Monday, January 29, 2007

ஓரு மொட்டைப் பதிவு!

காதலைத் தவிர்த்து மற்ற விசயங்களையும் எழுதுங்கள் என்று சுதர்சன்.கோபால் அன்பு(?) கட்டளையிட்டதால் இந்தப் பதிவு.


மருமகளுக்கு (அக்காவின் மகள்) மொட்டை அடிக்கும் நிகழ்ச்சி இருந்ததால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்தவாரம்தான் வீட்டிற்கு(கரூக்கு)ப் போக வாய்ப்புக் கிடைத்தது. நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு கடந்த வெள்ளிக்கு முந்தைய வெள்ளி ஊருக்குக் கிளம்பிவிட்டேன். ரயில் பயணம் என்பது எனக்கு எப்போதுமே அரிதாகவே அமைகிறது. காரணம் , பயணங்களை இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பே திட்டமிடுவதுமில்லை, முன்பதிவு செய்யுமளவுக்கு நான் சுறுசுறுப்புமில்லை. எப்போதுமே பேருந்து பயணம்தான் எனக்கு வசதியாகப் படுகிறது. அதுவும் தனியார் சொகுசுப் பேருந்துகளிலும் பயணிப்பதில்லை. அரசுப் பேருந்துதான். இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு தேநீரைக் குடித்துவிட்டு அடுத்தப் பேருந்தில் மாறி மாறிப் பயணிக்கிற அரைத்தூக்கப் பயணம்தான் எனது விருப்பம். மிகத்தாமதமாக பெங்களூர் இசிட்டியில் இருந்து கிளம்பியதால் ஒசூர் போய்ச்சேரவே இரவு மணி 12 ஆகியிருந்தது. பேருந்தில் ஜன்னலோரம் தான் எனக்குப் பிடிக்கும். அதுவும் பின்படிக்கட்டுக்கு முந்தைய இருக்கையென்றால் மிக விருப்பம். சேலம் செல்லும் பேருந்தில் அப்படியே ஓர் இருக்கை கிடைக்க ஏறிவிட்டேன். சன்னலைத் திறந்தால் குளிர்காற்று வீசுகிறது. மூடி வைக்கவும் மனமில்லை. அவஸ்தைதான், ஆனாலும் அதற்கே ஏங்குகிறது மனமும். (காதலைப் போலவா என்று யாரும் கேட்கக்கூடாது ;-) ) எப்படியோ அரைத்தூக்கத்தோடே சேலம் போய், பின் கரூர் போய்ச்சேர காலை மணி 8 ஆகியிருந்தது.

*********************


அடுத்த நாள் - சமயபுரம். தனிப்பட்ட முறையில் கோயில்களைப் பழந்தமிழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டு என்பதைத் தவிர வேறெந்த எண்ணத்தோடும் நான் பார்ப்பதில்லை. மருமகளின் மொட்டைக்காக இந்தமுறை சமயபுரம் கோயிலுக்குள் போனபோதுதான் பார்த்தேன். கோவிலுக்குள்ளே தரையெல்லாம் மழையில் ஊறிய தெருவைப் போல இருந்தது. கூட்டமும் அதிகம். சுத்தம்தான் குறைவு. கோவிலுக்கு வந்த பட்டாடைகளையெல்லாம் ஏலத்தில் விட்டுக் கொண்டு இருந்தார்கள். அதில் கொஞ்சம் சுத்தத்துக்கும் செலவு செய்யலாம். மொட்டையடிக்கும் போதெல்லாம் அழாமல் இருந்த மருமகள் மொட்டையடிக்கப் பட்ட பிறகு “மொட்டையடிச்சுட்டாங்க…மொட்டையடிச்சுட்டாங்க” என்று தலையை தொட்டுப் தொட்டுப் பார்த்து அழுததில் அவளுக்கு இரண்டு நாட்களாக விடவில்லை காய்ச்சல்.

************************

வீட்டில் எப்போதும் தொலைக்காட்சி பார்ப்பதைவிட வானொலி கேட்பதையே அதிகம் விரும்புவேன். இந்த முறை, மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி மிகவும் கவர்ந்தது. தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் “சொல் விளையாட்டு” என்ற நிகழ்ச்சிதான் அது. முதல் சுற்றில் தமிழ் எழுத்துக்கள் சிலவற்றில் இருந்து சரியான சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த சுற்றில் விடுப்பட்ட எழுத்துக்களை நிறைவுசெய்து ஒரு சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டும். மூன்றாவது சுற்றில் ஒரு பிரபலத்தின் புகைப்படம் கொஞ்சம் கொஞ்சமாகக் காண்பிக்கப் படுகிறது. அவர் யாரெனக் கண்டுபிடிக்கவேண்டும். உண்மையிலேயே ஆர்வத்தைத் தூண்டுகிற நிகழ்ச்சி. மக்கள் தொலைக்காட்சியின் மற்ற நிகழ்ச்சிகளைப் போலவே இதில் வரும் அறிவிப்பாளரும் நல்ல தமிழிலேயேப் பேசுகிறார். நேயர்களையும் தமிழில் பேச ஊக்கப் படுத்துகிறார். அதற்காகவே மக்கள் தொலைக்காட்சிக்கு தாராளமாக ஒரு ஓப் போடலாம்!

