Wednesday, January 31, 2007

கங்கை கொண்ட சோழபுரம் - படங்கள்

கடந்தவாரம் ஊரில் இருந்த பொழுது பெரம்பலூருக்கு ஒரு திருமணத்திற்கு செல்லவேண்டியிருந்தது. காலையிலேயே திருமணம் முடிந்தபிறகு திருச்சிக்கு செல்வதற்காக பேருந்துநிலையத்தில் நின்றிருந்தபோதுதான் சுற்றுலாத்துறையின் ஒரு விளம்பரப் பலகையைப் பார்த்தேன். கங்கை கொண்ட சோழபுரம் -> 60 கி.மீ என்று போட்டிருந்தது. சரி வந்தது வந்து விட்டோம் அந்த ஊரிலும் என்ன இருக்கிறது என்று பார்த்துவிடலாம் என்று அங்கு செல்வதற்காக ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்தில் ஏறிவிட்டேன். (ஜெயங்கொண்ட சோழபுரம்தான் ஜெயங்கொண்டம் ஆகி விட்டது). ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இறங்கும்போது மணி மதியம் 1. உச்சி வெயில் உச்சியைப் பிளந்தது. பொதுவாக பயணம் செய்யும்போதோ, கூட்டமாக இருக்கும்போதோ என்னால் சாப்பிட முடியாது. சரி பழச்சாறு எதுவும் குடிக்கலாம் என்றால் நல்லதாக ஒரு கடையையும் காணோம். சரி தமிழனின் தேசிய பானம் தேநீரையேக் குடிப்போம் என்று ஒரு கடையில் ஒதுங்கினேன். ( தேநீர் குடிப்பதை கொஞ்ச நாட்களாக நிறுத்தியிருந்தேன். இப்போது மறுபடி ஆரம்பமாகிவிட்டது ) வீட்டில் டம்ளரில் ( தமிழில் கோப்பை? ) வழிய வழிய கொடுப்பார்கள். அந்தக் கடையில் கொடுத்தது தொண்டை நனைவதற்குள் தீர்ந்து விட்டது. மறுபடி இன்னொன்றையும் வாங்கி நானே குடிப்பதை அந்தக் கடைக்காரர் ஒரு மார்க்கமாக தான் பார்த்தார். அப்புறம் அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் பயணமானேன். நான் எதிர்பார்த்தது பழைய கோட்டை, அரண்மனை எதுவும் இருக்கும் என்றுதான். அங்குபோனால் இருந்தது என்னவோ ஒரே ஒரு கோயில் தான். அதுதான் பிரகதீசுவரர் கோயிலாம். ( அப்போ தஞ்சையில் இருப்பது என்ன? எனக்கும் தெரியவில்லை.)


முகப்பில் நுழையுமுன் எடுத்தப்படம்.

புல்தரையெல்லாம் நன்றாகப் பராமரித்து வைத்திருக்கிறார்கள்.

இது என்னவென்றே தெரியவில்லை உள்ளே எட்டிப்பார்க்கலாம் என்று நுழைந்தபோது ஒரு காதல் ஜோடி இருந்தது.அமைதியாக வந்துவிட்டேன்.

வெயிலின் பின்னணியில் கோபுரம்.

வெயிலின் முன்னணியில் (:-) ) கோபுரம்.

இருப்பது ஒரே கட்டடம் அல்ல. ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு கட்டடங்கள்.


நீலத்துக்கும் பச்சைக்கும் இடையே கோபுரம்.

வெள்ளை நந்தியும் கருப்பு நந்தியும்

வெளியே வந்த பிறகு ஒரு மூலையில் இருந்து எடுத்தப் படம்.

