நிற்கிறோம்.

சற்றுமுன் பிறந்த சிசுவென இருந்த காதல்
குழந்தையென வளர்ந்து
தன் குறும்புகளைத் துவங்குகிறது.

மழலையின் ஆசைகள் நிறைவேற்றும்
தாய்மனமென மாறுகின்றன
நம் இதயங்கள்.

காதல் தனிமையாகிறதாம்.
நாம் சந்தித்துக் கொள்கிறோம்.
காதலும் சேர்ந்து கொள்கிறது.

காதலுக்கு வெயிலடிக்கிறதாம்.
மரநிழலில் அமர்ந்து பேசிக்கொள்கிறோம்.
காதல் குளிர்கிறது.

காதலுக்கு தாகமாம்.
ஒன்றாய் ஐஸ்க்ரீம்கடை செல்கிறோம்.
காதல் தணிகிறது.

காதலுக்கு சோம்பலாம்.
ஒரு மிதிவண்டியில் ஊர்வலம் வருகிறோம்.
காதல் சுறுசுறுப்பாகிறது.

காதலுக்கு குழப்பம்.
விருப்பு, வெறுப்பு பகிர்கிறோம்.
காதல் தெளிகிறது.

காதலுக்கு பயம்.
எதிர்காலம் திட்டமிடுகிறோம்.
காதல் துணிகிறது.

காதல் குறைகிறதாய்த் தோன்றுகிறது.
மீண்டும் முதல் நாளிலிருந்து நேசிக்கத் துவங்குகிறோம்.
காதல் பூரணமாகிறது.

காதல் பூரணமாகையில்
மூளை தூங்கிவிடுகிறது.
மனம் விழித்துக் கொள்கிறது.
விழித்த மனம் கவிதையெனப் பிதற்றுகிறது.

‘நிற்கிறாய்’,
‘பார்க்கிறாய்’,
‘புன்னகைக்கிறாய்’,
‘பேசுகிறாய்’,
என்பதையெல்லாம்…
“அழகுகிறாய்” என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிடுகிறேன்.
கேட்டதும் கலகலவென அழகுகிறாய்.

உன் வீட்டுக்கும்
என் வீட்டுக்கும்
கனவுகளில் அகவழிச்சாலை அமைக்கிறேன்.
வந்து வந்து போகிறாய்.
போய் போய் வருகிறாய்.

கணக்கு,இயற்பியல், வேதியியல் என வகுப்பில்
எந்த இயல் நடந்தாலும்
எனக்குள் உன் உயிரியலே நடக்கிறதென்கிறேன்.
நமட்டுச் சிரிப்பில் உதடு சுழித்து இதழியல் நடத்துகிறாய்.

உன்னிடம் ஒப்பிக்க
காதல் சிரத்தையோடு கவிதை புத்தகம் வாசிக்கிறேன்.
நீயோ இயல்பாக கவிதைகளைப் பேசி விட்டுப் போகிறாய்.

என் வீட்டுக் கண்ணாடியில் எனக்கு நீ தெரிகிறாய்.
உன் வீட்டுக் கண்ணாடியில் உனக்கு நான் தெரிகிறேன்.
இதயங்களைப் போல கண்ணாடிகளையும் இடம் மாற்றியிருக்குமோ, காதல்? – உளறுகிறேன் நான்.
நம் வீட்டுக்கண்ணாடியில் நாம் தெரிவோமென கண்ணடிக்கிறாய்.

நட்சத்திரங்கள் துடைத்து
என் இரவுகளை சுத்தமாக வைத்திருக்கிறேன்.
நிலவென நீ வருகிறாய்.
எங்கிருந்தோ வந்து மொய்க்கத் துவங்குகின்றன நட்சத்திரங்கள்.

கல்விக்கூடமே நம் காதல்கூடமானதென நகைக்கிறேன்.
கல்வி போல காதலும் கைகூடுமென நம்பிக்கை நல்குகிறாய்.

