ஆசிரியரில்லாப் பொழுதுகளில்
சதுரத்தில் சிறைபட்ட
சிறு நகரமென வாழ்கிறது
நம் வகுப்பறை.
பெர்மா தேற்றம்*, E=mc2, சவ்வூடு அழுத்தம் **
என தாவணியணிந்த கல்விக்கூடம் போல
புத்தகத்தோடு போரிடும் சில 'சரஸ்வதி'கள்.
கொய்யா, கடலை, பட்டாணி, நாவல்பழமென
ஒரு சாப்பாட்டு ராமனின் மேசைக்கடியில்
ரகசிய உணவகம் செயல்பட்டுக்கொண்டிருக்கும்.
திரைப்படம், ஊர்க்கதை, அரட்டையென
வாய்க்குள் கச்சேரி கட்டி
ஒலிபெருக்கிக் கொண்டிருப்பாள் ஒரு முத்துப்பேச்சி.
விகடன், சாண்டில்யன், ராஜேஷ்குமாரென
மேசைக்கடியில் நூலகம் திறந்திருப்பான்
கண்டதையும் படிக்கும் ஒரு பண்டிதன்.
ஆளுக்கொரு பாட்டு கேட்க, மேசையில் தாளமிட்டபடி
நேயர் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பான்
வானொலி நிலையமாக மாறிய ஒரு இளையராஜா.
இவர்களுக்கு மத்தியில்,
புன்னகை, கண்சிமிட்டல்,
உதட்டுசுழி, கன்னக்குழியென
விதவிதமானப் பூக்கள் பூத்து
முகத்திலொரு பூங்கா சுமந்தபடி நீ.
தொலைதூரப்பூங்காவை
தொடுதூரத்தில் பார்க்க,
இமைகளை சிலையாக்கி
கண்களை தொலைநோக்கியென
மாற்றியபடி நான்.
இருபுறமும் வீடுகள் அடைத்த வீதியாய்
நடுவில் கிடக்கிறது நீண்ட இடைவெளி.
இடப்பக்க முதல் மேசையில் வலது ஓரமாய் நீ.
வலப்பக்க இறுதி மேசையில் இடது ஓரமாய் நான்.
உன்னைப் பார்த்தபடியே ஒடியும்,
என் நிமிடங்களின் எல்லா நொடியும்.
இடைவெளியெங்கும் நிரம்பிக்கிடக்கும்
உனக்கான என் பார்வைகள்.
இடையூறின்றி விலகிச் செல்லும்
காற்று.
நோக்கம் எதுவுமின்றி
மயில் போல மெதுவாய்த்தான்
பின்புறம் திரும்புவாய்.
ரயில் போன தண்டவாளமாய்
தடுமாறும் என் பார்வைகள்.
காற்றில் அங்கங்கே புள்ளிவைத்து விட்டு
ஏட்டில் கோலமிட ஆரம்பிக்கும் என் விழிகள்.
அடுத்த வகுப்புக்கான மணியடிக்கிறது.
தமிழய்யா நுழைந்ததும்
உணவகம் முதல் நூலகம் வரை எல்லாம் மூடப்பட்டாலும்.
பூங்காவும், தொலைநோக்கும் தொய்வின்றித் தொடரும்.
அது ஓர் இலக்கண வகுப்பு.
அய்யா உன்னையெழுந்து வாசிக்க சொல்ல.
அவர் அருகில் நின்றபடி வகுப்பைப் பார்க்கிறாய்.
வகுப்பாய் மாறுகிறேன் நான்.
கரும்பலகை
இரவென பின்னணி கொடுக்க
நீ நிலவாகிறாய்.
என் எழுதுகோல்
தன் தொழில் மறந்து
தூரிகையாகிறது.
பென்சிலைக் கார்பனில் செய்தவனின் காதலி
கருப்பாய் இருந்திருப்பாளோ?
உன்னை வரைய
பொன்னில் செய்த பொன்சில்தான் வேண்டும்.
"இரு சொற்களின் புணர்ச்சியில்,
முதலிலுள்ள சொல் நிலைமொழியெனவும்,
இரண்டாவதாக வந்து சேரும் சொல் வருமொழியெனவும் அழைக்கப்படும்"
வாசிப்பினிடையே என்னைப் பார்க்கிறாய்.
நிலைமொழி நீ
வருமொழி நான்
காதலும் புணர்ச்சிதான்.
