Friday, May 16, 2008

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - நிறைவுப் பகுதி

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - முதல் பகுதி

"ஹலோ, நான் வினோத் பேசறண்டா"

"ம்ம்ம்… சொல்றா, உயிரோடதான் இருக்கியா?" சலிப்பு + கோபத்துடன் கேட்டான் அருள்.

"மச்சி போனவாரம் வந்தவுடனே ஆஃபிஸ்ல கொல்கத்தா அனுப்பிட்டானுங்கடா இன்னைக்குதான்
வர்றேன்.. சாரிடா போறதுக்கு முன்னாடி கால் பண்ண முடியல"

"சரி சரி ஈவினிங் ஃப்ரியா இருந்தா வீட்டுப் பக்கம் வா"

"வர்றேன் வர்றேன்… இளவரசிகிட்ட இருந்து எதுவும் கால் வந்துச்சா? என்ன சொன்னா?
எப்படி ஃபீல் பண்ணா"

"காலும் வரல.. கையும் வரல… நீ ஈவ்னிங் வா நேர்லப் பேசிக்கலாம்"

வினோத்துக்குக் கொஞ்சம் குழப்பமாயிருந்தது.
அன்று மாலையே வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு அருள் வீட்டுக்கு வந்தான்.

மாடியில் தனியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான் அருள்.

"டேய் என்னடா தனியா மொட்டமாடியில உட்காந்திருக்க?"

தன்னுடைய வீட்டில் விசயத்தைச் சொல்லி பாதி சம்மதம் வாங்கியது, இளவரசி இன்னும்
அவனிடம் பேசாதது எல்லாம் சொல்லி முடித்தான்.

"அவ கிட்டப் பேசனும் போல இருக்குடா"

"அதான் இந்த வாரம் நேர்ல சந்திக்கப் போறீங்கல்ல.. அப்போ நேர்லையேப் பேசிக்க
வேண்டியதுதான?"

"நேர்லப் பாக்கறதுக்கு முன்னாடி ஒரு தடவையாவதுப் பேசலாம்னு பாத்தேன் "

"சரி இரு நம்ம ஜூனியர் பசங்க மூலமா ட்ரை பண்ணிப் பாக்கறேன்"

கல்லூரி ஜூனியர் ஒருவனை அழைத்து அவன் மூலம் இன்னொரு பெண் நம்பர் வாங்கி,
அவளிடம் ஒரு பொய்யை சொல்லி இளவரசி நம்பரை வாங்கிக் கொண்டான்.

"ஜாப் விஷயமா.. அப்டி இப்டி னு சொல்லி அவ நம்பர் வாங்கியாச்சு… ந்தா ட்ரை
பண்ணு"

"மச்சி… நீயே மொதல்லப் பேசுடா… அவங்கப்பா விசயத்த அவகிட்ட சொல்லிட்டாரா
இல்லையான்னு தெரியல… நான் பேசினா உடனே கட் பண்ணிட்டான்னா?"

"சரி இரு நானேக் கால் பண்றேன்"

"ஹலோ இளவரசி… நான் வினோத் பேசறேன்"

"வினோத்?"

"சுத்தமா மறந்தாச்சா? 'மாடு' வினோத் பேசறேன்… இப்பவாது ஞாபகம் இருக்கா?"
.கல்லூரியில் அவன் செல்லப் பெயர் 'மாடு'.

"ஹே சாரிப்பா… நீ எப்படியிருக்க? இப்போ எங்க இருக்க?"

"நான் நல்லா இருக்கேன்.. இப்போ சென்னைல இருக்கேன்… சரி ஒரு நிமிசம், அருள்
பக்கத்துல தான் இருக்கான்.. உங்கிட்டப் பேசனுமாம்… இரு கொடுக்கறேன்" அவள்
இயல்பாகவே பேசுவதைக் கேட்டு விட்டு செல்லை அருளிடம் கொடுத்தான்.
செல்லை வாங்கியவன் அவள் பேசட்டுமென்று செல்லைக் காதில் வைத்து அமைதியாகவே
இருந்தான்.

அந்தப் பக்கம் இன்னும் அமைதியாகவே இருக்கவும், அவனே "ஹலோ…" என்றான்.

பதில் எதுவும் இல்லை. மறுபடி மறுபடி ஹலோ… ஹலோ… என்று சொல்லிப் பார்த்தும்
பயனில்லை.இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது.

