Thursday, August 30, 2007

காதல் கூடம் 3.1 :)

காதல் கூடம் மூன்றாம் பகுதியில் வந்த இலக்கண விதிகளுக்கான விளக்கப் பதிவு :)

பெருமை + ஊர் = பேருர்

முதலில், ஈறு போதல் என்ற விதிப்படி நிலைமொழியின் ஈற்றில் உள்ள ‘மை’ அழிந்து பெரு + ஊர் ஆனது.
பின், உயிர் வரின் உ குறள் மெய் விட்டோடும் எனும் விதிப்படி வருமொழியில் ஊ எனும் உயிரெழுத்து வர நிலைமொழியீற்றிலுள்ள ரு எனுமெழுத்தில் ர் எனும் மெய்யெழுத்தைவிட்டு உகரம் அழைந்து பெர் + ஊர் ஆனது.
பின், ஆதி நீடல் எனும் விதிப்படி நிலைமொழியின் ஆதியெழுத்தான பெ என்பது பே என நீண்டு பேர் + ஊர் ஆனது.
பின், உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி ர் எனும் மெய்யெழுத்தோடு + ஊ எனும் உயிரெழுத்து ஒன்றி ரூ என்றாகி பேரூர் ஆனது.

(இது 10 / +1 வகுப்புகளில் மிகவும் பிரபலமான இலக்கணக் கேள்வி  . ஏதேனும் தவறிருப்பின் தமிழறிஞர்கள் திருத்தவும்!!!)

அடுத்தது இந்தக் கவிதை எழுதும்போது ஒரு முக்கியமான ஐயம் வந்தது.
பூ தொட்டி, பூத்தொட்டி, பூந்தொட்டி - இவற்றில் ( இவைகளில் என்று எழுதுவது தவறு, இவற்றில் என்பதே சரி!) எது சரியென்று எனக்குத் தெரியவில்லை.
தெரிந்தவர்களிடம் கேட்போமென இராம.கி ஐயாவிடம் கேட்டேன். அவர் மிகப் பெரிய விளக்கமளித்தார் பூந்தொட்டி, பூத்தொட்டி இரண்டுமே சரிதானென. அது வட்டார வழக்கைப் பொருத்து எப்படியும் வரும் என்று சொல்லியிருந்தார். ஆனாலும் எனக்கு திருப்தியாயில்லை.  பூங்கா என்றுதான் சொல்கிறோம் பூக்கா என்று சொல்வதில்லை. பூக்கூடை என்கிறோம். பூங்கூடை என்று கேள்விப்பட்டதில்லை. ஆனால் பூத்தோட்டம் என்பதை விட பூந்தோட்டம் என்பதே சரியெனத் தோன்றுகிறது. குழப்பத்தோடு வலையில் தேடிய போது இரண்டுமே சரியென்று தான் தோன்றுகிறது.

வல்லினம் மிகும் இடங்கள் எனும் பகுதியில் ஓரேழுத்து ஒருமொழியையடுத்து வல்லினம் மிகும் என்று சொல்லப் பட்டிருக்கிறது.

எ-கா தீ+பெட்டி = தீப்பெட்டி, பூ + சரம் = பூச்சரம்.

அதே சமயம் புணர்ச்சி விதிகளில் பூ எனும் நிலைமொழிக்கு சிறப்பு விதியாக இது கொடுக்கப்பட்டுள்ளது.

பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும்

பூ எனும் பெயரை அடுத்து வரும் வல்லின எழுத்துக்களுக்கு இனமான மெல்லெழுத்தும் தோன்றும்.

இன மென்மை தோன்றும் என சொல்லாமல் இன மென்மை உம் தோன்றும் என்று சொல்லியதால் வல்லெழுத்தும் மிகலாம் எனக் கருதலாம்.

எனவே பூ + தோட்டம் = பூத்தோட்டம், பூந்தொட்டி இரண்டுமே சரி.
பூ + கூடை = பூக்கூடை , பூங்கூடை இரண்டுமே சரி.