உணர்ந்தவளாய்,
உதட்டில் நகுகிறாய்.
விழிகளில் நாணுகிறாய்.
நீ விழிகளில் காதல் பரிமாறிய பின்னும்
என் உதடுகளில் உதறலெடுக்கிறதே.
ஏன்?
நண்பர்களோடு சிலம்பம் ஆடும்
என்சொற்கள் எல்லாம்
உன்னைக் கொண்டதும்
தியானத்தில் மூழ்கி விடுகிறதே.
எதற்கு?
தூரத்தில் நீ வருகையில்
இதயத்தில் இருந்து எழுந்து
தொண்டை வரை வார்த்தையாக வருபவையும்
அருகில் நீ வந்ததும்
குரலாக மாறாமல் காற்றாக கலைந்து மறைகிறதே.
எப்படி?
"உயிர் வரின் உ குறள் மெய் விட்டு ஓடும்" -
புணர்ச்சி இலக்கண விதியொன்றை
கரும்பலகையில் எழுதுகிறார் தமிழய்யா.
ஏட்டில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
"உயிர் வரின் உ குறள், மெய் விட்டோடும்"
"உயிர் வரின் என் குரல், மெய் விட்டோடும்"
"என்னுயிர் வரின் என் குரல், மெய் விட்டோடும்"
"என்னுயிர் நீ வரின் என் குரல், மெய் விட்டோடும்"
பெருங்கூட்டம் முன்னிலும்
பெருமழையெனப் பொழிகின்றன
என் வார்த்தைகள்.
ஒற்றைப் பெண்
உன் முன்நிற்கையிலோ
பூ மீது படியும் பனி போல
மென்மையாய் 'உம்' மட்டுமே கொட்டுகிறது.
அதற்குமொரு விதியெழுதுகிறார் தமிழய்யா.
"பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும்"
என் கதை அவருக்கும் தெரிந்திருக்குமோ?
"பேரூர்" - பிரித்தெழுதி புணர்ச்சி விதிகளையும்
எழுதச் சொல்லிவிட்டுச் செல்கிறார் அய்யா.
புணர்ச்சி விதி ஒவ்வொன்றின் இடையியிலும்
கவிதைகளென நாமும் சேர்ந்து கொள்கிறோம்.
பெருமை + ஊர் -> பெரு + ஊர் (புணர்ச்சி விதி - ஈறுபோதல்)
மணமாகிறேன்.
நிறமாகிறாய்.
காதல் பூக்கிறது.
சொல்லாகிறேன்.
இசையாகிறாய்.
காதல் கவிதையாகிறது.
பெரு + ஊர் -> பெர் + ஊர் ( புணர்ச்சி விதி - உயிர் வரின் உ குறள் மெய் விட்டோடும் )
கடலாகிறேன்.
கரையாகிறாய்.
காதல் அலையடிக்கிறது.
மழையாகிறேன்.
நிலமாகிறாய்.
காதல் மண்வாசமாகிறது.
பெர் + ஊர் -> பேர் + ஊர் ( புணர்ச்சி விதி - ஆதி நீடல்)
பாதமாகிறேன்.
பாதையாகிறாய்.
காதல் பயணிக்கிறது.
நீயாகிறேன்.
நானாகிறாய்.
காதல் நாமாகிறது.
காரணங்கள் எதுவுமின்றி
இதுபோல் என்னோடு வந்து
நீ ஒன்றானது ஏன்? எதற்கு?? எப்படி???
'பேரூருக்கான' கடைசி புணர்ச்சி விதிமூலம்
காதல் தேவதை பதில் சொல்லிப் போகிறாள்.
பேர் + ஊர் -> பேருர் ( புணர்ச்சி விதி - "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" )
(அடுத்தப் பகுதி)
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ
*பெர்மா தேற்றம் - Fermat's theorem.
