Thursday, March 15, 2007

ஒரு காதல் பயணம் - 9

(முதல் பகுதியிலிருந்து வாசிக்க வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் இல்லை…
தொலைக்காட்சி சீரியல் மாதிரி தான் எந்த பகுதியில இருந்து வேணும்னாலும் வாசிக்க ஆரம்பிக்கலாம் :-))
உன்னைப் பற்றி என்ன கிறுக்கினாலும்
அழகான காதல் கவிதையாகி விடுவதன்
மர்மத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போ!


ஓர் இரவு முழுவதும் மழை பெய்ததற்கு அடுத்த நாள் விடியல்.
கனவில் உன்னோடு கவிதை பேசிக்கொண்டிருந்தவனை நனவுக்கு துரத்திவிடுகிறது கலைந்து போன உறக்கம்.
இரவு முழுவதும் உலகமே சேர்ந்து துடைத்து வைத்த மாதிரி
வானம், சாலை, மரம், கட்டடம் என எல்லாமே தூய்மையாக இருந்தன, நம் காதலைப் போல.
வாசலில் இறங்கிய என் கால்களை உன் வீடு நோக்கி இழுத்துச் செல்கிறது சாலை.

பாதி தூரத்தில் எதிர்ப் படுகிறாய் நீ.
கும்பிடப் போனால் தெய்வம் மட்டுமல்ல, தேவதையும் குறுக்கே வருமோ?
நேற்றைய மழையினால் அங்கங்கு தேங்கி நிற்கிறது மழை நீர்.
அதில் நனைந்து விடாமல் இருக்க உன் பாவாடையை சற்றேத் தூக்கிப் பிடித்து நடந்து வருகிறாய்.
என்னைக் கண்டதும் நாணத்தில் பாவாடையைத் தாங்களே இழுத்து மூடிக் கொள்கின்றன உனது கால்கள்.

செருப்பில்லாத உன் பாதங்களைக் கவனித்து பதறியவனாய் உன்னை நெருங்குகிறேன்.
“ஏன் செருப்பில்லாம நடந்து வர்ற?” உரிமையோடு என் குரல்.

“ஐய்யோக் கவலைப்படாதப்பா…ஒன்னும் ஆகல….
மழை பெய்யும் போது அது மணல் எல்லாத்தையும் இழுத்துட்டுப் போயிடும்…
மணலவிடக் கொஞ்சம் பெருசா இருக்கிற , சின்ன சின்ன கல் மாதிரியானதுதான் பாதை முழுசும் கிடக்கும்…
அதில வெறுங்கால்ல நடக்கும் போது ஒரு மாதிரி குறுகுறுப்பா நல்லா இருக்கும்…அதான் செருப்பில்லாம வர்றேன்…நீயும் வேணா நடந்து பாரேன்…”
காதலோடு உன் அனுபவத்தை கிசுகிசுக்கிறது உன் குரல்.

“சரி சரி குறுகுறுப்ப அனுபவிச்சது போதும், இதெல்லாம் நம்மக் காதலுக்குத் தெரிஞ்சா என் கதி அதோ கதி தான்.
எனக்குக் காதலியைப் பார்த்துக்கத் தெரியலன்னு என்னை அது வசைபாடினா யார் கேட்கறது?”
என சொல்லிவிட்டு மறைத்து வைத்திருந்த அதை எடுத்து,
“முதல்ல இதக் கால்ல போட்டுக்கோ…நேத்து உன் கால செருப்புக் கடிக்குதுனு சொன்னதக் கேட்டு,
இப்போ இதக் கொண்டு வந்தது நல்லதாப் போச்சு!”
என சொல்லி உன்னிடம் அதைக் கொடுக்கிறேன்.

“என்னது இந்த செருப்பு வித்தியாசமா இருக்கு!”
“அது ரோஜா இதழ்ல நானே செஞ்சது!”
“பொய் சொல்லாதடா…நெஜமாவா?” ஆச்சரியப்படுகிறாய் நீ!

“நிஜமாதான்! கல்லூரியில தான் நல்ல பேரெடுக்கல
– கல்லூரியில விட்டத காதல்ல பிடிக்கத் தான் இத்தனையும்!”

அதை அணிந்து கொண்டு கொஞ்ச தூரம் நடந்து விட்டு சந்தோஷமாய்ச் சொன்னாய் :
“ இது ரொம்பதான் மெதுமெதுன்னு இருக்கு! இதப் போட்டு நடந்தா, தரையில் நடக்கிற மாதிரியே இல்ல,
காத்துல மிதக்கிற மாதிரியில்ல இருக்கு!”