பூப் போன்ற பெண்களிடம் உம் கொட்டும் ஆண்களின் சுபாவத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை ;)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, August 29, 2007

சத்தமிடும் மௌனம்

நம் பிரிவை விட
ஒரு வயது குறைவான சிறுவனுக்குத்
தாயெனும் தகுதியில் நீயும்,

நம் காதலைப் போல
புறக்கணிக்கப்பட்ட
அகதியெனும் நிலையில் நானும்,

எதிர்பாராமல்
எதிரெதிர் பார்க்க நேர்ந்தும்,
சலனமின்றி விலகிச் செல்கையில்,

பெரும் சத்தமிட்டு சொல்கின்றன
நம் மௌனங்கள்.

உன் மனம் மறந்துபோனதையும்,
என் மனம் மரத்துப் போனதையும்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, August 28, 2007

காதல் கூடம் - 3




ஆசிரியரில்லாப் பொழுதுகளில்
சதுரத்தில் சிறைபட்ட
சிறு நகரமென வாழ்கிறது
நம் வகுப்பறை.

பெர்மா தேற்றம்*, E=mc2, சவ்வூடு அழுத்தம் **
என தாவணியணிந்த கல்விக்கூடம் போல
புத்தகத்தோடு போரிடும் சில 'சரஸ்வதி'கள்.

கொய்யா, கடலை, பட்டாணி, நாவல்பழமென
ஒரு சாப்பாட்டு ராமனின் மேசைக்கடியில்
ரகசிய உணவகம் செயல்பட்டுக்கொண்டிருக்கும்.

திரைப்படம், ஊர்க்கதை, அரட்டையென
வாய்க்குள் கச்சேரி கட்டி
ஒலிபெருக்கிக் கொண்டிருப்பாள் ஒரு முத்துப்பேச்சி.

விகடன், சாண்டில்யன், ராஜேஷ்குமாரென
மேசைக்கடியில் நூலகம் திறந்திருப்பான்
கண்டதையும் படிக்கும் ஒரு பண்டிதன்.

ஆளுக்கொரு பாட்டு கேட்க, மேசையில் தாளமிட்டபடி
நேயர் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பான்
வானொலி நிலையமாக மாறிய ஒரு இளையராஜா.

இவர்களுக்கு மத்தியில்,
புன்னகை, கண்சிமிட்டல்,
உதட்டுசுழி, கன்னக்குழியென
விதவிதமானப் பூக்கள் பூத்து
முகத்திலொரு பூங்கா சுமந்தபடி நீ.

தொலைதூரப்பூங்காவை
தொடுதூரத்தில் பார்க்க,
இமைகளை சிலையாக்கி
கண்களை தொலைநோக்கியென
மாற்றியபடி நான்.

இருபுறமும் வீடுகள் அடைத்த வீதியாய்
நடுவில் கிடக்கிறது நீண்ட இடைவெளி.
இடப்பக்க முதல் மேசையில் வலது ஓரமாய் நீ.
வலப்பக்க இறுதி மேசையில் இடது ஓரமாய் நான்.

உன்னைப் பார்த்தபடியே ஒடியும்,
என் நிமிடங்களின் எல்லா நொடியும்.
இடைவெளியெங்கும் நிரம்பிக்கிடக்கும்
உனக்கான என் பார்வைகள்.
இடையூறின்றி விலகிச் செல்லும்
காற்று.

நோக்கம் எதுவுமின்றி
மயில் போல மெதுவாய்த்தான்
பின்புறம் திரும்புவாய்.
ரயில் போன தண்டவாளமாய்
தடுமாறும் என் பார்வைகள்.
காற்றில் அங்கங்கே புள்ளிவைத்து விட்டு
ஏட்டில் கோலமிட ஆரம்பிக்கும் என் விழிகள்.

அடுத்த வகுப்புக்கான மணியடிக்கிறது.
தமிழய்யா நுழைந்ததும்
உணவகம் முதல் நூலகம் வரை எல்லாம் மூடப்பட்டாலும்.
பூங்காவும், தொலைநோக்கும் தொய்வின்றித் தொடரும்.