இப்படி
கணம் தோறும்
கனவுகள் சுமக்கும்
இரண்டு உயிர்களும்
உருகி உருகி
ஒற்றைக் காதலுக்கு
அடங்குகின்றன.

அந்த மரநிழலில்
நம் காதல் குளிர்ந்து கொண்டிருந்த
ஒரு மதியவேளையில்,
நம்மிருவரையும் தலைமையாசிரியர் அழைத்து வரச்சொன்னதாக
உன் தோழி சொல்ல,
நம்மை நாம் பார்த்துக் கொண்டோம்.
நான்கு கண்களிலும் ஒரே பயம்.

(தொடரும்…)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

(வாரநாட்களில் பணிச்சுமை அழுத்துகிறது + வரிசையாக வாரயிறுதிகளில் பயணங்களும் இருக்கின்றன. அதனால் ஒரு சிறு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்கிறேன் – கண்டிப்பாக!)

Tuesday, September 04, 2007

ஐதராபாத் - கோவை - கரூர் - பழனி

கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் வெள்ளிக்கிழமை கரூரில் நடந்தது எங்கள் புதுமனைப் புகுவிழா.
வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு ஹைதரபாத்தில் இருந்து கோவைக்குப் புறப்பட்டேன். அது கோவை வழியாக கொச்சி செல்லும் ஏர் டெக்கான் விமானம்.
ஓணம் நெருங்கியதால் விமானத்தில் சேட்டன், சேச்சிகளின் கூட்டம்தான் அதிகமாக இருந்தது. முத்து நகரத்தை வானில் இருந்து கொஞ்சம் ரசித்துக்கொண்டிருக்கும்போது,
பணிப்பெண் டீ வேண்டுமா என்றார். தலையாட்டினேன். வெந்நீரும் , டீத்தூளும் கொடுத்துவிட்டு நகர்ந்து விட்டார் நானே கலந்து குடித்த டீ க்கு 20 ரூபாய் அதிகம்தான். கரூர் டீக்கடையில் மாஸ்டரே கலந்து கொடுக்கும் டீ, இரண்டு ரூபாய் ஐம்பது காசுதான் :)

கோவையில் இறங்கி அக்கா, அண்ணன் மகள்களுக்கு ஆடைகள் வாங்க ஸ்ரீதேவிக்கு சென்றபோது அங்கும் சேச்சிகளின் கூட்டம். ஸ்ரீதேவியில் ஓணம் வரை ஆடித்தள்ளுபடியை நீட்டித்திருந்தார்கள்.பிறகு கோவை – கரூர் பேருந்து பயணம். இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரியில் படித்த காலங்களில் மாதமொருமுறையோ இரண்டுமுறையோ பயணம் செய்த பழக்கமான பாதை. சன்னலோரத்தில் மழையை ரசித்தபடியே விகடனில் மூழ்கியிருந்தேன். காங்கேயம் வந்ததும் “வண்டி 5 நிமிசம் தாங்க நிக்கும் டீ குடிக்கிறவங்க சீக்கிரமா குடிச்சிட்டு வாங்க” கண்டக்டர் சத்தம் கொடுத்து விட்டு அவரும் டீ குடிக்கப் போய் விட்டார். கல்லூரி காலங்களில் எப்போதும் இங்கே இறங்கி ஒரு கிங்ஸும் ஒரு டீயும் வாங்கிக் கொண்டு டீ ஒரு சிப் உறிஞ்சிக்கொண்டு கிங்ஸ் ஒரு பஃப் இழுத்துக்கொள்வேன். அது ஒரு கனாக் காலம் :) அன்று இரண்டு டீ டோக்கன் மட்டும் வாங்கி இரண்டு டீயைமட்டும் குடித்து விட்டு வந்து விட்டேன். வீட்டுக்குப் போய்ச் சேர இரவாகிவிட்டது.

