Wednesday, April 09, 2008

சுந்தரா ட்ராவல்ஸ்ல பயணம் பண்ணியிருக்கீங்களா?

சுந்தரா ட்ராவல்ஸ் படத்துல காமெடியெல்லாம் பாத்திருப்பீங்க. அந்த சுந்தரா ட்ராவல்ஸ் வண்டியில பயணம் பண்ணியிருக்கீங்களா? போன வெள்ளிக்கிழமை நான் அதுலதான் ஹைதராபாத்ல இருந்து சென்னைக்கு போனேன். எப்பவும் தொடர்வண்டியில, இல்லனா அரசு பேருந்துல போற நான், இந்த பயணத்த திடீர்னு முடிவு பண்ணினதுனால முன்பதிவு பண்ணாம வெள்ளிக்கிழமை இரவு வீட்ல இருந்து கிளம்பி நேரா நாம்ப்பள்ளி (தனியார் ட்ராவல்ஸ் நிறுவனங்கள் இருக்கிற இடம்) போய்ட்டேன். மூனு நாள் விடுமுறைங்கறதால எந்த ட்ராவல்ஸ்லையும் இடம் இல்ல. இருக்குதுன்னு சொல்றவங்க 1500 ரூபாய் கேட்டாங்க. மறுபேச்சு பேசாம அடுத்த வண்டிய தேடினேன். கடைசில ஒரு ட்ராவல்ஸ்ல கேபின் சீட் தான் இருக்குனு சொல்லி 450 ரூபாய்க்கு ஒரு டிக்கட் கொடுத்தாங்க. டிக்கட்ட பாத்தேன். சுந்தரா ட்ராவல்ஸ்னு போட்டிருந்தது என் கண்ணுக்கு ஷாமா சர்தார் ட்ராவல்ஸ்னு எப்படி தெரிஞ்சதுனு புரியல. 8:30 மணிக்கு வண்டி கிளம்பும்னு சொன்னாங்க. வண்டியில ஏறி உட்காந்துக்கலாம்னு போனப்ப "கேபின் சீட்டா? அப்படின்னா கடைசில ஏறு"ன்னு ஓட்டுனர் என்ன கொஞ்சம் ஓட்டுனதும், ‘கேபின் முன்னாடிதான இருக்கும். அப்புறம் எதுக்கு கடைசியில போய் ஏற சொல்றாரு?’ன்னு புரியாம பைய கைல வச்சிட்டே வண்டி பக்கத்துலையே நிக்க ஆரம்பிச்சேன்.

கொஞ்ச நேரத்துல என்ன மாதிரியே ஒரு அஞ்சாறு பேரு அதே மாதிரி கைல பைய வச்சிட்டு என் பக்கத்துல ஒதுங்க ஆரம்பிச்சாங்க. அதுல ஒருத்தர் "நீங்க மைக்ரோசாஃப்டா?" னு கேட்கிற தோரணைல "நீங்க கேபின் சீட்டா"னு கேட்டார். ஆமாம்னு சொல்லி கை குலுக்கி அறிமுகமானதுல அந்த ஆறு பேரும் அதே கேபின் சீட்டுக்குதான் வந்திருக்கோம்னு புரிஞ்சது. எல்லாரும் தமிழ் பசங்கதான். அதே சமயம் லக்கேஜ்ங்கற பேர்ல அந்த வண்டிக்கு மேல இன்னொரு வண்டி ஏறிகிட்டு இருந்தது. ஒருவழியா 9 மணிக்கு வண்டி பு..ற..ப்..ப..ட்..டு..து. ரெண்டு பேரு சரியா ஓட்டுனருக்கு பின்னாடி ஒதுங்கிட்டாங்க. நானும் இன்னொருத்தரும் எஞ்சின் மேல கால நீட்டி ஒருவழியா செட்டில் ஆனோம். ஒருத்தர் தனியா இருந்த ஒரு மடக்கு சீட்ல மடங்கி உட்காந்துக்க, இன்னொருத்தர் வண்டி உள்ள கீழ படுத்துக்கறேன்னு போயிட்டார்.