அது ஓர் இலக்கண வகுப்பு.
அய்யா உன்னையெழுந்து வாசிக்க சொல்ல.
அவர் அருகில் நின்றபடி வகுப்பைப் பார்க்கிறாய்.
வகுப்பாய் மாறுகிறேன் நான்.

கரும்பலகை
இரவென பின்னணி கொடுக்க
நீ நிலவாகிறாய்.
என் எழுதுகோல்
தன் தொழில் மறந்து
தூரிகையாகிறது.

பென்சிலைக் கார்பனில் செய்தவனின் காதலி
கருப்பாய் இருந்திருப்பாளோ?
உன்னை வரைய
பொன்னில் செய்த பொன்சில்தான் வேண்டும்.

"இரு சொற்களின் புணர்ச்சியில்,
முதலிலுள்ள சொல் நிலைமொழியெனவும்,
இரண்டாவதாக வந்து சேரும் சொல் வருமொழியெனவும் அழைக்கப்படும்"

வாசிப்பினிடையே என்னைப் பார்க்கிறாய்.

நிலைமொழி நீ
வருமொழி நான்
காதலும் புணர்ச்சிதான்.

உணர்ந்தவளாய்,
உதட்டில் நகுகிறாய்.
விழிகளில் நாணுகிறாய்.

நீ விழிகளில் காதல் பரிமாறிய பின்னும்
என் உதடுகளில் உதறலெடுக்கிறதே.

ஏன்?

நண்பர்களோடு சிலம்பம் ஆடும்
என்சொற்கள் எல்லாம்
உன்னைக் கொண்டதும்
தியானத்தில் மூழ்கி விடுகிறதே.

எதற்கு?

தூரத்தில் நீ வருகையில்
இதயத்தில் இருந்து எழுந்து
தொண்டை வரை வார்த்தையாக வருபவையும்
அருகில் நீ வந்ததும்
குரலாக மாறாமல் காற்றாக கலைந்து மறைகிறதே.

எப்படி?

"உயிர் வரின் உ குறள் மெய் விட்டு ஓடும்" -
புணர்ச்சி இலக்கண விதியொன்றை
கரும்பலகையில் எழுதுகிறார் தமிழய்யா.

ஏட்டில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
"உயிர் வரின் உ குறள், மெய் விட்டோடும்"
"உயிர் வரின் என் குரல், மெய் விட்டோடும்"
"என்னுயிர் வரின் என் குரல், மெய் விட்டோடும்"
"என்னுயிர் நீ வரின் என் குரல், மெய் விட்டோடும்"

பெருங்கூட்டம் முன்னிலும்
பெருமழையெனப் பொழிகின்றன
என் வார்த்தைகள்.

ஒற்றைப் பெண்
உன் முன்நிற்கையிலோ
பூ மீது படியும் பனி போல
மென்மையாய் 'உம்' மட்டுமே கொட்டுகிறது.

அதற்குமொரு விதியெழுதுகிறார் தமிழய்யா.
"பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும்"
என் கதை அவருக்கும் தெரிந்திருக்குமோ?

"பேரூர்" - பிரித்தெழுதி புணர்ச்சி விதிகளையும்
எழுதச் சொல்லிவிட்டுச் செல்கிறார் அய்யா.

புணர்ச்சி விதி ஒவ்வொன்றின் இடையியிலும்
கவிதைகளென நாமும் சேர்ந்து கொள்கிறோம்.

பெருமை + ஊர் -> பெரு + ஊர் (புணர்ச்சி விதி - ஈறுபோதல்)

மணமாகிறேன்.
நிறமாகிறாய்.
காதல் பூக்கிறது.

சொல்லாகிறேன்.
இசையாகிறாய்.
காதல் கவிதையாகிறது.


பெரு + ஊர் -> பெர் + ஊர் ( புணர்ச்சி விதி - உயிர் வரின் உ குறள் மெய் விட்டோடும் )

கடலாகிறேன்.
கரையாகிறாய்.
காதல் அலையடிக்கிறது.

