Friday, November 30, 2007

அன்பே காதல் இமை மழை குடை


இந்த பதிவெழுதத் தூண்டிய அய்யனாருக்கு நன்றி :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Monday, November 19, 2007

என்னாது? எனக்கு கூட ‘போலி’யா??? :-)

நம்ம பேர்ல வேற ஒருத்தர் எழுதினா அவர போலினு சொல்லலாம்
நாம எழுதினத, மத்தவங்க அவங்க பேர்ல எழுதினா அவங்கள என்னனு சொல்ல?

இது நான் எப்பவோ எழுதினது.

அதுல ஒரு பகுதி
இங்கே நாசர் என்பவர் பெயரில் இருக்கிறது

இதைப் போலவே என்னுடைய இன்னும் சில பதிவுகளும் அவர் பெயரில் அங்கே இருக்கின்றன.

நான் எழுதிய
காதல் கூடம் முதலான சில பதிவுகள், இந்த Forum –இல் காதலன் என்பவர் பெயரில் இருக்கின்றன. இங்கே உள்நுழைந்து பார்க்க முடியாததால் என் பக்கத்திற்கு லிங்க் எதுவும் கொடுத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. கொடுத்திருந்தால் நன்றி.

இதே போல ஆர்க்குட்டில் சில கவிதை குழுக்களில் நான் எழுதிய சில கவுஜைகளை மற்றவர்கள் பெயரில் பார்த்துவிட்டு, எழுதியவருக்கு மடலனுப்பினால் ரிப்லை இல்லை. ஸ்க்ராப் பண்ணினால் மிக வேகமாக அதனை டெலிட் செய்து விடுகிறார் :) இப்போது அலுவலகத்தில் ஆர்க்குட் தடை செய்யப்பட்டிருப்பதால் ஆர்க்குட் பக்கம் எட்டிப் பார்த்து மாதங்களாகிவிட்டது.

இப்படியெல்லாம் நடக்கிறதென்றுதான் நண்பன் ஒருவன் சொன்ன மாதிரி, கவிதைகளை எழுதி அனுப்பாமல், Paint –இல் பிக்சராக எழுதி ஒரு ஓரமாக நம்ம வலைப் பக்க முகவரியும் எழுதி
படங்களாக அனுப்பினேன். எங்கேப் போனாலும் நம்ம முகவரியும் கூடவேப் போகும் என்று ;-) ஆனால் அதையும் கில்லாடிகள், படத்தில் இருக்கும் வலைப்பக்க முகவரியை மட்டும் வெட்டிவிட முயற்சி செய்திருக்கிறார்கள். அதில் வலைப் பக்க முகவரியை வெட்டினால் கவிதை வரியும் கொஞ்சம் சேதாரமாகும் என்ற நிலையில் சில படங்களில் மட்டும் வெட்ட முடியாமல் போய் விட்டது என்று நினைக்கிறேன். முகவரியில்லாத கவிதைப் படங்கள் சில இங்கேஇப்பொழுதெல்லாம் எல்லாப் படத்திலும் குறுக்கும் நெடுக்குமாக வலைப்பக்க முகவரியோ, மின்னஞ்சல் முகவரியோ போட்டு விடுகிறேன். எனக்கே இது ஓவராகத்தான் தெரிகிறது :-) ஆனால் வேறு வழியில்லை.

இன்னொருவர் என் பதிவுகளுக்காக
தனியே ஒரு வலைப்பதிவே ஆரம்பித்துவிட்டார். கடைசி வரியில் மட்டும் இவர் பெயரைப் போட்டுக் கொண்டாலும் இவர் கொஞ்சம் நல்லவர். எல்லாப் பதிவுகளுக்கும் இரண்டு லிங்க் கொடுத்திருக்கிறார். ஒன்று இவர் பதிவுக்குப் போகும். இரண்டாவது என்னுடைய பதிவுக்கு வரும் :-)

புத்தகமாகப் போட்டால் தான் நாம் எழுதுவதற்கு எல்லாம் காப்பிரைட் கிடைக்குமோ??? மக்கா, நான் எழுதினத யாரும் எங்கேயும் எடுத்துப் போடக்கூடாதுனு எல்லாம் சொல்லல. அப்படி போடும்போது என்னோட பக்கத்துக்கும் ஒரு லின்க் கொடுத்திடுங்கனு மட்டும் தான் சொல்ல விரும்பறேன். நன்றி.


***

இன்னொரு Forum – இல் என்னுடைய கவிதையை சிறந்த காதல் கவிதையாக குறிப்பிட்டிருந்தார் வெங்கிராஜா என்பவர். அவருக்கு நன்றி. ஆனாலவருக்கு, நான் பெரிய கவிஞனாக இருப்பேனோ என்று என்னைப் பற்றி தவறான எண்ணமும் இருக்கிறது போல.
இங்கே தபூ சங்கரைப் பற்றி குறிப்பிடும்போது “இவர் அருட்பெருங்கோ என்ற துணைக்கவிஞரோடு இணைந்தும் கவி புனைவார்” என்று இருக்கிறது :-) அண்ணே, நான் தபூ சங்கர நேர்ல பாத்தது கூட கிடையாது :-) அவரோட சில புத்தகங்கள மட்டும் தான் வாசிச்சிருக்கேன்.

