Showing posts with label ஜனனி - மித்ரா. Show all posts
Showing posts with label ஜனனி - மித்ரா. Show all posts

Monday, September 24, 2012

பிறந்தநாள் வாழ்த்து

எனது அக்காவின் மகள் ஜனனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

http://www.youtube.com/watch?v=MrtTYe7itjU

Friday, February 03, 2012

பூப் பூவாய் புன்னகைக்கும் இவள்

அண்ணன் மகள் மித்ராவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்து காணொளி பதிவாக...
[flashvideo filename=video/mithra/Mithra2012_conv.flv /]

Friday, September 23, 2011

தேவதை வம்சம் நீயோ

அக்கா மகள் ஜனனிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்து காணொளி பதிவாக...
[flashvideo filename=video/janani/Janani2011_conv.flv /]

Monday, August 01, 2011

மித்ரா மை ஃப்ரெண்ட்

ஓராண்டுக்கு முன்னர் அண்ணன் மகள் மித்ராவின் பேச்சு :

*

மித்ரா : அவளுடைய சுடிதாரை எடுத்துக்கொண்டு வந்து , அம்மா இதோட ஃப்ரெண்ட் எங்கம்மா?
அண்ணி : ஒன்றும் புரியாமல் விழிக்க..
மித்ரா : எங்கம்மா இதோட ஃப்ரெண்ட்?
அண்ணி : ட்ரெசுக்கு ஏது பாப்பா ஃப்ரெண்ட்?
மித்ரா : இந்தா இங்க இருக்கு. என்றபடி அந்த சுடிதாரின் துப்பட்டாவை எடுத்துக்கொண்டு ஓடுகிறாள்.

(சுடிதாரின் ஃப்ரெண்ட் அதன் துப்பட்டா என்பது உங்களுக்கு தெரியுமா?)

*

மொட்டைமாடியில் மித்ராவுக்கு சோறு ஊட்டுகையில்..

அண்ணி : அங்கப் பாரு பாப்பா.. அதான் அப்பா காக்கா.. அது அம்மா காக்கா..
மித்ரா : அது?
அண்ணி : அதுதான் பாப்பா காக்கா..
மித்ரா : எங்கம்மா சித்தப்பா காக்கா?

(காக்காவில் சித்தப்பாவைத் தேடுகிறாளா? சித்தப்பாவை காக்கா என்கிறாளா?)

*

ஜனனியின் அத்தை வீட்டில்..

ஜனனியின் அத்தை : மித்ரா பரவால்ல அமைதியா இருக்கா. ஜனனியா இருந்தா இந்நேரம் என்ன சட்னியாக்கியிருப்பா..
மித்ரா : ஜனனி உங்கள சட்னியாக்கினா, நான் உங்கள தோசையாக்கிடுவேன்!

(என்னா வில்லத்தனம்?)

*

வீட்டிலிருந்து கடற்கரைக்கு கிளம்பும்போது அண்ணா, அண்ணி, மித்ரா மூவரும் ஒரு பைக்கில் கிளம்ப, நான் தனியே ஒரு பைக்கில் கிளம்ப, மித்ரா சொல்லிச் சிரிக்கிறாள் : சித்தப்பா உங்க பின்னாடி உட்கார ஆள் இல்லையே..

( நான் என்ன சொல்ல? :) )

*

நான் US கிளம்பும்போது சமையல் பொருட்கள், பாத்திரங்களை அடுக்கிக்கொண்டு வந்ததைப் பார்த்த மித்ரா என்ன நினைத்துக்கொண்டாளோ, பக்கத்து வீட்டுக்காரர் ‘உங்க சித்தப்பா எதுக்கு அமெரிக்கா போயிருக்காங்க?’ என்று கேட்டபோது சொல்லியிருக்கிறாள் : ‘எங்க சித்தப்பா சமையல் வேல செய்ய போயிருக்காங்க!’

( அவ சொன்னதும் பாதி உண்மைதான் :))

Thursday, February 03, 2011

அழகு குட்டி செல்லம்

அண்ணன் மகள் மித்ராவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்து காணொளி பதிவாக...
[flashvideo filename=video/Mithra-Video/MithraBday2011.flv /]

Friday, January 21, 2011

ஜனனி மித்ரா பொங்கல் நடனம்

16 சனவரி 2010 :

பொங்கல் திருவிழா அன்று கரூரில் வீட்டருகில் நடக்கும் நடனப்போட்டியில் கலந்துகொள்வதற்காக பயங்கரமாக பயிற்சியெல்லாம் செய்துகொண்டு வந்திருந்தாள் மித்ரா. இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும்போதே மித்ராவுக்கு கண்ணைக்கட்ட, ஒரு மணி நேரம் கழித்து அவள் மேடையேறிய போது மொத்தமாக தூக்கத்தில் இருந்தவள், பாட்டுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவளைப் போல ஆடாமல் நின்று வெறுப்பேற்ற... மைக்கில் அறிவிக்கும் ஆள் வேறு 'பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று அறிவித்து இன்னும் கடுப்பேற்ற... அடுத்த பொங்கலில் மித்ராவை எப்படியாவது ஆடவைக்க அண்ணி போட்ட சபதத்தின் விளைவு :

16 சனவரி 2011 :
[flashvideo filename=video/Mithra-Video/Janani_Mithra_Dance_conv.flv /]
இந்த ஆண்டு moral support க்கு ஜனனியும் சேர்ந்துகொள்ள எப்படியோ பரிசும் வாங்கி விட்டார்கள். அந்த துணிச்சலில் அடுத்த ஆண்டு இருவரும் தனித்தனியாக களமிறங்கப் போகிறார்களாம் :)