**சவ்வூடு அழுத்தம் - Osmotic pressure
பின்குறிப்பு : ஆணித்தொல்லை அதிகமாப் போச்சு! ஆணியப் பார்த்ததும் ஆணியா?னு நான் தெறிச்சு ஓட்றேன். என்னப் பார்த்ததும் ஆ!நீயா? னு ஆணியும் தெறிச்சு ஓடுது. ஓடிப்பிடிச்சு வெளாடிட்டு இருக்கோம். வெளாட்டு முடிஞ்சதும் புணர்ச்சி விதிகளுக்கான விளக்கம் + பாடல் வரிகள் மாலையில் பதிக்கிறேன்
ஆகா....தலைவா !! ஒரு ரேஞ்சா தான் இருக்குப்பா காதல் கூடத்தின் இந்த வகுப்பு
ReplyDeleteநான் பள்ளியில் இந்தி படித்ததால், புணர்ச்சி விதி பற்றி எல்லாம் படித்ததில்லை. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் கற்று வருகிறேன். ஆனால் நீங்கள் அதை காதலுடன் ஒப்பிட்டு சொன்ன விதம் வெகு அருமை :)
காதலும் தமிழும் புகுந்து விளையாடியிருக்கிறது.
மிகவும் இரசித்தேன்.
அட அட அடா எங்க தமிழ் வாத்தியார்கூட இப்படி இலக்கணம் சொல்லிதரல தலைப்பை சரியாத்த்தான் தேர்வு செய்திருக்கிறீர் நண்பா காதல் கூடமென்று, காதல் + தமிழ் + இலக்கணம் + கவிதை + கடந்த காலம் + வகுப்பறை .... அப்பப்பா காலையிலே ஒரு புத்துணர்வு வெளுத்து கட்றீங்க போங்க
ReplyDeleteதினமும் இப்படி ஒரு புத்துணர்வு கிடைத்தால் எங்க ஆணியும் தெறிச்சோடிடும்ல கொஞ்சம் கனிவு காட்டகூடாதா.
அருமை அருமை அருமை
காதல் கூடம்..... இலக்கணம்
வாழ்த்துக்கள்
அருட்பெருங்கோ,
ReplyDeleteதிரும்பவும் என்னுடைய 10ம் வகுப்பிற்குள் சென்று வந்த சுகத்தைத் தந்தது,படிக்கும் பொதே கண்முன் விரிந்தது 12 வருடத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சிகள்.நன்றி மீண்டும் ஒரு முறை பள்ளி நாட்களுக்கு அழைத்துச் சென்றதற்கு.
எல்லா வரிகளும் நல்லாயிருக்கு!!!!!
ReplyDelete//உன்னைப் பார்த்தபடியே ஒடியும்,
என் நிமிடங்களின் எல்லா நொடியும்.
இடைவெளியெங்கும் நிரம்பிக்கிடக்கும்
உனக்கான என் பார்வைகள்.
இடையூறின்றி விலகிச் செல்லும்
காற்று.//
அருமை!!!!
அட அட அட நோட் பண்ணுங்கய்யா நோட் பண்ணுங்கய்யா பின்றார்யா பின்றார்யா. பிரதர் நான் கிளாஸ்ல கூட கவனிச்சது இல்லை பிரதர். ஒன்னு பண்ணுங்க வாரா வாரம் கரூர் போய்டு வாங்களேன். ஏன்னா நீங்க ஊர்ல இருந்து வந்தா ரொம்ப நல்லா எழுதுறதா பீலிங் எனக்கு!!!! :))))
ReplyDeleteஇப்படியா காதலைப் பிழிஞ்சு எழுதறது. எதை பாராட்டறது. காதலையா? அதுல அழகா சொல்லி இருக்கிற இலக்கணத்தையா? இல்லை காரணமான உங்களையா???
ReplyDeleteஇதுக்கு ஒரு 10 ஸ்டார் கொடுக்கணும்.
அப்புறம் ஒரு சந்தேகம். உண்மையாலுமே கரூர்ல போய் உங்க ஆளைத்தான பார்த்துட்டு வந்தீங்க. இல்லைன்னா இவ்ளோவ் துள்ளலா எழுதி இருக்க முடியாதே???
/ அடேங்கப்பா.. அருட்பெருங்கோ! என்ன ரசனை! ஒவ்வொறு வார்த்தையும் ரசிச்சு எழுதிருக்கீங்க!/
ReplyDeleteநன்றிங்க மேடம்... ( எப்பவும் இதுதான் உங்களோட டீஃபால்ட் பின்னூட்டமா? ;) )
/ ஆகா....தலைவா !! ஒரு ரேஞ்சா தான் இருக்குப்பா காதல் கூடத்தின் இந்த வகுப்பு/
ReplyDeleteஇத எந்த அர்த்தத்துல நான் எடுத்துக்கறது? ;)
/நான் பள்ளியில் இந்தி படித்ததால், புணர்ச்சி விதி பற்றி எல்லாம் படித்ததில்லை. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் கற்று வருகிறேன். ஆனால் நீங்கள் அதை காதலுடன் ஒப்பிட்டு சொன்ன விதம் வெகு அருமை :)/
ஓ நீங்க இந்தியரா? ;) புணர்ச்சி விதியெல்லாம் எளிதுதாங்க... பழக்கமாகிட்டா தானா வந்துடும்!!!