***

இந்தப் பதிவில் எதாவது கவுஜை எழுதியிருப்பேன் என்று நம்பி வந்தவர்கள் மன்னிக்கவும். புதன் கிழமையன்று கொஞ்சம் அழுகாச்சி கவுஜைகள் போடுகிறேன் ;-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, November 14, 2007

இந்த தீபாவளி… இப்படி…

தீபாவளியை அதன் காரணங்களுக்காக என்றுமே கொண்டாடியதில்லை நான். எனினும் பட்டாசு, புத்தாடை இனிப்பு இவை மட்டுமே தீபாவளியைக் கொண்டாட போதுமான காரணிகளாய் இருந்த காலமும் பத்தாண்டுகளுக்கு முன்பே கரைந்து போய் விட்டது. இந்த முறை தீபாவளிக்கு வீட்டுக்கு சென்றிருந்த போது தீபாவளியை பின்னுக்குத் தள்ளி குடும்பத்தின் முழுக் கொண்டாட்டத்தையும் தனியொருத்தியாய் ஆக்கிரமித்துக் கொண்டாள் அக்காவின் மகள் ஜனனி.


அவளுக்குப் பிடித்த இனிப்பு, அவள் வெடிக்க பட்டாசு, அவள் கேட்ட சுடிதார், அவள் கேட்ட crayons என குடும்பத்தில எல்லோருக்கும், இந்த தீபாவளியின் முன் தயாரிப்புகள் எல்லாமே, அவளைச் சுற்றியேதான் இருந்தது. வீட்டுக்கு அவள் வந்ததில் இருந்து, கிளம்பி செல்லும் வரை எல்லோரையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைக்க முடிந்திருக்கிறது அவளால். மூன்று நாட்களின் எந்த நிமிடத்தையும் அவளோடு இல்லாத காலமாக கணக்கிட முடியவில்லை.

அவளோடு ஒளிந்து விளையாடும்போது, விளையாட்டின் விதி இரண்டே இரண்டு தான். ஒளிந்து கொள்வது நீங்கள் என்றால், அவள் சொல்கிற இடத்தில் தான் நீங்கள் ஒளிந்து கொள்ள வேண்டும். பத்து வரை எண்ணிவிட்டு அவள் சொன்ன இடத்தில் ஒளிந்திருக்கும்(?) உங்களைச் சரியாக வந்து கண்டுபிடித்து(!) விடுவாள். நீங்கள் தோற்றுப் போவீர்கள். கண்டுபிடிக்க வேண்டியது நீங்கள் என்றால், எத்தனை முறை விளையாடினாலும் அவள் ஒளிந்து கொள்ளப்போவது அதே கதவு சந்துதான் என்று தெரிந்தாலும் அதனைத் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் நீங்கள் தேட வேண்டும். கண்டுபிடிக்க முடியாமல் நீங்கள் மீண்டும் தோற்றுப் போக “நான் இங்க இருக்கேன்” என கதவு சந்தில் இருந்து அவள் வெற்றிப் புன்னகையுடன் ஓடி வருவாள். அவளோடு விளையாடும் இந்த விளையாட்டில் இந்த இரண்டும்தான் திரும்ப திரும்ப நடைபெறுகிறதென்றாலும் அந்த சுவாரசியம் கடைசி வரை குறையாமல் இருப்பதற்கு என்ன காரணமெனத் தெரியவில்லை.சாப்பிடும்போதும், தூங்கும்போதும் அவளுக்கு தேவையானவை உணவும், மடியும் மட்டுமல்ல, கேட்டுக் கொண்டே சாப்பிடுவதற்கு/தூங்குவதற்கு சில கதைகளும். கதையைத் தவறாக சொன்னால் அதை திருத்துகிற அளவுக்கு, அவை ஏற்கனவே கேட்ட கதைகளாக இருந்தாலும், மீண்டும் கேட்பதில் அவளுக்கு அதே ஆர்வம் இருக்கதான் செய்கிறது. ஒருமுறை அவளை தூங்க வைக்க கதை சொல்லிக்கொண்டே நான் தூங்கிப் போக என்னை எழுப்பி ‘மாமா அந்த நரிக்கத சொல்லு மாமா’ என்று விடாமல் கேட்கிறாள். அவளுக்காக அனிமேசனில் கதை சொல்லும் சிடிக்கள் வாங்கி வந்து தொலைக்காட்சியில் ஓடவிட்டபோது, கரடிக்கதை, விறகுவெட்டி கதை, முதலைக் கதை என ஏற்கனவே அக்கா சொன்ன அத்தனைக் கதைகளும் அங்கே காட்சிகளோடு வந்து கொண்டிருந்தன. முன்பு அக்கா சொல்ல சொல்ல அவளாக மனதில் உருவாக்கிக் கொண்ட காட்சிகள் எப்படியிருந்தனவோ தெரியவில்லை, தொலைக்காட்சியில் எல்லாக் கதைகளுக்கும் அனிமேசன் காட்சிகள் வர வர அவளால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. “இப்ப கரடி வந்துடும், ராமு மரத்துல ஏறிக்குவான், சோமு கீழப் படுத்துக்குவான்” என அடுத்து என்ன நிகழப் போகிறதென அவள் சொல்ல, அதுவே அங்கே காட்சியாகவும் வர… அப்போது அவள் முகத்தில கண்ட பூரிப்பு ஆயிரம் பூக்களுக்குச் சமம்.

என் அம்மா அவளை எதற்கோ மிரட்டிவிட அழுது கொண்டே என்னிடம் வந்தவளை சமாதானப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு அம்மாவை பொய்யாக நான் ஒரு அடி வைக்க, நிஜமாகவே எனக்கு கன்னத்தில் ஒரு குத்து விழுந்தது அவளிடமிருந்து. எத்தனை மிரட்டினாலும் அவள் அம்மாச்சியை யாரும் அடிக்கக் கூடாதாம். ம்ம்ம்… இந்த தாத்தா- பாட்டிகளுக்கும், பேரன் – பேத்திகளுக்குமிடையே அப்படி என்னதான் பாசம் இருக்குமோ தெரியவில்லை. கடைசியில் அவர்கள் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். நாம் பொது எதிரியாகி விடுகிறோம்.