கடந்த வாரம் முழுவதும் வீட்டிலிருந்ததில் கிடைத்த வாய்ப்பு இது. இப்படி மகிழ்ச்சியான நிகழ்வுகள் இருந்தாலும் ஒரு பிரிவின் துயர் ரொம்பவே வாட்டிவிட்டது என்னை. தமிழ்மணத்தைப் பிரிந்து இருந்ததைத்தான் சொல்கிறேன். :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, January 30, 2007

அழகிய தமிழ்மகன் - ஒரு விளம்பரப் ப(ப்ப)டம்

இரண்டு படங்களுக்கும் 6 வித்தியாசங்கள் எல்லாம் இல்லை... ஒன்றே ஒன்றுதான்! :-)






















அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

படம் பார்த்துக் கதை கேளுங்க

இது தான் அமராவதி ஆறு.முன்பெல்லாம் ஆற்றில் குளிக்கிற அளவுக்கு தண்ணீரும் போகுமாம், சுத்தமாகவும் இருக்குமாம்.
பிறகு சாயப்பட்டறைகள் பெருகி சாயக்கழிவுகள் கலந்து ஆறு நாறிப்போனது. எப்போதாவது மழை வந்து ஆற்றை கழுவி விட்டுப் போகும். அப்போது மட்டும் ஆற்றில் ஊற்றுத் தோண்டி குளிக்கலாம். அப்புறம் ஆற்றில் இறங்கிவிட்டாலே வீட்டில் வந்து ஒருமுறை குளிக்க வேண்டிய நிலைமையில் இருந்தது. இப்போது இரண்டாண்டுகளாக பரவாயில்லை கொஞ்சமாகவேனும் தண்ணீர் ஓடிக் கொண்டு இருக்கிறது. நான் பார்க்கும்போது ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். சுத்தமாகதான் இருக்கும்போல ;-)

இதுதாங்க நான் பள்ளிவாழ்க்கையின் கடைசி மூன்றாண்டுகள் போய் வந்த பள்ளிக்கூடம். ( படித்த பள்ளிக்கூடம் என்று பொய் சொல்ல விருப்பமில்லை ;-) ) திரு. வா. செ. குழந்தைசாமியும் இங்கே படித்திருக்கிறார். ஜான் டேவிட்டும் இங்கே படித்திருக்கிறார். நூற்றாண்டு கண்ட பழமையானப் பள்ளிகளுள் இதுவும் ஒன்று. தேய்த்து தேய்த்து வழுவழுப்பாகிப்போன மரப்பெஞ்சுகள், மரப்படிகள், அந்தக்கால மச்சு என இன்னும் பழமை மாறாத பள்ளி!




கரூர் பசுபதீசுவரர் கோயில் கோபுரம். இதுவரை ஒரே ஒரு முறைதான் உள்ளே சென்றிருக்கிறேன். வரலாற்று(?) செய்திகளை நிறையப் படங்களாக வரைந்து வைத்திருக்கிறார்கள். பொறுமையாகப் படித்தால் கொஞ்சம் பழையக் கதைகளைத் தெரிந்து கொள்ளலாம். உள்ளே கரூர்ச் சித்தர் என்பவரின் சமாதியும் உள்ளது. தமிழில் குடமுழுக்கு செய்யப்பட்ட திருமுக்கூடலூரும் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் , ஆனால் நேரமில்லை :-(





எங்கள் பள்ளிக்கூடத்தில் முதல் பாடவேளையிலேயே வருகைப் பதிவெல்லாம் முடிந்துவிடும். அப்புறம் யார் எங்கு போகிறார்கள் என்றெல்லாம் யாரும் கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கையெல்லாம் சாதாரணமாக மூன்றிலக்க எண்ணில்தான் இருக்கும். எங்கள் வகுப்பில் 10 வதில் 80 பேர் இருந்தோம். 11, 12 ம் வகுப்பில் 120 பேருக்கு மேல்!!! அரசுப் பள்ளி என்பதால் ஆசிரியரும் கண்டிப்பாக இருப்பதில்லை. அதனால் முக்கால்வாசி நேரம் வெளியில்தான் சுற்றிக்கொண்டிருப்போம். பள்ளிக்குப் பக்கத்திலேயே நூலகம் இருந்தது. அங்கே ஒரு கல்கியையோ, சாண்டில்யனையோ எடுத்துக்கொண்டு இந்த இடத்துக்கு வந்துவிடுவேன். இதுதான் பழைய ரயில்வே நிலையம் இருந்த இடம். படிப்பதற்கு ஏற்ற வகையில் அமைதியாக இருக்கும். பள்ளிநேரத்தில் பாதிப்பொழுது இங்கேதான் கழிந்தது.

