Wednesday, December 28, 2011

மார்கழி பாவை 12

விடியும்வரை தூங்கிப்பழகிய உன்னை
மார்கழியில் மட்டும்
விடியலுக்கு முன்னே எழுப்புகிற
உன் அம்மாவுக்குத் தெரியுமா?
மார்கழியில் மட்டும்
உனது கோலத்தில் தான்
சூரியனே கண்விழிக்கிறானென்பது?

Tuesday, December 27, 2011

மார்கழி பாவை 11

மார்கழி விரதமென்றால்
அசைவம் உண்ண மாட்டாயா?
பார்வையிலேயே
என்னை விழுங்குவதெல்லாம்
என்ன வகை?

மார்கழி பாவை 10

நகர்ந்து நகர்ந்து
நீ வரையும்
அரிசிமாவுக் கோலத்துக்கு போட்டியாக,
தொடர்ந்து வந்து
நீர்க்கோலம் வரைகிறது
உனது ஈரக்கூந்தல்!

Sunday, December 25, 2011

மார்கழி பாவை 9

இத்தனை நாட்களாய்
முற்றத்திலமர்ந்து
ஓர் ஓவியனின் நேர்த்தியோடு
உள்ளங்கையில் நீ வரைந்த
மருதாணி ஓவியங்களைப்
பொறாமையுடன் பார்த்துவந்த
நிலத்தின் ஏக்கத்தையெல்லாம்
வண்ணம் கொண்டு
தீர்த்து வைக்கின்றன
உனது மார்கழி ஓவியங்கள்!

Saturday, December 24, 2011

மார்கழி பாவை 8

அழகாய்ப் பூத்தும்
காய்த்தபின்னே பூப்பதால்,
பூசணிச்செடியைக் கேலி செய்தனவாம்
நீ விரும்பும் மல்லிகையும் ரோஜாவும்!

ஆனால்
மார்கழிக் கோலத்திற்கென
நீ பூசணிப்பூக்களைப்
பறிக்கத் துவங்கியதிலிருந்து
பூச்செடிகளுக்கு மத்தியில்
பூசணிக்குத் தனி மரியாதையாம்.
அந்த மகிழ்ச்சியில்
இப்பொழுதெல்லாம்
முதலில் பூத்து
அப்புறம்தான் காய்க்கிறது தெரியுமா?

Friday, December 23, 2011

மார்கழி பாவை 7

மார்கழி விடியலில்
கோலமிடும் ஆயத்தத்துடன் வருகிறவள்
மேகம் துடைத்த தூய வானம் காட்டி
‘நீ என் வானம்’ என்றவாறு பார்க்கிறாய்.
நான் பதிலற்று நின்றிருக்க
அதிர்ச்சியுடன் முறைக்கிறாய்.

‘ஆமாம்.
நீ கோலமிடுவாயென
தன் மீது புள்ளி வைத்து
இரவெல்லாம் காத்திருக்கிறது வானம்.
நீயோ வாசலிலேயேக் கோலமிடுகிறாய்.
நான் வானமா? நிலமா?’ என்றேன்.

அச்சச்சோ!
அப்படியென்றால்
‘நீ என்னைத் தாங்கும் நிலம்’ என்று சொல்லி
வழக்கம்போல வாசலில் புள்ளி வைக்கத் துவங்குகிறாய்.
அதனை முத்தமாக ஏந்திக்கொள்கிறது இந்த நிலம்!

Thursday, December 22, 2011

மார்கழி பாவை 6

மார்கழி முழுவதும்
நம்வீதியெங்கும் தேனீக்கள் கூட்டம்.
உனக்குத் தெரிந்தது 'பூக்கோலம்' மட்டும்தானா?

