Saturday, December 30, 2006

"பிறந்த நாள் வாழ்த்து!"


உன் பிறந்தநாளன்று மட்டும்,
என் டைரி வெறுமையாய் இருப்பது பார்த்து கோபிக்கிறாய்.
அது டைரியில் குறிக்க வேண்டிய நாளில்லையடி
என் உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!


உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே
வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய்.
நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திருந்ததை
எப்படி சொல்லிப் புரிய வைப்பது?


ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லையடி.
உன் பிறந்தநாளை மாதம்தோறும்…
இல்லையில்லை,நீ பிறந்தகிழமையென்று
வாரம் தோறும் கொண்டாடுவோமா?


நீ பிறந்த மருத்துவஅறைக்கு ராசிகூடிவிட்டதாம்.
அழகுக்குழந்தை பிறக்க அங்குதான்
பிரசவம் பார்க்கவேண்டுமென
அடம்பிடிக்கிறார்களாம் கர்ப்பிணி பெண்கள்.


உன் பெயரில் நடக்கும்
பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள
தவம் கிடக்கின்றன…
எல்லாத் தெய்வங்களும்!


பிறக்கும்போது 3 கிலோ இருந்தாயாம்.
பத்து மாதமாய் உன் அம்மாவால்,
3 கிலோ அழகுதான் சேர்க்க முடிந்ததா?


உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க் கொண்டாட
தேவதைகளே தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?


மழைக் காலம், கார்காலமெல்லாம்,
எந்த மாதமென்று எனக்குத் தெரியாது…
நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!


கால எந்திரம் கிடைத்தால் நீ பிறந்தபொழுது,
நான் என்ன செய்து கொண்டிருந்தேன்?
எனப் பார்க்க ஆசை!


பிறந்தநாளை எப்போதும்
ஆங்கிலத் தேதியில் கொண்டாடுகிறாய்…
என்ன பாவம் செய்தது, தமிழ் தேதி?


தன் சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!


பிறந்தநாளுக்கு
எத்தனை ஆடைகள் நீ எடுத்தாலும்
உன் ‘பிறந்தநாள் ஆடை’? போல் வருமா? ;)


ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!


நீ பிறந்த பிறகுதான்
உன் அப்பாவுக்கே பெயர் வைத்தார்களா?
அழகப்பன் என்று!


உன் பிறந்த நாளன்று
உன்னை வாழ்த்துவதா?
நீ பிறந்த நாளை வாழ்த்துவதா?


ஒவ்வொரு பிறந்த நாளிலும்
வயதோடு, அழகையும்
ஏற்றிக் கொள்கிறாய்!


உன் பிறப்பு
உன் தாய்க்குத் தாய்மையையும்,
எனக்கு வாழ்வையும் தந்தது!


நீ பிறந்தாய்…
பூமிக்கு இரண்டாம் நிலவு
கண்டுபிடிக்கப் பட்டது!


உன் பிறப்பில் தான்
கண்டுகொண்டேன்…
கவிதைக்கும் உயிருண்டென!


என் காதல் தேசத்தில்
உன் பிறந்த நாள்
தேசிய விடுமுறை.


உன் தாய்க்குப் பிறந்தாய்.
என் தாய்க்குப் பின் என் தாய்.


அழுகையோடு பிறந்தாயா?
அழகோடு பிறந்தாயா?


“.....”


( உன் வயதுக்கு ஒரு கவிதை கேட்டாய். ஒன்றே ஒன்று குறைகிறதடி. சரி உன் பெயரெழுதி நிரப்பிக்கொள்!)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, December 22, 2006

நா செஞ்ச குத்தமென்ன?

கல்மனசு உனக்குன்னு கவிதையில உளிசெஞ்சு,
கண்ணாடி செலயப் போல பக்குவமா நா செதுக்க…
கல்லுக்குள்ள உம்மனசோ பூக்காதப் பூப்போல!
தானாப் பூக்குமுன்னு நாம்பாத்துபாத்து நீரூத்த,
பூக்கும்போதே வாடிப்போச்சே, நா செஞ்ச குத்தமென்ன?

நெஞ்சுக்குள்ள ஒன்னவச்சா பாக்கவு முடியாதுன்னு
கண்ணுக்குள்ள ஒன்னவச்சி கண்ணாடிலப் பாத்துக்கிட்டேன்…
நாங்கண்ணொறங்கும் நேரத்துல இமையாலப் போத்திவிட்டு
ஒன்னையுந்தான் தூங்கவச்சேன், ஒன்னாவேக் கனாக்காண!
காணும்போதே கலஞ்சுபோச்சே, நா செஞ்ச குத்தமென்ன?

ஒன்னுமில்லாத என்னெஞ்சும் ஒன்னப்பத்தி நெனச்சதால
பூத்துத்தான் குலுங்குச்சே பூக்காடா மணந்துச்சே
பூவாசம் அத்தனையிலும் உன்வாசம் தேடித்தான
அலையா நானும் அலஞ்சுதான் திரியயில
காடெல்லாம் கருகிப்போச்சே, நா செஞ்ச குத்தமென்ன?

யெ(ன்)உசுருக்கொரு உருவமிருந்தா ஒன்னப்போல இருக்குமின்னு
மங்காத ஒ(ன்) உருவத்த மனசுக்குள்ள மடிச்சுவச்சேன்
நீயே போனபின்ன மனசெதுக்கு? உசுரெதுக்கு?
மூச்சையும் நிறுத்திப் பாத்தா மூச்சுக்குள்ளும் நீயிருக்க,
உசுருந்தான் போகலையே, நா செஞ்ச குத்தமென்ன?

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

( கண்ணீரில் குளித்தக் கவிதை இது!
காதலில் குளித்த கவிதைகள் -> இங்கே! )

Wednesday, December 20, 2006

ஒரு காதல் பயணம் - 7 (தேன்கூடு போட்டிக்கும்)

முதல் பாகத்திலிருந்து வாசிக்க இடுகையின் தலைப்பின் மீது சொடுக்கவும்.
"காதல் குறும்பு" என்ற கருத்தில் இப்பாகம் மட்டும் தேன்கூடு போட்டிக்கு இணைக்கப்பட்டுள்ளது.

நான் உன்னையும் , நீ என்னையும்,
தேடிக் கொண்டிருப்பதால்,
நம்மை இணைக்க
முடியாமல் தடுமாறுகிறது
நம் காதல்!


காதலுக்கென்றே படைக்கப்பட்ட மாலைப்பொழுதொன்றில்,
யாருமற்ற அந்த வாய்க்காலின் படித்துறையில் நாமிருவர் மட்டுமே அமர்ந்திருக்கிறோம்.
குளிப்பவர், துவைப்பவர் எவரும் இன்றி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிற வாய்க்கால் நீர்,
உள்ளே நீந்திக் கொண்டிருக்கும் மீன்களெல்லாம் தெளிவாகத் தெரியும்படி தெளிந்து இருக்கிறது.

“எல்லா மீனும் எவ்வளவு சந்தோசமா நீந்திக்கிட்டு இருக்கில்ல?” என்று மெதுவாக நீ பேச்செடுக்கும் போது,
ஒரு மீன் மட்டும் நீர்ப்பரப்புக்கு மேல் வருவதும் பின் உள் செல்வதுமாய் இருக்கிறது.
அந்த மீனைக் காட்டி, என்னிடம் கேட்கிறாய்,”அது மட்டும் ஏன் மேலே வந்து, வந்து போகுது?”
“அத சொல்றதுக்கு முன்னாடி, அது ஆண் மீனா, இல்லப் பெண் மீனான்னு கண்டுபிடி” - இது நான்.
“அது எப்படிக் கண்டு பிடிக்கிறது? எனக்கு தெரியாதே!” - உதடு சுழிக்கிறாய் நீ.
“ஆனா, எனக்குத் தெரியும்! அது ஆண் மீன் தான்”
“எப்படிடாக் கண்டு பிடிச்ச?”
“வாய்க்கால்ல இருக்கும் பெண் மீன்கள் எல்லாத்த விடவும் இந்த ரெண்டு மீனும் அழகா இருக்கேன்னு,
மேல வந்து, வந்து உன்னோட ரெண்டு கண்ணையும் பார்த்துக் கண்ணடிச்சுட்டுப் போகுதே!
அப்பவேத் தெரியலையா அது ஆண் மீனாதான் இருக்கும்னு?”
வள்ளுவர் காலத்து உவமையைத் தான் சொன்னேன், ஆனாலும் வெட்கப்பட்டாய் நீ.

“இன்னொரு முற அது மேல வரட்டும், அதப் பிடிச்சுப் பொரிச்சுட வேண்டியதுதான்!” கோபப்பட்டேன் நான்.
“அப்போ நீ அசைவமா?” என சந்தேகப் படுகிறாய்.
“அப்போ, உனக்கு மீன் கறிப் பிடிக்காதா?” - என் பங்குக்கு நானும்!
“மீன் கறி பிடிக்காது, ஆனா மீன் கடி பிடிக்கும்!”
“அதென்ன மீன் கடி?”

“இப்போ வாய்க்காலுக்குள்ள எறங்கிக் கொஞ்ச நேரம் ஆடாம,
அசையாம அப்படியே நின்னோம்னா, சின்ன சின்ன மீனெல்லாம் வந்து நம்மக் கால வலிக்காமக் கடிக்க ஆரம்பிக்கும்,
அது எவ்வளவு சொகமா இருக்கும் தெரியுமா?”
என்று சொல்லிக் கொண்டே படித்துறையின் கடைசிப் படிக்கட்டுக்குப் போய்விட்டாய்.
பாவாடையை முழங்கால் வரை சுருட்டிக் கொண்டவள், என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு,
உடனே வாய்க்காலுக்குள் இறங்கினாய்.

நீ சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் உன் காலைக் கடிக்க ஓடி வந்தன மீன்கள் எல்லாம்.
அந்த சுகத்தில், பால் கொடுக்கும் தாயைப்போல் பரவசமாய் உன் முகம்.
உன்னைக் கடித்துக் கொண்டிருக்கும் மீன்களையேப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான்.

“என்னடா அப்படிப் பார்க்கற?” என முறைக்கிறாய்!
“இல்ல, உன்னக் கடிக்கிறதெல்லாம் ஆண் மீனா, இல்லப் பெண் மீனான்னுப் பார்த்துட்டு இருக்கேன்”
“திரும்பவும் ஆரம்பிச்சுட்டியா, உன்னோட ஆராய்ச்சிய! சரி அதையும் சொல்லேன் கேட்போம்!”

“மீன் கடிக்கிறது உனக்கு வலிக்குதா? இல்லையா?”
“வலிக்கல, சுகமாத்தான் இருக்கு!”
“அப்படின்னாக் கடிக்கிறதெல்லாம் பெண் மீனாதான் இருக்கும்”
எதையோ நினைத்து சிரித்துக் கொள்கிறாய் நீ.

“நீயும் எறங்கி நில்லேன்” என என்னையும் அழைக்கிறாய்.
வேட்டியை மடித்து விட்டு வாய்க்காலுக்குள் இறங்கிய வேகத்தில் ஏறுகிறேன் நான்.
“ஏன் என்னாச்சு?”
“மீனெல்லாம் இப்படி வலிக்கிற மாதிரிக் கடிக்குது! நீ என்னமோ சுகமா இருக்குன்னு சொல்ற?”
சிரித்துக் கொண்டே,“அப்போ உங்களக் கடிச்ச மீனெல்லாம் ஒருவேளை ஆம்பள மீனோ?”
“ஆமாமா, எல்லா ஆம்பள மீனும் சேர்ந்து, உனக்குப் போய் இப்படி ஒரு தேவதையாடான்னுப் பொறாமையில் கடிச்சிருக்கும்!”
“சரி, சரி போதும்” என சொல்லிக்கொண்டே மேலே வருகிறாய்.

“மீனப் பத்தி இவ்வளவு ஆராய்ச்சி பண்றியே, என்னை ஏன் ஒரு ஆண் மீனும் கடிக்கல?”
“உன்னை யார் முதல்ல வந்து தொடுறதுன்னு சண்டை போடவே, அதுக்கெல்லாம் நேரம் சரியாப் போயிருக்கும்!”
ஈரப் பாவாடையைப் பிழிந்து கொண்டே “அப்போ, உன்ன ஏன் ஒரு பெண் மீனும் தொட வரல?” எனக் கேட்கிறாய் நீ.
“இதென்னக் கேள்வி? கோவிலுக்குப் போனா நீ அம்மனக் கும்பிடுவியா? பூசாரியக் கும்பிடுவியா?”

“சரிங்க பூசாரி, இப்போ அம்மன் வீட்டுக்குக் கெளம்பப் போகுது, நாளைக்குப் பார்க்கலாம்” என ஆயத்தமாகிறாய் நீ.
“கல்யாணத்துக்கப்புறம், இந்த மீன் கடிக்காக நீ வாய்க்காலுக்கெல்லாம் வரவேண்டியதில்ல,
அதெல்லாம் வீட்டிலேயே வச்சுக்கலாம்” என்கிறேன் நான்.

“ச்சீப் போடா…” என்று வெட்கத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்கிறாய் நீ.

“அட! வீட்டிலேயே கொஞ்சம் மீன் வளர்க்கலாம்னு சொல்ல வந்தேன்” என விளக்கிவிட்டு,
உன்னிடம் முதல் “ச்சீப் போடா” வாங்கிய சந்தோஷத்தில் நானும் கிளம்புகிறேன்.

அப்போது வாய்க்காலில், என்னைக் கடித்த மீன்களெல்லாம்,
உன்னைக் கடித்த மீன்களைத் துரத்திக் கொண்டு நீந்துகின்றன.

காதல் குறும்பு எங்கும் இருக்கிறது!

அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Sunday, December 03, 2006

அழுது வழியும் கவிதை

நான் - வானம்…
நீ - நிலம்…
என் காதல் - மழை!
குடை விரித்தது யார்?

--------------------------------------------------------

முன்பு
உன்னையேத் தாங்கியபோது
காற்றைப் போல லேசாக…
பிரிந்த பின்னோ
உன் நினைவைத் தாங்கவே
பூமியைப் போல பாரமாக…
என் இதயம்!

--------------------------------------------------------

ஒரு விழி நான்
மறு விழி நீ
சேர்ந்தே கனவு கண்டாலும்
சேரத்தான் முடியவில்லை.
சேர்ந்தே நனைகிறோம்!

--------------------------------------------------------

பிரிந்து விடு என்றாய்.
பிரிய முடியும்.
விட?

--------------------------------------------------------

உனக்கு எழுதி அனுப்பியக் கவிதையெல்லாம்
என்னைப் பார்த்து அழுகிறது.
எழுதியும் உனக்கு அனுப்பாதக் கவிதையோ
என்னைப் பார்த்து சிரிக்கிறது.

--------------------------------------------------------

எப்போதும் என்னைத் தனிமைப் படுத்துகிறாய்.
காதலிக்கும்போது மற்றவரிடமிருந்து
பிரியும்போது என்னிடமிருந்து!

--------------------------------------------------------

காதலியின் சுகம்
காதல் கவிதையில்…
என் காதலின் சோகம்
இந்தக் காயக் கவிதையில்!

--------------------------------------------------------

அழுதுவழியும் இந்தக் கவிதைகளை
நீ ஒதுக்கிவிடுவாய் என்றெனக்குத் தெரியும்.
அழுகிற போது மட்டும் என் கவிதைகள்
அழகாயிருப்பதில்லை.
நீயும்தான்…!

Monday, November 13, 2006

காதல் வாங்கினால் முத்தம் இலவசம்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


(இது தேன்கூடு போட்டிக்கு நான் அனுப்பும் முதல் க(வி)தை!)


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எதிர் வீடு காலியான +2 விடுமுறையில்
இதயத்துக்குள் குடி புகுந்தது ஒரு கனவு:
“இரண்டிலும் ஒரு தேவதை குடிவருவாளா?”

உறங்கிக் கொண்டிருக்கும்போதே உன் கனவு பலித்ததுண்டா?
நான் உறங்கிக்கொண்டிருந்த ஒரு பின்னிரவில்தான்
உன் குடும்பம் எதிர்வீடு புகுந்தது!

பழகிய ஒரே வாரத்தில்
என் வீட்டு சமையலறை வரை வருகிறாய்!
எப்போதும் உன்வீட்டு வாசல்படி தாண்டியதில்லை நான்!

என் அம்மாவிடம் கதையளக்கிறாய்…
என் அப்பாவிடம் பேசுகிறாய்…
என் தங்கையிடம் விளையாடுகிறாய்…
என்னை மட்டும் பார்க்கிறாய்!

அடுத்த வாரமே கலந்தாய்வு*க்கு ஒன்றாய்ப் பயணிக்கிறோம் !
மறு வாரமே ஒரே கல்லூரியில் சேர்கிறோம்!!

ஒருமுறை தானே இயற்கை வரம் தரும்…
வாரா வாராம் தருமா என்ன?

அந்த ஒருமாதமும்
கோடை விடுமுறையல்ல…
கொடை விடுமுறை!

