Wednesday, November 14, 2007

இந்த தீபாவளி… இப்படி…

தீபாவளியை அதன் காரணங்களுக்காக என்றுமே கொண்டாடியதில்லை நான். எனினும் பட்டாசு, புத்தாடை இனிப்பு இவை மட்டுமே தீபாவளியைக் கொண்டாட போதுமான காரணிகளாய் இருந்த காலமும் பத்தாண்டுகளுக்கு முன்பே கரைந்து போய் விட்டது. இந்த முறை தீபாவளிக்கு வீட்டுக்கு சென்றிருந்த போது தீபாவளியை பின்னுக்குத் தள்ளி குடும்பத்தின் முழுக் கொண்டாட்டத்தையும் தனியொருத்தியாய் ஆக்கிரமித்துக் கொண்டாள் அக்காவின் மகள் ஜனனி.


அவளுக்குப் பிடித்த இனிப்பு, அவள் வெடிக்க பட்டாசு, அவள் கேட்ட சுடிதார், அவள் கேட்ட crayons என குடும்பத்தில எல்லோருக்கும், இந்த தீபாவளியின் முன் தயாரிப்புகள் எல்லாமே, அவளைச் சுற்றியேதான் இருந்தது. வீட்டுக்கு அவள் வந்ததில் இருந்து, கிளம்பி செல்லும் வரை எல்லோரையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைக்க முடிந்திருக்கிறது அவளால். மூன்று நாட்களின் எந்த நிமிடத்தையும் அவளோடு இல்லாத காலமாக கணக்கிட முடியவில்லை.

அவளோடு ஒளிந்து விளையாடும்போது, விளையாட்டின் விதி இரண்டே இரண்டு தான். ஒளிந்து கொள்வது நீங்கள் என்றால், அவள் சொல்கிற இடத்தில் தான் நீங்கள் ஒளிந்து கொள்ள வேண்டும். பத்து வரை எண்ணிவிட்டு அவள் சொன்ன இடத்தில் ஒளிந்திருக்கும்(?) உங்களைச் சரியாக வந்து கண்டுபிடித்து(!) விடுவாள். நீங்கள் தோற்றுப் போவீர்கள். கண்டுபிடிக்க வேண்டியது நீங்கள் என்றால், எத்தனை முறை விளையாடினாலும் அவள் ஒளிந்து கொள்ளப்போவது அதே கதவு சந்துதான் என்று தெரிந்தாலும் அதனைத் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் நீங்கள் தேட வேண்டும். கண்டுபிடிக்க முடியாமல் நீங்கள் மீண்டும் தோற்றுப் போக “நான் இங்க இருக்கேன்” என கதவு சந்தில் இருந்து அவள் வெற்றிப் புன்னகையுடன் ஓடி வருவாள். அவளோடு விளையாடும் இந்த விளையாட்டில் இந்த இரண்டும்தான் திரும்ப திரும்ப நடைபெறுகிறதென்றாலும் அந்த சுவாரசியம் கடைசி வரை குறையாமல் இருப்பதற்கு என்ன காரணமெனத் தெரியவில்லை.சாப்பிடும்போதும், தூங்கும்போதும் அவளுக்கு தேவையானவை உணவும், மடியும் மட்டுமல்ல, கேட்டுக் கொண்டே சாப்பிடுவதற்கு/தூங்குவதற்கு சில கதைகளும். கதையைத் தவறாக சொன்னால் அதை திருத்துகிற அளவுக்கு, அவை ஏற்கனவே கேட்ட கதைகளாக இருந்தாலும், மீண்டும் கேட்பதில் அவளுக்கு அதே ஆர்வம் இருக்கதான் செய்கிறது. ஒருமுறை அவளை தூங்க வைக்க கதை சொல்லிக்கொண்டே நான் தூங்கிப் போக என்னை எழுப்பி ‘மாமா அந்த நரிக்கத சொல்லு மாமா’ என்று விடாமல் கேட்கிறாள். அவளுக்காக அனிமேசனில் கதை சொல்லும் சிடிக்கள் வாங்கி வந்து தொலைக்காட்சியில் ஓடவிட்டபோது, கரடிக்கதை, விறகுவெட்டி கதை, முதலைக் கதை என ஏற்கனவே அக்கா சொன்ன அத்தனைக் கதைகளும் அங்கே காட்சிகளோடு வந்து கொண்டிருந்தன. முன்பு அக்கா சொல்ல சொல்ல அவளாக மனதில் உருவாக்கிக் கொண்ட காட்சிகள் எப்படியிருந்தனவோ தெரியவில்லை, தொலைக்காட்சியில் எல்லாக் கதைகளுக்கும் அனிமேசன் காட்சிகள் வர வர அவளால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. “இப்ப கரடி வந்துடும், ராமு மரத்துல ஏறிக்குவான், சோமு கீழப் படுத்துக்குவான்” என அடுத்து என்ன நிகழப் போகிறதென அவள் சொல்ல, அதுவே அங்கே காட்சியாகவும் வர… அப்போது அவள் முகத்தில கண்ட பூரிப்பு ஆயிரம் பூக்களுக்குச் சமம்.