மழையாகிறேன்.
நிலமாகிறாய்.
காதல் மண்வாசமாகிறது.


பெர் + ஊர் -> பேர் + ஊர் ( புணர்ச்சி விதி - ஆதி நீடல்)
பாதமாகிறேன்.
பாதையாகிறாய்.
காதல் பயணிக்கிறது.

நீயாகிறேன்.
நானாகிறாய்.
காதல் நாமாகிறது.


காரணங்கள் எதுவுமின்றி
இதுபோல் என்னோடு வந்து
நீ ஒன்றானது ஏன்? எதற்கு?? எப்படி???

'பேரூருக்கான' கடைசி புணர்ச்சி விதிமூலம்
காதல் தேவதை பதில் சொல்லிப் போகிறாள்.

பேர் + ஊர் -> பேருர் ( புணர்ச்சி விதி - "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" )

(அடுத்தப் பகுதி)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

*பெர்மா தேற்றம் - Fermat's theorem.
**சவ்வூடு அழுத்தம் - Osmotic pressure

பின்குறிப்பு : ஆணித்தொல்லை அதிகமாப் போச்சு! ஆணியப் பார்த்ததும் ஆணியா?னு நான் தெறிச்சு ஓட்றேன். என்னப் பார்த்ததும் ஆ!நீயா? னு ஆணியும் தெறிச்சு ஓடுது. ஓடிப்பிடிச்சு வெளாடிட்டு இருக்கோம். வெளாட்டு முடிஞ்சதும் புணர்ச்சி விதிகளுக்கான விளக்கம் + பாடல் வரிகள் மாலையில் பதிக்கிறேன்

Wednesday, August 22, 2007

அப்படியே இருக்கின்றன

ஒரு தேவ கணத்தில்,
காதலிக்கலாமா என்றேன்.
யோசித்தாய்.
காதலித்தேன்.
காதலித்தாய்.

ஒரு பாவப் பொழுதில்,
விலகிடுவோம் என்றாய்.
யோசித்தேன்.
விலகினாய்.

விலக முடியாமல்
இறந்து போன என் இதயம் மீதேறி
காலம் பயணித்துக் கொண்டே இருக்கிறது
புதுப் புது மாற்றங்களோடு.

ஆனாலும் அப்படியே இருக்கின்றன
நம் அன்பிற்கு சாட்சியாக…
சொற்களிருந்தும் பேச முடியாத பல கடிதங்களும்,
நம் பிரிவுக்கு சாட்சியாக…என் மனமுறிவும்!


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, August 20, 2007

காதல் கூடம் - 2


அடுத்த ஆண்டு பள்ளியின் முதல் நாள்.

காத்திரு என்று நானும்
காத்திருக்கிறேன் என்று நீயும்
சொல்லிக் கொண்டதில்லை.
ஆனாலும் காலைதோறும் காத்திருப்பாய்
ஆற்றுப்பாலத்தில் மிதிவண்டி துணையோடு.

காலைக் கதிரவனுக்கு
உன்னை ரசிக்க ஒருகண் போதவில்லை.
ஆற்றுநீர் பிம்பமாய்
மறுகண்ணும் மையலில்.

ஆற்றை ரசித்தபடி...
நகத்தை கடித்தபடி...
ஒரு காலால் பெடலை மிதித்தபடி...
அப்படி, இப்படியென
நொடிக்கொரு முறை மாறிக்கொண்டேயிருக்கும்
உன் காத்திருப்பின் '...படி'

தூரத்தில் வருகிறேன் நான்.
ஒரு புன்னகை கொடுத்து
மறு புன்னகை பெறுகிறோம்.
அன்றைய முதல் புன்னகை
கண்ணிடுக்கில் பத்திரமாகிறது.

பாடங்களைத் தாண்டி வேறெதும் பேசியதில்லை
நம் உதடுகள்.
காதலைத் தாண்டி வேறெதும் பரிமாறியதில்லை
நம் கண்கள்.