வண்டி ரொம்ப மெதுவாவே போய்கிட்டு இருந்தது. நாங்களும் சிட்டி ட்ராபிக்தான் அதுக்கு காரணம்னு தப்பா நெனச்சுட்டு இருந்தோம்.எஞ்சின் பயங்கர சூடாக ஆரம்பிச்சதால, சென்னை வரைக்கும் தீ மிதிக்க முடியாதுன்னு கால தூக்கி கைல வச்சிக்கட்டோம். அப்பறம் லேசா பொக வர ஆரம்பிச்சது. அதுக்கு போட்டியா ஓட்டுனரும் பொக விட ஆரம்பிச்சார். சன்னல தெறக்கலாம்னு பார்த்தா அத கயிறு போட்டு கட்டி வச்சிருந்தாங்க. அந்த பக்கம் கதவும் மூடியாச்சு. பேருந்து கொஞ்சம் கொஞ்சமா புகைவண்டியா மாறிட்டே வந்தது. ரெண்டர வருசமா எனக்கு பொக ஒத்துக்கறதில்ல ;) சரி, ஓட்டுனரோட டென்சன கொறச்சு சிரிக்க வைக்கலாம்னு நெனச்சு, ‘அண்ணே. ஒரே பொகையா இருக்கு. அந்த கண்ணாடிய கொஞ்சம் தெறந்து விடுங்களேன்’னு அவருக்கு முன்னாடியிருந்த கண்ணாடிய காட்டி கேட்டேன். இன்னும் கடுப்பாகி என்ன பார்த்து மொறைக்க ஆரம்பிச்சாட்டார். அமைதியே ஆனந்தம்ங்கற தத்துவம் அந்த பார்வைல எனக்குப் புரிஞ்சது!

தில்சுக்நகர் தாண்டியும் வண்டி வேகமெடுக்கவே இல்ல. ஓட்டுனர், கியர் மேல கைய வைக்கிறதும் எடுக்கிறதுமாவே இருந்தார். அவர் எதுக்கு கியர தடவிக்கொடுக்குறார்னு ஒன்னும் புரியாம பாத்துட்டு இருந்தோம். பின்னாடி இருந்த இன்னொரு ஓட்டுனர கூப்பிட்டு "என்னண்ணே கியர் மாற மாட்டேங்குது"னு ரொம்ப அப்பாவியா கேட்டார். நாங்க அப்படியே ஷாக்காயிட்டோம்! அவர் வந்து கியர அசச்சு பாத்துட்டு "நீ கிளட்ச அழுத்திப் பிடி"னு சொல்லி இவர் கியர ஆட்ட.. இல்ல கிட்டத்தட்ட ஒடைக்க ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நேரத்துல "படக்"னு ஒரு சத்தம் கேட்டுச்சு. "ம்ம்ம் இப்ப விழுந்துடுச்சு பாரு"னு வில்ல ஒடச்ச அர்ச்சுனன் எஃபக்ட்ல ஒரு சிரிப்பு சிரிக்கவும்... கியர் உண்மையிலேயே கீழ விழுந்திருக்குமோனு எனக்கு பயமே வந்துடுச்சு. அப்புறம் அடிக்கடி இந்த ஓட்டுனர் கியர் மாத்துறப்பலாம் அவரக் கூப்பிட அவர் வந்து எஞ்சின் மேலயே உட்காந்து உரல்ல மாவாட்ற மாதிரி கியர் மாத்த, முதல் ஓட்டுனர் ஸ்டியரிங்க பிடிச்சு. கிளட்ச அமுக்கி ஒரு மார்க்கமா ரெண்டு பேரும் சேர்ந்து வண்டி ஓட்ட ஆரம்பிச்சாங்க. பொதுவா ரொம்ப தூரம் போற ட்ராவல்ஸ் வண்டியில ரெண்டு ஓட்டுனருங்க வண்டி ஓட்டுவாங்கனு தெரியும். ஆனா இந்த மாதிரி ரெண்டு ஓட்டுனரும் சேர்ந்து வண்டியோட்டினத பார்க்க கண்கொள்ளா காட்சியா இருந்துது.

கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் "அண்ணே..."னு அந்த ஓட்டுனர் இழுத்தார். இப்ப என்னடா பிரச்சினைங்கற மாதிரி ரெண்டாவது ஆளு பார்த்தார். ‘கிளட்ச மிதிக்க முடியலண்ணே! கல்லு மாதிரி இருக்கு’னு ரொம்ப பாவமா சொன்னார். "சரி ஒரு மணி நேரம் ஆஃப் பண்ணிட்டு எடுப்போமோ?"னு ஒரு அற்புத ஐடியாவ சொன்னதும் அததான் எதிர்பார்த்த மாதிரி முதல் ஓட்டுனருக்கு முகத்துல அப்படி ஒரு சந்தோசம். கொஞ்ச தூரம் போனதும் ஒரு எடத்துல நிறுத்தினாங்க. பின்னாடி எட்டிப்பார்த்த கிளீனர், "வண்டி கால்(?) மணி நேரம் நிக்கும், டின்னர் சாப்பிட்றவங்க சாப்பிட்டுக்கலாம்"னு சத்தம் போட்டார். நடுராத்திரி 12:30 மணிக்கு பேய் கூட டின்னர் சாப்பிடாதேன்னு நெனச்சா, வண்டியில இருந்த மொத்த கூட்டமும் கொலவெறியோட ஹோட்டலுக்குள்ள போச்சு. என்னனு விசாரிச்சா வண்டி 7 மணிக்கு கிளம்பும்னு சொல்லி 6:30 க்கே வண்டியேறினவங்களாம் அவங்க எல்லாம். இருந்தாலும் அதுல ரெண்டு பேரு ஃபுல் மீல்ஸ் வாங்கி சாப்பிட்டதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். நான் வழக்கம்போல ரெண்டு டீய குடிச்சுட்டு நின்னுட்டு இருந்தேன். பக்கத்துல "போனதடவ இந்த எடத்துல 11 மணிக்கு நிறுத்தினான். அப்பவே கோயம்பேட்டுக்கு மத்தியானம் 12 மணிக்கு தான் கொண்டு போய் சேர்த்தான். இன்னைக்கு இங்கயே 12:30 ஆச்சு. எத்தன மணிக்கு நாளைக்கு போகுமோ"னு ஒருத்தர் அலுத்துக்கிட்டார். "தலைவா என்ன சொல்றீங்க?"னு பதட்டத்தோட நான் அந்த க்ரூப்புக்குள்ள நொழஞ்சேன். "ஆமாங்க இந்த வண்டி எப்பவும் 12 மணிக்கு மேலதான் சென்னை போகும்"னு அவர் அசால்ட்டா சொன்னார். "தெரிஞ்சும் இதலயே ஏன் வர்றீங்க"னு கேட்டா "எல்லாம் என் தலையெழுத்து"னு சொல்லி வருத்தப்பட்டார். "சரி விடுங்க பாஸ் இனிமே இது உங்க சோகம் இல்ல. நம்ம சோகம்"னு சொல்லி அவரத்தேத்திட்டு கொஞ்ச நேரம் மொக்கையப் போட்டுட்டு இருந்தோம். மறுபடியும் 1 மணிக்கு வண்டிய எடுத்தாங்க.