Thursday, September 23, 2010

ஜனனிக்கு பிறந்தநாள் வாழ்த்து வீடியோ பதிவு

சில நாட்களுக்கு முன் நடந்த தொலைபேசி உரையாடல் :

அப்பா : உன் பிறந்த நாளுக்கு என்ன கிஃப்ட் ஜனனி வேணும்?
ஜனனி : தாத்தா, கிஃப்ட் எல்லாம் சர்ப்ரைசாதான் தரணும், முன்னாடியே எல்லாம் கேட்கக்கூடாது!
அண்ணன் : சர்ப்ரைஸ் எல்லாம் இல்ல ஜனனி உனக்கு என்ன வேணும்னு சொன்னாதான் முன்னாடியே வாங்கிட்டு வர முடியும்.
ஜனனி : சரி மாமா. எங்கிட்ட ஒரு வாட்ச் தான் இருக்கு. எனக்கு இன்னொரு வாட்ச் வாங்கித் தாங்க!
நான் : ஜனனி, நான் என்ன வாங்கி தரட்டும்?
ஜனனி : மாமா, நீங்க எதுவும் வாங்கித் தர வேண்டாம் மாமா. என் பெர்த்டே க்கு நீங்க வந்தீங்கன்னா அதான் மாமா எனக்கு கிஃப்ட். எப்போ மாமா வருவீங்க?
பதில் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.

அயல்நாட்டுப் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் அனுபவித்திருக்கும் நிகழ்வுதான்.
அவளுக்கென வாங்கி அனுப்ப முடியாமல் கிடக்கும் பரிசுப்பொருட்களை வெறித்தபடி உருவாக்கியதுதான் இந்த வீடியோ பதிவு.

மாமாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜனனி!

[flashvideo filename=video/HappyBirthdayJanani.flv /]

Wednesday, August 11, 2010

குழந்தை கவிதை

ஒரு கையில் புத்தகப்பையும்
மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு
பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது
புடவையணிந்த குழந்தையொன்று.
இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு
அதட்டிக்கொண்டே வருகிறாள்
சீருடையணிந்த தாயொருத்தி!

Monday, August 02, 2010

ஜனனி - தேங்காயா? தென்னமரமா?

அக்கா : ( புது வீடு கட்டிக்கொண்டிருக்கையில் பக்கத்தில் போட்டிருந்த கொட்டகை மீது நிறைய சுரைக்காய் காய்த்திருப்பதைப் பார்த்து ) இந்த சுரைக்காயெல்லாம் கடைல வாங்கினா முப்பது ரூபா நாற்பது ரூபா சொல்லுவாங்க…
ஜனனி : அப்படியாம்மா? அப்படின்னா நாம வீடு கட்டினதும் மொட்டமாடில சுரக்கா செடி வச்சிடலாம். சுரக்காயெல்லாம் வித்து வித்து நாம பணக்காரங்களா ஆகிடலாம்..
அக்கா : அடிப்பாவி.. நீ நல்லா படிச்சு பெரியாளாவன்னு பார்த்தா சுரக்கா வித்து பெரியாளாகலாங்கற…

Wednesday, July 30, 2008

பச்சக் கலர் கேரட்

ஜனனி : மாமா எங்கம்மாவும் உங்கள மாதிரி எஞ்சினியர் ஆகப்போறாங்க
அண்ணா : என்ன பாப்பா சொல்ற?
ஜனனி : ஆமா, மாமா எங்கம்மா டெய்லர் க்ளாஸ் போறாங்க, அப்றம் டெய்லர் எஞ்சினியர் ஆகிடுவாங்க!

*

ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா?
அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற?
ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் 'யாரும் மூச்சு விடக்கூடாது', 'யாரும் மூச்சு விடக்கூடாது' ன்னே சொல்றாங்கம்மா..
அக்கா : யாரும் பேசக்கூடாதுங்கறத தான் அப்படி சொல்றாங்க. மிஸ் சொல்றாங்கன்னு நீ மூச்சு விடாம இருந்துடாத பாப்பா!

*

அப்பா : என்ன ஜனனி நீ. நல்லாவே எழுத மாட்டேங்கற. நிறுத்தி நிதானமா எழுது.
ஜனனி : தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது.

இதற்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் அப்பா முழிக்க, அடுத்து அவள் சொன்னது...'நான் எப்பவும் உண்மையேதான் தாத்தா பேசுவேன். பொய்யெல்லாம் பேச மாட்டேன்'

*

அக்கா : கையெழுத்தெல்லாம் முத்து முத்தா இருக்கனும் பாப்பா.
ஜனனி : ஹைதராபாத்ல இருந்து மாமா வாங்கிட்டு வந்த முத்தாம்மா?
அக்கா : ஜனனீஈஈஈஈ, அழகா குண்டு குண்டா எழுதுன்னு சொல்றேன்.
(நல்ல வேளை பெங்களூர்ல வெடிச்ச குண்டான்னு கேட்கல)

*
அம்மா : சரி ஜனனி நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்.
ஜனனி : சரி அம்மாச்சி. மனசுல என் ஞாபகம் வந்துச்சுனா ஒடனே கெளம்பி வந்துடுங்க. காலைலயா இருந்தா வாங்க. நைட்டா இருந்தா வராதீங்க இருட்டா இருக்கும். நான் கனவுல வந்து பிஸ்கட் தர்றேன், சாப்பிட்டு தூங்கிட்டு காலைல எந்திருச்சு வந்துடுங்க.