*************************

தூக்கம் வராத ஒரு பின்னிரவில் படுக்கையில் கண்களை மூடிக்கொண்டு வானொலியின் காதைக் திருகிக்கொண்டு இருந்தேன். ஏதோ ஒரு இடத்தில் சன்னமாக இலங்கைத் தமிழ் கேட்கவும், பழைய ஆண்டெனாவை எடுத்து வானொலியோடு இணைத்துப் பார்த்தேன்.பிறகு தெளிவாகக் கேட்டது. இலங்கையில் இருந்து ஒலிபரப்பாகும் தென்றல் FM. இதுவரைக் கேட்டிராத பல பாடல்களை ஒலிபரப்பினார்கள்.எத்தனை வாக்மேன், ஐ பாட் எல்லாம் வந்தாலும் இரவு நேரத்தில் வானொலியில் பாட்டு கேட்கிற சுகம் தனிதான். அடுத்து என்னப் பாட்டு வரும் என்று காத்திருக்க வைக்கிற சுவாரசியம்தான் வானொலியின் சிறப்பு. அதிலும் எப்பொழுதாவது நாம் எதிர்பார்க்கிற பாட்டே ஒலிபரப்பாகும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேது? அன்று அப்படித்தான் நடந்தது. இரவின் மடியில் என்றொரு நிகழ்ச்சியில் ஒலிபரப்பான முதல் இரண்டு பாடல்கள் – “உயிரே…உயிரே” (பம்பாய்) மற்றும் “அன்பே… அன்பே” (ஜீன்ஸ்). ரஹ்மான் இசை. ஒரு சொல்லே இரண்டு முறை வருகிறது. அடுத்தப்பாடலாக “வெண்ணிலவே…வெண்ணிலவே” (மின்சாரகனவு) வருமோ என்று நான் நினைத்திருக்க அதேபாடல்தான் ஒலிபரப்பானது. அடுத்த பாடலையும் கண்டுபிடிப்போம் என்று அதே மாதிரியான பாடல்களையெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்க வந்ததென்னவோ காதலுக்கு மரியாதையிலிருந்து “இது சங்கீதத் திருநாளோ” தான்.

***********************

( ஊர்க்கதை நாளையும் சொல்கிறேன் )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

16 comments:

  1. நீங்க சொல்றது ரொம்ப சரி..மக்கள் தொலைக்காட்சி நல்லாயிருக்கு..அப்புறம் அந்த வானொலி மேட்டர் சரியோ சரி..

    விஜய் டிவியில சனிக் கிழமை 'விஜய் சினி டைம்' னு ஒரு நிழச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வ்ரு எழுத்தாளரோட கதைகளை நாடகமாக போடுகிறார்கள்..ஜெயகாந்தனின் 'மவுனம் ஒரு பாஷை' கடந்த வாரம் போட்டார்கள் நல்லாயிருந்தது பாருங்க(எல்லாருக்கும் தான்)

    ReplyDelete
  2. ஹைய்யா.. மாமா..நீங்க நல்லா கதை சொல்றீங்க.. எனக்கு புடிச்சிருந்துசு... இன்னும் நிறைய சொல்லுங்க மாமா.. சரியா... நான் அடிக்கடி வருவேன்..

    - இப்படிக்கு மருமகளின் friend -

    ReplyDelete
  3. சங்கத்திலேயிருந்து இந்த மாசம் செம டார்கெட் குடுத்துருக்காங்க.. பெஸ்ட் ஆப் லக்.. ஜமாய்ங்க..

    ReplyDelete
  4. /கார்த்திக் பிரபு said...