தாந்தோன்றிமலையில் உள்ள பெருமாள் கோயில். இந்தக் கோயிலுக்குப் போகிற வழியில் ஒரு முனியாண்டி விலாஸ் உணவகம் இருக்கிறது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, அமாவாசை என்று வீட்டில் அசைவம் கிடைக்காத நாட்களில் நமக்கு விருந்து வைக்கும் இடம் அது.





இதுதான் திண்ணப்பா திரையரங்கம். இந்த திரையரங்கத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொருக் காட்சியிலும் படம் திரையிடப் படுவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும். மக்களும் எழுந்து நிற்பார்கள். இது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.





கரூரில் பெரியாருக்கு சிலையில்லாத குறை சிலவருடங்களுக்கு முன்புதான் தீர்ந்தது. முதலில் மார்பளவு சிலையாக வைத்தார்கள்; அண்மையில் ஒரு பேருந்து மோதியதில் அதுவும் சிதைந்து போகவும், பிறகு முழு உருவச்சிலையாக வைக்கப்பட்டிருக்கிறது. சிலை வைத்தவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள்.







அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, January 29, 2007

ஓரு மொட்டைப் பதிவு!

காதலைத் தவிர்த்து மற்ற விசயங்களையும் எழுதுங்கள் என்று சுதர்சன்.கோபால் அன்பு(?) கட்டளையிட்டதால் இந்தப் பதிவு.


மருமகளுக்கு (அக்காவின் மகள்) மொட்டை அடிக்கும் நிகழ்ச்சி இருந்ததால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்தவாரம்தான் வீட்டிற்கு(கரூக்கு)ப் போக வாய்ப்புக் கிடைத்தது. நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு கடந்த வெள்ளிக்கு முந்தைய வெள்ளி ஊருக்குக் கிளம்பிவிட்டேன். ரயில் பயணம் என்பது எனக்கு எப்போதுமே அரிதாகவே அமைகிறது. காரணம் , பயணங்களை இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பே திட்டமிடுவதுமில்லை, முன்பதிவு செய்யுமளவுக்கு நான் சுறுசுறுப்புமில்லை. எப்போதுமே பேருந்து பயணம்தான் எனக்கு வசதியாகப் படுகிறது. அதுவும் தனியார் சொகுசுப் பேருந்துகளிலும் பயணிப்பதில்லை. அரசுப் பேருந்துதான். இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு தேநீரைக் குடித்துவிட்டு அடுத்தப் பேருந்தில் மாறி மாறிப் பயணிக்கிற அரைத்தூக்கப் பயணம்தான் எனது விருப்பம். மிகத்தாமதமாக பெங்களூர் இசிட்டியில் இருந்து கிளம்பியதால் ஒசூர் போய்ச்சேரவே இரவு மணி 12 ஆகியிருந்தது. பேருந்தில் ஜன்னலோரம் தான் எனக்குப் பிடிக்கும். அதுவும் பின்படிக்கட்டுக்கு முந்தைய இருக்கையென்றால் மிக விருப்பம். சேலம் செல்லும் பேருந்தில் அப்படியே ஓர் இருக்கை கிடைக்க ஏறிவிட்டேன். சன்னலைத் திறந்தால் குளிர்காற்று வீசுகிறது. மூடி வைக்கவும் மனமில்லை. அவஸ்தைதான், ஆனாலும் அதற்கே ஏங்குகிறது மனமும். (காதலைப் போலவா என்று யாரும் கேட்கக்கூடாது ;-) ) எப்படியோ அரைத்தூக்கத்தோடே சேலம் போய், பின் கரூர் போய்ச்சேர காலை மணி 8 ஆகியிருந்தது.