அவளுக்கு இணையாக போட்டி போட முடியா விட்டாலும் வீடே அதிர சத்தம் போட்டு தனது இருப்பை அவ்வப்போது உணர்த்தி விடுகிறாள், அண்ணன் மகள் மித்ரா. இவள் இன்னும் நடக்க/பேச ஆரம்பிக்கவில்லையென்பதால் கொஞ்சம் சமாளிக்க முடிகிறது. இவளும் வளர்ந்துவிட்டடல் அடுத்த தீபாவளி இரட்டை வெடியாகதான் இருக்கும் :-)எல்லாக் குழந்தைகளையும் போலவே கேள்விகள் கேட்டு அதற்கு நம்மிடமிருந்து பதில் வாங்குவது அவளுக்குப் பிடித்தமான இன்னொன்று. அதிக சளியால் அவளை மருத்துவரிடம் கூட்டிச் சென்ற போது,

“எப்போம்மா டாக்டர் வருவாங்க?”

“டாக்டர் பேசிக்கிட்டு இருக்காங்களாம்… இப்போ வந்துடுவாங்க”

“என்னம்மா பேசிக்கிட்டு இருக்காங்க?”

“அவங்க பிரெண்ட் கூட பேசிட்டு இருக்காங்களாம். நீ இந்த மாதிரி சத்தம் போட்டா அப்புறம் உனக்கு ஊசி போட்டுடுவாங்க”

கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தவள் மறுபடியும்,

“எதுக்கும்மா இவங்கல்லாம் வந்திருக்காங்க?”

“எல்லாருக்கும் உன்ன மாதிரி சளி புடிச்சிருக்கு…அதான் டாக்டர்கிட்ட வந்திருக்காங்க”

“எப்படிம்மா இவங்களுக்குலாம் சளி புடிச்சிச்சு?”

“உன்ன மாதிரியே அவங்களும் தண்ணியில விளையாண்டாங்களாம் அதான் சளி புடிச்சிக்கிச்சு”

“ஏம்மா தண்ணியில விளையாண்டாங்க?”

“அதெல்லாம் அம்மாவுக்குத் தெரியாது பாப்பா… அவங்கள தான் கேட்கனும்”

அங்கிருப்பவர்களிடம் கேட்பதற்கு அவள் போக, அவளை இழுத்து அண்ணனிடம் விட்டு அக்கா எஸ்கேப் ஆகிவிட,

“ஏன் மாமா… அவங்க தண்ணியில வெளையாண்டாங்க?”

பதில் சொல்ல ஆரம்பித்தால், இப்போதைக்கு இது முடியாது என்பதை உணர்ந்த அண்ணன், கேட்டான்…

“ஆமா கண்ணு… ஏன் அவங்க தண்ணியில வெளையாண்டாங்க?”

அதன்பிறகு அமைதியாகி விட்டாள் :-)

சொல்லிக்கொடுப்பதைத் திருப்பி சொல்லிவிட்டாலே அந்த குழந்தையைப் பாராட்டும் போது, யாரும் சொல்லித் தராமலே வெளியில் பார்த்துணர்ந்து அவள் பேசுகிற/ செய்கிறவை ஆச்சர்யமளிக்கின்றன. யாரும் சொல்லித் தராமலேயே சுடிதாரின் துப்பட்டாவை எல்லா விதமாகவும் அணிந்து கொள்கிறாள். குடும்பத்தில் எல்லோருக்குமிடையே இருக்கும் உறவுமுறையை அவளால் யாரும் சொல்லித் தராமலேயே தெரிந்து கொள்ள முடிகிறது.


அவளுக்கு என்று வீட்டில் சில இடங்கள் இருக்கின்றன. கோபித்துக் கொண்டு உட்கார்ந்து கொள்ள ஒரு வெளிவாசல்படி, ஒளிந்துகொள்ள ஒரு கதவுசந்து, பொம்மையோடு விளையாட மாடிப்படி, நீரோடு விளையாட துணி துவைக்கிற இடம் இப்படி…தண்ணீரில் விளையாடினால் சளி பிடிக்கும் என்றும் தெரிகிறது. சளி பிடித்தால் ஊசிப் போடப்படும் என்றும் தெரிகிறது. ஆனாலும் தண்ணீரை விட்டுப் பிரிவதில்லை அவள்.அவளைப் போலவே கையில் அகப்படாமல் ஓடிக்கொண்டே இருப்பதால்தான் அவளுக்கு தண்ணீரையும் பிடித்துப் போனதோ என்னமோ. குழாயில் தண்ணீரை நிரப்பி விளையாடுவதற்காகவே துணி துவைக்கிற இடம் வாகாக அமைந்துவிடுகிறது அவளுக்கு. கடைக்குப் போகும்போது கூடவே வருவதில் அப்படியென்ன சுகமோ இந்த குழந்தைகளுக்கு. ஓவ்வொரு முறையும் கடையில் ஏதேனும் ஒன்று (எப்படியும் உடையப் போகிறது எனத் தெரிந்தாலும் ஒரு பலூனோ, கண்ணாடியோ வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும்) வாங்கிக் கொள்கிறாள்.

பெரியவர்களைப் போல, அறிமுகமில்லாத புதியவர்களிடம் பேசுவதற்கு அவளுக்கு எவ்வித கூச்சமும் இல்லை. வாசலில் நின்று ஓடிக்கொண்டிருக்கிற கோழியையும், நாய்க்குட்டிகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், தெருவில் போய்க்கொண்டிருந்த ஓர் அம்மாவை அழைத்தாள்.