*
ஜனனி : மாமா, நான் சின்ன பாப்பாவா, பெரிய பாப்பாவா?
நான் : நீ சின்ன பாப்பா தான்.
ஜனனி : நான் சென்னைக்குப் போனா?
நான் : சென்னைக்குப் போனா, மித்ரா சின்ன பாப்பா. நீ பெரிய பாப்பா.
ஜனனி : சேலத்துக்குப் போனா?
நான் : சேலத்துக்குப் போனா, அம்சா பெரிய பாப்பா. நீ சின்ன பாப்பா.
ஜனனி : என்ன மாமா. மாத்தி மாத்தி சொல்ற? எதாவது ஒன்னு சொல்லு மாமா!
(வர வர ஜனனி கூட என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டாள்)

*
நான் : ஜனனி, ஊருக்கு வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்?
ஜனனி : பச்சக் கலர் கேரட் வாங்கிட்டு வா மாமா.
(இனிமேல் அவளிடம் எதுவும் கேட்க் கூடாதென்று முடிவு செய்திருக்கிறேன்)

Monday, June 16, 2008

முதல் நாள் இன்று - ஒளிப்பதிவு

இன்று முதல் ஜனனிக்கு ஆசிரியைகளாக வரப்போகிறவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஜனனியிடமிருந்து அவர்களை ஆண்டவன் காப்பாற்றட்டும் :)

[flashvideo filename=video/jananikural.flv /]

Thursday, May 29, 2008

எறும்புக்கு உப்புமா வைத்த எட்டாவது வள்ளல்

காரக்குழம்பு வைத்தால் காரமாக இருக்க வேண்டுமென்பதன் புரிதலில் உப்புமா என்றால் உப்பாக இருக்க வேண்டுமென என் அக்கா தவறாக புரிந்து கொண்ட ஒரு காலைப்பொழுதில் தட்டில் வைத்த உப்புமாவை தொடாமல், தொட்டுக்கொள்ள வைத்திருந்த சர்க்கரையை மட்டும் உள்ளே தள்ளி கொண்டிருந்தாள் ஜனனி. அதைக் கவனித்த அக்கா, ‘ஜனனி, இப்போ ரெண்டு பேர்ல யார் மொதல்ல சாப்பிட்றாங்கன்னு பாக்கலாம் சரியா? தட்டுல எதுவும் மிச்சம் வைக்கக் கூடாது.’ என்று சொல்லிவிட்டு அக்காவும் சாப்பிட ஆரம்பிக்க, என்ன செய்வதென்று புரியாமல் தவித்த ஜனனி, உப்புமாவை உருண்டை உருண்டையாக உருட்டி, அக்கா குனியும்போது, பக்கத்திலிருந்த நாற்காலிக்கு அடியில் உருட்டிவிட ஆரம்பித்தாள். நான்காவது உருட்டலில் இதனைக் கவனித்து விட்ட அக்கா, நாற்காலிக்கடியில் நான்கு உப்புமா உருண்டைகளைப் பார்த்ததும், ஜனனியைப் பார்த்து முறைத்தார். சற்றும் தாமதிக்காமல் ஜனனியிடமிருந்து பதில் வந்தது – ‘அம்மா, அந்த எறும்புங்க எல்லாம் பாவம்தான? அதுக்கெல்லாம் பசிக்கும் தான? அதுக்குதான் நான் உப்புமா போட்டேன்!’



*



அக்கா : ‘வெயில் காலத்துல தண்ணி ஜில்லுனு குடிக்காத பாப்பா’

ஜனனி : ‘அப்போ night காலத்துல?’



*



அக்கா : ‘துணி தேய்க்கறவங்களே ரெண்டு நாளா வரல. தொவச்ச துணியெல்லாம் அப்படியே இருக்கு’

மாமா : ‘அவங்க வரலன்னா, முன்னாடியிருக்கிற கடைல கொடுக்க வேண்டியதுதான’

ஜனனி : ‘ஐயோ, ரெண்டு பேரும் ஏன் இப்படி வம்பு பண்றீங்க? Iron box மேல தான இருக்கு. எடுத்து தேய்ங்களேன்!’

அக்காவும், மாமாவும் கப்சிப்.



*



ஜனனி : ‘மாமா, அம்மாவ விட்டுட்டு நான் மட்டும் தனியா கரூர்ல அம்மாச்சி வீட்டுக்கு போனேனே’

நான் : ‘அப்பறம் ஏன் அம்மாகிட்டப் போறேன்னு அடுத்த நாளே திருப்பூர் ஓடிட்ட?’