என் வீட்டில் எல்லோரிடமும் பேசுகிற நீ!
உன் வீட்டில் யாரிடமும் பேசாத நான்!
நம்முடன் பேசியும் பேசாமலும் நாம்!

முதலாமாண்டு எதிர்வீட்டுப்பெண்ணாய்…
இரண்டாமாண்டு கல்லூரித்தோழியாய்…
மூன்றாமாண்டு நலம்விரும்பியாய்…
என் இதயவாசல்கள் ஒவ்வொன்றாய்த் திறந்து உள்நுழைகிறாய்!

மூன்றாண்டுகளாக…
எதையெல்லாமோப் பேசி தீர்த்த நாம்
இறுதியாண்டு முழுதும் காதலைப் பற்றியே பேசியதன்
காரணம் அப்போது தெரியவில்லை!

காதலைப் பற்றிய உன் எண்ணங்களை
முழுதாய் அறிந்து கொண்டபோதும்
உன்னை மனைவியாக அடையப் போகிறவன்
கொடுத்து வைத்தவன் என்றே
நினைத்துக் கொண்டது என் மனது!

பின்னொரு நாள்
என் கவிதைகளை வாசித்து விட்டு
என்னைக் கணவனாய் அடையப் போகிறவள்
கொடுத்து வைத்தவள் என்று நீ சொல்ல
மெல்லிய சலனம் எனக்குள்!

அதன்பிறகு
என் மீது நீ அக்கறை கொள்ளும்
ஒவ்வொரு நிகழ்விலும்
கொஞ்சம் கொஞ்சமாய்
உடைந்து கொண்டிருந்தது
உன் மீது நான் கொண்டிருப்பது
நட்புதான் என்ற என் நம்பிக்கை!

எப்போது, எப்படி, எதனால்
என்கிற கேள்விக்கெல்லாம்
பதில் சொல்லாமல்
நம் நட்புக்குள்ளே
சத்தமில்லாமல் மெதுவாய்
நுழைந்து கொண்டிருந்தது
என் காதல்!

ஒருநாள் பழைய நண்பனிடம்
உன்னை அறிமுகப் படுத்துகையில்
உதடு சொன்னது – “எதிர் வீட்டுப் பெண்”
உள்ளம் சொன்னதோ – “எங்க வீட்டுப் பெண்”

மின்சாரம் இல்லாத அந்தப் பௌர்ணமி இரவில்
மொட்டை மாடியில் கூடியிருக்கிறது குடும்பம்…
என்னிடம் தனியாக கேட்கிறாய்…

“ஒரு கவிதை சொல்லு”

“எதைப் பற்றி?”

“ம்ம்ம்… என்னைப் பற்றி?”

“சுடிதாரிலும் வருகிறாய்…
தாவணியிலும் வருகிறாய்…
நீ புதுக் கவிதையா? மரபுக் கவிதையா?”

“ம்ம்ம்… காதல் கவிதை!”

மின்சாரம் வந்தது!
நீ மறைந்து போனாய்…

எனக்கேத் தெரியாமல் நானுன்னைக் காதலிக்க…
உனக்கேத் தெரியாமல் நீயென்னைக் காதலிக்க…
காதலுக்கு மட்டுந்தான் தெரிந்திருக்கும்,
அப்போது நாம் காதலித்தது!

அடுத்துவந்த நாட்களில்
வார்த்தைகளைத் தாண்டி
பார்வைகள் பேசிக்கொண்டதை
வார்த்தையில் வடிக்க முடியுமா?

எல்லோர்க்கும் முன்பு பேசிக்கொண்டிருந்தவள்,
யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்ப் பேசுகிறாய்!

பேசுவதே பாதிதான்…அதிலும் பாதியை
பார்வையில் சொல்லிவிட்டுப் போனால்
எப்படிப் புரியும்?

பன்மொழி வித்தகனாக யாராலும் முடியும்!
பெ(க)ண்மொழி வித்தகனாக யாரால் முடியும்?

காதல்
சொல்லப்படுவதும் இல்லை!
கேட்கப்படுவதும் இல்லை!
அது உணரப்படுவது!
உணர்ந்ததும் பாடாய்ப் படுத்துவது!

நம் காதலை நாம் உணர்ந்தபிறகும்
யார் முதலில் சொல்வதென நம்மிடையேப் போட்டி!
நடுவராய் இருக்கிறது நம் காதல்!

பெண்கள் காதலைச் சொல்லும்போது
வெட்கம் பிடுங்கித் தின்னுமாம்…
ஆண்கள் காதலைச் சொல்லும்போது
பயம் வந்து கொல்லுமாம்…

உன் வெட்கத்துக்காக நான் காத்திருக்க…
என் தைரியத்தை நீ பரிசோதிக்க…
தவித்துக் கொண்டிருந்தது நம் காதல்!

வென்றாய் நீ!
சொல்லிவிடத் துணிந்து விட்டேன் நான்!
எப்படி? எப்படி?? எப்படி???

“சொல்லுவது எளிது, சொன்னதை செய்வது கடினம்!” **
காமத்துப்பால் எழுதிய வள்ளுவனா இப்படி சொன்னது?
காதல் மட்டும் இங்கே முரண்படுகிறது!

அதே மொட்டை மாடி…
மாலை நேரம்…
நீ…நான்…தனிமை…

“உங்கிட்ட ஒன்னு சொல்லனும்; ஒன்னு கேட்கனும்”

“சொல்லு”

“நான் ஒரு பொண்ணக் காதலிக்கிறேன்”

“கேளு”

“அ..து.. நீ.. தா..னா..ன்..னு.. தெ..ரி..ய..னு..ம்…”

திக்..

திக்..

திக்..

“ம்ம்ம்… இது எனக்கு முன்னாடியேத் தெரியுண்டா லூசு!”

சொல்லிவிட்டு வெட்கப் பட்டாய் நீ!
தோற்கவில்லை நான்!

“காதலுக்குப் பரிசெல்லாம் இல்லையா?”

“என்ன வேணும்?”

“ஒரு முத்தம்”

சிரித்துக் கொண்டே என் உள்ளங்கை எடுக்கிறாய்…

“நீ
உதட்டில் கொடுப்பது
மட்டும் தானடி முத்தம்…
மற்றதெல்லாம் வெறும் சத்தம்!”

சொல்லிவிட்டு, புன்னகையோடு நான் பார்க்க ,
“நீ ரொம்பப் பேசற.. உனக்குக் கையிலக் கூடக் கிடையாது.. இந்தா இப்படியே வாங்கிக்க” என்று சொல்லி

“உன் உள்ளங்கையில் முத்தமிட்டு
உதடு குவித்து ஊதி விட்டாய்…
காற்றிலெல்லாம் கலந்துபோனது,
உன் காதல் வாசம்!”

“என்னிடம் காதல் வாங்கினால்
முத்தம் இலவசம்” என்றாய்…
“என்னிடம் காதல் வாங்கினால்
மொத்தமாய் நானே இலவசம்” என்றேன்…

தனக்கொரு க(வி)தை
இலவசமாய்க் கிடைத்த மகிழ்ச்சியில்
நம்மையேப் பார்த்துக் கொண்டிருந்தது…
நம் காதல்!


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

_______________________________________
*கலந்தாய்வு – counseling
**சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

காதல் ரயில்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாம் தொடாமல் தான்
பேசுகிறோம்…ஆனால்,
காற்றில் கைகோர்த்து
விளையாடுகின்றன…
நாம் பேசிய வார்த்தைகள்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காதலில் கட்டிப் போடும் என்னைக்
கண்களாலேயேக் கட்டிப் போடுகிறாய்…
இதுதான் “கண்கட்டி வித்தை” என்பதா??

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முதல் பார்வையில் நீ அழகு…
மறு பார்வையில் பேரழகு...
யாரிடம் பெற்றாயோ,
இரு பார்வைகளுக்கிடையே
மேலும் அழகாகும் வரத்தை!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னைக் கவிதை என்றேன்!
ஏன் காதல் கவிதையென்று
சொல்லவில்லையெனக்
கோபித்துக்கொண்டால்
நான் என்ன செய்வது?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யாருமற்றத் தனிமையில்
என்னோடுக் குடும்பம் நடத்துகிறது…
குடும்பத்தோடு இருக்கையில்
என்னைத் தனிமைப் படுத்துகிறது…
உன் நினைவு!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு தண்டவாளமாய் நீ!
மறு தண்டவாளமாய் நான்!
நமக்கேத் தெரியாமல்
நம்மீது பயணிக்கிறது
காதல் ரயில்!!

( பின்குறிப்பு :
இன்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, அமராவதி ஆத்தங்கரை! )

Friday, November 10, 2006

கொடுமைக் காரி நீ!

உனக்கான முதல் கவிதை
எழுதப்படவில்லை...
அது உனக்கே சூட்டப்பட்டது!

***************************************

என் கவிதைகளின் கரு நீ!
உன் கனவுகளின் உரு நான்!

***************************************

நம் கண்களின் சந்திப்பு
காதலை சொல்லும்…
நம் கனவுகளின் சந்திப்பு?

***************************************

நான் எழுதுகையில் உருவத்தையும்
நீ வாசிக்கையில் உயிரையும்
பெறுகின்றன, என் கவிதைகள்!

***************************************

இது என்ன வகை பண்டமாற்றம்?
மனதைக் கொடுத்து விட்டு
மனதையே எடுத்துப் போகிறாய்…

***************************************

எத்தனைக் கவிதை எழுதினாலும்
உன் இதயத்தை என்னால்
திருட முடியவில்லை..
நீயோ ஒற்றைப் புன்னகையில்
என்னைக் கைது செய்து போகிறாய்!
திருடும் முன்னேக் கைது செய்யும்
கொடுமைக்காரி நீ!

Wednesday, September 13, 2006

ஒரு காதல் பயணம் - 6

முதல் பாகத்திலிருந்து வாசிக்க இடுகையின் தலைப்பின் மீது சொடுக்கவும்.
நேரம் இல்லாதவர்கள் இந்த பாகத்தை மட்டும் கூட வாசிக்கலாம்! தவறொன்றுமில்லை :)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ர்வலம் வரும் சாமியைப் பார்க்கக்
காணிக்கையோடுக் காத்திருப்பதைப் போல,
என் தேவதைக்காகக் காத்திருக்கிறேன்,
கையில் என் காதலோடு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குடத்தை எடுத்துக் கொண்டு அந்தக் குடிநீர்க் குழாய்க்கு நீ வரும்போது,
என்னோடு சேர்ந்து வானவில்லும் காத்திருக்கிறது உன்னைப் பார்ப்பதற்காக.

நீ வருகிறாய்.
என்னைப் பார்க்கிறாய்.
நான் வானவில்லைப் பார்க்கிறேன்.
நீயும் வானவில்லைப் பார்க்கிறாய்.

“இன்னைக்கு வானவில்ல எல்லாக் கலரும் முழுசாத் தெரியறது ரொம்ப அழகா இருக்கில்ல?” என்கிறாய்.
“உனக்கு வானவில் ஏன் வருதுன்னுத் தெரியுமா?” என ஆரம்பிக்கிறேன் நான்.
நான் ஏதோப் புலம்பப் போகிறேன் எனத் தெரிந்துகொண்டு “அதெல்லாம் நாங்க பள்ளிக்கூடத்திலேயேப் படிச்சுட்டோமாக்கும்,
நீங்க ஒன்னும் சொல்லித் தரத்தேவையில்ல” எனப் பாசாங்கு செய்கிறாய்.
நான் அமைதியாகிறேன்.

குடத்தைக் குழாய்க்கு அடியில் வைத்துவிட்டு, காரணத்தோடு கொஞ்சமேக் கொஞ்சமாக நீர் விழுமாறு குழாயைத் திருப்பிவிடுகிறாய்.
குழாயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீர் கசிந்து உன் குடத்தில் விழுகிறது,
என்னில் இருந்து உன் இதயத்துக்குக் காதல் கசிவதைப் போல.

“வானவில்லப் பத்திப் பள்ளிக்கூடத்தில் சொன்னதெல்லாம் சுத்தப் பொய்.
காதல் சொல்லும் உண்மையானக் காரணம் என்னனு உனக்குத் தெரியுமா?
வானம் தன்னிடம் உள்ள நிறங்களையெல்லாம் கையில் வைத்துக் கொண்டு,
நீ எந்த நிறத்தில் இருக்கிறாய் எனக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது.
– அதைத்தான் நீயும் இந்த உலகமும் வானவில் என்று வருணித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என நான் உண்மைக் காரணம் சொல்கிறேன்.
நாணத்தில் உன் பொன்னிறம் – செந்நிறமாகிறது.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை பெய்யும் பாரேன்!”
“எப்படி சொல்றீங்க?”
“நீ எந்த நிறம் எனக் கண்டுபிடிக்க முடியாமல் தோற்றுப் போன வானம், அழாமலா இருக்கும்?”
வெட்கத்திலும் சிரிப்பு வருகிறது உனக்கு.

“இன்னொருக் குடத்துக்கு மறுபடியும் வருவாயா?” - எனது ஏக்கம் எனக்கு.
“ஏற்கனவே ரெண்டு குடம் எடுத்துட்டுப் போயிட்டேன், குளிக்க மூனு குடம் போதும் எனக்கு”
“அடிப்பாவி! குடிப்பதற்கு தான அரசாங்கம் காவிரியிலிருந்து குழாய் மூலமா நீர் வழங்குது, நீ குளிக்க எடுத்துட்டுப் போற?”
“என்னப் பண்றது? சின்ன வயசுல காவிரி ஆத்துலப் போயிதான் குளிப்போம்… காவிரித் தண்ணியிலக் குளிச்சேப் பழகிப் போயிடுச்சு”

“ஓ காவிரித் தண்ணியிலக் குளிச்சுதான் இவ்வளவு அழகா இருக்கியா?”
“ஏன் நீயுந்தான் காவிரித்தண்ணியிலக் குளிச்சுப் பாரேன் – அப்புறம் நீயும் என்ன மாதிரிஅழகாயிடுவ”
“நானும் உன்ன மாதிரி அழகாகனும்னா காவிரித் தண்ணியிலக் குளிச்சா முடியாது – நீ குளிச்சத் தண்ணியில குளிச்சாதான் உண்டு”
“அடப் பாவமே! காதலிச்சா புத்திப் பேதலிச்சுடுமா என்ன? அழுக்குத் தண்ணியிலப் போயிக் குளிக்கிறேங்கற?”

“அடிப் பாவி!உன்னக் குளிப்பாட்டிட்டு உன்னோட அழகையெல்லாம் அள்ளிட்டுப் போறத் தண்ணியப் போய்,
அழுக்குத் தண்ணினு சொல்றியே? அது அழகுத் தண்ணிடீ”
நான் குடத்தில் நிறையும் தண்ணீரைப் பார்த்து “கொடுத்து வச்சத் தண்ணி” என முணுமுணுக்கிறேன்.
குடம் நிரம்பி வழிகிறது. நீ குழாயைத் திருகி மூடுகிறாய்.

“என்ன சொன்ன?”
“ஒரு நிமிஷம் உன்னோடக் குடத்தில காது வச்சிக் கேளேன் – ஒரு சத்தம் கேட்கும்” என்கிறேன் நான்.
நீயும் அப்படியே செய்து விட்டு “ஆமா ஏதோ ஒரு சத்தம் கேட்குது…அது என்ன சத்தம்?”
“இன்னைக்கு உன்னக் குளிப்பாட்டப் போற பாக்கியம் கிடைச்ச சந்தோஷத்துல ,
அந்தத் தண்ணி ஆரவாரம் பண்ணிட்டு இருக்கு!” என்கிறேன் நான்.

“அப்ப அந்தக் குழாய்க்குள்ள தேங்கி இருக்கத் தண்ணி யென்ன அழுதுகிட்டா இருக்கும்?” என நக்கலாகக் கேட்கிறாய்.
“நீ வேணா அந்த குழாய்ல காது வச்சி கேட்டு சொல்லு – அழுகை சத்தம் வருதா இல்லையான்னு”
குழாயில் காதுவைத்து விட்டு ஆச்சரியமாக சொன்னாய் “ அட ஆமா! அதுல அழுகை சத்தம் கேட்குது, எப்படிடா?”

“அடச்சே, இவங்க தொல்லை தாங்கலப்பா” என அலுத்துக் கொண்டன குடமும், குழாயும்.

“இதுக்கே ஆச்சரியப்படுறியே! உன்ன விட ஒரு அழகி இருக்கா, பாக்குறியா?” உன்னை சீண்டுகிறேன் நான்.
“எங்க?”
“அந்தக் குடத்துக்குள்ள எட்டிப் பாரேன்”
“ம்ஹும் எத்தனப் படத்திலப் பாத்திருக்கோம்- உள்ள என்ன, என் முகமேத் தெரியப் போகுது அதான?” என சொல்லிவிட்டு - குடத்துக்குள் எட்டிப் பார்க்கிறாய்.

அதில் உன் முகம் மட்டும் தெரியவில்லை. உன் தலைக்கு கிரீடத்தைப் போல வானவில்லும் தெரிகிறது.
உனக்கே மேலும் அழகாய்த் தெரிகிறாய் நீ.

