Monday, September 03, 2007

காதல் கூடம் - 4





எல்லோரும் குடையுடன் வருகையில்
நீ மட்டும் மழையுடன் வரும் மழைக்காலமது.

வயலுக்கு உரம் தெளிக்கும் பெண்ணைப் போல
நிலமெங்கும் நீர்த்துளிகளை
சாரலென தூவிக் கொண்டிருக்கிறது மேகம்.

கைக்குட்டையை தலைக்கு(ட்)டையாக்கி
நீர் வழியும் முகத்தோடு பாலம் நெருங்குகிறேன்.

பாலிதீன் உடையணிந்த பூங்கொத்து போல,
மழையங்கியில் ஒரு மலர்ச்செடியாய்,
மரத்தடியில் நின்றிருக்கிறாய்.

புடவை முந்தானையால்
குழந்தையைப் போர்த்தும் தாயென,
கிளைகளால் உன்னைப் போர்த்தி நிற்கிறது மரம்.

‘மழையிலும் காத்திருக்க வேண்டுமா?’
பார்வையில் சிறு கோபம் கலக்கிறேன்.
‘மழையில்லை, வெறும் சாரல்தான்’ எனும் பொருளோடு
என் கோபத்தையும் புன்னகையோடு வரவேற்கிறாய்.
சாரலில் கரைந்து நிலத்தில் விழுந்து தெறிக்கிறது என் கோபம்.

குளித்துக்கொண்டிருந்த மிதிவண்டிக்கு
தலை துவட்டிவிட்டு ஏறிக்கொண்டாய்.
பாலத்தில் நீர்க்கம்பளம் விரித்து
நம்மை அழைக்கிறது மழை.

மழைத்துளிகளின் ஸ்பரிசத்தில் நானும்
துளியொலிகளின் இசையில் நீயும்
நனைந்து கொள்கிறோம்.
புன்னகை கோர்த்தபடி சாரலோடு துவங்குகிறது இன்றைய நம் பயணம்.

நாம் வகுப்பறை நுழையும் வரை
ஒரு மெல்லிசையாய் வழிந்த சாரல்
சில பொழுதில் பெரு மழையாய் மாறுகிறது.

ஈரமானத் தலையை
ஈரமானக் கைக்குட்டை கொண்டே
துவட்டிக் கொள்கிறேன்.

உணவுக் கூடை மூடும்
பூத்துண்டை நீட்டுகிறாய்.
வாங்கிக் கொண்டு என் இடம் அடைகிறேன்.
முதல் பாடவேளை - இயற்பியல் - துவங்குகிறது.
நொடிக்கொரு முறை
தலை துவட்டினேனா என
திரும்பி திரும்பிப் பார்க்கிறாய்.
அதற்காகவே
துவட்டாமல் வைத்திருந்த
துண்டுக்கு நன்றி.

மழையோடு காற்றும் கைகோர்க்க
நட்டு வைத்த மதயானைகளென
மரங்கள் திமிருகின்றன.
மழையின் காரணமாக முதல் பாடவேளையோடு
பள்ளிக்கு விடுமுறை விடப் படுகிறது.

எல்லோரும் வீடு கிளம்ப,
ஏடு திறந்து எழுதுபவனைப் போல
நண்பர்களை விரட்டுகிறேன்…
போக மனமில்லாமல்!

என் குறிப்பறிந்தவளாய்
புத்தகம் விரித்து படிப்பவளைப் போல
தோழிகளைத் துரத்துகிறாய்.

முதல் தளத்தில் இருந்த ஓட்டுக்கூடம் நம் வகுப்பு.
கழுத்தளவு உயரத்தில் சுற்றுச்சுவர்.
நட்பு எல்லாம் விலகிப் போக
மழை மட்டுமே சுற்றம்.