ஜனனி : ‘நான் தூங்கும்போது அம்மா காத பிடிச்சுட்டு தான தூங்குவேன்? கரூர்ல அம்மாச்சி காதுதான் இருந்தது. அதான் திருப்பூர் போயிட்டேன்’



*



அக்கா : ‘குட்டி, இவளுக்கு ஸ்கூல் லீவ் விட்டதுல இருந்த எப்போ பாத்தாலும் அந்த tom & jerry CD யே போட்டு பாத்துட்டு இருக்கா. Tom & jerry பைத்தியமாவே ஆகப்போறான்னு நெனைக்கிறேன்’

அக்காவிடமிருந்து செல்பேசியைப் பிடுங்கி ஜனனி சொன்னாள் – ‘மாமா, அம்மா எப்போ பாத்தாலும் சீரியலே பாத்துட்டு இருக்காங்க. சீரியல் பைத்தியமாவே ஆகப்போறாங்க’



*



கடந்த வாரம் குடும்பம் மொத்தமும் சென்னையில் இருந்த போது ஜனனிக்கு தூக்கம் வருகிற நேரம் மட்டும் எல்லோரும் காணாமல் போய்விடுவார்கள். பின்ன என்னங்க? கத சொன்னா தூங்கனும். திரும்ப திரும்ப கதையே கேட்டுட்டு இருந்தா? அவள கத சொல்லி தூங்க வைக்கிறதுக்குள்ள எனக்கு தூக்கம் வந்து நான் உளற ஆரம்பிச்சுட்றேன். அவளுக்கு கரடிக்கதை சொல்லிட்டே வந்து தூக்கத்துல சுந்தரா ட்ராவல்ஸ் ஓட்ட ஆரம்பிச்சுட்றேன். முதல் கத சொல்லும்போது ஒவ்வொரு வரிக்கும் ‘அப்பறம் மாமா’ ன்னு கேட்டுட்டே வருவா. கொஞ்ச நேரத்துல அது ‘அப்பறம்’ னு சுருங்கும். இன்னும் கொஞ்சம் கதை ஓட்டினோம்னா, அந்த ‘அப்பறமும்’, ‘ம்ம்ம்’ னு சின்னதாகிடும். அப்புறம் நாந்தான் கத சொல்லிட்டே இருப்பேன் அவகிட்ட இருந்து சத்தமே இருக்காது. மெதுவா அவ கைய எடுத்துட்டு, போர்வைய போத்தினதும், போர்வைய விலக்கிட்டு, காத பிடிச்சுட்டு ‘வேற கத சொல்லு மாமா’ னு மறுபடியும் ஃப்ரெஷ்ஷா ஆரம்பிப்பா பாருங்க.. எனக்கு அப்பவே கண்ண கட்ட ஆரம்பிச்சுடும். அடுத்து அவளுக்கு சொல்றதா வாக்கு கொடுத்திருக்கிற கதையோட பேரு – ‘அஞ்சு தல யான முட்டக் கத’. உங்களுக்கு யாருக்காவது இந்த கதை தெரியுமா?

Sunday, February 03, 2008

நன்றி + பிடித்த பதிவு + பிறந்த நாள் வாழ்த்து!

கடந்த வாரம் நட்சத்திர வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும் வாழ்த்தியவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஒரு வாரமாய் எனது பதிவுகளை வாசித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள், மடலனுப்பியவர்கள், நேர்மையான விமர்சனம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும்… அழியாத எனது அன்பும், நன்றிகளும்!
ஒரு வாரம் தொடர்ந்து எழுதினால் அயற்சி ஏற்படுமென்பதற்கு மாறாக இன்னும் சிறப்பாக எழுதவேண்டும் என்கிற ஆவல் உண்டாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சிறுகதை எழுதப் பழக வேண்டுமென்கிற எனது ஆசை அதிகப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன். ( எனது மொக்கைகள் கவுஜை வடிவத்தில் மட்டுமல்ல கதை வடிவத்திலும் இனி உங்களை இம்சிக்கும் :) )
அனைவருக்கும் நன்றி.

***

நான் எழுதியப் பதிவுகளில் பிடித்ததொன்றைப் பற்றி பதிவிட அழைத்திருந்தார் எழில்.
எல்லாப் பதிவுகளுமே பிடித்த பதிவுகள்தாமென்றாலும், நான் எழுதிய பிற கவிதைகளின் நடையிலிருந்து மொத்தமாய் மாறுபட்டிருக்கும்
இந்தக் கவிதையெனக்கு மிகவும் பிடிக்கும்.

***

இன்று தனது முதல் பிறந்துநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் என் அண்ணன் மகள் மித்ராவுக்கும் இந்தப் பதிவில் எனது வாழ்த்துகள்!




அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, January 30, 2008

ஜனனி.. ஜனனி..

என்னுடைய தீபாவளிப் பதிவுகளைப் படித்துவிட்டு “நீங்க எழுதற கவிதைகளவிட கவித்துவமானது, ஒரு குழந்தை, அதுவும் பெண்குழந்தை வளர்வதை அருகிலிருந்து ரசிப்பது” அப்படின்னு ஒரு தோழி சொன்னாங்க. உண்மைதான். குழந்தைகளின் குறும்பும், ரகளையும் அருகிலிருந்து அனுபவிப்பதைவிட சுகமானது வேறென்ன? ஊரிலிருக்கும் சொற்ப நாட்களில் அக்கா மகள் ஜனனியின் குறும்புகளை வீடியோ/புகைப்படங்களாக எடுத்துவைத்தாலும், எழுத்தில் கொஞ்சம் பதிவுசெய்துகொண்டால், பின்னால் வாசிக்க அவளுக்கொரு மலரும் நினைவாக இருக்கட்டுமென்று இந்தப்பதிவு!