Wednesday, December 21, 2011

மார்கழிப்பாவை 5

மார்கழி மாதத்தின்
அதிகாலையில் எழுந்து
பனியில் நீராடி
உன் வாசல் வந்து காத்திருக்கிறார்கள்...
திருப்பாவை பாடுவாயென... எம்பெருமானும்,
திருவெம்பாவை பாடுவாயென... சிவபெருமானும்.
உனது குரலில் மயங்கி விடுவார்களோவென
பயந்தபடி ஓடி வருகிறார்கள் ஆண்டாளும், மீனாட்சியும்.
வெளியே நடப்பது எதுவுமறியாமல்
போர்வைக்குள் பதுங்கியபடி
செல்பேசியில் எனது குறுஞ்செய்தி வாசித்துக்கொண்டிருக்கிறாய்...
‘ஐ லவ் யூ’

Tuesday, December 20, 2011

மார்கழிப்பாவை 4

ஐப்பசியிலும்
கார்த்திகையிலும்
உன்னை நனைத்து
மகிழ்ந்த மழை,
மார்கழியில் மட்டும்
உனது கோலங்களை
அழிக்க மனமில்லாமலும்,
உன்னைத் தீண்டாமல்
இருக்க முடியாமலும்
பட்டும் படாமல் தொட்டுப் போகிறது...
மார்கழிப் பனியாக!

Sunday, December 18, 2011

மார்கழிப்பாவை 2

மார்கழி விடியலின் பனிக்குளிரில்
கோலமிடும் எனது தங்கைக்கு
நான் உதவுவதெல்லாம்,
எதிர் வாசலில் கோலமிடும்
உன்னை ரசிக்கத்தானென்பதை
புரிந்துகொள்கிற அறிவாளியும் நீதான்.

முன்பகலுக்குள்
வீதியின் மற்றக் கோலங்ககெல்லாம்
கால் தடங்களாலும் வாகனத்தடங்களாலும் சிதைந்துபோக
உன் வாசல் கோலம் மட்டும்
மாலைவரை சிதையாமல் இருக்க
அந்த கோலத்தின் அழகு மட்டுமே காரணமென நம்பும்
முட்டாளும் நீதான்.

எனது தங்கையும் நீயும்
மிகப்பெரிய கோலங்களை வரையத்துவங்கி
இடமில்லாததால்
இரண்டு கோலங்களையும் இணைத்து
ஒரே கோலமாக்கிவிட்டு நீ பார்த்த பார்வையில்
நம் காதலுக்கான முதல் புள்ளி வைக்கப்பட்டது!

Saturday, December 17, 2011

மார்கழிப்பாவை 1

[caption id="attachment_629" align="alignleft" width="600" caption="மார்கழிப்பாவை 1"]மார்கழிப்பாவை 1[/caption]

Friday, September 23, 2011

தேவதை வம்சம் நீயோ

அக்கா மகள் ஜனனிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்து காணொளி பதிவாக...
[flashvideo filename=video/janani/Janani2011_conv.flv /]

Thursday, August 04, 2011

கண்ணாடி(ய) கவிதை

*

உலக அழகியின் புகைப்படத்தை
உன் வீட்டில்
கண்ணாடி என்பீர்களா?

*

உனதழகை
நீ பார்க்கும்பொழுது
பிரதிபலிக்கிற கண்ணாடி
நீ பார்க்காதபொழுது
உள்வாங்கிக் கொள்கிறது தெரியுமா?

*

உன் வீட்டுக் கண்ணாடிக்கு
தினமும் உனதழகை ரசிக்கும்
அதிர்ஷ்டம் தந்த மச்சங்களாய் மின்னுகின்றன
நீ ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டுகள்.

*

நீ வரைந்த கண்ணாடி ஓவியங்களின்
அழகை விசாரிக்கும்பொழுது
உன் 'கண்'ணாடியதை எப்படி ஓவியமாக்க?

*

உன்னை அழகாய்க் காட்டியதற்காக
நீ முத்தமிட்ட கணத்திலிருந்து
தன்னை அழகாய்க் காட்டிக்கொள்ள தவிக்கிறது
உன் வீட்டுக் கண்ணாடி.

Monday, August 01, 2011

மித்ரா மை ஃப்ரெண்ட்

ஓராண்டுக்கு முன்னர் அண்ணன் மகள் மித்ராவின் பேச்சு :

*

மித்ரா : அவளுடைய சுடிதாரை எடுத்துக்கொண்டு வந்து , அம்மா இதோட ஃப்ரெண்ட் எங்கம்மா?
அண்ணி : ஒன்றும் புரியாமல் விழிக்க..
மித்ரா : எங்கம்மா இதோட ஃப்ரெண்ட்?
அண்ணி : ட்ரெசுக்கு ஏது பாப்பா ஃப்ரெண்ட்?
மித்ரா : இந்தா இங்க இருக்கு. என்றபடி அந்த சுடிதாரின் துப்பட்டாவை எடுத்துக்கொண்டு ஓடுகிறாள்.