“அடிப் போடி! உன்னைக் காதலிக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்தே எனக்கு அப்படித்தான் இருக்கு!” – என் நிலை சொல்கிறேன் நான்.
கேட்டு விட்டு சிரிக்கிறாய். அந்த சிரிப்புக்கும், வெட்கத்துக்கும் தானே தினமும் உன்னைத் தேடுகிறேன்.

அப்போது நம்மைக் கடந்து போன ஒரு பெண்ணைப் பார்த்து லேசாக புன்னகைக்கிறது என்னுதடு.
அதைப் பார்த்ததும் உன் கண்கள் உன் உதட்டிடம் வத்தி வைக்க, துடிக்கிறது உன்னுதடு.

“இப்ப எதுக்குடா அந்தப் பொண்ண சைட்டடிச்ச?”
“என்னமாக் கெட்ட வார்த்தையெல்லாம் பேசற? நீ இருக்கும்போது நான் எதுக்கு இன்னொரு பொண்ணப் பார்க்கிறேன்?”
“அப்போ நான் இல்லாதப்ப பார்ப்பியோ?” சட்டையைப் பிடித்துவிட்டாய்.
காதலியிடம் பேசும்போது எழுத்தைக்கூட அளந்துதான் பேச வேண்டும் என்பது மூளைக்கு உரைக்கிறது.

“இல்லமா உன்னப் பார்க்கிற வரைக்கும், மத்தப் பொண்ணுங்கள நான் ஒரு காதல் பார்வை பார்த்துக்கிட்டு இருந்தது உண்மைதான்
– ஆனா உன்னக் காதலிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் எந்தப் பொண்ணப் பார்த்தாலும்,
அவளும் என்ன மாதிரி யாரோ ஒருத்தனோடக் காதலியா இருக்கலாமில்ல?
நான் அவளக் காதலோடப் பார்க்கப் போய் , எம்மேல காதல் தேவதைக்குக் கோபம் வந்து,
அது நம்மக் காதல சபிச்சுட்டா என்னப் பண்றது?னு தோணுது!
அதனால இப்பலாம் எந்தப் பொண்ணப் பார்த்தாலும் ஒரு வேளை அவளும் ஒருத்தனுக்குக் காதலியா இருக்கும்னு நெனச்சு
அவளோடக் காதல மனசார வாழ்த்திட்டு ஒரு புன்னகை செய்யறேன் அவ்வளவுதான்!”

“உனக்கு நல்லா கதை சொல்லத் தெரியும்னு எனக்குத் தெரியும், உண்மையிலேயே என்ன விட அழகானப் பொண்ணப் பார்த்தாலும் உனக்கு எதுவும் தோணாதா?”
“தோணும்! எனக்கு உன்ன முழுசாக் காதலிக்கத் தெரியலையோன்னுத் தோணும்!”
“ஏன்”
“உண்மையா நான் உன்னக் காதலிச்சா, எந்தப் பொண்ணும் எனக்கு உன்ன விட அழகாத் தெரிய மாட்டா!
அப்படி அழகாத் தெரிஞ்சுட்டா நான் உன்ன உண்மையிலேயே முழுசாக் காதலிக்கலன்னு தான அர்த்தம்?
ஆனாக் கவலைப்டாத! இது வரைக்கும் உன்ன விட அழகா நான் யாரையும் பார்க்கல!”
மீண்டும் சிரிப்புக்கு வருகிறாய்.

“அப்பாடா, மறுபடியும் உன்ன சிரிக்க வைக்க எவ்வளவுப் போராட வேண்டியிருக்கு!
ஆனாக் கோபத்துலக் கூட சும்மா காதல் பிசாசு மாதிரி இருக்க!”

“ஓஹோ! நான் பிசாசு மாதிரி இருக்கேன்னு சொல்ற, அதான?
அப்போ இவ்வளவு நாளா ‘தேவதை’னு உருகுனதெல்லாம் வெறும் வேஷம் அப்படித்தான?”

எனக்கு, தண்ணீரில்,வாகனத்தில் எல்லாம் கண்டமில்லை, எல்லாக் கண்டமும் என் வாயில் தான் இருக்கிறதென
சிறு வயதில் ஜோசியக்காரன் சொன்னது ஏனோ நினைவுக்கு வருகிறது.
அமைதியாகவே இருக்கிறேன் நான்.

“அதெப்படி இந்த ஆம்பளைங்க மட்டும் நேத்து ஒரு மாதிரி பேசிட்டு, இன்னைக்கு வேற மாதிரிப் பேசறீங்க?”

“இல்லமா நான் காதல்ல அளவுக்கு மீறி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்கும்போது,
நீ தேவதை மாதிரி வந்து ஒரு பார்வ பார்த்தா போதும் அப்படியே அமைதியாயிடுவேன்!
நான் வேற ஏதாவது யோசனையில் அமைதியா இருக்கும்போது நீ (காதல்)பிசாசு மாதிரி வந்து என்னப் பிடிச்சின்னா,
உன்னோடக் காதல் எனக்கும் தொத்திக்கும்! அதனால ரெண்டுமே நம்மக் காதலோட நல்லதுக்குதான்!”