நான் : ஜனனி தமிழ் படிக்கலாமா?
ஜனனி : நீ சொல்லிக் குடு மாமா (புத்தகத்தோடு வருகிறாள்)
நான் : அ – அம்மா
ஜனனி : நல்லா சொல்லிக் குடு மாமா
நான் : நல்லாதான பாப்பா சொல்லிக் குடுக்குறேன்? அ – அம்மா (நன்றாக இடைவெளிவிட்டு சொல்கிறேன்)
ஜனனி : அப்படி இல்ல மாமா …. அ for அம்மா

(a for apple சொல்லிக் கொடுத்தபின்னாடி தமிழ் சொல்லிக் கொடுத்தா இப்படித்தான் )

***

முதல் நாள் pre kg வகுப்புக்கு போய்வந்தவளிடம்
அக்கா : பாப்பா உனக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கா?
ஜனனி : ம்ம்ம் நல்லாருக்கும்மா… லேடர் வச்ச சறுக்கல் எல்லாம் இருக்கும்மா
அக்கா : மிஸ்ச புடிச்சிருக்கா? மிஸ் கிட்ட நல்லாப் பேசினியா?
ஜனனி : அந்த மிஸ் நல்லாவே இல்லம்மா
அக்கா : என்னது நல்லாவே இல்லையா?
ஜனனி : வயசான மிஸ்சா இருக்காங்கம்மா…

(அடிப்பாவி)

***

அக்கா : ஊஞ்சல்ல இருந்து எறங்கு, இது என் தம்பி எனக்கு வாங்கிட்டு வந்தது.
ஜனனி : இது எங்க மாமா எனக்கு வாங்கிட்டு வந்தது போம்மா
அக்கா: எனக்குதான் என் தம்பி வாங்கிக் கொடுத்தான்.எறங்குறயா இல்லையா?
ஜனை : உனக்கு வேணும்னா உங்க மாமாகிட்ட போய் வாங்கிக்க போம்மா

(அதற்கு மேல் என்னப் பேச?)

***

டாம் அண்ட் ஜெர்ரி பார்த்துக்கொண்டு இருக்கும்போது,
நான் : ஜனனி, அந்த வெள்ளப் பூனை உன்ன மாதிரியே இருக்குல்ல?
ஜனனி : ம்ம்ம்….நீதான் அந்த கருப்புப் பூனை.
அக்கா : (கோபத்துடன்) ஏய், யாரடி கருப்புனு கிண்டல் பண்ற?
ஜனனி : (கூலாக, டிவியில் இருந்து முகத்தைத் திருப்பாமல்) உங்க தம்பியதாம்மா!

(கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதுன்னா இது தானா?)

***

அவள் அடம்பண்ணிய ஒரு சமயத்தில், அவளை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு,
நான் : சரி ஜனனி, நான் ஹைதராபாத் கிளம்பறேன். அப்புறம் பாக்கலாம்.
ஜனனி : ச்சும்மா இது பண்ணாத மாமா
நான் : எது பண்றேன்?
ஜனனி: பந்தாதான்!

(எத்தன தடவ பல்பு வாங்கினாலும் எனக்கும் புரியவே மாட்டேங்குது)

***

அவளுக்கு முடி வெட்டப் போன சலூனில்,
முடிவெட்டுபவர் : எந்த மாதிரிங்க வெட்டலாம்
நான் பதில் சொல்வதற்கு முன்பே,
ஜனனி : எனக்கு நீளமா வளர்ற மாதிரி வெட்டி விடுங்க
முடிவெட்டுபவர் : ???

அங்கே தலைக்கு ‘டை’யடித்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து,
ஜனனி : மாமா, அந்தத் தாத்தா தலைலேயே ட்ராயிங் வரையறாங்க (சிரித்துக்கொள்கிறாள்)
தலைக்கு ‘டை’யடித்துக் கொள்பவரும் கஷ்டப்பட்டு சிரித்துக்கொண்டார்.

***

அவளுக்கு ஒரு சிறிய குடை வாங்கிக் கொடுத்து,
நான் : தினமும் இத ஸ்கூலுக்கு எடுத்துப் போயிட்டு, வரும்போது மழை பேஞ்சுதுன்னா பிடிச்சுக்கனும் சரியா?
ஜனனி : அம்ப்ரல்லா எடுத்துட்டுப் போனா மிஸ் திட்டுவாங்க மாமா. நான் எடுத்துட்டுப் போக மாட்டேன். அம்மாதான் கொண்டு வரனும்.
நான் : மழ பேஞ்சா மிஸ்செல்லாம் அம்ப்ரல்லா எடுத்துட்டுதான் பாப்பா வருவாங்க. அதனால உன்னலாம் திட்டமாட்டாங்க.
ஜனனி : மிஸ்செல்லாம் அம்ப்ரல்லா எடுத்துட்டு வரமாட்டாங்க!
நான் : அப்பறம் எப்படி வருவாங்க?
ஜனனி : புடவ கட்டிட்டு வருவாங்க!

(கேள்வி தப்பா? பதில் தப்பா?)

***

அக்கா : நேஷனல் பேர்ட் என்ன?
ஜனனி : பீக்காக்
அக்கா : நேஷனல் ஃப்ளவர் என்ன?
ஜனனி : ( முழிக்கிறாள் )
அக்கா : ப்ளவர் னா என்ன?
ஜனனி : பூ
அக்கா: ம்ம்ம் நேஷனல் ஃப்ளவர் என்ன?
ஜனனி : அத்திப்பூக்கள்

(சன்டிவி சீரியல் வாழ்க)

***

கண்கொட்டாமல் கோலங்கள் சீரியலைப் பார்த்துக்கொண்டிருந்தவளிடம்,
நான் : என்னக்கா இப்படி பாத்துகிட்டு இருக்கா?
அக்கா : அவதான் பொறந்ததுல இருந்து என்கூட சேர்ந்து பாக்கறாளே…
நான் : ஜனனி, அவன் யாரு?
ஜனனி : அவந்தான் ஆதி. அவன் கெட்டவன். எல்லாரையும் மெரட்டிட்டே இருப்பான்.
நான் : இது யாரு?
ஜனனி: அவந்தான் தொல்காப்பியன். அவன் நல்லவன். எப்பவும் உண்மையேதான் பேசுவான்.