(சுடிதாரின் ஃப்ரெண்ட் அதன் துப்பட்டா என்பது உங்களுக்கு தெரியுமா?)

*

மொட்டைமாடியில் மித்ராவுக்கு சோறு ஊட்டுகையில்..

அண்ணி : அங்கப் பாரு பாப்பா.. அதான் அப்பா காக்கா.. அது அம்மா காக்கா..
மித்ரா : அது?
அண்ணி : அதுதான் பாப்பா காக்கா..
மித்ரா : எங்கம்மா சித்தப்பா காக்கா?

(காக்காவில் சித்தப்பாவைத் தேடுகிறாளா? சித்தப்பாவை காக்கா என்கிறாளா?)

*

ஜனனியின் அத்தை வீட்டில்..

ஜனனியின் அத்தை : மித்ரா பரவால்ல அமைதியா இருக்கா. ஜனனியா இருந்தா இந்நேரம் என்ன சட்னியாக்கியிருப்பா..
மித்ரா : ஜனனி உங்கள சட்னியாக்கினா, நான் உங்கள தோசையாக்கிடுவேன்!

(என்னா வில்லத்தனம்?)

*

வீட்டிலிருந்து கடற்கரைக்கு கிளம்பும்போது அண்ணா, அண்ணி, மித்ரா மூவரும் ஒரு பைக்கில் கிளம்ப, நான் தனியே ஒரு பைக்கில் கிளம்ப, மித்ரா சொல்லிச் சிரிக்கிறாள் : சித்தப்பா உங்க பின்னாடி உட்கார ஆள் இல்லையே..

( நான் என்ன சொல்ல? :) )

*

நான் US கிளம்பும்போது சமையல் பொருட்கள், பாத்திரங்களை அடுக்கிக்கொண்டு வந்ததைப் பார்த்த மித்ரா என்ன நினைத்துக்கொண்டாளோ, பக்கத்து வீட்டுக்காரர் ‘உங்க சித்தப்பா எதுக்கு அமெரிக்கா போயிருக்காங்க?’ என்று கேட்டபோது சொல்லியிருக்கிறாள் : ‘எங்க சித்தப்பா சமையல் வேல செய்ய போயிருக்காங்க!’

( அவ சொன்னதும் பாதி உண்மைதான் :))

Thursday, July 28, 2011

எப்பொழுது கவிதை வாசிக்கத் துவங்குகிறாய்

*

எனது முத்தங்கள்
ஆடைகளற்று நாணுகின்றன.
உனது முத்தங்களை அணிவித்தாலென்ன?

*

இறுதி அத்தியாயத்தை முதலில் வாசித்துவிட்டு
பிறகு நாவலைத் துவங்கும் வாசகனைப்போல
இறுதிவரியில் பொதிந்திருக்கும்
உனது முத்தங்களை அள்ளிய பிறகே
உனது கடிதங்களை வாசிக்கத் துவங்குகிறேன்.

*

நான்
நனைந்தபடி ரசிக்கும் பெருமழை
நீ.

*

செடிக்கு உரமாகட்டுமென
காலையில் சூடியப் பூக்களை
செடிக்கருகிலேயே உதிர்க்கிறாய்.
வாடிய பூக்களில் வீசும் உனது கூந்தல்மணத்தால்
அந்தியிலேயே மலர்கின்றன புதிய மொட்டுகள்.

*

உலகின் பேரழகான கவிதை
உலகின் பேரழகான வாசகிக்கென
எழுதப்படாமல் இருக்கிறது.
எப்பொழுது கவிதை வாசிக்கத் துவங்குகிறாய்?