வெள்ளிக்கிழமை புதுமனைப் புகும்விழா எல்லாம் முடிந்து கொஞ்சம் ஓய்வு. அடுத்த நாள் சனிக்கிழமை அக்கா மகளுக்கு மொட்டையடிக்க பழனிக்குப் பயணம் அதையும் முடித்துக்கொண்டு அன்று மாலை வந்து பழைய வீட்டில் இருந்த பொருட்களைக் அடுக்கிக் கட்டிக் கொண்டிருந்தோம். நண்பர்களின் அழைப்புகள் துவங்கின.
“டேய் நீ எஸ்கேப்பாகிட்டியா?”
“என்னடா கால அட்டண்ட் பண்ற? அச்சச்சோ அப்ப உயிரோடதான் இருக்கியா”
“உனக்கு ஒன்னும் ஆகலியா? மச்சான் தப்புச்சிட்டியா?”
நக்கலோடு நண்பர்கள் நலம் விசாரித்தபோதுதான் தெரியும் ஹைதராபாத் குண்டுவெடிப்பைப் பற்றி. நான் இருப்பது ஹைதராபாத்துக்கு பக்கத்து மாவட்டத்தில் ஒரு கிராமம் அங்கெல்லாம் யாரும் குண்டுவைக்கமாட்டார்கள் என்று சொல்லி அவர்களைக் கடுப்பேத்திவிட்டு ஐதராபாத் நண்பனை அழைத்தேன். அவனோ, “நமக்கெல்லாம் ஒன்னுமில்லடா ஒருவேளை நீயும் இங்க இருந்திருந்தா குண்டு வெடிச்ச ஏரியாவுக்குதான் சுத்தப் போயிருப்போம்” என்று சொல்லி என்னைக் கடுப்பேத்தினான் :)

அன்று இரவு புதிய வீட்டில் மின்விசிறிகளை மாட்டுவதற்கு ஆட்கள் வந்திருந்தார்கள். மூன்று விசிறிகளை முடித்துவிட்டு நான்காவது மாட்டும்போது அது கொஞ்சம் புதிய மாடல் மாதிரி இருக்கவும் உள்ளே கைவிட்டு போல்ட் மாட்ட வசதியாக இல்லை. ரொம்ப நேரம் முயற்சி செய்து கடுப்பானவர் திட்ட ஆரம்பித்துவிட்டார், “ இவனுங்க புதுசா டிசைன் பண்றன்னு சொல்லி ஏசியில உட்காந்துகிட்டு கம்ப்யூட்டர்ல டிசைன் பண்ணிட்றானுங்க… நம்ம தாவு தான் தீருது… @$@#$ டிசைன் பண்ணவனையே கூட்டிட்டு வந்து நீயே மாட்றான்னு சொல்லனும்…அப்பத் தெரியும்… ஒரு நாள் முழுக்க நெம்புனாலும் ஒரு ஃபேனக் கூட மாட்ட மாட்டான்” எப்படியோ திட்டிக் கொண்டே அதை மாட்டி விட்டார். கடைசி வரைக்கும் நான் ஒரு பொட்டி தட்றவன்னு காட்டிக்கவே இல்லையே :)

ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்தே பொருட்களையெல்லாம் புதியவீட்டிற்கு மாற்றிவிட்டு கரூர் பேருந்து நிலையத்திற்கு நான் வந்த போது மணி 2:30 ஆகியிருந்தது.
6 மணிக்கு எனக்கு சேலத்தில் ரயில்! சேலம் பேருந்தில் ஏறினாலும் நாமக்கல்லுக்கே சீட்டு வாங்கினேன். நாமக்கல்லில் எல்லாப் பேருந்துமே 15 நிமிடம் நிறுத்துவார்கள். அதனால் நாமக்கல்லில் இறங்கி முன்னால் செல்லும் (அப்ப மத்தவண்டிலாம் பின்னால போகுமான்னு கேட்காதீங்க) வண்டியில் ஏறிப் போய்க்கொண்டிருந்தபோது கொஞ்ச நேரத்தில் நான் கரூரில் இருந்து வந்த வண்டி எங்களை முந்திக் கொண்டு சென்றது. அதிலேயேப் போயிருக்கலாமோ என்று யோசித்தேன். ஆனால் முந்தி சென்ற வண்டி வாழைக்காய் ஏற்றி வந்த ஒரு லாரியோடு மோதி லாரி கவிழ்ந்திருந்தது. பேருந்திலிருந்தவர்களுக்கு பெரிதாக பாதிப்பில்லை என்றே நினைக்கிறேன். நல்ல வேளை நான் அதில் செல்லவில்லையென்று நினைத்துக் கொண்டது மனம். கொஞ்ச நேரத்தில் எப்படியெல்லாம் மாற்றி நினைக்க ஆரம்பித்து விடுகிறது அது!

ரயில் தர்மபுரியை நெருங்கும்போது அக்காவிடமிருந்து அழைப்பு, “குட்டி, நியூஸ் தெரியுமா பழனியில இன்னைக்கு ரோப் கார்ல ஒரு கேபின் அறுந்து விழுந்ததுல 4 பேர் எறந்துட்டாங்களாம்” எனக்கு பயங்கர அதிர்ச்சி. நாங்களும் பழனி ஏறி இறங்கியது அதே ரோப் காரில்தான். அதுவும் முதலில் நாங்களும் ஞாயிறுதான் பழனி செல்வதாக இருந்தது, நான் ரயிலைப் பிடிக்க தாமதமாகிவிடுமென்றுதான் சனிக்கிழமையன்றே போய் வந்தோம். ஐதராபாத், பழனி, நாமக்கல் னு எல்லா எடத்துலயும் எஸ்கேப்பாகிட்டே வந்திருக்கேன் :) ரயிலில் எனக்கு லோயர் பெர்த் கிடைத்திருந்தது. சைட் லோயரில் 0.1 டன் எடையில உட்காந்திருந்த ஒருத்தர் படுக்கும்போது எனக்கு மேல் இருந்த மிடில் பெர்த்தில் ஏறினார். எனக்கென்னமோ அதுதான் எமனுடைய அடுத்த அட்டெம்ட்டா இருக்குமோ என்று தோன்றியது. போன வாரம் பார்த்த எமதொங்கா தெலுங்கு படமெல்லாம் அப்போ எதற்கு ஞாபகத்துக்கு வந்ததுன்னே தெரியல. மிடில் பெர்த்த தாங்கிப் பிடித்திருக்கும் அந்த சங்கிலியைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தேன். நல்லா உறுதியாகதான் இருந்தது. அந்த நம்பிக்கையிலேயே தூங்கி ஒருவழியாக பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்! :)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, September 03, 2007

காதல் கூடம் - 4

எல்லோரும் குடையுடன் வருகையில்
நீ மட்டும் மழையுடன் வரும் மழைக்காலமது.

வயலுக்கு உரம் தெளிக்கும் பெண்ணைப் போல
நிலமெங்கும் நீர்த்துளிகளை
சாரலென தூவிக் கொண்டிருக்கிறது மேகம்.

கைக்குட்டையை தலைக்கு(ட்)டையாக்கி
நீர் வழியும் முகத்தோடு பாலம் நெருங்குகிறேன்.

பாலிதீன் உடையணிந்த பூங்கொத்து போல,
மழையங்கியில் ஒரு மலர்ச்செடியாய்,
மரத்தடியில் நின்றிருக்கிறாய்.

புடவை முந்தானையால்
குழந்தையைப் போர்த்தும் தாயென,
கிளைகளால் உன்னைப் போர்த்தி நிற்கிறது மரம்.

‘மழையிலும் காத்திருக்க வேண்டுமா?’
பார்வையில் சிறு கோபம் கலக்கிறேன்.
‘மழையில்லை, வெறும் சாரல்தான்’ எனும் பொருளோடு
என் கோபத்தையும் புன்னகையோடு வரவேற்கிறாய்.
சாரலில் கரைந்து நிலத்தில் விழுந்து தெறிக்கிறது என் கோபம்.