    நீங்க சொல்றது ரொம்ப சரி..மக்கள் தொலைக்காட்சி நல்லாயிருக்கு..அப்புறம் அந்த வானொலி மேட்டர் சரியோ சரி../

    வாங்க கார்த்திக்,
    இன்னும் பங்கு சந்தை பற்றியெல்லாம் கூட எளிமையாக புரிகிர விதத்தில் சொல்லும் நிகழ்ச்சியும் இருக்கிறது. இங்கு பெங்களூரில் பார்க்க தான் வசதியில்லை :-(

    வானொலி எனக்கு இரவுத் தோழன் (தோழி? ;-) )

    / விஜய் டிவியில சனிக் கிழமை 'விஜய் சினி டைம்' னு ஒரு நிழச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வ்ரு எழுத்தாளரோட கதைகளை நாடகமாக போடுகிறார்கள்..ஜெயகாந்தனின் 'மவுனம் ஒரு பாஷை' கடந்த வாரம் போட்டார்கள் நல்லாயிருந்தது பாருங்க(எல்லாருக்கும் தான்) /

    அப்படியா... இனிமே பார்க்கணும்!!!

    ReplyDelete
  5. /k4karthik said...

    ஹைய்யா.. மாமா..நீங்க நல்லா கதை சொல்றீங்க.. எனக்கு புடிச்சிருந்துசு... இன்னும் நிறைய சொல்லுங்க மாமா.. சரியா... நான் அடிக்கடி வருவேன்..

    - இப்படிக்கு மருமகளின் friend - /

    ஆகா கொழந்த நல்லா பேசுறியே... அடுத்த தடவை உனக்கும் சேர்த்து ஒரு மொட்டை போட்டுடலாம் ;-)))

    ReplyDelete
  6. //அடுத்த தடவை உனக்கும் சேர்த்து ஒரு மொட்டை போட்டுடலாம் ;-)))//

    ஆஹா.. கொஞ்சம் வாய தொறந்துடகூடாதே.. உடனே குனிய வச்சி கும்மி அடிச்சிடுவீங்களே....

    ReplyDelete
  7. / சங்கத்திலேயிருந்து இந்த மாசம் செம டார்கெட் குடுத்துருக்காங்க.. பெஸ்ட் ஆப் லக்.. ஜமாய்ங்க../

    ஆமாப்பா ... நம்மள வச்சிக் காமெடி பண்ணப் போறாங்கன்னு நெனைக்கிறேன்!!

    ReplyDelete
  8. இந்த முறை அப்பா பெங்களூருக்கு வந்ததும் கேட்டது...இங்க மக்கள் தொலைக்காட்சி வராதான்னுதான். ரொம்பவும் நாகரீகமா இருக்கிறதாக் கேள்விப்பட்டேன்.

    சமயபுரம் கோயில் பராமரிப்பு குறைவுதான். பராமரிக்க முடியாத அளவுக்குக் கூட்டம். விடியற்காலையில போனா இருக்கும் சுத்தம் கோயில் தெறந்து அரைமணி நேரத்தில் காணாமப் போயிரும்.

    அந்த விஷயத்தில் எனக்குத் தஞ்சை மாரியம்மன் கோயிலை மிகவும் பிடிக்கும். காலை நேரத்தில் கூட்டமில்லாமல் தாமரை மலர்களை சூட்டிக் கொண்டு செவ்வாடையில் அன்பொழுகக் காட்சி தந்த அந்தக் காட்சி இன்னும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது. திருவானைக்காவல்காரியும் அப்படித்தான்.

    ReplyDelete
  9. //ஆமாப்பா ... நம்மள வச்சிக் காமெடி பண்ணப் போறாங்கன்னு நெனைக்கிறேன்!! //

    இப்போ வரைக்கும் அந்த ஐடியா இல்லே.... ஆனா அது எப்போ மாறுமின்னு எங்களுக்கே தெரியாது :))

    ReplyDelete
  10. ஆஹா...அருமையாக எழுதியிருக்கிங்க..

    அட உங்களுக்கும் மருமகள் தனா...எனக்கும் இன்னும் பார்க்கவில்லை :-)))

    மக்கள் தொலைக்காட்சி இங்க இல்லிங்க :((

    ஒரு காலத்துல சன்டிவியில் கூட பாலுமகேந்திராவின் கதை நேரமுன்னு ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதிலும் இப்படி தான் வாரம் ஒரு கதை...அருமையான நிகழ்ச்சி..

    ReplyDelete
  11. --- இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு தேநீரைக் குடித்துவிட்டு அடுத்தப் பேருந்தில் மாறி மாறிப் பயணிக்கிற அரைத்தூக்கப் பயணம்தான் எனது விருப்பம் ---

    ஒவ்வொரு முறை பயணப்படும்போதும்,வழியில் உள்ள ஊர்களில் ஏற்பட்ட மாற்றங்களை அனுபவித்து செல்வதில் இருக்கும் ஆனந்தமே அலாதிதான்.

    மருமகளுக்கு மொட்டை அடிப்பு மாமன் மடியில் நடந்ததா??
    அந்த புகைப்படம் இல்லையா?

    இது போன்ற பதிவுகளையும் அடிக்கடி பதியலாமே???