"கால கட் பண்ணிட்டாடா"

"சரி போன்ல எதுக்குப் பேசிக்கிட்டு? எல்லாத்தையும் நேர்ல பாக்கும்போது பேசிக்க…
ஓக்கேவா? சரி நான் கிளம்பறேன்… எதுவா இருந்தாலும் எனக்குக் கால் பண்ணுடா"

"ம்ம்.. போயிட்டு வந்து கூப்பிட்றேன்"
தானே அழைத்தும் அவள் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது அவனுக்கு வேதனையாக
இருந்தது. அன்றிரவு முழுவதும் எதை எதையோ நினைத்துக்கொண்டேப் படுத்திருந்தவன்
விடிந்ததும் தூங்கிப் போனான். நேரில் பார்ப்பதற்குமுன் ஒருமுறையாவதுப் பேசிவிட
வேண்டுமென்று நினைத்து அவள் செல்லுக்கு அழைக்கும்போதெல்லாம் முதல் முறை யாருமே
எடுப்பதில்லை. அடுத்தமுறை அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருக்கும்.

அவள் தன் மேல் கோபத்தில் இருக்கிறாள் என்ற கவலையை விட ஏன் கோபமாய் இருக்கிறாள்
என்றக் குழப்பமே அவனை அதிகமாக வாட்டியது.
அடுத்த வாரம் இரு குடும்பமும் சந்தித்த போது, அவனுடைய அப்பாவும் அவளுடைய
அப்பாவும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்ற விசயம் தெரிய வர, நண்பர்களே
சம்பந்திகளாவதில் இருவருக்குமே மகிழ்ச்சிதான். இரண்டு குடும்பத்திலும்
எல்லோருக்குமேப் பிடித்துப் போக அப்பொழுதே அடுத்த மாதத்தில் திருமணத் தேதியும்
குறிக்கப்பட்டது. பெண் பார்க்க வருவதற்கு மட்டும் ஒத்துக் கொண்ட அப்பா,
கடைசியில் திருமணத்தையே முடிவு செய்தது அவனுக்கு ஆச்சர்யமாகவும், சந்தோசமாகவும்
இருந்தது. ஆனால் இளவரசி வீட்டில் இருந்த அன்று முழுவதும் இளவரசியிடம் தனியாகப்
பேச எவ்வளவோ முயற்சி செய்தும் அவனால் அவளிடம் பேச முடியவில்லை. அவளுடைய
அப்பாவிடம் தான் பேசியபோது அவர்கள் காதலித்ததை அவன் சொல்லவே இல்லை என்பதும்,
அவர்கள் நண்பர்களாக தான் பழகினார்கள் என்று சொன்னதும் அவளுக்குத் தெரியுமா,
தெரியாதா என்பதையும் அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. மற்றவர்களும்
"அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னா நாம சம்மதம் சொல்லிட்றதுதான் மரியாதை" என்ற
ரீதியில் பொதுவாகவேப் பேசிக்கொண்டிருக்க அவனால் எதையும் தெரிந்து கொள்ள
முடியவில்லை. இரண்டு பேர் வீட்டிலுமே அவனால் இதைக் கேட்க முடியாத நிலையில் என்ன
செய்வதென்றே தெரியாமல் இருந்தான். ஆனால் அவள் முகத்தில் சொல்ல முடியாத ஓர்
உணர்ச்சி இருப்பதை மட்டும் அவனால் கவனிக்க முடிந்தது. அது சோகமா தன் மேல்
இருக்கும் கோபமா எனத் தெரிந்து கொள்ள முடியாமலேயே சென்னைக்குத் திரும்பி
விட்டான்.
மெரீனாக் கடற்கரை.

"மச்சி உனக்கு எங்கேயோ மச்சமிருக்குடா… எல்லாத்தையும் இவ்வளவு ஈசியா
முடிச்சிட்ட… அடுத்த மாசம் குடும்பஸ்தனாகப் போற…" சிரித்துக் கொண்டே சொன்னான்
வினோத்.

"டேய் எனக்கு எல்லாமே கனவு மாதிரி இருக்குடா… நாந்தான் அவங்கப்பாகிட்டப் போய்
அப்படியெல்லாம் பேசினேனா? எங்கப்பா கிட்ட எந்த விஷயமும் ஓப்பனா நான்
பேசினதேயில்ல… எந்த தைரியத்துல அவர்ட்ட பேசினேன்னும் தெரியல… இளாவ விட்டுப்
பிரிஞ்சிடுவேனோன்ற பயமே எனக்கு தைரியமா மாறிடுச்சுனு நெனைக்கிறேன்"

"அதான் எல்லாமே சுபமா முடிஞ்சிடுச்சுல்ல… அப்புறம் ஏண்டா பழையக் கதையெல்லாம்?"