ஒரு கண்ணாடிக்கூடு போல
எல்லாத் திசையிலும் நம்மை சூழ்ந்து நிற்கிறது மழை.
மழைக்கூட்டில் குடியிருக்கும்
இணைப் பறவைகளென
வார்த்தைச் சிறகுகள் ஒடுக்கி
மௌனமாய் இருக்கிறோம்.

பேனா மூடுகிறேன் நான்.
புத்தகம் மூடுகிறாய் நீ.

முதலில் சிறகடிக்க ஆவலாகிறேன்.
உன்னை நெருங்கி துண்டைத் திருப்பிக் கொடுத்து,
நினைத்ததை சொல்வதற்குள்,
வார்த்தை வந்து விழுகிறது “இயற்பியல் புத்தகம் இருக்கா?”
என் தவிப்புகளையெல்லாம் ரசித்துக்கொண்டவள்
சிரித்தபடி புத்தகம் நீட்டினாய்.

என் இயல்பை நொந்தபடி
இயற்பியல் புத்தகத்தோடு
என் இடம் திரும்புகிறேன்.

காலை நடத்தியப் பாடம் விரிக்கிறேன்.
பக்க எண் 143 எனக் காட்ட,
பக்க எண்ணுக்குப் பக்கத்தில்
உன் பெயர் எழுதுகிறேன்.
அன்று நடத்தியது புரியாததால்
மறுபடி படித்ததாய்ச் சொல்லிப் புத்தகத்தை
உன்னிடமேத் திருப்பித் தருகிறேன்.

பாடநூலில் நான்
நூல் விட
மனம் பட்டமாய்ப் பறக்கிறது.

முகம் மழையைப் பார்த்துக் கொண்டிருக்க
விழி உன்னை நோக்கியபடியே இருந்தது.
புத்தகம் திறக்கப்படாமலே பைக்குள் நுழைய
சிறகொடிந்து மீண்டும் அமைதியாகிறேன் நான்.

அமைதியிழந்தவளாய்
உணவுக்கூடை தூக்கிக்கொண்டு
என்னிடம் வந்து அமர்ந்தாய்.
முதன்முறையாய்ப் பகிர்ந்து உண்ணுகிறோம்.

‘குழம்பு எப்படி?’ என்கிறாய்.
‘சுவையாயிருக்கிறது’ என்கிறேன்.
‘நாந்தான் வெங்காயம் உரிச்சேன்’ என
முழுச்சமையலும் செய்தவள் போல பெருமை பட்டுக்கொள்கிறாய்.
வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்.

எவருமில்லாததால் தயக்கம் நீங்கியவளாய்
சாரலெனத் துவங்கி பெருமழையெனப் பேசுகிறாய்.
தட்டுத்தடுமாறி நடை பழகும் மழலை போல
உன்னிடம் உரை பழகுகிறேன்.

அத்தனை நாளும் தேக்கிவைத்த நம் எண்ணமேகங்கள்
எல்லாம் ஒரே நாளில் உடைந்து மழையெனப் பொழிந்தன.

அன்று மாலை மழை நிற்கும் வரை பேசினோம்.
நின்ற பிறகும் பேசினோம்.
வீடு திரும்புகையில்
உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மறந்து போனாலும்,
நீ உச்சரித்த ஒவ்வொரு ‘ம்’ மும் நினைவில் நின்றது.

அன்று இரவு முழுவதும்
அந்த 143 – ஆம் பக்கம் கனவில் படபடத்தபடியே இருக்க,
அடுத்தநாள் உனக்கு முன்னே வந்து பாலத்தில் காத்திருக்கிறேன்.

நிதானமாய் வந்தவள் நின்று புத்தகம் நீட்டி சொன்னாய் -
‘நேத்தே முதல் பக்கத்திலிருந்து படிச்சிருந்தா எல்லாம் புரிஞ்சிருக்கும்’

முதல் பக்கம் விரிக்கிறேன்.
மேலே மையமாய் எழுதியிருந்தாய் ‘அருள்முருகன் துணை!’
படித்துமுடிக்குமுன் நாணம் வந்தவளாய்
புத்தகம்பிடுங்கி மிதிவண்டியில் பறக்கிறாய்.
தொட்டுவிடாமல் துரத்துகிறேன்.