குளித்துக்கொண்டிருந்த மிதிவண்டிக்கு
தலை துவட்டிவிட்டு ஏறிக்கொண்டாய்.
பாலத்தில் நீர்க்கம்பளம் விரித்து
நம்மை அழைக்கிறது மழை.

மழைத்துளிகளின் ஸ்பரிசத்தில் நானும்
துளியொலிகளின் இசையில் நீயும்
நனைந்து கொள்கிறோம்.
புன்னகை கோர்த்தபடி சாரலோடு துவங்குகிறது இன்றைய நம் பயணம்.

நாம் வகுப்பறை நுழையும் வரை
ஒரு மெல்லிசையாய் வழிந்த சாரல்
சில பொழுதில் பெரு மழையாய் மாறுகிறது.

ஈரமானத் தலையை
ஈரமானக் கைக்குட்டை கொண்டே
துவட்டிக் கொள்கிறேன்.

உணவுக் கூடை மூடும்
பூத்துண்டை நீட்டுகிறாய்.
வாங்கிக் கொண்டு என் இடம் அடைகிறேன்.
முதல் பாடவேளை - இயற்பியல் - துவங்குகிறது.
நொடிக்கொரு முறை
தலை துவட்டினேனா என
திரும்பி திரும்பிப் பார்க்கிறாய்.
அதற்காகவே
துவட்டாமல் வைத்திருந்த
துண்டுக்கு நன்றி.

மழையோடு காற்றும் கைகோர்க்க
நட்டு வைத்த மதயானைகளென
மரங்கள் திமிருகின்றன.
மழையின் காரணமாக முதல் பாடவேளையோடு
பள்ளிக்கு விடுமுறை விடப் படுகிறது.

எல்லோரும் வீடு கிளம்ப,
ஏடு திறந்து எழுதுபவனைப் போல
நண்பர்களை விரட்டுகிறேன்…
போக மனமில்லாமல்!

என் குறிப்பறிந்தவளாய்
புத்தகம் விரித்து படிப்பவளைப் போல
தோழிகளைத் துரத்துகிறாய்.

முதல் தளத்தில் இருந்த ஓட்டுக்கூடம் நம் வகுப்பு.
கழுத்தளவு உயரத்தில் சுற்றுச்சுவர்.
நட்பு எல்லாம் விலகிப் போக
மழை மட்டுமே சுற்றம்.

ஒரு கண்ணாடிக்கூடு போல
எல்லாத் திசையிலும் நம்மை சூழ்ந்து நிற்கிறது மழை.
மழைக்கூட்டில் குடியிருக்கும்
இணைப் பறவைகளென
வார்த்தைச் சிறகுகள் ஒடுக்கி
மௌனமாய் இருக்கிறோம்.

பேனா மூடுகிறேன் நான்.
புத்தகம் மூடுகிறாய் நீ.

முதலில் சிறகடிக்க ஆவலாகிறேன்.
உன்னை நெருங்கி துண்டைத் திருப்பிக் கொடுத்து,
நினைத்ததை சொல்வதற்குள்,
வார்த்தை வந்து விழுகிறது “இயற்பியல் புத்தகம் இருக்கா?”
என் தவிப்புகளையெல்லாம் ரசித்துக்கொண்டவள்
சிரித்தபடி புத்தகம் நீட்டினாய்.

என் இயல்பை நொந்தபடி
இயற்பியல் புத்தகத்தோடு
என் இடம் திரும்புகிறேன்.

காலை நடத்தியப் பாடம் விரிக்கிறேன்.
பக்க எண் 143 எனக் காட்ட,
பக்க எண்ணுக்குப் பக்கத்தில்
உன் பெயர் எழுதுகிறேன்.
அன்று நடத்தியது புரியாததால்
மறுபடி படித்ததாய்ச் சொல்லிப் புத்தகத்தை
உன்னிடமேத் திருப்பித் தருகிறேன்.