“ஏங்க… இங்க வாங்க”

“என்ன பாப்பா? உம் பேரென்ன”

“என் பேரு ஜனனி. இது எங்க அம்மாச்சி வீடு தெரியுமா?”

“ஓ அம்மாச்சி வீட்டுக்கு வந்திருக்கியா?…உங்க வீடு எங்க இருக்கு?”

“எங்க வீடு திருப்பூர்ல இருக்கு. இது எங்க தாத்தா புதுசா கட்டின வீடு. நல்லா இருக்குதா?”

“ம்ம்ம் நல்லா இருக்கு கண்ணு”

“சரி போங்க”

சிரித்துக் கொண்டே போய் விட்டார் அவரும்.
ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன் அவளிடம் சொன்னேன் - “ஜனனி இப்போ இங்க அம்மாச்சி வீட்ல இருக்கிற மாதிரியே திருப்பூர் போயும் இருக்க கூடாது. அடம் பண்ணாம ஸ்கூல் போய் நல்லாப் படிக்கனும் சரியா?”

அதற்கு அவள் சொன்ன பதில் -

“ஹையோ மாமா… உங்கக்காதான் காலைலயே என்ன குளிக்க வச்சு, யூனிஃபார்ம் போட்டு, லஞ்ச் எல்லாம் பாக்ஸ்ல போட்டு ஸ்கூல்ல கொண்டு வந்து விட்றாங்களே… சாயங்காலமும் ஸ்கூல் வந்து என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வர்றாங்க… எனக்கு A, B, C, D எழுத வைக்கிறாங்க… எல்லாம் பண்றாங்கல்ல? உங்கக்கா இருக்கும்போது எனக்கென்ன மாமா?”

அவளுக்கு மூன்று வயது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? இதுவரை யாரும் நம்பவில்லை.

குழந்தை (உள்ள(ம் கொண்ட)) வலைப்பதிவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் நாள் வாழ்த்துகள் :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, November 06, 2007

Monday, November 05, 2007

கல்யாண வீட்ல மொய் எழுதியிருக்கீங்களா?

முன்னலாம் கல்யாண வீடுகள்ல ஒவ்வொரு வேலையையும் செய்யறதுக்குனு சொந்தக்காரங்கள்ல சில நிபுணர்கள் இருப்பாங்க.

ஸ்டோர் ரூம் பாத்துக்கிறதுக்குனு ஒருத்தர் இருப்பார். சமையல் காரங்க சொன்ன அளவவிட கொஞ்சம் அதிகமாவேதான் நாம பொருட்கள் எல்லாம் வாங்கிப் போடுவோம். அத அளவா வேணுங்கும்போது மட்டும் கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணி கால்வாசிப் பொருட்கள மிச்சம் பண்ணி கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துடுவாங்க இந்த ஸ்டோர் கீப்பர்ஸ்.

அப்புறம் பந்தி பரிமாறுவதும் ஒரு கலை. வரிசையா ஒவ்வொரு ஐட்டமா வச்சிட்டுப் போறதுதானன்னு சாதாரணமா நெனச்சுட முடியாது. பந்தியில பொதுவா யாருமே என்ன வேணும்னு கேட்கிறதுக்கு தயங்குவாங்க. அவங்க முகக்குறிய வச்சே என்ன வேணும்னு கேட்டுப் பரிமாறுறதுல இருந்து, எவ்வளவு பேர் சாப்பிட்டாங்க, இன்னும் எவ்வளவு பேர் வருவாங்க, என்னென்ன ஐட்டம் தீந்து போச்சு, பத்தலன்னா ரெடி மேடா என்ன செய்யலாம்? இப்படி முடிவெடுக்கிற வல்லமை படைச்ச ஆளுங்க தான் இதுக்கெல்லாம் லாயக்கு.

அடுத்தது பந்தல், மேளம், போக்குவரத்து வசதி, லைட் செட், மேடை அலங்காரம் இப்படி அததுக்குனு இருக்கிற ஆளுங்களப் பிடிச்சி சேர்க்கிறதுக்கு நல்ல வெளிவட்டார தொடர்பு இருக்கிற ஆளு வேணும். கடைசி நேரத்துல எது வேணும்னாலும் இவருகிட்ட சொன்னா போதும் எங்க இருந்தோ, எப்படினோ தெரியாது ஆனா கேட்டது கிடைச்சிடும். எப்பவும் கல்யாணம் முடிஞ்சு மண்டபத்த விட்டு கடைசியா போற ஆளு இவராத்தான் இருப்பாரு.

ஆனா இப்போ இந்த மாதிரி எல்லா வேலைகளையும் அவுட்சோர்சிங் பண்ணிடறாங்க. சமையல் + பரிமாற ஒரே காண்ட்ராக்ட். யூனிஃபார்ம போட்டுகிட்டு அவங்களும் மெசின் மாதிரி வேலைய முடிச்சிட்றாங்க. அப்புறம் மண்டபம் + மேடை + பந்தல் எல்லாம் ஒரே கணக்கில் வந்துடுது. எதுக்கும் பெரிசா அலைய வேண்டியதில்லை. ஆனா எல்லா வேலையும் இப்படி அவுட்சோர்சிங்க்ல போனாலும் இன்னமும் சொந்தக்காரங்களே பாத்துக்கிட்டு இருக்கிற வேலை இந்த மொய்யெழுதுறது மட்டும்தான். பண விசயமாச்சே... நம்மாளுங்க உசாராத்தான் இருப்பாங்க :)