பதினோராம் வகுப்பானதால்
நீலம் துறந்து பச்சை உடுத்தியிருந்தது
உன் சீருடை.
மழை கழுவிய மலரென
இன்னும் கொஞ்சம் மெருகேறியிருந்தது
உன் பொன்னிறம்.

பக்கம் பார்த்தபடியே
பாலத்தில் துவங்கும்
நம் பள்ளிப் பயணம்.

இடம் நான்.
வலம் நீ.
ஆனாலும் என்னிடம் நீ.

ஒன்றாய் ஒத்திசைந்து
ஒரு நான்குசக்கர வாகனமாய்
பவனிவரும் நம் மிதிவண்டிகள்,
பள்ளியருகே வந்ததும்
தொடர்வண்டியாய் மாறும்.

உள்நுழைந்ததுமே அறிவிப்புப் பலகையில்
நம் பெயர்கள் பளிச்சிடுகின்றன.
முதல், இரண்டாமிடம் பெற்றதற்கான வாழ்த்துக்களுடன்.



நம் பெயர் பொறித்த திருமண அழைப்பிதழாய்
அதனை உருமாற்றிப் பார்த்து தடுமாறுகிறது மனம்.

அங்கிருந்து மீண்டு
மிதிவண்டி நிறுத்துமிடம் நோக்கிப் பிரிகிறோம்.

இப்போது,
வலம் நான்.
இடம் நீ.
ஆனாலும் என் வளம் நீ.

புதிய வகுப்பறை கண்டுபிடித்து
வழக்கம்போல இடம்பிடிக்கிறோம்.
நீ முதல் பெஞ்சிலும்.
நான் கடைசி பெஞ்சிலும்.

ஏதோ சொல்ல நீ வாயெடுக்க, “டாண் டாண் டாண்”.
வணக்கக்கூட்டத்திற்கான மணி அடிக்கிறது.
பள்ளி மைதானத்தில் “ப” வடிவில்
நாங்கள் கூடுகிறோம்.
கடவுள்வாழ்த்துப் பாட மேடையோரப் பூங்காவாய்
நீ நின்றிருக்கிறாய்.

*ஒலிவாங்கி முன்னால் வருகிறாய்.
ஒளி வாங்கிக் கொள்கிறது கூட்டம்.

மேடையில் நின்றவாறு நீ என்னைத்தேட…
சீருடைகளுக்கிடையே ஒளிந்து நான் உன் தேடல் ரசிக்க…
தினம் தினம் பார்த்துப் பழகியவைதானென்றாலும்
சந்தித்த நொடியில்
தொட்டுவிட்ட விரல்களைப் போல
சட்டென விலகுகின்றன நம் பார்வைகள்.

கண்களை மூடி
சன்னக்குரலெடுத்து
பாடத் துவங்குகிறாய்.
காற்றில் தேன் தெளிக்கப் படுகிறது.

அந்தப் பூவரச மரத்தில் இருந்து விழுந்த இலையொன்று
காற்றில் அலைந்து அலைந்து நிலம் தொடுகிறது.
இசைத்தட்டு ஒலிக்காமல் நீ இசைக்கும் பாடல்
செவிவழி நுழைந்து அலைந்து உயிர் தொடுகிறது.

கண்மூடி நீ செய்யும் பாவனையெல்லாம்
காதல் செய்த காட்சிக் கவிதையென
ஒற்றைக்கண்ணில் படம்பிடிக்கிறேன்.

தலைமையாசிரியரின் உரை தொடர்ந்து
அப்பொழுதே பரிசளிப்பு விழாவும் தொடங்குகிறது.
“பத்தாம் வகுப்பு – மொத்த மதிப்பெண் முதலிடம்” என்று நிறுத்தி விட்டு,
என்னைப் பார்த்தபடியே என் பெயர் வாசிக்கிறாய்.
இல்லை சுவாசிக்கிறாய்.