(கவனிக்கும் திறனை வளர்க்கிறதா? இல்லை டிவிக்கு அடிமையாக்குகிறதா இந்த சீரியல்)

***

பள்ளி விட்டு வரும்போது,
ஜனனி : ம்மா உன்னையும் தாத்தா வந்து ஸ்கூல்ல விடுவாங்களா? அம்மாச்சி வந்து கூட்டிட்டு வந்தாங்களா?
அக்கா : இல்ல பாப்பா நான்லாம் தனியாதான் போயிட்டு வந்தேன்.
ஜனனி : யாருமே உன் கூட வரலியாம்மா? தனியாவேதான் போனியா? (கண் கலங்குகிறது)
அக்கா : ஆமாப் பாப்பா.
ஜனனி : சரிம்மா. நீ பாப்பாவா ஆகி ஸ்கூலுக்குப் போ, நான் பெருசா, அம்மா ஆகி உன்ன வந்து ஸ்கூல்ல கூட்டிட்டு வர்றேன்.

(உட்காந்து யோசிப்பாளோ?)

***

திருப்பூரில் இருந்து கரூர் கிளம்பும்போது,
அக்கா : உன்னோட ட்ரஸ் எல்லாம் எடுத்து பைல வை பாப்பா.
ஜனனி : (அவசரமாக ஒரு பொம்மைத் துப்பாக்கியை எடுத்து உள்ளே வைக்கிறாள்)
அக்கா : இத எதுக்குடி எடுத்து வைக்கிற?
ஜனனி : ரவுடிங்க வந்தா நான் உன்னக் காப்பாத்தனும்ல?

(தமிழ் சினிமா வாழ்க)

***

பள்ளியில் சேர்ந்த முதல் வாரத்தின் ஒரு நாளில்…
மிஸ் : எல்லாரும் டைரி கொண்டு வந்து வைங்க!
ஜனனியைத் தவிர எல்லோரும் வைக்கிறார்கள்.
மிஸ் : எல்லாரும் வச்சாச்சா? இன்னும் யாரோ ஒருத்தங்க வைக்கலியே? யாரது.
ஜனனி : மெதுவாக எழூந்து போய் டைரியை நீட்டுகிறாள்.
மிஸ் : இவ்வளவு நேரம் கேட்டேன்ல… ஏன் வந்து வைக்கல?
ஜனனி (அக்காவிடம் சொல்வது போலவே) : அதான் இப்போ கொண்டு வந்து தர்றேன்ல?
மிஸ் : என்னது?
ஜனனி : (பவ்யமாக) அதான் இப்போ தர்றேன் இல்லைங் மிஸ்?

( மிஸ்சும் சிரித்து விட்டாராம்)



அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, November 14, 2007

இந்த தீபாவளி… இப்படி…

தீபாவளியை அதன் காரணங்களுக்காக என்றுமே கொண்டாடியதில்லை நான். எனினும் பட்டாசு, புத்தாடை இனிப்பு இவை மட்டுமே தீபாவளியைக் கொண்டாட போதுமான காரணிகளாய் இருந்த காலமும் பத்தாண்டுகளுக்கு முன்பே கரைந்து போய் விட்டது. இந்த முறை தீபாவளிக்கு வீட்டுக்கு சென்றிருந்த போது தீபாவளியை பின்னுக்குத் தள்ளி குடும்பத்தின் முழுக் கொண்டாட்டத்தையும் தனியொருத்தியாய் ஆக்கிரமித்துக் கொண்டாள் அக்காவின் மகள் ஜனனி.


அவளுக்குப் பிடித்த இனிப்பு, அவள் வெடிக்க பட்டாசு, அவள் கேட்ட சுடிதார், அவள் கேட்ட crayons என குடும்பத்தில எல்லோருக்கும், இந்த தீபாவளியின் முன் தயாரிப்புகள் எல்லாமே, அவளைச் சுற்றியேதான் இருந்தது. வீட்டுக்கு அவள் வந்ததில் இருந்து, கிளம்பி செல்லும் வரை எல்லோரையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைக்க முடிந்திருக்கிறது அவளால். மூன்று நாட்களின் எந்த நிமிடத்தையும் அவளோடு இல்லாத காலமாக கணக்கிட முடியவில்லை.

அவளோடு ஒளிந்து விளையாடும்போது, விளையாட்டின் விதி இரண்டே இரண்டு தான். ஒளிந்து கொள்வது நீங்கள் என்றால், அவள் சொல்கிற இடத்தில் தான் நீங்கள் ஒளிந்து கொள்ள வேண்டும். பத்து வரை எண்ணிவிட்டு அவள் சொன்ன இடத்தில் ஒளிந்திருக்கும்(?) உங்களைச் சரியாக வந்து கண்டுபிடித்து(!) விடுவாள். நீங்கள் தோற்றுப் போவீர்கள். கண்டுபிடிக்க வேண்டியது நீங்கள் என்றால், எத்தனை முறை விளையாடினாலும் அவள் ஒளிந்து கொள்ளப்போவது அதே கதவு சந்துதான் என்று தெரிந்தாலும் அதனைத் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் நீங்கள் தேட வேண்டும். கண்டுபிடிக்க முடியாமல் நீங்கள் மீண்டும் தோற்றுப் போக “நான் இங்க இருக்கேன்” என கதவு சந்தில் இருந்து அவள் வெற்றிப் புன்னகையுடன் ஓடி வருவாள். அவளோடு விளையாடும் இந்த விளையாட்டில் இந்த இரண்டும்தான் திரும்ப திரும்ப நடைபெறுகிறதென்றாலும் அந்த சுவாரசியம் கடைசி வரை குறையாமல் இருப்பதற்கு என்ன காரணமெனத் தெரியவில்லை.



