Friday, November 02, 2007

கணக்கம்பட்டியாரு கத - இறுதி பகுதி

கதய மொதல்ல இருந்து கேட்க


'என்ன சரோசா… எப்பவும் மவளப் பாக்க அந்தாளுதான் கெளம்பிருவாரு… இன்னைக்கு அப்பனப் பாக்க நீ வந்திருக்க'

'நல்லாருக்கீங்களாஞா? இந்த பொட்ட புள்ள பொறந்து பத்து மாசம் முடிஞ்சிருச்சு…அதான் மூனுக்கும் சேத்து ஒன்னா காது குத்திரலாம்னு ஒரு ஓசன…ஆஞா என்ன சொல்லுதுன்னு கேட்டுக்கலாம்னுதான் ஒரெட்டு நானே வந்துட்டேன்'

'ஓ காதுகுத்தா…ஆமாமா அந்தாளும் சொல்லிக்கிட்டே தான் இருந்தாரு… கெடா வுட்ருக்கார்ல…இந்த மாசமே நாளு பாத்துருவாரு வா…சைக்கிள்ல ஏறு வூட்ல எறக்கி வுட்றேன்'

மவ வந்த விசயம் தெரிஞ்சதும் பஞ்சாங்கத்த எடுத்த கணக்கம்பட்டி அந்த மாசத்துல இருந்த நல்ல நாளெல்லாம் குறிச்சுக்கிட்டாரு. மொத்தம் ஆறு நாளுதான் தேறுச்சு. ஆறையும் மனசுல வச்சிக்கிட்டு சோழி போட்டாரு. மொத சோழியிலயே ரெண்டு நாளு அடிபட்டு போயிருச்சு. அடுத்த சோழியில இன்னும் ரெண்டு கழிய மூனாவது சோழியில நாள முடிவு பண்ணிட்டாரு. ஐப்பசி மாசம் பத்தா நாளு காது குத்திரலாம்னு அவரு சொல்லவும் பழனி மூலைல கவுளி சத்தம் கேட்டுச்சு. கிட்டாஞா சொன்னாரு – 'நல்ல சவுனந்தான் சரோசா… நீ போய் வேலைய ஆரம்பி…நாங்க கெடாவ இழுத்துட்டு ரெண்டு நாளு முந்தியே வந்துர்றோம்' னு சொல்லி அனுப்பி வச்சாரு.

மூனு பிள்ளைக போட்டோவும் போட்டு பத்திரிக்கை அடிச்சு ஊர்ல எல்லாருக்கும் கொடுத்தாரு கணக்கம்பட்டியாரு. எல்லாரையும் மொத நாளே பொனாசிப்பட்டில* மவ வூட்டுக்கு வந்துர சொல்லிருந்துது. மவ வூட்டு கொலதெய்வம் திருச்சிக்குப் பக்கத்துல இருக்குது. பொனாசிப்பட்டில இருந்து கோயிலுக்கு போறதுக்கும் வர்றதுக்கும் லாரி பேசிட்டாரு. எப்பிடியும் ஒரு எரநூறு சனம் சேந்துரும்ங்கறது அவுரு கணக்கு. காலைல ஆறு மணிக்கு தான் காது குத்தறதுக்கு நேரம் குறிச்சிருந்தாங்க. விடியகாலைல ஒரு நாலு மணி வாக்குல பயணப்பட்டா செரியா இருக்கும்னு நேரத்த கணக்கு பண்ணிருந்தாங்க. அதனால மொதநா ராத்திரியே சரோசா வூட்ல சாப்பாடு ஏற்பாடு பண்ணிரவும் சனமெல்லாம் சாய்ங்காலமே வந்து சேந்துருச்சுங்க. சாப்ட்டு முடிச்சுட்டு எல்லா சனமும் படுத்துருச்சு.

காலைல எல்லாசனத்தையும் எழுப்பி அரக்க பரக்க கெளம்பி வூட்ட வுட்டு லாரிய எடுக்க நாலர மணியாயிருச்சு. லாரிக்குள்ள பொம்பளையாளுங்க எல்லாம் குந்திகிச்சுங்க. ஆம்பளையாளுங்க எல்லாம் ஓரத்துல நின்னுகிட்டாங்க. கிட்டாஞாவும், கணக்கம்பட்டியாரும் பின்னாடி ரெண்டு மூலைலயும் நாக்காலிய போட்டு குந்தியிருந்தாங்க. பாதி பொம்பளைங்க குந்துன சாயல்லயே தூங்குனாலும் தூக்கம் வராத பெருசுங்க ஊர்ப்பழமைல புடிச்சிருச்சுங்க.. வண்டி அப்பதான் குளித்தல தாண்டுச்சு.