    ReplyDelete
  12. /ஆஹா.. கொஞ்சம் வாய தொறந்துடகூடாதே.. உடனே குனிய வச்சி கும்மி அடிச்சிடுவீங்களே.... /

    ச்சே ச்சே குனிய வச்சு எதுக்குங்க கும்மியெல்லாம்? மொட்டை மட்டும்தான் :)))

    ReplyDelete
  13. வாங்க ராகவன்,

    / இந்த முறை அப்பா பெங்களூருக்கு வந்ததும் கேட்டது...இங்க மக்கள் தொலைக்காட்சி வராதான்னுதான். ரொம்பவும் நாகரீகமா இருக்கிறதாக் கேள்விப்பட்டேன்./

    ஆமாங்க அதிகம் தொலைக்காட்சி பார்க்காத எங்கப்பாவும் பாக்க ஆரம்பிச்சிருக்கார் மக்கள் ஒளிவரிசைய (சானல்)

    /சமயபுரம் கோயில் பராமரிப்பு குறைவுதான். பராமரிக்க முடியாத அளவுக்குக் கூட்டம். விடியற்காலையில போனா இருக்கும் சுத்தம் கோயில் தெறந்து அரைமணி நேரத்தில் காணாமப் போயிரும்./

    என்னமோப் போங்க கரூர்ச் சந்தை இதவிட சுத்தமா இருக்கும்.

    /அந்த விஷயத்தில் எனக்குத் தஞ்சை மாரியம்மன் கோயிலை மிகவும் பிடிக்கும். காலை நேரத்தில் கூட்டமில்லாமல் தாமரை மலர்களை சூட்டிக் கொண்டு செவ்வாடையில் அன்பொழுகக் காட்சி தந்த அந்தக் காட்சி இன்னும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது. திருவானைக்காவல்காரியும் அப்படித்தான்.
    /

    நீங்க சொல்ற கோயிலுக்கெல்லாம் நான் போனதில்ல... போறப்ப(?) பாக்கறேன்..

    ReplyDelete
  14. வாங்க இராம்,

    /இராம் said...

    //ஆமாப்பா ... நம்மள வச்சிக் காமெடி பண்ணப் போறாங்கன்னு நெனைக்கிறேன்!! //

    இப்போ வரைக்கும் அந்த ஐடியா இல்லே.... ஆனா அது எப்போ மாறுமின்னு எங்களுக்கே தெரியாது :)) /

    ஆகா வர்றதுக்கு முன்னாடியே இப்படி பயமுறுத்தறீங்களே? :-)))

    ReplyDelete
  15. வாங்க கோபி,

    / ஆஹா...அருமையாக எழுதியிருக்கிங்க..

    அட உங்களுக்கும் மருமகள் தனா...எனக்கும் இன்னும் பார்க்கவில்லை :-)))/

    முட்டாய்க் கொடுங்க :-)))

    / மக்கள் தொலைக்காட்சி இங்க இல்லிங்க :((/

    எனக்கும் இங்க இல்லீங்க ஊருக்குப் போயிருந்தப்ப ஒரு வாரம் பார்த்ததுதான்!!!

    / ஒரு காலத்துல சன்டிவியில் கூட பாலுமகேந்திராவின் கதை நேரமுன்னு ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதிலும் இப்படி தான் வாரம் ஒரு கதை...அருமையான நிகழ்ச்சி.. /

    அதுவும் மறுபடியும் மக்கள் தொலைக்கட்சியில் வருகிறது!!!

    ReplyDelete
  16. வாங்க சுதர்சன்,

    /சுதர்சன்.கோபால் said...

    --- இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு தேநீரைக் குடித்துவிட்டு அடுத்தப் பேருந்தில் மாறி மாறிப் பயணிக்கிற அரைத்தூக்கப் பயணம்தான் எனது விருப்பம் ---

    ஒவ்வொரு முறை பயணப்படும்போதும்,வழியில் உள்ள ஊர்களில் ஏற்பட்ட மாற்றங்களை அனுபவித்து செல்வதில் இருக்கும் ஆனந்தமே அலாதிதான்./

    அதுவும் தொடர்ந்து பயணிக்கிற சாலையென்றால் சின்ன சின்ன மாற்றங்கள் கூட நமக்குத் தெரிந்துவிடும்!

    / மருமகளுக்கு மொட்டை அடிப்பு மாமன் மடியில் நடந்ததா??
    அந்த புகைப்படம் இல்லையா?/

    மொட்டையடிக்கும் போது படமெடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள் :((

    / இது போன்ற பதிவுகளையும் அடிக்கடி பதியலாமே??? /

    கண்டிப்பாக சுதர்சன்!!!

    ReplyDelete