இப்போ கியர் ஸ்பெஷலிஸ்ட் வண்டியோட்ட ஆரம்பிச்சார். கொஞ்ச தூரம் போனதும் லாரிகள் அதிகமா ஜாமாகி நிக்கவும் எங்க வண்டியும் நின்னுது. மறுபடியும் ஸ்டார்ட் பண்ணா வண்டி உறுமுதே ஒழிய நகரல. இப்போ இவர் அவர கூப்பிட, அவர் பாத்துட்டு "எதுக்குண்ணே நியூட்ரல் வந்தீங்க? இப்போ ரிவர்ஸ் மாத்தி டைரக்டா செகண்டுக்கு போனாதான் நகரும்"னு அவரோட அனுபவ அறிவ பகிர்ந்துக்கவும் இந்த ஓட்டுனர் ரிவர்ஸ் கியர் போட வண்டி மெதுவா பின்னாடி நகர பின்னாடி இருந்த லாரிகள்ல இருந்து ஹாரன் சத்தம் அலற மறுபடி ப்ரேக்க போட்டு நிறுத்தினார். ரெண்டு ஓட்டுனரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டாங்க. அப்புறம் ரெண்டு பேரும் செர்ந்து க்ளீனர பாத்தாங்க. நெலமைய புரிஞ்சிகிட்ட அவர் அவசர அவசரமா கீழ எறங்கி ஒரு கல்ல எடுத்து டயருக்கு பின்னாடி வைக்க, இப்போ ப்ரேக்ல இருந்து கால எடுத்துட்டு ரிவர்ஸ்ல இருந்து மெதுவா செகண்ட் கியருக்கு மாத்தி ஆக்ஸலேட்டர அமுக்க வண்டி ஒரு குதி குதிச்சுட்டு முன்னாடி போக ஆரம்பிச்சுது. என்னமோ டீசலே இல்லாம வண்டியோடற மாதிரி ரெண்டு ஓட்டுனர்ங்க முகத்துலையும் அப்படி ஒரு வெற்றிப்புன்னகை. நாங்களும் ஒரு ஆர்வத்துல கையெல்லாம் தட்டிட்டோம். அதுக்கப்புறம் வண்டியோட தாலாட்டுல நானும் தூங்கிட்டேன்.

கண்முழிச்சுப்பார்த்தப்ப மணி 6. வண்டி ஒரு டீக்கடை முன்னாடி நிறுத்தியிருந்தது. வாய் கொப்பளிச்சுட்டு மறுபடியும் ஒரு டீய குடிச்சுட்டு அங்க இருந்த ஒரு பலகைய பார்த்தா chennai - 220 KM னு போட்டிருந்தது. அடப்பாவிகளா விடிய விடிய ஓட்டி இன்னும் இவ்வளவு தூரம் போகனுமானு அலுப்போட ஏறினேன். அந்த ஓட்டுனர் டிவி சீரியல் இயக்குனரா இருந்திருப்பார் போல. 20 கிலோமீட்டர ஒரு மணி நேரமா ஓட்றார். ஒரு 9:30 மணிவாக்குல மறுபடியும் ஒரு எடத்துல வண்டி நின்னுது. ‘வண்டி கால் மணி நேரம் நிக்கும் டிபன் சாப்பிட்றவங்க சாப்ட்டுக்கலாம்’னு சத்தம் போட்டுட்டு க்ளீனர் எறங்கிட்டார். நானும் உண்மையிலேயே சாப்பிட்றதுக்காகதான் நிறுத்தியிருக்காங்கனு நம்பி எறங்கினேன். ரெண்டு ஓட்டுனர்களும் ஒரு ஸ்ப்ளண்டர்ல ஏறி எங்கேயோ போறத பார்த்ததும் மைல்டா ஒரு சந்தேகம் வந்தது. க்ளீனர கூப்பிட்டு அவங்க எங்க போறாங்கனு கேட்டா ‘அந்த க்ளட்சு ராடு ஒடஞ்சிடுச்சு. பத்த வைக்க போயிருக்காங்க’னு சொல்லி எங்களுக்கு பத்த வச்சார். ‘என்னண்ணே இதையெல்லாம் கெளம்பும்போதே பாக்கறதில்லையா’னு கேட்டா, ‘வரும்போதே ஒரு தடவ பத்த வச்சுட்டுதான் வந்தோம். மறுபடி எப்படி ஒடஞ்சுதுன்னுதான் தெரியல’னு ரொம்ப சீரியசா வருத்தப்பட்டார்.