*********************


அடுத்த நாள் - சமயபுரம். தனிப்பட்ட முறையில் கோயில்களைப் பழந்தமிழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டு என்பதைத் தவிர வேறெந்த எண்ணத்தோடும் நான் பார்ப்பதில்லை. மருமகளின் மொட்டைக்காக இந்தமுறை சமயபுரம் கோயிலுக்குள் போனபோதுதான் பார்த்தேன். கோவிலுக்குள்ளே தரையெல்லாம் மழையில் ஊறிய தெருவைப் போல இருந்தது. கூட்டமும் அதிகம். சுத்தம்தான் குறைவு. கோவிலுக்கு வந்த பட்டாடைகளையெல்லாம் ஏலத்தில் விட்டுக் கொண்டு இருந்தார்கள். அதில் கொஞ்சம் சுத்தத்துக்கும் செலவு செய்யலாம். மொட்டையடிக்கும் போதெல்லாம் அழாமல் இருந்த மருமகள் மொட்டையடிக்கப் பட்ட பிறகு “மொட்டையடிச்சுட்டாங்க…மொட்டையடிச்சுட்டாங்க” என்று தலையை தொட்டுப் தொட்டுப் பார்த்து அழுததில் அவளுக்கு இரண்டு நாட்களாக விடவில்லை காய்ச்சல்.

************************

வீட்டில் எப்போதும் தொலைக்காட்சி பார்ப்பதைவிட வானொலி கேட்பதையே அதிகம் விரும்புவேன். இந்த முறை, மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி மிகவும் கவர்ந்தது. தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் “சொல் விளையாட்டு” என்ற நிகழ்ச்சிதான் அது. முதல் சுற்றில் தமிழ் எழுத்துக்கள் சிலவற்றில் இருந்து சரியான சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த சுற்றில் விடுப்பட்ட எழுத்துக்களை நிறைவுசெய்து ஒரு சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டும். மூன்றாவது சுற்றில் ஒரு பிரபலத்தின் புகைப்படம் கொஞ்சம் கொஞ்சமாகக் காண்பிக்கப் படுகிறது. அவர் யாரெனக் கண்டுபிடிக்கவேண்டும். உண்மையிலேயே ஆர்வத்தைத் தூண்டுகிற நிகழ்ச்சி. மக்கள் தொலைக்காட்சியின் மற்ற நிகழ்ச்சிகளைப் போலவே இதில் வரும் அறிவிப்பாளரும் நல்ல தமிழிலேயேப் பேசுகிறார். நேயர்களையும் தமிழில் பேச ஊக்கப் படுத்துகிறார். அதற்காகவே மக்கள் தொலைக்காட்சிக்கு தாராளமாக ஒரு ஓப் போடலாம்!