உயிர் கட்டி இழுத்தது போல் மேடையேறி
நீயெடுத்துக் கொடுத்த சான்றிதழை
தலைமை ஆசிரியர் கையால் பெறுகிறேன்.

“பத்தாம் வகுப்பு – மொத்த மதிப்பெண் இரண்டாமிடம்” என்று சொல்லி
வெட்கம் சேர்த்து உன் பெயரை நீயே உச்சரித்தாய்.
இல்லை உள் சரித்தாய்.

உயிர்பெற்ற கட்டடங்கள் மீண்டும் அதனை உச்சரிக்க
மைதானமெங்கும் எதிரிசைக்கிறது உன் பெயர்.
உண்மையில் உன் பெயர் அழகு!
நீயே சொல்லும்போது பேரழகு!!

தமிழிலிலும் நான் முதலிடம், நீ இரண்டாமிடம்.
மற்றப் பாடங்களுக்கு முதலிடம் என்று சொல்லி
நம் பெயர்களை சேர்த்தே நீ சொல்லும்போது
ஒலிபெருக்கிபோல எனக்குள்ளும் அதிர்வலைகள்!

கூட்டம் முடிந்து திரும்புகையில்
நீ மந்திரித்த நம் பெயர்கள்
காற்றில் மயங்கியபடி இருந்தன.

உற்றுப் பார்க்கிறேன்.
உன் பெயரின் பின்னே
கிறங்குகிறது என் பெயர்.

நானும் வகுப்பறை நோக்கி உன்னைத் தொடருகிறேன்.
உன் நிழலை என்மேல் சுமந்தபடி.
நிழல் நிசமாகும் நம்பிக்கையோடு.

(அடுத்தப் பகுதி)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

*ஒலிவாங்கி - Mic

Wednesday, August 15, 2007

ஓரு தேசிய கவிதை!

நம் காதல் தேசத்தில்…

நீ…

தேசிய மலர்!


உன் கைக்குட்டை…
தேசிய கொடி!


உன் பிறந்தநாள்…

தேசிய தினம்!


உன் பாதச்சுவடு…
தேசிய சின்னம்!


என்று கொண்டாடினேன்.

இன்றோ…

உன் மௌனமே…
தேசிய கீதமானது!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Monday, August 13, 2007

காதல் கூடம் - 1

(ஒரு முன்குறிப்பு : நான் படித்தது ஓர் ஆண்கள் பள்ளியில்(அத பொறுக்கிப்பசங்க பள்ளிக்கூடம்னு கரூர்ல சொல்லுவாங்க :)) எனவே இது ஒரு கற்பனைக் கதைதான் என்பதை துவக்கத்திலேயே தெரிவித்து விடுகிறேன்! )




அது ஒரு வெயில்மாதத்தின்,
வெயில் பிறக்காத காலைப் பொழுது.

நம் ஊரில்
உன் கோவில் துவங்கி
மாரியம்மன் வீடு
வரையிலான பாதை
தேவதையின் பாதை.

அந்தப் பாதையெங்கும்
உன் மிதிவண்டி வேகத்தில்
நீர்க்கோலங்களை வரைந்தவண்ணம் செல்கிறது,
உன் கூந்தல் அருவி சிந்தும்
தலைக்குளியல் நீர்.

உன் வருகையை எதிர்பார்த்து
கர்ப்பகிரகத்துக்கும், வாசலுக்கும்
நடையாய் நடந்து கொண்டிருக்கிறாள் அம்மன்.
நீ நெருங்கியதும்,
உன் நுதலில் சிறுபிறையென
குங்குமத்தை அவள் கீற்ற,
கொஞ்சமாய்ச் சிவந்தது,
குங்குமம்!

பின், அங்கிருந்து மேற்காக
ஈசுவரன் கோவிலுக்குப்
பயணமானது உன் மிதிவண்டி…
உன் தாவணி சிறகுகளை விரித்தபடி!

உனக்காக
நந்திமேல் கைவைத்தபடி காத்திருந்தான் ஈசுவரன்.
அவனிடமிருந்து திருநீற்றை சிறுகீற்றாய்
உன் நெற்றி ஏந்திக்கொள்ள
மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்புகிறது பயணம்.