பத்த வைக்க போன ஓட்டுனருங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரத்துல இன்னொரு மெக்கானிக்கோட திரும்பி வந்தாங்க. வந்த மெக்கானிக் அவரோட ஆயுதங்கள எடுத்துட்டு, ஒரு சாக்க விரிச்சு போட்டு வண்டிக்கடியில போனவருதான், வெளிய வர்றதுக்கான அறிகுறியே தெரியல. வண்டிக்கடியில ரெண்டு டீ, இன்னும் சில பல ஆயுதங்கள்லாம் போனதும், ஒரு முக்கால் மணிநேரம் கழிச்சு சிரிச்சுட்டே வெளிய வந்தார். ‘பத்த வச்சுட்டியே பரட்ட’ னு அவர வாழ்த்திட்டு எல்லாரும் வண்டிக்குள்ள ஏறினாங்க. இப்போ ஓட்டுனர் புது தெம்போட வண்டிய ஸ்டார்ட் பண்ணி கியர் போட்டார். ஒரு 150 மில்லி மீட்டர் நாங்க பயணம் பண்ணதும், மறுபடியும் வண்டி நின்னுடுச்சு. கெளம்பிப்போன மெக்கானிக்க மறுபடி இழுத்து சாக்க விரிச்சுப்போட்டு வண்டிக்கடியில தள்ளிவிட்டாங்க. இதுக்கு மேல இந்த வண்டி ஒரு அங்குலம் கூட நகராதுனு கேபின் மேட்ஸ்(;)) எல்லாம் முடிவு பண்ணி, லாரி புடிச்சாவது போய்டலாம்னு, லக்கேஜ எடுத்துட்டு மெயின் ரோட்டுக்கு வந்தோம். நல்லவேளையா நெல்லூர்ல இருந்து சென்னைக்கு போற ஒரு தமிழ்நாடு அரசுப்பேருந்து வரவும், அதுல ஏறி ஒருவழியா சென்னை போய் சேர்ந்தாச்சு. அண்ணன் வீட்டுக்கு போகும்போது மணி மதியம் 3:30!

திரும்பி ஐதராபாத் வர்றதுக்காக, ஞாயிற்றுக்கிழமை சாயங்காலமா கோயம்பேடு போயிருந்தேன். அங்கேயும் டிக்கட்டே கிடைக்கல. ஒருத்தர் வந்து ஐதராபாத்தா? கேபின் சீட் இருக்கு ஓக்கே வா? னு கேட்டார். என்ன ட்ராவல்ஸ்னு போர்ட பார்த்தா, ஷாமா சர்தார் ட்ராவல்ஸ்னு போட்டிருந்தது. ஆனா இப்போ எனக்கு அது ‘சுந்தரா ட்ராவல்ஸ்’னு தெளிவா தெரிஞ்சதால நான் சிக்கல. கூட வந்திருந்த நண்பர் ப்ரேம் ‘யோவ், ஏன்யா டிக்கட்ட வேணாங்கற’னு புரியாம கேட்டார். ‘தலைவா, இதுதான் நான் சொன்ன சுந்தரா ட்ராவல்ஸ், கம்முனு வாங்க’னு சொல்லி அப்பறம் வேற ட்ராவல்ஸ் ல டிக்கட் கிடைச்சு ஒருவழியா ஐதராபாத் திரும்பியாச்சு!

பின்குறிப்பு 1 : நாங்க ஏறின அரசுப்பேருந்து பாதி தூரம் போனதும், சாப்பிடறதுக்காக ஒரு எடத்துல ஒரு மணி நேரம் நிறுத்தினதையும், அப்போ நம்ம சுந்தரா ட்ராவல்ஸ் எங்களக்கடந்து போனதையும் நான் சொல்லாம விட்டதுக்கு சிறப்புக்காரணம் எதுவும் இல்லை :)

பின்குறிப்பு 2 : வர்ற திங்கட்கிழமையும் விடுமுறைங்கறதால, நாளைக்கு கிளம்பி திருப்பூர் போலாம்னு ஒரு எண்ணம் இருக்கு. இன்னும் டிக்கட் எதுவும் முன்பதிவு பண்ணாததால இந்த சுந்தரா ட்ராவல்ஸ் வண்டிகள நெனச்சாதான் பயமா இருக்கு :(