*************************

தூக்கம் வராத ஒரு பின்னிரவில் படுக்கையில் கண்களை மூடிக்கொண்டு வானொலியின் காதைக் திருகிக்கொண்டு இருந்தேன். ஏதோ ஒரு இடத்தில் சன்னமாக இலங்கைத் தமிழ் கேட்கவும், பழைய ஆண்டெனாவை எடுத்து வானொலியோடு இணைத்துப் பார்த்தேன்.பிறகு தெளிவாகக் கேட்டது. இலங்கையில் இருந்து ஒலிபரப்பாகும் தென்றல் FM. இதுவரைக் கேட்டிராத பல பாடல்களை ஒலிபரப்பினார்கள்.எத்தனை வாக்மேன், ஐ பாட் எல்லாம் வந்தாலும் இரவு நேரத்தில் வானொலியில் பாட்டு கேட்கிற சுகம் தனிதான். அடுத்து என்னப் பாட்டு வரும் என்று காத்திருக்க வைக்கிற சுவாரசியம்தான் வானொலியின் சிறப்பு. அதிலும் எப்பொழுதாவது நாம் எதிர்பார்க்கிற பாட்டே ஒலிபரப்பாகும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேது? அன்று அப்படித்தான் நடந்தது. இரவின் மடியில் என்றொரு நிகழ்ச்சியில் ஒலிபரப்பான முதல் இரண்டு பாடல்கள் – “உயிரே…உயிரே” (பம்பாய்) மற்றும் “அன்பே… அன்பே” (ஜீன்ஸ்). ரஹ்மான் இசை. ஒரு சொல்லே இரண்டு முறை வருகிறது. அடுத்தப்பாடலாக “வெண்ணிலவே…வெண்ணிலவே” (மின்சாரகனவு) வருமோ என்று நான் நினைத்திருக்க அதேபாடல்தான் ஒலிபரப்பானது. அடுத்த பாடலையும் கண்டுபிடிப்போம் என்று அதே மாதிரியான பாடல்களையெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்க வந்ததென்னவோ காதலுக்கு மரியாதையிலிருந்து “இது சங்கீதத் திருநாளோ” தான்.

***********************

( ஊர்க்கதை நாளையும் சொல்கிறேன் )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

"அது"

கொஞ்ச நாட்களாகவே,
எனக்குப் பசிக்கிறது.
சாப்பிடலாம் போலத் தோன்றுகிறது.
ஆனால் சாப்பிட முடிவதில்லை…
( திரைப்பட வசனம் போல இருந்தாலும் இது நூற்றுக்கு நூறு உண்மை…
நம் வலைப்பதிவர்களிலேயே பல அனுபவசாலிகள் இருப்பார்கள்…
அவர்களைக் கேட்டுப் பார்த்தால் தெரியும்)

அசதியாக இருக்கிறது.
தூங்கலாம் போலத் தோன்றுகிறது.
ஆனால் தூக்கம் வருவதில்லை…
புரண்டு புரண்டு படுத்தாலும்
வயிற்றுக்குள் நூறு பட்டாம்பூச்சிகள்

( பட்டாம்பூச்சி மட்டும் இல்லை, குருவி, புறா, மயில் எல்லாமே)
சிறகடித்துப் பறக்கிற மாதிரி
ஓர் உணர்வுதான் வருகிறதே ஒழிய தூங்க முடிவதில்லை!

ஆஹா…
ஒரு வேளை நமக்கும் “அது” வந்து விட்டதோ என்று
மனசாட்சியை எழுப்பிக் கேட்டால்,
அது மர்மமாக ஒரு புன்னகைப் பூக்கிறது!

என்னடா இது கொடுமை,
+2, கல்லூரியில் படிக்கிற வயதில்தானே
“இது” நிறைய பேருக்கு வரும்…
நமக்கு அப்பொழுதெல்லாம் வராமல்,
இப்பொழுது 4 கழுதை வயதாகிறதே…
இப்பொழுது போய் வந்திருக்கிறதே
என்று விசாரித்துப் பார்த்தால்,

மனதில் ஒரு கட்டுப்பாடு இல்லையென்றால்
“இது” எப்பொழுது வேண்டுமானாலும்,

யாருக்கு வேண்டுமானாலும் வருமாம்….

ஆம் நண்பர்களே எனக்கும் “அது” வந்து விட்டது! :-(

அதனால் நீங்களும் காரமான உணவு, எண்ணெயில் பொரித்தவை என்று மனதையும் நாவையும் அலையவிடாமல் ஒரு (உணவுக்) கட்டுப்பாட்டோடு இருந்து “அது” ( அதாங்க “அல்சர்” ) வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்யவே இந்தப் பதிவு!

அழியாத அன்புடன்,

அருட்பெருங்கோ.

Tuesday, January 16, 2007

பொங்கலோப் பொங்கல்!

பழையனக் கழித்துப்
புதியனத் தொடங்குதல் போகியாம்.
வா நட்பை விட்டு
காதலைத் தொடங்குவோம்.