நம் பள்ளியின் வாசல் அடைத்திருக்க,
அங்கே ஓய்வெடுக்க சாய்ந்தன,
மிதிவண்டியின் சக்கர கால்கள்.
படபடக்க துவங்கியது உன் இதயம்.

அதேகணம்
சிலமைல்களுக்கு அப்பாலிருந்து
சோம்பல் முறித்தபடி
தனது பயணத்தைத் துவங்கியது
எனது மிதிவண்டி.

எனக்காக என்மிதிவண்டியின் சக்கரங்களும்
உனக்காக காலத்தின் நேரமுட்களும்
வேகமாய்ச் சுழன்றன.

நானும் பள்ளிவந்து சேர்கையில்
மணியடித்து நலம் விசாரித்துக் கொண்டன
நம் மிதிவண்டிகள்.

எல்லோருக்கும்
ஒரே நாளில் பிறந்தநாள் வந்ததைப்போல
சீருடை தொலைத்து
வண்ண உடைகளில்
பள்ளிமுன் குழுமியிருந்தோம்.

நெடுநாள் நண்பனைப் போல்
எல்லோர் தோளிலும் கைபோட்டு
நின்று கொண்டிருந்தது வெயில்.

உனக்கு மட்டும் தோழியாகி
விசிறிக் கொண்டிருக்கும் தென்றல்.

நாம் எதிர்பார்த்திருந்த
பத்தாம்வகுப்பின் தேர்வுமுடிவுகள்
சற்றுநேரத்தில் ஒட்டப்படும் என்றறிந்து
உள்சென்று அமர்கிறோம்.

என்னைச் சுற்றி என் நண்பர்கள்.
உன்னைச் சுற்றி உன் தோழிகள்.

இருந்தும்,
உனக்கும் எனக்குமாக
நான்கு விழிச்சாலையில்
பார்வை போக்குவரத்து துவங்குகிறது.

வெள்ளைச் சீருடையில் சிறியவளான நீ
கத்திரிப் பூ தாவணியில் பெரியவளாயிருந்தாய்.
அம்மனும், ஈசுவரனும் நெற்றியில் முகாமிட்டிருக்க
முகமுழுக்க பவ்யமாய்க் குடியிருந்தது பயம்.

‘திருநீறு வேண்டுமா?’ எனும் பாவனையில் கை நீட்டுகிறாய்.
‘நீ வைத்துக் கொள்’ எனும் பொருளில் கை + தலை அசைக்கிறேன்.
பார்வையால் எனை அறைந்துவிட்டு
திரும்பிக்கொண்டன உன் விழிகள்.

முடிவுகள் ஒட்டப்பட்டப் பலகைகள் கொண்டுவரப்பட
எல்லாத் தெய்வங்களையும் துணைக்கழைத்தபடி நீயும்
உன் பெயரை ஒருமுறை உச்சரித்தபடி நானும்
நெருங்குகிறோம்.

நான் 468
நீ 467

முதல் மதிப்பெண் வரிசையில்,
முதலிடம் எனக்கு.
இரண்டாமிடம் உனக்கு.

வாழ்த்திய நண்பர்கள், தோழிகள் மறைந்து
நாம் தனித்திருந்த நொடியில்
ஒரு துளி கண்ணீரும்
ஒரு புன்னகையும் சிந்துகிறாய்.
ஒன்று உனக்கு.
மற்றொன்று எனக்கு.
இரண்டையுமே ஏந்திக்கொள்கிறேன்.

பள்ளியில் இருந்து ஒன்றாய் வெளிவந்தோம்.
உனக்கு பயந்து
ஈசுவரனும், அம்மனும் எங்கோ ஒளிந்துகொண்டார்கள்.
பிரிந்து செல்கையில் சொல்லிவிட்டுப் போனாய்.
“எப்போதுமே உன் பின்னால்தான் நானா?”