என் அம்மா அவளை எதற்கோ மிரட்டிவிட அழுது கொண்டே என்னிடம் வந்தவளை சமாதானப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு அம்மாவை பொய்யாக நான் ஒரு அடி வைக்க, நிஜமாகவே எனக்கு கன்னத்தில் ஒரு குத்து விழுந்தது அவளிடமிருந்து. எத்தனை மிரட்டினாலும் அவள் அம்மாச்சியை யாரும் அடிக்கக் கூடாதாம். ம்ம்ம்… இந்த தாத்தா- பாட்டிகளுக்கும், பேரன் – பேத்திகளுக்குமிடையே அப்படி என்னதான் பாசம் இருக்குமோ தெரியவில்லை. கடைசியில் அவர்கள் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். நாம் பொது எதிரியாகி விடுகிறோம்.


அவளுக்கு இணையாக போட்டி போட முடியா விட்டாலும் வீடே அதிர சத்தம் போட்டு தனது இருப்பை அவ்வப்போது உணர்த்தி விடுகிறாள், அண்ணன் மகள் மித்ரா. இவள் இன்னும் நடக்க/பேச ஆரம்பிக்கவில்லையென்பதால் கொஞ்சம் சமாளிக்க முடிகிறது. இவளும் வளர்ந்துவிட்டடல் அடுத்த தீபாவளி இரட்டை வெடியாகதான் இருக்கும் :-)எல்லாக் குழந்தைகளையும் போலவே கேள்விகள் கேட்டு அதற்கு நம்மிடமிருந்து பதில் வாங்குவது அவளுக்குப் பிடித்தமான இன்னொன்று. அதிக சளியால் அவளை மருத்துவரிடம் கூட்டிச் சென்ற போது,

“எப்போம்மா டாக்டர் வருவாங்க?”

“டாக்டர் பேசிக்கிட்டு இருக்காங்களாம்… இப்போ வந்துடுவாங்க”

“என்னம்மா பேசிக்கிட்டு இருக்காங்க?”

“அவங்க பிரெண்ட் கூட பேசிட்டு இருக்காங்களாம். நீ இந்த மாதிரி சத்தம் போட்டா அப்புறம் உனக்கு ஊசி போட்டுடுவாங்க”

கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தவள் மறுபடியும்,

“எதுக்கும்மா இவங்கல்லாம் வந்திருக்காங்க?”

“எல்லாருக்கும் உன்ன மாதிரி சளி புடிச்சிருக்கு…அதான் டாக்டர்கிட்ட வந்திருக்காங்க”

“எப்படிம்மா இவங்களுக்குலாம் சளி புடிச்சிச்சு?”

“உன்ன மாதிரியே அவங்களும் தண்ணியில விளையாண்டாங்களாம் அதான் சளி புடிச்சிக்கிச்சு”

“ஏம்மா தண்ணியில விளையாண்டாங்க?”

“அதெல்லாம் அம்மாவுக்குத் தெரியாது பாப்பா… அவங்கள தான் கேட்கனும்”

அங்கிருப்பவர்களிடம் கேட்பதற்கு அவள் போக, அவளை இழுத்து அண்ணனிடம் விட்டு அக்கா எஸ்கேப் ஆகிவிட,

“ஏன் மாமா… அவங்க தண்ணியில வெளையாண்டாங்க?”

பதில் சொல்ல ஆரம்பித்தால், இப்போதைக்கு இது முடியாது என்பதை உணர்ந்த அண்ணன், கேட்டான்…

“ஆமா கண்ணு… ஏன் அவங்க தண்ணியில வெளையாண்டாங்க?”