“உன்னோட சமாளிப்ப பத்தி தான் ஊருக்கேத் தெரியுமே! அது சரி உனக்கு தேவதையப் பிடிக்குமா? பிசாசப் பிடிக்குமா?”

“தேபிசாதைசு தான் எனக்குப் பிடிக்கும்!”

கேட்டதும் இன்னொரு சிரிப்பைத் தந்துவிட்டு வெட்கத்தை மட்டும் நீயே எடுத்துக் கொண்டு ஓடினாய்.
இன்றைக்கு இது போதும், நீங்கள் வீட்டுக்குப் போகலாம் – என்பது போல இயற்கை,
சுட்டெரிக்கும் கதிரவனை அனுப்பி நம்மைப் பிரிந்து செல்ல வைக்கிறது.

( காதல் பயணம் தொடரும் )

அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

15 comments:

  1. //இதப் போட்டு நடந்தா, தரையில் நடக்கிற மாதிரியே இல்ல,
    காத்துல மிதக்கிற மாதிரியில்ல இருக்கு!”

    “அடிப் போடி! உன்னைக் காதலிக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்தே எனக்கு அப்படித்தான் இருக்கு!” //

    ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கிங்களோ?

    //உண்மையிலேயே என்ன விட அழகானப் பொண்ணப் பார்த்தாலும் உனக்கு எதுவும் தோணாதா?”
    “தோணும்! எனக்கு உன்ன முழுசாக் காதலிக்கத் தெரியலையோன்னுத் தோணும்!”
    “ஏன்”
    “உண்மையா நான் உன்னக் காதலிச்சா, எந்தப் பொண்ணும் எனக்கு உன்ன விட அழகாத் தெரிய மாட்டா!
    அப்படி அழகாத் தெரிஞ்சுட்டா நான் உன்ன உண்மையிலேயே முழுசாக் காதலிக்கலன்னு தான அர்த்தம்?
    ஆனாக் கவலைப்டாத! இது வரைக்கும் உன்ன விட அழகா நான் யாரையும் பார்க்கல!”//

    இதுக்கு மேல ஆம்பளைங்க மனசை எப்படி படம் பிடிச்சு காட்டறது. ஏற்கனவே உங்க கவிதையை படிச்சுட்டு சென்னைல பாதி பேரு தூக்கமே இல்லாம அலையறதா கேள்விப்பட்டேன்.இப்போ இது வேற. அடங்க மாட்டிங்க போல.கலக்குங்க. சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  2. Boss,
    Neenga nalla famous ayittinga.
    Unga blog pakkam konja naal varaama irunthen.
    Thideernu oru naal unga kavithai ellam email forward varuthu. :-)
    Kalakkaringa boss.

    ReplyDelete
  3. //ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கிங்களோ?//

    அட நமக்கு எல்லாம் கற்பனைதாங்க…

    //இதுக்கு மேல ஆம்பளைங்க மனசை எப்படி படம் பிடிச்சு காட்டறது. ஏற்கனவே உங்க கவிதையை படிச்சுட்டு சென்னைல பாதி பேரு தூக்கமே இல்லாம அலையறதா கேள்விப்பட்டேன்.இப்போ இது வேற. அடங்க மாட்டிங்க போல.கலக்குங்க. சூப்பரா இருக்கு. //

    எல்லா ஆம்பிளைங்களையும் ஒரே படத்துலக் காட்ட முடியாதில்ல!!!

    என்னது தூக்கத்தக் கெடுக்கிற அளவுக்கு மோசமாவா எழுதறேன்?? நல்லவேளை முகவரியெல்லாம் சொல்லி எழுதல… இல்லனா அடிக்க ஆள் அனுப்புவாங்களோ? ;-)

    ஏங்க, நான் ரொம்ப அடக்கமானப் பையன்ங்க!!! :-)

    விமர்சனத்துக்கு நன்றிங்க நந்தா!!!

    ReplyDelete
  4. அருமை அருட்பெருங்கோ...

    “தேபிவசாதைசு தான் எனக்குப் பிடிக்கும்!”

    "கேட்டதும் இன்னொரு சிரிப்பைத் தந்துவிட்டு வெட்கத்தை மட்டும் நீயே எடுத்துக் கொண்டு ஓடினாய்..."

    நல்ல கற்பனை..
    அன்புடன்
    கருணா

    ReplyDelete
  5. அன்பு அருள்,

    நல்ல கற்பனை, வார்த்தைகளில் விளையாடி இருக்கிறிர்கள்.