காதல் மனத்தில் துவங்கியது முதல் ‘பருவ’ மழை!

அடுத்த பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

27 comments:

  1. அருட்பெருங்கோ,
    அருமை.
    முன்னெல்லாம் திங்கள் கிழமை வந்தாலே அலுவலகம் போக வேன்டுமே என்ற கவலை இருக்கும்,இப்போ அப்படியே தலைகீழ்,எல்லாம் காதல்(கூடம்) படுத்தும் பாடு.

    ReplyDelete
  2. அருள் அழகான மழை,

    உயிர் வரை நனைந்தேன். Very romantic.

    ReplyDelete
  3. :) அருள் கடைசியில் ஒரு பெரிய புன்னகை தந்தது கவிதை...இருபக்கமும் அறிவிக்கப்பட்ட காதல்... இனி இன்னமும் அதிகமாய் காதல் ரசம் நிரப்பிய பேனாவோடு எழுதுவீர்களோ!!
    பிடித்த வரிகளில் இரண்டு
    \\சாரலில் கரைந்து நிலத்தில் விழுந்து தெறிக்கிறது என் கோபம்.//

    \\நீ உச்சரித்த ஒவ்வொரு ‘ம்’ மும் நினைவில் நின்றது//

    ReplyDelete
  4. உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மறந்து போனாலும்,
    நீ உச்சரித்த ஒவ்வொரு ‘ம்’ மும் நினைவில் நின்றது.

    Arul,

    Manathai vittu agala marukindarana intha varigal...

    ennai appadiya malarum ninaivugaluku alaithu selgindarana

    Anbudan,
    Inder

    ReplyDelete
  5. அடைமழை அதுவும் அருளின் காதல் மழை.....நல்லா நனைஞ்சேன் :)

    அருள் ஒரு சின்ன கருத்து...எப்போதும் அவளும் அவனும் பள்ளிக்கு வருவதையே சொல்றிங்க.அவுங்க பள்ளியை விட்டு சொல்லும் அந்த மாலை பொழுதையும் கொஞ்சம் சொல்லக்கூடாதா?

    ReplyDelete
  6. \\பாடநூலில் நான்
    நூல் விட
    மனம் பட்டமாய்ப் பறக்கிறது.\\

    ஆஹா...இதுக்கு பேரு தான் நூல் விடுறதா !!! :)

    ReplyDelete
  7. நாடோடி இலக்கியன்,

    /அருட்பெருங்கோ,
    அருமை./

    நன்றிங்க!!!

    /முன்னெல்லாம் திங்கள் கிழமை வந்தாலே அலுவலகம் போக வேன்டுமே என்ற கவலை இருக்கும்,இப்போ அப்படியே தலைகீழ்,எல்லாம் காதல்(கூடம்) படுத்தும் பாடு. /

    ம்ம்ம்... நானும் சனி, ஞாயிறு அலுவலகம் வர வேண்டியதாகிறது... எல்லாம் காதல் கூடம் படுத்தும் பாடு தான் :) (வீட்டில் கணினி இல்லை! ;))

    ReplyDelete
  8. அருள் முதல் பாதியில் வர்ணனை மழையிலும், பின் பாதியில் காதல் மழையிலும் நனைய வைத்து விட்டீர்கள்.

    துவட்டி கொண்டானா என்று திரும்பிப் பார்க்கும் இடத்திலும், வெங்காயத்தைப் பற்றி நீங்கள் சொன்ன இடங்களிலும் மிக அழகாக அந்த ஆரம்ப கால காதலின் தயக்கங்களை, என்ன பேசுவது? ஏதையாவது பேசியே தீர வேண்டும் என்று அந்த மன நிலைகளை மிக அழகாய் சொல்லியுள்ளீர்கள்.