“சரி, சரி இன்னைக்கு இது போதும், இந்தக் குடத்தத்தூக்கி என் இடுப்புல வை”
என்கிறாய் வெட்கப்படாமல் உன் இடுப்பைக் காட்டிக் கொண்டு.
“இடுப்பா? அது எங்க இருக்கு உங்கிட்ட?” எனப் பேச்சை இன்னும் கொஞ்ச நேரம் இழுக்க முடியுமா எனப் பார்க்கிறேன்.
“அய்யோ! நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகனும், குடத்தத் தூக்கிக் கொடுக்கப் போறியா? இல்லையா?” எனக் கெஞ்சுகிறாய் நீ.
“எனக்கு பயமாயிருக்குப்பா! இவ்வளவு பெரியக் குடத்த உன் சின்ன இடுப்புத் தாங்காது, நான் மாட்டேன்” என மறுக்கிறேன்.

“எங்க இடுப்பெல்லாம் ஸ்ட்ராங்காதான் இருக்கு! வேணும்னா என் இடுப்புல ஏறி உட்காரு,
உங்க வீடு வரைக்கும் தூக்கிட்டுப் போயி விடறேன்” என நீ சொல்ல,
உன் இடுப்பில் உட்கார்ந்து கொண்டு ஊர்வலம் போகும் அந்தக் காட்சியிலேயே நான் லயித்திருக்க,
நீயேக் குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டுக் கிளம்பி விட்டாய்.

உன் இடுப்பில் உட்கார்ந்து சவாரிப் போகும் உன் குடத்தைப் பார்த்துப் புலம்புகின்றன,
குழாயடியில் இருக்கும் மற்றக் குடங்களெல்லாம் –
“அடுத்தப் பிறவியிலாவது உன்னுடையக் குடமாய்ப் பிறக்க வேண்டும்” என்று.

( காதல் பயணம் தொடரும்... )
அடுத்தப் பகுதி

Thursday, August 31, 2006

உன் வெட்கத்துக்கு வெட்கமில்லையா? [ 50 வது பதிவு :) ]

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன் முக்கால் வாசி அழகு
ஆடைக்குப் பின்னே மறைந்து கிடக்கிறது.
மீதியும் இப்படி வெட்கத்துக்குப்
பின்னால் ஒளிந்து கொண்டால்
நான் என்ன செய்வது?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ ராட்சசி என்றேன் – சிரித்தாய்.
நீ கோபக்காரி என்றேன் – சிரித்தாய்.
நீ அழகி என்றேன் – வெட்கப்பட்டாய்.
உண்மையைச் சொன்னால்தான்
வெட்கம் வருமோ?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னைப் பார்த்ததும்,
தலை குனிந்து, மெல்ல சிரித்து,
ஓடி ஒளிந்து கொள்கிறது என் காதல்!
அதுவும் அழகாய்த்தான் வெட்கப்படுகிறது…
உன்னைப்போல!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எதேச்சையாய்
உன் காதில் என் உதடு படும்போது
உன் கன்னத்தில் பூக்குமே ஒரு வெட்கப்பூ…
அப்போது தானடி புரிகிறது
“எதுவாய் இருந்தாலும் ரகசியமாய் சொல்”
என நீ சொல்வதின் ரகசியம்!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன் அண்ணனிடம்
என்னை அறிமுகப் படுத்துகையில்,
என் பெயரைச் சொல்லும்போது
கொஞ்சமாய் வெட்கப்பட்டாயே,
அதுவரை எனக்குத் தெரியாதடி
நீயும் என்னைக் காதலிப்பது!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாம் தனிமையில் இருக்கும்போது
இப்படி இடையில் வந்தமர்கிறதே…
உன் வெட்கத்துக்கு வெட்கமே இல்லையா?

Tuesday, August 22, 2006

கொலுசே...கொலுசே... - 3

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசே... கொலுசே... - 1

கொலுசே... கொலுசே... - 2

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வாசலில் பாண்டியாடும்போது கொலுசின்
திருகாணி தொலைந்ததால் அழுதுவிட்டாய் நீ!
தேடித் தேடித் தெருவையே உழுதுவிட்டேன் நான்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெள்ளிக்கொலுசுக்கும், தங்கக்கொலுசுக்கும்,
என்ன வித்தியாசம்? என்றாய்.
உன் கலகல சிரிப்புக்கும், அமைதியானப் புன்னகைக்கும்,
என்ன வித்தியாசம்? என்றேன்!
அமைதியாகப் புன்னகைத்து விட்டுப் போனாய்!
நீ தங்கக் கொலுசுக்கு மாறவிருப்பதை சொல்லாமல் சொல்லி…

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் பழையக் கொலுசு உனக்கெதற்கு? என்கிறாய்.
நான் கலைப் பொருட்கள் சேகரிப்பது உனக்குத் தெரியாதா?
‘தேவதை அணிந்த கொலுசு’ என்று பத்திரப் படுத்தத்தான்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ ஜீன்ஸ் அணியும்போது கொலுசைக் கழற்றி வைத்துவிடுவாயோ?
உன் புடவையிடம் புலம்பிக் கொண்டிருக்கிறது உன் கொலுசு!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ நடந்து வரும்போது உன் கொலுசின் இசையைக் கேட்க
என் இதயத்தின் ‘லப் டப்’ ஓசை இடையூறாய் இருக்கிறதாம்…
துடிப்பதை நிறுத்த சொல்லி சண்டையிடுகிறது என் செவி!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சத்தம் போட்டபடி உன் காலடியில் துள்ளுகிறது உன் கொலுசு!
சத்தமில்லாமல் என் மனசடியில் கொல்லுகிறது என் காதல்!

Monday, August 21, 2006

கொலுசே...கொலுசே... - 2

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசு அணியாத உன் கால்…
கவிதை சூடாத காதல் போல!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஊடல் நேரங்களில்
என்னிடம் பேசுவதைத் தடுக்கும் உன் கோபம்.
ஆனாலும் கொலுசொலி மூலமாகத் தூது விடும் உன் காதல்!
கொலுசைக் கண்டு பிடித்தவளு/னுக்குக் கோவில் தான் கட்ட வேண்டும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பள்ளி விடுமுறையில்
எந்த இசைப்பயிற்சிக்கு போகலாம்?
என்று கேட்கும் என் தங்கையிடம்,
உன்னைப்போல கொலுசில்
இசைக்கக் கற்றுக்கொள்
என்று எப்படி சொல்வது?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தெத்துப்பல் தெரிய சிரிக்கிறாய் நீ!
முத்துக்கள் அதிர சிரிக்கிறது உன் கொலுசு!
என்னைக்கொல்ல எதற்கிந்த இருமுனைத் தாக்குதல்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெள்ளிக்கொலுசு கறுத்துப் போகுமாம்.
உன் கொலுசு பொன்னிறமாகத்தான் மாறும்!
அணிந்திருக்கும் கால் அப்படி!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குளிக்கும்போது கொலுசைக் கழற்றிவைத்து விட்டுக் குளி!
நீ குளித்த நீர் பட்டு உன்னைவிட அழகாகிவிடப் போகிறது உன் கொலுசு!

Thursday, August 17, 2006

கொலுசே...கொலுசே... - 1

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திருவிழாவின் அத்தனைக் கொலுசு சத்தத்திலும்
எனக்கு மட்டும் தனியாகக் கேட்கும்
உன் கொலுசின் இசை!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெள்ளிக்கிழமை இரவானால் எங்கள் வீட்டுக்கு வருவாய்!
உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
எனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கல்லூரியின் கடைசி நாளில்,
“நீ பேசுவதைக் கேட்காமல் இனி எப்படி இருப்பேன்” என்றேன்.
உன் கொலுசைக் கழற்றிக் கொடுத்து விட்டுப்போனாய் நீ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மொட்டை மாடியில் ப(ந)டித்துக்கொண்டிருப்பேன்.
மெதுவாய்ப் படியேறி வரும் உன் கொலுசு சத்தம்
என் மனசோ சலங்கை கட்டியாடும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசின் திருகாணிப் பூட்டிவிடுகையில்
தெரியாமல்(!) உன் காலுக்கு முத்தமிடும் என் விரல்.
தெரிந்துகொண்டு சத்தமிடும் உன் கொலுசு!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசை உங்கள் வீட்டுப் பூனையின் கழுத்தில் கட்டி விட்டு
அதன் சேட்டையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பாய்.
சத்தம்போட்டு அழுது கொண்டிருக்கும் உன் கொலுசு.

கொலுசே...கொலுசே... - 2

Monday, August 14, 2006

இதயத்தின் எடை 50300 கிராம்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னால் தானடி நேர்முகத்தேர்வில்
நான் தோற்றுப் போனேன்!
அவன் உலக அழகி பெயர் கேட்டான்,
நான் உன் பெயரை சொல்லித் தொலைத்தேன்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மௌனத்தோடு மட்டுமேப்
பேசிக்கொண்டிருந்த என்னை
மரத்தோடு கூடப் பேச வைத்தவள் நீ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புத்தகத்தில்,கடிதத்தில்,
மின்மடலில் தான்
கவிதைகள் வரும்!
இப்படி சுடிதாரில் கூட
வருமா என்ன?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் எழுதியனுப்பியக்
கவிதையெல்லாம் அழகு என்றாய்!
அழகி, உன்னைப் பற்றி
எழுதியவை பின் எப்படியிருக்குமாம்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நிலா, பூமியைச் சுற்றுகிறதா?
அடிப்பாவி, பூமியில் இருக்கும் உன்னைத் தானே
அது ஓயாமல் சுற்றுகிறது!
என்னைப் போல..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொதுவாய்
இதயத்தின் எடை
300 கிராமாம்.
என்னுடையது
ஒரு 50000 கிராம்
அதிகமாக இருக்கும்!

Thursday, August 10, 2006

அதெப்படி உன்னால் மட்டும்?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் ஈர விழிப் பார்வை
உன்னை அசைப்பது கூட இல்லை!
உன் ஓர விழிப் பார்வையோ
என்னை ஆட்டி வைக்கிறது!
அப்படிப் பார்ப்பதற்கு எனக்கும் சொல்லிக்கொடேன்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அதெப்படி உன்னால் மட்டும்
ஒரே சிரிப்பால்
என்னைக் கொல்லவும் முடிகிறது,
என் காதலை வளர்க்கவும் முடிகிறது?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Tuesday, August 08, 2006

என்னப் பார்வையடி அது?


உன்னைச் சந்தித்தால் பேசுவதற்கு
லட்சம் வார்த்தைகளைக்

கோர்த்து வைத்திருந்தேன்!
நீ பார்த்த ஒற்றைப் பார்வையில்
ஒவ்வொன்றாய் நழுவி

எஞ்சியிருந்த ஒரே வார்த்தை –“மௌனம்”
என்னப் பார்வையடி அது?


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, August 01, 2006

என் காதல் எந்த நிறம்?

நம் இருசாதிக் குடும்பத்துக்கும் இடையே
ஒரு சமாதானக் கொடியாய்ப் பறக்கும் என்று நினைத்திருந்தேனே!
வெள்ளை நிறத்தில் இருந்ததோ என் காதல்?

உன்னிடம் சொல்லிவிடத் துடித்த போதெல்லாம்
ஓடி ஒடி ஒளிந்து கொண்டதே!
அப்படி வெட்கப் பட்டு வெட்கப்பட்டு சிவந்து கிடந்ததோ என் காதல்?

எப்போதும் உன்னுடைய நினைவுகளை மட்டுமேப்
பசுமையாய் சுமந்து திரிந்ததே!
ஒரு வேளை பச்சை நிறமாய் இருந்ததோ என் காதல்?

உன் காதல் எவ்வளவு பெரியது என்று கேட்டவர்களிடமெல்லாம்
வானைப் போலப் பரந்தது என்பேனே!
நீல நிறமாயிருந்ததோ என் காதல்?

உன்னைப் பார்த்துப் பிறந்ததுதானே என் காதலும்?
ஒருவேளை உன்னைப் போல அதுவும் பொன்னிறமோ?

உன்னிடம் என் காதலைச் சொல்லும் வரை
அது எந்த நிறமென எனக்கும் சந்தேகம்தான்…

ஆனால் உன்னிடம் சொல்லியபின்தான்
நீ மறுத்துவிட்ட துக்கத்தை சுமந்து
எப்போதும் கருப்பாய்த் திரிகிறதடி என் காதல்!
என்னைப் போல…


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, July 31, 2006

என்னுடையக் குழந்தை!

அந்த ஆண்டு மழைக்காலத்தின் ஒரு மாலைவேளையில்,
மலைப் பாதையொன்றில் நான் போய்க் கொண்டிருக்கிறேன்.

விழிகளை மூடி மழையை செவிக்குள் சேமித்தவாறு செல்கிறேன்.
மழையையும் மீறி மனசைத் தொடுகிறது ஒரு மழலைக் குரல்.

பிஞ்சுக் கை ஒன்று மெல்ல என் பாதம் தொடுகிறது.
குனிந்து பார்த்தால் காலடியில் அழகானதொரு குழந்தை.

தூக்கலாமா என நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே,
என் கால்களைப் பற்றி என்னை நோக்கிக் கை நீட்டுகிறது.

மூளை யோசிப்பதற்கு முன்னே மனதைத் தூண்டி,
வசீகரிப்பதில் குழந்தைக்கு நிகர் குழந்தைதான்!

குழந்தைக்கு என்னைப் பிடித்துப் போனதோ…
எனக்குக் குழந்தையைப் பிடித்ததோத் தெரியவில்லை.
ஆனால் அன்று முதல் நாங்கள் ஒன்றாகவேத் திரிகிறோம்.

மொழியுமில்லாத மௌனமுமில்லாத அதன் மழலைக் குரல் எதேதோ சொல்கிறது!
அதன் குறும்பும் சிரிப்பும் தவிப்பும் என்னைக் கொல்லாமல் கொல்கிறது!

என் கவிதைகளைத் தின்று நன்றாய் வளர்கிறது குழந்தை!
வளர வளர அதன் சுமை என்னை முழுதாய் அழுத்துகிறது!

அன்றென் பாதையில் குழந்தையைத் தவழ விட்டுப் போனவள் யாரோ?
குழந்தையைக் கொஞ்சியபடி அவளைத் தேடியலைகிறேன் நான்...

நம்
முதல் குழந்தைக்கு
என்னப் பெயர்
சூட்டலாமெனக் கேட்கிறாய்!
அடிப்பாவி!
நமக்கு(ள்) முதலில் பிறந்தது
காதல் குழந்தைதானே?


( சொல்ல மறந்து விட்டேனே!
உருவமில்லாத அந்தக் குழந்தைக்கு நான் வைத்த பெயர் – காதல்! )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ!

Friday, July 28, 2006

என்றேனும் ஒருநாள்...

ஒவ்வொரு நாள்
காலையிலும்
உனக்கு யார்
வணக்கம் சொல்வதென
சண்டை
ஆரம்பித்து விடுகிறது!

உனக்காக
நான் எழுதி,
சேமித்து வைத்திருக்கும்
என் கவிதைகளுக்கிடையே!

சண்டையிடும்
கவிதைகளுக்குள்
உன்னைப்போல
எளிமையும், அழகுமான
ஒன்றை எடுத்து உனக்கு
அனுப்பி வைக்கிறேன் தினமும்!

இன்று காலையும் இப்படித்தான்
அடம்பிடித்த அத்தனையையும் ஒதுக்கி விட்டு
இந்தக் கவிதையைத் தேர்ந்தெடுத்தேன் உனக்கனுப்ப!


நம்
மகிழ்ச்சியையும்
துயரத்தையும்
பகிர்ந்து கொள்ளலாம்
என்கிறாய்!
வேண்டாமடி!
என் மகிழ்ச்சியையும்
உன் துயரத்தையும்
பரிமாறிக் கொள்வோம்!


ஆனால்,
ஏனோ அனுப்பப்படாமல்
என் மின்மடலிலேயேத்
தேங்கிக்கிடக்கிறது…
உன்னிடம் சொல்லப்படாமல்
மனதுக்குள் தேங்கிக்கிடக்கும்
என் காதலைப் போல…

கவிதைகளிடம் இருந்து என்னைக் காப்பாற்று!
அல்லது காதலோடு என் கைப் பற்று!

இரண்டில் ஒன்று செய்!

இன்றே அல்ல!

என்றேனும் ஒருநாள்…

ஆனால் அந்த ஒன்று…
இரண்டாவதாகவே இருக்கட்டும்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Thursday, July 27, 2006

ஒரு காதல் பயணம் - 5

( முன்குறிப்பு : இந்தப் பதிவில் உள்ளப் பெயர்கள் அனைத்தும் கற்பனையே! )

நீ வெட்டும் போதெல்லாம்,
உன்னை விட்டுப் பிரிகிற சோகத்தில்
உன் நகம் அழுகிறதே,
உனக்கது கேட்பதில்லையா?