*

Wednesday, June 08, 2011

பெண்ணழகி பெரும்பேரழகி



மேலே உள்ள தெலுங்குப் பாடலுக்கான எனது தமிழ் வரிகள் கீழே :

பெண்ணழகி பெரும்பேரழகி
ஐம் பொன்னழகி கருங் கண்ணழகி
என்னழகா என் பேரழகா
பூ சொல்லழகா அது செய்யழகா

நீயே காதலி நானே சாரதி
காதல் பயணம் பழகு
பாதை இருக்கு பாதம் இருக்கு
ஏனோ முளைக்கும் சிறகு

விலகி பழகி நழுவி தழுவி
விரலும் விரலும் கோர்த்தால் சித்தம்
இதழும் இதழும் கோர்த்தால் முத்தம்

ச ச ரி ரி க க பதநி
ச ச ரி ரி க க பதநி

நீ நடக்கும் சாலையெல்லாம்
பூச்செடிகள் பூத்துக் குலுங்கும்
நீ பேசும் வார்த்தையெல்லாம்
தேனீக்கள் தேடித் திரியும்
நீ சிரிக்கும் சிரிப்பையெல்லாம்
விண்மீன்கள் விலைக்கு வாங்கும்
நீ சொல்லும் கவிதையெல்லாம்
என்காதல் கொள்ளை கொள்ளும்
இரவின் மடியில் இதயம் உறங்க
இமைகள் விசிறி விசிறும்
கனவின் தயவில் இமைகள் உறங்க
இசையாய்த் துடிக்கும் இதயம்

இதயம் இமைக்கும் இமைகள் துடிக்கும்
கண்ணும் கண்ணும் கலந்தது கொஞ்சம்
நெஞ்சும் நெஞ்சும் கலந்தது மிஞ்சும்

ச ச ரி ரி க க பதநி
ச ச ரி ரி க க பதநி

கோவிலுக்கு நீவரும் பொழுது
உனைக்கண்டு கோபுரம் குனியும்
காதலிக்கும் உயிர்கள் எல்லாம்
நீவந்தால் உயிலை எழுதும்
மாமழையில் நனையும் பொழுது
உனைத்தொட்டு மழையும் குளிக்கும்
நள்ளிரவைத் தாண்டும் விடியல்
நீப்பேச உறக்கம் உறங்கும்
உறங்கும் வரையில் மயங்கும் நிலையில்
இமையில் இருக்கும் கனவு
விழிக்கும் வரையில் விழியின் திரையில்
தனியாய்த் தவிக்கும் நனவு

இரவும் பகலும் கனவும் நனவும்
நீயும் நானும் பேசியது காதல்
நீயும் நானும் பேசியது காதல்

ச ச ரி ரி க க பதநி
ச ச ரி ரி க க பதநி

Wednesday, May 11, 2011

காதல்வரவு

வெறுமையாய் உருகும்
எனது வைகறைக் கனவுகளெல்லாம்
நீ வந்து உறையத்தான்.

விருப்பமின்றி தொடரும்
ஓரிரு கெட்டப்பழக்கங்களும்
உனது விருப்பத்தின்பொருட்டு விட்டொழிக்கத்தான்.

வெள்ளைத்தாளில் கருப்பில் வரைந்த
எனது கோட்டோவோயங்கள் எல்லாம்
உனக்குப் பிடித்த வண்ணங்களால் நிரப்பத்தான்.

அரைப்பக்கம் மட்டுமே எழுதப்படும்
எனது நாட்குறிப்புகளெல்லாம்
உனதுரையால் பூர்த்தி செய்யத்தான்.

காதல் வழியும்
எனது கற்பனைக் கவிதைகளெல்லாம்
நீ வந்து நிஜமாக்கத்தான்.

Monday, February 21, 2011

புகைப்படம்

மழையில் நனைந்த உனது படத்திலிருந்து
துளித்துளியாய் சொட்டுகிறது
அழகு.

*

பூக்கடையில் யாரோ
உனது புகைப்படம்
விற்கிறார்கள்.

*

உனது படங்கள் இரண்டைக் காட்டி
எதில் அழகாயிருக்கிறேனென கேட்கிறாய்.
அப்படியே படம் பிடிக்கலாம் போலிருக்கிறது.

*

நீயிருப்பது
புகைப்படமுமல்ல, நிழற்படமுமல்ல
இசைப்படம்.

*

விளக்கணைந்த இரவுகளில்
உனது படம் ஒளிர
வெளிச்சமாகிறது வீடு.

Monday, February 14, 2011

காதல் எழுதிய கவிதைகள்

காதல் எழுதிய கவிதைகள் (அ) கவிதை எழுதிய காதல்

*

நீ இயல்பாகத்தான் பேசுகிறாய்.
எனக்குத்தான் உன்னிடம் பேசுவதே
இயல்பாகி விட்டது.