சாப்பிடும்போதும், தூங்கும்போதும் அவளுக்கு தேவையானவை உணவும், மடியும் மட்டுமல்ல, கேட்டுக் கொண்டே சாப்பிடுவதற்கு/தூங்குவதற்கு சில கதைகளும். கதையைத் தவறாக சொன்னால் அதை திருத்துகிற அளவுக்கு, அவை ஏற்கனவே கேட்ட கதைகளாக இருந்தாலும், மீண்டும் கேட்பதில் அவளுக்கு அதே ஆர்வம் இருக்கதான் செய்கிறது. ஒருமுறை அவளை தூங்க வைக்க கதை சொல்லிக்கொண்டே நான் தூங்கிப் போக என்னை எழுப்பி ‘மாமா அந்த நரிக்கத சொல்லு மாமா’ என்று விடாமல் கேட்கிறாள். அவளுக்காக அனிமேசனில் கதை சொல்லும் சிடிக்கள் வாங்கி வந்து தொலைக்காட்சியில் ஓடவிட்டபோது, கரடிக்கதை, விறகுவெட்டி கதை, முதலைக் கதை என ஏற்கனவே அக்கா சொன்ன அத்தனைக் கதைகளும் அங்கே காட்சிகளோடு வந்து கொண்டிருந்தன. முன்பு அக்கா சொல்ல சொல்ல அவளாக மனதில் உருவாக்கிக் கொண்ட காட்சிகள் எப்படியிருந்தனவோ தெரியவில்லை, தொலைக்காட்சியில் எல்லாக் கதைகளுக்கும் அனிமேசன் காட்சிகள் வர வர அவளால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. “இப்ப கரடி வந்துடும், ராமு மரத்துல ஏறிக்குவான், சோமு கீழப் படுத்துக்குவான்” என அடுத்து என்ன நிகழப் போகிறதென அவள் சொல்ல, அதுவே அங்கே காட்சியாகவும் வர… அப்போது அவள் முகத்தில கண்ட பூரிப்பு ஆயிரம் பூக்களுக்குச் சமம்.

என் அம்மா அவளை எதற்கோ மிரட்டிவிட அழுது கொண்டே என்னிடம் வந்தவளை சமாதானப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு அம்மாவை பொய்யாக நான் ஒரு அடி வைக்க, நிஜமாகவே எனக்கு கன்னத்தில் ஒரு குத்து விழுந்தது அவளிடமிருந்து. எத்தனை மிரட்டினாலும் அவள் அம்மாச்சியை யாரும் அடிக்கக் கூடாதாம். ம்ம்ம்… இந்த தாத்தா- பாட்டிகளுக்கும், பேரன் – பேத்திகளுக்குமிடையே அப்படி என்னதான் பாசம் இருக்குமோ தெரியவில்லை. கடைசியில் அவர்கள் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். நாம் பொது எதிரியாகி விடுகிறோம்.


அவளுக்கு இணையாக போட்டி போட முடியா விட்டாலும் வீடே அதிர சத்தம் போட்டு தனது இருப்பை அவ்வப்போது உணர்த்தி விடுகிறாள், அண்ணன் மகள் மித்ரா. இவள் இன்னும் நடக்க/பேச ஆரம்பிக்கவில்லையென்பதால் கொஞ்சம் சமாளிக்க முடிகிறது. இவளும் வளர்ந்துவிட்டடல் அடுத்த தீபாவளி இரட்டை வெடியாகதான் இருக்கும் :-)



எல்லாக் குழந்தைகளையும் போலவே கேள்விகள் கேட்டு அதற்கு நம்மிடமிருந்து பதில் வாங்குவது அவளுக்குப் பிடித்தமான இன்னொன்று. அதிக சளியால் அவளை மருத்துவரிடம் கூட்டிச் சென்ற போது,

“எப்போம்மா டாக்டர் வருவாங்க?”

“டாக்டர் பேசிக்கிட்டு இருக்காங்களாம்… இப்போ வந்துடுவாங்க”

“என்னம்மா பேசிக்கிட்டு இருக்காங்க?”

“அவங்க பிரெண்ட் கூட பேசிட்டு இருக்காங்களாம். நீ இந்த மாதிரி சத்தம் போட்டா அப்புறம் உனக்கு ஊசி போட்டுடுவாங்க”

கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தவள் மறுபடியும்,

“எதுக்கும்மா இவங்கல்லாம் வந்திருக்காங்க?”

“எல்லாருக்கும் உன்ன மாதிரி சளி புடிச்சிருக்கு…அதான் டாக்டர்கிட்ட வந்திருக்காங்க”

“எப்படிம்மா இவங்களுக்குலாம் சளி புடிச்சிச்சு?”

“உன்ன மாதிரியே அவங்களும் தண்ணியில விளையாண்டாங்களாம் அதான் சளி புடிச்சிக்கிச்சு”

“ஏம்மா தண்ணியில விளையாண்டாங்க?”