/காதலும் தமிழும் புகுந்து விளையாடியிருக்கிறது.
மிகவும் இரசித்தேன்./
நானும் , ஆணியும் தான் விளையாடிட்டு இருக்கோம் :)
நன்றிங்க ப்ரேம்!!!
/அட அட அடா எங்க தமிழ் வாத்தியார்கூட இப்படி இலக்கணம் சொல்லிதரல தலைப்பை சரியாத்த்தான் தேர்வு செய்திருக்கிறீர் நண்பா காதல் கூடமென்று, காதல் + தமிழ் + இலக்கணம் + கவிதை + கடந்த காலம் + வகுப்பறை .... அப்பப்பா காலையிலே ஒரு புத்துணர்வு வெளுத்து கட்றீங்க போங்க/
ReplyDeleteஎங்க தமிழய்யா நல்லா ரசனையாதான் சொல்லிக்கொடுத்தாருங்க...அவருக்கு தான் நன்றி சொல்லனும்!!!
/தினமும் இப்படி ஒரு புத்துணர்வு கிடைத்தால் எங்க ஆணியும் தெறிச்சோடிடும்ல கொஞ்சம் கனிவு காட்டகூடாதா./
அப்புறம் என்னோட ஆணிய எல்லாம் யார் புடுங்கறதாம்? ;)
/அருமை அருமை அருமை
காதல் கூடம்..... இலக்கணம்
வாழ்த்துக்கள்/
இது என்னன்ங்க சன் டி வி பாணி விமர்சனமா? :)
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா!!!
/ அருட்பெருங்கோ,
ReplyDeleteதிரும்பவும் என்னுடைய 10ம் வகுப்பிற்குள் சென்று வந்த சுகத்தைத் தந்தது,படிக்கும் பொதே கண்முன் விரிந்தது 12 வருடத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சிகள்.நன்றி மீண்டும் ஒரு முறை பள்ளி நாட்களுக்கு அழைத்துச் சென்றதற்கு./
நாடோடி இலக்கியன்,
நானும் இந்தக் கதை எழுத ஆரம்பித்ததில் இருந்து பள்ளிவாழ்க்கை நிகழ்வுகளைத்தான் அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன்...
12 வருடங்கள் முன்பு பத்தாவது படிச்சீங்களா? அப்போ ரொம்ப சீனியர் ;)
சதுரத்தில் அடைபட்ட நகரம் ரொம்ப நல்ல க்ற்பனை ....
ReplyDeleteஇலக்கணமெல்லாம் இப்படி சொல்லிக்குடுத்தா பசங்களுக்கு ந்ல்லாத்தான் புரியும்.. :)
இந்தவாரமும் வழக்கமான அசத்தல் கூடம் தான் இந்த காதல் கூடம்.
/ எல்லா வரிகளும் நல்லாயிருக்கு!!!!!
ReplyDelete//உன்னைப் பார்த்தபடியே ஒடியும்,
என் நிமிடங்களின் எல்லா நொடியும்.
இடைவெளியெங்கும் நிரம்பிக்கிடக்கும்
உனக்கான என் பார்வைகள்.
இடையூறின்றி விலகிச் செல்லும்
காற்று.//
அருமை!!!!/
நன்றி நன்றி !!!
/அட அட அட நோட் பண்ணுங்கய்யா நோட் பண்ணுங்கய்யா பின்றார்யா பின்றார்யா. பிரதர் நான் கிளாஸ்ல கூட கவனிச்சது இல்லை பிரதர்./
ReplyDeleteஎங்க தமிழய்யா பாணியே தனிதான்... இந்தி படிக்கிற பையன் கூட தமிழ்ப்பாடவேளைல உட்காந்து கவனிப்பான் ;)
/ ஒன்னு பண்ணுங்க வாரா வாரம் கரூர் போய்டு வாங்களேன். ஏன்னா நீங்க ஊர்ல இருந்து வந்தா ரொம்ப நல்லா எழுதுறதா பீலிங் எனக்கு!!!! :))))/
அடப்பாவி, நானே தூக்கமில்லாம ஓடிட்டே இருந்தேன் நாலு நாளா... இதெல்லாம் ரெம்ப நக்கல் ஆமா :)))
/ இப்படியா காதலைப் பிழிஞ்சு எழுதறது. எதை பாராட்டறது. காதலையா? அதுல அழகா சொல்லி இருக்கிற இலக்கணத்தையா? இல்லை காரணமான உங்களையா???