உன் விரல் பட்டு
வெண்பொங்கலெல்லாம்

பொன்பொங்கலானது.


வாசலில் இருப்பது
நீ போட்டக் கோலமா?

வாசனையோடு இருக்கிறது!


மாட்டுக் கொம்புக்கெல்லாம்
வண்ணம் தீட்ட வேண்டும்.

கொஞ்சம் கன்னத்தைக் காட்டு!


ஊரெல்லாம் நடக்கிறது
மஞ்சு விரட்டு.

எனக்குள் நடக்கிறது

மயில் விரட்டு!


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, January 08, 2007

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - 1

இந்தக் கதை (சத்தியமாக் கதை தாங்க!) கிட்டத் தட்ட ஓராண்டுக்கு முன் என் நண்பர்கள் வட்டத்துக்கு மட்டும் மடலில் அனுப்பியது. கொஞ்சம் மாற்றங்களுடன் இப்போது இங்கே! காதல் பயணம் போல இழுத்து விட மாட்டேன் :) மூன்றே பதிவில் முடித்து விடுகிறேன்!!!

“I am Ilavarasi, Father is a businessman and Mom is a doctor. I m from Coimbatore only, had my schooling in GRD”
கல்லூரியின் முதல் நாளில் அவள் தன்னை அப்படித்தான் அறிமுகப் படுத்திக் கொண்டாள்.
அப்பா பெரிய பிஸினஸ்மேன் என்கிற பகட்டோ, மேல்தட்டுக்குரிய படோபடமோ இல்லாமல் அவள் எளிமையாய் இருந்தது, அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
ஆங்கிலத்தில் எப்படி சொல்ல வேண்டும் என்று அவள் சொன்னதை வைத்து மனதுக்குள் ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டு,
அவன் முறை வந்த போது சொன்னான் :
“ I am Arul, Father is a clerk and Mother is House wife. I m from karur, had my schooling in MHSS”
“MHSS?”
“Municipality Hr. Sec. School, sir”
கேட்டதும் வகுப்பில் பெரிய சிரிப்பொலி. அவன் அதை எதிர்பார்க்கவில்லை, ஆனால் அதுவே அவனுடைய தாழ்வு மனப்பான்மைக்கும் பிள்ளையார் சுழி போட்டது.
அவன் யாரிடமும் அதிகம் பேசாமல் தனக்கென ஒரு சிறு நட்பு வட்டத்துக்குள்ளேயே முதல் வருடம் முழுவதும் கழித்தான்.
பள்ளியில் ஒரு முரட்டுக் குணத்தோடுத் திரிந்தவன் இப்படி மாறிப்போனதற்கு, அவனுக்குப் புதிதாய் இருந்த மாநகர வாழ்க்கையும் ஒரு காரணமாய் அமைந்தது.

அடுத்த ஆண்டு ஜூனியர் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில்தான் அவன் எல்லோர் முன்னிலையிலும் முதன் முதலாய்ப் பேசினான்.
தன்னுடைய வகுப்பில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களிடம் பேசுவதில் அவனுக்கு எந்தக் கூச்சமும் இல்லை.
அன்று அவன் கலகலப்பாகப் பேசியதிலும், நகைச்சுவையாய் சில கவிதைகள் சொன்னதிலும் ஜூனியர்களுக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது.
அதற்குப்பிறகுதான் அவனுடைய வகுப்பிலும் கூட சிலர் அவனோடுபேசிப் பழக ஆரம்பித்தார்கள்.

“அருள், நீ இப்படியெல்லாம் கூடப் பேசுவியா? நீ சரியான உம்மனாமூஞ்சினு இல்ல நான் நெனச்சேன்” இளவரசி வந்து அவனிடம் இப்படிப் பேசியபோது அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
“உங்களுக்குத் தமிழ் பேசத் தெரியுமா?”
“என்னோடப் பேரப் பார்த்தாத் தெரியலையாத் தமிழ் பொண்ணுதான்னு? ஆமா நீ படிச்ச school, boys school-aa?”
“ஆமா, உங்களுக்கு எப்படித் தெரியும்”
“என்ன வாங்கப் போங்கன்னே சொல்றியே, அதனாலக் கேட்டேன்”
“இல்ல..எனக்கு அப்படியேப் பழகிடுச்சு”
இப்படித்தான் ஆரம்பித்தது அவர்களுடைய நட்பு.