'மாமா… பேத்திக்கு காது குத்து வச்சுட்ட…எப்ப கல்யாண சோறு போடப் போற?' இருட்டுல எந்த கெழவி கேட்டுச்சுனு செரியாத் தெரியல.

'எவடி அவ? புள்ள வயசுக்கு வந்ததும் கேட்டின்னா…அது நாயம்…காது குத்தும்போது புத்தி கெட்டத் தனமா கல்யாணத்தப் பத்தி கேட்கிறவ' கிட்டாஞா சத்தம் போட்டாரு.

'அட பெரியாஞா… அம்மாயி சொன்னது பேத்தியோட கல்யாணத்த இல்ல…தாத்தனோட கல்யாணத்த' னு ஒரு கொமரி சொல்லிட்டு சிரிக்கவும் கூட எல்லாப் பொம்பளைகளும் சேந்துக்கவும், கிட்டாஞாவும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு.

'யோவ் கிட்டு, புடிமானம் பத்திரம்யா சிரிச்சுகிட்டு கீழ வுழுந்துரப் போற' சிரிப்புலயும் கணக்கம்பட்டி கவனமாத்தான் இருந்தாரு.

இப்ப வண்டி சிறுகமணி, பெருகமணியெல்லாம் தாண்டி தெக்க மண்ணுரோட்டுல திரும்பிருச்சு. தெக்க இன்னும் ஏழு மைலு போவனும் ஏவுரிமங்கலம் சேர.

'ஏம் பக்கட்டு வண்டி எதுவும் வாராதுய்யா…ஒம் பக்கட்டுதான் எதுத்தாப்டி வார வண்டிலாம் ஒரசுனாப்ல போய்க்கிட்டிருக்கு நீ சூதானமா குந்திக்க' னு கிட்டாஞா பதிலுக்கு அவர சாக்கிரத பண்ணுனாரு.

'அதான் தெக்க திரும்பியாச்சே இதுல எங்கன எதுத்தாப்ல வண்டி வரப் போவுது'னு சொல்லி கணக்கம்பட்டி வாயமூடுல… அது நடந்து முடிஞ்சிருச்சு.

எதுத்தாப்ல வெறவு செரா ஏத்திகிட்டு ஒரு லாரி வந்திருக்கு. அந்த லாரிக்கு பக்கவாட்டுல ரெண்டடிக்கு வெறவு செராயெல்லாம் நீட்டிகிட்டு இருந்ததுல இவுங்க போன லாரியில ஓரத்துல நின்னவங்க மேலயெல்லாம் வெறவு செரா இடிச்சுட்டு போவ, ஆம்பளையாளுக அஞ்சு பேருக்கு மண்டையில அடி. மூலையில குந்திருந்த கணக்கம்பட்டி மண்டைய பெரிய செறா ஒன்னு பதம்பாத்து, கட்டியிருந்த துண்டோட அவரு மண்டய பேத்துகிட்டு போயிருச்சு. லாரியும் கொட சாஞ்சு கவுந்து போவவும் சனமெல்லாம் ஐயோ அம்மானு அலறுச்சுங்க. வாய்க்காலுக்குள்ள வுழுந்து கெடந்த கிட்டாஞா எந்திரிச்சு ஓடியாந்து கணக்கம்பட்டியோட ஒடம்பதான் பாத்தாரு அப்பவே மண்ட பொளந்து உசுரு போயிருச்சு. ஐயோ னு வாய்வுட்டு கதறிபுட்டாரு. யாருக்கும் என்ன செய்யறதுன்னு ஒன்னும் வெளங்கல. அப்புறம் எளவட்டப் பயலுக போன் பண்ணி போலிசுக்கு சொல்லி ஆசுப்பத்திரி வண்டி வந்து கொள்ளபட்ட சனத்த அள்ளிப்போட்டுகிட்டு திருச்சி பெரியாசுபத்திரிக்கு போச்சு. எத்தன பொழக்கும். எத்தன நெலக்கும்னு அப்ப ஒன்னும் சொல்லுறாப்ல இல்ல.