அந்த வரியை
ஆயிரம் அர்த்தங்களுடன்
நான் உச்சரித்துப் பார்த்த
அந்தப் பௌர்ணமி இரவில்…
நிலவு, கத்திரி பூ நிறத்தில் இருந்தது.


( காதல் கூடம் - அடுத்த பகுதி )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Wednesday, August 08, 2007

கைவிடப்பட்ட கவிதை

தனிமையான சில கணங்களில்
இதயத்தின் நான்கு அறைகளிலிலும்
சூழ்ந்து கொள்ளும் வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.

கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை சுமந்தபடி
விழித்திருப்...
.
.
.
.
.
.
.
.
.
இப்படித்தான்...
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடப்படுகின்றன...
என் பல கவிதைகள்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, August 06, 2007

ப்ரெண்டுங்க டே

அஞ்சாப்பு படிக்கும்போது
பென்சில் இல்லாதவங்கள
திலகா டீச்சர் முட்டிப் போட சொல்ல…
என்னோட பெரிய பென்சில
பாதியா ஒடச்சு ஒனக்கு கொடுத்ததுல
எம்பென்சில் சிறுசாப்போச்சு…

இங்கிலீசு பரிட்சையில
உனக்கும் காமிச்சக் குத்தத்துக்கு
என்னோட மார்க்கதான் பாதியாக்கிட்டாரு
காளிமுத்து வாத்தியாரு…

காலேஜ்ல தம்மடிக்கும்போதும்
ஆளுக்கொரு “பஃப்” னு
நீயும் சேர்ந்து இழுத்ததுல
ஒவ்வொரு தடவையும் பாதி ‘தம்மு’தான்…

நீ வராதப்ப உனக்கு ப்ராக்ஸி போட்டு மாட்டினதுல
HOD க்ளாஸ்ல என்னோட attendance தான் 50% ஆச்சு…

ஆம்லேட்டோ, ஆஃப் பாயிலோ
‘ருசி’ பார்க்கிறேன்னு
எந்தட்டுல நீ கைய வச்சா
எனக்கு மிஞ்சறது பாதிதான்…

Hostel TV Hall - ல்ல
Star movies க்கு நீயும் KTV க்கு நானும் சேனல மாத்தி மாத்தி
நாம பாத்த படமெல்லாம் பாதிபாதிதான்…

இப்படி TASMAC சரக்குல இருந்து சொந்த கத சோகம் வரைக்கும்
உன்னோட பகுந்துக்கிட்டா எல்லாத்தையும் பாதியாக்குற…
சந்தோசத்த மட்டும் எப்பட்றா மச்சான் ரெண்டு மடங்காக்கற?

( இது கவிதையெல்லாம் அல்ல... என்னுடைய பள்ளி, கல்லூரி கால நண்பர்களுக்கு நான் அனுப்பிய மொக்கை மெசேஜ்… ஒரு காதல் பாட்டு வேணும்னா இங்க கிடைக்கும்)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Wednesday, August 01, 2007

நேரமிருந்தால்...

மேகம் உடைந்து அழும் ஒரு மழை நாளில்
கூட்டம் சுமந்த பயணியர் நிழற்குடையில்
வருகிற பேருந்துக்காக காத்திருக்கும் நீ.
வந்த பேருந்தில் இறங்கிய நான்.

பூக்களும் சிரிக்கும் மணமன்றத்தில்
மௌனங்களை உதிர்த்தபடி
மணமகளின் தோழியென நீ.
மணமகனின் நண்பனாய் நான்.

நம் இரவுரயில்கள் நின்ற சந்திப்பில்
ஆவின் கடைக்கு முன்
குழந்தைக்குப் பால்வாங்க நீ.
ஒரு தேநீருக்காக நான்.

நம் பிரிவைப் போன்றே
எதிர்பாராத கணத்தில்
எங்கேனும் இப்படி நிகழக்கூடும்
நம் சந்திப்பு.

அப்போது நேரமிருந்தால்...
என்னிதயத்திற்கும் சொல்லிக்கொடு.
எப்படி மறந்தாயென?

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.