    எல்லாவற்றையும் விட "ம்" என்ற வார்த்தையை நினைவில் வைத்திருப்பதாய் சொன்ன இடத்தில் காதலின் அந்த அழகிய நினைவுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

    தொடருங்கள்.

    ReplyDelete
  9. /அருள் அழகான மழை,

    உயிர் வரை நனைந்தேன். Very romantic. /

    ஆமாங்க ஸ்ரீ, இங்க ரெண்டு நாளா மழை! அதான் கூடத்திலேயும் மழை ;)

    நன்றிகள்!!!

    ReplyDelete
  10. வாங்கக்கா,

    /:) அருள் கடைசியில் ஒரு பெரிய புன்னகை தந்தது கவிதை.../

    ரொம்ப பழைய டெக்னிக்கா இருக்கா? சின்னப் பசங்க மூளை அவ்வளவுதான் வேலை செஞ்சிருக்கு... விடுங்க ;)


    /இருபக்கமும் அறிவிக்கப்பட்ட காதல்... இனி இன்னமும் அதிகமாய் காதல் ரசம் நிரப்பிய பேனாவோடு எழுதுவீர்களோ!!/

    பேனா ஏதுங்க்கா? எல்லாம் இ-கலப்பைதான் ;)


    /பிடித்த வரிகளில் இரண்டு
    \\சாரலில் கரைந்து நிலத்தில் விழுந்து தெறிக்கிறது என் கோபம்.//

    \\நீ உச்சரித்த ஒவ்வொரு ‘ம்’ மும் நினைவில் நின்றது// /

    நன்றிகள்!!!

    ReplyDelete
  11. /உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மறந்து போனாலும்,
    நீ உச்சரித்த ஒவ்வொரு ‘ம்’ மும் நினைவில் நின்றது.

    Arul,

    Manathai vittu agala marukindarana intha varigal...

    ennai appadiya malarum ninaivugaluku alaithu selgindarana

    Anbudan,
    Inder

    /

    நன்றிகள்!!! உங்கள் மலரும் நினைவுகளை நீங்களும் எழுதுங்களேன் :)

    ReplyDelete
  12. /அடைமழை அதுவும் அருளின் காதல் மழை.....நல்லா நனைஞ்சேன் :)/

    பாத்துங்க கோபி, ஜுரம் வந்துடப் போகுது ;)

    /அருள் ஒரு சின்ன கருத்து...எப்போதும் அவளும் அவனும் பள்ளிக்கு வருவதையே சொல்றிங்க.அவுங்க பள்ளியை விட்டு சொல்லும் அந்த மாலை பொழுதையும் கொஞ்சம் சொல்லக்கூடாதா?
    /

    எப்பா இன்னும் ஒரு 8 பகுதி இருக்குல்ல... அதுக்குள்ள ஒரு தடவ அவங்கள சாயுங்காலம் காதலிக்க வச்சிடலாம் விடுங்க ;)

    /\\பாடநூலில் நான்
    நூல் விட
    மனம் பட்டமாய்ப் பறக்கிறது.\\

    ஆஹா...இதுக்கு பேரு தான் நூல் விடுறதா !!! :) /

    ம்ம்ம் இதெல்லாம் அந்தக்காலம்...இப்பலாம் கயிறே விட்றாங்க ;)

    ReplyDelete
  13. /அருள் முதல் பாதியில் வர்ணனை மழையிலும், பின் பாதியில் காதல் மழையிலும் நனைய வைத்து விட்டீர்கள்./

    வர்ணனையெல்லாம் ரொம்ப அதிகமாப் போயிடுச்சோ ;)

    /துவட்டி கொண்டானா என்று திரும்பிப் பார்க்கும் இடத்திலும், வெங்காயத்தைப் பற்றி நீங்கள் சொன்ன இடங்களிலும் மிக அழகாக அந்த ஆரம்ப கால காதலின் தயக்கங்களை, என்ன பேசுவது? ஏதையாவது பேசியே தீர வேண்டும் என்று அந்த மன நிலைகளை மிக அழகாய் சொல்லியுள்ளீர்கள்.