தாலி கட்டின அடுத்த நொடியே மண்டப வாசல்ல ரெண்டு பக்கமும் ஆளுக்கு ஒரு டேபிள் சேர இழுத்துப் போட்டு மாப்பிள்ளை & பொண்ணு வீட்டு ஆளுங்க உக்காந்துடுவாங்க. பொண்ணு வீட்டு மொய், மாப்பிள்ள வீட்டு மொய் ரெண்டும் கலந்துடக் கூடாதுனு கொஞ்சம் உசாரா எதிர் கோஷ்டி பக்கம் போற ஆளுங்கள நோட் பண்ணிகிட்டே இருக்கனும். நாற்பது பக்க நோட்டெல்லாம் போய் இப்போ அர குயர் நோட்டு வந்துடுச்சு. ஒரு ஆள், பெயர் + தொகை எழுதிகிட்டே வர இன்னொரு ஆள் பணத்த வாங்கி ஒரு மஞ்ச பைக்குள்ள போட்டுக்குவாரு.(இந்த மஞ்ச பை எப்போதான் மறையும்?) எங்க வீட்டு விசேசங்கள்ல எப்பவும் எல்லா வேலைகள்லையும் கை வச்சிட்டாலும் இந்த மொய்யெழுதுற வேலைல இப்போ கடசியா ரெண்டு மூனு கல்யாணத்துலதான் உக்காந்தேன். எனக்கு இருக்கிற பயம் என்னன்னா என்னோட கையெழுத்து பதினாலு கோழி சேந்து கிறுக்கின மாதிரியே இருக்கும். அத அந்த மொய்நோட்டுல காலத்தால் அழியாச்சின்னமா வைக்கனுமாங்கறதுதான். ஆனா பழைய மொய் நோட்டுகளப் பாத்த பின்னாடி என் கையெழுத்து எனக்கே அழகா தெரிஞ்சது. அப்புறம் துணிச்சலா உக்காந்தாச்சு. இப்ப போன மாசம் தங்கச்சி (சித்தப்பா பொண்ணு) கல்யாணத்துல மொய் எழுத உக்காந்தப்ப அத ஒரு பதிவா போடுவேன்னு நெனைக்கல ;-)

மொத பேரு எழுதும்போதே கஷ்டமாப் போச்சு. பேர ஏழுமலை னு சொன்னா எனக்கு ஏழுமலைனு எழுத வர மாட்டேங்குது. Ezumalai னு எழுதப் போறேன். மொத பக்கம் ஒரு இருபது பேர் எழுதின பின்னாடிதான் தமிழ் கொஞ்சம் தானா வர ஆரம்பிச்சுது. இனிமே அப்பப்போ தமிழ்ல பேனா எடுத்து எழுதனும்.

ஆனா கிராமத்து ஆளுங்க இன்னமும் தமிழோடதான் இருக்காங்க. பேர் சொல்லும்போது ஒருத்தர் ஆவன்னா திருஞானம் னு சொன்னார். நானும் 'ஆவன்னா திருஞானம்'னே தான் எழுதினேன். அவரு தம்பி ஆவன்னா தலையெழுத்துப்பா ன்னாரு. தலையெழுத்தா? இவருக்கு தலையெழுத்து கூட தெரிஞ்சிருக்குமோனு பாத்தா இனிசியல தான் தலையெழுத்துனு சொல்றாருனு புரிஞ்சது. அப்புறம் அவர் பேர ஆ. திருஞானம்னு ஒழுங்கா எழுதியாச்சு. தலையெழுத்த அதாங்க இனிசியல இன்னமும் தமிழ்ல சொல்ற ஆளுங்களும் இருக்காங்க.

இன்னொருத்தர் பேர சொல்லிட்டு 'முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்'னு அடுப்புக்குள்ள போடுங்கன்னாரு. எந்த அடுப்புக்குள்ள போட்றதுன்னு நான் முழிக்க, அவர் திரும்ப திரும்ப அடுப்புக்குள்ள போடுங்க அடுப்புக்குள்ள போடுங்கன்னே சொல்லிட்டு இருந்தாரு. எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது அவர் அடப்புக்குள்ள ( இந்த மாதிரி அடைப்புக்குறிக்குள்ள:-) ) போட சொல்றாருன்னு. நாந்தான் இன்னும் ப்ராக்கெட்டுக்குள்ள போட்டுட்டு இருக்கேன் :(

இன்னொரு பாட்டி வந்தாங்க. 'யாரு சின்னபுள்ளயோட சின்ன மவனா? நல்லாருக்கியா கண்ணு'னு கேட்டுட்டு சுருக்குப் பையில இருந்து பணத்த எடுத்து கொடுத்துட்டு தாத்தா பேர்ல எழுதீருனு சொல்லிட்டாங்க. நான் காலேஜ் சேந்த பின்னாடி எங்க வீட்டுக்குப் போறதே எப்போவாதுதான். சொந்த கிராமத்துக்குப் போய் பல வருசமாச்சு. சொந்தக்காரங்க பேரு, உறவுமுறையெல்லாம் அம்மாகிட்ட அடிக்கடி கேட்டுதான் ரெப்ரஷ் பண்ணிக்குவேன். இவங்களே எந்த பாட்டி, அம்மா வழி சொந்தமா, அப்பா வழி சொந்தமானு ஒன்னும் புரியல. இதுல தாத்தா பேருக்கு நான் எங்க போறது? தாத்தா பேரு என்னனு அவங்க கிட்டவே கேட்கிறதுக்கும் தயக்கமா இருந்துச்சு. எப்பவும் ஒரு மூலைல அமைதியா இருந்தாலும் அப்பப்போ என் மூளையும் வேலை செய்யும். 'தாத்தாவோட முழுப் பேரு (என்னமோ பாதிப் பேரு எனக்குத் தெரிஞ்சுட்ட மாதிரி) என்னம்மாயி?' னு கேட்டேன். (அந்த பாட்டி எனக்கு அம்மாயி முறையா அப்பாயி முறையானும் தெரியல) நல்லவேளை பாட்டிக்குத் துணையா வந்த ஒரு அக்கா தாத்தாவோட முழுப் பேர சொல்லிக் காப்பாத்திட்டாங்க. அப்புறம் ஊர்ப்பேரயும் நான் கேட்டதும் 'ஒம் பேரன் ஊர் பேரு கூட தெரியாத மாதிரி கேக்குது பாரு'னு சொல்லி சிரிச்சுட்டு அந்த அக்காவும் கைவிரிச்சுட்டுப் போய்ட்டாங்க. எனக்கும் ஒரு வழியும் தெரியல. தாத்தா பேருக்கு முன்னாடி அம்மா சொந்த ஊரையும், பின்னாடி அப்பா சொந்த ஊரையும் போட்டுட்டேன். ரெண்டுல ஒரு ஊராதான் கண்டிப்பா இருக்கும் :-)

