காதல் கூடம் மூன்றாம் பகுதியில் வந்த இலக்கண விதிகளுக்கான விளக்கப் பதிவு :)
பெருமை + ஊர் = பேருர்
முதலில், ஈறு போதல் என்ற விதிப்படி நிலைமொழியின் ஈற்றில் உள்ள ‘மை’ அழிந்து பெரு + ஊர் ஆனது.
பின், உயிர் வரின் உ குறள் மெய் விட்டோடும் எனும் விதிப்படி வருமொழியில் ஊ எனும் உயிரெழுத்து வர நிலைமொழியீற்றிலுள்ள ரு எனுமெழுத்தில் ர் எனும் மெய்யெழுத்தைவிட்டு உகரம் அழைந்து பெர் + ஊர் ஆனது.
பின், ஆதி நீடல் எனும் விதிப்படி நிலைமொழியின் ஆதியெழுத்தான பெ என்பது பே என நீண்டு பேர் + ஊர் ஆனது.
பின், உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி ர் எனும் மெய்யெழுத்தோடு + ஊ எனும் உயிரெழுத்து ஒன்றி ரூ என்றாகி பேரூர் ஆனது.
(இது 10 / +1 வகுப்புகளில் மிகவும் பிரபலமான இலக்கணக் கேள்வி . ஏதேனும் தவறிருப்பின் தமிழறிஞர்கள் திருத்தவும்!!!)
அடுத்தது இந்தக் கவிதை எழுதும்போது ஒரு முக்கியமான ஐயம் வந்தது.
பூ தொட்டி, பூத்தொட்டி, பூந்தொட்டி - இவற்றில் ( இவைகளில் என்று எழுதுவது தவறு, இவற்றில் என்பதே சரி!) எது சரியென்று எனக்குத் தெரியவில்லை.
தெரிந்தவர்களிடம் கேட்போமென இராம.கி ஐயாவிடம் கேட்டேன். அவர் மிகப் பெரிய விளக்கமளித்தார் பூந்தொட்டி, பூத்தொட்டி இரண்டுமே சரிதானென. அது வட்டார வழக்கைப் பொருத்து எப்படியும் வரும் என்று சொல்லியிருந்தார். ஆனாலும் எனக்கு திருப்தியாயில்லை. பூங்கா என்றுதான் சொல்கிறோம் பூக்கா என்று சொல்வதில்லை. பூக்கூடை என்கிறோம். பூங்கூடை என்று கேள்விப்பட்டதில்லை. ஆனால் பூத்தோட்டம் என்பதை விட பூந்தோட்டம் என்பதே சரியெனத் தோன்றுகிறது. குழப்பத்தோடு வலையில் தேடிய போது இரண்டுமே சரியென்று தான் தோன்றுகிறது.
வல்லினம் மிகும் இடங்கள் எனும் பகுதியில் ஓரேழுத்து ஒருமொழியையடுத்து வல்லினம் மிகும் என்று சொல்லப் பட்டிருக்கிறது.
எ-கா தீ+பெட்டி = தீப்பெட்டி, பூ + சரம் = பூச்சரம்.
அதே சமயம் புணர்ச்சி விதிகளில் பூ எனும் நிலைமொழிக்கு சிறப்பு விதியாக இது கொடுக்கப்பட்டுள்ளது.
பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும்
பூ எனும் பெயரை அடுத்து வரும் வல்லின எழுத்துக்களுக்கு இனமான மெல்லெழுத்தும் தோன்றும்.
இன மென்மை தோன்றும் என சொல்லாமல் இன மென்மை உம் தோன்றும் என்று சொல்லியதால் வல்லெழுத்தும் மிகலாம் எனக் கருதலாம்.
எனவே பூ + தோட்டம் = பூத்தோட்டம், பூந்தொட்டி இரண்டுமே சரி.
பூ + கூடை = பூக்கூடை , பூங்கூடை இரண்டுமே சரி.
பூப் போன்ற பெண்களிடம் உம் கொட்டும் ஆண்களின் சுபாவத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை ;)
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
மக்கா,
ReplyDeleteஇப்பவே கண்ண கட்டுதே........
/மக்கா,
ReplyDeleteஇப்பவே கண்ண கட்டுதே........ /
:)))
என்னப் பண்ண? இலக்கணம்னா அப்படித்தான் ;)