ReplyDeleteஇதுக்கு ஒரு 10 ஸ்டார் கொடுக்கணும்./
அப்பவே ஒருத்தர் ஜிலேபினு சொன்னார்... நீங்களும் அதையே சொல்றீங்க :) எல்லாப் பாராட்டும் தமிழுக்கே ;)
/அப்புறம் ஒரு சந்தேகம். உண்மையாலுமே கரூர்ல போய் உங்க ஆளைத்தான பார்த்துட்டு வந்தீங்க. இல்லைன்னா இவ்ளோவ் துள்ளலா எழுதி இருக்க முடியாதே???/
ஆமாங்க புதுமனைப் புகுவிழாவுக்கு ஊருக்குப் போயிருந்தேனா, அப்போ எங்க மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பானு எங்க ஆளுங்க எல்லாரையும் பாத்துட்டுதான் வந்தேன் ;)
(ஏங்க நான் முன்குறிப்பு எழுதின பின்னாடியும் ஒரு குழந்தைய இப்படி கலாய்க்கறீங்க? :))
/ சதுரத்தில் அடைபட்ட நகரம் ரொம்ப நல்ல க்ற்பனை ..../
ReplyDeleteகற்பனையா? அது உண்மைதானே? எல்லா வகுப்பறையும் ஒரு சிற்றூர் மாதிரிதானே? :)
/இலக்கணமெல்லாம் இப்படி சொல்லிக்குடுத்தா பசங்களுக்கு ந்ல்லாத்தான் புரியும்.. :)/
பொண்ணுங்களுக்கு புரியற மாதிரி எனக்கு இலக்கணம் சொல்லத் தெரியலன்னு சொல்றீங்க ஓகே ஓகே :)))
/இந்தவாரமும் வழக்கமான அசத்தல் கூடம் தான் இந்த காதல் கூடம்./
நன்றிங்கக்கா!!!
அடப்பாவமே ஏம்பா எங்க ஊருல பசங்கன்னா அது பொண்ணுங்கபையனுங்க ரெண்டு பேரையும் குறிக்கும்பா...
ReplyDelete//12 வருடங்கள் முன்பு பத்தாவது படிச்சீங்களா? அப்போ ரொம்ப சீனியர் ;)//
ReplyDeleteஅருட்பெருங்கோ ரொம்ப சீனியரா?
4 வயசு வித்யாசமெல்லாம் ஒரு பெரிய வித்யாசம் இல்லீங்க!!!
எல்லா வரிகளும் அருமை
ReplyDeleteஎனக்கு பிடித்து என்றால்,அது
/இவர்களுக்கு மத்தியில்,
புன்னகை, கண்சிமிட்டல்,
உதட்டுசுழி, கன்னக்குழியென
விதவிதமானப் பூக்கள் பூத்து
முகத்திலொரு பூங்கா சுமந்தபடி நீ.
தொலைதூரப்பூங்காவை
தொடுதூரத்தில் பார்க்க,
இமைகளை சிலையாக்கி
கண்களை தொலைநோக்கியென
மாற்றியபடி நான்./
/ அடப்பாவமே ஏம்பா எங்க ஊருல பசங்கன்னா அது பொண்ணுங்கபையனுங்க ரெண்டு பேரையும் குறிக்கும்பா.../
ReplyDeleteஇதென்னக் கொடுமையா இருக்கு :)))
/ //12 வருடங்கள் முன்பு பத்தாவது படிச்சீங்களா? அப்போ ரொம்ப சீனியர் ;)//
ReplyDeleteஅருட்பெருங்கோ ரொம்ப சீனியரா?
4 வயசு வித்யாசமெல்லாம் ஒரு பெரிய வித்யாசம் இல்லீங்க!!!/
சரிங்கண்ணா :)))
/ என்ன அப்படி சொல்லீட்டீங்க அருட் பெருங்கோ...