"இல்லடா… யாரால எல்லாம் காதலுக்குப் பிரச்சினை வரும்னு நெனச்சனோ அவங்க எல்லாம்
சமாதானம் ஆயிட்டாங்க… ஆனாக் காதலிக்கிறப் பொண்ணே இப்பக் கண்டுக்கலன்னா…
கஷ்டமாருக்குடா"

"மச்சி நீ ஃபீல் பண்ணாத… நான் அவ ஃப்ரெண்டுகிட்டப் பேசி அவ மனசுல என்னதான்
இருக்குனு தெரிஞ்சிக்குறேன்…நீ கல்யாண வேலைய மட்டும் பாரு… எல்லாம் நல்லபடியா
முடியும்"

அருளுக்கு,அவன் பேசுவதுக் கொஞ்சம் நம்பிக்கையாக இருந்தது.
அந்த ஒரு மாத இடைவெளியிலும் கூட அவன் இளவரசியோடு எதுவும் பேசமுடியவில்லை.
வீட்டிலிருப்பவர்களிடமும் அதை சொல்ல முடியாத நிலை. அந்த விசயம்
மற்றவர்களுக்குத் தெரியாமலும் சமளித்துக் கொண்டான். திருமண ஏற்பாடுகள்
எல்லாவற்றிலுமே அவனை சந்திக்காமல் தப்பித்துக் கொள்ளவேப் பார்த்தாள். சந்திக்க
வேண்டிய நிலையிலும் கூட நேருக்கு நேராக அவனைப் பார்ப்பதை அவள் தவிர்ப்பது
அவனுக்குப் புரிந்தது. திருமணம் முடிந்தபிறகு தன்னிடமிருந்த அவள் தப்பிக்க
முடியாது என்றெண்ணியவன், எந்தக் கோபமாக இருந்தாலும் திருமணம் முடிந்தபிறகு
அவளிடம் கேட்டு சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்
இருந்தான்.திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு. திருமண மண்டபத்தில், மணமகன்
அறையில் நண்பர்கள் எல்லோரும்போன பிறகுத் தனிமையில் இருந்தவன் தன்னுடையப்
சூட்கேஸில் தேடி, அதையெடுத்தான்.