அதற்குப் பிறகு ஒன்றாக கேண்டீன் போவது, library போவது என்று அவர்கள் பேசிக்கொள்ளும் நேரம் அதிகமானது.
அவனுடையத் தாழ்வு மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அவளோடு சகஜமாகப் பேசுவதும் சாத்தியமானது.
மெதுவாக எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.இருவருக்கும் சில விஷயங்களில் ஒற்றுமை இருந்தாலும், முரண்படும் விஷயங்களும் இருந்தன. ஆனால் இருவருமே அடுத்தவர் கருத்தை குறை சொல்லி எப்போதும் பேசியதில்லை.
அவள் பள்ளியிலேயே ஆண்களோடு சேர்ந்து படித்தவளென்பதால் அவளுக்கு இவனோடுப் பழகுவதில் எந்த வித்தியாசமுமில்லை.
ஆனாள் அவன் ஒரு பெண்ணோடு நட்பாகப் பழகுவது இதுதான் முதல் முறை. அதனால் அவள் சாதாரணமாய் சொல்லும் வார்த்தைகளுக்கும் புது அர்த்தம் தேடிக் கொண்டிருந்தான். அவளும் கூட மற்றவர்களை விட இவனிடம் மட்டும் அதிக நெருக்கமாய்ப் பழகியது அவனுக்கும் ஒரு சலனத்தை உண்டு பண்ணியது.

அடுத்த வருடம் தன்னுடையப் பிறந்த நாளன்றைக்கு, “இந்த வருஷம் நீ நெனச்சதெல்லாம் நடக்கும்” என்று வாழ்த்தியவளிடம், “நான் உன்னக் காதலிக்கிறேன்”, என்று சடாரென சொல்லி விட்டான். எதுவும் பேசாமல் திரும்பிப் போனவள் மறுநாள் வந்து சொன்னாள், “நேத்து நீ அப்படி சொன்னவுடனே உன்னக் கன்னத்துல பளார்னு அறையனும்னு தான் தோணுச்சு. பிறந்த நாளாச்சேனு தான் கம்முனு போயிட்டேன். ஒரு பொண்ணுக் கொஞ்சம் சிரிச்சுப் பேசிப் பழகினா உடனே லவ்வா? உன்னையெல்லாம் LKG யிலே இருந்தே co-ed ல படிக்க வச்சிருக்கனும். இனிமே அந்த மாதிரி எண்ணத்தோட எங்கிட்டப் பேசாத!”
அவன் அதைக் கொஞ்சம் எதிர்பார்த்திருந்தான். அதன்பிறகு அவன் அவளோடுப் பேசுவதையே நிறுத்தியிருந்தான். ஒரு செமஸ்டர் முழுவதும் இருவரும் பேசிக் கொள்ளாமலேக் கழிந்தது. அவள் அந்த செமஸ்டரில் இரண்டு பாடங்களில் அரியர்ஸ் வாங்கியிருந்ததை விட, அந்த செமஸ்டரில் அவன் முதல் மார்க் வாங்கியிருந்ததைத்தான் அவளால் நம்பவே முடியவில்லை. அவர்களுடைய பிரிவு அவனை விட அவளை ரொம்பவே பாதித்திருந்தது.