அடுத்த நாள், உன் குடும்பத்துக்கும், என் குடும்பத்துக்கும் பொதுவான நண்பர் ஒருவர் வீட்டு நிகழ்ச்சியில் எதிர்பார்த்தே சந்திக்கிறோம்.
பச்சைப் பட்டு சுடிதாரில், எல்லோருக்கும் வரம் கொடுக்கும் தேவதையாக உலா வருகிறாய்.
என்னைப் பார்த்ததும், யாரும் உன்னைப் பார்க்கிறார்களா? என சுற்றியும் பார்க்கிறாய்.

பின் மெல்ல அருகில் வந்து “இந்த ட்ரெஸ்ல நான் எப்படி இருக்கேன்?” எனக் கேட்கிறாய்.
“அப்படியே, மதுரை மீனாட்சி அம்மன் மாதிரியே இருக்க,
என்ன தலைல கிளிக்குப் பதிலா ரோஜா இருக்கு! அவ்வளவுதான்” என்கிறேன்.
“ஆஹா…எந்த ஊர்ல மீனாட்சி அம்மன் சுடிதார் போடுதாம்?” சிரித்துக் கொண்டே கேட்கிறாய்.
நான், “நம்மூர்ல மட்டும் தானாம்…. எல்லாரும் பேசிக்கிறாங்க” என்று சிரிக்காமல் சொல்கிறேன்.

“ம்…ஐஸ் வைத்தது போதும்”
“ஏன் உனக்கு ஐஸ் வைத்தால் என்னாகும்?”
“எனக்கு தான் ஜலதோஷம் பிடிக்கும்!”
“அடப் பைத்தியக்காரி! உன் குளிர்ச்சி தாங்காமல் ஐஸுக்கு தான் ஜலதோஷம் பிடிக்கும்!”
“ஹச்” எனத் தும்மி விட்டு சிரிக்கிறாய்.

“எனக்கேத் தெரியாமல் உனக்கு நான் ஏதாவது சொக்குப் பொடி போட்டுட்டேனா?” என சந்தேகமாய்க் கேட்கிறாய்.
“சொக்குப் பொடியெல்லாம் சாதாரணப் பெண்களின் வசிய மருந்து!
உன்னை மாதிரி அம்மன்கள் எல்லாம் அப்பப்போ வந்து இப்படி தரிசனம் தந்தாலே போதும்!
நாங்களாகவே சொக்கிப் போயிடுவோம்” என சொக்குகிறேன் நான்.

“’நாங்களாகவே’ன்னா வேற எந்த அம்மன்கிட்ட வேற யாராவது சொக்கிப் போயிருக்காங்களா என்ன?”
“அந்த மதுரை மீனாட்சிகிட்ட சொக்கிப் போனதுனாலதான் அழகருக்கே ‘சொக்கன்’ன்னு ஒரு பேரு வச்சாங்க?”
“ச்சூ… சாமிய அப்படியெல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது!”
“சாமியேக் காதலர்களுக்கு மட்டும் அதில் விதிவிலக்குக் கொடுத்திருப்பது உனக்குத் தெரியுமா?”

“உங்கிட்டப் பதில் பேச முடியாதுப்பா! பாரு, நீ பேசறதக் கேட்டுட்டு
இருந்துட்டு நான் கேட்க வந்ததையே மறந்துட்டேன்!”
“நீ என்னக் கேட்கப் போற?”
“இங்க வேணாம், கொஞ்சம் என் பின்னாடி வா”, என்று சொல்லி விட்டு
அந்த மொட்டை மாடிக்கு என்னை இழுத்துச் செல்கிறாய்.
சாய்ந்து வளர்ந்த அந்த தென்னை மர நிழலில், சுவர்த் திட்டின் மீது அமருகிறோம்.

“நேத்து எங்கிட்ட எனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்னு நீ கேட்டப்ப நான் எல்லாமே சொன்னேன் இல்ல!
அது மாதிரி நான் இப்போ கேட்கப் போற கேள்விக்கு நீயும் கண்டிப்பா பதில் சொல்லனும்!” பெரிதாய் ஒரு பீடிகை போட்டு விட்டுத் தொடர்கிறாய், “ எல்லாருக்குமே தனக்கு வரப்போற மனைவி/கணவன் கிட்ட சில எதிர் பார்ப்புகள் இருக்கும் தான?, நீ எதிர்பார்த்த மாதிரி நான் இருக்கேனான்னு எனக்குத் தெரியனும்!”

“இவ்வளவு தானா! நான் என்னமோன்னு நெனச்சிட்டேன்.
நான் எந்த விஷயத்துலேயும் பெரிசா எதையும் எதிர்பார்க்கிறதில்ல…”
நான் சொல்லி முடிப்பதற்குள், கோபப்படுகிறாய்,
“ இல்ல நீ சமாளிக்கப் பார்க்கிற, ப்ளீஸ் எனக்குக் கஷ்டமா இருக்கு, சொல்லுப்பா” உன் குரல் மாறுகிறது.

“நான் உண்மையத்தான் சொல்றேன்! எல்லாரும் வரப்போறவ எப்படி இருக்கனும்னு கனவு கண்ட வயசுல,
வரப்போறவகிட்ட நான் எப்படி இருக்கனும்னு தான் என்னால யோசிக்க முடிஞ்சது.
அதிகபட்சமா நான் எதிர்பார்த்தது ரெண்டே ரெண்டு விஷயம்தான்!”
“என்ன?” கண்களில் ஆர்வம் தெரியக் கேட்கிறாய் நீ.

“எனக்கு ஒரு அண்ணனும், அக்காவும் இருக்காங்க. அந்தப் பாசத்த அனுபவிச்சாச்சு.
அதனால எனக்கு வரப்போற மனைவிக்கு ஒரு தம்பியும், தங்கையும் இருக்கனும்னு எதிர்பார்த்தேன்.
இப்போ எனக்கு அதுல பாதி நிறைவேறிடுச்சு!”
“பாதி இல்ல ரெண்டு மடங்கு நிறைவேறிடுச்சுனு சொல்லு,
எந்தங்கச்சி ஒருத்தியே ரெண்டு பொண்ணு, ரெண்டு பையனுக்கு சமம்…
சரி அந்த இன்னொன்னு என்ன?”

“என்னோட மாமனாருக்கும் என்னமாதிரி “சி” –யில தான் பேர் ஆரம்பிக்கனும்னு எதிர் பார்த்தேன்.
ஆனா உங்க அப்பாப் பேரு சுந்தரமாப் போச்சு!”
“எனக்கொன்னும் புரியல! தெளிவா சொல்லுங்க!”

“இல்லமா, இவ்வளவு நாளா நீ, சு.இளவரசின்னு தான் கையெழுத்துப் போட்டுட்டு இருந்திருப்ப…..
கல்யாணத்துக்கப்புறமா முதல் தடவ சி.இளவரசி னு கையெழுத்துப் போடறப்போ ,
உங்கப்பாகிட்ட இருந்து விலகி வந்த மாதிரி உனக்குத் தோணாதா?
அதனாலதான் அவர் பேரும் ஒரு சின்னசாமியாவோ, சிதம்பரமாவோ இருந்திருக்கக் கூடாதான்னு யோசிக்கிறேன்.”
கொஞ்ச நேரம் கலங்கியக் கண்களோடு என்னையேப் பார்த்திருக்கிறாய்.

பின், என் கையை எடுத்து உன் மடியில் வைத்துக் கொண்டு சொல்கிறாய்,
“ நானும் உன்ன மாதிரி தமிழ்ல கையெழுத்துப் போடுவேன்னு நெனச்சியா?
இதுவரைக்கும் S.Ilavarasi னு தான் கையெழுத்துப்போட்டேன்….இனிமேலும் S.Ilavarasi னுதானே போடப்போறேன்,
எனக்கொன்னும் வருத்தமில்ல – நீ சொன்ன மாதிரி எங்கப்பா பேர் Chinnasamy யாவோ, Chidambaram மாவோ இருதிருந்தாதான் C.Ilavarasi னு மாத்திப் போட வேண்டியிருந்திருக்கும்.” என சொல்லி விட்டு சிரிக்கிறாய்.

பிறகும் நீயேத் தொடர்கிறாய்,“ஆனா நீ சொன்னதுக்கப்புறம் எனக்கொரு ஆசை,
என் பேரும் “ம”-வுல ஆரம்பிக்கிற மாதிரி இருந்தா,
நானும் உன்னோட initial-ல்ல இருந்திருப்பேன் இல்ல?” ஏக்கமாய்க் கேட்கிறாய்.
“அதுக்கென்ன, எங்கப்பாவுக்கு எதாவது இனியன், இளங்குமரன் அப்பிடின்னு பேர மாத்திட்டாப் போச்சு”

“உனக்குக் கொழுப்புடா!” என்று சொல்லிவிட்டு எழப் பார்க்கிறாய்.
“எங்க ஓடப் பார்க்கிற!” உன் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தி,
“எங்கிட்ட மட்டும் நைஸாப் பேசி விஷயத்தத் தெரிஞ்சிக்கிட்ட இல்ல,
நீ எங்கிட்ட என்னல்லாம் எதிர்பார்த்தனு சொல்லாமயேப் போறியே!” என்கிறேன் நான்.

“ரொம்பக் கவலைப் படாத! நான் எதிர்பார்த்தது எல்லாம் நூறு மடங்காவே உங்கிட்ட இருக்கு!”
“அதுதான் என்னனு சொல்லேன்!” விடாப்பிடியாய்க் கேட்கிறேன் நான்.
“என் கையை விடு சொல்றேன்”
மெல்ல உன் கையை நீயாகவே இழுத்துக் கொள்கிறாய்.
“எனக்கு வரப்போறவன் எப்பவும் என்ன சிரிக்க வச்சிட்டே இருக்கனும்,
அப்பப்ப என்ன வெட்கப் படவைக்கனும் – இது ரெண்டும்தான் நான் எதிர்ப்பார்த்தது!”
சொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் ஓடிப் போனாய்.
ஆனால் அதை நீ சொல்லியபோது, உன் முகம் வெட்கத்தில் சிவந்ததைப் பார்த்து அந்தத் தென்னை மரத்தின் இளநீரெல்லாம்,
செவ்விளநீராய் மாறிப் போனது உனக்குத் தெரியுமா?

(காதல் பயணம் தொடரும்...)

அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, July 26, 2006

யதார்த்தமானது...காதல்!

உனக்காக நான் தவமும் இருக்கவில்லை…
எனக்காக நீ வரமும் தந்துவிடவில்லை…

நாம் ஈருடல் ஓருயிரல்ல!
நம் உடலும் இரண்டுதான்!
உயிரும் இரண்டுதான்!
உணர்வுகளும் அதைப் போலவே!

நம் நான்கு கண்களும்
ஒரேக் கனவைக் காணுவதில்லை!
உன் கண்ணில் உன் கனவுகள்..
என் கண்ணில் என் கனவுகள்..

நான்/நீ நினைப்பதை உ/எ ன்னால்
கண்டு பிடிக்கவும் முடியவில்லை!
மௌனத்தின் அர்த்தம் புரிந்து கொள்ள
நாம் ஒன்றும் ஞானிகளுமல்ல!

நம் ரசனைகளும் ஒன்றாகவே இல்லை!
எனக்குப் பிடித்தது எல்லாமே உனக்குப் பிடிக்கவில்லை!
உனக்குப் பிடித்தது எல்லாமே எனக்கும் பிடிக்கவில்லை!

நிறத்தில் மட்டுமல்ல
கருத்திலும் நாம் ஒரே மாதிரியில்லை!

என்னைப் போல நீ இல்லை!
நிஜமாய்,
என்னைப் போல நீ இல்லவே இல்லை!!

ஆனாலும் உன்னை நான் காதலிக்கிறேன்! …காதலிப்பேன்!

என்னை என் குறைகளோடு சேர்த்தே நேசிப்பவள் நீ !
அதற்காகவே உன்னை அதிகமாய்க் காதலிப்பேனடி….
அதற்காகவே உன்னை அதிகமாய்க் காதலிப்பேன் நான்!

புனிதமாக
வாழ்த்தி வணங்க
நம் காதல் ஒன்றும்
தெய்வீகமானது அல்ல!


இயல்பாக வாழ்ந்து மகிழ,
அது யதார்த்தமானது…
மிக மிக யதார்த்தமானது!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, June 27, 2006

கவிதை "ஆறு"

என்னையும் இந்த ஆறு விளையாட்டுக்கு அழைத்த நவீன் பிரகாஷ் க்கு நன்றி! நான் இரசித்த, இரசிக்கும் கதை, கவிதை, இசை, திரைப்படம், மறக்க முடியாத நிகழ்வுகள், மனிதர்கள் என்று எவ்வளவோ எழுதத் தோன்றினாலும் இப்போதைக்கு இந்த ஆறு கவிதைகளை (வாக்கியங்களை மடக்கிப் போட்டு, வியப்புக் குறியெல்லாம் போட்டிருக்கிறேன் – நம்புங்க , கவிதைதான்! ) மட்டும் எழுதி விட்டுப் போகிறேன். பின்னொரு நாளில் தனித் தனிப் பதிவுகளாய் அவற்றைப் பதித்து விட எண்ணம்.

என்னுள் நீ
மெதுவாய்த் தான்
நுழைந்தாய்.
மண்ணுள் நுழையும்
வேரைப் போல,
ஆழமாய்!

முதலில் யார் உனக்கு
வணக்கம் சொல்வதென
தினமும் காலையில் சண்டை
எனக்கும், சூரியனுக்கும்!

"என்னைத்
தொட்டுப் பேசாதே!"
என்று சொல்லிவிட்டு
நீ மட்டும்
என் உள்ளங்கையைக்
கிள்ளுகிறாயே
இது என்னடி நியாயம்?

அதிக நேரம்
கண்ணாடி முன் நிற்காதே!
நீ அதைத்தான் ரசிக்கிறாய்
என நினைத்துக்
கொள்ளப் போகிறது!

நீ வரைந்த கோலம்
அழகு என்கிறார்கள்!
நீ கோலம் வரைவது
அழகு என்கிறேன்!

நீ பிறந்த பிறகுதான்
உன் அப்பாவுக்கேப்
பெயர் வைத்தார்களா?
'அழகப்பன்' என்று!

"ஆறு" பதிய யாரையும் நான் குறிப்பிட்டு அழைக்கவில்லை. இங்கு பின்னூட்டமிடுபவர்கள் யாரேனும் இன்னும் "ஆறு" பதிய வில்லையென்றால் தொடரலாம்.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, June 26, 2006

கண்களால் காதல் செய்!

நான் :

உன்
விழி பேசியதை
மொழி பெயர்த்தால்
கவிதை என்கிறார்கள்.


இதயத்தில் நிறைந்து
விழி வழியே
வழிகிறது
நம் காதல்!


பார்த்து பார்த்து
செய்த கண்கள் உனக்கு!
அதைப் பார்த்துக்
கொண்டிருப்பதற்காகவே
செய்த கண்கள் எனக்கு!


தினமும்
உன் வருகைக்காகக்
காத்திருக்கின்றன..
பகலில் என் கண்களும்..
இரவில் என் கனவும்..


உனக்குத் தெரியுமா?
நம் கண்களும் கூடக்
காதலிக்கின்றன!
தொட்டுக் கொள்ளாமல்
அவை ஆயிரம்
க(வி)தைகளைப் பேசுவதைப் பார்!
நம்மைப் போல…


திறந்தே இருப்பதால்தான்
என்செவியில் உன்வார்த்தைகள்
ஒலிக்கிறதென்றால்,
இமைகள் மூடிய பின்னும்
என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…
அது எப்படி?


என் கண்களுக்கு ஏனிந்தப் பேராசை?
எல்லாக் கணமும் உன் கண்களைப்
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்!
உன் கண்கள் இமைக்கும் பொழுது மட்டுமே
என் கண்களும் இமைப்பதைப் பார்!

அவள் :

போதும்…போதும்…
கவிதைகள் கொஞ்சம்
ஓய்வெடுக்கட்டும்!
நீ கண்களால் மட்டும்
காதல் செய்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

ஒரு காதல் பயணம் - 4

காதல் பயணம் பகுதி ஒன்று இரண்டு மூன்று

உனக்குக் கல் நெஞ்சு என்று
எனக்குத் தெரியுமடி!
அதனால்தான் அதில்
காதல் சிற்பம் வடிக்க
கவிதை உளி கொண்டு
செதுக்குகிறேன் தினமும்!


ஒரு மாலைப்பொழுதில் நீ வரச் சொன்ன அந்த மரத்தடியில் உனக்காகக் காத்திருக்கிறேன்.
காத்திருக்கும் நேரத்தின் அவஸ்தை எல்லாம் பரவசமாக மாறும் அந்த கணத்தில் நீ வருகிறாய்.

நாம் அமர்வதற்காக தனது வேர்களை இருக்கைகளாக்கி இருக்கிறது, அந்த மரம்.
எதிர் எதிரில் அமர்கிறோம் நாம்.
இரு கைகளாலும் அணைக்கிறது மரம்.

எப்போதுமில்லாத என் மௌனத்தில் கலவரமடைந்து, “ம்..சொல்லுங்க” என மௌனக் குளத்தில் வார்த்தைக் கல் வீசுகிறாய்.
“இன்றைக்கு சொல்லப் போவதெல்லாம் நீ தான்; கேட்டுக்கொண்டிருக்கப் போவது மட்டும்தான் நான்” என்கிறேன்.