அவனுக்கு அவள் எழுதியக் கடைசிக் கடிதம். மீண்டுமொரு முறை படித்துப் பார்த்தான்.
கண் லேசாகக் கலங்கியது.
"எப்படி இளவரசி உன்னால இன்னொருத்தர கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சாதாரணமா
சொல்ல முடிஞ்சது? காதலிக்கிறப்ப பேசின வார்த்தையெல்லாம் ஆயுசுக்கும் மறக்காதே?
அப்போ செஞ்ச சத்தியமெல்லாம் காத்தோடப் போகட்டும்னு விட்டிருந்தியா? எவ்வளவு
கனவு கண்டோம்… எல்லாத்தையும் கனவாவே நெனச்சுக்கலாம்னு விட்டுட்டியா? எப்படி
இந்த மாதிரி ஒரு லெட்டர் எழுத உனக்கு மனசு வந்தது?" அவளிடம் கேட்பதாக
நினைத்துக் கொண்டு கடிதத்திடம் கேட்டுக் கொண்டிருந்தான். அதை மடித்து
வைத்துவிட்டுக் கண்களை மூடியபடி மறுபடி மனசுக்குள் பேச ஆரம்பித்தான்.
"இளவரசி, இப்ப உனக்கு எம்மேல என்னக் கோபம்னு எனக்குத்தெரியல… உங்க அப்பாவே
சம்மதம் சொன்ன பின்னாடி நீ ரொம்ப சந்தோசப்படுவன்னு எவ்வளவு ஆசையா இருந்தேன்…
ஆனா இப்பவரைக்கும் நீ எங்கிட்டப் பேசாம இருக்கிறது ஏன்னே எனக்குப் புரியல…
உன்கிட்ட சொல்லாமலயே உங்கப்பாகிட்ட வந்து பேசிட்டேன்னுக் கோபமா? நாமக் காதலிச்ச
விசயமே அவருக்குத் தெரியாதே… அது உனக்கு தெரியுமா தெரியாதான்னும் என்னால
தெரிஞ்சிக்க முடியல… ஒரு தடவையாது எங்கிட்டப் பேசியிருந்தீன்னா எல்லாத்தையும்
சொல்லியிருப்பேன்…மனசுக்குள்ள ஒருத்தர நெனச்சுட்டு இன்னொருத்தரோட வாழ என்னால
முடியாதும்மா… அதனாலதான் உங்கிட்ட சொல்லாமலேயே உங்கப்பாகிட்ட நேர்ல வந்து
பேசிட்டேன்… என்ன மன்னிச்சுடு! நாமக் காதலிச்ச விசயத்த உங்கப்பாவுக்குத் தெரிய
வச்சு, உம்மேல அவருக்கு இருந்த நம்பிக்கைய இல்லாமப் பண்ணிட்டனோன்னு என்னத்
தப்பா நெனச்சிக்கிட்டு இருந்தாலும் பரவால்ல… எல்லா விவரத்தையும் நாளைக்கு
சொல்லிட்றேன்… நாளைக்காவது என்னோட பேசுவியா?" அவன் குழப்பத்தில் இருப்பது
அவனுக்கேத் தெளிவாகத் தெரிந்தது. சம்பந்தமில்லாமல் எதை எதையோ யோசித்துக்
கொண்டிருந்தான். கொஞ்சம் மனதை மாற்ற, கதவைத் திறந்து பாலக்னி பக்கம்
போனான்.அப்போது மணமகள் அறையில் இருந்து ஒரு பேச்சு சத்தம் அவன் காதில் விழ
ஆரம்பித்தது.
"இளா! உனக்கு அருள் மேல இவ்வளவு நம்பிக்கையாடி? ஒரு வேளை உன்னோட லெட்டரப்
பார்த்துட்டு சரி எங்கிருந்தாலும் வாழ்கனு போயிருந்தார்னா என்னப் பண்ணியிருப்ப"

"அதெப்படிப் போக முடியும்? லவ்வர்ஸ்க்கு காதல விட அதிகமா இருக்க வேண்டியது
நம்பிக்கை! எங்கிட்ட அருள் காதல சொன்னப்ப நான் மறுத்தாலும் ஆறு மாசமா
எங்கிட்டப் பேசாமலே எந்த நம்பிக்கைல அவன் காத்திட்டிருந்தான்? அதே நம்பிக்கைல
தான் நானும் அப்படி ஒரு லெட்டர் எழுதினேன்! நானாவது ஆறு மாசம் கழிச்சுதான்
என்னோட லவ்வ சொன்னேன், அருள் பார்த்தியா லெட்டரப் பார்த்த அடுத்த வாரமே
எங்கப்பாகிட்ட பொண்ணு கேட்டு வந்துட்டான். என்ன விட அவனுக்கு தான்டி எம்மேல
காதல் அதிகம்! அதுவும் நாங்க லவ் பண்ண மாதிரி எங்கப்பாகிட்ட அவன் காட்டிக்கவே
இல்ல! அதனாலேயே எங்கப்பாவுக்கு அவனப் பிடிச்சுப் போயிருக்கும்!"
"அடிப்பாவி அருள டெஸ்ட் பண்றதுக்குதான் இப்படி சீரியஸா ஒரு லெட்டர் எழுதினியா?"

"சீச்சீ…எனக்கு அருளப் பத்திதான் முழுசாத் தெரியுமே அப்புறமென்னப் புதுசா
டெஸ்ட் பண்ணப்போறேன்? இன்னமும் அவனுக்கு அந்த inferiority complex மட்டும்
போகல. நான் பல தடவை எங்கப்பாகிட்ட வந்து பேசுன்னு சொல்லியும் என்னதான் பேச
சொன்னானேத் தவிர அவன் வந்து பேசறேன்னு சொல்லல. எங்க வீட்ல வேற, ஜாதகத்தப்
பாத்துட்டு சீக்கிரம் கல்யாணம் முடிக்கனும்னு சீரியசா அலையன்ஸ் பாக்க
ஆரம்பிச்சுட்டாங்க, அதான் அப்படி ஒரு லெட்டர் எழுதிட்டேன். அதுவும் சரியா
வொர்க் அவுட் ஆயிடுச்சு! பின்ன என்னடி வீட்டுக்கு வந்து பொண்ணுக் கேட்கவே
தைரியமில்லாதவன எந்தப் பொண்ணோட அப்பாவுக்கு தான் பிடிக்கும்?"
"அது சரி நீ அப்படி ஒரு லெட்டர் எழுதிட்டேன்னு சொன்னவுடனே நானே உண்மையாதான்
இருக்குமோன்னு நெனச்சிட்டேன். நீயும் காலேஜ்லேயே அருள்கிட்டப் பட்டும்
படாமதானப் பழகின!"