அப்புறம் ஒருத்தர் வந்தாரு. 'பொனாசிப்பட்டி நரசிங்கபுரம் வடக்குத் தோட்டம் சொக்காஞா பெரிய மவ வூட்டுப் பேரன், கான்னா ராமலிங்கம், தாய் மாமன் பணமாக எழுதிக்கொண்டது...' னு ஒரு தொடர்கதை எழுதற மாதிரி சொல்லிக்கிட்டே போறாரே ஒழிய நிறுத்தமாட்டேங்கறாரு. அவரு பேர எழுதுறதுக்கே தனியா மொய் வசூலிச்சிருக்கனும்.

அப்புறம் இப்போ புதுசா இன்னொன்னு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பணத்த ஒரு கவருக்குள்ள போட்டு வெளிய ஊரு பேரு எல்லாம் தெளிவா எழுதிக் கொடுத்துட்றாங்க. நமக்கும் அது வசதிதான். ஆனா என்ன... உள்ள பணம் இருக்குதான்னு கொஞ்சம் பாத்துக்கனும் :-) அப்படிதான் ஒருத்தரு வந்தாரு கையில ஒரு ஏழு கவரோட. தம்பி அமவுண்ட் கரெக்டா இருக்கானு பாத்துக்கப்பானு பக்கத்துலையே நின்னுட்டாரு. கவருக்கு வெளிய குறிச்சிருந்த தொகையும் உள்ள இருக்கிற பணமும் சரியா இருக்கானு ஏழு கவர்லையும் சரி பாத்துட்டு சரியா இருக்குண்ணே னு சொன்னேன். போகும்போது கேட்டாரு. இது மாப்பிள்ள வீட்டு மொய் தான னு. அத மொதல்லையே கேட்டிருக்கலாம்ல? 'இது பொண்ணு வீட்டு மொய்ணே மாப்பிள்ள வீட்டு மொய் அந்தப்பக்கம்'னு சொல்லி அனுப்பிட்டேன். அவர் கிட்ட ஆமான்னு சொல்லியிருந்தா சித்தப்புக்கு ஒரு அமவுண்ட் லாபம் தான் ;-)ஆனா விட்டுட்டேன்...

இதனால நான் சொல்ல வர்றது என்னன்னா அடுத்த முறை சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனா மொய் வைக்கிறீங்களோ இல்லையோ மொய் எழுதுங்க, இந்த மாதிரி ஒரு மொக்கப் பதிவு போடறதுக்காகவாவது பயன்படும் :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, November 02, 2007

கணக்கம்பட்டியாரு கத - இறுதி பகுதி

கதய மொதல்ல இருந்து கேட்க


'என்ன சரோசா… எப்பவும் மவளப் பாக்க அந்தாளுதான் கெளம்பிருவாரு… இன்னைக்கு அப்பனப் பாக்க நீ வந்திருக்க'

'நல்லாருக்கீங்களாஞா? இந்த பொட்ட புள்ள பொறந்து பத்து மாசம் முடிஞ்சிருச்சு…அதான் மூனுக்கும் சேத்து ஒன்னா காது குத்திரலாம்னு ஒரு ஓசன…ஆஞா என்ன சொல்லுதுன்னு கேட்டுக்கலாம்னுதான் ஒரெட்டு நானே வந்துட்டேன்'

'ஓ காதுகுத்தா…ஆமாமா அந்தாளும் சொல்லிக்கிட்டே தான் இருந்தாரு… கெடா வுட்ருக்கார்ல…இந்த மாசமே நாளு பாத்துருவாரு வா…சைக்கிள்ல ஏறு வூட்ல எறக்கி வுட்றேன்'

மவ வந்த விசயம் தெரிஞ்சதும் பஞ்சாங்கத்த எடுத்த கணக்கம்பட்டி அந்த மாசத்துல இருந்த நல்ல நாளெல்லாம் குறிச்சுக்கிட்டாரு. மொத்தம் ஆறு நாளுதான் தேறுச்சு. ஆறையும் மனசுல வச்சிக்கிட்டு சோழி போட்டாரு. மொத சோழியிலயே ரெண்டு நாளு அடிபட்டு போயிருச்சு. அடுத்த சோழியில இன்னும் ரெண்டு கழிய மூனாவது சோழியில நாள முடிவு பண்ணிட்டாரு. ஐப்பசி மாசம் பத்தா நாளு காது குத்திரலாம்னு அவரு சொல்லவும் பழனி மூலைல கவுளி சத்தம் கேட்டுச்சு. கிட்டாஞா சொன்னாரு – 'நல்ல சவுனந்தான் சரோசா… நீ போய் வேலைய ஆரம்பி…நாங்க கெடாவ இழுத்துட்டு ரெண்டு நாளு முந்தியே வந்துர்றோம்' னு சொல்லி அனுப்பி வச்சாரு.