“அதெல்லாம் அம்மாவுக்குத் தெரியாது பாப்பா… அவங்கள தான் கேட்கனும்”

அங்கிருப்பவர்களிடம் கேட்பதற்கு அவள் போக, அவளை இழுத்து அண்ணனிடம் விட்டு அக்கா எஸ்கேப் ஆகிவிட,

“ஏன் மாமா… அவங்க தண்ணியில வெளையாண்டாங்க?”

பதில் சொல்ல ஆரம்பித்தால், இப்போதைக்கு இது முடியாது என்பதை உணர்ந்த அண்ணன், கேட்டான்…

“ஆமா கண்ணு… ஏன் அவங்க தண்ணியில வெளையாண்டாங்க?”

அதன்பிறகு அமைதியாகி விட்டாள் :-)

சொல்லிக்கொடுப்பதைத் திருப்பி சொல்லிவிட்டாலே அந்த குழந்தையைப் பாராட்டும் போது, யாரும் சொல்லித் தராமலே வெளியில் பார்த்துணர்ந்து அவள் பேசுகிற/ செய்கிறவை ஆச்சர்யமளிக்கின்றன. யாரும் சொல்லித் தராமலேயே சுடிதாரின் துப்பட்டாவை எல்லா விதமாகவும் அணிந்து கொள்கிறாள். குடும்பத்தில் எல்லோருக்குமிடையே இருக்கும் உறவுமுறையை அவளால் யாரும் சொல்லித் தராமலேயே தெரிந்து கொள்ள முடிகிறது.


அவளுக்கு என்று வீட்டில் சில இடங்கள் இருக்கின்றன. கோபித்துக் கொண்டு உட்கார்ந்து கொள்ள ஒரு வெளிவாசல்படி, ஒளிந்துகொள்ள ஒரு கதவுசந்து, பொம்மையோடு விளையாட மாடிப்படி, நீரோடு விளையாட துணி துவைக்கிற இடம் இப்படி…தண்ணீரில் விளையாடினால் சளி பிடிக்கும் என்றும் தெரிகிறது. சளி பிடித்தால் ஊசிப் போடப்படும் என்றும் தெரிகிறது. ஆனாலும் தண்ணீரை விட்டுப் பிரிவதில்லை அவள்.அவளைப் போலவே கையில் அகப்படாமல் ஓடிக்கொண்டே இருப்பதால்தான் அவளுக்கு தண்ணீரையும் பிடித்துப் போனதோ என்னமோ. குழாயில் தண்ணீரை நிரப்பி விளையாடுவதற்காகவே துணி துவைக்கிற இடம் வாகாக அமைந்துவிடுகிறது அவளுக்கு. கடைக்குப் போகும்போது கூடவே வருவதில் அப்படியென்ன சுகமோ இந்த குழந்தைகளுக்கு. ஓவ்வொரு முறையும் கடையில் ஏதேனும் ஒன்று (எப்படியும் உடையப் போகிறது எனத் தெரிந்தாலும் ஒரு பலூனோ, கண்ணாடியோ வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும்) வாங்கிக் கொள்கிறாள்.

பெரியவர்களைப் போல, அறிமுகமில்லாத புதியவர்களிடம் பேசுவதற்கு அவளுக்கு எவ்வித கூச்சமும் இல்லை. வாசலில் நின்று ஓடிக்கொண்டிருக்கிற கோழியையும், நாய்க்குட்டிகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், தெருவில் போய்க்கொண்டிருந்த ஓர் அம்மாவை அழைத்தாள்.

“ஏங்க… இங்க வாங்க”

“என்ன பாப்பா? உம் பேரென்ன”

“என் பேரு ஜனனி. இது எங்க அம்மாச்சி வீடு தெரியுமா?”

“ஓ அம்மாச்சி வீட்டுக்கு வந்திருக்கியா?…உங்க வீடு எங்க இருக்கு?”

“எங்க வீடு திருப்பூர்ல இருக்கு. இது எங்க தாத்தா புதுசா கட்டின வீடு. நல்லா இருக்குதா?”

“ம்ம்ம் நல்லா இருக்கு கண்ணு”

“சரி போங்க”

சிரித்துக் கொண்டே போய் விட்டார் அவரும்.




ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன் அவளிடம் சொன்னேன் - “ஜனனி இப்போ இங்க அம்மாச்சி வீட்ல இருக்கிற மாதிரியே திருப்பூர் போயும் இருக்க கூடாது. அடம் பண்ணாம ஸ்கூல் போய் நல்லாப் படிக்கனும் சரியா?”

அதற்கு அவள் சொன்ன பதில் -

“ஹையோ மாமா… உங்கக்காதான் காலைலயே என்ன குளிக்க வச்சு, யூனிஃபார்ம் போட்டு, லஞ்ச் எல்லாம் பாக்ஸ்ல போட்டு ஸ்கூல்ல கொண்டு வந்து விட்றாங்களே… சாயங்காலமும் ஸ்கூல் வந்து என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வர்றாங்க… எனக்கு A, B, C, D எழுத வைக்கிறாங்க… எல்லாம் பண்றாங்கல்ல? உங்கக்கா இருக்கும்போது எனக்கென்ன மாமா?”

அவளுக்கு மூன்று வயது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? இதுவரை யாரும் நம்பவில்லை.

குழந்தை (உள்ள(ம் கொண்ட)) வலைப்பதிவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் நாள் வாழ்த்துகள் :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.