"ம்ம்… வெளியில அப்படித் தெரிஞ்சிருக்கலாம்… ஏன்னுத் தெரியல அருளுக்குப்
பணக்காரங்களப் பார்த்தாலேக் கொஞ்சம் அலர்ஜி. அதான் நானும் சினிமா,
ரெஸ்டாரண்ட்னு அவன வெளியில கூட்டிட்டு சுத்தியிருந்தேன்னு வச்சிக்கோ, என்னையும்
பிடிக்காமப் போயிடுச்சுன்னா என்னப் பண்றதுன்னு பயந்துட்டேன். எனக்கும் அதுல
இஷ்டம் இல்லாததும் ஒரு காரணம்"
"அதெல்லாம் சரி, ஆனா ஒரு நாள் அருள்ட்ட ஃபோன்ல பேசலன்னாக் கூட மூடவுட் ஆன
மாதிரி இருப்ப, எப்டி அவ்ளோ நாளாப் பேசாம இருந்த???"

"தினமும் மனசுக்குள்ளேயே சாரி கேட்டுக்கிறதத் தவிர வேற என்னப் பண்ண முடியும்?
தனக்குப் பிடிச்சது தன்ன விட்டு விலகிப் போறப்பதான எவ்வளவுக் கஷ்டப்பட்டாவது அத
அடையனும்னு தோணும்? அதனாலதான் பேசாம இருந்தேன்"
"அதுக்காக… எல்லாம் நல்ல படியா முடிஞ்சபின்னாடியுமா அலையவிடனும்?"

"அவன் வந்து எங்கப்பாகிட்டப் பேசிட்டுப் போனதுல இருந்து இன்னைக்கு வரைக்கும்
அவன்ட்டப் பேசனும்னுதான் துடிக்கிறேன்… ஆனா இவ்வளவு நாள் பேசாம இருந்து அருளக்
கஷ்டப்படுத்திட்டு இப்போ பேசனும்னு நெனச்சா வார்த்தை வர்றதுக்கு முன்னாடி
எனக்கு அழுகதான் வருது, அதனாலேயே அவனப் பார்க்கிறதையே அவாய்ட் பண்ணிட்டு
இருந்தேன்! ரொம்ப கஷ்டமா இருக்குடி" விட்டால் அழுது விடுவாள் போலிருந்தாள்.

"ஏ..ஏ…இன்னைக்கு அழாதம்மா…நாளைக்குப் போய் உன் ஹப்பிய கட்டிப்புடிச்சு
அழுதுக்கோ…இப்ப தூங்கு நானும் தூங்கப் போறேன்"

"ஆமாக் கண்டிப்பா நாளைக்கு first nightல அவனக் கட்டிப்பிடிச்சு அழத்தான்
போறேன்" கண்ணீரோடு் சிரித்தாள்.
தன் மேல் உள்ளக் கோபத்தில்தான் பேசாமள் இருக்கிறாள் என்று நினைத்துக்
கொண்டிருந்தவனுக்கு, தான் கோபப்படுவேனோ என்றுதான் அவள் பேச முடியாமல்
இருக்கிறாள் எனத்தெரிந்ததும் கவலை குறைந்தது.

"நீ சரியான லூசுடி" என்று நினைத்துக்கொண்டே கனவோடுத் தூங்கினான்.
அடுத்த நாள், திருமணம் முடிந்தது. முதலிரவு அறை. அருளைப் பார்த்ததும் பொங்கி
வந்த அழுகையோடு அவனை நெருங்குகையில், அவனும் கண்ணில் கண்ணீரோடு நிற்பதைப்
பார்த்து ஒன்றும் புரியாமல், அழுதுகொண்டே அவனைக் கட்டிப்பிடித்தாள் இளவரசி.
அழுகையோடு ஆரம்பமானது ஒரு முதலிரவு.