“நான் என்ன சொல்ல வேண்டும்?” புரியாமல் கேட்கிறாய் நீ.
“உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என நீ வரிசையாய் சொல்ல வேண்டும்; எல்லாவற்றுக்கும் நான் ‘உம்’ கொட்ட வேண்டும்
– இது தான் இன்றைக்கு காதல் நமக்குக் கொடுத்திருக்கிற வீட்டுப்பாடம்” என்கிறேன்.

“எனக்காக நீங்க என்ன வேணா செய்வீங்க இல்ல?”
“முதலில் அந்த “நீங்க”-வில் இருந்து “ங்க”-வை எடுத்துட்டுக் கேள், சொல்றேன்!”
“சரி…சரி…எனக்காக நீ என்ன வேணா செய்வதான?”
“இன்னைக்கு உன்னோட வீட்டுப் பாடத்தத் தவிர மத்தது எல்லாம் செய்வேன்!”
இதை நீயும் எதிர் பார்த்திருப்பாய்; சிரித்து விட்டு ஆரம்பிக்கிறாய்.

“அம்மா மடியில் படுத்துக் கிடக்க…
அப்பா சட்டையைப் போட்டுப் பார்க்க…
தங்கையோடு சண்டை பிடிக்க…”

“ம்”

“அப்புறம்…
ஜன்னலுக்கு வெளியே மழை…கையில் சூடாகத் தேநீர்…
மழை முடிந்த மண்வாசம்…அந்த ஈரக் காற்று…
வானவில்…
இளஞ்சூடான மாலை வெயில்…
அந்தி வானம்…
பௌர்ணமி நிலா…
கூட்டமாய் நட்சத்திரம்…
புதிதாய்ப் பூத்தப் பூ…
இப்படி இயற்கை தரும் எல்லாம்…

அப்புறம்…
தோழிகளோடு மொட்டை மாடி அரட்டை…
சன்னலோர ரயில் பயணம் – கையில் கவிதைப் புத்தகம்…
அதிகாலை உறக்கம்…மெல்லிய சத்தத்தில் சுப்ரபாதம்…
வீட்டில் எப்போதும் இழையும் இளையராஜா…
குழந்தைகளின் கொஞ்சல்…
மலைப் பாதையில் நடை…
மார்கழி மாதக் கோலம்…
எங்க ஊர்த் திருவிழா…
வாய்க்கால் நீச்சல்…
அருவிக் குளியல்…
மரத்தடி ஊஞ்சல்…

இப்படிப் போய்க்கிட்டே இருக்கும்….”

வாய்ப்பாடு ஒப்பிக்கும் பள்ளிக்கூட சிறுமி போல,
மூச்சு விடாமல் சொல்லி முடிக்கிறாய்.

“ஆமாம் உனக்கு என்னப் பிடிக்கும்?”, என்னைப் பார்த்துக் கேட்கிறாய்.
“அதான் நீயே சொல்லிட்டியே!”, மெதுவாக சொல்கிறேன் நான்.

“ஓ! எனக்குப் பிடிச்சதெல்லாம் உனக்கும் பிடிக்குமா?”
“நான் அத சொல்லல…நீ என்னக் கேட்டனு திரும்பவும் கேளு!”

“உனக்கு என்னப் பிடிக்கும்னு கேட்டேன்”
“நானும் அதையேதான் சொல்றேன் – எனக்கு உன்னப் பிடிக்கும்னு”

“இப்படியேப் பேசுனா சீக்கிரமே உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்!”
“அது இன்னும் எனக்குப் பிடிக்கலன்னு நினைக்கிறியா?”

“ஐய்யோக் கடவுளே! நான் சீரியஸா கேட்கிறேன், சொல்லு உனக்கு என்னப் பிடிக்கும்?”

“எனக்கு ஒன்னே ஒன்னு தான் பிடிக்கும். என்னோடக் காதலிக்கு பிடிச்சதையெல்லாம்
அவள் வாயாலேயே சொல்ல சொல்லக் கேட்டுக் கொண்டிருக்கப் பிடிக்கும்!”

வெட்கத்தைக் கொஞ்ச நேரம் தள்ளிவைத்துவிட்டு என்னை அப்படியேக் கட்டிக் கொள்கிறாய்,
ஒரு குழந்தையைப் போல.

கரைந்து போகிறேன் நான்.
அந்த மரத்தில் இருந்து கொஞ்சம் பூக்கள் நம்மீது விழுந்ததே - அது இயல்பாய் நடந்தது தானா?

(காதல் பயணம் தொடரும்...)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, June 23, 2006

கவிதைகள் ஏமாற்றுவதில்லை

என் காதலை
உன்னிடம் சொல்ல
நான் யாரைத் தூதனுப்ப?

உன் தோழியை…
உன் மேலுள்ளப் பொறாமையில்
அவள் மறுத்து விட்டால்?

அந்த மேகத்தை…
உன்னைச் சேருமுன்னே அது
மழையாய்க் கரைந்து விட்டால்?

இந்தப் பூக்களை…
உன்னை வந்தடையுமுன்னே
அவை வாடி விட்டால்?

அதனால்தான்
என் கவிதைகளை
அனுப்பி வைக்கிறேன்!
அவை கண்டிப்பாய்
உனக்குப் புரிய வைக்கும்…
நான் உன்னைத்தான்
காதலிக்கிறேன் என்பதை!!

ஏனென்றால்
கவிதைகள் ஏமாற்றுவதில்லை!
அவை - உன்னைப் போல!!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Thursday, June 22, 2006

ஒரு காதல் பயணம் - 3

காதல் பயணம் பகுதி ஒன்று இரண்டு


நம்முடையக் காதல் பள்ளியில்
முதல் நாளே
நடந்தது
ஒரு
மனம் நடும் விழா!

அதற்கு மறுநாள், வரிசையாக பூக்கடைகள் இருக்கும் அந்தக் கோயில் தெருவுக்குள் நீயும் உன் தங்கையும் வருகிறீர்கள்.
பூ வாங்க யாரும் வந்தால் வழக்கமாக கூவிக் கூவி அழைக்கும் கடைக்காரர்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விட்டு ,
கோவிலில் இருந்த ஒரு சிலைதான் வெளியே உலா வருகிறது என வாயடைத்து இருக்கிறார்கள், என்னைப் போல.

கடையில் இருக்கும் பூக்களோ, “என்னை எடுத்துக்கோ”, “என்னை எடுத்துக்கோ” என உன்னிடம் கூப்பாடு போடுகின்றன.
மகாராணி போல எல்லாப்பூக்களையும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
பனித்துளிகள் விலகாமல், ரோஜா நிறத்தில் இருக்கும் ஒரு ரோஜாவை நீ எடுக்கிறாய்.
அது மற்றப் பூக்களையெல்லாம் திமிருடன் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒய்யாரமாய் உன் கூந்தல் ஏறி அமர்கிறது.

நீ வரும் வரை தெரு முனையில் காத்திருக்கிறோம், நானும், நம் காதலும்.
எங்களைப் பார்த்ததும் “இங்கேயும் வந்தாச்சா?” என பதட்டப்படுகிறாய்.
“எல்லாப் பக்கமும் நீக்கமற நிறைந்திருப்பது கடவுள் மட்டுமல்ல , நானும்தான்” என சொல்கிறது காதல்.
“உன்னைப் பிறகு பார்த்துக் கொள்கிறேன்” என காதலை முறைத்து விட்டு நீ என் பக்கம் திரும்புகிறாய்.

“இன்னைக்கு என்னவெல்லாம் புலம்பப் போறீங்க?” எனக் கிண்டலாகக் கேட்கிறாய்.
“புலம்பல் எல்லாம் எதுவும் இல்லை, ஒரு புகார் மனு தான் வாசிக்கனும்” என்கிறேன் நான்.
“புகாரா? நான் என்ன தப்பு பண்ணேன்?” என மெய்யாகவேப் பயப்படுகிறாய்.

“உன் மேல் புகார் சொன்னால், காதல் என்னைக் கைவிட்டுடாதா! புகார் எல்லாம் என் இதயத்தின் மீது தான்! என் இதயத்தில் குடியேறி விட்டதாக நேற்று நீ சொன்னாலும் சொன்னாய். அதிலிருந்து என் இதயத்திற்கு தலை கால் புரிய வில்லை. ஒரே மமதையுடன்தான் சுற்றுகிறது” எனப் புலம்ப ஆரம்பிக்கிறேன், நான்.

“அது செய்யும் அட்டூழியங்களை நீயேக் கேள் :
நேற்று இரவு நான் தூங்கப் போன போது இது என்ன சொல்லியது தெரியுமா?
உன் தேவதை இப்போது தூங்கிக் கொண்டு இருக்கிறாள்.அவளுக்கு கனவு வரும் நேரம் இது.
அவள் கனவில் நீ தானே இருக்க வேண்டும்! அதனால் ஓடு, ஓடு, என என்னை உன் கனவுக்குத் துரத்தியது.
உன் கனவுக்குள் நுழையும் ஆசையில் நானும் அதைச் செய்தேன்.
பிறகு ஒரு வழியாக நான் தூங்கிய போது கூட என் கனவுக்கு வந்த எல்லாரையும் காக்க வைத்து விட்டு,
உன்னை மட்டுமே உள்ளே அனுமதித்தது!
இப்படி நேற்று இரவு மட்டும் அது எத்தனை அட்டூழியங்களை செய்தது தெரியுமா?” என நான் சோக கீதம் வாசிக்கிறேன்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு இன்றைக்குப் புலம்பல் நீளும் போலிருக்கே என்று நினைத்துக் கொண்டு
“வாங்க, இங்க உட்கார்ந்து பேசுவோம்” என கோயிலின் வெளி சுற்றுத் திண்ணையில் அமர்கிறாய்.
கன்னத்தில் கை வைத்துக்கொண்டு “ ம்…அப்புறம்?” என அதன் அடுத்த அட்டூழியத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறாய்.

“குளிக்கப் போனால், தேவதை குளிக்கிறாள்! நீ இரு!” என என்னைத் தடுக்கிறது.
“சாப்பிடும்போது கூட , தேவதைக்குப் போதுமாம்! நீ எழு!” என என்னைப் பாதியிலேயே எழுப்புகிறது.
இப்படிக் கொஞ்ச நாள் முன்பு வரை என் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த என் இதயம்,
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் உன் புராணம்தான் பாடுகிறது.
நான் என்ன சொன்னாலும், தேவதை சொல்வதைத்தான் நான் கேட்பேன் என அடம்பிடிக்கிறது.
அதனால்தான் என் இதயத்தை உன்னிடம் இழுத்து வந்து விட்டேன்.
அதனிடம் நீயேக் கேள்” என முழுதாய்க் கொட்டித் தீர்த்தேன்.

இதழோரம் ஒரு குறுநகையுடன் என் இதயத்தில் உன் காது வைக்க வருகிறாய்.
“ஏய்…ஏய்…என்ன செய்ற?”
“நீங்க தான “கேட்க” சொன்னீங்க…அதான் கேட்கிறேன்”
“நான் அதுகிட்ட, என்னன்னு கேள்வி கேட்க சொன்னா…நீ அது சொல்றத காது கொடுத்துக் கேட்கப் போறியே?
கடைசியில நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டீங்கப் பாத்தீங்களா” என நான் அப்பாவியானேன்.

“இல்லங்க…மொதல்ல அது என்ன சொல்லுதுன்னுக் கேட்டுக்கலாம், அப்புறமா அத நாலு வார்த்த நறுக்குன்னு நானேக் கேட்கிறேன்”
மறுபடியும் இதயத்தில் காது வைக்கிறாய்.

என் இதயமோ, “ பொய் சொல்றான், பொய் சொல்றான், நம்பாத…எல்லாத்தையும் அவனே செஞ்சுட்டுப் பழிய எம்மேலப் போடப் பார்க்கிறான்” என உனக்கு மட்டும் கேட்கும் குரலில் சன்னமாக கிசுகிசுக்கிறது.

இதயத்தில் இருந்து காதை எடுத்த நீ, ஓரக் கண்ணில் என்னைப் பார்த்து விட்டு,
என் இதயத்தை நோக்கி, “ இதோ பார் இதயமே, நான் உன்னில் வசிக்க வந்ததற்குக் காரணமே அவர்தான்.
அவர் சொல்வதை நீ கேட்காவிட்டால் அப்புறம், உன்னை விட்டே நான் விலகி விடுவேன்”
என்று அதைக்கொஞ்சம் மிரட்டிவிட்டு, பாசாங்கு தான் என, அதைப் பார்த்துக் கண்ணடிக்கிறாய்.

“என் இதயம் முதலில் உன்னிடம் ஏதோ சொல்லியதே, என்ன சொன்னது?” என ஆர்வமாகிறேன் நான்.
“அது உங்கள் மேல் ஒரு புகார் சொல்லியது” என்கிறாய்.
“என் மேலா? என்னப் புகார் சொல்லியது?”
“ஆமாம், நான் மட்டும் தான், முதல் நாளே உங்கள் இதயத்தில் குடியேறினேன்.
ஆனால் நீங்கள் இன்னும் என் இதயத்துக்குள் நுழையவில்லை இல்லையா,
அதைத்தான் குத்திக் காட்டுகிறது” என உனது புகாரை என் இதயம் சொன்னதாக சொல்கிறாய்.
உன் நடிப்பைப் பார்த்து என் இதயம் கூட ஒரு நொடி துடிப்பை நிறுத்தியது.

“அதுதானா? நீயே மென்மையானவள். உன் இதயமோ உன்னையும் விட மென்மையானது.
அதில் வசித்துக் கொண்டு நான் என்னுடைய முரட்டுக் காதல் ஆர்ப்பாட்டங்களை எல்லாம் செய்ய முடியாது
– அதை உன் இதயமும் தாங்காது.
அதனால்தான் என் காதலை முழுவதுமாக உன் இதயத்துக்குப் பழக்கப் படுத்திவிட்டு,
‘காதல்’ குறித்துக் கொடுக்கும் ஒரு நல்ல நாளில் என் இதயப்பிரவேசம் நிகழும்” என சொல்கிறேன் நான்.

நான் பேசி முடித்தப் பின்னும் கண்ணிமைக்காமல் என்னையேப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

ஆனால் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்த உன் தங்கை,
உன்னிடம் மெதுவாக சொல்கிறாள் : “அக்கா! இந்த லூசு மாமா உனக்கு வேணாங்க்கா!”
உன் தங்கையிடம் சத்தமாக நீ சொல்கிறாய் :
“ உன்னோட லூசு அக்காவுக்கு இந்த மாமாவ விட்டா, வேற எந்த நல்ல லூசுடி கிடைப்பாங்க?”

“ஐய்யோக் கடவுளே! இந்த ரெண்டு லூசுங்க கிட்ட இருந்தும் என்னக் காப்பாத்தேன்”
எனக் கத்திக் கொண்டு கோயிலுக்குள் ஓடுகிறாள் உன் தங்கை.
அதைப் பார்த்து லூசு மாதிரி சிரித்துக் கொண்டிருந்தார் அந்தக் கடவுள்.

( காதல் பயணம் தொடரும் )


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, June 21, 2006

சுகமானப் பயணம்!

ஜன்னலுக்கு வெளியே பசுமையான வயல்வெளி
தூரத்தில் சிரித்துக் கொண்டேக் கையசைக்கும் சிறுவர்கள்
கையில் மனதுக்குப் பிடித்தக் கவிதைப் புத்தகம்
தாலாட்டும் ஓசையோடு ரயில் பயணம்


கவலை மறந்த கல்லூரிக் காலம்
கேலி கிண்டல் நிறைந்த அரட்டை
ஆனந்தத்தில் பாடியபடி ஆட்டம்
நட்போடு போன சுற்றுலாப் பேருந்து பயணம்


அழகாய் வளைந்து செல்லும் மலைப்பாதை
பார்வையின் தூரம் வரை தேயிலைத் தோட்டங்கள்
குளிரைக் கூட்டும் சாரல் மழை
நனைந்த படி போன மிதிவண்டி பயணம்


தூரத்து ஊரின் கோவில் திருவிழா
கூடிய சொந்தங்களின் பாசப்பேச்சு
தொடர்ந்து கேட்கும் வேட்டு சத்தம்
நிலவொளியில் மாட்டுவண்டி பயணம்


என் வாழ்நாளின்
சுகமானப் பயணங்கள்
இவை தாமென்று
சொல்லிக் கொண்டிருந்தேன்
முதன் முறையாய்
உன்னோடுக்
கை கோர்த்தபடி
கொஞ்ச தூரம்
நடந்து செல்லும் வரை!


அழியாக் காதலுடன்,
அருட்பெருங்கோ

Saturday, May 27, 2006

ஒரு காதல் பயணம் - 2

முன்குறிப்பு : இதில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே!
ஒரு காதல் பயணம் பகுதி - 1
எப்போதும் என் கண் பார்த்துப் பேசும் நீ,
நிலம் பார்த்துப் பேச ஆரம்பித்தக் கணத்தில்
நமக்குள் காதல் பிறந்தது!