    மேலும் பல பயணங்களை தொடருங்கள்.

    ReplyDelete
  6. Romba nalla irukku..

    Tanya..

    ReplyDelete
  7. wow super...nalla karpanai thiramai ungaluku...orkut thirantha koode unge kavithai irruku...hats off

    ReplyDelete
  8. உங்கள் வலைப்பூவைப் பார்த்தேன்.முழுக்க முழுக்க காதலால் நனைந்து மணம்வீசுகிறது.ப்ரியனும் நீங்களும் இரட்டையர்களா?நானும் ஒரு வலைப்பூ தொடங்கினேன்.முடிந்தால் பாருங்கள்.விமர்சியுங்கள்.
    ஆனாலும்,பழகிப்போன சில புதுக்கவிதைகளின் சாயல் வருகிறது.நவீன காதல் கவிதை எழுதுவீர்களா?உங்கள் புகைப்படக்கவிதைதொக்குப்பு வேண்டும்.மீண்டும் பேசலாம்.

    ReplyDelete
  9. Athannaium arumai

    ReplyDelete
  10. /Boss,
    Neenga nalla famous ayittinga.
    Unga blog pakkam konja naal varaama irunthen.
    Thideernu oru naal unga kavithai ellam email forward varuthu. :-)
    Kalakkaringa boss. /

    வாங்க பிரபு ராஜா,

    என்னது பாஸா? என்னங்க படத்துல வில்லனக் கூப்பிட்ற மாதிரி கூப்பிட்றீங்க ;)
    ம்ம்ம் எனக்கும் சந்தோசமா இருக்குங்க...
    நேரம் கிடைக்கும்பொது பதிவுப்பக்கமும் வந்து வாசிங்க :)

    ReplyDelete
  11. வாங்க கருணா,

    /அருமை அருட்பெருங்கோ...

    “தேபிவசாதைசு தான் எனக்குப் பிடிக்கும்!”

    "கேட்டதும் இன்னொரு சிரிப்பைத் தந்துவிட்டு வெட்கத்தை மட்டும் நீயே எடுத்துக் கொண்டு ஓடினாய்..."

    நல்ல கற்பனை..
    அன்புடன்
    கருணா /

    நீங்களாவது கற்பனைனு ஒத்துக்கிட்டீங்களே :) நன்றிங்க

    ReplyDelete
  12. வாங்க கோபி,

    /அன்பு அருள்,

    நல்ல கற்பனை, வார்த்தைகளில் விளையாடி இருக்கிறிர்கள்.

    மேலும் பல பயணங்களை தொடருங்கள். /

    நன்றிங்க...உங்கள் வாழ்த்துக்களோடு தொடருகிறேன்...

    ReplyDelete
  13. /Romba nalla irukku..

    Tanya.. /

    ரொம்ப நன்றிங்க தாண்யா

    /wow super...nalla karpanai thiramai ungaluku...orkut thirantha koode unge kavithai irruku...hats off /

    ரொம்ப ரொம்ப நன்றிங்க நண்பரே!!!

    ReplyDelete
  14. வாங்க வெங்கிராஜா,

    /உங்கள் வலைப்பூவைப் பார்த்தேன்.முழுக்க முழுக்க காதலால் நனைந்து மணம்வீசுகிறது.ப்ரியனும் நீங்களும் இரட்டையர்களா?நானும் ஒரு வலைப்பூ தொடங்கினேன்.முடிந்தால் பாருங்கள்.விமர்சியுங்கள்.
    ஆனாலும்,பழகிப்போன சில புதுக்கவிதைகளின் சாயல் வருகிறது.நவீன காதல் கவிதை எழுதுவீர்களா?உங்கள் புகைப்படக்கவிதைதொக்குப்பு வேண்டும்.மீண்டும் பேசலாம். /

    ரொம்ப நன்றிங்க...
    ப்ரியன் போன்றவர்கள் எல்லாம் பதிவுலகம் மூலம்தான் பழக்கம்!!!
    கன்டிப்பாக உங்கள் வலைப்பதிவை வாசிக்கிறேன்...
    காதலில் ஏதுங்க பழசு, புதுசு, நவீனம் எல்லாம்? காதலை எந்த வடிவில் எழுதினாலும் அது அழகுதானே?
    என் கவிதைகள் அனைத்தையும் தொகுப்பாக்கும் முயற்சியில் இருக்கிறேன்... கொஞ்சம் வேலைப் பளு இருக்கிறது முடியட்டும்...
    நானும் உங்களுடன் பேச நிறைய இருக்கிறது :) பேசுவோம்...

    ReplyDelete
  15. /அத்தனையும் அருமை /
    நன்றிங்க அனானி நண்பரே

    ReplyDelete