அதன்பிறகு அமைதியாகி விட்டாள் :-)

சொல்லிக்கொடுப்பதைத் திருப்பி சொல்லிவிட்டாலே அந்த குழந்தையைப் பாராட்டும் போது, யாரும் சொல்லித் தராமலே வெளியில் பார்த்துணர்ந்து அவள் பேசுகிற/ செய்கிறவை ஆச்சர்யமளிக்கின்றன. யாரும் சொல்லித் தராமலேயே சுடிதாரின் துப்பட்டாவை எல்லா விதமாகவும் அணிந்து கொள்கிறாள். குடும்பத்தில் எல்லோருக்குமிடையே இருக்கும் உறவுமுறையை அவளால் யாரும் சொல்லித் தராமலேயே தெரிந்து கொள்ள முடிகிறது.


அவளுக்கு என்று வீட்டில் சில இடங்கள் இருக்கின்றன. கோபித்துக் கொண்டு உட்கார்ந்து கொள்ள ஒரு வெளிவாசல்படி, ஒளிந்துகொள்ள ஒரு கதவுசந்து, பொம்மையோடு விளையாட மாடிப்படி, நீரோடு விளையாட துணி துவைக்கிற இடம் இப்படி…தண்ணீரில் விளையாடினால் சளி பிடிக்கும் என்றும் தெரிகிறது. சளி பிடித்தால் ஊசிப் போடப்படும் என்றும் தெரிகிறது. ஆனாலும் தண்ணீரை விட்டுப் பிரிவதில்லை அவள்.அவளைப் போலவே கையில் அகப்படாமல் ஓடிக்கொண்டே இருப்பதால்தான் அவளுக்கு தண்ணீரையும் பிடித்துப் போனதோ என்னமோ. குழாயில் தண்ணீரை நிரப்பி விளையாடுவதற்காகவே துணி துவைக்கிற இடம் வாகாக அமைந்துவிடுகிறது அவளுக்கு. கடைக்குப் போகும்போது கூடவே வருவதில் அப்படியென்ன சுகமோ இந்த குழந்தைகளுக்கு. ஓவ்வொரு முறையும் கடையில் ஏதேனும் ஒன்று (எப்படியும் உடையப் போகிறது எனத் தெரிந்தாலும் ஒரு பலூனோ, கண்ணாடியோ வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும்) வாங்கிக் கொள்கிறாள்.

பெரியவர்களைப் போல, அறிமுகமில்லாத புதியவர்களிடம் பேசுவதற்கு அவளுக்கு எவ்வித கூச்சமும் இல்லை. வாசலில் நின்று ஓடிக்கொண்டிருக்கிற கோழியையும், நாய்க்குட்டிகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், தெருவில் போய்க்கொண்டிருந்த ஓர் அம்மாவை அழைத்தாள்.

“ஏங்க… இங்க வாங்க”

“என்ன பாப்பா? உம் பேரென்ன”

“என் பேரு ஜனனி. இது எங்க அம்மாச்சி வீடு தெரியுமா?”

“ஓ அம்மாச்சி வீட்டுக்கு வந்திருக்கியா?…உங்க வீடு எங்க இருக்கு?”

“எங்க வீடு திருப்பூர்ல இருக்கு. இது எங்க தாத்தா புதுசா கட்டின வீடு. நல்லா இருக்குதா?”

“ம்ம்ம் நல்லா இருக்கு கண்ணு”

“சரி போங்க”

சிரித்துக் கொண்டே போய் விட்டார் அவரும்.
ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன் அவளிடம் சொன்னேன் - “ஜனனி இப்போ இங்க அம்மாச்சி வீட்ல இருக்கிற மாதிரியே திருப்பூர் போயும் இருக்க கூடாது. அடம் பண்ணாம ஸ்கூல் போய் நல்லாப் படிக்கனும் சரியா?”

அதற்கு அவள் சொன்ன பதில் -

“ஹையோ மாமா… உங்கக்காதான் காலைலயே என்ன குளிக்க வச்சு, யூனிஃபார்ம் போட்டு, லஞ்ச் எல்லாம் பாக்ஸ்ல போட்டு ஸ்கூல்ல கொண்டு வந்து விட்றாங்களே… சாயங்காலமும் ஸ்கூல் வந்து என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வர்றாங்க… எனக்கு A, B, C, D எழுத வைக்கிறாங்க… எல்லாம் பண்றாங்கல்ல? உங்கக்கா இருக்கும்போது எனக்கென்ன மாமா?”

அவளுக்கு மூன்று வயது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? இதுவரை யாரும் நம்பவில்லை.

குழந்தை (உள்ள(ம் கொண்ட)) வலைப்பதிவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் நாள் வாழ்த்துகள் :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.