அடுத்த செமஸ்டர் ஆரம்பித்த போது அவனிடம் பேசுவதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தவள், ஒருமுறை அவன் லேபில் தனியாக இருக்கும் போது போய்ப் பேசினாள்.
“அருள்! உங்கிட்டக் கொஞ்சம் பேசனும்!”
அவள் கிட்டே வந்து பேசிய போதும், கேட்காதவனைப் போல் வெளியே நடந்து வந்தான்.
“அருள்!உன்ன நான் எங்கிட்டப் பேசவேக் கூடாதுன்னா சொன்னேன்? லவ்வரா இருந்தா மட்டும் தான் பேசுவியா? ஒரு ஃபிரெண்டா பேச மாட்டியா?”
“உங்கிட்ட நான் மறுபடியும் பேசினாலே எனக்கு உம்மேலக் காதல்தான் வரும்! அது உனக்கும் கஷ்டம்; எனக்கும் கஷ்டம். உங்கிட்ட நான் பேசாம இருக்கிறது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது! சொல்லப் போனா நான் முன்னவிட இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! நீயும் போய் ஒழுங்காப் படிக்கிற வழியப் பார், அரியர்ஸ் வேற விழுந்திருக்கு!” – சொல்லிவிட்டு அவளுடைய பதிலுக்குக் காத்திராமல் போய் விட்டான்.
அவன் சொன்னதும் உண்மைதான். அவன் முன்பை விட மிகவும் சந்தோஷமாகவே இருந்தான்.
ஆனால் அவளுக்குதான் அவனிடம் பேசாமல் இருப்பது எதையோ இழந்ததைப் போல இருந்தது.

அவளுக்குப் பள்ளியில் பெஸ்ட் ஃபிரெண்டாக இருந்த கோபியோடு ஒருமுறை சண்டையாகி பேசுவதை நிறுத்தியவள், இன்று வரை அவனோடு பேசாமல் தான் இருக்கிறாள். அவனோடுப் பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியதும் இல்லை. ஆனால் இப்போது வகுப்பில் தினமும் அருள் தன்னைத் தவிர மற்ற எல்லோரிடமும் சிரித்துப் பேசுவதைப் பார்க்கும்போது அவளுக்கு ஏனோ மனது கஷ்டமாய் இருந்தது.
ஒவ்வொருமுறை அவள், அவனிடம் பேசுவதற்கு முயற்சி செய்யும்போதும், அவன் அலட்சியமாய் உதாசீனப்படுத்திவிட்டுப் போனது அவளை மேலும் காயப்படுத்தியது. அன்று, அவளுடையப் பிறந்தநாளுக்கு வகுப்பில் எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கும்போது, அவனுக்கும் கொடுத்தாள்.
தயக்கத்தோடு ஒன்றை எடுத்துக் கொண்டவன், “இந்த வருஷம் நீ நெனச்சதாவது உனக்கு நடக்கட்டும்” என்று சொன்னதும், தாமதிக்காமல் அவள் சொன்னாள் : “அருள், நான் உன்னக் காதலிக்கிறேன்”.

( அடுத்தப் பகுதி )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Thursday, January 04, 2007

5..4..3..2..1..0


‘எனக்காக உன் காதலை விட்டுக் கொடு’
என்று கண்ணீரோடு கையேந்துகிறாய்.
உன் ஒரு விழிநீரை நானும்,
மறு விழிநீரை என் காதலும்,
துடைத்துவிட்டு விலகினோம், கண்ணீரோடு!



நொடிகளெங்கும் உன் நினைவுப்பூக்கள்.
சுற்றி சுற்றி வருகிறதென் இதயமுள்.
என் வாழ்க்கைக் கடிகாரமும்
ஓடிக்கொண்டு தான் இருக்கிறது!



உன்னிடமிருந்து என் மனதை
திசை திருப்பினேன்…
திசையெங்கும் நீ!



பழகப் பழக பாலும் புளிக்குமாம்…
விலகியப் பின்னும் இனிக்கிறாயடி!



நான், நீயிலி*!



“ “

( உன் மௌனத்தை விட சோகமானக் கவிதை என்னிடமில்லை! )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

*நீயிலி – நீ இல்லாதவன்.
(பெயரிலி – பெயர் இல்லாதவர் போல!)