பாடநூலில் நான்
நூல் விட
மனம் பட்டமாய்ப் பறக்கிறது.

முகம் மழையைப் பார்த்துக் கொண்டிருக்க
விழி உன்னை நோக்கியபடியே இருந்தது.
புத்தகம் திறக்கப்படாமலே பைக்குள் நுழைய
சிறகொடிந்து மீண்டும் அமைதியாகிறேன் நான்.

அமைதியிழந்தவளாய்
உணவுக்கூடை தூக்கிக்கொண்டு
என்னிடம் வந்து அமர்ந்தாய்.
முதன்முறையாய்ப் பகிர்ந்து உண்ணுகிறோம்.

‘குழம்பு எப்படி?’ என்கிறாய்.
‘சுவையாயிருக்கிறது’ என்கிறேன்.
‘நாந்தான் வெங்காயம் உரிச்சேன்’ என
முழுச்சமையலும் செய்தவள் போல பெருமை பட்டுக்கொள்கிறாய்.
வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்.

எவருமில்லாததால் தயக்கம் நீங்கியவளாய்
சாரலெனத் துவங்கி பெருமழையெனப் பேசுகிறாய்.
தட்டுத்தடுமாறி நடை பழகும் மழலை போல
உன்னிடம் உரை பழகுகிறேன்.

அத்தனை நாளும் தேக்கிவைத்த நம் எண்ணமேகங்கள்
எல்லாம் ஒரே நாளில் உடைந்து மழையெனப் பொழிந்தன.

அன்று மாலை மழை நிற்கும் வரை பேசினோம்.
நின்ற பிறகும் பேசினோம்.
வீடு திரும்புகையில்
உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மறந்து போனாலும்,
நீ உச்சரித்த ஒவ்வொரு ‘ம்’ மும் நினைவில் நின்றது.

அன்று இரவு முழுவதும்
அந்த 143 – ஆம் பக்கம் கனவில் படபடத்தபடியே இருக்க,
அடுத்தநாள் உனக்கு முன்னே வந்து பாலத்தில் காத்திருக்கிறேன்.

நிதானமாய் வந்தவள் நின்று புத்தகம் நீட்டி சொன்னாய் -
‘நேத்தே முதல் பக்கத்திலிருந்து படிச்சிருந்தா எல்லாம் புரிஞ்சிருக்கும்’

முதல் பக்கம் விரிக்கிறேன்.
மேலே மையமாய் எழுதியிருந்தாய் ‘அருள்முருகன் துணை!’
படித்துமுடிக்குமுன் நாணம் வந்தவளாய்
புத்தகம்பிடுங்கி மிதிவண்டியில் பறக்கிறாய்.
தொட்டுவிடாமல் துரத்துகிறேன்.

காதல் மனத்தில் துவங்கியது முதல் ‘பருவ’ மழை!

அடுத்த பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Thursday, August 30, 2007

காதல் கூடம் 3.1 :)

காதல் கூடம் மூன்றாம் பகுதியில் வந்த இலக்கண விதிகளுக்கான விளக்கப் பதிவு :)

பெருமை + ஊர் = பேருர்

முதலில், ஈறு போதல் என்ற விதிப்படி நிலைமொழியின் ஈற்றில் உள்ள ‘மை’ அழிந்து பெரு + ஊர் ஆனது.
பின், உயிர் வரின் உ குறள் மெய் விட்டோடும் எனும் விதிப்படி வருமொழியில் ஊ எனும் உயிரெழுத்து வர நிலைமொழியீற்றிலுள்ள ரு எனுமெழுத்தில் ர் எனும் மெய்யெழுத்தைவிட்டு உகரம் அழைந்து பெர் + ஊர் ஆனது.
பின், ஆதி நீடல் எனும் விதிப்படி நிலைமொழியின் ஆதியெழுத்தான பெ என்பது பே என நீண்டு பேர் + ஊர் ஆனது.
பின், உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி ர் எனும் மெய்யெழுத்தோடு + ஊ எனும் உயிரெழுத்து ஒன்றி ரூ என்றாகி பேரூர் ஆனது.