*

எல்லா மொழியிலும்
எனக்கு காதலைக் குறிக்கும் ஒரு சொல்
உனது பெயர்.

*

உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளிலும்
நீ தன்னை ஒரு முறை சுற்றி வந்ததாய் பெருமைப்படுகிறது
சூரியன்.

*

உனது அக்கறையை அனுபவிக்கவேனும்
இன்னும் சிலநாள் நீடிக்கட்டும்
எனது காய்ச்சல்.

*

நீ பரிசளித்த விலையுயர்ந்த உடையினும்
எனக்குப் பிடித்த நிறத்துக்காக நீ செலவழித்த
மூன்று நாள் தேடலில் ஒளிந்திருக்கிறது காதல்.

*

நீ பார்த்து பார்த்து
உன்னிலும் அழகாகிறது
உன் வீட்டுக் கண்ணாடி.

*

'பார்க்காமலே காதலிக்கிறப் பழக்கம் மீன்களுக்குண்டு' என்கிறேன்.
'உண்மையாகவா?' என கண்களை உருட்டுகிறாய்.
சந்திக்காத காதல் மீன்கள் இரண்டும் ஒன்றுபோல உருள்கின்றன.

*

குளிரோ வெப்பமோ
குறைக்கிற ரகசியம் கற்றிருக்கிறது
உன் முத்தம்.

*

இசையென வழிகிறது.
வீணை நரம்புகளும் உனது விரல் நரம்புகளும்
காதலில் பதிக்கிற முத்தங்கள்.

*

எத்தனை கவிதையெழுதியென்ன?
பிடித்திருக்கிறதென நீ சொல்லப்போகிற ஒன்றிரண்டைத் தவிர
மற்றவை எல்லாம் தற்கொலை செய்துகொள்ளப்போகின்றன!

Thursday, February 03, 2011

அழகு குட்டி செல்லம்

அண்ணன் மகள் மித்ராவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்து காணொளி பதிவாக...
[flashvideo filename=video/Mithra-Video/MithraBday2011.flv /]

Friday, January 21, 2011

ஜனனி மித்ரா பொங்கல் நடனம்

16 சனவரி 2010 :

பொங்கல் திருவிழா அன்று கரூரில் வீட்டருகில் நடக்கும் நடனப்போட்டியில் கலந்துகொள்வதற்காக பயங்கரமாக பயிற்சியெல்லாம் செய்துகொண்டு வந்திருந்தாள் மித்ரா. இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும்போதே மித்ராவுக்கு கண்ணைக்கட்ட, ஒரு மணி நேரம் கழித்து அவள் மேடையேறிய போது மொத்தமாக தூக்கத்தில் இருந்தவள், பாட்டுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவளைப் போல ஆடாமல் நின்று வெறுப்பேற்ற... மைக்கில் அறிவிக்கும் ஆள் வேறு 'பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று அறிவித்து இன்னும் கடுப்பேற்ற... அடுத்த பொங்கலில் மித்ராவை எப்படியாவது ஆடவைக்க அண்ணி போட்ட சபதத்தின் விளைவு :

16 சனவரி 2011 :
[flashvideo filename=video/Mithra-Video/Janani_Mithra_Dance_conv.flv /]
இந்த ஆண்டு moral support க்கு ஜனனியும் சேர்ந்துகொள்ள எப்படியோ பரிசும் வாங்கி விட்டார்கள். அந்த துணிச்சலில் அடுத்த ஆண்டு இருவரும் தனித்தனியாக களமிறங்கப் போகிறார்களாம் :)

Saturday, January 15, 2011

பொங்கல் கவிதை

[caption id="attachment_543" align="aligncenter" width="600" caption="பொங்கல் கவிதை"]பொங்கல் கவிதை[/caption]

ஆத்து தண்ணி ஆள இழுக்க வாய்க்காத்தண்ணி காலு வழுக்க
கேணிமேட்டுத் தொட்டியில குளிச்சுத்தான் பழகிப்புட்ட...
ஒம் மேலுபட்டத் தண்ணி தோப்பெல்லாம் பாயுது
தென்னங் கொலையெல்லாம் செவப்பாத்தான் காய்க்குது.