மூனு பிள்ளைக போட்டோவும் போட்டு பத்திரிக்கை அடிச்சு ஊர்ல எல்லாருக்கும் கொடுத்தாரு கணக்கம்பட்டியாரு. எல்லாரையும் மொத நாளே பொனாசிப்பட்டில* மவ வூட்டுக்கு வந்துர சொல்லிருந்துது. மவ வூட்டு கொலதெய்வம் திருச்சிக்குப் பக்கத்துல இருக்குது. பொனாசிப்பட்டில இருந்து கோயிலுக்கு போறதுக்கும் வர்றதுக்கும் லாரி பேசிட்டாரு. எப்பிடியும் ஒரு எரநூறு சனம் சேந்துரும்ங்கறது அவுரு கணக்கு. காலைல ஆறு மணிக்கு தான் காது குத்தறதுக்கு நேரம் குறிச்சிருந்தாங்க. விடியகாலைல ஒரு நாலு மணி வாக்குல பயணப்பட்டா செரியா இருக்கும்னு நேரத்த கணக்கு பண்ணிருந்தாங்க. அதனால மொதநா ராத்திரியே சரோசா வூட்ல சாப்பாடு ஏற்பாடு பண்ணிரவும் சனமெல்லாம் சாய்ங்காலமே வந்து சேந்துருச்சுங்க. சாப்ட்டு முடிச்சுட்டு எல்லா சனமும் படுத்துருச்சு.

காலைல எல்லாசனத்தையும் எழுப்பி அரக்க பரக்க கெளம்பி வூட்ட வுட்டு லாரிய எடுக்க நாலர மணியாயிருச்சு. லாரிக்குள்ள பொம்பளையாளுங்க எல்லாம் குந்திகிச்சுங்க. ஆம்பளையாளுங்க எல்லாம் ஓரத்துல நின்னுகிட்டாங்க. கிட்டாஞாவும், கணக்கம்பட்டியாரும் பின்னாடி ரெண்டு மூலைலயும் நாக்காலிய போட்டு குந்தியிருந்தாங்க. பாதி பொம்பளைங்க குந்துன சாயல்லயே தூங்குனாலும் தூக்கம் வராத பெருசுங்க ஊர்ப்பழமைல புடிச்சிருச்சுங்க.. வண்டி அப்பதான் குளித்தல தாண்டுச்சு.

'மாமா… பேத்திக்கு காது குத்து வச்சுட்ட…எப்ப கல்யாண சோறு போடப் போற?' இருட்டுல எந்த கெழவி கேட்டுச்சுனு செரியாத் தெரியல.

'எவடி அவ? புள்ள வயசுக்கு வந்ததும் கேட்டின்னா…அது நாயம்…காது குத்தும்போது புத்தி கெட்டத் தனமா கல்யாணத்தப் பத்தி கேட்கிறவ' கிட்டாஞா சத்தம் போட்டாரு.

'அட பெரியாஞா… அம்மாயி சொன்னது பேத்தியோட கல்யாணத்த இல்ல…தாத்தனோட கல்யாணத்த' னு ஒரு கொமரி சொல்லிட்டு சிரிக்கவும் கூட எல்லாப் பொம்பளைகளும் சேந்துக்கவும், கிட்டாஞாவும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு.

'யோவ் கிட்டு, புடிமானம் பத்திரம்யா சிரிச்சுகிட்டு கீழ வுழுந்துரப் போற' சிரிப்புலயும் கணக்கம்பட்டி கவனமாத்தான் இருந்தாரு.

இப்ப வண்டி சிறுகமணி, பெருகமணியெல்லாம் தாண்டி தெக்க மண்ணுரோட்டுல திரும்பிருச்சு. தெக்க இன்னும் ஏழு மைலு போவனும் ஏவுரிமங்கலம் சேர.

'ஏம் பக்கட்டு வண்டி எதுவும் வாராதுய்யா…ஒம் பக்கட்டுதான் எதுத்தாப்டி வார வண்டிலாம் ஒரசுனாப்ல போய்க்கிட்டிருக்கு நீ சூதானமா குந்திக்க' னு கிட்டாஞா பதிலுக்கு அவர சாக்கிரத பண்ணுனாரு.

'அதான் தெக்க திரும்பியாச்சே இதுல எங்கன எதுத்தாப்ல வண்டி வரப் போவுது'னு சொல்லி கணக்கம்பட்டி வாயமூடுல… அது நடந்து முடிஞ்சிருச்சு.