அடுத்த நாள் வெள்ளிக்கிழமை.
தேவதையின் வரவுக்காக கோவிலுக்குள் காத்திருக்கிறேன்.
கோவில் மணி விடாது ஒலித்த ஒரு மங்கள வேளையில்
துவட்டப்படாத ஈரத்தலையோடு கோவிலுக்குள் நுழைகிறாய்.
அப்போது எங்கிருந்தோ ஒரு நூறுப் புறாக்கள் உன்னை
தரிசிப்பதற்காகவே அந்தக் கோவிலுக்கு வருகின்றன.
நீ வந்ததைப் பார்த்ததும் கோவிலும் அந்தப் புறாக்களை
தன் கோபுரத்தில் வைத்து தன்னை அலங்கரித்துக் கொள்கிறது.
வழக்கத்துக்கு மாறாக தன்னை விட்டு எல்லோரும்
உன்னையே கவனிப்பதைப் பார்த்து பொறாமை கொள்கிறார் கடவுள்.
உள்ளே நுழைந்த நீ வரிசையில் நின்று கண்ணை மூடிக் கடவுளைக் கும்பிடுகிறாய்.
நீ கண் திறந்ததும் உன் கண்ணில் நானே விழ வேண்டுமென
உனக்கெதிர் வரிசையில் நான் நிற்கிறேன்.
நீ கண் திறக்கிறாய்.
நான் உன் கண்களை நேராய்ப் பார்க்கிறேன்.
அச்சம், நடுக்கம், பதட்டம் என எல்லா உணர்ச்சிகளிடமும் ஓடிக் கடைசியில்
வெட்கத்தில் போய் தன்னை மறைத்துக்கொள்கிறது உன் முகம்.
பூசாரிக் கொடுத்த விபூதியை அப்படியேத் தூணில் கொட்டி விட்டு வெளியேறுகிறேன் நான்.
நான் கொட்டியதில் இருந்து ஒரு துளியெடுத்து உன் நெற்றியில் இட்டுக் கொள்கிறாய்.
அப்போது, நிலவு, தானேப் பொட்டு வைத்துக் கொள்வதைக்
கடவுளும் உள்ளிருந்து எட்டிப் பார்க்கிறார்.
வேண்டுதலை முடித்ததும் என்னைத் தாண்டி வேகமாகப்
போவது போல் நடித்துக் கொண்டுமெதுவாக செல்கிறாய்.
காதலில் நடிப்பது தானே சுகம்?
நானும் மெதுவாக உன்னைத் தொடர்ந்து நட(டி)க்க ஆரம்பிக்கிறேன்.
பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்து நான் பின்தொடர்வதை
உனக்கு நேரடி வர்ணனை செய்கிறாள், உன் தங்கை.
உன் பின்னால் என்னை சுற்ற வைத்துவிட்டு,
கோயில் பிரகாரத்தை நீ சுற்ற ஆரம்பிக்கிறாய்.
உனக்கு அருகில் வந்து உன் வேகத்திலேயே நானும்சுற்ற ஆரம்பிக்கிறேன், உன்னோடு.
“கோயிலுக்கு சாமி கும்பிட வந்தீங்களா” முதன்முறை உன்னிடம் பேசுவதால்,
கேட்டு(உளறி?)முடிப்பதற்குள் தடுமாறித்தான் போனேன்.
“இல்ல சினிமா பாக்க வந்தோம்” என
நீ சொல்ல நினைத்ததை உன் தங்கைசொல்கிறாள்.
உள்ளூற நகைத்தாலும் பொய்யாக அவளை அதட்டுகிறாய்.
நீ ஏதாவது பேச வேண்டும் எனக் காதலிடம்கையேந்துகிறேன்.
வேண்டியவர்களைக் காதல் என்றைக்கு கைவிட்டிருக்கிறது?
“உங்களுக்குதான் கடவுள் நம்பிக்கை இல்லன்னு கேள்விப்பட்டேனே,
அப்புறம் கோயிலுக்கு வந்திருக்கீங்க” என்று குனிந்து கொண்டே கேட்கிறாய்.
உன் தங்கையின் பேச்சைக் கேட்டு விட்டு உன் இசையைக் கேட்க இனிமையாயிருக்கிறது.
“இப்பவும் கடவுள் இருக்குன்னு நான் நம்பல…ஆனா”
“ஆனா?”“நேத்து உங்க வீட்டுக்கு வந்திட்டுப் போனதுல இருந்து
தேவதைகள் இருக்குன்னு நம்ப ஆரம்பிச்சுட்டேன்”என்ன சொல்கிறேன் என்று,
புரிந்து கொண்டு வெட்கத்தில் மேலும் அழகாகிறாய்.
“தேவதைகள் இருக்குன்னு நம்பறீங்களா? தேவதை இருக்குன்னு நம்பறீங்களா?”–
நீ தேவதையாக இருந்தாலும், பெண்தானே,
அதுதான் பெண்ணுக்கேயுரிய சந்தேகத்தோடு கேட்கிறாய்.
நீ சுற்றி வளைத்து என்னக் கேட்க வருகிறாய் எனத்தெரிந்தும்,
“தேவதைகள் இருக்குன்னு நம்பறேன்” என்று அழுத்திச் சொல்கிறேன் நான்.
மேலும், சந்தேகத்தில் மௌனமாகிறாய் நீ.
“தேவதைக்கு ஒரு குட்டி தேவதை பிறந்தால் அப்புறம் தேவதைகள்தானே?”
எனப் புரிய வைக்கிறேன் நான்.
உன் அசட்டு சந்தேகம் உண்மையிலேயே அசடாகிப் போனது.
முதல் சுற்று முடிந்தது.
வெட்கத்தை மறைத்துக் கொண்டு “நேத்துல இருந்து வேற என்னல்லாம் நம்ப ஆரம்பிச்சீங்க?” எனத் தூண்டில் போடுகிறாய்.
“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன – நீ இத நம்புறியா?”
“ஏன் நீங்க நம்பலையா?”
“நேத்து வரைக்கும் நம்பாமதான் இருந்தேன்…”
“நேத்து மட்டும் என்ன நடந்தது?”
“நம்ம திருமணம் எங்க நிச்சயிக்கப்பட்டது?”
“எங்க வீட்லதான்?”
“நீ எங்க குடியிருக்க?”
“அய்யோக் கடவுளே….நான் எங்க வீட்லதான் குடியிருக்கேன் .அதுக்கென்ன?”
நான் என்ன சொல்லப் போகிறேன் என்று தெரிந்தும், தெரியாதது போல் நடிக்கிறாய்.
“தேவதை குடியிருக்கிற இடம் சொர்க்கம் தான? அதனால தான் சொல்றேன் –
நம்ம திருமணமும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப் பட்டிருக்கு”
இரண்டாவது சுற்றும் முடிந்தது.
சில நொடிகள் வார்த்தைகள் ஓய்வெடுக்க, மௌனம் பேசிக் கொண்டிருந்தது.
“ஐய்யையோ இது தெரியாம நான் நேத்து பாதி நிச்சயத்திலேயே
வேற எடத்துக்கு குடி போயிட்டேனே” எனப் பதறுகிறாய்.
“கவலைப் படாதே…நீ எந்த இடத்தில் குடியேறினாலும் அந்த இடம் தன்னை சொர்க்கமாக மாற்றிக் கொள்ளும்” என உன்னை சமாதானப் படுத்துகிறேன்.
“இல்ல…நான் குடியேறினதே சொர்க்கத்திலதான்…” என்கிறாய்.
உனது அடுத்த வார்த்தைக்காகக் காத்திருக்கிறேன் நான்.
“நேத்து நான் உங்க இதயத்துக்குள்ள நுழைஞ்சத நீங்க கவனிக்கலையா?”
எனக் கேட்டு சிரிக்கிறாய்.
“அது சொர்க்கம் போலவா இருக்கு?”
“அது சொர்க்கம் ‘போல்’ இல்லை – அது தான் சொர்க்கம்.
நான் வரப்போறேன்னு அதற்கு முன்பே தெரிஞ்சிருக்கு.
எனக்காக உள்ள ஒரு ராஜாங்கமே அமைச்சு எனக்கு வரவேற்பு கொடுத்தது”
உனக்குள்ளும் காதல் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.
மூன்றாம் சுற்றும் முடிந்தது.
வீட்டுக்கு செல்லத் திரும்பிய உன்னிடம் “ என்ன ‘வாங்க’, ‘போங்க’னு மரியாதையா
எல்லாம் கூப்பிட வேண்டாம், பேர் சொல்லியேக் கூப்பிடலாம்” என்கிறேன்.
“சரிடா சிவா” என்று சொல்லி “களுக்” கென சிரித்துக் கொண்டு சாலையில் மறைகிறாய் நீ.
“சரியான ஜோடியைத்தான் இணைத்திருக்கிறோம்”
என நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்கிறது இயற்கை.
( காதலில் தொடர்ந்து பயணிப்போம் )
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, May 26, 2006

ஒரு காதல் பயணம் - 1

காதலை மறுத்தவர்கள், காதலால் மறுக்கப்பட்டவர்கள், ஒரு தலையாய்க் காதலித்து தறுதலையாய்ப் போனவர்கள் இப்படிக் காதலின் எல்லா வகைத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களும், காதலின் வாசனையே நுகராதவர்களும் கூட, (மறுபடியும்) காதலின் சுவாரசியத்தை அனுபவிப்பது நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடையில் தான். அவர்களுக்காக….

அலையில் காலை மட்டும் நனைத்துக் கொண்டிருந்த என்னை,
ஒரு தெய்வீகமான நேரத்தில்,
காதல்கடலில் தள்ளிவிட்டு,
கரையில் நின்று வேடிக்கை பார்க்கிறது, வாழ்க்கை.
அதில் மூழ்கி முத்தெடுத்தவுடன்,
காதலே என்னை
மறுபடியும் வாழ்க்கையிடம் துப்பி விடும்
என்ற நம்பிக்கையில் நீந்திக் கொண்டு இருக்கிறேன்.


உன்னைப் பெண் பார்க்க, என் பெற்றோரோடு
உன் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறேன் நான்.
கண்களை மூடிக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு
உள்ளறையில் ஒளிந்திருக்கிறாய் நீ.
சற்று நேரத்தில், உன் அப்பாவின் கண்ணசைவில்,
உன் அம்மாவின் கையசைவில் உனக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது.

அந்த அறையின் வாசலை மறைத்திருந்த திரையை
ஒரு கையால் விலக்கி விட்டு நீ வெளிப்படுகிறாய்.
திரையில் படமாய் இருந்த மகாலட்சுமி
உயிரோடு எழுந்து வருவதைப் போல மெல்ல வருகிறாய்.

எல்லாக் கண்களுக்கும் உனது பார்வையும், வணக்கமும் சேர்ந்து கிடைக்க
என் கண்களுக்கோ உனது வணக்கம் மட்டுமே கிடைக்கிறது.
ஏன் நேராய்ப் பார்க்க வில்லை என்று நான் என் கண்களையும்,
நீ உன் கண்களையும் திட்டிக் கொண்டிருக்கிறோம்.
வெட்கம் நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்கிறது.

சற்று நேரத்தில், புது உடையில், தட்டில் சாக்லேட்டோடு
சுற்றி வரும் பிறந்த நாள் குழந்தையைப் போல ,
காபி டம்ளர்களோடு நீ வலம் வருகிறாய்.
குனிந்து தட்டையேப் பார்த்துக் கொண்டு அதை நீ என்னிடம் நீட்டுகையில்,
தட்டில் ஒரு நிலாத் தெரிகிறது எனக்கு.
ஒரு நொடி தட்டில் சந்திக்கின்றன நம் கண்கள்.

ஒரு டம்ளரை நான் எடுத்துக் கொண்டவுடன் விலகி ஓரமாய் நிற்கிறாய் நீ.
இதேக் காட்சியை என் நிலையில் உன்னையும்,
உன் நிலையில் என்னையும் வைத்து கற்பனை பண்ணிப் பார்க்கிறது மனம்.
இருக்கையில் அமர்ந்த படி நீ. காபி டம்ளர்களோடு நான்.

“என்ன தம்பி யோசிக்கிறீங்க” என்ற உன் அப்பாவின் குரலில் திடுக்கிட்ட நான்,
சமாளிப்பாக “ இது ஃபில்டர் காஃபியா, இல்ல ப்ரூவான்னு யோசிச்சுட்டு இருக்கேன் “
என்று சொல்ல…
“அது பூஸ்ட்ங்க…” என்கிறாய் நீ.

எல்லாரும் சிரிக்க, நான் உன் முகத்தை நேராய்ப்பார்க்கிறேன்.
நீயோ உதட்டை மெல்லக் கடித்து, நிலம் நோக்கி நகுகிறாய்.
பின் உள்ளறைக்குள் நுழைய முதல் அடி எடுத்துவைக்கிறாய், என் மனதுக்குள்ளும்.

“என்னப்பா.. பொண்ணப் புடிச்சிருக்கா?” என மெல்லக் கேட்கும் அம்மாவிடம்,
“பொண்ணுக்கு என்னப் புடிச்சிருந்தா, எனக்கும் சம்மதம்”
என உள்ளறைக்கும் கேட்கும் படி சத்தமாகவே சொல்கிறேன்.
அங்கிருந்து ஓடி வந்த உன் தங்கை “உங்கள எங்கக்காவுக்குப் புடிச்சிருக்காம்”
எனக் கத்திவிட்டு மறைகிறாள்.
இரண்டே வரிகளில் நிச்சயமாகிறது நமதுத் திருமணம்.

முகத்தில் மலர்ச்சியோடு, “ அப்புறம் நீங்க எவ்வளவு நக எதிர்பாக்கறீங்கன்னு சொன்னா….”
என உன் அப்பா ஆரம்பிக்க… என்னைப் பார்க்கிறார் என் அப்பா.

“உங்கப் பொண்ணுதான் நல்லா சிரிக்கிறாங்களே…
அப்புறம் எதுக்குங்க நகையெல்லாம்…நீங்க எதுவும் போட வேண்டாம்…
அவங்க வேணும்னு சொன்னா, நான் வாங்கித் தர்றேன்” என்கிறேன் நான்.
சந்தேகமாய்ப் பார்க்கிறார் உன் அப்பா.

“வீட்டுக்குத் தேவையான கட்டில், பீரோ, பாத்திரம், பண்டெமெல்லாம்..நாங்க…”
என ஆரம்பிக்கிறார் உன் அம்மா.
“உங்கப் பொண்ணுக்கு மத்தவங்கள சந்தோஷப்படுத்தத் தெரியுமில்ல…அது போதும்…
அது தானங்க வீட்டுக்கு முக்கியமாத் தேவை…மத்ததெல்லாம் நான் வாங்கிக்கிறேன்” என மறுபடியும் மறுக்கிறேன் நான்.

“என்ன இருந்தாலும் பொண்ணு வீட்டு சீர் வரிசைனு ஒன்னு இருக்கில்லங்க”
என என் அப்பாவைப் பார்த்து உன் தாய்மாமன் சொல்ல…
“உங்கப் பொண்ணோட சேர்த்து, அவங்க ஆசையெல்லாத்தையும்
சீராக் கொடுங்க, வரிசையா அத நிறைவேத்துறேன்”
என சொல்லி விட்டு என் பெற்றோரோடு கிளம்புகிறேன்.

வெளியேறி தெருவில் இறங்கி நடக்கும்போது திரும்பி
உன் உள்ளறையின் ஜன்னல் பார்க்கிறேன்.
அங்கே எல்லா நகையையும் கழற்றிவிட்டு அழகானப் புன்னகையோடு
என்னைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாய் நீ.
விழிகளால் பேசி விட்டு சாலையில் நடக்க ஆரம்பிக்கிறேன் நான்.

“உனக்கெல்லாம் காதல்னு ஒன்னு வந்தா,
அது நிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் நடுவுலதாண்டா”
என கல்லூரியில் நண்பன் கொடுத்த சாபம் ( வரம்? ) பலிக்க ஆரம்பிக்கிறது.

நிமிர்ந்து உலகத்தைப் பார்க்கிறேன் – அது இன்று மட்டும் அழகாய்த் தெரிகிறது.

( தொடர்ந்து காதலில் பயணிப்போம்… )
அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, May 24, 2006

+2 காதல் - இறுதிப் பகுதி!

+2 காதல் பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து
மாடியில் இருந்து ஒரு குரல் என் பெயர் சொல்லி அழைக்க, நிமிர்ந்து பார்த்தால் சாரதா நின்று கொண்டிருந்தாள்.
அவளேக் கீழே இறங்கி வந்தாள். ஆறு வருடங்களில் அவள் ரொம்பவே மாறிப் போயிருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.
ஜீன்ஸும், ஸ்லீவ்லெஸ் சுடிதாரும் அணிந்திருந்தவளின் காதை விட அதில் தொங்கிய தோடு பெரிதாயிருந்தது.
நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க, அவளேப் பேசினாள்.