(இது 10 / +1 வகுப்புகளில் மிகவும் பிரபலமான இலக்கணக் கேள்வி  . ஏதேனும் தவறிருப்பின் தமிழறிஞர்கள் திருத்தவும்!!!)

அடுத்தது இந்தக் கவிதை எழுதும்போது ஒரு முக்கியமான ஐயம் வந்தது.
பூ தொட்டி, பூத்தொட்டி, பூந்தொட்டி - இவற்றில் ( இவைகளில் என்று எழுதுவது தவறு, இவற்றில் என்பதே சரி!) எது சரியென்று எனக்குத் தெரியவில்லை.
தெரிந்தவர்களிடம் கேட்போமென இராம.கி ஐயாவிடம் கேட்டேன். அவர் மிகப் பெரிய விளக்கமளித்தார் பூந்தொட்டி, பூத்தொட்டி இரண்டுமே சரிதானென. அது வட்டார வழக்கைப் பொருத்து எப்படியும் வரும் என்று சொல்லியிருந்தார். ஆனாலும் எனக்கு திருப்தியாயில்லை.  பூங்கா என்றுதான் சொல்கிறோம் பூக்கா என்று சொல்வதில்லை. பூக்கூடை என்கிறோம். பூங்கூடை என்று கேள்விப்பட்டதில்லை. ஆனால் பூத்தோட்டம் என்பதை விட பூந்தோட்டம் என்பதே சரியெனத் தோன்றுகிறது. குழப்பத்தோடு வலையில் தேடிய போது இரண்டுமே சரியென்று தான் தோன்றுகிறது.

வல்லினம் மிகும் இடங்கள் எனும் பகுதியில் ஓரேழுத்து ஒருமொழியையடுத்து வல்லினம் மிகும் என்று சொல்லப் பட்டிருக்கிறது.

எ-கா தீ+பெட்டி = தீப்பெட்டி, பூ + சரம் = பூச்சரம்.

அதே சமயம் புணர்ச்சி விதிகளில் பூ எனும் நிலைமொழிக்கு சிறப்பு விதியாக இது கொடுக்கப்பட்டுள்ளது.

பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும்

பூ எனும் பெயரை அடுத்து வரும் வல்லின எழுத்துக்களுக்கு இனமான மெல்லெழுத்தும் தோன்றும்.

இன மென்மை தோன்றும் என சொல்லாமல் இன மென்மை உம் தோன்றும் என்று சொல்லியதால் வல்லெழுத்தும் மிகலாம் எனக் கருதலாம்.

எனவே பூ + தோட்டம் = பூத்தோட்டம், பூந்தொட்டி இரண்டுமே சரி.
பூ + கூடை = பூக்கூடை , பூங்கூடை இரண்டுமே சரி.

பூப் போன்ற பெண்களிடம் உம் கொட்டும் ஆண்களின் சுபாவத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை ;)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, August 29, 2007

சத்தமிடும் மௌனம்

நம் பிரிவை விட
ஒரு வயது குறைவான சிறுவனுக்குத்
தாயெனும் தகுதியில் நீயும்,

நம் காதலைப் போல
புறக்கணிக்கப்பட்ட
அகதியெனும் நிலையில் நானும்,

எதிர்பாராமல்
எதிரெதிர் பார்க்க நேர்ந்தும்,
சலனமின்றி விலகிச் செல்கையில்,

பெரும் சத்தமிட்டு சொல்கின்றன
நம் மௌனங்கள்.

உன் மனம் மறந்துபோனதையும்,
என் மனம் மரத்துப் போனதையும்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.