எதுத்தாப்ல வெறவு செரா ஏத்திகிட்டு ஒரு லாரி வந்திருக்கு. அந்த லாரிக்கு பக்கவாட்டுல ரெண்டடிக்கு வெறவு செராயெல்லாம் நீட்டிகிட்டு இருந்ததுல இவுங்க போன லாரியில ஓரத்துல நின்னவங்க மேலயெல்லாம் வெறவு செரா இடிச்சுட்டு போவ, ஆம்பளையாளுக அஞ்சு பேருக்கு மண்டையில அடி. மூலையில குந்திருந்த கணக்கம்பட்டி மண்டைய பெரிய செறா ஒன்னு பதம்பாத்து, கட்டியிருந்த துண்டோட அவரு மண்டய பேத்துகிட்டு போயிருச்சு. லாரியும் கொட சாஞ்சு கவுந்து போவவும் சனமெல்லாம் ஐயோ அம்மானு அலறுச்சுங்க. வாய்க்காலுக்குள்ள வுழுந்து கெடந்த கிட்டாஞா எந்திரிச்சு ஓடியாந்து கணக்கம்பட்டியோட ஒடம்பதான் பாத்தாரு அப்பவே மண்ட பொளந்து உசுரு போயிருச்சு. ஐயோ னு வாய்வுட்டு கதறிபுட்டாரு. யாருக்கும் என்ன செய்யறதுன்னு ஒன்னும் வெளங்கல. அப்புறம் எளவட்டப் பயலுக போன் பண்ணி போலிசுக்கு சொல்லி ஆசுப்பத்திரி வண்டி வந்து கொள்ளபட்ட சனத்த அள்ளிப்போட்டுகிட்டு திருச்சி பெரியாசுபத்திரிக்கு போச்சு. எத்தன பொழக்கும். எத்தன நெலக்கும்னு அப்ப ஒன்னும் சொல்லுறாப்ல இல்ல.

அன்னைக்குப் பொழுது அவங்களுக்கு அழுதுகிட்டுதான் விடிஞ்சுது ஆசுபத்திரில. கணக்கம்பட்டியாரு மட்டுமில்ல, பங்காளி வூட்டு ஆளுங்க மூனு பேரு, அப்பறம் கெடா உரிக்க வந்த சுரும்பன் னு மொத்தம் அஞ்சாளுங்க பொணமாயிட்டாங்க. தலைல அடிவாங்குன ரெண்டு பேருக்கு சீரியசுன்னு சொல்லிருக்காங்க. போலிசுக்கெல்லாம் காசுவெட்டி பொணத்த ஊருக்கு கொண்டாரதுக்கு அன்னைக்கு மத்தியானமாயிருச்சு. ஆசுபத்திரில அறுத்த பொணம்ங்கறதால சாய்ங்காலத்துக்குள்ள தூக்கிரனும்னு காரியமெல்லாம் சீக்கிரமா நடந்துச்சு. "புள்ளைக்கு மொட்டையடிக்கப் போயி அப்பன காவு கொடுத்துட்டனே"னு நெஞ்சு நெஞ்சா அடிச்சுகிட்டு அழுவுறா சரோசா. அவளத் தேத்தற தெம்புல அங்கன யாருமில்ல. அவ அழுவுறத பாத்து எல்லா சனமும் சேந்துகிட்டு அழுவுதுங்க.

செய்ய வேண்டிய காரியமெல்லாம் கிட்டாஞா முன்ன நின்னு செஞ்சுகிட்டு இருந்தாரு. செதைய* குளிப்பாட்டி, பேரம்பேத்திங்க எண்ண வச்சி நெய்ப் பந்தம் புடிச்சு கடேசில செதையத் தூக்கி தேருல வச்சதும் 'கே' னு சத்தம் போட்டு அழுதா சரோசா. கிட்டாஞாவுக்கு தொண்டக்குழிக்குள்ள பாறாங்கல்லு எறங்குனாப்ல இருந்துது. தேரு நத்தமோட்ட* நெருங்கிருச்சு. கிட்டாஞா பக்கத்துல வந்துகிட்டு இருந்த ஆறுமுவம் பொலம்புனான் 'எல்லாருக்கும் நல்ல நாளா குறிச்ச ஆளு, தாங்குடும்பத்துக்கு இப்புடியொரு நாள குறிச்சுட்டாரே'. அத கேட்டதும் கிட்டாஞா தொண்டையில இருந்த பாறாங்கல்லு ஒடையறாப்ல இருந்துச்சு.
ஒடஞ்ச பேச்சுல, 'அவந் தலமாட்டுக்கு தேங்கா ஒடச்சத பாத்தல்ல…செம்பாகமா ஒடஞ்சுதுய்யா…இன்னைக்குதான் அவன் ஆயுசு முடியற நாளு… அவன் சாமிய்யா…அதான் அவன் நாள அவனேக் குறிச்சிருக்கான்' சொல்லிட்டு என்னைக்குமில்லாம ஓ னு அழ ஆரம்பிச்சுட்டாரு கிட்டாஞா.
அது, அவன் மனுசனாவே இருந்திருக்கலாமோனு அவரு அழுவுறாப்ல இருந்துச்சு ஆறுமுவத்துக்கு.

(கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் கற்பனையும் கலந்து சொன்ன கததான் இது. நேத்துதான் கணக்கம்ப்பட்டியாருக்கு மொத நெனவு நாளு...)

__________
*ஆஞா – அப்பா எனும் பொருளில் போன தலைமுறை வரை எங்கள் ஊரில் புழக்கத்தில் இருக்கும் சொல்.
*துண்ணூறு – திருநீறு, விபூதி
*தவுதாயப் படுதல் – எனக்கும் சரியான சொல் தெரியவில்லை. வருத்தப்படுதல் எனும் பொருள் வரும்.
*ஒசத்தியா – உயர்வா
*மக்யா நாளு – மறுநாள்
*கவுளி – பல்ல
*வெரசா – விரைவா
*கவுச்சி – அசைவம்
*முச்சூடும் – முழுவதும்
*பொனாசிப்பட்டி – புனல்வாசல்பட்டி எனும் ஊரின் பெயர் மருவி எழுத்து வழக்கில் புனவாசிப்பட்டி, பேச்சுவழக்கில் பொனாசிப்பட்டி. ஊரின் பெயருக்கு பொருள் 'நீர்நிறைந்த ஊர்'.
*செதைய – சிதைய
*நத்தமோடு – சுடுகாடு

__________
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.