“ஏ..என்னத் தெரியலையா? நான் சாரதாப்பா…”

நான் அதிர்ச்சியை மறைத்தபடி, “தெரியாமலா….ஆனா உன்ன மறுபடி பார்ப்பேன்னு நான் எதிர்ப்பர்க்கவே இல்ல! நீ எப்படி இருக்க?”
இயல்பாகப் பேச நான் கொஞ்சம் சிரமப்பட்டேன்; ஆனால் அவள் சகஜமாகவேப் பேசினாள்.

“நான் நல்லா இருக்கேன்…நீ எப்படி இருக்க?”

“எனக்கென்ன நானும் நல்லாதான் இருக்கேன்…ஆமா நீ இப்ப எங்க இருக்க? என்னப் பண்ணிட்டு இருக்க?”

அவள் இரண்டாடுகளுக்கு முன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததாகவும், தற்போது சென்னையில் இருப்பதாகவும் சொன்னாள்.
நானும் ஓராண்டுக்கு முன் தான் இந்த நிறுவனத்தில் சேர்ந்ததையும் தற்போது ஹைதராபாத்தில் இருப்பதையும் சொன்னேன்.

கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தாள்.

“நல்ல வேளை, நீ அன்னைக்கு மாட்டேன்னு சொல்லிட்ட…ஒருவேளை நீயும் சரின்னு சொல்லியிருந்தா…நாம இன்னைக்கு ஓரளவுக்கு இருக்கிற இந்த நல்ல பொசிஷனுக்கு வந்திருக்க முடியுமான்னுத் தெரியல…படிக்க வேண்டிய அந்த வயசுல நான் தான் கொஞ்சம் தடுமாறிட்டேன் இல்ல!”

“உன்ன மட்டும் தப்பு சொல்லாத! யார் தான் தப்புப் பண்ணல? சரி அது முடிஞ்சு போனது அத விட்டுட்டு வேற ஏதாவதுப் பேசுவோமே..”
அவள் அதை மறுபடியும் நினைவுபடுத்துவது எனக்கு ஏனோ ஒரு குற்றவுணர்ச்சியைத்தான் தந்தது.

“இல்லப்பா நீ அப்போ மாட்டேன்னு சொன்னதும் எனக்கு உம்மேலக் கோபம்தான் வந்தது..அதான் உன்னப் பார்க்கிறதையே அவாய்ட் பண்ணிட்டேன்…அப்புறம் காலேஜ் போனதுக்கப்புறம் அடிக்கடி feel பண்ணதுண்டு..atleast உங்கிட்ட friendshipப்பாவது continue பண்ணியிருக்கலாமேன்னு…ம்ம்ம்…நீ எப்படி feel பண்ண?”

“எனக்கும் முதல்ல கஷ்டமாதான் இருந்தது..அப்புறம் புது காலேஜ் புது நண்பர்கள்னு வாழ்க்கையே மாறிடுச்சு…சரி நீ என்ன மாஸ்டரப் பார்க்க இவ்வளவு தூரம்??”
பேச்சை மாற்றினேன் நான்.

“எல்லாம் நல்ல விஷயம் தான்” என்று சொல்லிவிட்டு அதை என்னிடம் கொடுத்தாள்.
அவளுடையத் திருமண அழைப்பிதழ்.

“ஓ பொண்ணுக்குக் கல்யாணமா?? இந்தா என்னோட வாழ்த்துக்கள இப்பவே சொல்லிடறேன்..ஆமா லவ் மேரேஜ்தான?”

சிரித்துக் கொண்டே கேட்டாள், “எப்படிக் கண்டு பிடிச்ச?”
அவள் வேறொருவனைக் காதலித்திருக்கிறாள் என்பதே எனக்கு நிம்மதியாய் இருந்தது.

“அதான் பத்திரிக்கைல மாப்பிள்ளையும் உன்னோடக் கம்பெனியிலதான் வொர்க் பண்றதா போட்டிருக்கே! அங்கப் போயும் நீத் திருந்தலையா?”

“ஏ என்னக் கிண்டலா? இந்த தடவ நான் கொஞ்சம் உஷாராயிட்டேன்…எனக்குப் பிடிச்சிருந்தும் நான் எதுவும் வாயத்திறக்கல…அவரேதான் propose பண்ணார் ..நானும் ஒரு வருஷம் அலைய விட்டுதான் ok சொன்னேன்!”
அவள் இப்படிப் பேசுவது எனக்கு இன்னும் ஆச்சரியமாய் இருந்தது.

“ம்ம் வெவரம்தான்…பேர் பொருத்தம் கூட ரொம்ப அருமையா இருக்கு - சாரதா ஷங்கர்! ”

“ம்ம் ஆமா …ஆனா எங்களுக்குள்ள மொதல்லப் பொருந்திப் போன விஷயத்தக் கேட்டா நீ சிரிப்ப!”

“இல்ல..இல்ல.. சிரிக்கல.. சொல்லு”

“நாங்கக் கொஞ்சம் க்ளோஸாப் பழக ஆரம்பிச்ச சமயம் தான் அழகி படம் வந்திருந்தது…அப்போ ஒரு தடவ அந்தப் படத்தப் பத்திப் பேசிட்டு இருந்தப்பக் கொஞ்சம் எமோஷனாகி நம்மக் கதைய அவர்ட்ட சொன்னேன்….கேட்டுட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டார்…அப்புறம்தான் அவர் கதைய சொன்னார்..அவரும் +2 படிக்கும்போது ஒரு பொண்ண லவ் பண்ணி அப்புறம் அந்தப் பொண்ணுகிட்ட செமத்தியா வாங்கிக்கட்டிக்கிட்டாராம்…ரெண்டு பேரும் ஒரேக் கேஸ்தான்னு சிரிச்சுக்கிட்டோம்…அப்புறம் எங்க நட்புக் காதலாகி இதோ இப்போ கல்யாணத்துல வந்து நிக்குது”

“நல்ல ஜோடிப் பொருத்தம்தான்…அப்ப ஒருத்தர ஒருத்தர் முழுசாப் புரிஞ்சிக்கிட்டீங்கன்னு சொல்லு!”

“ம்ம்..நல்லாவே! ஆமா உன்னக் கேட்க மறந்துட்டேனே நீ என்ன மாஸ்டரப் பார்க்க?”

“நானும் ஒரு கல்யாணப் பத்திரிக்கைக் கொடுக்கலாம்னுதான்!”

“ஏய் சொல்லவே இல்லப் பார்த்தியா…யார் அந்த அதிர்ஷ்டசாலி(?)”

“அட…நீ நெனைக்கிற மாதிரியில்ல…. கல்யாணம் எங்க அண்ணனுக்கு!”

“அப்ப உனக்கு ரூட் க்ளியர் ஆயிடுச்சுன்னு சொல்லு…நீயும் சீக்கிரமா ஒரு நல்லப் பொண்ணாப் பார்த்து லவ் பண்ணி lifeல செட்டில் ஆகவேண்டியதுதான…இல்ல ஏற்கனவே பொண்ணு ஏதும் மாட்டிடுச்சா???” கேட்டு விட்டு சிரித்தாள்.

“அட நானும் யாராவது மாட்டுவாங்களானு தான் பார்க்கிறேன்…ஆனா எல்லாப் பொண்ணுங்களும் புத்திசாலியாவே இருக்காங்க”, சொல்லி விட்டு நானும் சிரித்தேன்.

“ஆனா உன்ன ஒரு பொண்ணு லவ் பண்ணாலும் உடனேல்லாம் ok சொல்லக்கூடாதுப்பா… ஒரு ஆறு மாசமாவது உன்ன அலைய விட்டுதான் சொல்லனும்” மறுபடியும் சிரித்தாள்.
அதற்குள் மாஸ்டர் வந்துவிட அவரைப் பார்த்து பத்திரிக்கையைக் கொடுத்துவிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
அதன்பிறகு அவர் ட்யூஷன் எடுக்க சென்றுவிட நாங்கள் இருவரும் செல்பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றோம்.

என்னை மறுபடியும் ஒருமுறை சந்தித்தால் என்னோடு அவள் பேசுவாள் என்று நான் நினைத்ததில்லை.
ஆனால் அவள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசியதையும், அவளுக்குப் பிடித்த மாதிரியே அவளுக்கொரு வாழ்க்கைக் கிடைத்திருப்பதையும் நினைத்துப்பார்த்தால் எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாய் இருந்தது.

நான் வாழ்க்கையில் சில சமயம் நிறைய யோசித்துத் தவறான முடிவுகளை எடுத்ததுண்டு; சில சமயம் முன்பின் யோசிக்காமல் சில சரியான முடிவுகளையும் எடுத்ததுண்டு. அன்றைக்கு அவளுடையக் காதலை மறுத்தது இரண்டாவது வகை என்றே நினைக்கிறேன்.

அன்றைக்கு மதன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது : “சரி விடு மச்சி..அவளுக்கும் உன்ன விட நல்லவனா இன்னொருத்தன் கிடைப்பான்..உனக்கும் அவள விட நல்லவளா இன்னொருத்திக் கிடைப்பா”

முதல் பாதி நிறைவேறி விட்டது! இரண்டாவது பாதி?

அதுவும் நிறைவேறும் என்ற நம்பிக்கையில்….
அருட்பெருங்கோ.

பின்குறிப்பு :

இது முழுக்க முழுக்க உண்மைக் கதையல்ல. கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் கற்பனையும் கலந்து எழுதியதே! ஒரு கதை என்ற அளவிலேயே ரசிக்கவும்.

சொல்லாமல் செய்யும் காதல்...

எண்ணம், சொல், செயல்
மூன்றும் ஒன்றாக இருக்கவேண்டுமாம்.
காதலிக்காத யாரோ
சொல்லிவிட்டுப்போய்விட்டார்.

காதலிக்கிறவனுக்கு தானே
அந்த அவஸ்தை புரியும்!

நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று
தெரியாமலேக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
எந்தக் கணத்தில்
உன்னைக் காதலிக்க ஆரம்பித்தேன்?
எனக்குத் தெரியாது!

உன்னைக் காதலிக்கலாமா
என்று நினைத்தபோது,
காதலித்தால் உன்னைத்தான்
காதலிக்க வேண்டும் என்ற
எண்ணம் வந்தது எப்படி?
எனக்குத் தெரியாது!

காதலை
எண்ணத்திலும்,செயலிலும் நான் வைத்தேன்!
சொல்லில் மட்டும் நீ வையேன்!

ஆமாமடி!
காதலை நீயே சொல்லிவிடேன்!!
ப்ளீஸ்…

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ!

Tuesday, May 23, 2006

+2 காதல்- 5

+2 காதல் பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு

படித்ததும் மெதுவாக நிமிர்ந்து அவளை பயத்தோடு பார்த்தேன். “என்னப் பிடிச்சிருக்குன்னு சொல்லு” என்று குனிந்து கொண்டே சொன்னாள். அப்போது என் இரண்டு தொடைகளும் நடுங்குவது எனக்குப் புதிதாய் இருந்தது.

மெல்ல எச்சிலை விழுங்கிவிட்டு சொன்னேன் : “இல்ல சாரதா எனக்கு பயமா இருக்கு..நாம வயசுக்கு மீறி யோசிக்கிறோம்னு நெனைக்கிறேன். எனக்கும் உன்னப் பிடிச்சிருக்குதான்…நான் இல்லனு சொல்லல…. ஆனா இந்த வயசுல இவள மாதிரி ஒரு wife வரணும்னு யோசிக்கலாமேத் தவிர இவளே எனக்கு wife-aa வரணும்னு முடிவெடுக்க தகுதியிருக்கான்னுத் தெரியல..இது இன்னும் ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சு நடந்திருந்தா நானும் கண்டிப்பா சரின்னு சொல்லியிருப்பேன்..நமக்கெல்லாம் கல்யாணத்தப் பத்தி யோசிக்கவே இன்னும் எட்டு, பத்து வருஷத்துக்கு மேல இருக்கு..அதுக்குள்ள உனக்கும் என்ன வேணா நடக்கலாம்..எனக்கும் என்ன வேணா நடக்கலாம்..அதனால வேண்டாம் சாரதா..இதப் பத்தி இனிமேப் பேச வேண்டாம்” –

இதைத்தான் சொன்னேனா என்று தெரியாது, ஆனால் இதுமாதிரி தான் ஏதோ சொன்னேன்.

சொல்ல சொல்ல ஒரு விசும்பல் சத்தம் கேட்டது. அவள் அழ ஆரம்பித்திருந்தாள்.அதற்கு மேல் அங்கிருந்தால் என்னை மாற்றிவிடுவாளோ என பயந்து,அவள் கையில் அந்தக் கடிதத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பி விட்டேன்.அன்று நான் தேர்வு எழுதாமலே வீடு வந்து சேர்ந்தேன்.அவளும் எழுதியிருக்க மாட்டாள் என்று தெரியும்.

அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தன. அவள் chemistry tuition வருவதை நிறுத்தி விட்டாள். அங்கு tuitionனே கிட்டத்தட்ட முடிந்து விட்டதால் நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை.ஆனால் அவள் physics tuitionனை விட்டும், maths tuitionனை விட்டும் நின்று விட எனக்குப் பயமாய் இருந்தது. நான் நடந்த விஷயத்தை என் நண்பர்களிடம் சொல்ல ஒவ்வொருவனும் என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டான்.

“டேய் நீ என்ன லூசாடா? இவ்வளவு நாளா அவளப் பத்தி எழுதி வச்சது, எங்களுக்குத் தெரியாம அவ பின்னாடி சுத்துனதெல்லாம் அப்புறம் எதுக்கு? பெரிய இவனாட்டம் டயலாக் பேசிட்டு வந்திருக்க? “ – வினோத்.

“அது ஒன்னும் இல்லடா..அந்தப் பொண்ணே வந்து propose பண்ணியிருக்கில்ல..அதான் ஐயாவுக்கு ஏறிப் போச்சு…இவன் சொல்லி அந்தப் பொண்ணு மாட்டேன்னு சொல்லியிருந்தா அப்பப் புரிஞ்சிருக்கும்…” – செல்வா.

“ஏண்டா ஒன்னோட மொகரக் கட்டைக்கு அந்தப் பொண்ணு அதிகம்னு உனக்கேத் தெரியும்..அதுவே ஓக்கே சொல்லும்போது உனக்கென்னடா…மனசுல பெரிய மன்மதன்னு நெனப்பா…எல்லாம் first mark வாங்கறான் இல்ல அந்தத் திமிரு” – பாஸ்கர்.

மதன் மட்டும் அமைதியாய் இருந்தான்.

“ஏண்டா நீ மட்டும் சும்மா இருக்க நீயும் உன் பங்குக்கு ஏதாவது திட்டிடு” அவனைப் பார்த்து சொன்னேன்.

“மச்சி நீ சாரதாவ எந்தளவுக்கு லவ் பண்றனு எனக்குத் தெரியும்டா…அப்புறம் ஏண்டா மாட்டேன்னுட்ட?”

“நான் மட்டும் பிடிக்காமயாடா வேண்டாம்னு சொன்னேன்…அவ கேட்டப்பக் கூட நாளைக்கு சொல்றேன்னு சொல்லலாம்னு தான் நெனச்சேன்…ஆனா ஏதோ ஒரு பயத்துல பட்டுனு வேண்டாம்னு சொல்லிட்டேன்…அவங்க familyயும் நம்மள மாதிரி தான்டா…அவங்கப்பாக் கஷ்டப்பட்டுதான் படிக்க வச்சிட்டு இருக்கார்…எல்லா ட்யூஷன்லயும் அவ ஒரு installmentதான் fees கட்டியிருக்கா…அவள எஞ்சினியரிங் படிக்க வைக்கனும்னு அவங்கப்பாவுக்கு ஆசையாம்…அவளுக்கு ஒரு தங்கச்சி வேற இருக்கா…எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்தா நான் செஞ்சது சரிதான்னு இப்பத் தோணுது.”

“அதெல்லாம் சரி மச்சி…ஆனா இவ்ளோ நாளா ஆச காட்டிட்டு அவளே வந்து கேட்கும்போது மாட்டேன்னு சொன்னா அவளுக்கும் கஷ்டமாதான இருந்திருக்கும்”

“அவளுக்குக் கஷ்டமாதான் இருந்திருக்கும் எனக்கும் புரியுது….எனக்குப் பிடிச்சவ எங்கிட்ட வந்து propose பண்ணும்போது, ஆசையிருந்தும் மாட்டேன்னு சொல்லிட்டு நிக்குறேனே…என்னோடக் கஷ்டம் ஏண்டா உனக்குப் புரியல??”

“சரி விடு மச்சி..அவளுக்கும் உன்ன விட நல்லவனா இன்னொருத்தன் கிடைப்பான்..உனக்கும் அவள விட நல்லவளா இன்னொருத்திக் கிடைப்பா”

அவன் சொன்னதே நடக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவளை மறந்துவிட நினைத்தேன்.

ஆனால் எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுதானே மறுபடியும் மறுபடியும் நினைவுக்கு வந்து தொலைகிறது.

அவளையே நினைத்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் ஒரு எண்ணம் வரும். ஒருவேளை அவளும் என்னையே நினைத்துக் கொண்டிருப்பாளோ என்று.

அப்போதெல்லாம் ஏதோ தவறு செய்துவிட்டதைப் போல எனக்கு உடல் பதறும்.