ReplyDeleteஎவ்வளவு ரசிச்சு படிக்கிறேன் தெரியுமா?/
:))) நன்றிங்க மேடம் ... இனிமே அப்படி கேட்கல :)
/கரூர் போய் வந்திருக்கிறீர்கள்... அப்படீன்னா இன்னும் நிறைய கவிதைகள் வரும் போல் தெரியுது../
ஆமாங்க சொந்த ஊர்னா சும்மாவா? ;)
/ எல்லா வரிகளும் அருமை
ReplyDeleteஎனக்கு பிடித்து என்றால்,அது
/இவர்களுக்கு மத்தியில்,
புன்னகை, கண்சிமிட்டல்,
உதட்டுசுழி, கன்னக்குழியென
விதவிதமானப் பூக்கள் பூத்து
முகத்திலொரு பூங்கா சுமந்தபடி நீ.
தொலைதூரப்பூங்காவை
தொடுதூரத்தில் பார்க்க,
இமைகளை சிலையாக்கி
கண்களை தொலைநோக்கியென
மாற்றியபடி நான்.//
நன்றிங்க திகழ்மிளிர்!!!
//கரும்பலகை
ReplyDeleteஇரவென பின்னணி கொடுக்க
நீ நிலவாகிறாய்.
என் எழுதுகோல்
தன் தொழில் மறந்து
தூரிகையாகிறது.//
தமிழய்யா மேகமாக மாறி நிலவை மறைக்காமல் இருந்தால் சரி.
மக்கா,
ReplyDeleteதமிழ் வழி கல்வி போல ......இலக்கணம் வகுப்பு களை கட்டுது....
இது மிகவும் அருமை..
காரணங்கள் எதுவுமின்றி
இதுபோல் என்னோடு வந்து
நீ ஒன்றானது ஏன்? எதற்கு?? எப்படி???
காதல் தேவதை பதில் சொல்லிப் போகிறாள்.
பேர் + ஊர் -> பேருர் ( புணர்ச்சி விதி - "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" )
இது காதல் இலக்கணம்..நீங்க நடத்துங்க ......நாங்க கவனிக்கிறோம்
காதல்ன்னா அது அருள் தான்னு அகராதியில எழுதிட வேண்டியது தான்.
ReplyDeleteஅட்டகாசம்ய்யா :)))
தங்களின் தமிழினால் தங்கள் காதலும் மெருகூட்டப்பட்டிருக்கிறது. அருமை..உணர்வுகளை வார்த்தையாக வடித்தெடுப்பது அவ்வளவு சுலபமன்று. :)
ReplyDelete/தமிழய்யா மேகமாக மாறி நிலவை மறைக்காமல் இருந்தால் சரி./
ReplyDeleteஏங்க துரியோதணன் இப்படி இடி இடிக்கிறீங்க?? ;)
/ மக்கா,
ReplyDeleteதமிழ் வழி கல்வி போல ......இலக்கணம் வகுப்பு களை கட்டுது..../
தமிழ் வழி காதல்? :)))
/இது மிகவும் அருமை..
காரணங்கள் எதுவுமின்றி
இதுபோல் என்னோடு வந்து
நீ ஒன்றானது ஏன்? எதற்கு?? எப்படி???
காதல் தேவதை பதில் சொல்லிப் போகிறாள்.
பேர் + ஊர் -> பேருர் ( புணர்ச்சி விதி - "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" )
இது காதல் இலக்கணம்..நீங்க நடத்துங்க ......நாங்க கவனிக்கிறோம்/
நன்றிங்க கவிதை ப்ரியன்!!!
/ காதல்ன்னா அது அருள் தான்னு அகராதியில எழுதிட வேண்டியது தான்.
ReplyDeleteஅட்டகாசம்ய்யா :)))/
காதல்ன்னா காதல்தாங்க அருள் எல்லாம் இல்ல :)
நன்றிப்பா!!!
/ தங்களின் தமிழினால் தங்கள் காதலும் மெருகூட்டப்பட்டிருக்கிறது. அருமை..உணர்வுகளை வார்த்தையாக வடித்தெடுப்பது அவ்வளவு சுலபமன்று. :)/
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிங்க சௌம்யா!!!
Arul, nalla rasanai. ovvaru ezhuthaiyum rasichu eluthi irukeenga. Thirumbavum school life-la irukara feeling.
ReplyDelete