    எல்லாவற்றையும் விட "ம்" என்ற வார்த்தையை நினைவில் வைத்திருப்பதாய் சொன்ன இடத்தில் காதலின் அந்த அழகிய நினைவுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள்./


    ம்ம்ம்... அந்த வயதில் அதைக் காதல் என்றும் சொல்லிவிட முடியாது. பிறருக்கு அது இனக்கவர்ச்சி. சம்பந்தப்பட்டவர்களுக்கு அது இனம் புரியாத ஈர்ப்பு.

    காலம் கழித்தும் அது நிலைத்திருந்தால் அதைக் காதல் என்று சொல்லிக்கொள்ளலாம்... குழப்பிட்டேனா? ;)


    /தொடருங்கள்.
    /

    கண்டிப்பாக! கருத்துக்களுக்கு நன்றிகள் நந்தா!!!

    ReplyDelete
  14. ..ம்ம்ம்... அந்த வயதில் அதைக் காதல் என்றும் சொல்லிவிட முடியாது. பிறருக்கு அது இனக்கவர்ச்சி. சம்பந்தப்பட்டவர்களுக்கு அது இனம் புரியாத ஈர்ப்பு.

    காலம் கழித்தும் அது நிலைத்திருந்தால் அதைக் காதல் என்று சொல்லிக்கொள்ளலாம்... குழப்பிட்டேனா? ;)..

    இல்லை இதே உணர்வுகள்தான் எனக்கும் அந்த வரிகளைப் படிக்கும் போது தோன்றியது. அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்.

    ReplyDelete
  15. அச்! அச் !

    முழுசா நனைஞ்சுட்டேனா

    அதான்

    கலக்கல் அருள்!

    பின்னீட்டீங்க,

    மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. கலக்குறீங்க அருள்! படிக்கிற காலத்துல ஒழுங்கா பள்ளிக்கூடம் போனேனோ இல்லியோ உங்க கவிதை படிக்க காதல் கூடம் வந்துடறேன் தவறாம! அதும் மழையோட காதலா!! ரொம்ப அழகு உங்க வரிகள்!

    ReplyDelete
  17. அனானி நண்பரே,

    நீங்க யாரக் குறிப்பிடுறீங்கன்னு எனக்குத் தெரியல!
    அப்படி சொல்றவர் யாரா இருந்தாலும், என்னோட வலைப்பதிவுல எந்த விசயத்தப் பத்தி எழுதணும், எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ண வேண்டியது நான் தான?

    ReplyDelete
  18. /கலக்குறீங்க அருள்! படிக்கிற காலத்துல ஒழுங்கா பள்ளிக்கூடம் போனேனோ இல்லியோ உங்க கவிதை படிக்க காதல் கூடம் வந்துடறேன் தவறாம! அதும் மழையோட காதலா!! ரொம்ப அழகு உங்க வரிகள்! /

    டீச்சரே இப்படியெல்லாம் சொல்லலாமா? :)
    சரிங்க, தமிழ் இலக்கணத்துல நான் எதுவும் தப்பு பண்ணிடலையே?

    வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க காயத்ரி!!!