அன்னைக்குப் பொழுது அவங்களுக்கு அழுதுகிட்டுதான் விடிஞ்சுது ஆசுபத்திரில. கணக்கம்பட்டியாரு மட்டுமில்ல, பங்காளி வூட்டு ஆளுங்க மூனு பேரு, அப்பறம் கெடா உரிக்க வந்த சுரும்பன் னு மொத்தம் அஞ்சாளுங்க பொணமாயிட்டாங்க. தலைல அடிவாங்குன ரெண்டு பேருக்கு சீரியசுன்னு சொல்லிருக்காங்க. போலிசுக்கெல்லாம் காசுவெட்டி பொணத்த ஊருக்கு கொண்டாரதுக்கு அன்னைக்கு மத்தியானமாயிருச்சு. ஆசுபத்திரில அறுத்த பொணம்ங்கறதால சாய்ங்காலத்துக்குள்ள தூக்கிரனும்னு காரியமெல்லாம் சீக்கிரமா நடந்துச்சு. "புள்ளைக்கு மொட்டையடிக்கப் போயி அப்பன காவு கொடுத்துட்டனே"னு நெஞ்சு நெஞ்சா அடிச்சுகிட்டு அழுவுறா சரோசா. அவளத் தேத்தற தெம்புல அங்கன யாருமில்ல. அவ அழுவுறத பாத்து எல்லா சனமும் சேந்துகிட்டு அழுவுதுங்க.

செய்ய வேண்டிய காரியமெல்லாம் கிட்டாஞா முன்ன நின்னு செஞ்சுகிட்டு இருந்தாரு. செதைய* குளிப்பாட்டி, பேரம்பேத்திங்க எண்ண வச்சி நெய்ப் பந்தம் புடிச்சு கடேசில செதையத் தூக்கி தேருல வச்சதும் 'கே' னு சத்தம் போட்டு அழுதா சரோசா. கிட்டாஞாவுக்கு தொண்டக்குழிக்குள்ள பாறாங்கல்லு எறங்குனாப்ல இருந்துது. தேரு நத்தமோட்ட* நெருங்கிருச்சு. கிட்டாஞா பக்கத்துல வந்துகிட்டு இருந்த ஆறுமுவம் பொலம்புனான் 'எல்லாருக்கும் நல்ல நாளா குறிச்ச ஆளு, தாங்குடும்பத்துக்கு இப்புடியொரு நாள குறிச்சுட்டாரே'. அத கேட்டதும் கிட்டாஞா தொண்டையில இருந்த பாறாங்கல்லு ஒடையறாப்ல இருந்துச்சு.
ஒடஞ்ச பேச்சுல, 'அவந் தலமாட்டுக்கு தேங்கா ஒடச்சத பாத்தல்ல…செம்பாகமா ஒடஞ்சுதுய்யா…இன்னைக்குதான் அவன் ஆயுசு முடியற நாளு… அவன் சாமிய்யா…அதான் அவன் நாள அவனேக் குறிச்சிருக்கான்' சொல்லிட்டு என்னைக்குமில்லாம ஓ னு அழ ஆரம்பிச்சுட்டாரு கிட்டாஞா.
அது, அவன் மனுசனாவே இருந்திருக்கலாமோனு அவரு அழுவுறாப்ல இருந்துச்சு ஆறுமுவத்துக்கு.

(கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் கற்பனையும் கலந்து சொன்ன கததான் இது. நேத்துதான் கணக்கம்ப்பட்டியாருக்கு மொத நெனவு நாளு...)

__________
*ஆஞா – அப்பா எனும் பொருளில் போன தலைமுறை வரை எங்கள் ஊரில் புழக்கத்தில் இருக்கும் சொல்.
*துண்ணூறு – திருநீறு, விபூதி
*தவுதாயப் படுதல் – எனக்கும் சரியான சொல் தெரியவில்லை. வருத்தப்படுதல் எனும் பொருள் வரும்.
*ஒசத்தியா – உயர்வா
*மக்யா நாளு – மறுநாள்
*கவுளி – பல்ல
*வெரசா – விரைவா
*கவுச்சி – அசைவம்
*முச்சூடும் – முழுவதும்
*பொனாசிப்பட்டி – புனல்வாசல்பட்டி எனும் ஊரின் பெயர் மருவி எழுத்து வழக்கில் புனவாசிப்பட்டி, பேச்சுவழக்கில் பொனாசிப்பட்டி. ஊரின் பெயருக்கு பொருள் 'நீர்நிறைந்த ஊர்'.
*செதைய – சிதைய
*நத்தமோடு – சுடுகாடு

__________
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.