அவளைப் பற்றியே அதிகம் நினைத்துக்கொண்டிருந்ததால் படிப்பில் கவனம் குறைய ஆரம்பித்தது.ஏதோக் கடமைக்குப் படித்துக் கொண்டிருந்தேன்.பொதுத்தேர்வின் போதுகூட தேர்வுக்கு முந்தைய நாளிலும் நான் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் இருந்தேன். எல்லாத் தேர்வுகளையும் ஆர்வமே இல்லாமல்தான் எழுதினேன்.

தேர்வு முடிவு வந்தபோது நான் எதிர்பார்த்த மாதிரியே என் வீட்டிலும்,பள்ளியிலும் எதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே மதிப்பெண் வாங்கியிருந்தேன்.

“என்னப்பா நீ centum வாங்குவேன்னு எதிர் பார்த்தா இப்படி மார்க் கொறஞ்சுடுச்சே” - மூன்று ட்யூஷனிலும் மாஸ்டர்கள் இதையே சொல்ல ஏண்டா அவர்களிடம் ரிசல்ட் சொல்லப் போனோம் என்று இருந்தது.

அப்புறம் வாங்கிய மார்க்குக்கு ஏதோ ஒரு காலேஜில் ஏதோ ஒரு க்ரூப் கிடைக்க அதில் சேர்ந்தேன்.

புது இடம். புது நண்பர்கள் என பழசை மறக்க ஆரம்பித்த சூழல் உருவாகியது.கல்லூரியிலும் எந்தப் பிரச்சினையிலும் மாட்டிவிடக்கூடாது என பெண்களிடம் பேசுவதையேத் தவிர்த்தேன்.

என்னைப் போலவே இருந்தவர்கள் ஒன்று கூட ஒரு சிறிய நட்பு வட்டம் உருவானது. அருமையான நினைவுகளோடு அதிவேகமாய்க் கரைந்துபோனது ஐந்தாண்டுகள். கல்லூரியின் பெயரால் இறுதியாண்டு படிப்பு முடியுமுன்பே ஒரு வேலையும் கிடைத்தது. வேலையில் சேர்ந்து ஒரு வருடம் வேலையில் மூழ்க அவளைப் பற்றி நினைப்பதுக் குறைந்தது. எப்போதாவது பழைய நண்பர்களிடம் தொலைபேசும்போது நினைவுபடுத்துவார்கள்.கொஞ்ச நேரம் மனம் பழைய நினைவில் மூழ்கினால் வேலை என்னை இழுக்கும். அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக நான் இப்படி மறந்துகொண்டிருக்க, மறுபடியும் ஊருக்கு செல்ல ஒரு வாய்ப்பு வந்தது.

அண்ணன் திருமணத்திற்காக நான் ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிற்குப் போயிருந்தேன்.

ஒரு நாள் மாலையில் , திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஜோஸப் மாஸ்டர் வீட்டுக்குப் போயிருந்தபோது மாஸ்டருடைய மனைவிதான் இருந்தார். மாஸ்டர் இன்னும் வராததால் என்னை மேலேக் காத்திருக்க சொல்லி சொல்ல, நான் மேலே ட்யூஷன் ரூமுக்குள் நுழையப் போனேன்.

அப்போது மாடியில் இருந்து ஒரு குரல் என் பெயர் சொல்லி அழைக்க, நிமிர்ந்து பார்த்தால் சாரதா நின்று கொண்டிருந்தாள்.

(நிறைவுப்பகுதி )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, May 22, 2006

+2 காதல் - 4

+2 காதல் பகுதி ஒன்று இரண்டு மூன்று

Chemistry tuition :

Chemistry tuition-இல் தான் எனக்குள்ளும் அந்த வேதியியல் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. நான் எப்போதும் அமரும் மூலைக்கு எதிர் பக்கமாய் என் பார்வையில் படுமாறுதான் அவள் உட்காருவாள். ட்யூஷன் நடந்துகொண்டிருக்கும்போதே அடிக்கடி அவள் பின்னால் திரும்பி என்னைப் பார்ப்பதும், ஜடையை அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் தூக்கிப் போடுவதும் அவளுக்கு வழக்கமாயிருந்தது. இதற்கெல்லாம் என்னுடைய அதிகபட்ச எதிர்வினை நோட்டில் எதையாவதுக் கிறுக்கி வைப்பதுதான்.

ஒரு நாள் ட்யூஷன் தொடங்குவதற்கு முன் மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். நான் கீழே சாலையை பார்த்தபடி நின்றிருந்தேன்.lady bird-இல் ஒரு lady bird – ஆக அவள் வந்து கொண்டிருந்தாள். சாலையில் வரும் அவள் மேலே நிற்கும் என்னைப் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. அதனால் நான் அவளையே மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். மாஸ்டர் வீட்டுக்கு முன்னால் மிதிவண்டியை சாலையில் நிறுத்தியவள், என் மிதிவண்டிக்கு அருகில் இருந்த மிதிவண்டியை தள்ளி நிறுத்திவிட்டு அவளுடையதைக் கொண்டுவந்து என்னுடையதை ஒட்டி நிறுத்தினாள்.என் பாதங்கள் தரையை விட்டுக் கொஞ்சமாய் மேல் எழும்புவதைப் போல் இருந்தன.வண்டியில் இருந்து பையை எடுத்தவள் சடாரென மேலேப் பார்த்தாள். எனக்கு இதயமே வெடித்துவிடுவது போல் இருந்தது.உடனேத் திரும்பிக் கொண்டேன்.நான் பார்த்துக்கொடிருந்ததை அவள் பார்த்திருப்பாளோ என்றே மனம் யோசித்துக் கொண்டிருந்தது.அன்று ட்யூஷன் முடியும் வரை நான் அவளை நேராய்ப் பார்க்க வில்லை.அவளும் எதுவும் பேசவில்லை.

அதற்குப் பிறகு ஒரு மாதத்தில் அவளோடு மெல்லப் பேச ஆரம்பித்திருந்தேன். என்னோடு இருக்கும் நேரங்களில் என் நண்பர்களோடும் பேசுவாள். அதன் பிறகு என் நண்பர்களுக்கு அவள் மேல் ஒரு மரியாதையே வந்திருந்தது. நான் இல்லாத சமயங்களில் என்னைப் பற்றி அவளிடம் அதிகமாகவே அளந்துவிட ஆரம்பித்தார்கள். ஒரு நாள் என்னிடம் வந்தவள், “நீங்க கவிதையெல்லாம் எழுதுவீங்களா?” என்று கேட்டாள்.”ஏதோ எழுதுவேன்,,ஆனா அத கவிதைன்னெல்லாம் சொல்லிக்க முடியாது” என்றேன். “நாங்கூட நல்லா வரைவேன்…ஆனா அத ஓவியம்னெல்லாம் சொல்லிக்க முடியாது” என்று சொல்லி சிரித்தாள். அதன்பிறகு ட்யூஷனுக்கு நேரத்திலேயே வந்துவிட்டால் போர்டில் அவள் எதையாவது வரைய பக்கத்தில் நானும் எதையாவது கிறுக்க, ட்யூஷன் ஆரம்பிக்கும் வரை மனம் சந்தோசத்தில் திளைத்திருக்கும்.

நான் ட்யூஷனுக்கு நோட் எடுத்து செல்வது, எதையாவது கிறுக்கவும், வரையவும் தான். பாடம் சம்பந்தமான நோட்ஸ் எல்லாமே புத்த்கத்திலேயே அங்கங்கே சின்ன சின்னதாய் எழுதிவிடுவேன். என்னுடையப் புத்தகத்தில் அச்சில் இருப்பதை விட நான் எழுதியிருப்பது அதிகமாக இருக்கும். ஒருமுறை அதைப் பார்த்துவிட்டு, அவளும் இனிப் புத்தகத்திலேயே எழுதப் போவதாகவும், இதுவரை நான் எழுதியதைப் பார்த்து எழுதிக்கொள்ள என் புத்தகம் வேண்டும் என்று வாங்கிசென்றாள். போகும்போது அங்கங்கே கிழிந்து தொங்கியபடி போன என் புத்தகம் திரும்பி வரும்போது கிழிந்த இடமெல்லாம் ஒட்டப்பட்டு, வெளியிலும் அட்டைப் போட்டு அழகாய் வந்து சேர்ந்தது. நோட்டில் கிறுக்கினேன் :

“கிழிந்த புத்தகத்தை ஒட்டித் தந்தாள்
நன்றாக இருந்த இதயத்தைக் கிழித்துவிட்டாள்”
(நான் இப்ப எழுதுறக் கவிதை(?)யேக் கேவலமா இருக்கும்போது, இது அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி எழுதினது, ரொம்பக் கேவலமாதான் இருக்கும்..பொறுத்துக்குங்க!)

அதற்குப் பிறகு ட்யூஷன் நேரத்தில் அவள் என்னைப் பார்ப்பதை நிறுத்தியிருந்தாள். காரணம், நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருப்பேன்.அவள் என்னைப் பார்க்காத நேரங்களில் நானும் நோட்டில் அவளை வரைய ஆரம்பித்தேன், அதற்குப் பிறகுதான் தெரிந்தது எனக்கும் ஓரளவுக்கு வரைய வரும் என்று. நான் வரைவது அழகாக இருப்பதாக சொல்லி என்னைப் பாராட்டினார்கள் என் நண்பர்கள். அழகாக வரைவது எல்லாம் வரைபவன் கையில் மட்டுமே இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். அது யாரைப் பார்த்து வரைகிறோம் என்பதைப் பொறுத்தது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும் அவள் அழகுக் கூடிக்கொண்டே இருந்தது. அவள் குரலும் நாளுக்கு நாள் இனிமையாகிக் கொண்டே வந்தது.நான் அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டேன் என்று எனக்கு மெதுவாய் புரிந்தது. வியாழன், வெள்ளி இரு நாளும் பள்ளி முடிந்து தாவணியில் வரும் பெண்கள், சனிக்கிழமை மட்டும் சுடிதாரில் வருவார்கள். அன்று சனிக்கிழமை. வழக்கம்போல் அவள் வரும் சாலையில் கண்ணை வைத்துக் காத்திருந்தேன்.அழகாய் ஒரு கத்திரிப்பூ நிற சுடிதாரில் துப்பட்டா சிறகாய்ப் பறக்க ஒரு தேவதையைப் போல் வந்திருந்தாள்.

“என்ன மச்சி உன் ஆளு..தாவணியிலயும் அழகா இருக்கு..சுடிதார் போட்டாலும் பொருந்துது?” – மதன்.
மனம் அமைதியாய் இருந்தாலும் உதடு சொன்னது : “ இந்த சுடிதார் உண்மையிலேயே அவளுக்கு அழகா இருக்கில்ல?”
எல்லோரும் அமைதியாய் இருந்தபோதுதான் உணர்ந்தேன் நான் கொஞ்சம் அதிகப்படியாய்ப் பேசி விட்டதை.

ஆனால் அதன் பிறகு எல்லா சனிக்கிழமையும் அவள் அதே சுடிதாரில் வர ஆரம்பித்தாள். இந்த நான்கு பேரில் எவனோ சொல்லியிருக்க வேண்டும்.
“என்ன சாரதா..சனிக்கிழமைக்குன்னும் ஒரு யூனிஃபார்ம் வச்சிருக்க போலிருக்கு” – எனக்கும் கேட்குமாறு ஒரு நாள் சாரதாவிடம் கேட்டுவிட்டான் மதன்.
என்னைப் பார்த்துக் கொண்டே “நல்லாயிருக்குன்னு சில பேர் சொன்னாங்க… அதான்…” என்று சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.
வழக்கம்போல கிறுக்க ஆரம்பித்தேன் :

அவள் மடியில் விழுந்த என் மனசு!

“நிலவைக் கிட்டேப் பார்க்க அவள் முகத்தருகே என் மனசுப் போக…
அவள் பார்வை மின்னல் தாக்கியதில் கண்களை அதுவும் மூடிக்கொள்ள…
அவள் கன்னக் குழியோத் தடுக்கி விட…
அந்தக் கூந்தல் அருவியில் என் மனசுத் தடுமாறி விழ…
விழுந்து சரிகையில் ஒரு கொடியை அதுவும் பற்றிக் கொள்ள…
அது அவள் இடையெனத் தெரிந்து பற்றியதையும் விட…
அங்கிருந்தும் விழுந்த என் மனசைத் தாமரைப் பூவைப் போலத் தாங்கிக்கொண்டது அவள் மடி!”

அரையாண்டுத் தேர்வுக்கு முன்பே ட்யூஷனில் எல்லாப் பாடமும் முடித்து விட்டிருந்தார் மாஸ்டர். நான் புத்தகத்தில் இருக்கும் எல்லா வேதிச்சமன்பாடுகளையும் (chemical equations) ஒரு நாள் தேர்வாக எழுதுவதாக சொல்லி அதை மொத்தமாக எழுதியும் காண்பித்தேன். பாராட்டிய மாஸ்டர் ,”very good..equations மட்டும் சரியா எழுதிட்டீங்கன்னாப் போதும்..மத்ததெல்லாம் அவ்வளவாப் படிச்சு பார்க்க மாட்டாங்க..ஈசியா மார்க் ஸ்கோர் பண்ணலாம்…சரி நீ examக்கு முன்னாடி ஒரு தடவ வந்து இதே மாதிரி எழுதிட்டுப் போ” என்று சொல்லி அனுப்பிவிட்டார். அடுத்த நாள் எல்லோரிடமும் இதை அவர் சொல்ல, என்னிடம் வந்தாள் அவள். “ஒன்னு விடாம எல்லா equationனும் எழுதினியா? அந்தப் பேப்பர் கொஞ்சம் கொடேன்” என்று கேட்க, நான் எடுத்துக் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தவள்,”எல்லா equationனையும் ஒரே சமயத்துல refer பண்ண ஈசியா இருக்கும், இதத் தர்றியா நான் ஜெராக்ஸ் எடுத்துட்டுத் தர்றேன்” என்றாள். நானும் சரியென்றேன்.ஜெராக்ஸ் எடுத்து வந்தவள் ஜெராக்ஸ் காப்பியை என்னிடம் கொடுத்துவிட்டு நான் எழுதியதை அவள் எடுத்துப் போய் விட்டாள். அந்த பேப்பரில் நான் என்னுடைய பெயரை எழுதியிருந்தது ஜெராக்ஸ் காப்பியிலும் வந்திருந்தது, ஆனால் என் பெயருக்கு முன்னால் அவள் பெயர் பேனாவால் எழுதப் பட்டிருந்தது!

அதற்குப்பிறகு ட்யூஷனில் பாடம் என்று எதுவும் நடக்காது. எப்போது வேண்டுமானாலும் போய் இருக்கும் ஏதாவது ஒரு வினாத்தாளை எடுத்துத் தேர்வெழுதலாம். நான் கொஞ்ச நாளாக அதில் ஆர்வம் காட்டாமல் ட்யூஷனுக்குப் போகாமல் இருந்தேன். தினமும் காலையில் maths ட்யூஷனிலும், மூன்று நாட்கள் மாலையில் physics ட்யூஷனிலும் அவளைப் பார்த்தாலும் , மீதி மூன்று நாளும் மாலையில் அவளைப் பார்க்கால் இருப்பது எதையோ இழந்ததைப் போல இருந்தது. பிறகு நானும் chemistry தேர்வு எழுதப் போக ஆரம்பித்தேன். ஒரு மணி நேரம் தேர்வெழுதினால் ஒரு மணி நேரம் அவளோடுப் பேசிக்கொண்டிருப்பேன். அவள் வராத நாட்களில் தேர்வெழுதாமல் திரும்பியதும் உண்டு. வெளியில் சந்திக்கும்போதும் பேசிக்கொள்வது வழக்கமானது. என்னுடைய எல்லாப் பயணங்களும் அவள் வீட்டு சாலையைத் தொட்டேப் போயின.இப்படிப் போய்க்கொண்டிருக்கையில் ஒரு நாள் chemistry tuition மாடியில் வைத்து என்னிடம் அதைக் கொடுத்தாள். நான்கு பக்கங்களுக்கு எழுதப்பட்டக் காதல் கடிதம். நான் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். என்னை அவளுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், படித்து முடித்து நான் நல்ல நிலைமைக்கு வருவேன் என்று நம்புவதாகவும், என்னுடைய ரசனையும், அவளுடையதும் ஒரே மாதிரி இருப்பதாகவும், இன்னும் இந்த மாதிரி நிறைய எழுதியிருந்தாள் ஆங்கிலமும், தமிழும் கலந்து. எனக்குப் படிக்கப் படிக்க திக் திக்கென்று மனம் அடித்துக் கொண்டிருந்தது. படித்ததும் மெதுவாக நிமிர்ந்து அவளை பயத்தோடு பார்த்தேன். “என்னப் பிடிச்சிருக்குன்னு சொல்லு” என்று குனிந்து கொண்டே சொன்னாள். அப்போது என் இரண்டு தொடைகளும் நடுங்குவது எனக்குப் புதிதாய் இருந்தது.

(தொடரும்...)

அடுத்தப் பகுதி


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.