    ReplyDelete
  19. மக்கா,
    Great escape pola..... hahahaha
    /
    குழம்பு எப்படி?’ என்கிறாய்.
    ‘சுவையாயிருக்கிறது’ என்கிறேன்.
    ‘நாந்தான் வெங்காயம் உரிச்சேன்’ என
    முழுச்சமையலும் செய்தவள் போல பெருமை பட்டுக்கொள்கிறாய்.
    வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்
    /
    காட்சியா தெரியுது.....கற்பனையா...இல்ல..நிஜமா....
    நல்லா தான் வளருது உங்க காதல் :)

    ReplyDelete
  20. /மக்கா,
    Great escape pola..... hahahaha
    /

    :)))நேத்தும் எஸ்கேப்பாகிட்டேன்யா :)

    /குழம்பு எப்படி?’ என்கிறாய்.
    ‘சுவையாயிருக்கிறது’ என்கிறேன்.
    ‘நாந்தான் வெங்காயம் உரிச்சேன்’ என
    முழுச்சமையலும் செய்தவள் போல பெருமை பட்டுக்கொள்கிறாய்.
    வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்
    /
    காட்சியா தெரியுது.....கற்பனையா...இல்ல..நிஜமா....
    நல்லா தான் வளருது உங்க காதல் :) /

    நிஜமா? என்னப்பா முதல் பகுதியிலேயே முன்குறிப்பெல்லாம் கொடுத்தேனே யாரும் படிக்கலையா?
    எல்லாம் கற்பனைதான் சாமி!!!
    இது அவங்க காதல் :)

    ReplyDelete
  21. /சூப்பரப்பு :) /

    நன்றிங்கப்பு :)

    ReplyDelete
  22. உங்கள் கவிதை ஒரு குழந்தையை போல் கொள்ளை அழகு!

    குறிப்பாக:
    //வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்.//

    //உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மறந்து போனாலும்,நீ உச்சரித்த ஒவ்வொரு ‘ம்’ மும் நினைவில் நின்றது.//

    //தொட்டுவிடாமல் துரத்துகிறேன்.//

    //காதல் மனத்தில் துவங்கியது முதல் ‘பருவ’ மழை!//

    ReplyDelete
  23. மீண்டும் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தமாதிரி இருந்தது. அதே போன்றதொரு மழையில் நனைந்ததொரு காலமும் நினைவில் வந்தது. பள்ளிக்கூடம் இன்றில்லை. குண்டுவீச்சில் இடிந்துபோயிற்று. ஆனால், காதலும் மழை நினைவும் இருக்கவே இருக்கின்றன.

    ReplyDelete
  24. குழம்பு எப்படி?’ என்கிறாய்.
    ‘சுவையாயிருக்கிறது’ என்கிறேன்.
    ‘நாந்தான் வெங்காயம் உரிச்சேன்’ என
    முழுச்சமையலும் செய்தவள் போல பெருமை பட்டுக்கொள்கிறாய்.
    வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்

    அருள் அழகான மழை,

    ReplyDelete
  25. /மீண்டும் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தமாதிரி இருந்தது. அதே போன்றதொரு மழையில் நனைந்ததொரு காலமும் நினைவில் வந்தது. பள்ளிக்கூடம் இன்றில்லை. குண்டுவீச்சில் இடிந்துபோயிற்று. ஆனால், காதலும் மழை நினைவும் இருக்கவே இருக்கின்றன./

    தமிழ்நதி,
    பள்ளி, பால்யம் என பழைய நினைவுகளில் மூழ்கும்போது நினைத்தாலே இனிக்கும் நிகழ்வுகளும் நினைத்தாலே வலிக்கும் நிகழ்வுகளும் கலந்தே வருகின்றன. ஆனாலும் ‘நினைத்துப் பார்த்தல்’ சுகமாகவே இருக்கிறது.

    ReplyDelete
  26. /குழம்பு எப்படி?’ என்கிறாய்.
    ‘சுவையாயிருக்கிறது’ என்கிறேன்.
    ‘நாந்தான் வெங்காயம் உரிச்சேன்’ என
    முழுச்சமையலும் செய்தவள் போல பெருமை பட்டுக்கொள்கிறாய்.
    வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்

    அருள் அழகான மழை,/

    நன்றிங்க அகத்தியன்!!

    ReplyDelete